5 ஜனவரி, 2016

நண்பேண்டா!


ஜேன் கோம். பிரையன் ஆக்டன்.

இந்த இரண்டு பெயர்களையும் மறந்து விடாதீர்கள்.

ஏனெனில், இவர்கள்தான் ‘வாட்ஸப்’ புரட்சியை உருவாக்கிய தொழில்நுட்ப வல்லுனர்கள்.

கோமுக்கு இப்போது வயது முப்பத்தொன்பது. ஆக்டனின் வயது நாற்பத்தி மூன்று. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ‘ஃபேஸ்புக்’ நிறுவனம் ஆசை ஆசையாக இவர்களிடமிருந்துதான் ‘வாட்ஸப்’ உரிமையை காசு கொடுத்து வாங்கியது.

விலை எவ்வளவு கொடுத்திருப்பார்கள்?

குன்ஸாக சொல்லுங்களேன் பார்ப்போம்.

பத்து லட்சம்? ஐம்பது லட்சம்? ஒரு கோடி? பத்து கோடி? நூறு கோடி?

தலைசுற்றி மயங்கி விடாதீர்கள்.

வாட்ஸப்பை ஃபேஸ்புக் வாங்கியது ஜஸ்ட் ஒரு லட்சத்து இருபது ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து. எண்ணால் எப்படி எழுதுவது, எத்தனை பூச்சியம் போடுவது என்றெல்லாம் அப்புறமாக யோசியுங்கள்.

யார் இவர்கள்?

ஜேன் கோம், உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர். அந்நாட்டின் வறுமை இவரை அமெரிக்காவை நோக்கி துரத்தியது. பதினாறு வயதில் கலிஃபோர்னியா மாகாணத்தின் மவுண்டெயின் வியூ என்கிற இடத்துக்கு வந்து செட்டில் ஆனார். அவரும், அவருடைய அம்மாவும் அரசாங்கம் தரும் இலவச உணவுக்காக மணிக்கணக்கில் கியூவில் நின்றவர்கள்.

பத்தொன்பது வயதில் கோமுக்கு என்று சொந்தமாக ஒரு கம்யூட்டர் கிடைத்தது. கூடவே இணைய இணைப்பும். எந்நேரமும் கம்ப்யூட்டரும் கையுமாக உட்கார்ந்திருவர் ‘ஹேக்கிங்’ தொழில்நுட்பங்களில் கில்லாடி ஆனார். உலகெங்குமிருக்கும் பிரபலமான ஹேக்கிங் குழுக்களின் இணைந்து கலக்க ஆரம்பித்தார். பெரிய நிறுவனங்கள் பலவும் ஹேக்கிங் தொடர்பான உதவிகளுக்கு இவரை நாட ஆரம்பித்தார்கள் (ஹேக்கிங் என்பது தீய காரணங்களுக்காக மட்டுமல்ல, சில சமயங்களில் நல்ல விஷயத்துக்கும் தேவைப்படும்).

எர்னஸ்ட் & யங் என்கிற நிறுவனத்துக்கு மென்பொருள் பாதுகாப்பு சோதனைப் பணியாளராக பணிபுரிந்துகொண்டே கல்லூரியில் சேர்ந்து கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தார்.

யாஹூ நிறுவனத்தின் இணை நிறுவனரான டேவிட் ஃபைல் தங்களோடு வந்து இணையுமாறு இவரை நல்ல சம்பளத்துக்கு அழைக்க, கல்லூரியை பாதியிலேயே விட்டு விட்டு ‘யாஹூ’வில் இணைந்தார்.

பிரையன் ஆக்டன் அமெரிக்கர். ஃப்ளோரிடா மாகாணத்தில் வளர்ந்தவர். ஸ்டேண்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டரில் பட்டம் பெற்றவர். ‘ஆப்பிள்’ நிறுவனத்தில் சாஃப்ட்வேர் என்ஜினியராக தன் வாழ்க்கையைத் தொடங்கினார். 1996ல் ‘யாஹூ’ நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.

நட்பு மலர்ந்தது
அப்போது எர்னஸ்ட் & யங் நிறுவனத்தில் மென்பொருள் பாதுகாப்பு சோதனையாளராகப் பணியாற்றிய ஜேன் கோம் அடிக்கடி யாஹூவுக்கு பணி தொடர்பாக வரவேண்டி இருந்தது. கோமுடைய புத்திக்கூர்மையும், நேர்மையும் ஆக்டனை கவர்ந்தது.

சில மாதங்கள் கழித்து கோம், யாஹூவில் இணைந்தார். ஏற்கனவே இருவரும் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த மரியாதை, இணைந்து பணியாற்றிய போது நெருங்கிய நட்பாக மலர்ந்தது. பணி நேரத்திலும் சரி, பணி தாண்டிய நேரங்களிலும் சரி இரட்டையர்களாக ஒன்றாகவே சுற்றிக் கொண்டிருந்தார்கள்.

2007ஆம் ஆண்டு இருவரும் ஒன்றாகவே பணியை விட்டார்கள். தென்னமெரிக்காவுக்கு பயணித்தார்கள்.

வாட்ஸப் பிறந்தது

‘ஃபேஸ்புக்’ பிரபலமாகத் தொடங்கியது. இருவரும் இணைந்து வேலைக்கு விண்ணப்பித்தார்கள். ஆனால், ஏனோ இவர்களை பணிக்கு சேர்த்துக் கொள்ள ஃபேஸ்புக் மறுத்தது. யாஹூவில் சம்பாதித்து சேர்த்த கையிருப்பு இருவரிடமுமே கரையத் தொடங்கியிருந்தது.

ஜனவரி 2009. நண்பர் ஒருவரது வீட்டில் கோம் சினிமா பார்த்துக் கொண்டிருந்தார். ஆக்டனுக்கும் மற்ற நண்பர்களுக்கும் ஏதாவது மெசேஜ் அனுப்பிக் கொண்டே இருந்தார். மொபைல் போனில் இருந்த மெசேஜ் அப்ளிகேஷனுக்கு சில போதாமைகள் இருந்ததாக அவருக்கு பட்டது. ஒவ்வொரு எஸ்.எம்.எஸ்.சுக்கும் காசு செலவழிக்க வேண்டியிருக்கிறது. மெயில் செக் செய்ய பயன்படுத்தும் இண்டர்நெட் கனெக்‌ஷன் மூலமாகவே கூடுதல் காசு செலவில்லாமல் மெசேஜ் அனுப்பக்கூடிய வசதி இருந்தால் நன்றாக இருக்குமே என்று சட்டென ஓர் ஐடியா பளிச்சிட்டது.

ஆக்டனிடம் பேசினார். சில டெவலப்பர்களை கலந்தாலோசித்தார்கள். தான் புதியதாக உருவாக்க இருக்கும் அப்ளிகேஷனுக்கு ‘வாட்ஸப்’ என்று கோம்தான் பெயரிட்டார். பேச்சை நீட்டிக்க அடிக்கடி மெசேஜில் ‘அப்புறம் என்ன?’ (what’s up?) என்று கேட்போம் இல்லையா? அதையே தன் நிறுவனத்துக்கும் பெயராக வைத்து, கலிஃபோர்னியாவில் தன்னுடைய பிறந்தநாளான பிப்ரவரி 24, 2009 அன்று வாட்ஸப் இன்கார்ப்பரேஷனை ஜேன் கோம் தொடங்கினார்.

பொறுமை தந்த வெற்றி

ஆரம்பத்தில் ‘வாட்ஸப்’ அடிக்கடி சொதப்பியது. பயனாளர்களும் பெரிய ஆதரவு காட்டவில்லை. ஏற்கனவே மொபைல் போன்களில் மெசேஜ் ஆப்ஷன் இருக்க, புதுசாக இன்னொரு கந்தாயம் எதற்கு என்று நினைத்தார்கள்.

“இது வேலைக்கு ஆகாது. சம்பளம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை, எங்காவது வேலைக்கு போய்விடப் போகிறேன்” என்று கோம் சொன்னபோது, ஆக்டன் கோபத்துடன் மறுத்தார். “எனக்கென்னவோ இந்த ‘வாட்ஸப்’ எதையோ பெரியதாக சாதிக்கப் போகிறது என்று தோன்றுகிறது. ஒரு சில மாதங்கள் பொறுமையாக இரு” என்றார். நண்பனின் பேச்சுக்கு மறுபேச்சு ஏது? இத்தனைக்கும் அப்போது ஆக்டன் வேலை இல்லாமல் சும்மாதான் இருந்தார். ட்விட்டரில் வேலைக்கு சேர முயன்று, அவர்களும் சேர்த்துக் கொள்ள வில்லை.

தன்னுடைய வாட்ஸப்புக்கு பெரிய வரவேற்பு இல்லையென்றாலும் (வருமானமும் இல்லை), அதில் இருக்கும் குறைகளை அவ்வப்போது களைந்து கடமையே கண்ணாக அப்டேட் செய்துக் கொண்டிருந்தார் கோம். என்ன மாயமென்று தெரியவில்லை. திடீரென்று ஆப்பிள் பயனாளிகள் ஏகப்பட்ட பேர் வாட்ஸப்பை டவுன்லோடு செய்ய ஆரம்பித்தார்கள். இரவும், பகலுமாக வாட்ஸப்பில் கடலை போட ஆரம்பித்தார்கள். சட்டென்று சில நாட்களிலேயே சுமார் இரண்டரை லட்சம் பேர் வாட்ஸப் பயனாளிகள் ஆனார்கள்.

“நாம பெருசா பண்ணலாம் பாஸ்” என்று ஆக்டனையும் தன்னோடு வாட்ஸப் நிறுவனத்தில் அக்டோபர் 2009 வாக்கில் இணைத்துக் கொண்டார். முன்னாள் யாஹூ நண்பர்கள் சிலரிடம் பேசி ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக முதலீடு திரட்டி பிசினஸை கொஞ்சம் பெருசாக்கினார்கள். ஆப்பிளைத் தொடர்ந்து பிளாக்பெர்ரி போன்களுக்கும் வாட்ஸப் வசதியை நீட்டிக்க, ஆக்டன் முன்பு சொன்னமாதிரி நிஜமாகவே வாட்ஸப் பெரியதாக சாதிக்கத் தொடங்கியது.

இன்று?

கடந்த ஆறு வருடங்களில் வாட்ஸப் அடைந்திருக்கும் வளர்ச்சி யாருமே யூகித்தறிய முடியாதது. பெரிய முதலீட்டு நிறுவனங்கள் பல்லாயிரம் கோடியை இதில் முதலீடு செய்திருக்கின்றன. ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸப்பை எவ்வளவு கோடி ரூபாய் கொடுத்து வாங்கினார்கள் என்பதை மேலேயே சொல்லியிருக்கிறோம்.

நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக ஃபேஸ்புக்குக்கு கைமாற்றி விட்டுவிட்டாலும் இன்னமும் தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருப்பவர்கள் ஜேன் கோமும், பிரையன் ஆக்டனும்தான். கோம், வாட்ஸப்பின் மென்பொருள் தரத்தை பார்த்துக் கொள்கிறார். ஆக்டன், பிசினஸ் தொடர்பான விஷயங்களை கவனித்துக் கொள்கிறார். இருவரது உணர்வுப்பூர்வமான நட்புதான் வாட்ஸப்பை இந்த உயரத்துக்கு வளர்த்திருக்கிறது.

வெற்றிக்கு காரணம்?

பொதுவாக இணையத்தள பயன்பாடு என்றாலே எரிச்சலூட்டும் விளம்பரங்கள்தான் பெருந்தொல்லை. நிம்மதியாக ஒரு யூட்யூப் வீடியோவை கூட பார்த்துத் தொலைக்க முடியாமல், அதற்கு முன்பாக ஒரு இருபது நொடி விளம்பரத்தை சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. செய்திகளை வாசிக்கும்போது குறுக்கிடும் விளம்பர அட்டைகளை க்ளோஸ் செய்து, க்ளோஸ் செய்தே சோர்ந்து விடுகிறோம்.

வாட்ஸப் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் தன்னுடைய டேபிளில் பிரையன் ஆக்டன் எழுதி வைத்திருக்கும் மந்திரச்சொல்தான் வாட்ஸப்பின் வெற்றிக்குக் காரணம் என்கிறார்கள்.

“No Ads! No Games! No Gimmicks!”

நட்பு பரிமாறிக் கொள்ளும் சாளரமான வாட்ஸப்பில் வேறெந்த குறுக்கீடுகளும் எக்காலத்திலும் இருக்கக்கூடாது என்பதில் நண்பர்கள் இருவரும் உறுதியாக இருக்கிறார்கள். நட்பின் அருமையை அவர்களைவிட வேறு யார் அதிகமாக அறிய முடியும்?

எதிர்காலம்?

“சிலிகான் பள்ளத்தாக்கில் எங்கள் வாட்ஸப் நிறுவனத்தை போல நீங்கள் வேறெந்த நிறுவனத்தையும் பார்க்க முடியாது. பெரியதாக மிகப்பெரியதாக வளரவேண்டும் என்று நினைப்பதைவிட எங்களது அவ்வப்போதைய வெற்றியை தக்கவைத்துக் கொள்ளவே நாங்கள் கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறோம். கிடைத்த வெற்றியை தக்கவைத்துக் கொண்டால், அதுவே நம்மை மிகப்பெரிய வெற்றியை நோக்கி கொண்டுச் செல்லும். எங்கள் தயாரிப்பை முன்னிலைப்படுத்தி, எங்களை பின்னணியில் மறைத்துக் கொள்கிறோம். இதைத்தவிர எங்களுக்கு வேறெந்த பிசினஸ் சீக்ரட்டும் இல்லை” என்கிறார் ஆக்டன்.

வாட்ஸப், குழந்தையும் பயன்படுத்தும் வண்ணம் எளிதாக இருக்கிறது. பாதுகாப்பானது. வேகமானது. மற்ற சமூகவலைத்தளங்களைப் போல நேரத்தை விழுங்குவதில்லை. நாமறிந்த நம்முடன் தொடர்பில் இருக்கும் நண்பர்களோடு மட்டும் கருத்துகளை பரிமாறிக் கொள்ளவோ, குறிப்பிட்ட விஷயங்களுக்காக தனிக்குழு அமைத்து விவாதிக்கவோ உதவுகிறது. தகவல் பரிமாற்றம் இன்று இதன் அளவுக்கு எளிமையாகவும், வேகமாகவும் வேறு எந்த வடிவிலும் இல்லை.

ஆனால்-

யாருக்கு தெரியும்? ஆறு ஆண்டுகளுக்கு முன்பு யாராவது வாட்ஸப்பை நூறு கோடி பேர் பயன்படுத்தப் போகிறார்கள் என்று கணித்திருக்க முடியுமா? அதுபோல நாளை வேறொரு அப்ளிகேஷன் வரலாம். அது வாட்ஸப்பை வெற்றிக் கொள்ளவும் செய்யலாம்.

எனினும், அது அவ்வளவு எளிதல்ல. இந்த இரு நண்பர்களை தாண்டி ஓடவிரும்புபவர்கள் இவர்களை விட இரு மடங்கு வேகமாக ஓடவேண்டும். இன்றைய தேதியில் அதற்கு வாய்ப்பில்லை.

(நன்றி : வாட்ஸப் ஸ்பெஷல் - தமிழ் முரசு நாளிதழுடன் இணைப்பு)

4 ஜனவரி, 2016

நாஞ்சில் சம்பத்!

‘நெல்லை எங்களுக்கு எல்லை. குமரி எங்களுக்கு தொல்லை’ என்பது கலைஞரின் ஃபேமஸான பஞ்ச் டயலாக். நாஞ்சில் நாட்டில் என்றுமே திமுக கொஞ்சம் வீக்குதான். மொழி, இன உணர்வு மாநிலம் முழுக்க கொழுந்துவிட்டு எரிந்தாலும் காங்கிரஸ், இடதுசாரிகள், பாஜக என்று நாஞ்சில் நாடு மட்டும் தேசியநீரோட்டத்தில் டெல்லிரூட்டில்தான் என்றுமே பயணிக்கும்.

‘அண்ணா’, ‘தென்னகம்’ பத்திரிகைகளில் ‘ஆற்றல்மிகு அடலேறே!’ என்று அதிமுக தொண்டர்களை விளித்து நாஞ்சில் கி.மனோகரன் எழுதும் கடிதங்கள் எழுபதுகளில் திமுக தலைவர்களின் பி.பி.யை இஷ்டத்துக்கும் ஏற்றும். திமுகவில் உட்கட்சி குழப்பம் ஏற்பட்டபோது அவர் எழுதிய ‘கருவின் குற்றம்’ கவிதை ஏற்படுத்திய அதிர்வுகள் கொஞ்சநஞ்சமல்ல.

நாஞ்சில் சம்பத்தைப் பொறுத்தவரை மனோகரன் அளவுக்கு பெரிய தலைவர் எல்லாம் அல்ல. திமுகவில் இருந்தவரை தீப்பொறி ரேஞ்சைவிட குறைந்த நிலையில் இருந்த பேச்சாளர்தான். மதிமுகவில் இருந்த தலைவர்கள் ஒவ்வொருவராக தாய்வீட்டுக்கு படையெடுக்க இவரது கேரியர் கிராப் கொஞ்சம் கொஞ்சமாக அக்கட்சியில் ஏறத் தொடங்கியது. குறிப்பாக தொண்ணூறுகளின் இறுதியில் சம்பத்துக்கென்று கட்சி அபிமானங்களை தாண்டி நிறைய ரசிகர்கள் உருவானார்கள்.

பரங்கிமலை ஒன்றியம் என்றுமே பேச்சாளர்களின் கோட்டை. 67 மற்றும் 72 தேர்தல்களில் எம்.ஜி.ஆர் நின்று வென்ற தொகுதி பரங்கிமலை என்பதால் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்குமே இது கவுரவப் பிரச்சினையான இடம். மாவீரன் மிசா ஆபிரகாம் இருந்தவரை அதிமுகவினரை திமுகவினர் ஓட ஓட விரட்டிய களம். பிரசித்தி பெற்ற செங்கை மாவட்டத்தின் கிழக்கு எல்லை.

மதிமுக உருவானபோது மதுராந்தகம் ஆறுமுகம், பாலவாக்கம் சோமு, வேளச்சேரி மணிமாறன் என்று கழக செயல்வீரர்கள் பலரும் மதிமுகவுக்கு இடம்பெயர்ந்ததால் சென்னையின் சுற்றுப்புற வட்டாரத்திலேயே மதிமுக கொடி சொல்லிக் கொள்ளும்படி இந்த ஏரியாவில்தான் பறந்தது. 2000ஆம் ஆண்டு பிறந்தநாளில் மிகச்சரியாக இரவு 12.00 மணிக்கு வைகோ ‘மில்லெனியம் புத்தாண்டு வாழ்த்துகள்’ சொன்னதே மடிப்பாக்கம் கூட்ரோடு பொதுக்கூட்டத்தில்தான்.

பரங்கிமலை ரயில்நிலையம் அருகிலிருந்த திடல் (மதி தியேட்டர் எதிரே) ரொம்ப ஃபேமஸ். தமிழக அரசியலில் கோலோச்சிய அத்தனை தலைவர்களுமே ஒருமுறையாவது அங்கே பொதுக்கூட்டத்தில் பேசியிருப்பார்கள். குறிப்பாக வெற்றிகொண்டானுக்கு அது ஹோம்கிரவுண்டு மாதிரி. தென்சென்னை தொகுதி எம்.பி.யாக இருந்த வைஜயந்திமாலா ஏற்பாட்டின் பேரில் அங்கே சுரங்கப்பாதை பணிகள் தொடங்கிய காலத்தில் இந்த திடல் பறிபோனது.

இதன் பின்னர் ஆயில்மில் பஸ்நிலையம் அருகே சர்ச்சுக்கு பக்கத்திலிருந்த காலிமனையில்தான் கட்சி பொதுக்கூட்டங்கள் அதிகளவில் நடக்கும் (இப்போது அங்கே பெட்ரோல் பங்க் இருக்கிறது). கட்சி வேறுபாடில்லாமல் நூற்றுக்கணக்கான பேச்சாளர்களின் பேச்சை இங்கே நடந்த பொதுக்கூட்டங்களில்தான் செவிமடுத்திருக்கிறேன். கடந்த பதினைந்து ஆண்டுகளில் பறிபோன பொதுக்கூட்ட திடல்களை பற்றி தனியாக ஓர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இங்கே இந்து முன்னணி கூட்டமும் நடக்கும். அடுத்த வாரமே ஆராதனைப் பெருவிழாவும் நடக்கும். காளிமுத்து வந்து பேசுகிறார் என்றால் அடுத்த வாரமே துரைமுருகன் வருவார். இப்படி ஏட்டிக்கு போட்டியாக தொண்டர்களின் –- ரசிகர்களின் என்டெர்டெயின்மெண்டுக்கு கட்சிகள் நல்ல தீனி போட்டு வந்தன.

நாஞ்சில் சம்பத்தின் பேச்சை முதன்முதலாக இங்குதான் கேட்டேன். அனேகமாக 2002 ஆக இருக்கலாம். சில நாட்கள் முன்புதான் நாகர்கோயிலில் இருந்த அவரது பாரம்பரிய வீட்டை ஆக்கிரமிப்பு என்றுகூறி அதிமுக அரசு இடித்துத் தள்ளியிருந்தது. அன்றைக்கு நாஞ்சில், மேடையில் நடத்திக் காட்டியது ஒரு துன்பவியல் நாடகத்தின் உருக்கமான காட்சிகள். கருப்புத்துண்டை திடீரென்று இழுத்துப் பிடித்து வாள் மாதிரி உயரத் தூக்கிக் காட்டுவார். சட்டென்று அதே துண்டையெடுத்து வாய்பொத்தி கதறி கதறி அழுவார். வைகோவின் டிரேட்மார்க்கான ‘கிரேக்கத்திலே கலிங்கத்திலே’ பேச்சை அப்படியே இமிடேட் செய்தார். சங்கத்தமிழ் தண்ணி பட்ட பாடு. மாற்றுக் கட்சியின் எந்தத் தலைவருக்குமே மரியாதையில்லை. ‘அவன், அவள்’தான். அவருடைய பேச்சை முதன்முதலாக கேட்டதுமே தோன்றியது. “இவரிடம் சரக்கு சுத்தமாக இல்லை. ஆனால் கேட்பவர்களை கவரக்கூடிய ஈர்ப்பு இருக்கிறது”.

பின்னர் சில முறை மதிமுக தலைமையகமான தாயகத்தில் சந்தித்திருக்கிறேன். “இவங்களுக்கு டீ கொண்டாந்து கொடுப்பா” என்பதைகூட மேடையில் பேசும் பாவத்தில் உணர்ச்சிபூர்வமாகதான் சொல்லுவார்.

சங்கரன்கோயில் இடைத்தேர்தல் நடந்தபோது வைகோவின் கலிங்கப்பட்டி வீட்டுக்குச் சென்றிருந்தோம். வைகோ வீட்டுக்குள் ஓய்வில் இருந்தார். சாப்பிட்டுக் கொண்டிருந்த தொண்டர்களை சம்பத்தான் உபசரித்துக் கொண்டிருந்தார். அவரிடம் பேச முயன்றபோது, “சாயங்காலம் சங்கரன்கோயில் பஸ் ஸ்டேண்ட் கிட்டே பேசறேன். அங்கே வந்துருப்பா” என்றார்.

பஸ்ஸ்டேண்ட் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் நல்ல கூட்டம். உணர்ச்சிபூர்வமாக நெசவாளர்களின் துயரை பண்டைய கிரேக்கக் காலத்திலிருந்தே அடுக்கிக்கொண்டு வருகிறார். நெசவாளர்கள் நிறைந்த சங்கரன்கோயிலில் நன்கு எடுப்பட்ட பேச்சு அது. அப்போது திடீரென்று திமுக கொடி கட்டிய ஆட்டோ ஒன்று அந்தப் பக்கமாக போகிறது. மைக்கில் ‘சங்கரன்கோயில் பஸ் நிலையம் அருகே பிரச்சார பீரங்கி குஷ்பு உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்டுக் கொண்டிருக்கிறார். அனைவரும் அலைகடலென திரண்டு வாரீர்’ என்று ஆட்டோவில் கட்டப்பட்ட ஹாரனில் அறிவிப்பு. கூட்டம் சலசலத்தது.

பேசிக்கொண்டிருந்த நாஞ்சில் அப்படியே பேச்சை நிறுத்துகிறார். கூட்டத்தைப் பார்க்கிறார். “எவனெல்லாம் அவளைப் பார்க்கணும்னு நெனைக்கிறீயோ, அத்தனை பேரும் அப்படியே போயிடு. இங்கே உட்காராதே. எனக்கு அருவருப்பா இருக்கு”. பாதி கூட்டம் அப்படியே அம்பேல்.

“மேக்கப் போட்ட ஒரு நடிகை வார்றான்னா, அப்படியே போறீங்களேய்யா. ஒண்ணரை லட்சம் பேரு செத்திருக்கான். இன்னும் நீ சினிமா பார்த்துட்டு, வடநாட்டு நடிகைகளை வாயைப் பிளந்து ரசிச்சிக்கிட்டு இருக்கே. இந்த நாடு உருப்படுமா. தமிழினம் வாழுமா. நமக்கெல்லாம் எதுக்குய்யா கொள்கை, புடலங்காய். பேசாம நாமள்லாம் அந்த நடிகை நடத்துற கட்சியிலேயே போயி சேர்ந்துடலாம்”

கொஞ்ச நாட்களிலேயே சம்பத், அதிமுகவுக்கு போய்விட்டார்.

29 டிசம்பர், 2015

நடிகைகளின் கதை (U)

‘நடிகைகளின் கதை’ என்கிற தலைப்பில் தொடர் எழுத வேண்டும் என்று ‘தினகரன் வசந்தம்’ இதழுக்காக கேட்டதுமே சந்தோஷத்தில் விசிலடிக்க ஆரம்பித்தேன். ஏனெனில் அந்த டைட்டிலுக்கு வெகுஜன இதழ்களிலும், வாசகர்கள் மத்தியிலும் இருக்கும் மவுசு அத்தகையது.

புகுந்து விளையாடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் குயிலைப் பிடித்து கூண்டில் அடைத்து கூவச்சொன்ன கதையாக சில நிபந்தனைகளை விதித்தார்கள். அவற்றில் முக்கியமானது நடிகைகள் என்பதால் எங்குமே கொஞ்சம் ‘அப்படி இப்படி’ என்று எல்லை மீறி எழுதிவிடக்கூடாது என்பதுதான். ஒவ்வொரு நடிகையின் வாழ்க்கையிலும் நாம் உணரவேண்டிய படிப்பினை ஒன்றாவது இருக்கும். அதை ஹைலைட் செய்துக் காட்ட வேண்டியதே தொடரின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றார்கள்.

அசைவத் தலைப்பில் சைவத்தொடரை அசுவாரஸ்யமாகதான் ஆரம்பித்தேன். தொடரின் நான்காவது வாரம் வந்த ஒரு போன்கால் நினைவுகூறத்தக்கது. அரசியல் கட்சியொன்றின் மாநிலப் பொறுப்பில் இருந்தவர் பேசினார். ‘மம்தா மோகன்தாஸ் பற்றி எழுதியிருக்கீங்க. அவங்களுக்கு என்ன உதவி வேணும்னாலும் எங்க இயக்கம் செய்யும்’. அட, நாம எதிர்ப்பார்க்காத ஏரியாவிலிருந்தெல்லாம் ரெஸ்பான்ஸ் வருதே என்று குஷியானேன். பற்றிக்கொண்டது உற்சாக நெருப்பு. அந்த உற்சாகத்தின் அளவு, நாற்பது வாரங்களுக்கு நீண்டது.

இத்தொடரில் மறக்க முடியாத அத்தியாயம் ஸ்ரீவித்யாவைப் பற்றி எழுதியது. ‘உத்தம வில்லன்’ திரைப்படத்தின் டிரெய்லரை பார்த்ததுமே லேசாக மூளைக்குள் பல்பு அடித்தது. எனவே அப்படம் வெளிவருவதற்கு முன்பே ஸ்ரீவித்யாவின் கதையை வாசகர்களுக்கு அறிமுகம் செய்துவிட வேண்டும் என்கிற அக்கறையில் எழுதி வெளியிட்டோம். பரவலான பாராட்டுகளை பெற்ற அத்தியாயம் அது.

இந்திய நடிகைகள், தமிழ் நடிகைகள் என்கிற குறுகிய எல்லை அமைத்துக் கொள்ளாமல் உலகளவில் ஏதோ ஒரு காரணத்துக்காக பேசப்படுகிற நடிகைகள் என்று பலரையும் அறிமுகம் செய்தோம். இப்போது நூலாக்குவதற்காக மொத்தமாக வாசிக்கும்போதுதான் தெரிகிறது, கிட்டத்தட்ட எல்லா நடிகைகளின் கதையையுமே ஏதோ ஒரு சரடு இணைக்கிறது என்று.

தொடராக எழுதத் தொடங்கியதிலிருந்தே வாசகர்களிடமிருந்து கடிதங்கள் வந்துக் கொண்டே இருக்கும். ‘சில்க்கின் கதையை எப்போது எழுதுவீர்கள்?’. எங்களுக்கும் எழுத ஆசைதான். ஆனால் எழுதக்கூடாது என்று விடாப்பிடியாக ஒரு லட்சுமணரேகையை எங்களுக்கு முன்பாக வரைந்துக் கொண்டோம். ஏனெனில் சில்க்கின் கதையை அறியாத தமிழரே இருக்க முடியாது. பல்வேறு கட்டுரைகளாகவும், புத்தகங்களாகவும் வந்த கதை அவருடையது. அதுவுமில்லாமல் ‘நடிகைகளின் கதை’யில் சில்க் என்பது க்ளிஷேவான விஷயமாக இருக்கும் என்கிற தயக்கமும் இருந்தது. எனினும் சில்க்கை தவிர்க்க முடியுமா என்ன. ஃபிலிம்பேர் இதழில் (1984 டிசம்பர்) தன் திரையுலக வாழ்வின் உச்சத்தில் இருந்தபோது சில்க் கொடுத்திருந்த நேர்காணலை அப்படியே தமிழாக்கம் செய்து கடைசி அத்தியாயமாக கொடுத்தோம். அரிதான அந்த பேட்டி சில்க்கின் ஆளுமையை வாசகர்கள் யூகித்துக்கொள்ள வழிவகுக்கும்.

இந்நூல் அச்சுக்கு செல்ல தயாராகும் நேரத்தில் இன்னொரு இனிய திருப்பம். ஷகிலா, ‘தினகரன் வெள்ளிமலர்’ இதழுக்காக நேர்காணல் தர ஒப்புக்கொண்டார். ‘ஷகிலா பேசுகிறேன்’ என்கிற தலைப்பில் வெளியான அந்த நேர்காணல், திரைக்குப் பின்னான ஷகிலாவை அச்சு அசலாக வாசகர்களிடம் கொண்டு சேர்த்தது. ஷகிலா குறித்த பல கற்பிதங்களை உடைத்திருக்கும் அந்த பேட்டியையே இந்நூலின் முதல் அத்தியாயமாக சேர்த்திருக்கிறோம்.

இந்த நூலின் தலைப்பில் வேண்டுமானால் ‘கதை’ இருக்கலாம். ஆனால் இங்கே விவரிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் நூறு சதம் நிஜம்.

- ‘நடிகைகளின் கதை’ நூலின் முன்னுரை

வண்ணத்திரையில் நான் கண்ட முதல் நாயகியான ஸ்ரீதேவிக்கு இந்நூல் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

பக்கங்கள் : 192  விலை : ரூ.150/-
வெளியீடு : சூரியன் பதிப்பகம்
229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர்,
சென்னை - 600 004. போன் : 42209191 Extn : 21125
Email : kalbooks@dinakaran.com

19 டிசம்பர், 2015

மீட்பர்

இன்று காலை காபியோடு தினத்தந்தியை பருகிக் கொண்டிருந்தபோது ‘சன் லைஃப்’ மியூசிக் சானலில் ‘பூங்காற்று’ நிகழ்ச்சி வரவேற்பரையை நிறைத்துக் கொண்டிருந்தது.

‘பாண்டி நாட்டுத் தங்கம்’ படத்திலிருந்து ‘சிறு கூட்டுலே’ பாட்டு. வாசித்துக் கொண்டிருந்த செய்திகள் மறந்து மனசு வேறெங்கோ பறக்க ஆரம்பித்தது. அடுத்து ‘அதிசயப் பிறவி’யில் இருந்து ‘உன்னைப் பார்த்த நேரம்’. சமையலறையிலிருந்து அம்மா குரல் கொடுத்தார். “இப்போவெல்லாம் யாரு இது மாதிரி பாட்டு போடுறாங்க.... இந்தப் படமெல்லாம் உங்க அப்பாவோட ரங்கா தியேட்டருலே பார்த்தேன்”. ‘அம்மன் கோயில் கிழக்காலே’விலிருந்து ‘பூவை எடுத்து ஒரு மாலை’. விஜய்காந்த் ரசிகையான அம்மா உருகிப் போனார். சமையலை மறந்துவிட்டு பாடல்களை கேட்க அமர்ந்துவிட்டார்.

இதெல்லாம் வெறும் பாடல்கள் அல்ல. நினைவுகள்!

டீனேஜில் இருந்தபோது ஒரு மழைக்கால நள்ளிரவு. மறுநாள் காலையில் நான் என்னவாக இருக்கப் போகிறேன் என்று தெரியாத நிச்சயமற்ற சூழல். எல்லா வகையிலும் தோற்றுப்போன எனக்கு எதிர்காலமே இல்லை என்பது மட்டும் தெரிந்திருந்தது. சூடாக தேநீர் அருந்திக் கொண்டே மண்ணாங்கட்டி மூளையின் துணைகொண்டு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். டேப்ரிக்கார்டரை ஆன் செய்தார் டீ மாஸ்டர். ‘தாலாட்டுதே வானம்... தள்ளாடுதே மேகம்’. ஜெயச்சந்திரனின் குரலில் இளையராஜாவின் மேஜிக். பாடல் தொடங்கிய நொடியிலிருந்து அடுத்த நான்கு நிமிடங்களுக்கு என்னை சுற்றி என்ன நடக்கிறது என்று எதுவுமே தெரியவில்லை. பாடல் முடிந்ததுமே, புதியதாக பிறந்தவனாய் உணர்ந்தேன். கடந்துப்போன பதினேழு வருடங்கள் அத்தனையையும் மறந்தேன். மழை நனைத்த வயலாய் மனசு பளிச்சென்று ஆனது. இன்று நான் நானாக இருப்பதற்கு அந்த நாலு நிமிடங்களே காரணம்.

புத்தனுக்கு போதிமரத்தின் அடியில் கிடைத்த ஞானம் இப்படியானதாகதான் இருந்திருக்க வேண்டும். பிற்பாடு பல நண்பர்களோடு பேசிப் பழகும்போது நிறைய பேர் இதே போன்ற அனுபவத்தை ஏதோ ஒரு பாடல் மூலம் பெற்றிருக்கிறார்கள் என்பதை அறியமுடிந்தது. அத்தனை பாடல்களுமே இளையராஜா இசையமைத்தவை என்பதுதான் ஆச்சரியமான ஒற்றுமை.

கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் என் வாழ்நாளின் படுமோசமான நாட்களை கடந்தேன். ஆகஸ்ட் 24 அன்று என்னுடைய பிறந்தநாள் என்பதையே ஃபேஸ்புக்கில் வந்து குவிந்த வாழ்த்துகள் மூலம்தான் உணர்ந்தேன். என் குடும்ப விளக்கு அணைந்துவிடுமோ, குழந்தைகளின் எதிர்காலம் என்னாகுமோ என்கிற பதட்டத்தில் மனநலம் பிறழ்ந்து சுற்றிக் கொண்டிருந்த நாட்கள் அவை. தேக்கி வைத்த கண்ணீர், எந்நிமிடமும் அணையாய் உடைய தயாராக இருக்க நடைப்பிணமாய் ஆனேன். அந்த மனநிலையில் வண்டி ஓட்டும்போது ஏதேனும் விபத்து ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சத்தில் எந்நேரமும் கூடவே இருந்தார் அண்ணன் சிவராமன்.

அவர் உடன் இல்லாத பொழுதுகளில் எந்நேரமும் மொபைலிலும், கணினியிலும் சேகரிக்கப்பட்டிருந்த இளையராஜாதான் ஹெட்செட் மூலமாக என்னை மீட்டார். என்னைப் பொறுத்தவரை இயேசுவை மாதிரி இளையராஜாவும் ஒரு மீட்பர். மிகைப்படுத்தி சொல்வதாக தோன்றலாம்.

ராகம், தாளம் என்று இசை பற்றிய எந்த அறிவும் இல்லாத பாமரனான எனக்கு தாயின் அன்பையும், தந்தையின் அக்கறையையும் இளையராஜாவின் இசை அளித்தது. குஞ்சுக்கு தாய்ப்பறவை தரும் கதகதப்பையும், பாதுகாப்பையும் வழங்கியது என்று சொன்னால் யார்தான் நம்புவார்கள்? ஆனால், இதுதான் உண்மை. எழுதியோ, பேசியோ இந்த உணர்வுகளை யாருக்கும் கடத்தவே முடியாது. ஒவ்வொருவருமே இம்மாதிரி சூழலை எதிர்கொள்ளும் அனுபவம் மட்டுமே நான் சொல்லவருவதின் பேருண்மையை எடுத்துக் காட்டும்.

பல முறை இணையத்தளங்களிலும், நண்பர்களுடனான விவாதங்களிலும் எது எதற்கோ இளையராஜாவை லூசுத்தனமாக கிண்டலடித்திருக்கிறேன். கேணைத்தனமாக திட்டியிருக்கிறேன். அதற்காகவெல்லாம் இப்போது வருந்த வேண்டியதில்லை. என் தகப்பன் மீது நான் என்ன உரிமை எடுத்துக் கொள்வேனோ, அப்போதெல்லாம் அதே போன்ற உரிமையைதான் அவர் மீதும் எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்று புரிகிறது. என்னுடைய இரத்தத்திலும், உடலின் ஒவ்வொரு செல்லிலும் இளையராஜா இருக்கிறார் என்கிற புரிதலுக்கு இப்போது வந்திருக்கிறேன். அறுவைச்சிகிச்சை செய்துகூட அவரை என்னிடமிருந்து அகற்ற முடியாது.

இளையராஜாவுக்கு நாம் வெறும் ரசிகர்கள் அல்ல. அவரது இசை, ரசிப்பு என்கிற அற்ப எல்லையை எல்லாம் என்றோ தாண்டிவிட்டது. உயிரிலும் உணர்விலும் ஒன்றாக கலந்துவிட்ட மேதைமை அவரது இசை. ஒவ்வொரு தமிழனுமே மகிழ்ச்சியாக இருக்கும்போது அவனுடைய மகிழ்ச்சியின் அளவை பன்மடங்கு கூட்டுவதும், துயரத்திலிருக்கும்போது அதிலிருந்து அவனை மீட்டெடுக்கும் வல்லமையும் இளையராஜாவுக்கு மட்டுமே உண்டு. இதை மறுப்பவர்களுக்கு கேட்கும் சக்தி இல்லையென்று அர்த்தம்.

கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகன் நான். நமக்கு கற்பிக்கப்பட்ட எந்த கடவுளுமே இதுவரை எந்த அதிசயத்தையும் நிகழ்த்திக் காட்டியதில்லை. நம் கண் முன்னால் ஒரு புல்லை கூட பிடுங்கிப் போட்டதில்லை. ஆனால், கடவுளைவிட மேன்மையான சொல் எந்த மொழியிலும் இல்லாததால் இளையராஜாவை இப்போதைக்கு கடவுள் ஸ்தானத்தில்தான் வைக்க விரும்புகிறேன். அவரை நாம் இழக்கும் நாள்தான் நிஜமாகவே தமிழ் சமூகம் ஈடு இணை செய்ய முடியாத இழப்பினை சந்திக்கும் நாளாக இருக்கும்.

சமீபத்தில் வெளிவந்த ‘CREED’ படத்தில் சில்வஸ்டர் ஸ்டாலோன் ஓர் அபாரமான வசனத்தை பேசியிருப்பார். “காது கொடுத்து கேள். எப்போதும் நீ பேசிக்கொண்டே இருந்தால் எதையுமே கற்க முடியாது”. நம்முடைய இடியட் பாக்ஸ்கள் எப்போதும் பேசிக்கொண்டேதான் இருக்கின்றன. அவையும் கற்பதாக தெரியவில்லை. அவற்றை உபயோகிப்பவனும் எதையும் கற்கமுடியுமென்று தோன்றவில்லை.

நம்மிடையே வாழும் கடவுளை அவமதிக்கும் எவனுக்கும் பரலோகத்திலும் கூட பாவமன்னிப்பு இல்லை!

16 டிசம்பர், 2015

ஷகிலா பேசுகிறேன்!

ஆண்டு அனுபவித்தவர் அறுபது வயதில் சுயசரிதை எழுதுகிறார் என்றால் புரிகிறது. இன்னும் நாற்பதை கூட எட்டாத ஷகிலா ஏன் எழுதியிருக்கிறார்? 

சந்தேகத்தை தெளிவுபடுத்திக் கொள்ள சென்னையில் அவர் தங்கியிருக்கும் அப்பார்ட்மெண்டுக்கு சென்றோம். ஒரு பிரபலமான நடிகை வசிக்குமிடம் என்பதற்கு எந்தவித அடையாளமும் அற்ற எளிமையான வீடு. சாதாரண பெண்களை போலவே ‘சிம்பிளாக’, ‘ஹோம்லி’யாக இருக்கிறார் ஷகிலா. கழுத்தில் காதில் மூக்கில் பொட்டு தங்கம் இல்லை.

இனி அவரே பேசுவார்.
ஏன் எழுதினேன்?

ஒரு முறை பி.சி.ஸ்ரீராம் சார் சொன்னார். ‘உங்களை மாதிரி ஆளுங்களோட வாழ்க்கையில் இருந்துதான் மக்கள் கத்துக்க வேண்டிய பாடங்கள் இருக்கு. உங்களுக்கு நடந்த நல்லது கெட்டதுகளை எழுதணும்...’

அவர் சொன்னது மனதை அரித்துக் கொண்டே இருந்தது. நீண்டகாலமாகவே உங்களைப் போன்ற பத்திரிகை நண்பர்கள் எழுதச் சொல்லி கேட்டுக் கொண்டே இருந்தார்கள். எல்லாரிடமும் ‘எனக்கு விருப்பமில்லை. என்னைப் பற்றி எழுத நான் அன்னை தெரசாவும் இல்லை’ என்றே சொல்லிக் கொண்டிருந்தேன். என் வாழ்க்கையும் சரி. நான் நடித்த படங்களும் சரி. போலியானவை. அதற்காகவே எழுதத் தயங்கினேன். எழுதினால் உண்மையை மட்டுமே எழுதவேண்டும்.

இந்நிலையில் திடீரென்று ஒருநாள் ஏதோ ஒரு வேகம் வந்தது. மளமளவென்று எழுதிவிட்டேன்.

‘மை டியர் குட்டிச்சாத்தான்’

நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் இப்போது பேசிக்கொண்டிருக்கிறோமே இதே வீட்டில்தான். அப்பா, ரெக்ரியேஷன் தொடர்பான வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அம்மா, ஹவுஸ் ஒயிஃப். அப்பாவுக்கும் சரி. அம்மாவுக்கும் சரி. இவர்கள் செய்துக் கொண்டது பரஸ்பரம் மறுமணம். அப்பாவின் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தைகளை என் சொந்த சகோதர சகோதரிகள் என்றுதான் என்னுடைய 12வது வயது வரை நினைத்துக் கொண்டிருந்தேன். என் அம்மாவுக்கு மூன்று பிள்ளைகள்.

அருகிலிருந்த பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது என் ஸ்கூல் சீனியர்களாக இருந்த சோனியாவும் (இப்போது நடிகர் போஸ் வெங்கட்டின் மனைவி), டிங்குவும் பயங்கர ஃபேமஸ். காரணம் அவர்கள் இருவரும் அப்போது சக்கைப்போடு போட்ட ‘மைடியர் குட்டிச்சாத்தான்’ படத்தில் நடித்திருந்தார்கள். ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் அவர்களுக்கு இருந்த பிரபலமே என்னை சினிமாவை நோக்கி ஈர்த்தது.

டீன் ஏஜில் என் வீட்டுக்கு பக்கத்தில் இருந்த சினிமாக்காரர்கள் ஒரு சின்ன ரோலில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்கள். சரத்குமார் நடித்த ‘நட்சத்திர நாயகன்’ படம் அது. ஒரே ஒரு சீனில் வந்தாலும் முத்தாய்ப்பான காட்சி. அதைத் தொடர்ந்தே நிறைய படங்களில் நடித்தேன். இரண்டாயிரம் ஆண்டின் காலக்கட்டத்தில்தான் மலையாளப் படங்களில் நடிக்க ஆரம்பித்தேன்.

படிப்புக்கு பதில் நடிப்பு

படிப்பில் அவ்வளவு ஆர்வம் கிடையாது. பாப் கட்டிங் வெட்டிக் கொண்டு டிவிஎஸ் சேம்பில் கோடம்பாக்கம் முழுக்க சுற்றுவேன். ஷூட்டிங்கில் கலந்துக் கொண்டால் ஸ்கூலுக்கு லீவு போடலாம் என்பதே எனக்கு ஆகப்பெரிய ஆறுதலாக இருந்தது. ‘படிப்புதான் வரலை. நடிப்பாவது வரட்டும்...’ என்று அப்பாவும் தடை போடவில்லை. அதுவுமின்றி அப்போது குடும்பமும் ரொம்ப கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தது. சினிமாவில் நான் நடித்ததால் காசு நிறைய கிடைத்தது. எனவே குடும்பத்தில் என்னை என்கரேஜ் செய்தார்கள்.

சிலுக்கு அறைந்தார்

‘ப்ளே கேர்ள்ஸ்’ படத்தில் சில்க் ஸ்மிதாவுக்கு தங்கச்சியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் நாள் ஷூட்டிங்கில் எனக்கு கொடுக்கப்பட்ட உடை மிகச் சிறியதாக இருந்தது. அதிர்ச்சியில் உறைந்துப் போனேன். ஷாட் ரெடி ஆனதுமே சில்க் மாடியில் இருந்து இறங்கி வந்தார். அவரைப் பார்த்ததுமே கூடுதல் அதிர்ச்சி. என்னைவிட மிகச்சிறிய ஆடை அணிந்திருந்தார். அவரிடம் சங்கடத்துடன், ‘அக்கா, உங்க உள்ளாடையெல்லாம் வெளியே தெரியுது...’ என்றேன். சில்க் என்னை கண்டுக்கொள்ளவே இல்லை. இயக்குநர் உடனே, ‘பெரிய ஸ்டார்கிட்டே இப்படியெல்லாம் பேசக்கூடாது...’ என்றார்.

சீன் படி நான் சில்க்குக்கு காஃபி கொடுக்க வேண்டும். அவர் என்னை அறைய வேண்டும். கேமிரா ரோல் ஆகத் தொடங்கியது. ‘அக்கா காஃபி...’ என்று நான் கோப்பையை நீட்ட, பதிலுக்கு சில்க் பளாரென்று நிஜமாகவே அறைந்தார். எனக்கு அவமானமாகி விட்டது. நான் அவரிடம் சொன்னதை மனதில் வைத்துக் கொண்டு வன்மத்தில் அறைந்துவிட்டார் என்று கோபப்பட்டு படப்பிடிப்பை விட்டு வெளியேறினேன்.

தயாரிப்பாளரும், இயக்குநரும் பின்னர் என்னை சமாதானப்படுத்தி ‘டைமிங்’ பற்றியெல்லாம் பாடமெடுத்தார்கள். சில்க் வேண்டுமென்றே அடிக்கவில்லை என்று புரியவைத்தார்கள். அதன்பிறகு சில்க் என்னிடம் அன்பாக நடந்துக் கொண்டார். என்னை பிரத்யேகமாக அவர் வீட்டுக்கு அழைத்து லஞ்ச் கொடுத்தார். ஷூட்டிங்கில் எனக்காக நிறைய சாக்லேட் வாங்கி வைத்திருப்பார்.

லட்சங்களை சம்பாதித்தேன்

நான் நடித்த படங்கள் கமர்ஷியலும் அல்ல. ஆர்ட் ஃபிலிமும் அல்ல. ஏதோ ஒரு வகையில் மக்களின் உணர்வுகளுக்கு வடிகாலாக அமைந்தவை. பதினைந்து லட்சத்தில் படம் எடுப்பார்கள். முப்பது லட்சத்துக்கு பிசினஸ் ஆகும். பிசினஸ் ஆன தொகையைவிட பன்மடங்கு வசூல் ஆகும். அந்த படம் தொடர்பான அத்தனை பேருக்குமே நிச்சய லாபம். இன்றுவரை அம்மாதிரி படங்களில் நடித்தது தொடர்பாக எனக்கு எந்தவிதமான குற்றவுணர்ச்சியோ, வருத்தமோ சிறிதுமில்லை.

ஒருமுறை படப்பிடிப்பு முடிந்து கேரளாவில் இருந்து சென்னைக்கு திரும்ப தயாராகிக் கொண்டிருந்தேன். ஒரு புதுத் தயாரிப்பாளர் வந்து கால்ஷீட் கேட்டார். ஐந்து நாள் நடித்தால் போதும் என்றார். அவரை நிராகரிக்க எனக்கு ஒரு லட்சம் சம்பளம், மூன்று நாள்தான் நடிக்க முடியும் என்றேன். அவரோ உடனே ஒரு லட்ச ரூபாயை என் கையில் அட்வான்ஸாகவே கொடுத்து விட்டார்.

மூன்று நாள் ஷூட்டிங் முடிந்து கிளம்பும்போது கூடுதலாக இரண்டு லட்சம் கொடுத்தார். ஒருநாளைக்கு ஒரு லட்சம் என்னுடைய சம்பளம் என்று அவர் நிர்ணயித்து வைத்திருக்கிறார். என்னுடைய வேல்யூ அந்தான் என்று எனக்கு அப்போதுதான் தெரிய வந்தது.

முதுகில் குத்திய துரோகம்

நான் சம்பாதித்த அத்தனை பணத்தையும் என்னுடைய அம்மாவும், அக்காவும் எடுத்துக் கொண்டார்கள். குடும்பத்துக்காகதான் சம்பாதித்தேன். உறவுகளையும், நட்புகளையும் பேணி வளர்க்க கணக்கு வழக்கில்லாமல் செலவு செய்தேன். ஆனால், அவர்கள் என்னை ‘பி’ கிரேடு நடிகையாகதான் பார்த்திருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை நான் வெறும் ‘ஏடிஎம் மெஷின்’. என் குடும்ப நிகழ்வுகளில் நான் கலந்துக் கொள்வதைகூட அவர்கள் அவமானமாக கருதினார்கள்.

எனக்கு ஆதரவாக இருந்த அப்பாவும் காலமான பிறகு மிகவும் தனிமையை உணர்ந்தேன். நண்பர்கள், உறவுகள்... என அத்தனை பேரும் தொடர்ச்சியாக சொல்லி வைத்தது போல முதுகில் குத்திக்கொண்டே இருந்தார்கள். துரோகங்கள் பழகிவிட்டது. எப்படியிருந்தாலும் நான் வாழ்ந்துதானே ஆகவேண்டும். என்னுடைய உலகத்தை நானே உருவாக்க தீர்மானித்தேன்.

இப்போது நான் வசித்து வருவது ஒரு காடு. இந்த காட்டின் ஒவ்வொரு மரத்தையும் நானே நட்டிருக்கிறேன். எல்லாமே என்னுடைய தேர்வுதான் என்பதால் காசு பணம் இருக்கிறதோ இல்லையோ மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன். என்னை ஒரு திருநங்கை அவரது மகளாக தத்தெடுத்திருக்கிறார். அவர் பெயர் கிருபாம்மாள். நான் ஒரு திருநங்கையை என்னுடைய மகளாக தத்தெடுத்திருக்கிறேன். அவரது பெயர் தங்கம். ரத்த உறவில்லாத இந்த உறவுகளின் பாசத்திலும், அன்பிலும் முன்பு எப்போதுமே உணர்ந்தறியாத பாதுகாப்பினையும், மகிழ்ச்சியையும் பெறுகிறேன்.

காமிக்ஸ் பிடிக்கும்

இளையராஜாவின் இசை என் மனதை சமநிலையில் வைத்துக்கொள்ள உதவுகிறது. இசையைத் தவிர்த்து என்னுடைய பொழுதுபோக்கு ப்ளே ஸ்டேஷனில் கேம்ஸ் விளையாடுவது. சினிமா பார்ப்பது அரிது. தமிழில் கமல் சார் படங்களை தியேட்டருக்கு போய் பார்ப்பேன். அது தவிர்த்து ‘நார்னியா’, ‘ஹாபிட்’ மாதிரி ஹாலிவுட் ஃபேண்டஸி படங்களை விரும்பி ரசிப்பேன். மாற்று சினிமாவாக மதிக்கப்படும் உலகப்படங்கள், கொரியப்படங்கள் எனக்கு விருப்பமானவை. பெரிய கலெக்‌ஷனே என்னிடம் இருக்கிறது.

காமிக்ஸ் பிடிக்கும். ஃப்ளைட்டில் பயணிப்பது அறுவை என்பதால் எப்போதுமே ரயிலில் செல்வதையே விரும்புவேன். அம்மாதிரி பயணங்களுக்காக கையில் எடுத்துச் செல்வது டிங்கிள், ஆர்ச்சீஸ் மாதிரி காமிக்ஸ் புத்தகங்களைதான். ஒவ்வொரு முறை புத்தகக் கடைக்கு போகும்போதும் குறைந்தது மூவாயிரம், நாலாயிரம் ரூபாய்க்கு காமிக்ஸ்களை மொத்தமாக அள்ளி விடுவேன். காமிக்ஸ் படித்துதான் என்னுடைய ஆங்கில அறிவே வளர்ந்தது.

பயணங்களின் காதலி

பயணங்கள்தான் என்னை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்கின்றன. மாதக் கணக்கில் காடுகளில் தங்கி வனவிலங்குகளை வேடிக்கை பார்ப்பது மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. மசினகுடி போய் விசாரித்துப் பாருங்கள். ஷகிலா அங்கே ரொம்ப ஃபேமஸ். பழங்குடியினரின் வீடுகளில் தங்கி, நாட்கணக்கில் காட்டு வாழ்வை வாழ்வேன். இந்தியா முழுக்க இருக்கும் எல்லா காடுகளுக்கும் சென்று வாரக் கணக்கில் வாழ்ந்துவிட்டு வரவேண்டும் என்பது என் லட்சியம்.

ஆண்கள்

என்னைப் போன்ற பெண்கள், ஆண் இனத்தையே வெறுப்பார்கள் என்றொரு பொதுப்புத்தி இருக்கிறது. அது தவறு. ஆண்களை நான் பாசிட்டிவ்வாகதான் பார்க்கிறேன். துரோகம், நயவஞ்சகம் மாதிரி குணங்கள் ஆண் - பெண் இருவருக்கும் பொதுவானதுதான். என்னை சந்திக்கும் ஒவ்வொரு ஆணிடமும் என் அப்பாவை தேடுகிறேன். நான் ஒரு depended child. ஆண்களிடம் எதிர்ப்பார்ப்பது ஆதரவை மட்டுமே. வயதில் மூத்தவர்களாக இருந்தால் அண்ணன் என்றும், இளையவர்களாக இருந்தால் தம்பி என்றும் அழைக்கிறேன். பெண்கள் இல்லாமல் உலகமே இல்லை என்பார்கள். ஆண்கள் இல்லாமல் இருந்தால் மட்டும் உலகம் இருந்து விடுமா?

கடவுளுக்கு கடிதம்


கடவுள் நம்பிக்கை உண்டு. அந்த கடவுள் அல்லாவோ, இயேசுவோ, கிருஷ்ணரோ அல்ல. கடவுள். அவ்வளவுதான். அவருக்கு அடிக்கடி கடிதம் எழுதுவேன். அவருடைய முகவரி தெரியாது என்பதால் போஸ்ட் செய்வதில்லை. கடவுள் என்பதால், நான் கடிதத்தில் என்ன எழுதுகிறேன் என்று அவருக்கு தெரியாமலேயா போகும்? சமீபத்தில் கூட பெருமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் வாடும் மக்களை காக்க கோரி கடிதம் எழுதினேன். இம்மாதிரி ஆயிரக்கணக்கான கடிதங்கள் எழுதியிருக்கிறேன். கடவுளிடம் பேசுவதற்கு கடிதங்கள் உதவுகின்றன. எனக்கும் கடவுளுக்கும் மத்தியில் இடைத்தரகர்கள் யாரும் இருப்பதை நான் விரும்புவதில்லை.

டைரக்‌ஷன் ஆசை

நடிக்க வாய்ப்பு குறைந்தவுடனேயே டைரக்டர் ஆகிவிட வேண்டும் என்கிற ஆசை நிறைய பேருக்கு வரும். எனக்கு அப்படியெல்லாம் இல்லை. ஏற்கனவே ‘ரொமாண்டிக் டார்கெட்’ என்றொரு படம் இயக்கியிருக்கிறேன். டைரக்‌ஷன் ரொம்பவும் டென்ஷன் பிடித்த வேலை. எனவே இனி டைரக்ட் செய்யும் ஐடியா இல்லை.

நிரூபிப்பேன்

நானாக எப்போதுமே யாரிடமும் வாய்ப்பு கேட்டதில்லை. என்னை தேடி வரும் வாய்ப்புகளை மட்டுமே ஆரம்பக் காலத்திலிருந்து ஒப்புக்கொண்டு வருகிறேன். இப்போதும் யாராவது வந்து கேட்டால் நடித்துக் கொடுக்கிறேன்.

எனக்கு காமெடி பிடிக்கும். என்றாலும் எல்லா வேடங்களிலும் நடிக்க ஆசை. ஷகிலா என்பவள் வெறும் கவர்ச்சி நடிகை அல்ல. எனக்குள் இருக்கும் கலையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்குமா என்று காத்திருக்கிறேன். கிடைத்தால், நான் யார் என்பதை மக்களுக்கு நிரூபிப்பேன்.

(நன்றி : தினகரன் வெள்ளி மலர்)