16 ஜனவரி, 2018

பத்து வயசானா பங்காளி

பாவலரை பிரிந்துவிட்டு எழுபதுகளின் தொடக்கத்தில் சென்னைக்கு பிழைப்பு தேடிவந்த பாஸ்கர், இளையராஜா, கங்கை அமரன் மூவரும் ‘பாவலர் பிரதர்ஸ்’ என்கிற பெயரில்தான் இயங்கிக் கொண்டிருந்தார்கள் (இவர்களை பிரிந்த பாவலர் அதன் பிறகு மிகக்குறுகிய காலமே உயிரோடு இருந்தார்).

‘அன்னக்கிளி’யில் இருந்துதான் இளையராஜா என்கிற பெயரில் செயல்படத் தொடங்கினார்கள். லண்டன் டிரினிட்டி பள்ளியில் முறையாக இசை தேர்ந்தவர் என்பதால் ராஜாவின் பெயரில் செயல்படுவதில் பாஸ்கருக்கும், கங்கை அமரனுக்கும் ஆட்சேபணை எதுவுமில்லை.

ஒவ்வொருவரும் திருமணம் செய்துக் கொள்கிறார்கள். அதன் பிறகு அவரவர் பிழைப்பை தனித்தனியாக பார்த்தாலும் மதிய உணவு மட்டும் ஒன்றாகதான் உண்பார்கள். தொண்ணூறுகளின் தொடக்கம் வரை, ராஜாவின் பிரசாத் தியேட்டர் ரெக்கார்டிங் ஸ்டுடியோவில்தான் சகோதரர் மூவரும் மதியம் சந்திப்பார்கள். அவரவருக்கு அவரவர் வீட்டில் இருந்து சாப்பாடு வந்துவிடும்.

தனியாக இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என்று கங்கை அமரன் திரையுலகில் கோலோச்சிக் கொண்டிருந்தாலும் அண்ணன் ராஜாவுக்கு மேனேஜராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

பாஸ்கரும், அமரனும் சுத்த அசைவம். ராஜா சைவம். எனவே கொஞ்சம் இடைவெளி விட்டு ராஜா அமைதியாக சாப்பிடுவார். அமரன், லொடலொடவென்று பேசிக்கொண்டே இருப்பார். மற்ற இருவரும் இவர் பேச்சை கவனித்துக் கொண்டே இருப்பார்கள்.

‘தர்மதுரை’ படத்துக்கு ராஜா இசையமைத்துக் கொண்டிருந்தார். வேறொரு வேலையில் இருந்த அமரனுக்கு போன். “டேய், ரஜினி படத்துக்கு பாட்டெழுதணும். மதியம் வர்றப்போ எழுதிக் கொடுத்துடு”

மதியம் பிரசாத்துக்கு அமரன் வந்து சேர்ந்தபோது ரெக்கார்டிங் தியேட்டர் வாசலில் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு பாஸ்கர் உட்கார்ந்திருந்தார். அவருடைய மற்றும் அமரனுடைய சாப்பாட்டு பைகள் வெளியே வைக்கப்பட்டிருந்தன.

கோபத்துடன் உள்ளே நுழைந்தார் அமரன். “டேய், ட்யூன் தெரியுமில்லே. சாப்பிட்டுட்டு உடனே பாட்டை எழுதிக் கொடுத்திடு” என்றார் ராஜா.

“அதிருக்கட்டும். எங்க சாப்பாட்டுப் பையை யாரு வெளியே வெச்சது?”

“நான்தான் வைக்க சொன்னேன். நான் சைவம். நீங்க அசைவம். செட் ஆகாது. தனியா சாப்பிடுங்கன்னு உங்க அண்ணிதான் சொல்லிச்சி”

கொதித்துப் போன அமரன் விருட்டென்று வெளியே வந்தார். மனம் நொந்துப் போயிருந்த பாஸ்கர், சாப்பிடாமலேயே கிளம்பிவிட்டார். அமரனும் பசியோடு விறுவிறுவென்று பாட்டு எழுதத் தொடங்கினார்.

பொதுவாக இளையராஜா பாடல்களுக்கு அவரே பல்லவியை எழுதி வைத்திருப்பார்.

அமரன் எழுதவேண்டிய பாடலுக்கு பல்லவி.

“ஆணென்ன பெண்ணென்ன
நீயென்ன நானென்ன
எல்லாம் ஓரினம் தான்
அட நாடென்ன வீடென்ன
காடென்ன மேடென்ன
எல்லாம் ஓர் நிலம் தான்”

விடுவிடுவென அமரன் பாட்டை தொடர ஆரம்பித்தார்.

“நீயும் பத்து மாசம்
நானும் பத்து மாசம்
மாறும் இந்த வேஷம்”

சரணத்தில் அண்ணனை விளாச ஆரம்பித்தார்.

“ஒண்ணுக்கொண்ணு ஆதரவு
உள்ளத்திலே ஏன் பிரிவு
கண்ணுக்குள்ள பேதம் இல்ல
பார்ப்பதிலே ஏன் பிரிவு
பொன்னு பொருள் போகும் வரும்
அன்பு மட்டும் போவதில்லை
தேடும் பணம் ஓடிவிடும்
தெய்வம் விட்டுப் போவதில்லை
மேடைக்கும் மாலைக்கும் கோடிக்கும் ஆசைப்பட்டு
வெட்டுக்கள் குத்துக்கள் ரத்தங்கள் போவதென்ன
மேடைக்கும் மாலைக்கும் கோடிக்கும் ஆசைப்பட்டு
வெட்டுக்கள் குத்துக்கள் ரத்தங்கள் போவதென்ன
இதை புரிஞ்சும் உண்மை தெரிஞ்சும்
இன்னும் மயக்கமா?”

பாட்டு எழுதிய பேப்பரை தூக்கி இளையராஜாவின் மேஜை மீது போட்டார்.

“இதான் பாட்டு. புடிச்சிருந்தா வெச்சிக்கோ. இல்லைன்னா தூக்கிப்போடு” என்று சொல்லிவிட்டு முகத்தைகூட ஏறெடுத்துப் பார்க்காமல் போய்க்கொண்டே இருந்தார். எப்படியும் அந்தப் பாடலை ராஜா, ரெக்கார்டு செய்யமாட்டார் என்பது அமரனின் நம்பிக்கை.

ஆனால்-

அந்த பாட்டு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குரலில் பதிவு செய்யப்பட்டது. படத்தின் சிச்சுவேஷனுக்கு பொருத்தமான பாட்டு என்பதால், தன்னை குறிவைத்து எழுதப்பட்ட பஞ்ச்லைன்களை அனுமதித்தார் இளையராஜா.

ராஜா மட்டும் சளைத்தவரா?

பஞ்சு அருணாச்சலம் எழுதவேண்டிய அடுத்த பாட்டுக்கு பல்லவி எழுதுகிறார்.

“அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தமென்ன பந்தமென்ன
சொல்லடி எனக்கு பதிலை
நன்றி கொன்ற உள்ளங்களை
கண்டு கண்டு வெந்தபின்பு
என்னடி எனக்கு வேலை
நம்பி நம்பி வெம்பி வெம்பி
ஒன்றுமில்லை என்ற பின்பு
உறவு கிடக்கு போடி
இந்த உண்மையைக் கண்டவன் ஞானி”

இந்த கதையெல்லாம் ரஜினிக்கு தெரியாது. ‘தர்மதுரை’ படத்தில் பாடல்கள் மிகவும் பவர்ஃபுல்லாக அமைந்ததில் அவருக்கு சந்தோஷம். ஒருமுறை கங்கை அமரனை சந்தித்தபோது, “நம்ம படத்துலே பாட்டெல்லாம் ரொம்ப பிரமாதமா அமைஞ்சுடுச்சி” என்று சொல்லியிருக்கிறார். பதிலுக்கு அமரன், இந்த வரலாற்றை எடுத்துரைக்க, தன்னுடைய படத்தில் பணியாற்றும்போது சகோதரர்களுக்குள் இப்படியொரு பிளவு ஏற்பட்டு விட்டதே என்று பெரிதும் மனம் வருந்தினாராம்.

கலைஞர்களின் கோபதாபங்கள்கூட கலையாகதான் வெளிப்படும்.

3 ஜனவரி, 2018

ரஜினி – காலாவதியான கவர்ச்சி!

“முதல் படத்துலேயே சிகரெட்டு புடிச்சிக்கிட்டு பொறுக்கி மாதிரி வந்தான். அப்போ இவனெல்லாம் இவ்ளோ பெரிய ஆளா வருவான்னு நெனைக்கவே இல்லை” - ‘ராஜாதி ராஜா’ வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தபோது, ‘அபூர்வ ராகங்கள்’ பற்றி என்னுடைய பெரியம்மா சொன்னது இது.

“அப்புறம் எப்படி பெரிம்மா, இவ்ளோ பெரிய ஸ்டார் ஆனாரு?”

“அப்போவெல்லாம் சிவப்பா இருந்தாதான் ஹீரோ. குப்பை பொறுக்குற கேரக்டருலே நடிச்சாகூட நல்லா மேக்கப் போட்டுக்கிட்டு ஹீரோ சிவப்பாதான் இருக்கணும். முதல் தடவையா ரஜினிதான் கேரக்டருக்கு ஏத்த தோற்றத்துலே கருப்பா, களையா இருந்தான். ‘மூன்று முடிச்சு’, ‘பதினாறு வயதினிலே’, ‘புவனா ஒரு கேள்விக்குறி’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’, ‘முள்ளும் மலரும்’ படத்துலே எல்லாம் அந்தந்த கேரக்டருக்கு ஏத்தமாதிரி ரஜினி இருப்பான். கிராமத்துப் படத்துலே நடிச்சாகூட கமல், அய்யிரு பையன்தான். ஆனா, ரஜினி அப்படியே நம்மளை மாதிரியே இருந்ததாலே ஜனங்களுக்கு பிடிச்சிப் போச்சு. அதேமாதிரிதான் விஜயகாந்தும்”

ரஜினி, திரையுலகுக்கு அறிமுகமான சூழல் இங்கே குறிப்பிடத்தக்கது. அறுபது வயதை கடந்துவிட்ட எம்.ஜி.ஆர், கட்சி ஆரம்பித்து அரசியலில் மும்முரமாகி விட்டார். அவரைவிட இரண்டு, மூன்று வயது குறைவான காதல் மன்னன் ஜெமினி கணேசன், வண்ணமயமாகிவிட்ட தமிழ் சினிமாவில் தன் முகத்தை குளோஸப்பில்கூட காட்டமுடியாத அளவுக்கு கிழடு தட்டிவிட்டார். இளமையிலேயே முதுமையாக தோற்றமளித்த சிவாஜியும் ஐம்பது வயதை கடந்து நிஜமாகவே முதுமையை எட்டிவிட்டார்.

போட்டியே இல்லாமல் சிவக்குமார்தான் கோலோச்சிக் கொண்டிருந்தார். பார்ப்பதற்கும் அழகாக இருக்கிறார், நன்கு நடனமும் ஆடத்தெரிகிறது, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் என்கிற கோதாவில் கமல்ஹாசன் வளரத் தொடங்கியிருந்தார். திரையுலகில் எப்போதுமே இருதுருவ ஆதிக்கம் நிலவ வேண்டும் என்கிற மனோபாவம் ரசிகர்களுக்கு மட்டுமின்றி, இண்டஸ்ட்ரியில் இருப்பவர்களுக்கும் உண்டு. சமூகரீதியாக பார்க்கப் போனாலும் திராவிட ஆட்சி தொடரும் தமிழகத்தில், ஒரு பார்ப்பனரை தலைமீது தூக்கி வைத்து கொண்டாட சமூகம் தயாரில்லை. அதனடிப்படையில் போட்டியே இல்லாமல் கமலுக்கு எதிராக நிலைநிறுத்தப்படுகிறார் ரஜினி.

1975ல் திரையுலகுக்கு அறிமுகமான ரஜினிகாந்த், ‘பில்லா’, ‘முரட்டுக்காளை’ என்று நட்சத்திரமாக உருவெடுக்க ஐந்தாண்டு காலம் மிகக் கடுமையாக உழைத்திருக்கிறார். சுமாரான தோற்றத்தோடு ‘அழகான’ ஹீரோக்களோடு போட்டி போட, தன்னுடைய யதார்த்த நடிப்பையே ஆயுதமாக்கி மிகவும் மெனக்கெட்டிருக்கிறார். அதிர்ஷ்டவசமாக ரஜினிக்கு அமைந்த கேரக்டர்கள், அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்துக் கொண்டே இருந்திருக்கிறது. அவர் முழுநீள ஹீரோவாக உருவெடுப்பதற்கே 25 படங்களும், மூன்று ஆண்டுகளும் முழுமையாக தேவைப்பட்டிருக்கிறது.

கைவிட்டு பைக் ஓட்டுவதும், சிகரெட்டை தூக்கிப் போட்டுப் பிடிப்பதும் பெரும் ஃபேண்டஸியாக கருதிய அந்தகால இளைஞர் கூட்டம் ரஜினியை முரட்டுத்தனமாக கொண்டாடியதில் ஆச்சரியமேதுமில்லை.

தன்னுடைய நூறாவது படம் வரைக்கும் பரிசோதனை முயற்சிகளில் தீவிரமாக இறங்காமல், வணிகரீதியாக தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்வதில் கமல்ஹாசன் மும்முரமாக இருந்தார்.

ஆனால் -

ரஜினியோ மிக துணிச்சலான கதாபாத்திரங்களை ஏற்று கலைரீதியான படைப்பாக சினிமாவை கருதக்கூடிய இயக்குநர்களிடம் பணிபுரிவதை விரும்பினார்.

1980ல் ‘முரட்டுக்காளை’யில் ரஜினிக்கு கிடைத்த மகத்தான வெற்றிதான் அவருடைய மாற்று சினிமா முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டது. வெற்றியின் ருசி கொடுத்த போதையால் அடுத்தடுத்த பிரும்மாண்ட வணிக வெற்றிகளை நோக்கி ஓடத்தொடங்கினார். இடையிடையே ‘கை கொடுக்கும் கை’, ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’ மாதிரி ஆசைக்கு ஏதோ சோதனை செய்து தோல்வியுற்றார்.

‘முரட்டுக்காளை’ மாதிரியே பிரும்மாண்டமான வெற்றியை ‘சகலகலா வல்லவன்’ படத்தில் கமல் எட்டினார்.

ஆனால் –

இந்த வெற்றியை கண்டு அவர் பயப்படத் தொடங்கினார். நாலு ஃபைட்டு, ஆறு பாட்டு என்று தன்னை தமிழ் திரையுலகம் முடக்கிவிடுமோ என்று பதறினார்.

இந்த இருவேறு வெற்றிகள்தான் அடுத்த சில பத்தாண்டுகள் தமிழ் சினிமாவின் போக்கை மாற்றின.

வெற்றி மேல் வெற்றி என்கிற இலக்கை நோக்கி ரஜினியும், தமிழ் சினிமாவில் அதுவரை யாரும் செய்யாதவை என்கிற பரிசோதனை முயற்சிகளில் கமல்ஹாசனும் ஈடுபடத் தொடங்கினார்கள்.

1985ல் ரஜினிக்கு நூறாவது படம் அமைந்தது. தன்னை அறிமுகம் செய்த பாலச்சந்தர்தான் தன்னுடைய நூறாவது படத்தை இயக்க வேண்டும் என்று ரஜினி விரும்பினார். எனினும், அந்தப் படம் ‘தண்ணி, சிகரெட்’ மாதிரி லாகிரி வஸ்துகளுக்கு ஆட்பட்ட ரஜினி படமாக இல்லாமல், வேறொரு ரஜினியை – அதாவது ஆன்மீக ரஜினி – காட்டக்கூடியதாக, தன்னுடைய இஷ்டதெய்வமான ‘ஸ்ரீ ராகவேந்திரர்’ பெருமையை தமிழர்களுக்கு எடுத்துச் சொல்வதாக இருக்க வேண்டுமென்று நினைத்தார்.

ரேஸ் குதிரையாக முதலிடத்தில் ஓடி லட்சம் லட்சமாக கொட்டிக் கொண்டிருக்கும் குதிரையை பூட்டி சாமி தேர் இழுத்தால் வேலைக்கு ஆகாது என்று பாலச்சந்தர் மறுத்தார். எனினும் ரஜினிக்காக படத்தை தயாரிக்க முன்வந்தார். எஸ்.பி.முத்துராமன் இயக்கிய ‘ஸ்ரீராகவேந்திரர்’ படுதோல்வி. நியாயமாக பார்க்கப் போனால், ஆன்மீகம் தனக்கு வேலைக்கு ஆகாது என்பதை ரஜினி அன்றே உணர்ந்திருக்க வேண்டும்.

ரஜினியை ஸ்டைல் மன்னன் ரஜினியாக பார்க்கதான் ரசிகர்கள் விரும்பினார்களே தவிர, அவரிடமிருந்து பொழுதுபோக்கைதான் எதிர்ப்பார்த்தார்களே தவிர வேறொன்றுமில்லை.

உதாரணத்துக்கு 1987 தீபாவளியை சொல்லலாம்.

கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்’ படத்தை சிறப்புக் காட்சியாக ரஜினி பார்க்கிறார்.

“இந்த தீபாவளி கமலோட தீபாவளி. தமிழில் யாருமே பண்ணாத சாதனையை ‘நாயகன்’ மூலமா செஞ்சிருக்காரு. ரொம்ப சாதாரணமான நம்மோட ‘மனிதன்’ எடுபடாது” என்று வெளிப்படையாகவே ‘மனிதன்’ இயக்கிய எஸ்.பி.முத்துராமனிடமும், தயாரித்த ஏ.வி.எம்.சரவணனிடமும் சொல்லியிருக்கிறார்.

“அது கமல் படம். இது ரஜினி படம். நீங்க வேணும்னா பாருங்க. ரெண்டுமே நல்லா ஓடும்” என்று சமாதானப்படுத்தி இருக்கிறார் எஸ்.பி.முத்துராமன். ரஜினிக்கு சமாதானமாகவில்லை.

ஆனால் –

எஸ்.பி.முத்துராமன் சொன்னதுதான் நடந்தது.

கமல்ஹாசனை அறிவுஜீவியாக, பரிசோதனைகளுக்கு தயாரான எலியாகவே ரசிகர்கள் ஏற்றுக் கொண்டார்கள். கமல்ஹாசனின் படம் ஏதாவது சாதாரண பொழுதுபோக்கு படமாக வந்தால், அவருடைய வெறித்தனமான ரசிகர்களேகூட ‘ஒரு தடவை பார்க்கலாம்’ என்று உதட்டை பிதுக்க ஆரம்பித்தார்கள். இதனாலேயே படத்துக்கு படம் ஏதாவது வித்தியாசம் என்று முயற்சித்து மண்டையை பிய்த்துக் கொண்டார் கமல். முன்பாக எவ்வளவோ ஜிமிக்ஸெல்லாம் காட்டி தலைசிறந்த பொழுதுபோக்குப் படமாக அவர் உருவாக நினைத்த ‘விக்ரம்’ கதை இப்படிதான் கந்தலானது.

ரஜினி, ரஜினியாகவே தோன்றினால் போதும். அவர் ஏதாவது முயற்சித்தால்தான் ரசிகர்களுக்கு சோதனை. பீரியட் ஃபிலிமாக அவர் பிரும்மாண்ட செலவில் முயற்சித்த சொந்தப் படமான ‘மாவீரன்’ படுதோல்வி அடைந்தது.

இந்த நிலையே தொண்ணூறுகளில் தொடர்ந்தது.

ரஜினியின் ஒவ்வொரு படமும் முந்தையப் படத்தின் வசூல்சாதனையை முறியடித்து வந்தன. கமல் கிட்டத்தட்ட கருத்து கந்தசாமியாகவே ஆகிவிட்டார் (இருவருக்கும் ஒருசில விதிவிலக்குகள் இருக்கலாம், ஆனால், இதுவே பொதுவான நிலையாக இருந்தது)

அதாவது –

ரஜினியை மாஸ் மன்னனாகவும், கமலை ஒப்பீனியன் மேக்கர் என்கிற அளவிலும் மக்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

இதற்கிடையே எம்.ஜி.ஆரின் மறைவு, ரஜினிக்கு ‘தலைவர்’ ஆகும் கெத்தை கொடுத்தது. அவருடைய படங்களில் சோ-வின் உதவியோடு அரசியல் பஞ்ச் வசனங்கள் இடம்பெறத் தொடங்கின.

‘அண்ணாமலை’யில் தொடங்கியது ரஜினிக்கு அரசியல் பஞ்சாயத்து. தொடக்கத்திலிருந்தே ஏனோ ரஜினியை ஜெயலலிதாவுக்கு பிடிக்காது. அவரை மட்டம் தட்டும் விதமாகவே நடந்துக் கொண்டு வந்திருக்கிறார். ‘நதியை தேடி வந்த கடல்’, ‘பில்லா’ படங்களில் ஹீரோ (நம்ம ரஜினிதான்) கருப்பாக இருக்கிறார் என்று நடிக்கவே மறுத்தவர் ஜெயலலிதா.

அப்படிப்பட்டவர் ஆட்சி அதிகாரத்துக்கே வந்த நிலையில், நண்டு சிண்டுகளால் ‘தலைவர்’ என்று அழைக்கப்படும் ரஜினியை எப்படி சகித்துக் கொள்ள முடியும்?

வசூலில் ரஜினியின் மாஸ்டர்பீஸாக ‘பாட்ஷா’ அமைந்தது. தமிழ் சினிமாவிலேயே அதிக முறை நுழைவு டிக்கெட் கிழிக்கப்பட்ட படம் என்கிற பெருமையை சிவாஜியின் ‘திரிசூலம்’ பெற்றிருந்தது. அந்த சாதனையை கமலின் ‘அபூர்வ சகோதரர்கள்’ முறியடித்தது. இரண்டு படங்களின் சாதனையையும் நொறுக்கி, இன்றுவரையிலான மகத்தான சாதனையை ‘பாட்ஷா’வில் செய்தார் ரஜினி.

‘அன்று; தளபதி. நேற்று; மன்னன். நாளை?’ என்று ரசிகர்கள் போஸ்டர் அடித்து ஒட்ட ஜெயலலிதா கடுப்பானார். அதற்கு ஏற்ப ‘பாட்ஷா’ வெற்றிவிழாவில் மயில்தோகையால் மெல்ல ஜெ. தலைமையிலான அரசை ரஜினி விமர்சிக்க, முட்டிக் கொண்டது. ‘முத்து’ படத்தில், “நான் பாட்டுக்கு என் வழியில் போயிக்கிட்டிருக்கேன். எதுக்கு தடங்கல் பண்ணுறீங்க” என்று வசனம் வைத்து ஜெ.வை சீண்டினார்.

அடுத்து 1996ல் நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் நேரடியாகவே ஜெ.வுக்கு எதிராக போர்முழக்கம் செய்தார் ரஜினி. அரசியலில் குதித்து அவர் தமிழக காங்கிரஸ் தலைவராக ஆட்சியைப் பிடிப்பார் என்று யூகங்கள் வந்துக் கொண்டிருந்த நிலையில், அந்த சூழலை சுக்குநூறாக உடைத்தார் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ். வேறு வழியின்றி சோ ஆலோசனையுடன் திமுக கூட்டணியை ஆதரித்து, ஜெ.வை பழிதீர்த்துக் கொண்டார்.

ரஜினி படமென்றால் வெள்ளிவிழா என்கிற நிலையை தாண்டி ‘முத்து’, ‘அருணாச்சலம்’, ‘படையப்பா’ படங்கள் 250 நாட்கள் ஓடி வைரவிழா கண்டன. இதைவிட பெரிய வெற்றியை கொடுத்தே ஆகவேண்டும் என்கிற சுமை அழுத்த, குழப்பத்தில் சினிமாவில் நடிப்பதையே சில ஆண்டுகள் தவிர்த்தார் ரஜினி.

2001ல் மீண்டும் ஜெ. ஆட்சி.

இம்முறை அரசியல் கருத்துகளோடு சுடச்சுட களமிறங்க திட்டமிட்டார் ரஜினி. இப்போது சொல்லிக் கொண்டிருக்கிறாரே ஆன்மீக அரசியல், அதையே கருத்தாக்கி ‘பாபா’ எடுத்தார்.

படுதோல்விதான் பரிசு. தன்னுடைய நூறாவது படமான ‘ஸ்ரீராகவேந்திரா’வை விடவும் கசப்பான அனுபவத்தை ‘பாபா’வில் பெற்றார்.

‘என்னோட சூப்பர் ஸ்டார் பட்டமெல்லாம் அவ்வளவுதானா?’ என்று ரஜினி புலம்புமளவுக்கான தோல்வி.

ரஜினியிடம் மக்கள் எதிர்ப்பார்ப்பது பொழுதுபோக்கே தவிர, அரசியலோ சமூகக் கருத்துகளோ கிடையாது என்பதை ஆணித்தரமாக ‘பாபா’வுக்கு நேர்ந்த கதி நிரூபித்தது. ஏனெனில் ரஜினியைவிட டீக்கடை பெஞ்சுகளில் ‘தினத்தந்தி’ வாசிக்கும் சாமானியனுக்கே அரசியல் அதிகம் தெரியும். சமூகத்தைப் பற்றிய புரிதலும் அதிகம்.

அரசியல் கருத்துகளால் கீழே விழுந்த குதிரையான ரஜினி, மீண்டும் தன்னுடைய பொழுதுபோக்கு சேணத்தை தட்டிப் போட்டு ‘சந்திரமுகி’யில் வரலாற்று வெற்றியை எட்டினார். அடுத்து ஏவிஎம்மின் ‘சிவாஜி’, ஷங்கரின் ‘எந்திரன்’ படங்களில் வசூல் சாதனை புரிந்தார்.

‘படையப்பா’ வரையில் ரஜினி நடித்தாலே வெற்றி என்கிற நிலைதான் இருந்தது. அப்போது அவருக்கு இருந்த கவர்ச்சி அப்படி. ஐம்பது வயதை கடந்தும் அவர் ஹீரோவாக நடிக்கும் நிலையில் ரஜினிக்காக படம் ஓடும் என்கிற நிலை மாறி, ரஜினி நடித்த படம் நன்றாக இருந்தால் மட்டுமே ஓடும் என்கிற சூழல்தான் இப்போது நிலவுகிறது. ‘பாபா’, ‘குசேலன்’, ‘கோச்சடையான்’, ‘லிங்கா’ என்று அடுத்தடுத்த தோல்விகளும், ‘கபாலி’ போன்ற ஆவரேஜ்களும் நியாயமாக ரஜினிக்கு நிலைமையை விளங்கப்படுத்தியிருக்க வேண்டும்.

அதாவது ரஜினியின் கவர்ச்சி காலாவதியாகி கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் ஆகப்போகிறது. சினிமாவிலேயே படுதோல்வி அடைந்த ‘பாபா’ கருத்துகளோடு 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு ‘2.0’, ‘காலா’ படங்களை ஓடவைப்பதற்கான அவருடைய வழக்கமான விளம்பர யுக்தியா அல்லது நிஜமாகவே ஒருமுறை ஆழத்தில் கால்விட்டு பார்ப்போமா என்கிற அசட்டுத் துணிச்சலா என்பது இன்னும் ஓரிரு ஆண்டுகளிலேயே தெரிந்துவிடும்.

30 டிசம்பர், 2017

தாம்பூலம் முதல் திருமணம் வரை

மகிழ்ச்சி.

ஒவ்வொரு திருமணத்தின் நோக்கமும் இதுதான்.

உங்களுக்கு திருமணமாகி இருந்தால் திருமண ஆல்பத்தை உடனே புரட்டிப் பாருங்கள். இல்லையேல் உங்கள் பெற்றோருடைய, சகோதர சகோதரிகளுடைய, நண்பர்களுடைய ஆல்பத்தை பாருங்கள். போட்டோக்களில் இடம்பெற்றிருக்கும் மணமக்கள் மட்டுமல்ல. சுற்றமும், நட்பும் கூட முகத்தில் மகிழ்ச்சியை மட்டுமேதான் சுமந்திருக்கும். எல்லோரும் மகிழ்ந்திருக்கும் ஒரே இடம் திருமணக்கூடம்.

பெண் பார்ப்பதில் தொடங்கி, சாந்தி முகூர்த்தம் வரை சம்பந்தப்பட்ட மணமக்கள் இருவருமே தங்கள் வாழ்வில் கடக்கும் ஒவ்வொரு நொடியையும் வாழ்க்கை முழுக்க மலரும் நினைவுகளாக மனதில் கல்வெட்டாக பதிந்து வைத்துக் கொள்கிறார்கள்.

கெட்டிமேளம் முழங்க மணமகன் தாலி கட்டும்போது, அட்சதை போடும் அத்தனை பேருமே, “இந்த மணமக்கள் நீடூழி வாழவேண்டும்” என்று மனமார வாழ்த்துகிறார்கள். பிள்ளையையும், பெண்ணையும் பெற்ற பெற்றோர் பெரிய மனப்பாரத்தை இறக்கி வைத்ததாக நிம்மதி கொள்கிறார்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் திருமணம் என்பது செகண்ட் இன்னிங்ஸ். புதிய உறவுகள், புதிய குடும்பம், புதிய வீடு என்று எல்லாமே புதுச்சூழல். எனவேதான் திருமணத்தை ‘The big day’ என்கிறார்கள்.

இருமனம் இணைவது மட்டுமல்ல திருமணம். இச்சொல்லுக்கு ‘ஓர் ஆணுக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையிலான வாழ்க்கை ஒப்பந்தம்’ என்று ஒருவரியில் அர்த்தம் புரிந்துக் கொள்ளலாம். ஆனால், அது மட்டும்தானா திருமணம்? இந்த வார்த்தையை வெறும் சடங்காக மட்டும் சுருக்கி கூற இயலாது. ஒரு புதிய குடும்பத்தின் தொடக்கத்தை, தலைமுறைகளின் தொடர்ச்சியை சடங்கு என்று சுருக்கி சங்கடப்படுத்திவிட முடியுமா என்ன?

மேற்கத்திய நாடுகளில், இரு தனி நபர்களுக்கு இடையேயான குறைந்தபட்ச செயல்திட்டங்களோடு கூடிய ஒப்பந்தம் என்று திருமணத்தைக் கூறலாம். நம்முடைய மரபில் இரண்டு குடும்பங்களின் இணைப்பாக இது பாரம்பரியமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இரு குடும்பம், அவரவருடைய தொடர்புடைய குடுங்பங்கள், நண்பர்கள் என்று இரு சமூகத்தின் உறவுப்பாலம் அல்லவா. திருமணம் என்பது நம் சமூகப் பாரம்பரியத்தில் ஆண்டாண்டு காலமாக அறுபடாத தொடர்சங்கிலி.

வரலாறாக திருமணத்தை வரையறுப்பது கொஞ்சம் கடினம். காடுகளில் வசித்து வந்த மனிதன், நாடுகளில் விவசாயம் செய்து, நிலங்களை உழுது நாகரிகமாக தொடங்கிய காலத்தில் தத்தம் உடைமைகளை பாதுகாக்கவும், முறையான சமூக அமைப்பின் அங்கமாக விளங்கவும் உருவாக்கிய ஏற்பாடே திருமணம்.

பண்டைய இந்தியாவில் எட்டு விதமான திருமண பந்தங்கள் இருந்ததாக வரலாறு சொல்கிறது. பிரம்ம விவாகம், தெய்வ விவாகம், அர்ஷ விவாகம், பிரஜபாத்யா விவாகம், காந்தர்வ விவாகம், அசுர விவாகம், ராட்சஸ விவாகம், பைசாஸ விவாகம். இதில் கடைசி நான்கு திருமணங்கள்தான் சாமானிய மக்களின் திருமணங்கள். முந்தைய நான்கும் வேற லெவல்.

காலப்போக்கில் மக்கள் ஏற்றுக்கொண்ட சமூக சீர்த்திருத்தங்களின் காரணமாக அந்த பழம்பெரும் முறைகள் பல்வேறு காரணங்களால் இன்று நடைமுறையில் இல்லை. இன்று நாட்டில் பெரும்பாலான திருமணங்கள் arranged marriages என்று சொல்லப்படும் வகையிலானவை. இத்திருமணங்களுக்கு சமூகம், வர்க்கம், குடும்பம் மூன்றும் முதன்மையான காரணிகள். யாருக்கு யார் ஜோடி என்பதை குடும்பப் பெரியவர்கள் நிச்சயிக்கிறார்கள். இப்போது தனக்கு பிடித்த பெண், பையன் என்று மணமக்களே தங்கள் துணையை விரும்பி, பெற்றோரிடம் சொல்லி திருமணம் செய்துக் கொள்ளுமளவுக்கு மாற்றம் உருவாகி வருகிறது. அடுத்தபடியாக நாகரிக வளர்ச்சியின் காரணமாக சாதி, மதம் பாராத காதல் திருமணங்களும் பெருமளவில் நடந்து வருகின்றன. காதலை பெற்றோர் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்க மாற்றம். பிரெஞ்சுப் பொண்ணுக்கு மதுரைப் பையன் மாப்பிள்ளை என்கிற அளவில் சர்வதேச அளவில் ஜோடி தேட ஆரம்பித்திருக்கிறோம்.

கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் தொழிற்புரட்சி, மேற்கத்திய நாகரிக பரவல், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி என்று பல்வேறு சூழல்கள் இந்திய சமூகத்தை தாக்கப்படுத்தி இருந்தாலும், திருமணம் மட்டுமே அதன் அடிப்படை நோக்கம் மற்றும் வழிமுறைகளில் இருந்து பெரிய அளவில் தடம் புரளவில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு பால்யவிவாகங்கள் நடந்ததுண்டு. இந்து திருமணச் சட்டம் 1955ன் படி பெண்ணுக்கு 18 வயதும், ஆணுக்கு 21 வயதும் திருமண வயதாக கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கிறது. ஒரு சட்டம், மக்களிடையே பெரிய மனமாற்றத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி இருக்கிறது என்றால், அது திருமண விஷயத்தில்தான்.

பொதுவாக நம்மூரில் நாள் நட்சத்திரம் பார்த்து திருமணத்துக்கு தேதி குறிக்கிறார்கள். திருமணத்துக்கு முன்பு இரு குடும்பமும், புதிய உறவின் அச்சாரமாக தாம்பூலம் மாற்றிக் கொள்கிறார்கள். திருமணம் அன்று மணமகனும், மணமகளும் சுற்றத்தையும், நட்பையும் சாட்சியாக வைத்து ஒரு கோயிலிலோ அல்லது கல்யாண மண்டபத்திலோ அமர்கிறார்கள். வேதமந்திரங்களை அந்தணர் ஓதுகிறார். பின்னணி இசையாக மங்கள வாத்தியம். திருமணத்துக்கு வந்தவர்களுக்கு விருந்தோம்பல். நிகழ்வின் உச்சமாக மூன்று முடிச்சுப் போட்டு மணமகளுக்கு மணமகன் தாலி கட்டுகிறார். மணமகளின் கையை மணமகன் பிடித்து இருவரும் அக்னியை சுற்றி தங்கள் திருமணத்தை உறுதி செய்கிறார்கள். பின்னர் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சகஜமாக வேண்டுமென்று சில விளையாட்டுகளை சுற்றம் மகிழ விளியாடுகிறார்கள். திருமணத்துக்கு வந்த விருந்தினர்கள், மணமக்களுக்கு பரிசளிக்கிறார்கள். பல நூறு ஆண்டுகளாக பொதுவான திருமண வழிமுறை இதுதான். சடங்குகள் மட்டும் சமூகத்துக்கு சமூகம், மதத்துக்கு மதம் சற்றே மாறுபடலாம்.

இந்தியாவில் இந்து மதம் தவிர்த்து இஸ்லாமியர், கிறிஸ்துவர், சிந்தி, பார்ஸி, சீக்கியர், பவுத்தம், ஜெயின் மற்றும் யூதர்கள் என்று பல்வேறு மதத்தினர், அவரவர் மத சம்பிரதாயப்படி திருமணங்களை செய்கிறார்கள். தாலிக்கு பதில் மோதிரம், மந்திரத்துக்கு பதில் புனிதநூல் ஓதுதல் மாதிரி வேறுபாடுகளை தவிர்த்துப் பார்த்தால், ‘திருமணம்’ என்பதன் நோக்கம் நம் நாட்டில் மட்டுமல்ல, உலகளாவிய அடிப்படையிலேயே ஒன்றுதான்.

தரகரிடம் தேடச்சொல்லி, தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் என்று நாலு இடத்தில் சொல்லிவைத்து பெண் தேடிய காலம் மட்டும் மாறியிருக்கிறது. இன்று இண்டர்நெட்டிலேயே பெண் தேடுகிறார்கள். வீடியோ சாட்டிங்கில் பெண் பார்க்கிறார்கள். மற்ற விஷயங்களை போனில் பேசிக்கொள்கிறார்கள். பஜ்ஜி, சொஜ்ஜி செலவு மிச்சம் என்றாலும், ஏகத்துக்கும் பட்ஜெட்டை எகிறவைக்கும் வேறு புதிய செலவினங்கள் உருவாகியிருக்கின்றன. பையனின், பெண்ணின் தகுதியாக படிப்பு, பாட்டு பாடுவது, நாட்டியம் ஆடுவது எல்லாம் காலாவதியாகி விட்டது. மருத்துவத்தகுதி சான்றிதழ் வாங்கி பொருத்தம் பார்க்குமளவுக்கு விழிப்புணர்வு பெறத் தொடங்கியிருக்கிறோம்.

அதெல்லாம் தனி.

ஆனால்-

கஷ்டப்பட்டு உழைத்து வாழ்நாளெல்லாம் சேமிக்கும் அத்தனை பணத்தையும் தன் மகளின் கல்யாணத்துக்குதான் என்று சொல்லும் தகப்பன்மார்கள் எத்தனை பேரை பார்த்திருக்கிறோம். நல்லபடியாக தன்னுடைய மகள் புகுந்தவீட்டில் செட்டில் ஆகவேண்டுமே என்கிற தாயின் அடிவயிற்று நெருப்பு பரிதவிப்பு நமக்கும் தெரியும்தானே? கல்யாண வீடுகளில் பாருங்கள். வியர்வை வழிய அங்கும் இங்குமாக டென்ஷனாக அல்லாடிக் கொண்டிருப்பவன் பெண்ணின் சகோதரனாகதான் இருப்பான்.

பஜ்ஜி, சொஜ்ஜி சாப்பிட்டு பெண் பார்ப்பது. பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டுக்கு வந்து கையை நனைத்து உறவை உறுதி செய்வது. பரிசம் போட்டு நிச்சயத்தாம்பூலம். கல்யாணத்துக்கு மண்டபம் பார்ப்பது. பெண்ணுக்கு முகூர்த்தப்புடவை எடுப்பது. விருந்துக்கு சுவையாக சமைக்கக்கூடிய சமையல்காரரை தேடுவது. திருமணம் செய்விக்கும் புரோகிதரை புக் செய்வது. ரிசப்ஷனுக்கு நல்ல லைட் மியூசிக் ட்ரூப்பை கண்டு பிடிப்பது. திருமண அழைப்பிதழுக்கு நல்ல டிசைன் செலக்ட் செய்வது. மேடைக்கு பூ அலங்காரம். விருந்தினர்கள் மனம் கோணாமல் உபசரிப்பு. இன்னும் எராளமான விஷயங்கள். இவை எல்லாவற்றுக்கும் லட்சக்கணக்கில் பணம்... யோசித்துக் கொண்டே போனால் ‘கல்யாணம் பண்ணிப் பார்’ என்று சும்மாவா சொன்னார்கள் நம் பெரியவர்கள்?

நம் நண்பர் ஒருவர் டீனேஜில் இருந்தபோது அவருடைய ஒண்ணுவிட்ட அண்ணனுக்கு திருமணம் நடந்தது. அந்தத் திருமணத்தில் ரெட்டை ஜடை, பாவாடைச் சட்டையோடு ஒரு பத்து வயது பெண் சுற்றிக் கொண்டிருந்தாள். மணமகளின் ஒண்ணுவிட்ட தங்கச்சியாம். பத்து ஆண்டுகளுக்கு பிறகு லைஃபில் செட்டில் ஆகிவிட்ட நம் நண்பருக்கு பெண் பார்த்தார்கள். அந்த ரெட்டை ஜடை, பாவாடைச் சட்டையே புடவை கட்டி வந்து அமர்கிறார். இருவரும் இப்போது தம்பதி சமேதரராக அந்த ஒண்ணுவிட்ட அண்ணனுக்கும், ஒண்ணுவிட்ட அக்காவுக்கும் நடந்த கல்யாண வீடியோவை அவ்வப்போது போட்டுப் பார்த்து சந்தோஷமாக ஒருவருக்கு ஒருவர் கிண்டல் அடித்துக் கொள்கிறார்கள். திருமணம், இதுபோன்ற மலரும் நினைவுகளோடு சம்பந்தப்பட்டது.

“நம்ம வாசுதேவன் கல்யாணத்துலே போட்டாங்க பாருடா சாப்பாடு. அதுதான் சாப்பாடு” என்பது மாதிரி டயலாக்குகளை அடிக்கடி கேட்கலாம். வாசுதேவனுக்கு கல்யாணம் ஆகி இருபத்தைந்து ஆண்டுகள் கழித்தும்கூட.

“நம்ம வரலட்சுமி புள்ளை கல்யாணத்துலே குறுக்கும், நெடுக்குமா நெட்டையா சிகப்பா ஒட்டறைக்குச்சி மாதிரி நடந்துக்கிட்டிருந்தாளே ஒரு பொண்ணு. நம்ம விஜயாவோட சின்ன மாமனார் பெண்ணாம். நம்ம சரவணனுக்கு கேட்டுப் பார்க்கலாமா? இவனும் ஒல்லியா, அமிதாப் பச்சன் உயரத்துலேதானே இருக்கான்?” ஒரு கல்யாணத்தால் இன்னொரு கல்யாணம் நிச்சயிக்கப்படுகிறது.

இம்மாதிரி sidelight விஷயங்கள் ஏராளம்.

இவை அத்தனையையும்தான் ‘தாம்பூலம் முதல் திருமணம் வரை’ நூல்.

அலுவல் தொடர்பான சந்திப்பு ஒன்றில்தான் திடீரென திருமணம் பற்றி பேச்சு வந்தது.

எங்கள் நிர்வாக இயக்குநர் ஆர்.எம்.ஆர் அவர்கள், அவர் பார்த்த பல்வேறு சமூகத் திருமணங்களை பற்றி சுவாரஸ்யமாக சொல்லிக் கொண்டிருந்தார். சடங்குகள், சம்பிரதாயம் பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென அவரேதான் சொன்னார்.

“இதை ஒரு தொடராவே செய்யலாம். ஏன்னா, இப்போ பல சடங்குகள் அர்த்தம் இழந்துப் போச்சி. அர்த்தமுள்ள சடங்குகளுக்கு அர்த்தம் என்னன்னு இப்போதைய தலைமுறைக்கு தெரியலை”

அந்த காலக்கட்டத்தில் திருமணம் குறித்த பல்வேறு தரப்பிலான கருத்துகள் சமூகவலைத் தளங்களில் அலசப்பட்டுக் கொண்டிருந்தது. திருமணம் என்கிற முறையே தவறு என்பது மாதிரியான விவாதங்களும் நடந்துக் கொண்டிருந்தன. அந்த விவாதத்தில் நாம் கலந்துக் கொள்ள வேண்டாம்.

ஆனால்-

‘திருமணம்’ என்கிற நிகழ்வுக்கும், அதன் தொடர்பிலான சடங்குகளுக்கும் நம்முடைய மரபில் அர்த்தத்தை தேடுவோம் என்று முடிவெடுத்தோம்.

அப்படிதான் ‘தாம்பூலம் முதல் திருமணம் வரை’ தொடரை ‘தினகரன் வசந்தம்’ இணைப்பிதழுக்கு எழுதத் தொடங்கினேன். தொடரை ஆரம்பிப்பதற்கு முன்பு ஏகத்துக்கும் உதறல் இருந்தது. ஏதேனும் தவறுதலாக எழுதிவிட்டால் அந்தந்த சமூகத்து மக்களிடம் சமாதானம் சொல்ல வேண்டுமே என்கிற தயக்கமும் இருந்தது.

எனினும், அறிவிப்பு வெளியிட்ட பிறகு தமிழ் சமூகத்துப் பெரியவர்களே என்னை வழிநடத்தத் தொடங்கினார்கள். தேவைப்பட்ட குறிப்புகளையும், நூல்களையும் அவர்களே அனுப்பி வைத்தார்கள். எப்போதும் சந்தேகம் கேட்டாலும், தெளிவான விளக்கங்களை தர அவர்கள் யாரும் தயங்கியதே இல்லை. ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பெயர் குறிப்பிட்டு நன்றி சொல்ல ஆசைதான். எனினும், இந்த பெயர்ப்பட்டியலே தனிநூலாக போய்விடக்கூடிய அளவுக்கு நீளமான பட்டியல் என்பதால் தவிர்க்கிறேன். நூலில் குற்றம் குறை ஏதேனும் இருந்தால் அது எனது. சொல்லப்பட்டிருக்கும் நிறைவான விஷயங்கள் அத்தனைக்கும் நம் சமூகப் பெரியோரே காரணம்.

இப்போது நூலாக வெளியாகியிருக்கும் அந்த தொடரில் சில சமூகங்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம். ஏனெனில், அதே சடங்குகள் வேறொரு சமூகத் திருமணங்களில் கடைப்பிடிக்கப்படக் கூடியதாக இருக்கும். சமூகத்தின் பெயரை மற்றும் மாற்றி ஏற்கனவே சொன்னதையே திரும்பச் சொல்லுவதை தவிர்க்கவே அந்த விடுபடலே தவிர வேறெந்த நோக்கமுமில்லை. அதுபோலவே, தனித்துவமான சடங்குகள் இல்லாமலேயே மிகவும் எளிமையான முறையில் திருமண பந்தத்தை உறுதி செய்யக்கூடிய சமூகங்களும் உண்டு. ஒட்டுமொத்தமாக இந்த நூலை வாசிக்கையில், திருமணம் என்கிற ஆயிரங்காலத்து பயிர் எப்படி வளர்க்கப்படுகிறது, அதற்கு உரமாக எதுவெல்லாம் அமைகிறது என்கிற பறவைப்பார்வை உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.

என்னுடைய ஆரம்பக்கட்ட உதறலை போக்கியவர் ‘குங்குமம்’ வார இதழின் ஆசிரியர் கே.என்.சிவராமன். தொடரை ஆரம்பிக்கும்போது அவர்தான் ‘தினகரன் வசந்தம்’ இணைப்பிதழின் ஆசிரியராக இருந்தார். ‘ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ, சர்ச்சை வரும் என்று தெரிந்தாலோ, அதை எழுதவே எழுதாதே’ என்று அறிவுறுத்தியிருந்தார். நல்லபடியாக எவ்வித சர்ச்சைக்கும் இடமின்றி இந்தத் தொடரை நிறைவு செய்ததற்கு அந்த அறிவுரையே காரணம்.

என்னுடைய பத்திரிகையுலக வாழ்வில் ‘தாம்பூலம் முதல் திருமணம் வரை’யை மறக்கவே முடியாது. இத்தொடர் தொடங்கும்போது ‘வசந்தம்’ இதழின் மூத்த துணையாசிரியராக இருந்தேன். தொடரின் இறுதி அத்தியாயத்தை எழுதும்போது அவ்விதழுக்கு ஆசிரியர் பொறுப்புக்கு பதவி உயர்த்தப்பட்டிருந்தேன். அவ்வகையில் இந்த ‘திருமணம்’, என் வாழ்வின் சகல சவுபாக்கியங்களையும் உறுதிச் செய்திருக்கிறது.

நூல் : தாம்பூலம் முதல் திருமணம் வரை
எழுதியவர் : யுவகிருஷ்ணா
விலை : ரூ.190
பக்கங்கள் : 255
வெளியீடு : சூரியன் பதிப்பகம்,
229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர், சென்னை-600004.
தொ.பே 044-2209191 Extn 2115. கைபேசி : 7299027361

20 நவம்பர், 2017

எழுத்துக்கும் பேச்சுக்கும் மேக்கப்!

* மனப்பாடம் செய்து பயின்ற ஃபார்முலா மொழியில் இருந்து நாம் விடுபட வேண்டும்.

* மக்களிடம் பேசுவதற்கு கற்றுக் கொள்ள வேண்டும். ஃபார்முலாவான இலக்கிய மொழியில் அல்ல. பேசக்கூடிய ஒவ்வொரு சொல்லும், கருத்தும் இலட்சக்கணக்கானோருக்கு புரியும் விதத்தில், அவர்களது சிந்தனையை கிளறும் விதத்தில் இருக்க வேண்டும்.

* மக்களுக்கு புரியக்கூடிய மொழியில் நமக்கு பேசத் தெரியாவிட்டால், நம்மை மக்கள் ஏற்றுக் கொள்வது இயலாத காரியம்.

* கூடியிருக்கும் கூட்டத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பொத்தாம்பொதுவாக பேசுவதோ, தேவையற்ற சொற்களால் பக்கங்களை நிரப்புவதோ, சுய அபிப்ராயத்தை பொதுக்கருத்தாக நிலைநிறுத்துவதோ, வெற்றுரை ஆற்றுவதோ கூடாது.

* மக்களை மிரட்டும் பகட்டு நடையில் பேசுவதும், எழுதுவதும் உலகெங்கும் வியாபித்திருக்கும் ஒரு பொது நோய்.

* எந்தப் பிரச்சினையையும் முழுமையாக கவனி. அந்தப் பிரச்சினையில் சிறிய சந்தேகம் ஏதாவது இருந்தாலும், அதை எழுத வேண்டாம்/பேச வேண்டாம்.

* நீங்கள் சொல்வதற்கு எதுவுமே இல்லாதபோது எதையும் சொல்லித் தொலைக்காதீர்கள். எழுதுவதற்கும்/பேசுவதற்கும் உங்களை நீங்களே நிர்ப்பந்தித்துக் கொள்ளாதீர்கள்.

* எதை எழுதினாலும் அதை குறைந்தது இரு தடவை வாசியுங்கள். தேவையற்ற ஊளைச்சதையை குறையுங்கள். ‘இரு தடவை சிந்தி’ என்று கன்பூசியஸ் இதைதான் சொல்கிறார்.

* சுற்றி வளைக்காமல் சுருக்கமாக பேசி/எழுதித் தொலை.

* உங்களுக்கு மட்டுமே புரியக்கூடிய/பழகிய அடைமொழிச் சொற்களை பொதுவில் பேசும்போதும்/எழுதும்போதும் பயன்படுத்த வேண்டாம்.

* தேய்வழக்குகள் நம் பேச்சிலிருந்தும் / எழுத்திலிருந்தும் ஒழிய வேண்டும்.


-  மேற்கண்ட கருத்துகள் என்னுடையது கிடையாது. பிப்ரவரி 8, 1942ல் ஏனான் என்கிற இடத்தில் நடைபெற்ற ஊழியர் கூட்டம் ஒன்றில் மாவோ ஆற்றிய உரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கருத்துகள். தகவல் தொடர்பு குறித்து 75 ஆண்டுகளுக்கு முன்பே மாவோவுக்கு எத்தகைய துல்லியமான தெளிவு இருந்தது என்று புரிகிறது. தமிழில் ஐந்து பக்கங்களுக்கு மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கும் இந்த கட்டுரையை, சோர்வு ஏற்படும்போதெல்லாம் எடுத்து வாசிப்பது என் வழக்கம்.

ஆனால்-

‘பகட்டு எழுத்து நடையினை எதிர்ப்போம்’ என்கிற தலைப்பில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் இந்த உரை, மேற்கண்ட மாவோவின் கருத்துகள் எதையுமே பொருட்படுத்தாத / எதை செய்யக்கூடாது என்று மாவோ வலியுறுத்துகிறாரோ, அந்நடையில் மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கிறது.

உதாரணத்துக்கு, “அன்னிய உருப்படிவங்கள் (sterio type) ஒழிக்கப்பட வேண்டும், வெற்று அரூபமான மனப்பாங்குகள் குறைவாக இருந்திட வேண்டும், வறட்டு வாதம் அகற்றப்பட வேண்டும்” என்கிற ரேஞ்சுக்கு அந்த கட்டுரை போகிறது.

‘எளிமையாக எழுது’ என்பதையே இவ்வளவு சிக்கலாக மொழிப்பெயர்த்திருக்கிறார்கள் என்றால், அறிவார்ந்த விஷயங்களை தமிழாக்கத்தில் எப்படி சின்னாபின்னப் படுத்தி இருப்பார்கள்?

தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்ட கட்டுரை ஒன்றையே, மீண்டும் தமிழில் மொழிப்பெயர்த்துதான் நாம் புரிந்துக்கொள்ள முடிகிறது. மற்ற மொழிகளில் எப்படியென்று தெரியவில்லை. தமிழன் எப்போதும் எழுத்துக்கும் / பேச்சுக்கும் டிசைன் டிசைனாக மேக்கப் போட்டுக்கொண்டேதான் திரிகிறான் :(

14 நவம்பர், 2017

ஆலையில்லா ஊருக்கு அறம்!

பொதுவாக தான் நடிக்கும் படங்களின் ஆடியோ மற்றும் பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வருவதையே தவிர்க்கும் நயன்தாரா, முதன்முறையாக வானத்தில் இருந்து இறங்கி தியேட்டர் விசிட் அடித்திருக்கிறார். ரஜினி பாராட்டி விட்டார். ரஞ்சித், நயன்தாராவை தோழர் என்று நெக்குருகி அழைக்கிறார். வாசுகி பாஸ்கர் புகழ்ந்து தள்ளுகிறார். தோழர்கள் தோள் மேல் வைத்துக் கொண்டாடுகிறார்கள். தலித்துகள் பெருமிதப்படுகிறார்கள். தமிழின இணையப் போராளிகள் ஆஸ்கர் அவார்டையே தூக்கிக் கொடுத்து விட்டார்கள். பத்திரிகையாளர்கள் பிரிவ்யூ காட்சியிலேயே கதறி அழுதிருக்கிறார்கள்.

அப்படியாப்பட்ட ‘அறம்’ அப்படியெல்லாம் இல்லை என்பதே உண்மை.

கோபிநைனார் நல்ல வசனகர்த்தா என்று தெரிகிறது. முன்பு விஜயகாந்துக்கு நாடி நரம்பெல்லாம் துடிக்க லியாகத் அலிகான் என்றொருவர் வசனம் எழுதிக் கொண்டிருந்தார். அந்த பாணியில் நக்கல், நையாண்டியுடனான அரச எதிர்ப்பு வசனங்களை துடிப்பாக எழுதியிருக்கிறார்.

ஆனால்-

இயக்கம்?

கிட்டி, நயன்தாராவை விசாரிக்கும் காட்சியில் தொடங்கி, கிளைமேக்ஸ் வரை அத்தனை அமெச்சூர்த்தனம். ஒரு சீஃப் செக்ரட்டரி (அப்படிதான் நினைக்கிறேன். அவர்தானே கலெக்டரை விசாரிக்க முடியும்?) இவ்வளவு மொக்கையாக சீரியல் மாமனார் மாதிரியா கேள்விகளை கேட்பார்?

ப்ளாஷ்பேக்கில் விரியும் கதையில் நயன்தாரா நேரடி சாட்சியாக இருந்திருக்க வாய்ப்பில்லாத ராமச்சந்திரன் – சுனுலட்சுமி பாத்திரங்களின் பின்னணி சித்தரிப்பு இடம்பெறுவதே தர்க்கமில்லாதது. மாவட்ட ஆட்சியரான நயன்தாராவை பார்த்து கேட்கப்படும் கேள்விகளுக்கு, அவர் பார்த்ததையும், குறிப்பிட்ட சம்பவம் தொடர்பான பதில்களையும் சொல்லுவதுதானே சரியாக இருக்க முடியும்? கேட்டால் சினிமாவென்றால் அப்படிதான் என்பார்கள். அப்படியெனில் இது எப்படி உலகப்படம் ஆகும்?

படத்தின் மையம் என்பது ராமச்சந்திரனின் குழந்தை, ஆழ்துளைக் கிணறில் விழுவதும், குழந்தையை சக அதிகாரிகளின் ஒத்துழையாமை மற்றும் அரசியல் குறுக்கீட்டுத் தடைகளை தாண்டி கலெக்டர் மீட்பதும்தான்.

ஆனால்-

படத்தின் தொடக்கம் தண்ணீர்ப் பிரச்சினை என்பதாக தொடங்கி, ஏழ்மை உள்ளிட்ட தமிழ் சமூகத்தின் சர்வப் பிரச்சினைகளுக்கும் வசனங்களாலேயே தீர்வு கண்டுவிடலாம் என்கிற நோக்கத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. நல்ல கலெக்டர் நயன்தாராவுக்கு மதிவதனி என்கிற பெயரை வைத்ததின் மூலம் தொப்புள் கொடி உறவுகளின் உரிமைக்குரலுக்கும் வலு சேர்த்திருக்கிறார் இயக்குநர்.

ஊடகங்களை தோலுரிப்பதெல்லாம் சரிதான். அதற்காக படத்தின் இடைஇடையில் காட்டப்படும் ‘நியூஸ்-18’ விவாதம் மூலம் இயக்குநர் என்ன சொல்லவருகிறார். அதிலும் இளங்கோ கல்லாணை டிவி விவாதங்களில் பேசுவதையே சகித்துக் கொள்ள முடியாது. சினிமாவிலும் அவரை உளறவைத்து கொட்டாவி விடவைப்பதெல்லாம், ரசிகனை செய்யும் மகா டார்ச்சர் அல்லவா கோபி சார்? பெருமாள் மணியும் அவர் பாட்டுக்கும் வந்து ஆழ்துளைக்கிணறு பிரச்சினையை பேசியிருந்தால், இந்த டார்ச்சர் இன்னும் ‘முழுமை’ பெற்றிருக்கும்.

படத்தின் ஆகப்பெரிய அபத்தம் கிளைமேக்ஸ். 93 அடி கிணற்றில் விழுந்திருக்கும் குழந்தையை தூக்க, இன்னொரு குழந்தையை கயிறு கட்டி அனுப்புகிறார்கள். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு நாளை இதுபோல ஓர் ஆழ்துளை துயர சம்பவம், கொட்டாம்பட்டியிலோ பெண்ணாத்தூரிலோ நடந்தால்.. அங்கிருக்கும் ஊர்மக்கள் இதே பாணியில் முயற்சி செய்து ஏதேனும் விபரீதம் நிகழ்ந்தால் அதற்கெல்லாம் யார் பொறுப்பு?

இதேபோல குழியில் விழுந்துவிடும் ஒரு குழந்தையை காப்பாற்றும் திரைப்படம் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக வந்திருக்கிறது. ஜெயராம் – ஊர்வசி தம்பதியினரின் மகள் ஷாம்லி விழுந்துவிடுவார். மலையாளப்படமான இது தமிழில்கூட ‘பூஞ்சிட்டு’ என்பது மாதிரி ஏதோ பெயரில் டப்பிங் செய்து வெளியானது. அந்த காலத்தில் எடுக்கப்பட்ட படத்துக்கே உறைபோடக்கூட ‘அறம்’ காணாது.

மாறாக, ‘அறம்’ படத்துக்கு இப்படி பாராட்டுகள் விளம்பரமாக குவிவதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?

இயக்குநர், தலித் சமூகத்தைச் சார்ந்தவர் என்கிற ஒருவரி தகவல் முக்கியமான காரணம். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை கைதூக்கி விடுவோம் என்கிற சமூகநீதி எண்ணத்தால், இந்தப் படத்துக்கு விமர்சனம் நீக்கப்பட்ட பாராட்டுகள் குவியலாம். நல்ல விஷயம்தான்.

ஆனால் –

ஒடுக்கப்பட்ட ஒருவரின் திறமையான படைப்புக்கு அப்படிப்பட்ட அங்கீகாரங்கள் கிடைத்தால் சரி. ‘அட்டக்கத்தி’க்கு கிடைத்த கவனம் நியாயமானதே. மாறாக, மிக சுமாரான ஒரு படத்தை சூப்பர் என்று சொல்லுவதின் மூலம், சம்பந்தப்பட்டவர் தன்னுடைய நிஜமான திறமையை எடைபோடக்கூட முடியாமல் குருவி தலையில் பனங்காய் வைக்கும் முயற்சியாகவே இதை பார்க்கத் தோன்றுகிறது.

அடுத்து, தோழர்கள்.

இவர்களைப் பற்றி பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை. ‘கத்தி’யையே கம்யூனிஸப் படம் என்று கொண்டாடியவர்கள். நாலு கோமாளிகளை சேர்த்து மநகூ அமைத்து தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றிவிடலாம் என்று கருதியவர்கள். இப்படி ஒப்புக்கு பெறாத விஷயங்களை பேசியாவது தாங்கள் உயிர்ப்போடு இருப்பதை நிரூபித்துக்கொள்ள வெறித்தனமாகதான் முயற்சிப்பார்கள்.

இப்போது தமிழில் படமெடுக்க நினைக்கும் படைப்பாளிகள் ஒவ்வொருவருக்கும் ‘பீப்லி லைவ்’தான் ஆதர்சப் படமாக இருக்கிறது. அதை தாண்டி ஒரு படத்தை எடுத்துவிட வேண்டுமென்று துடியாக துடிக்கிறார்கள். நாம் ஏன் ‘பீப்லி லைவ்’ எடுக்க வேண்டுமென்று தெரியவில்லை. நாம் எடுக்க வேண்டியது ‘பதினாறு வயதினிலே’க்கள்தான். அந்தப் படத்தின் சாதனையையே நாற்பது ஆண்டுகளாக இதுவரை உடைக்கவில்லை.

‘அறம்’ மாதிரியான சுவாரஸ்யமற்ற/தர்க்கமற்ற படங்களைதான் நாம் தேசிய/சர்வதேச அரங்கில் மற்ற மொழிகளுக்கு போட்டியாக முன்நிறுத்துகிறோம் என்றால், தமிழ் சினிமாவும் எடப்பாடி அரசு மாதிரி படைப்பு வறட்சியால் தடுமாறிக் கொண்டிருக்கிறது என்றே பொருள்.

எந்தவித கலைவிமர்சன நோக்குக்கும் இடம் கொடுக்காதவாறு ஏகோபித்த பாராட்டுகளை அள்ளியிருக்கும் ‘அறம்’ படத்துக்கு மாநில, மத்திய அரசுகளின் சில விருதுகள்கூட கிடைக்கலாம். ஆளும் தரப்பை மிக மென்மையாக யாருக்கும் வலிக்காமல் எதிர்த்து கையாண்ட ‘ஜோக்கர்’ படத்துக்கே விருது கொடுக்கவில்லையா? மிக மிக சுமாராக நடித்திருந்த நயன்தாராவுக்கு தேசிய விருது கிடைத்தால்கூட ஆச்சரியப்பட ஏதுமில்லை. படத்தின் இறுதியில் அவர் மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொள்வதாக சித்தரிக்கப்பட்டதைபோல, நிஜத்திலேயே அரசியலில் குதித்து ஆட்சியைப் பிடித்தாலும் யாரும் அதிர்ச்சியடையத் தேவையில்லை. ஏனெனில், இது தமிழ்நாடு.