“அந்த நாள் அப்படியே நினைவிருக்கிறது. 1985, ஜூன் 24. அன்று என் தந்தையார் மறைந்த நாள். அலுவலகத் தோழர்களோடு அமர்ந்து திவச உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.
வாசலில் நிழலாடியது. கையில் ப்ரீப்கேஸ். கண்களில் கூலிங் கிளாஸ். சஃபாரி அணிந்த அவர், ‘ஐ ஆம் ராஜேஷ்குமார் ஃப்ரம் கோயமுத்தூர்’ என்று அறிமுகம் கொடுத்துக்கொண்டே உள்ளே நுழைந்தார்.
அப்பாவே நேரில் வந்து ஆசிர்வதிப்பதாக நினைத்து சிலிர்த்தேன்!”
நெகிழ்ச்சியாக தன்னுடைய ஆரம்பகால நினைவுகளோடு பேச ஆரம்பிக்கிறார் ‘பாக்கெட் நாவல்’ ஜி.அசோகன். தமிழ் மாத நாவல் உலகின் முடிசூடா மன்னனாகிய இவர், கடந்த முப்பத்தி இரண்டு வருடங்களாக இத்துறையில் இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருக்கிறார். ‘பாக்கெட் நாவல்’ பத்திரிகையின் 350வது இதழ் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டே நம்மிடம் பேசினார்.
“அப்பா, பத்திரிகையுலகில் மிகவும் பிரபலம். ‘வாலிபம்’ எல்.ஜி.ராஜ் என்றால் எல்லாருக்குமே தெரியும். ஃப்ரீலான்ஸ் ஓவியர். ‘ராணி’ பத்திரிகையின் முதல் அட்டைப்படத்தை வரைந்தவர் அவர்தான். நிறைய பத்திரிகைகள் நடத்தினார். அப்போதெல்லாம் பத்திரிகையாளன் வீட்டு அடுப்பில் பூனைகள் உறங்குவது வழக்கம்தான்.
நாங்கள் நான்கு சகோதரர்கள். மூன்று சகோதரிகள். அடிப்படைக் கல்வித் தகுதியான எஸ்.எஸ்.எல்.சி. படித்தால் போதும். மீதி விஷயங்களை வாழ்க்கை அனுபவத்தில்தான் கற்கவேண்டும் என்பது அப்பாவின் முடிவு.
அப்படிதான் நானும் அந்தகால எஸ்.எஸ்.எல்.சி. முடித்துவிட்டு அப்பாவின் சீடனாக அவரது பத்திரிகை வேலைகளுக்கு துணையாக வந்துவிட்டேன். அவரது ஓவியங்களை எடுத்துக் கொண்டு பத்திரிகை அலுவலகங்களுக்கு போவதும், சன்மானம் வாங்கி வருவதுமாக இருந்ததால் இயல்பாகவே எனக்குள் பத்திரிகைகள் மீது ஈடுபாடு வந்துவிட்டது...” கண்சிமிட்டுகிறார் ஜி.அசோகன்.
“எப்போது ‘பாக்கெட் நாவல்’ ஆரம்பித்தீர்கள்?”
“1981ல் அப்பா காலமாகி விட்டார். அவர் நடத்திக் கொண்டிருந்த பத்திரிகையை நான் ஆசிரியராகி தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தேன். பத்திரிகை ஆசிரியராகும்போது என் வயது இருபதுதான். சில வருடங்களிலேயே மாத நாவல் நடத்த வேண்டும் என்று எனக்கு தோன்றியது. அப்பா, அப்போது நிறைய டைட்டில்ஸை ரெஜிஸ்டர் செய்து வைத்திருந்தார். அதில் ஒன்றுதான் ‘பாக்கெட் நாவல்’. 1971 வாக்கில் இந்த டைட்டிலில் சில மாத நாவல்களையும் கொண்டு வந்திருக்கிறார்.
அதையே மீண்டும் தூசு தட்ட முடிவெடுத்தேன். வெகுஜன இதழ்களில் எழுதிக் கொண்டிருந்த அத்தனை எழுத்தாளர்களுக்கும் கடிதம் எழுதி கதை கேட்டேன். மகரிஷி, வாஸந்தி, ராஜேந்திரகுமார், ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் உடனடியாக சம்மதம் தெரிவித்தனர். ராஜேஷ்குமார் நேராகவே சென்னைக்கு வந்துவிட்டார். சில எழுத்தாளர்களை அவரவர் வசிக்கும் ஊருக்கே போய் சந்தித்து கதை கேட்டேன். அதுவும் பட்டுக்கோட்டை பிரபாகரிடம் கதை வாங்க பட்டுக்கோட்டைக்கே போயிருந்தேன். பல எழுத்தாளர்கள் என்னை ஊக்குவித்தாலும், சிலரிடம் கசப்பான அனுபவங்களும் கிடைத்தன.
1985, நவம்பர் மாதம் ‘பாக்கெட் நாவல்’ முதல் இதழைக் கொண்டு வந்தேன். அப்போதிலிருந்து இன்றுவரை என்னை ஆதரிக்கும் ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், இரட்டை எழுத்தாளர்களான சுபா (சுரேஷ், பாலகிருஷ்ணன்) ஆகியோரின் படத்தைதான் இந்த 350வது இதழின் அட்டைப்படமாக கொண்டு வந்திருக்கிறேன். இதைவிட வேறெப்படி என்னால் நன்றியை தெரிவிக்க முடியும்?”
“இத்தனை ஆண்டுகளாக ஒரே வேலையை திரும்பத் திரும்ப செய்வது போல சலிக்கவில்லையா?”
“எப்படி சலிக்கும்? விரும்பிதானே இந்த வேலையை செய்கிறேன். ‘பாக்கெட் நாவல்’ கொண்டு வந்த காலத்தில் சந்தையில் சுமார் ஐம்பத்தோரு மாத நாவல்கள் எனக்கு போட்டியாக இருந்தன. அவர்களோடு போட்டியிட்டு முன்னணிக்கு வந்ததே சுவாரஸ்யமான பயணம். சொன்னால் நம்ப மாட்டீர்கள். பிரபலமான எழுத்தாளர்களான பாலகுமாரன், சிவசங்கரி உள்ளிட்டோர் எனக்குதான் முதன்முதலாக மாத நாவல் எழுதினார்கள். அதற்கு முன்பாக அவர்கள் இதழ்களில் எழுதும் தொடர்கள்தான் புத்தகமாகும்.
‘பாக்கெட் நாவ’லைத் தொடர்ந்து ராஜேஷ்குமாருக்கு என்றே ‘கிரைம் நாவல்’, பட்டுக்கோட்டை பிரபாகருக்கு என்றே ‘எ நாவல் டைம்’ (பின்னர் பாலகுமாரன் இதில் எழுதினார்), ‘குடும்பநாவல்’ என்று வரிசையாக மாதநாவல்களை தொடங்கினேன்.
மாதநாவல்கள் மட்டுமின்றி வேலைவாய்ப்புச் செய்திகளை வழங்கும் ‘ஜாப் கைடுலைன்ஸ்’ மாத இதழ், பங்குமார்க்கெட் தகவல்களை தரும் ‘பங்கு மார்க்கெட்’ வார இதழ், ‘சினிமாலயா’ என்கிற சினிமா மாதப் பத்திரிகை, ‘சக்தி காமிக்ஸ்’ என்கிற காமிக்ஸ் பத்திரிகை, ‘சுபயோகம்’ என்கிற ஜோதிடப் பத்திரிகை என்று ஏகத்துக்கும் பத்திரிகைகள் நடத்தியிருக்கிறேன். என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும், சுவாரஸ்யமாகவும் ஆக்கியவை நான் நடத்திய, நடத்தும் பத்திரிகைகள்தான்”
“மாத நாவல்களில் பெரிய வெற்றியை நீங்கள் எட்டியதற்கு என்ன காரணம்?”
“யார் நாவலை அனுப்பினாலும் வாசித்துவிட்டுதான் போடுவேன். பிரபலமான எழுத்தாளர் கொடுத்த கதையாக இருந்தாலும், வாசகர்களுக்கு தேவையான சுவாரஸ்யம் அதில் இல்லையென்றால், ‘வேறு கதை கொடுங்க’ என்று தைரியமாக கேட்பேன்.
எங்கள் பத்திரிகைகளை பெரிய பதவிகளில் இருப்பவர்கள் நிறைய பேர் வாசிக்கிறார்கள். குறிப்பாக காவல்துறையினர், நீதிபதிகள் மற்றும் வக்கீல்கள். கிரைம், அவங்க சப்ஜெக்ட் ஆச்சே? அதனால்தான் கதைத் தேர்வில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. அதுவே என்னுடைய வெற்றிக்கு காரணம்.
ஒன்று தெரியுமா? ‘வேறு நாவல் கொடுங்க’ என்று நான் சொன்னபோதும் கோபப்படாமல் வேறு கதையை பிரபலமான எழுத்தாளர்கள் கூட கொடுத்திருக்கிறார்கள். வாசகர் பார்வையிலேயே இப்படி நான் கேட்கிறேன் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்த பரஸ்பர புரிதலும் நம்பிக்கையும்தான் 350 இதழ்களை நான் கொண்டு வரக் காரணம்”
“அடிக்கடி இலக்கிய நாவல்களையும் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்துகிறீர்களே..?”
“எங்களுடைய ‘குடும்ப நாவல்’ வாசகர்களுக்கு இலக்கியமும் தேவைப்படுகிறது. சுந்தரராமசாமியின் ‘புளியமரத்தின் கதை’, க.நா.சு.வின் ‘பொய்த்தேவு’, ஹெப்சிபா ஜேசுதாஸனின் ‘புத்தம் வீடு’, அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள்’ உள்ளிட்ட இலக்கிய நாவல்களை நாங்கள் வெளியிட்டதற்கு நல்ல வரவேற்பு. மூத்த படைப்பாளிகளுக்கு மரியாதை கொடுத்து சம்பந்தப்பட்ட படைப்புகளுக்கு அனுமதி வாங்கி, உரிய சன்மானம் கொடுத்துதான் வெளியிடுகிறோம்.
இதுதவிர கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’, ‘சிவகாமியின் சபதம்’, ‘பார்த்திபன் கனவு’, நா.பார்த்தசாரதியின் ‘மணிபல்லவம்’ மாதிரியான க்ளாசிக்குகளையும் பாகம் பாகமாக மாதந்தோறும் வெளியிட்டிருக்கிறோம்.
வெகுஜன வாசகர்களுக்கு இலக்கியத்தின் மீதும் ஈடுபாடு உண்டு. இந்த உண்மையை இலக்கியத்தில் இருப்பவர்களாக சொல்லிக் கொள்பவர்கள்தான் உணராமல் இருக்கிறார்கள். வெகுஜன வாசகர்கள் மீது தீண்டாமை அனுசரிக்கிறார்கள்.
அதிலும் ஜனரஞ்சக எழுத்தாளர்களை இலக்கியவாதிகள், தேசத் துரோகிகளாகவே பார்க்கிறார்கள். இம்மாதிரி இடைவெளி தீவிர இலக்கியத்துக்கும், வெகுஜன இலக்கியத்துக்கும் ஏற்பட்டு விட்டதால்தான் புதியதாக வெகுஜன எழுத்தாளர்கள் உருவாவது குறைந்திருக்கிறது.
தீவிர இலக்கியம் என்னும் சீரிய இடத்துக்கு வாசகர்களை ஏற்றிவிடும் ஏணியே வெகுஜன இலக்கியம்தான். அது உதாசீனப்படுத்தப் பட்டால் எதிர்காலத்தில் இலக்கிய எழுத்தாளர்கள் மட்டுமே இருப்பார்கள். வாசகர்கள் என்று யாரும் இருக்கமாட்டார்கள். அவரவர் எழுதியதை அவரவரே வாசித்துக் கொள்ள வேண்டியதுதான்”
“புதியதாக எழுத வருபவர்களில் நம்பிக்கை தரும் எழுத்தாளர்கள்..?”
“பெண் எழுத்தாளர்கள் அனைவரையுமே குறிப்பிடலாம். கீதாராணி, ஆர்.சுமதி, பரிமளா ராஜேந்திரன், ஜி.ஏ.பிரபா உள்ளிட்டோரை இதற்கு உதாரணமாக சொல்லலாம். ஆண் எழுத்தாளர்களில் ஜி.ஆர்.சுரேந்திரநாத், சுப.தனபால் ஆகியோர் நம்பிக்கை அளிக்கிறார்கள். தொடர்ச்சியாக எழுதியும் வருகிறார்கள்.
இன்னும் நிறைய புதிய எழுத்தாளர்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன். நிறைய கதைகள் பரிசீலனையில் இருக்கின்றன”
“இத்தனை ஆண்டுகளில் மறக்கமுடியாத அனுபவம் ஏதாவது..?”
“ஒருமுறை பட்டுக்கோட்டை பிரபாகரோடு சின்ன கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிரபாகரின் அப்பா எங்கள் இருவரையும் அழைத்து, ‘தொழில் ரீதியாக உங்களுக்குள் பிரச்னை ஏற்பட்டால் இருந்துவிட்டு போகட்டும். ஆனால், நீங்கள் இருவருமே எனக்கு மகன்கள்தான். தனிப்பட்ட முறையில் உங்கள் நட்பு சிதையக் கூடாது’ என்று கூறி எங்களிடம் வாக்கு கேட்டார். அதிலிருந்து பிரபாகரிடம் மட்டுமல்ல. அத்தனை எழுத்தாளர்களிடமும் எதிர்ப்பார்ப்பில்லாத நட்பினை தொடர்கிறேன்”
“அடுத்து?”
“எங்கள் நாவல்களை இப்போது ‘நாவல் ஜங்ஷன்’ என்கிற இணையத்தளத்தில் பதிவேற்றுகிறோம். அயல்நாடுகளில் இருந்தெல்லாம் லட்சக்கணக்கானோர் வாசிக்கிறார்கள். குறிப்பாக பழைய கிளாசிக் நாவல்கள் இந்தத் தளத்தில் சக்கைப்போடு போடுகிறது.
நீண்டகாலமாகவே அரசியல் விமர்சன பத்திரிகை ஒன்று கொண்டுவரும் எண்ணம் இருக்கிறது. ‘கும்கி’ என்கிற மாத இதழின் மூலம் அந்த எண்ணம் விரைவில் நிறைவேறப் போகிறது.
பழம்பெரும் எழுத்தாளரும், காமிக்ஸ் உலகின் ஜாம்பவானுமாகிய முல்லை தங்கராசன் அவர்களின் அத்தனை படைப்புகளுக்கும் உரிமை வாங்கி வைத்திருக்கிறேன். வரிசையாக அவற்றை வெளியிடப் போகிறேன்”
(நன்றி : குங்குமம்)