11 ஜூலை, 2017

திட்டுனதுக்கு தேங்க்ஸ் சார்!

அதிகாலை இரண்டு மணி.

பாக்யராஜ் வீட்டிங் காலிங்பெல் இடைவிடாமல் அடித்துக் கொண்டிருந்தது.

சற்றுமுன்னர்தான் தூங்கப் போயிருந்தவர் கண்களை கசக்கியபடியே கதவைத் திறந்தார்.

திருதிருவென்று விழித்துக் கொண்டு வெளியே பாண்டியராஜன் நின்றுக் கொண்டிருந்தார்.

“என்னய்யா இந்த நேரத்துலே?”

“உங்க கிட்டே முக்கியமான ஒரு விஷயம் பேசணும் சார்”

அப்போது ‘டார்லிங், டார்லிங், டார்லிங்’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஜரூராக நடந்துக் கொண்டிருந்தது. ரிலீஸ் தேதி நெருங்கிக் கொண்டிருப்பதால் பாக்யராஜ் நெருப்பாக வேலை செய்துக் கொண்டிருந்தார். படப்பிடிப்பில் சின்ன சின்ன தடங்கல் நடந்தாலும், அவருக்கு அப்போது அசோசியேட்டாக இருந்த பாண்டியராஜனை பிடித்து காய்ச்சி எடுத்துவிடுவார். அன்றும் அப்படிதான் தேர்ட் டிகிரி லெவலில் பாக்யராஜ் திட்டியிருந்தார். அது சம்பந்தமாகதான் தன்னை பாண்டியராஜன் பார்க்க வந்திருப்பார் போலிருக்கிறது என்று பாக்யராஜ் நினைத்தார்.

“நீங்க என்னை இன்னிக்கு ரொம்ப அசிங்கமா திட்டுனீங்க இல்லே?”

“ஆமாய்யா. எனக்கே மனசு கஷ்டமா போயிடிச்சி. நான்தான் திட்டுறேன்னு தெரியுது இல்லே. நான் திட்டாதமாதிரி வேலை பார்க்க வேணாமா?”

“இல்லைங்க சார். நீங்க திட்டுனதுக்காக உங்களுக்கு ‘தேங்க்ஸ்’ சொல்ல வந்தேன்”

“திட்டுனதுக்கு தேங்க்ஸா? அதுவும் இந்த அகால வேளையிலே?” பாக்யராஜ், ஆச்சரியமாக கேட்டார்.

“ஆமாம் சார். நீங்க என்னை திட்டுனதை புரொடியூஸர்களான மாணிக்கவாசகமும், சண்முகராஜனும் பார்த்திருக்காங்க. இவன்தான் பாக்யராஜு கிட்டே நிறைய திட்டு வாங்கியிருக்கான். அப்போன்னா விஷயமுள்ள பையனாதான் இருக்கணும்னு சொல்லி, என்னை டைரக்ட் பண்ணச் சொல்லி காசு அட்வான்ஸ் கொடுத்திருக்காங்க சார்”

“ஆஹா. என் திட்டுலே இப்படியொரு நன்மை நடக்குதா? இனிமே எல்லாப் பயலையும் காச்சு மூச்சுன்னு திட்டி தீர்த்துடறேன். பாண்டி, உனக்கு நல்ல நேரம் ஆரம்பிச்சிருக்கு. நீ நல்லா வருவே” ஆசிர்வதித்து அனுப்பினார் பாக்யராஜ்.

மறுநாள் தயாரிப்பாளர்களிடம் ‘கன்னிராசி’ கதையை சொன்னார் பாண்டியராஜன். அவர்களுக்கு மிகவும் பிடித்துப் போக, “ஹீரோவா பிரபுவை போட்டா நல்லாருக்கும்” என்று ஆலோசனையும் சொன்னார்கள்.

பிரபுவுக்கு கதை சொல்ல ‘அன்னை இல்லம்’ விரைந்தார் பாண்டியராஜன். அப்போது பிரபுவின் சித்தப்பா சண்முகம்தான் கால்ஷீட் பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் கதை சொல்லாமல், பிரபுவின் கால்ஷீட்டை வாங்க முடியாது.

பாண்டியராஜன் குள்ளம் என்பது ஊருக்கே தெரிந்ததுதான். அப்போது மிகவும் ஒல்லியாகவும் இருப்பார். வயது இருபத்தைந்து ஆகியிருந்தாலும், பார்ப்பதற்கு +2 படிக்கும் பையன் மாதிரிதான் இருப்பார்.

சண்முகம் இவரை ஏற இறங்க பார்த்தார். நடிகர் திலகம் பாணியிலேயே, “நீதான் டைரக்டரா? நீதான் கதை சொல்லப் போறீயா? சொல்லு பார்ப்போம்” என்று சொல்லிவிட்டு ஓரமாக இருந்த சோபாவில் சாய்ந்து படுத்துக் கொண்டார்.

பாண்டியராஜன் கதை சொல்ல ஆரம்பித்தார். கொஞ்ச நேரத்திலேயே சண்முகம் தூங்கிவிட்ட மாதிரி தெரிந்தது. தூங்கிவிட்டார் போல என்று இவர் கதையை சொல்வதை நிறுத்தினால், சைகை செய்து மேலே சொல்லு என்கிறார். இவர் தர்மசங்கடத்துடன் தாலாட்டு பாடியதை போல கதை சொல்லி முடிக்கிறார்.

சண்முகத்திடம் நீண்ட அமைதி. பாண்டியராஜனோ, ‘இது வேலைக்கு ஆகாது. நிச்சயமாக பிரபுவோட கால்ஷீட் கிடைக்காது’ என்கிற மனநிலைக்கு வந்துவிட்டார்.

சண்முகத்திடம் இருந்து குரல் வருகிறது. “அப்புறம்?”

“அவ்ளோதான் சார். கதை முடிஞ்சிடிச்சி”

“சரி. நீ போ. நான் புரொடியூஸர் கிட்டே பேசிக்கறேன்”

தன்னுடைய கதை சண்முகத்துக்கு பிடிக்காமல்தான் தூங்கிவிட்டாரோ அல்லது அவருக்கு தூக்கம் வருமளவுக்கு நாம் கதை சொல்லியிருக்கிறோமோ என்று பாண்டியராஜனுக்கு குழப்பம்.

மறுநாள் புரொடியூஸர் பாண்டியராஜனை கூப்பிட்டார்.

“என்னய்யா செஞ்சிருக்கே?”

“சார்”

“நீ சொன்ன கதையை ஒரு சீன் கூட மாத்தாம அப்படியே படம் புடிக்கிறதா இருந்தா பிரபுவோட கால்ஷீட்டை கொடுக்கிறேன்னு சண்முகம் சார் சொல்லிட்டாரு. அவருக்கு உன்னை ரொம்ப பிடிச்சிப் போச்சி”

அப்போதுதான் போன உயிரே திரும்பி வந்தது. வேண்டுமென்றே தன்னை விளையாட்டுக்கு சீண்டியிருக்கிறார் சண்முகம் என்பதை புரிந்துக் கொண்டார் பாண்டியராஜன்.

பல்வேறு சிரமங்களுக்கு பிறகு ‘கன்னிராசி’ வெளியாகி, சக்கைப்போடு போட்டது.

இருந்தாலும் பாண்டியராஜனை யாருக்குமே அடையாளம் தெரியவில்லை. அவருக்கு அட்வான்ஸ் தர வந்தவர்கள் எல்லாம் 101, 201 என்றே உப்புமா டைரக்டர்களுக்கு கொடுப்பது மாதிரி கொடுக்க வந்தார்கள். எப்படியோ சிரமப்பட்டு அடுத்த படத்துக்கு புரொடியூஸரை பிடித்துவிட்டார்.

ஒரு படம் ஓடினால்கூட டைரக்டருக்கு மரியாதை இல்லை. நடிகரைதான் மக்கள் மதிக்கிறார்கள் என்று அவருக்கு தோன்றியது. எனவே ‘ஆண் பாவம்’ படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக அவரே நடித்தார்.

1985. கிறிஸ்துமஸ் முடிந்து இரண்டு நாட்களுக்கு பிறகு படம் ரிலீஸ். சென்னை நகரம் முழுக்க தன்னுடைய படம் அச்சிடப்பட்ட போஸ்டரை தானே நேரில் போய் ஒட்டிக் கொண்டிருந்தார் பாண்டியராஜன். உதயம் தியேட்டரில் முதல் காட்சி ஆரம்பிக்கப் போகிறது. தியேட்டர் வாசலில் கூலிங்கிளாஸெல்லாம் போட்டு பந்தாவாக வந்து நின்றார் இவர். போஸ்டரை பார்த்தவர்களுக்கு கூட இவர்தான் ஹீரோ என்பதே தெரியவில்லை. ‘கஷ்டப்பட்டு போஸ்டர் அடிச்சதெல்லாம் வீணாப்போச்சி போலிருக்கே? கடைசிவரைக்கும் ஒரு பய நம்மளை அடையாளம் கண்டுபிடிக்கலையே?’ என்று நொந்துப் போனார்.

முதல் காட்சி முடிந்து கூட்டம் வெளியே வந்தது. “ஏய், படத்துலே சின்ன பாண்டியா நடிச்சவரு அவருதாண்டா” என்று கத்தியபடியே இவரை கூட்டம் சூழ்ந்தது. ஆளாளுக்கு கைகுலுக்குகிறார்கள். பாராட்டுகிறார்கள். இவரிடம் ஆட்டோகிராப் வாங்குகிறார்கள். பாண்டியராஜனால் இதை நம்பவே முடியவில்லை. மூன்று மணி நேரத்துக்கு முன்பாக தனிமரமாக அதே இடத்தில் நின்றிருந்தார். இப்போது அவரை சுற்றி அவ்வளவு ரசிகர்கள். ஆர்வமிகுதியில் அவரை தோள்மீது தூக்கி தியேட்டர் வளாகத்தில் ஊர்வலமாக ஓடுகிறார்கள்.

உள்ளே ‘ஆண் பாவம்’ அடுத்த காட்சி ஆரம்பித்தது.

வைரமுத்துவின் வைரவரிகள் இளையராஜா குரலில் டைட்டில் பாடலாக ஒலிக்கிறது.

“இந்திரன் வந்ததும்
சந்திரன் வந்ததும்
இந்த சினிமாதான்
எம்ஜிஆர் வந்ததும்
என்டிஆர் வந்ததும்
இந்த சினிமாதான்
கட்சி வளர்த்ததும்
ஆட்சி பிடிச்சதும்
இந்த சினிமாதான்...”

(நன்றி : ‘பழைய பேப்பர்’ தொடர் - தினகரன் வெள்ளிமலர்)

4 ஜூலை, 2017

கட்டுரை எழுதுவது எப்படி?

‘புதிய தலைமுறை’ இதழில் பணிக்கு சேரும்போது ‘எழுதுவது எப்படி?’ என்று மாலன், தான் எழுதிய பதினாறு பக்க சிறுநூல் ஒன்றை தந்தார். சி.பா.ஆதித்தனாரின் ‘இதழாளர் கையேடு’ போன்ற அந்நூல் ஊடகத்துறையில் பணிபுரிபவர்களுக்கு மிகவும் பயன்படும். பல பத்திரிகை ஆசிரியர்கள் அந்த நூலை ஜெராக்ஸ் போட்டுக்கொண்டு திருப்பித் தருகிறோம் என்று கேட்டார்கள். அதுமாதிரி ஒருவரிடம் போன copy இன்னமும் எனக்கு திரும்ப வரவில்லை. மாலன் சார், ஒரு soft copy கொடுத்தால் மகிழ்ச்சி.

அது மட்டுமின்றி அவ்வப்போது நம்முடைய கட்டுரைகளை திருத்தும்போது என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது என்பதை கவனித்து, அடுத்தமுறை அந்த தவறை திருத்திக் கொள்ளும்படி அறிவுறுத்துவார்.

ஒருமுறை ‘இந்தித் திணிப்பு’ குறித்து நான் எழுதியிருந்த கட்டுரை ஒன்று அரைகுறையாக வெந்திருந்தது. அதை வாசித்துவிட்டு, ‘கட்டுரை எழுதுவது எப்படி?’ என்று ஒரு மடலில் சில அறிவுறுத்தல்களை வழங்கினார். முடிந்தவரை அதை இன்றுவரை கடைப்பிடிக்கிறேன்.

‘யாம் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்’ என்று மாலன் சாரின் அனுமதியில்லாமலேயே அதை இங்கு பகிர்கிறேன். அவருக்கு தகவல்களை பரப்புவதில் பேரார்வம் உண்டு. எனவே எனக்கே எனக்காக கொடுத்த அறிவுரைகள் பலருக்கும் பயன்பட பகிர்வதை ஆட்சேபிக்க மாட்டார் என்றும் கருதுகிறேன். இப்போது சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் கட்டுரைகள் எழுதிவருகிறார்கள். பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி இவர்களுக்கும் மூத்தப் பத்திரிகையாளரின் அனுபவ அறிவுறுத்தல்கள் உதவக்கூடும்.
--------------------

கட்டுரைகள் எழுதுவது எப்படி?
by மாலன்

1. கட்டுரையின் மையம் -focus- என்பதை எழுதத் துவங்கும் முன்னரே தீர்மானித்துக் கொள்ளுங்கள். உங்களிடம் கட்டுரை எழுதும் பணி ஒப்படைக்கப்படும் போது அதைக் குறித்துக் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.

உதாரணமாக இந்தித் திணிப்புப் பற்றிய கட்டுரையை பல்வேறு விதங்களில் எழுதலாம். இந்திப் போராட்டங்களின் வரலாற்றைப் பற்றி எழுதுவது ஒரு வகை. நாம் current affairs பத்திரிகை. அதில் வரலாற்றுக்கு முக்கியத்துவம் இல்லை. வரலாற்றுக் கட்டுரைகளாக வருமிடங்களைத் தவிர மற்ற இடங்களில் வரலாற்றை மையமாகக் கொண்டு எழுதுவதைத் தவிர்க்க வேண்டும்.

செய்தித் தாளிலிருந்து தலைவர்கள் அறிக்கைகளைத் தொகுத்து எழுதுவது ஒரு வகை. ஆனால் அது அரைத்த மாவு.

இந்தத் திணிப்பின் காரணங்கள் என்ன, விளைவுகள் என்ன என்பதை மையப்படுத்தி எழுதுவதே சுவையும் பயனும் தரும். அப்படி எழுத விளைவுகள் என்ன என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும். சிந்தனையும் உழைப்பும் இல்லாமல் சிறந்தவை உருவாவதில்லை

2. மையத்தைத் தீர்மானித்த பிறகு அதற்கான தரவுகளைத் திரட்ட வேண்டும். உதாரணத்திற்கு இந்திக் கட்டுரைக்கே வருவோம். அந்த ஆணையில் இடம் பெற்றுள்ள வாசகங்கள் என்ன? அது என்று வெளியிடப்பட்டது போன்ற தகவல்களைத் திரட்ட வேண்டும்.

3. தரவுகளைத் திரட்டிய பின் அவை அனைத்தையும் மொத்தமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. கட்டுரையில் முன் வைக்கப்படும் கருத்திற்கு ஏற்ப உரிய இடத்தில் தரவுகளிலிருந்து தேவையானவற்றை மட்டும் பொருத்தமாகப் பயன்படுத்த வேண்டும்.

4. தரவுகளைத் திரட்டும் போது புதிய கோணங்களோ, புதிய செய்திகளோ கிடைக்கலாம். அப்படி ஏதும் கிடைக்குமானால் அது மையப்புள்ளியிலிருந்து மாறுபட்டதாக இருக்குமானால் அதை ஆசிரியரிடம் விவாதித்து தெளிவு பெற வேண்டும்

5. கட்டுரைகளை எழுத உட்காரும் முன் அதனுடைய வடிவம் –format- என்ன என்று தீர்மானித்துக் கொள்ள வேண்டும். உள்ளடக்கமே வடிவத்தைத் தீர்மானிக்கும் என்ற அடிப்படை விதியை நினைவில் கொள்க. பொருளாதரம், அறிவியல், அரசிடமிருந்து பயனர் பெறுவதற்கான விதிகள் போன்ற எளிதில் விளங்கிக் கொள்ள இயலாத, செய்திகளை கேள்வி பதில் வடிவில் எழுதலாம். உலர்ந்த விஷயங்களை வாசிக்க சுவாரஸ்யமாக கதை வடிவில் எழுதலாம். நச்சென்று முகத்தில் அறைவது போன்ற விஷயங்களை கடித வடிவில் எழுதலாம். விவாதத்திற்குரிய விஷயங்களை முழுவதும் உரையாடலாக எழுதலாம். எல்லாக் கட்டுரைகளும் பள்ளிக் கூட வியாசங்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை

6. எப்படிக் கதைக்கு முதல் வரி முக்கியமோ அதைப்போல கட்டுரையின் துவக்கம் முக்கியம். முதல் வரியின் முக்கியத்துவம், அவற்றின் வகைகள் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அவற்றை மீண்டும் ஒருமுறை வாசியுங்கள். கட்டுரைகளை, சம்பவங்களில் துவக்கலாம். மேற்கோள்களில் துவக்கலாம். உதாரணங்களில் துவக்கலாம். கேள்விகளில் துவக்கலாம் (விஷயம் கேள்விப்பட்டீங்களா? என்று துவங்கும் பழைய முறைதான் தகவல் பரிமாற்றத்தில் இப்போதும் இருந்து வருகிறது என்பதைக் கவனித்திருக்கிறீர்களா?) அதிர்ச்சி தரும் ஒரு வாக்கியத்தில் துவங்கலாம். புனையப்பட்ட ஒரு கதையில் துவங்கலாம். மோனை நயம் பொலியும் ஒரு வாக்கியத்தில் துவங்கலாம். வாய்ப்புக் கிடைக்கும் போது நம் தலையங்கங்களை எடுத்துக் கொண்டு அவற்றின் ஆரம்பங்களை மட்டும் ஆராய்ந்து பாருங்கள். காலத்தின் குரல் நம் நூலகத்தில் இருக்கிறது.

7. கட்டுரைகளின் நடை ஒரு சீராக, ஒரு செய்தியிலிருந்து அடுத்தற்கு இட்டுச் செல்வதாக அமைய வேண்டும். அதற்குரிய transition உத்திகளைப் பின்பற்ற வேண்டும்.

8. பாக்ஸ் என்பது அட்டிகை ஆறாவது விரல் அல்ல. கட்டுரைக்கு அதில் உள்ள தகவல் அவசியம் இல்லை. ஆனால் அந்தக் கூடுதல் தகவல் அதற்கு அழகு அல்லது கனம் சேர்க்கும். எனவே எழுதும் போதே அதைப் பிரித்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

9. முடிவு முக்கியம்/ ஆரம்பம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவு முடிவும் முக்கியம் முடிவு என்பது அந்தக் கட்டுரையின் சாரம் முழுவதையும் தொகுப்பதாக இருக்கலாம். கட்டுரையின் மையத்தை நினைவுபடுத்திக் கேள்வி எழுப்புவதாக இருக்கலாம். ’பஞ்ச்’க்கான இடம் அது. ‘காலம்தான் பதில் சொல்ல வேண்டும், பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும், ’என்பதோடு முடித்துக் கொண்டார்’ ‘அவரிடமிருந்து விடை பெற்றோம்’ என்பது போன்ற மொக்கை முடிவுகள் வேண்டாம்

10. intro எனப்படும் அறிமுகக் குறிப்பு. கட்டுரையின் மொத்தத்தையும் ஒரு வரியில் சொல்லும் திருக்குறள். இந்தக் கட்டுரையைப் பற்றி நீங்கள் உங்கள் நண்பரிடம் உரையாடலில் சொல்வதானால் என்ன சொல்வீர்களோ அதுதான் அறிமுகக் குறிப்பு. பாண்டிச்சேரியில் ஆழ்கடல் டைவிங் சொல்லித் தராங்க நான் போயிருந்தேன் என்றோ, ஆர்ட்ஸ் காலேஜ் படிப்புக்கு இந்த முறை டிமாண்ட் அதிகமாயிருச்சாமே என்றோ, இருக்கிற வேலையெல்லாம் விட்டு எதுக்கு இப்போ இந்திப் பிரச்சினையை கிளப்பறாங்க என்றோ சொல்வீர்கள் இல்லையா அதுதான் அறிமுகக் குறிப்பு.

11. தலைப்பு மிக மிக முக்கியம். அதுதான் வாசகரைக் கட்டுரைக்குள் இழுக்கும் விஷயம். அதில் கவனத்தில் கொள்ள வேண்டியது அது நாளிதழ் தலைப்புப் போல இருக்கக் கூடாது. நாம் பத்திரிகைகள். நாளிதழ்கள் அல்ல. நம் இருவரின் நோக்கமும் சுவையும் வேறு. ஒரே மாவில் இருந்து செய்தாலும் இட்லியும் தோசையும் வேறு வேறு. கேள்விகள், கிண்டல்கள், சீண்டல்கள் ஆச்சரியங்கள் பெருமிதம்,சினம் இப்படி ஏதேனும் ஓர் உணர்வை வெளிப்படுத்த வேண்டும் (நாளிதழ் தலைப்புக்கள் வெளிப்படுத்தாது/ வெளிப்படுத்தக் கூடாது) நயமாக இருக்க வேண்டும். நாகரீகமாக இருக்க வேண்டும். கருணாநிதிக்கு சிபிஐ ஆப்பு, பழனிமாணிக்கம் பதவி டர்ர்ர்ர் என்பதெல்லாம் கூடாது.

12. கட்டுரை மட்டுமல்ல, எதை எழுதும் போதும் எழுத்தாளன் வாசகனாகிவிட வேண்டும். ஒரு வாசகனாக இதை நாம் படித்தால்…. என்ற எண்ணம் நினைவில் ஒரு ஓரத்தில் இருந்து கொண்டே இருக்க வேண்டும்

முழுமனதோடு முயற்சியுங்கள். நல்ல கட்டுரை நிச்சயம் உருவாகும்.

MCR / MCP chappals

சில மாதங்களுக்கு முன்பாக மிகக்கடுமையான முதுகுவலியில் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன். குறிப்பாக இருசக்கர வாகனம் ஓட்டும்போது நடுமுதுகில் நெருப்பை எடுத்துக் கொட்டியது மாதிரி எரியும். இரவில் வீட்டுக்குச் சென்ற பிறகும் இந்த எரிச்சல் குறையாது. தூக்கம் வராது.

தெரிந்த சில மருத்துவர்களிடம் கேட்டபோது அலுவலக இருக்கையை மாற்றிப்பார் என்றார்கள். முயற்சித்தேன். சில நாட்களுக்கு சரியான மாதிரி இருந்தது. மீண்டும் எரிச்சல் தொடங்கும்.

அப்போதுதான் MCR chappals பற்றி சில நண்பர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். மயிலாப்பூரில் National Leather Works என்கிற நூற்றாண்டு காணப்போகும் செருப்புக்கடை ஒன்று இருக்கிறது. புரட்சித்தலைவி அம்மாவுக்கே இவர்கள்தான் செருப்பு செய்துக் கொடுத்தவர்கள் (சொத்துக் குவிப்பு வழக்கில் இவர்களுடைய சாட்சியமும் உண்டு). சிவராமன் அண்ணன் அந்தக் கடைக்கு அழைத்துச் சென்று ஒரு ஜோடி செருப்பு வாங்கிக் கொடுத்தார்.

கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக அந்த செருப்பைதான் வாரத்துக்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் பயன்படுத்துகிறேன். முதுகு எரிச்சல் கொஞ்சமும் இல்லை.

ஒரிரு தலைமுறைக்கு முன்பு செருப்பு என்பது ஆடம்பரமாக இருந்திருக்கிறது. மனிதர்கள் பெரும்பாலும் செருப்பை பயன்படுத்தாமலேயே நடந்திருக்கிறார்கள். கடந்த நாற்பது ஆண்டுகளாக செருப்பு என்பது உடையை போலவே அத்தியாவசியமான அணிகலனாக ஆகிவிட்டது. செருப்பு அணிந்து நடக்கும்போது நம்முடைய இயல்பான நடை மாறுவதால், நரம்புகளில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டு இடுப்பு, முதுகுவலிகள் ஏற்பட காரணமாகின்றன. மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் தற்காலிக நிவாரணம் தருகின்றனவே தவிர, பிரச்சினையை முற்றிலுமாக தீர்ப்பதில்லை. எனவே ஆர்த்தோ மருத்துவர்களே MCR/MCP செருப்புகளை சமீபகாலமாக தங்கள் பேஷண்டுகளுக்கு பரிந்துரைத்து வருகிறார்கள்.

Multicellular rubber (MCR), Multicellular polyurethane (MCP) செருப்புகள் சிறப்பு ரப்பர் மூலப்பொருட்களால் உருவாக்கப்படுபவை. இவற்றை அணிந்து நடக்கும்போது நம்முடைய இயல்பான நடையில் எந்த மாற்றமும் இருப்பதில்லை. நரம்பியல்ரீதியான பிரச்சினையும் ஏற்படுவதில்லை. என் அம்மாகூட மூட்டுவலி பிரச்சினை கொண்டவர். அவரும் MCP செருப்புகளைதான் பயன்படுத்துகிறார்.

விலை கொஞ்சம் கூடுதல்தான். நான் பயன்படுத்தும் அடிப்படை மாடல் செருப்பே 500 ரூபாயில்தான் தொடங்குகிறது. ஏற்கனவே தயார் செய்திருக்கும் செருப்பை நேஷனல் லெதர் நிறுவனத்தார் விற்பதில்லை. நம் கால் அளவுக்கு ஏற்ப, புதுசாக தயார் செய்து கொடுக்கிறார்கள். MCR / MCP முறையில் ஷூ வேண்டுமென்றால், அதையும் செய்துக் கொடுக்கிறார்கள் (விலை ரூ.1500 வரலாம்)

தலித்துகளுக்கு திமுக என்ன செய்தது?

திமுக தலித்துகளுக்கு என்ன செய்தது என்று முன்பு பார்ப்பனர்கள் வாயால் ஏரோப்ளேன் ஓட்டிக் கொண்டிருந்தார்கள். பார்ப்பனர்கள் சொன்னால் பரமனே சொன்னமாதிரி என்று நம்பும் தலித்துகளும் இப்போது ஹெலிகாஃப்டர் ஓட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தியாவிலேயே திமுக அரசு அளவுக்கு தலித்துகளுக்கு நலத்திட்டங்களை சிந்தித்து செயல்படுத்தியவர்கள் வேறெங்கும் இல்லை.

சில உதாரணங்கள் :

- நாட்டிலேயே ஆதிதிராவிடருக்கு என்று தனியாக நலத்துறை அமைத்து அதற்கு பிரத்யேகமாக அமைச்சரை நியமித்தது திமுகவே.

- கலப்பு மணத்தை சட்டரீதியாக அங்கீகரித்ததோடு மட்டுமின்றி, கலப்புமணம் செய்துக் கொள்வோர்களுக்கு பரிசுகள், தொழிற்கடன் போன்றவற்றை வழங்கும் திட்டங்களை தொடங்கியதே திமுக அரசுதான்.

- ஆதிதிராவிடருக்கு என்று தனியே வீட்டு வசதிக்கழகம் உருவாக்கியது திமுக ஆட்சி. இந்த திட்டத்தால் கவரப்பட்ட மத்திய அரசு, அதை நாடெங்கும் விரிவுப்படுத்தி ‘இந்திரா வீட்டுவசதித் திட்டம்’ என்று கொண்டுச் சென்றது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்காலங்களில் மட்டுமே ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட கான்க்ரீட் இல்லங்கள் இந்த திட்டத்தின் மூலம் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 16% ஆக இருந்த இடஒதுக்கீடை 18% ஆக உயர்த்தியது திமுக அரசே. 1989ல் ஆட்சிக்கு வந்தவுடன் பொதுப்பிரிவில் இருந்து 1%ஐ எடுத்து பழங்குடியினருக்கு தனிஒதுக்கீடு கொடுத்து, ஆதிதிராவிடருக்கே ஒட்டுமொத்த 18% இடஒதுக்கீடும் கிடைக்க வழிசெய்தது. பிற்பாடு அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு செய்ததும் திமுக அரசே.

- மதம் மாறிய ஆதிதிராவிட கிறிஸ்தவர்களின் முதல் தலைமுறைக்கு மட்டும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இடஒதுக்கீடு என்றிருந்த நிலைமையை மாற்றி, எல்லா தலைமுறையினருக்கும் இடஒதுக்கீடு என்கிற ஆணையை பிறப்பித்தது திமுக அரசாங்கம்.

- அரசுப் பதவிகளில் ஆதிதிராவிடர்/பழங்குடியினருக்கான பதவிகள் நிரப்பப்படாத நிலை இருந்தால், அந்த காலியிடங்களையே இடஒதுக்கீட்டில் இருந்து எடுத்துவிடும் நிலை இருந்தது. ஓர் அரசாணையின் மூலம் அந்த போக்கினை மாற்றி ஏராளமான SC/ST இளைஞர்கள் அரசுப்பணிகளில் சேர காரணமாக இருந்தது திமுக அரசே.

- திமுகவின் கனவுத்திட்டமான பெரியார் நினைவு சமத்துவபுரங்களில் ஆதிதிராவிடர்களுக்கு 40% வீடுகள் இடஒதுக்கீடு செய்யப்பட்டன.

- 96ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றவுடன் சுமார் 3 லட்சம் ஆதிதிராவிடர்களுக்கு வீட்டுமனை வழங்கப்பட்டது.

- ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் தனிப்பள்ளிகள், கணினிக் கல்வி கற்க ஆய்வகங்கள், மாணவ/மாணவியர் விடுதிகள், உணவுச்சலுகை என்று கல்விரீதியாக தலித் மக்களை முன்னேறச் செய்த திட்டங்கள் அனைத்தும் திமுக ஆட்சியின் சிந்தனைகளே.

- சென்னை வியாசர்பாடியில் அண்ணல் அம்பேத்கர் பெயரில் கலைக்கல்லூரி, அம்பேத்கரின் நூற்றாண்டையொட்டி சென்னை சட்டக்கல்லூரிக்கு அம்பேத்கர் பெயர், அம்பேத்கரின் பெயரில் இந்தியாவின் முதல் சட்டப்பல்கலைக்கழகம், கக்கனுக்கு மதுரையில் சிலை நினைவு மண்டபம், வீரன் சுந்தரலிங்கம் பெயரில் பாஞ்சாலங்குறிச்சி அருகே நகரம் என்று தலித் தலைவர்களின் நினைவைப் போற்றும் ஏராளமான செயல்பாடுகளை திமுக ஆட்சி அமைத்தபோதெல்லாம் நிகழ்த்திக் காட்டியிருக்கிறது.

திமுகவின் சாதனைத் துளிகளில் இவை குறைவே. கடலளவு திட்டங்களும், செயல்பாடுகளும் இன்னும் உண்டு. அவற்றையெல்லாம் எடுத்துச் சொல்ல தனிநூல் தான் எழுத வேண்டும்.

தலித்துகளின் காவலன் திமுகவே. அந்த சமுதாயத்தை சேர்ந்த மக்கள் கல்வி கற்க வேண்டும், நல்ல பணிகளில் சேரவேண்டும் என்கிற அக்கறை கொண்ட ஒரே இயக்கம் தமிழகத்தில் திமுக மட்டும்தான். மற்ற கட்சிகளை போல அவர்களை வெறும் ஓட்டு வங்கியாகவும், கூட்டம் சேர்க்கவும் பயன்படுத்தும் இயக்கம் திமுகவல்ல.

திமுகவை தலித் விரோதி என்று நிறுவ முற்படுபவர்கள், இவ்வளவு திட்டங்களை தலித்துகளுக்காக முன்னெடுத்த அரசு ஏதேனும் இந்தியாவில் உண்டா என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கவும்.

பொய், புளுகு, பித்தலாட்டங்கள் மலிந்திருக்கும் சூழலில் நிஜமான அக்கறையின் பேரில் திமுக செய்த இதையெல்லாம் சொல்லிக் காட்டி புரியவைக்க வேண்டியிருக்கிறதே என்பதை நினைத்தாலே வேதனையாக இருக்கிறது  

குழப்பத்துக்கு பிறந்தவனுங்க!

நான் சைக்கிள் கத்துக்க ஆரம்பிச்சப்போ கடையிலே பத்தாம் நம்பர் சைக்கிள் இல்லைன்னா, ஆணியே புடுங்க வேணாம்னு போயிடுவேன். கடைக்காரர், ‘டேய், ஏழாம் நம்பர் எடுத்துட்டு போடா’ன்னு சொல்லுவாரு. பசங்க யாருமே ஏழாம் நம்பரை தொடமாட்டோம். பார் இல்லாத சைக்கிளை ஓட்டிக்கிட்டு போனா, ஆண்மைக்கு இழுக்குன்னு அப்படியொரு மூடநம்பிக்கை அப்போ.

இப்போ ஒரு இருபத்தஞ்சி வருஷம் கழிச்சிப் பார்த்தா எந்த சைக்கிளிலும் பாரே இல்லை. கேட்டா unisex சைக்கிள்னு சொல்றானுங்க. சைக்கிள் ரேட்டும் பன்னெண்டாயிரம், பதினஞ்சாயிரமாம். வாடகை சைக்கிள் கடையே எங்கேயும் இருக்குறதா தெரியலை. சைக்கிள் ஓட்ட கத்துக்கணும்னா சொந்தமாதான் சைக்கிள் வாங்கணும். அதுவுமில்லாமே இப்போ யாரு சைக்கிள் கத்துக்கறாங்க, டைரக்டா பைக்குதான். முன்னாடி டைப்ரைட்டிங் இன்ஸ்ட்யூட்டுக்கு போய் ஜூனியர், சீனியர், ஹைஸ்பீடுன்னு எக்ஸாமெல்லாம் எழுதி கவர்மெண்ட் சர்ட்டிஃபிகேட் வாங்குவோம். இப்போ டைரக்டா எல்லாரும் கம்ப்யூட்டரில் டைப் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.

93-94 வாக்கில் காட் ஒப்பந்த எழவுலே கையெழுத்து போட்டாலும் போட்டானுங்க. நாட்டுலே என்ன எழவு நடக்குதுன்னே தெரியலை. unisexஆதான் எல்லா பிராக்டக்ட்டை கன்ஸ்யூமரிசேஸன் செய்ய வேண்டியிருக்குன்னு சொல்லுறாங்க. “மேல்நாட்டுலே இன்னும் barbie பொம்மை சேல்ஸ் அப்படியேதானேடா இருக்கு? இங்கே மட்டும் ஏன் மரப்பாச்சி பொம்மையை காணோம்?”னு கேட்டா எம்.பி.ஏ. படிச்சவனுங்களுக்கே ஆன்ஸர் தெரியலை.

திடீர்னு பார்த்தா லேடீஸெல்லாம் ஜெண்ட்ஸ் மாதிரி கிராப் வெட்டிக்கிறதை இங்கே சமூகக் கடமையாக பெண்ணியப் போராட்ட வடிவத்துலே நடத்துறாங்க. இன்னும் ஹாலிவுட் ஹீரோயின்களே கூட நீளமா லூஸ் ஹேர் விட்டுக்கிறதை அப்பப்போ சினிமாவிலே எல்லாம் பார்க்குறோம். நம்மூருலே என்னதான் நடக்குதுன்னு புரியலை. தமிழனின் பாரம்பரியத்தை காப்பாத்தணும்னு ஜல்லிக்கட்டுலே கோஷம் போட்டுக்கிட்டிருந்த பொண்ணு, இப்போ பிக்பாஸ் புரோகிராம்லே இளம் நடிகன் ஒருத்தனுக்கு ரூட்டு விட்டிக்கிட்டிருக்கு.

நம்மாலே முழுமையா மேற்கத்திய நாகரிகத்துக்கும் adopt ஆகமுடியலை. இங்கே establish ஆன பண்பாட்டையும் கத்தரிச்சிக்கிட்டு போக முடியலை. பீட்ஸா வடிவத்துலே களி கிண்டிக்கிட்டிருக்கோம்.

முன்னெப்போதையும்விட கடுமையான குழப்பத்தில் வாழ்ந்துக்கிட்டிருக்கிறது நம்ம தலைமுறைதான்னு நெனைக்கிறேன். அரசாங்கம் நிறைய மனநோய் விடுதிகளை திறக்கணும். அதுக்கான தேவை அதிகரிச்சிக்கிட்டே போகுது :(