3 ஜூன், 2019

கலைஞரிடம் என்ன கற்க வேண்டும்?


கலைஞர் இல்லாத முதல் பொதுத்தேர்தலை இந்தியா சந்தித்திருக்கிறது. அவர் சார்ந்த திராவிட முன்னேற்றக் கழகம், தமிழகத்தில் சரித்திர வெற்றியை எட்டியிருக்கிறது. 

இந்த வெற்றியை கலைஞர் எப்படி கொண்டாடி இருப்பார்?

திமுகவின் மகத்தான வெற்றியைவிட மக்கள் சபையில் ஒற்றை இலக்க எண்ணிக்கையில்தான் இடதுசாரிகளுக்கு இடம் கிடைத்திருக்கிறது என்கிற கவலையைத்தான் அவர் அதிகம் வெளிப்படுத்தி இருப்பார்.

இடதுசாரிகளுக்கு ஒட்டுமொத்தமாகக் கிடைத்த ஐந்து இடங்களில் நான்கு இடங்கள் தமிழகத்தில் இருந்து கிடைத்தது குறித்த ஆறுதல் மட்டுமே அவருக்கு இருந்திருக்கும். இனி வரும் காலங்களில், தேசம் முழுக்க மதச்சார்பற்ற சக்திகள் வலிமை பெற வேண்டியதின் அவசியத்தைத்தான் அவர் எடுத்துரைத்திருப்பார்.

2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுகவால் ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்டாலும், தமிழக சட்டமன்ற வரலாற்றில் அதுவரையில் இல்லாத அளவுக்கு எண்ணிக்கை அடிப்படையில் வலிமையான எதிர்க்கட்சியாக 89 இடங்களை திமுக பெற்றிருந்தது.

அப்போதும்கூட ஒரே ஒரு கம்யூனிஸ்டு எம்எல்ஏ கூட இல்லாத சட்டமன்றமாக இது அமைந்துவிட்டதே என்றுதான் கலைஞர் கவலை கொண்டார்.

கலைஞரைப் பொறுத்தவரை அரசியலிலும் சரி, தனிப்பட்ட வாழ்விலும் சரி, ஒற்றுமையே வெற்றியைத் தேடித்தரும் என்பதில் பெரும் நம்பிக்கை கொண்டவர். வலியோர், எளியோரை மதிக்க வேண்டும் என்கிற பண்பு நிறைந்தவர்.

இந்திய ஜனநாயகத்தில் ‘எண்ணிக்கை’க்குத்தான் முக்கியத்துவம். கலைஞரோ எண்ணிக்கையைவிட எண்ணத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசியல் செய்தவர். தமக்கு எதிரணியில் நின்றவர்களைக்கூட அவர்களின் கொள்கைப் பிடிப்பு காரணமாக மரியாதைக்குரிய இடத்தில் வைத்திருந்தவர்.

அவருடைய எண்பது ஆண்டு கால பொதுவாழ்வில் எவரையும் அவர் எதிரியாகக் கருதியதில்லை. எதிர்நிலையில் இருக்கிறார்கள் என்று மட்டுமே நினைப்பார்.

முதன்முறையாக குளித்தலை சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று இளம் எதிர்க்கட்சி எம்எல்ஏவாக சட்டமன்றத்தையே கலைஞர் அதிரச் செய்து

கொண்டிருந்தபோது, தமிழகத்தின் நிதியமைச்சராக இருந்தவர் சி.சுப்பிரமணியம். அப்போது காமராஜர் தலைமையிலான அமைச்சர்கள், சட்டமன்றத்தில் கலைஞரின் வாயில் விழுந்துவிடக் கூடாதே என்று அஞ்சுமளவுக்கு அவரது உரைவீச்சு வாள்முனையின் கூர்மைக்கு ஒப்பானதாக இருந்து வந்தது.

நிதியமைச்சர் என்கிற வகையில் சி.சுப்பிரமணியம், அடிக்கடி கலைஞரால் தாக்குதலுக்கு உள்ளாவது வழக்கம். பின்னாளில் திமுக ஆட்சிக்கு வந்து கலைஞர், பொதுப்பணித்துறை அமைச்சராக அண்ணா அரசில் பொறுப்பேற்றார். அதன் பிறகு முதலமைச்சராக ஐந்து முறை பணியாற்றினார். மிகச்சிறந்த நிர்வாகியாக நாடு முழுக்க பெயர் எடுத்தார்.

எனினும், நிர்வாகத்தில் தன்னுடைய குரு என்று தன்னால் அதிகமுறை சட்டமன்றத்தில் தாக்குதலுக்கு உள்ளான சி.சுப்பிரமணியத்தின் பெயரைத்தான் கலைஞர் குறிப்பிடுவார்!எதிர்க்கட்சி உறுப்பினராக தன்னுடைய தர்மத்தை கலைஞர் மேற்கொண்டார். அதற்காக அவர் சி.சுப்பிரமணியத்தை

எதிரியாகக் கருதியதில்லை. மனசுக்குள் மானசீகமாக குரு என்கிற நிலையில் வைத்துத்தான் மரியாதை செய்திருக்கிறார்.அரசியலில் கலைஞருடைய பல நிலைப்பாடுகள், அடுத்தடுத்த நகர்வுகளில் கடுமையான முரண்பாடாகத் தெரியும்.

ஆனால் -

நீண்டகால நோக்கில் பார்க்கப் போனால், அது திமுகவின் நன்மையை உத்தேசித்த முடிவாகவே இருந்திருக்கும். தனிப்பட்ட முறையில் தன்னுடைய பெயரும், இடமும் விமர்சிக்கப்படுவதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. இயக்கத்தின் இருப்பு குறித்த ஓர்மையோடுதான் ஒவ்வொரு அரசியல் முடிவையும் எடுத்திருக்கிறார்.
அண்ணாவின் தம்பியல்லவா? சுவர் இருந்தால்தான் சித்திரம் என்பதை முழுமையாக உணர்ந்தவர்.‘இந்திராதான் இந்தியா’ முழக்கம் எழுந்த எழுபதுகளில், மத்திய ஆட்சியை அனுசரித்துப் போயிருந்தால் கலைஞர் தன் பதவியைத் தக்கவைத்துக் கொண்டிருக்க முடியும்.

ஆனால், பதவியைப் பற்றி கவலைப்படாமல் இந்திராகாந்தி ஆட்சியின் எமர்ஜென்ஸியை எதிர்த்து தீரத்தோடு போராடினார். ஆட்சியை இழந்தார். குடும்பத்தினர், கட்சியினர் அத்தனை பேரும் சிறைப்பட்டு, சித்திரவதைப் படுத்தப்பட்டபோதும் தனிமனிதராக ‘முரசொலி’ என்கிற எழுத்து ஆயுதம் கொண்டு அடக்குமுறையைக் கடுமையாக எதிர்த்தார்.

அரசியல் சூழல் மாறியபோது பழைய எமர்ஜென்ஸி விரோதத்தை அவர் இந்திராகாந்தி மீது காட்டியதில்லை. ‘நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக’ என்று அழைத்து, தமிழகத்தில் பெருவாரியான வெற்றியை காங்கிரஸ் பெறுவதற்குக் காரணமாக இருந்தார். எமர்ஜென்ஸியின்போது சேதாரமான திமுகவின் கட்டமைப்பை சீர்படுத்துவதற்கும் அந்த பாராளுமன்ற வெற்றி கலைஞருக்கு உதவியது.

“எதிர்த்தாலும் சரி, ஆதரித்தாலும் சரி, இரண்டிலுமே முழுத் தீவிரமாக இருப்பார் கலைஞர்...” என்று அவரது அரசியலுக்கு சான்றிதழ் வழங்கினார் இந்திராகாந்தி. அந்தக் கூட்டணி முடிவினால் தனிப்பட்ட முறையில் கலைஞர் பலவாறாக விமர்சிக்கப்பட்டாலும், தான் சார்ந்த இயக்கத்தின் நலன் மட்டுமே அவரது முடிவுக்குக் காரணமாக அமைந்தது.

தன் மீது பல திசைகளிலிருந்தும் பாயும் விமர்சனக் கணைகளைப் பொருட்படுத்தாமல் திமுகவின் எதிர்காலத்தை மட்டுமே உத்தேசித்து அவர் எடுத்த முடிவுகளினால்தான் உலகளவிலேயே இல்லாத அதிசயமாக ஒரு பிராந்திய அரசியல் இயக்கம், எழுபது ஆண்டுகளைக் கடந்தும் மக்கள் செல்வாக்குள்ள வலிமையான அமைப்பாக இன்றும் செயல்பட முடிகிறது.

இடைப்பட்ட இந்தக் காலத்தில் கட்சியில் எத்தனையோ பிளவுகள்; எவ்வளவோ தலைவர்கள் பிரிந்து சென்றிருக்கிறார்கள்.

இருந்தும், திமுகவுக்குப் பிறகு தொடங்கப்பட்டு ஒரு காலத்தில் பிரபலமாக வலிமையாக இருந்த பல இயக்கங்களின் பெயர் கூட இன்று யாருக்கும் நினைவில் இல்லை. தனிப்பட்ட விரோதம் பாராமல் அனைவரையும் ஒருங்கிணைத்து, தேர்தலை பதவிக்கான பாதையாக மட்டும் கருதாமல், இயக்கத்தின் எதிர்காலத்தை ஒட்டியே முடிவுகளை எடுக்கும் கலைஞரின் தலைமைப் பண்புதான் திமுகவின் நீண்டகால இருப்புக்கு முழுமுதற் காரணம்.

தன் சுயலாபத்துக்காக, தான் சார்ந்த இயக்கத்தை எந்நாளும் அவர் விட்டுக் கொடுத்தவரில்லை என்பதே கலைஞரின் சிறப்புகளுக்கு எல்லாம் சிறப்பு.

சிறுவயதிலேயே அவருக்கு இந்தப் பண்பு இயல்பாக இருந்திருக்கிறது. அதுவே பின்னாளில் அரசியலுக்கும் உதவியிருக்கிறது.
டீன் ஏஜில் இருந்தபோது திருவாரூரில் கலைஞர், சீர்திருத்தச் சங்கம் என்கிற இளைஞர் அமைப்பை நிறுவி நடத்திக் கொண்டிருந்தார். சங்கத்தில் ஏதோ சலசலப்பு. கலைஞரின் நண்பராக இருந்த தியாகராஜன் என்பவர் சங்கத்தை உடைத்தார். ‘இளைஞர் சங்கம்’ என்கிற பெயரில் புதிய சங்கத்தைத் துவக்கினார்.

ஊரில் சீர்திருத்தச் சங்கமும், இளைஞர் சங்கமும் கருத்துரீதியில் மட்டுமில்லாமல், களரீதியிலும் அவ்வப்போது மோதிக்கொண்டார்கள். எது உண்மையான சங்கம் என்பதை முடிவு செய்ய தேர்தல் நடத்தலாம் என்று ஊர் முக்கியஸ்தர்களின் ஏற்பாட்டுக்கு இருதரப்பும் ஒப்புக் கொண்டார்கள்.

தேர்தல் என்று வந்துவிட்டால் கலைஞர் சிங்கம் அல்லவா?பிரசாரம், பொதுக்கூட்டம், தேர்தல் நிதி, நிதி திரட்ட கலைநிகழ்ச்சிகள் என்று அட்டகாசப்படுத்தினார்.

இவர்களை எதிர்கொள்ள எதிர்த்தரப்பும் ஒரு நாடகம் போட்டு நிதி திரட்ட முற்பட்டார்கள். நாடகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு, நுழைவுச் சீட்டுகளையும் விற்றுவிட்டார்கள். கடைசி நேரத்தில் நாடகத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடிக்க வேண்டிய நடிகர் ஒருவர் மாயமாகி விட்டார். நாடகத்தை நடத்தாவிட்டால் நுழைவுச்சீட்டை காசு கொடுத்து வாங்கிய ரசிகர்கள் ஒருவழியாக்கி விடுவார்கள்.

தியாகராஜனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் என்று முடிவெடுத்தார். ஏனெனில், மாயமாகிவிட்ட நடிகரின் கதாபாத்திரத்தை நடிக்க முடிந்த ஒரே நடிகர் அப்போது கலைஞர்தான்! அவருக்குத்தான் வசனங்களும், காட்சியும் மனப்பாடமாகத் தெரியும்.தயங்கித் தயங்கி கலைஞரை அணுகினார்.

இதற்குத்தானே அவரும் காத்திருந்தார்?

“தியாகராஜா, நடிப்பதில் எனக்கு சம்மதமே. அது என் கடமையும்கூட. ஆனால், இந்த நாடகத்தை நான் சார்ந்திருக்கும் சீர்திருத்தச் சங்கத்துக்கு எதிராக நடத்துகிறாய். அதில் நான் சம்பளம் வாங்கிக்கொண்டு நடிப்பதாக இருந்தால் அது என்னுடைய சங்கத்துக்கு எதிராக நான் செயல்படுவதற்கு ஒப்பாகும்...” என்று நிறுத்திவிட்டு தியாகராஜனைப் பார்த்தார்.

தியாகராஜனோ பரிதாபமாக, “நான் என்னதான் செய்யவேண்டும் என்பதையும் நீயே சொல்லிவிடு...” என்றார்.“நாடகம் தொடங்குவதற்கு முன்பாக, சீர்திருத்தச் சங்கத்தில், இளைஞர் சங்கம் இணைந்துவிட்டது என்று அறிவித்துவிடு! அப்போது நாம் ஒரே சங்கமாகிவிடுவோம். நான் நடிப்பது குறித்து யாரும் ஆட்சேபிக்க முடியாது. எனக்கும் தயக்கம் இருக்காது!” என்று கிடுக்கிப்பிடி போட்டார்.

தனிப்பட்ட முறையில் தன் பெயரைக் கெடுத்துக் கொள்வதைவிட சங்கத்தை இணைத்துவிட்டு நாடகத்தை நடத்தி, தப்பித்தால் போதும் என்கிற நிலையில் தியாகராஜனும் அவ்வாறே செய்தார்.

அப்போது கலைஞர் செய்த அதே சீர்திருத்தச் சங்க அரசியலைத்தான் காலம் முழுக்க செய்துவந்தார். தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதைத் தவிர்த்து, தன்னுடைய இயக்க நலனையே பிரதானமாக முன்வைத்தார். அரசியலில் அவர் மகத்தான வெற்றிகளைக் குவிக்க அவரது இயக்கம் காரணமாக இருந்தது. படுமோசமான தோல்விகளின்போது இயக்கமே அவருக்கு பாதுகாப்புக் கேடயமாக இருந்து, அடுத்த போருக்கு தயார் செய்தது.

தனிமனிதர்கள் தற்காலிகமானவர்கள். அமைப்பே நிரந்தரம்!

கலைஞர் கற்றுக் கொடுத்திருக்கும் இந்தப் பாடம், அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமானதும்தான். அமைப்பு என்கிற இடத்தில் குடும்பம், வீடு, தெரு, ஊர், சமுதாயம், நிறுவனம், மாநிலம், நாடு என்று அவரவருக்கான அமைப்பின் பெயரைப் போட்டு, அவரவருக்கான பாடமாக எடுத்துக் கொள்ளலாம்!



தந்தை வழியில் தனயன்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால், இப்போதைய சூழலில் முதல்வராகி இருக்க முடியாதா?

முடியும். முயற்சித்திருந்தால் ஜெயலலிதா மறைந்தபோதேகூட ஆகியிருப்பார்.அதற்காக நிறைய பின்வாசல்களை அவர் திறந்திருக்க வேண்டும். பின்வாசல் அரசியல் என்பது ராஜதந்திரமாக, அரசியல் தர்மமாக பார்க்கப்படும் இன்றைய சூழலில், அதை அவர் செய்திருந்தாலும் யாரும் தவறாக எடுத்துக் கொள்ளப்போவதில்லை.

பதவிக்கு வருவதுதான் முக்கியம். எந்த வழியாக வந்தார்கள் என்று யார் கவலைப்படப் போகிறார்கள்?
ஆனால் -

தான் முதல்வர் ஆவதைவிட, கலைஞருக்குப் பிறகு, தான் பொறுப்பேற்றிருக்கும் திமுக, மக்கள் செல்வாக்கோடு மாபெரும் வெற்றி பெறுவதையே ஸ்டாலின் விரும்பினார்.

கலைஞர் இல்லாமல் திமுக சந்தித்த முதல் தேர்தலில், கலைஞரின் உயிரான இயக்கம், நாடே திரும்பிப் பார்க்கும் மகத்தான வெற்றியைப் பெற்றிருப்பதையே கலைஞரின் இந்த ஆண்டு பிறந்தநாள் பரிசாக அவர் நினைவிடத்தில் சமர்ப்பித்திருக்கிறார் ஸ்டாலின்!தன்னைவிட தன்னுடைய இயக்கம்தான் முக்கியம் என்கிற தந்தை வழியிலேயே தனயனும் பயணப்படுவது திமுகவின் தொண்டர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

(நன்றி : குங்குமம்)

21 மே, 2019

திமுக vs விடுதலைப்புலிகள்

திமுக எப்படியோ அப்படியேதான் எனக்கு விடுதலைப்புலிகளும். திமுக மீது சில கசப்பான விமர்சனங்கள் இருப்பதைப் போலவே விடுதலைப்புலிகள் மீதும் உண்டு.

ஒருக்கட்டத்தில் திமுகவை மிகக்கடுமையாக வெறுக்குமளவுக்கு விடுதலைப்புலிகள் மீது அளவுக்கதிகமான நம்பிக்கையும், பாசமும் இருந்தன (ஆம், இருந்தன. past tense)

எனினும் -

திமுக தன்னுடைய அமைப்புப் பலத்தில், சித்தாந்தப் பின்புலத்தில் 70 ஆண்டுகளாக தொய்வின்றி வலிமையாக செயல்படும் பிராந்திய இயக்கமாக இருக்கிறது. திமுகவின் அரசியலுக்கு inclusiveness தன்மை உண்டு. காலத்திற்கேற்ப மாற்றங்களுக்கு தயாரான இயக்கம். இயக்கத்தை உயிர்ப்போடு வைத்திருக்க அவசியமான சமரசங்களுக்கு உடன்படும் கட்சி. அடிப்படைக் கொள்கையான பிராந்திய நலன் மட்டுமே அவ்வியக்கத்தை நீண்டகாலமாக செலுத்தும் சக்தி. இயக்கம் இல்லையேல் தங்கள் இலட்சியங்களை ஈடேற்றிக் கொள்ள களம் இருக்காது என்கிற யதார்த்தத்தை உணர்ந்த இயக்கம்.

விடுதலைப்புலிகளுக்கு அத்தகைய தன்மை குறைவு. சாகஸவாதத்தில் நம்பிக்கை வைத்திருந்த இயக்கமாகவே படுகிறது. மக்கள் ஆதரவு என்பதைவிட, போராளிகளின் வீரத்தின் மீதே அதிக சுமையை ஏற்றிவிட்டோம். 'பீலி யேற்றிய சகடமும் அச்சுமுறியும்’ என்றாகி விட்டது. இயக்கத்தின் இதயமாக விளங்கிய தமிழீழத் தேசியத் தலைவரின் வெற்றிடம், இயக்கத்தை மட்டுமின்றி அதன் நோக்கங்களையும் சூனியமாக்கி விட்டது. தொண்ணூறுகளின் இறுதியிலும், இரண்டாயிரங்களின் தொடக்கத்திலும் இயக்கத்துக்கு கிடைத்த leverage, மிதமிஞ்சிய தன்னம்பிக்கையால் வீணாகிவிட்டது.

இருப்பினும் -

என் வாழ்நாளின் கணிசமான நாட்களில் நான் பெருமிதமாக எண்ணி மகிழக்கூடிய தருணங்களை வழங்கிய இயக்கம் விடுதலைப்புலிகளே. இதே மாதிரியான பெருமிதத்தை நாற்பதுகளின் இறுதியிலும், ஐம்பதுகளின் தொடக்கங்களிலும் தமிழகத்தில் பிறந்தவர்களுக்கு திமுக கொடுத்திருக்கலாம்.

இன்று; திமுக vs விடுதலைப்புலிகள் என்கிற எதிர்நிலைப்பாடுகள் இணையத்தளங்களில் புலம்பெயர் புலி ஆதரவாளர்களாலும், தமிழகத்தில் பிறந்த திமுக ஆதரவாளர்களாலும் எடுக்கப்படுவது அபத்தமானது. புலிகள் இல்லாத நிலையில் புலி ஆதரவு என்பது பணம் கொழிக்கும் தொழிலாக 2009க்கு பிறகு மாறிவிட்ட கொடுமையான சூழலில், தங்கள் சுயநலத்துக்கு திமுகவை வில்லனாக சுட்டும் துரோகிகளால் உருவாகியிருக்கும் நிலை இது. தங்கள் தலைவர்களும், இயக்கமும் அபாண்டமாக அவதூறு செய்யப்படும் நிலையில், அதற்கு நிஜமான காரணகர்த்தாக்களை சாடுவதை விட்டுவிட்டு, களத்திலேயே இல்லாத புலிகள் மீது பாய்வதும், அவர்களது வீரவரலாறு திமுகவினரால் கொச்சைப்படுத்தப்படுவதும் துரதிருஷ்டவசமானது.

உண்மையைச் சொல்லப்போனால் எண்ணற்ற துரோகிகள் தங்கள் தவறுகளை மறைக்கவே நிஜத்தில் இல்லாத ஒரு முரண்பாடாக ‘திமுக vs விடுதலைப்புலிகள்’ என்கிற conspiracy theoryயை உருவாக்கி, குளிர் காய்கிறார்கள். விடுதலைப்புலிகளுக்காக வெளிநாடுகளில் திரட்டப்பட்ட பெரும் பணத்தை பங்கு போட்டுக் கொள்வதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட, நடத்தப்படும் நாடகமே இது.

திமுகவைப் பொறுத்தவரை ஈழத்தில் தமிழர்கள் ஒற்றுமையான சூழலில் தமிழீழம் பெறக்கூடிய அரசியல் நிலைப்பாட்டை ஆதரித்தது. எண்பதுகளின் மத்தியில் அவர்களுக்குள் உருவான முரண்பாடுகளை சங்கடத்தோடு பார்த்தது. ‘சகோதர யுத்தம் வேண்டாம்’ என்று கேட்டுக் கொண்டது. திமுக எதை உத்தேசித்து எண்பதுகளில் கவலைப்பட்டதோ அதுவே கிட்டத்தட்ட 25 ஆண்டு காலம் கழித்து 2009ல் நடந்தது. 60களின் தொடக்கத்தில் ‘சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்’ என்கிற நிலைப்பாட்டை திமுக எடுத்திருக்கவில்லையென்றால், தமிழகத்துக்கும் எமர்ஜென்ஸியின்போது அதுவே நடந்திருக்கும்.

விடுதலைப்புலிகள் இன்று இல்லாத சூழலில் தமிழீழம் என்பது பகற்கனவே. இருக்கட்டுமே? என்றோ ஒருநாள் தமிழர்களுக்கென்று ஒரு நாடு உருவாக இந்த கனவு மட்டுமாவது மிஞ்சியிருக்கட்டும். வரலாற்றிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன. வம்புச்சண்டைகளால் அந்த வாய்ப்பை இழந்துவிடக்கூடாது.

30 ஏப்ரல், 2019

ஊருக்குதான் உபதேசமா?

ரத்தன் டாட்டாவை தெரியாதவர்கள், இந்தியாவில் மிகவும் அரிதானவர்கள். டாட்டா என்பது இந்தியாவில் 150 வயது தொழில் சாம்ராஜ்ஜியம். இரும்பில் தொடங்கி உப்பு வரை அவர்கள் ஈடுபடாத தொழிலே இல்லை. அதன் தலைவராக இருந்த ரத்தன் டாட்டா வெறித்தனமான கார் பிரியர். பெராரி, மெர்சிடிஸ் பென்ஸ், லேண்ட்ரோவர், கேடிலாக், கிறிஸ்லெர் என்று அவரது காரேஜில் இல்லாத அயல்நாட்டு கார்வகைகளே இல்லை.

இருப்பினும் –

முக்கியமான நிகழ்வுகளுக்கு அவரது டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான ‘டாட்டா நிக்ஸான்’ காரில்தான் ஜம்மென்று வந்து இறங்குவார். அது மட்டுமின்றி தன்னுடைய குழுமத்தைச் சார்ந்தவர்களும் டாட்டா நிறுவனத்தின் தயாரிப்புகளைதான் பயன்படுத்துகிறார்களா என்று கவனிப்பார்.

அவ்வளவு ஏன்?

ரத்தன் டாட்டா, கார் பிரியர் மட்டுமல்ல. நாய் பிரியரும் கூட. தன்னுடைய செல்லப் பிராணிகள் குதூகலமாக பயணிப்பதற்காகவே ஒரு கார் வைத்திருக்கிறார். நாய்கள் வசதியாக அமருவதற்கு ஏதுவாக அதில் இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதுவும் டாட்டா தயாரிப்பான ‘இண்டிகோ மரீனா’ கார்தான்.

இதற்குப் பெயர் எளிமை அல்ல. Brand Promotion. தன்னுடைய brandஐ தானே நம்பிப் பயன்படுத்தவில்லை எனில், வாடிக்கையாளர்களை எப்படி திருப்திப்படுத்த முடியும் என்கிற நியாயமான கவலையும் அவருக்கு உண்டு.

ரத்தன் டாட்டா ஒரு பக்கம் இருக்கட்டும்.

Brand Loyaltyக்கு வருவோம்.

ஒரு பொருளை வாங்கும் போதோ, ஒரு சேவையை பயன்படுத்தும் போதோ ஒரு குறிப்பிட்ட நிறுவனம் தயாரித்த பொருளைதான் வாங்குவேன் / சேவையைதான் பயன்படுத்துவேன் என்று ஒரு வாடிக்கையாளர் தீர்க்கமான முடிவெடுத்து வைத்திருப்பதைதான் brand loyalty என்று விளம்பரத்துறை மொழியில் குறிப்பிடுகிறார்கள்.

அத்தகைய விசுவாசத்தை வாடிக்கையாளர்களுக்கு உருவாக்குவதற்குதான் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் விளம்பரம் செய்கிறார்கள். உங்கள் கண்ணில் படும் இடங்களிலெல்லாம் அவர்களது brand nameஐ நினைவுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள், ஏனைய துறை பிரபலங்கள் ஏதாவது ஒரு தயாரிப்பையோ, சேவையையோ பயன்படுத்தும்படி பத்திரிகை மற்றும் டிவி விளம்பரங்களில் உங்களை வற்புறுத்திக் கொண்டே வருகிறார்கள்.

ஒரு நிறுவனம் நீண்டகாலமாக தொழில் செய்ய வேண்டுமெனில் தன்னுடைய வாடிக்கையாளர்களிடையே தன்னுடைய தயாரிப்பு குறித்த brand loyalty-ஐ உருவாக்கியே ஆகவேண்டும். நீங்கள் நீண்டகாலமாக ‘குங்குமம்’ வாசிக்கிறீர்கள் எனில், எங்கள் இதழ் மீது உங்களுக்கு இருக்கக்கூடிய brand loyalty-க்கு இச்சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

அடுத்து, விஷயத்துக்கு வருவோம்.

வெறுமனே ஒரு தயாரிப்பின் அருமை, பெருமைகளை பற்றி எடுத்துச் சொல்லி மட்டுமே ஒரு வாடிக்கையாளரை, விசுவாசியாக எந்த நிறுவனத்தாலும் மாற்றிவிட முடியாது.

இங்குதான் brand ambassador-களின் தேவை ஏற்படுகிறது. இப்போது நீங்கள் ‘லக்ஸ்’ சோப் பயன்படுத்துபவர் என்றால், அந்த சோப்பை விளம்பரங்களில் ஐஸ்வர்யா ராயோ, கரீனா கபூரோ, கத்ரினா கைஃபோ உங்களுக்கு பரிந்துரைத்திருப்பார் இல்லையா? அவர்தான் ‘லக்ஸ்’ சோப்பின் brand ambassador.

வணிகப் பொருட்களை / சேவைகளை விற்பதற்காக நியமிக்கப்படும் brand ambassador-களுக்கு சம்மந்தப்பட்ட நிறுவனங்கள், தங்கள் விளம்பரங்களில் தோன்றுவதற்காக பெரும் பணம் வழங்குவது உண்டு. தங்கள் நிறுவனத்துக்கு இத்தனை ஆண்டுகள் தூதராக இருக்க வேண்டுமென்று முன்கூட்டியே ஒப்பந்தங்களும் போட்டுக் கொள்வது உண்டு.

‘என்னுடைய ஆற்றலுக்கு இந்த பானம்தான் காரணம்’ என்று டிவியில் சிரித்தவாறே சொல்லும் விளையாட்டு வீரர், அந்த பானத்தைதான் அருந்துகிறாரா என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. ஆனால், அவர் நமக்குப் பிடித்தமானவர் என்றால் அவர் பரிந்துரைக்கும் brand, நம்மை அறியாமலேயே நம்முடைய மனதுக்குள் நிரந்தர இடம் போட்டு அமர்ந்து விடுகிறது.

அதாவது நமக்குப் பிடித்த சினிமா நடிகர், நடிகை மற்றும் விளையாட்டு வீரர்கள் பரிந்துரைக்கும் brand-க்கு நம்மையறியாமலேயே நாம் brand loyalty கொண்டவர்களாக மாறிவிடுகிறோம்.

அப்படியெனில், நமக்கு பரிந்துரைப்பவர்கள் எவ்வளவு பொறுப்பாக இருக்க வேண்டும்? வெறுமனே காசுக்காகவோ, புகழுக்காகவோ ஒரு தப்பான தயாரிப்பையோ / சேவையையோ முன்னிறுத்தி அவர்கள் விளம்பரங்களில் நடிக்கக்கூடாதுதானே?

இது விளம்பரத்துறையின் அடிப்படை அறம் (basic ethics).

வணிகத் தயாரிப்பு / சேவைகளை விட்டுத் தள்ளுங்கள்.

விழிப்புணர்வு விளம்பரங்களுக்கு வருவோம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஆரம்பக் காலங்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய விளம்பரங்களில் மட்டுமே இதுவரை தோன்றியிருக்கிறார். ஒருக்கட்டத்தில் விளம்பரங்களில் நடிப்பதற்காக தன்னை யாரும் அணுகவேண்டாம் என்று வெளிப்படையாகவே அறிவித்து விட்டார்.

அப்படிப்பட்டவர், ஒரு விளம்பரத்தில் தோன்றி, அது மக்கள் மத்தியில் பிரபலமாகி, அவரால் பெரும் விழிப்புணர்வு நம் தமிழகத்தில் ஏற்பட்டது.

ஆம்.

போலியோ தடுப்புக்காக சொட்டு மருந்து போடச்சொல்லிய ஒரு விழிப்புணர்வு விளம்பரத்தில், தன்னுடைய தனிப்பட்ட விளம்பரக் கொள்கையை தவிர்த்துவிட்டு தோன்றினார் ரஜினிகாந்த்.

ரஜினி சொன்னதாலேயே, சொட்டு மருந்து குறித்து தயக்கம் கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பாமரர்கள், தங்கள் குழந்தைக்கு சொட்டு மருந்து போடுவதற்கு கூட்டம் கூட்டமாக முன்வந்தனர். ஆச்சரியகரமான வகையில் தமிழகமெங்கும் போலியோ குறித்த விழிப்புணர்வு எல்லாத் தரப்புக்கும் வேகமாக பரவியது.

இந்த விழிப்புணர்வு விளம்பரத்துக்காக ரஜினி, வெகுமதி எதுவும் பெறவில்லை. தன்னை ஆளாக்கிய சமூகத்துக்கு நன்றிக்கடனாக செய்துக் கொடுத்தார்.

பொதுவாக லாபம்சாரா சேவைப்பணிகளுக்காக பிரபலங்கள் இதுபோன்ற விளம்பரங்களில் பங்கேற்கும்போது, அதை தங்களுடைய சமூகக்கடமைகளில் ஒன்றாகக் கருதியே செய்துத் தருகிறார்கள்.

ரஜினியைப் போலவே கமல்ஹாசன், வருமானவரித்துறை விளம்பரங்களில் தோன்றி வருமானவரி கட்ட வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தி இருக்கிறார். வரி கட்டாத பணம், கருப்புப் பணமாகி விடும் என்று அந்த விளம்பரங்களில் எச்சரித்திருக்கிறார்.

மக்களுக்கு விழிப்புணர்வுத் தூதர்களாக பணியாற்றிய இந்த இருவரை மட்டுமே எடுத்துக் கொள்வோம்.

ஒருவேளை ரஜினி தன் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்காமல் இருந்திருந்தால், கமல்ஹாசன் முறையாக வருமானவரி கணக்கு காட்டாமல் இருந்திருந்தால்.. மற்றவர்களுக்கு டிவியில் தோன்றி உபதேசம் செய்யும் தகுதி அவர்களுக்கு இருந்திருக்குமா?

இல்லைதானே?

அதேதான். தாங்கள் பரிந்துரைக்கும் ஒரு விஷயத்துக்கு விசுவாசமாக பிரபலங்கள் நடந்துக் கொள்வதும் brand loyaltyதான். இப்போது ரத்தன்சிங் டாட்டா, தன்னுடைய சொந்தத் தயாரிப்பு கார்களை பயன்படுத்துவதின் நியாயம் புரியவந்திருக்குமே?

சில நேரங்களில் பிரபலங்கள், தங்களுடைய இந்தக் கடமையிலிருந்து விலகி விட நேர்வதுதான் அவலம்.

சிகரெட் குடிக்கும் ஒருவரே, சிகரெட் பிடிக்காதீர் என்று விளம்பரங்களில் தோன்றி உபதேசம் செய்தால் சரியாக இருக்குமா?

இப்போது கிரிக்கெட் வீரர், ராகுல் டிராவிட்டை எடுத்துக் கொள்வோம்.

‘அனைவரும் வாக்களிக்க வேண்டும்’ என்று டிவியிலும், பத்திரிகையிலும், இண்டர்நெட்டிலும் தேர்தல் கமிஷன் சார்பாக விளம்பரத் தூதராக பணியாற்றிக் கொண்டிருப்பவர் இந்தியாவின் கிரிக்கெட் பெரும் சுவர் என்று வர்ணிக்கப்படும் பிரபல கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்.

ஜனநாயகக் கடமையை பல கோடி பேருக்கு நினைவுறுத்தும் தூதராக அவர் இருப்பதற்கு காரணம் அவரது பிரபலம்தான்.

அப்படிப்பட்டவரே, இந்த பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்பதுதான் வேதனை.

தன்னுடைய வீட்டை மாற்றும்போது பழைய முகவரியில் இருந்த தன் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து படிவம் கொடுத்து நீக்கியுள்ளார்.

ஆனால் –

புதிய முகவரியில் தன்னுடைய பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் படிவத்தை அவர் பூர்த்தி செய்துத் தராததால், வாக்களியுங்கள் என்று இந்தியாவுக்கே பாடம் நடத்தும் ராகுல்திராவிட்டால் வாக்களிக்க முடியவில்லை.

இதைதான் ஊருக்கு உபதேசம் என்பது.

சொல்லைவிட செயல்தான் முக்கியம் இல்லையா?

(நன்றி : குங்குமம்)

26 ஏப்ரல், 2019

காமிக்ஸாக ‘மெகா’பாரதம்!

“இந்தக்கால குழந்தைகளுக்கு ஸ்கூல்புக் தவிர வேறெந்த வாசிப்புமே வெளியிலே இல்லை. எப்போ பார்த்தாலும் டிவி, கம்ப்யூட்டர், மொபைல்கேம்ஸ்...” என்று அலுத்துக் கொள்ளும் பெற்றோரா நீங்கள்?

உங்கள் குழந்தைகளுக்கு இந்த கோடைவிடுமுறையில் மகாபாரதத்தை அறிமுகப்படுத்துங்கள். அதுவும் அவர்களுக்கு பிடித்த காமிக்ஸ் வடிவத்தில்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் தனித்தனி புத்தகங்களாக அமர்சித்திரக்கதைகளாக வாசித்த அதே மகாபாரதம்தான். இப்போது முழுத்தொகுப்பாக மூன்று வால்யூம்களில் 1,312 பக்கங்களில் ஏ4 அளவில் பிரும்மாண்டமாக வெளிவந்திருக்கிறது. வெளியிட்டிருப்பவர்கள் அதே அமர் சித்திரக்கதை நிறுவனத்தினர்தான்.

உலகின் மிகப்பழமையான இதிகாசங்களில் ஒன்று மகாபாரதம். வியாசர் சொல்ல, விநாயகரே எழுதினார் என்பது நம்பிக்கை. அதற்காக இதை மதம் சார்ந்த பிரதியாக மட்டும் அணுக வேண்டியதில்லை. பண்டைய இந்திய பண்பாடு, தத்துவங்கள் குறித்த அறிமுகத்துக்கு இராமாயணமும், மகாபாரதமும் வாசிப்பதை தவிர்த்து வேறெந்த வழியுமில்லை. மேலும் இவற்றில் இடம்பெற்றிருக்கும் கதாபாத்திரங்களின் சித்தரிப்பு, சம்பவங்கள் ஆகியவை வாசிப்பவரின் படைப்புத்திறனை மேலும் கூர் தீட்டவும் செய்யும்.
குழந்தைகளுக்கு ஏன் மகாபாரதம்?

ஏனெனில், குடும்பம் மற்றும் நட்பின் முக்கியத்துவத்தையும், மதிப்பையும் அவர்கள் மகாபாரதம் வாசிப்பதின் மூலமாக உணரமுடியும். மனிதன் என்பவன் ஒரு சமூகவிலங்கு. சமூகத்தின் நெறிமுறைகளோடு அவன் ஒத்து வாழவேண்டியதின் அவசியத்தை மகாபாரதம் எடுத்துக் காட்டும். இந்த வாசிப்பு பிற்காலத்தில் உங்கள் குழந்தைகளின் வாழ்க்கைக்கு வழிகாட்டுவதாக அமையும்.

உங்கள் குழந்தை, ‘மகாபாரதம்’ வாசித்தால் கீழ்க்கண்ட சில தெளிவுகளை பெறலாம்.

* பொறாமைதான் துன்பங்களுக்கு அடிப்படை காரணம். கவுரவர்களின் தாயார் காந்தாரியின் கதை இந்த அடிப்படை உண்மையை அழகாக எடுத்துக்கூறும்.

* அர்த்தமற்ற வெறுப்பு என்பது எதிரிகளைதான் உருவாக்கும். மேலும் ஒரு தனிமனிதனின் மகிழ்ச்சியை மொத்தமாகவே இந்த வெறுப்பு பறித்துவிடும். பாண்டவர்கள் மீது கவுரவர்கள் காட்டிய வெறுப்பின் மூலமாக இதை உணரலாம். இறுதியில் பாண்டவர்களால் குருவம்சமே அழிந்ததுதான் மிச்சம். யார் மீதும் எதற்காகவும் தேவையின்று வெறுப்பு கொள்ளக்கூடாது என்பதே மகாபாரதம் நமக்கு நடத்தும் பாடம்.

* நல்ல நண்பனை தேர்ந்தெடுப்பது வாழ்வில் மிகவும் முக்கியம். கர்ணன் மாவீரனாக இருந்தும், நல்ல மனிதாக இருந்தும் துரியோதனின் நட்பு அவனது வீழ்ச்சிக்கு காரணமானது. நட்பை தேர்ந்தெடுப்பதில் நாம் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.

* எல்லாவற்றுக்கும் மேலான சக்தியை (ஆத்திகர்களுக்கு கடவுள், நாத்திகர்களுக்கு இயற்கை) நாம் உணர்ந்து, நம்பிக்கையோடு பின்பற்றினால் வெற்றி நிச்சயம். அர்ஜூனன் தன் வில்லாற்றலைவிட கிருஷ்ணனை நம்பினான். போரில் வென்றான்.
* வாழ்க்கையின் முக்கியமான ஒரு சந்தர்ப்பத்தில் தவறான முடிவை எடுத்துவிட்டால், அதன் பாதிப்பு வாழ்க்கை முழுக்கவே தொடரும். குந்தியின் வாழ்க்கையிலிருந்து இதை நாம் அறியலாம். அவரது மூத்த மகன் கர்ணனின் பிறப்பை மறைத்ததால், அவர் அடைந்த துயரங்கள் எண்ணிலடங்காதவை. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உண்மையை மறைக்கக்கூடாது என்கிற எண்ணத்தை குந்தியின் வாழ்க்கையிலிருந்து நாம் அறியலாம்.

* எந்தவொரு பெண்ணையுமே அவமதிக்கக்கூடாது. அதுவே நம்முடைய வீழ்ச்சிக்கு பிரதானமான காரணமாகிவிடும். பாஞ்சாலியை அரசவையில் அவமதித்த துஷ்யந்தன், நமக்கு இதைதான் உணர்த்துகிறான்.

* எந்தவொரு அபாயகரமான பழக்க வழக்கத்துக்கும் நாம் அடிமையாகிவிடக் கூடாது. சூது விளையாட்டுக்கு அடிமையாகிவிட்ட தர்மரின் கதை இதை நமக்கு அழுத்தமாக சொல்கிறது.

வாட்ஸப் தலைமுறையில் வாழும் இன்றைய குழந்தைகளுக்கு நம்முடைய இதிகாசங்களில் சுவையான சம்பவங்களோடு விவரித்துச் சொல்லப்பட்டிருக்கும் இம்மாதிரியான கருத்துகள் மிகவும் அவசியம். மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு என்னென்ன பண்புகள் இருக்க வேண்டும் என்பதை மகாபாரதம் சொல்கிறது. குழந்தைகளை கவரக்கூடிய வகையிலான எளிமையான கதைத்தொகுப்புகளாக உருவாக்கப்பட்டிருப்பதே மகாபாரதத்தின் பெரும் சிறப்பு.
“குழந்தைகள் மட்டுமல்ல. பெரியவர்களுக்கும் நாங்கள் வெளியிட்டிருக்கும் ‘மகாபாரதம்’ மிகவும் பிடிக்கும். எண்பதுகளில் தனித்தனியாக 42 நூல்களாக வெளியிடப்பட்ட இந்தக் கதைகள், தொண்ணூறுகளில் ஆங்கிலத்தில் தொகுக்கப்பட்டு வெளியாகி பல்லாயிரக்கணக்கில் விற்றன. அப்போதே கூட தமிழில் தனித்தனி புத்தகங்களாக வந்துவிட்டாலும், மொத்தத் தொகுப்பாக வரவில்லையே என்கிற குறை ஏராளமானோருக்கு இருந்தது.

அப்போது குழந்தைகளாக தனிநூல்களாக வாசித்தவர்கள், நீண்டகாலமாக எங்களிடம் ‘மகாபாரதம்’ காமிக்ஸ் முழுத்தொகுப்பு எப்போது வருமென்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். தாங்கள் வாசித்து சிலிர்த்த மகாபாரதத்தை தங்கள் குழந்தைகளுக்கு வாசிக்கக் கொடுக்க வேண்டும் என்பது அவர்கள் விருப்பம். அவர்களது விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலேயே இப்போது இந்த பெரும் தொகுப்பை,  முழு வண்ணம், ஹார்ட்பவுண்ட் அட்டையில் சர்வதேசத் தரத்தில் மிகவும் மலிவான விலையில் கொண்டு வந்திருக்கிறோம்.
வாசகர்களிடம் பிரமாதமான வரவேற்பை பெற்றிருக்கிறது. தொடர்ந்து இதேபோல இராமாயணத்தையும் கொண்டுவரவேண்டும் என்று அனைவரும் கேட்கிறார்கள். அதையும் செய்வோம். எங்களால் நிறைய குழந்தைகள் தமிழில் நூல்கள் வாசிக்க முன்வருகிறார்கள் என்கிறபோது, இதையெல்லாம் செய்யவேண்டியது எங்கள் கடமையாகிறது” என்று உற்சாகமாக சொல்கிறார் அமர் சித்திரக் கதையின் மண்டல விற்பனை மேலாளர் நாகராஜ்.

மகாபாரதம், நம் முன்னோர் வழிவழியாக கடத்தி நமக்குக் கொண்டுச்சேர்ந்த அறிவுச்செல்வம். அதை அடுத்த தலைமுறைக்கும் அறிமுகப்படுத்துவோமே?

(நன்றி : தினகரன் வசந்தம்)

8 மார்ச், 2019

பெண்ணியம் : ஒரு கட்டிங்!

பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் ‘பெண்ணியம்’ (feminism) என்கிற சொல்லே உருவாகிறது. ஆரம்பக் கட்டத்தில் பெண்ணியம் பேசியவர்கள் 99 சதவிகிதம் ஆண்களே. Feminism என்கிற வார்த்தையை முதன்முதலாக உருவாக்கியவருமே கூட பிரெஞ்சு சிந்தனையாளரான ஓர் ஆண்தான்.

நாடுகள் குடியரசாக ஆகிக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் தங்களுக்கு வாக்குரிமை கேட்டு பெண்கள் போராடியதே பரந்துப்பட்ட சமூக அளவில் முதல் பெண்ணிய உரிமைக்குரல் எனலாம். இது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி மற்றும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கநிலை.

உலகப்போர்கள் நடந்துக் கொண்டிருந்தபோது போரில் ஈடுபட்டிருந்தவர்கள் பெரும்பாலும் ஆண்கள். அப்போது போரில் ஈடுபட்ட நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியை தீர்மானிக்கக்கூடிய சக்தியாக பெண்களே இருந்தார்கள். அதையடுத்து போர்களுக்குப் பின்னரான காலக்கட்டமான இருபதாம் நூற்றாண்டின் மத்தியில்தான் குடும்பத்தில் தொடங்கி சமூகம், நாடு, உலகம் என்று எல்லைகளை வரையறுக்காமல் ‘ஆணுக்குப் பெண் சமம்’ என்கிற குரல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது.

பெண்ணியம் என்பது குடும்பம், சமூகம், அரசியல் மற்றும் பொருளாதாரத் தளங்களில் ஆணுக்கு இணையான இடத்தை பெண்ணுக்கும் கோருவது என்பதாக புரிந்துக் கொள்ளலாம்.

தொண்ணூறுகளில் உலகமயமாக்கலுக்குப் பின்னான பெண்ணியச் சிந்தனைகள் வேறு புதிய பரிமாணங்களை எட்டியது. இதை வார்த்தைகளில் வரையறை செய்ய இயலாது. தங்கள் உடையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தில் தொடங்கிய, இந்த பெண்ணிய அலை இப்போது தங்கள் உடல் குறித்த அரசியலை விவாதிப்பதைக் கடந்து வேறு வேறு அதீத எல்லைகளை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது.

வரலாற்று அடிப்படையில் ‘இது நல்லது’, ‘இது கெட்டது’ என்றெல்லாம் நிகழ்வுகள் நடக்கக்கூட சமகாலத்தில் யாராலும் துல்லியமாக கூறிவிட முடியாது. எது நல்லது, எது கெட்டது என்பதையெல்லாம் எதிர்காலம் முடிவு செய்துக் கொள்ளட்டும்.

சரி, விஷயத்துக்கு வருவோம்.

கடந்த வாரம் ‘90 ml’ என்கிற பெண்ணியம் பேசும் திரைப்படம், தமிழகமெங்கும் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது.

’90 ml’ என்பது ‘குடி’மகன்களுக்கு கவர்ச்சிகரமான அளவு. மதுவிடுதிகளில் “ஒரு லார்ஜ், ஒரு ஸ்மால்” என்று ஆர்டர் கொடுப்பார்களே, அந்த அளவுதான் 90 ml. நம் டாஸ்மாக் கடைகளின் அளவீடுகளின் அடிப்படையில் சொல்ல வேண்டுமானால் ‘ஒரு கட்டிங்’.

சில ஆண்டுகளுக்கு முன்பு, ‘சரக்கு’க்காக ராத்திரி முழுக்க தெருத்தெருவாக அலையும் ஓர் ஆணின் கதை ‘வ - குவார்ட்டர் கட்டிங்’ என்கிற தலைப்பில் வெளியானது. அதே போல ஐந்து பெண்கள் கூடி சரக்கு போடும் படத்துக்கு ’90 ml’ என்று தலைப்பு வைத்திருப்பது பொருத்தமானதுதான்.

தொண்ணூறுகளுக்குப் பிறகான உலகமயமாக்கல் சூழலில் பெண்ணியம் என்ன பாடுபடுகிறது என்பதற்கு சரியான உதாரணம் காட்ட வேண்டுமானால் ’90 ml’ஐ காட்டலாம்.

‘ஆண் சரக்கு அடிக்கும்போது, நாங்கள் அடிக்கக் கூடாதா?’ என்று பெண்கள் கேட்டால் அது சம உரிமை கோருவது மாதிரியான நியாயமான கேள்வியாகதான் இருக்கக்கூடும்.

ஆனால் –

போதைப்பழக்கம் என்பது ஆண், பெண் இருபாலருக்குமே உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் தீங்கு விளைவிக்கும் என்பதே மருத்துவ உண்மை.

’90 ml’ படத்தில் ஐந்து பெண்கள் அவ்வப்போது சரக்கு அடிக்கிறார்கள். அந்த ஐந்துப் பெண்களில் தலைவி மாதிரி இருக்கும் ஓவியாவின் ஆண் நண்பர், சைட் டிஷ்ஷாக ஹாஃப்பாயில் போட்டுக் கொடுக்கிறார்.

இம்மாதிரி குடியும் குடித்தனமுமான கூட்டங்களில் ஓவியாவும், அவரது குழுவினரும் முழுக்க பேசிக்கொள்வது ‘டபுள் மீனிங்’ அல்ல ‘டைரக்ட் மீனிங்’ வசனங்கள். குறிப்பாக பெண்களின் உடல் அங்கங்கள் குறித்த கேலியான வருணனை, பேச்சுலர் ரூம்களில் நடபெறும் டிரிங்ஸ் பார்ட்டிகளின் எல்லையையே கூட மீறுகிறது.

பெண்கள் தனியாக பேசும்போது இப்படித்தான் பேசுவார்களா என்று இந்தக் கட்டுரையை எழுதும் ஆணுக்குத் தெரியாது. எனினும், அவ்வாறுதான் பேசுவார்கள் என்றால் பெண்களுக்குள்ளேயே ‘ஆணாதிக்கம்’ இருப்பதாகதான் எண்ண வேண்டியிருக்கிறது.

படத்தில் ஓரினச்சேர்க்கையில் ஆர்வம் கொண்ட லெஸ்பியன் தம்பதியினர் காட்டப்படுகிறார்கள். ‘ஓரினச்சேர்க்கை சட்டத்துக்கு விரோதமானது அல்ல’ என்கிற உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பை சுட்டிக்காட்டி இந்த பாத்திரங்கள் சித்தரிக்கப்படுகின்றன.

ஆனால் –

படம் முழுக்கவே அத்தம்பதியினர் குறித்த கேலியான பார்வையையே மற்ற பாத்திரங்கள் கொண்டிருக்கிறார்கள், பாலியல்ரீதியான நகைச்சுவை அவர்களை வைத்து உருவாக்கப்படுகிறது எனும்போது அம்மாதிரியான ‘முற்போக்கு’ சித்தரிப்பின் நோக்கமே பழுதுபடுகிறது.

படத்தின் மையப்பாத்திரமாக ஓவியா வருகிறார். ‘திருமணம்’ உள்ளிட்ட சமூகத்தின் எவ்விதமான கட்டுமானங்களிலும் தன்னை பொருத்திக்கொள்ள முடியாது என்கிற சுதந்திர மனப்பான்மை கொண்டவர். அவர் அவராக இருப்பது பிரச்சினையில்லை. அவருடன் பழகும் மற்றப் பெண்களையும் அவராகவே மாற்றும் முயற்சியில் அவரது பாத்திரம் படைக்கப்பட்டிருப்பது நெருடல். குடிக்கத் தூண்டுகிறார், கஞ்சா புகைக்க அழைத்துச் செல்கிறார், குடும்பத்தாரோடு அவரவருக்கு இருக்கும் முரண்களை தீர்க்க உறவுகளையே வெட்டிவிடும் தீர்வினைதான் முன்வைக்கிறார்.

‘அவரவர் அவரவருக்கு விருப்பப்பட்டவர்களோடு இருந்துக் கொள்ளலாம்’ என்கிற ஓவியா கொடுக்கும் பாதைதான் நம்முடைய குடும்பப் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வாக முடியுமா?

இக்கட்டுரையை எழுதுபவர் ஓர் ஆண் என்கிற அடிப்படையில் ஓவியா முன்வைக்கும் பெண்ணிய நியாயத்தை அவரால் முழுவதுமாக உணரமுடியாமல் கூட இருக்கலாம். எனினும், இப்படம் இளைய தலைமுறையினரின் சிந்தனைகளில் ஏற்படுத்தக்கூடிய விபரீதங்களை சுட்டிக் காட்டுவதற்கு அவர் ஆணாக இருப்பது நிச்சயமாக தகுதிக்குறைவு அல்ல.

பெண்ணியத்தை நாம் ‘90 ml’ ஓவியாவிடம் இருந்துதான் கற்க வேண்டுமா அல்லது அன்றாடம் நாம் காணும் பூக்கட்டி விற்பது, இட்லி சுட்டு விற்பது என்று குடும்பச்சுமைகளை சுகமாக கருதி தாங்கி, தங்களையும் தங்கள் குடும்பத்தையும் முன்னேற்றும் அமைப்புச்சாராத் தொழில் செய்யும் விளிம்புநிலை பெண்களிடமிருந்து கற்கவேண்டுமா?

(நன்றி : குங்குமம்)