8 ஜனவரி, 2013

ஜென்னீ

நீதானே என் பொன்வசந்தம்படத்தில் சமந்தாவின் பேரழகையும், அபாரமான நடிப்பையும் பலரும் விதந்தோதுகிறார்கள். தினகரன் வெள்ளிமலர் தன்னுடைய நடுப்பக்கத்தை சமந்தாவுக்கு ஒதுக்கி ‘it’s a girl thing’ என்று தலைப்பிடுகிறது. காட்டாறாய் அடிக்கும் சமந்தா மழையில் அடித்துப்போன சந்தனமரங்களில் ஒருவர் வித்யூலேகா. பவுர்ணமியின் போது நட்சத்திரங்கள் ஒளிமங்கி தெரிவது இயல்புதான்.
சமந்தாவுக்கு தோழியாய் தொடக்கத்தில் ஸ்கூல் யூனிஃபார்மில், கல்லூரியில், பிற்பாடு படத்தின் இறுதிக்காட்சி வரைக்கும் இரண்டாம் நாயகியாய் கலக்கிய ஜென்னீ இவர்தான். தியேட்டர் ஆர்ட்டிஸ்டான வித்யூவுக்கு இதுதான் முதல் படம். படத்தின் தெலுங்கு பதிப்பிலும் இவரே சொந்தக்குரலில் நடித்திருக்கிறார்.

படம் நெடுக வரும் ஜென்னி இடைவேளைக்குப் பிறகான இரண்டாம் பாதியின் ஓபனிங் ஹீரோயின். வருண் நித்யாவுக்கு இடையேயான அபாரமான காதலுக்கு நடுவில் இவருக்கும் சந்தானத்துக்கும் திடீரென லவ் தோன்றும். விண்ணைத்தாண்டி வருவாயா த்ரிஷா பாணியில் வித்யூ நீலப்புடவையில் என்ட்ரி கொடுக்கும்போது தியேட்டரே அலறும். இவர்களது குறும்புக்காதலை க்யூட்டான பாட்டு போட்டு கவுரவப்படுத்தியிருப்பார் இளையராஜா.

றுபது ஆண்டுகளுக்கு முன்பு அடையாரில் ராமச்சந்திரன் என்றொரு நடிகர் வசித்து வந்தார். அவரது அம்மாவுக்கு உடல்நலமில்லாமல் அடிக்கடி மருத்துவமனைக்கு ராயப்பேட்டை வரவேண்டி இருந்தது. அந்த காலத்தில் அடையாருக்கும், ராயப்பேட்டைக்குமான பயணமே கூட நெடும்பயணம்தான். ஜட்கா வண்டி அல்லது ரிக்‌ஷாவில் வரவேண்டும். உடல்நலம் குன்றியிருந்த அம்மா அலைக்கழிக்கப்படுவதை விரும்பாமல் ராயப்பேட்டையிலேயே அவருக்கு வசதியாக ஒரு வீடு வாடகைக்கு தேடினார் ராமச்சந்திரன்.

லாய்ட்ஸ் சாலையில் இப்போதைய அதிமுக தலைமை அலுவலகத்துக்கு அருகில்- ஏ.வி.ராமன் என்பவருக்கு சொந்தமான ஒரு வீடு இருந்தது. இவர் ராஜாஜியின் நெருங்கிய நண்பர். இவரது வீடு ராமச்சந்திரனுக்கு மிகவும் பிடித்துப் போனது. ஆனால் சினிமாக்காரர் என்பதால் வீடு தர ஏ.வி.ராமன் மறுத்துவிட்டார். காங்கிரஸ்காரரான ராமச்சந்திரன் ராஜாஜியிடம் சிபாரிசுக்கு சென்றார். ‘சினிமாக்காரராக இருந்தாலும் சொக்கத்தங்கம்’ என்று ராஜாஜி சான்றிதழ் கொடுக்க, ராமச்சந்திரனுக்கு வீடு கிடைத்தது.

இதற்கிடையே ராமச்சந்திரன் சினிமாவில் வளர்ந்து எம்.ஜி.ஆர் ஆகிவிட்டார். ஆனாலும் அதே வீட்டில் வாடகைக்கு அண்ணன் குடும்பத்தோடு கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தார். எம்.ஜி.ஆரின் முதல் மனைவி சதானந்தவதி அம்மையார் இந்த வீட்டில்தான் காலமானார். போலவே எட்டாவது வள்ளலை ஈன்றெடுத்த அன்னை சத்யாவும் இங்கேதான் இயற்கையோடு இணைந்தார்.

வீட்டு உரிமையாளர் ஏ.வி.ராமனின் மகனான வழக்கறிஞர் வி.பி.ராமன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தீவிரமாக இயங்கிவந்தார். பிற்பாடு ஈ.வி.கே.சம்பத்தோடு தமிழ் தேசியக்கட்சி கண்டவர்களில் இவரும் ஒருவர். எம்.ஜி.ஆரும் இப்போது திமுக என்பதால் இருவரும் நெருங்கிய நண்பர்களாக ஆனார்கள். தன் தாய் வாழ்ந்த வீடு என்பதால் அந்த வீட்டை விலைக்கு வாங்க எம்.ஜி.ஆர். விரும்பினார். வி.பி.ராமனும் பெருந்தன்மையோடு மிகக்குறைந்த விலைக்கு வீட்டை எம்.ஜி.ஆருக்கு எழுதித் தந்தார்.

எம்.ஜி.ஆர் ஆசையோடு அந்த வீட்டுக்கு ‘தாய்வீடு’ என்று பெயரிட்டார். அவரது சக தொழில் போட்டியாளரான சிவாஜியின் போக் ரோடு வீட்டுக்கு ‘அன்னை இல்லம்’ என்பது பெயர். இந்த தாய்வீட்டில்தான் பிரசித்தி பெற்ற எம்.ஜி.ஆர் நாடக மன்றத்தின் பொங்கல் விழா நடைபெறும். பிறப்பால் மலையாளி என்று சொல்லப்பட்டாலும் எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்தவரை கொண்டாடிய பண்டிகைகள் பொங்கலும், தமிழ்ப்புத்தாண்டும் மட்டும்தான். பொங்கல் விழாவின் போது எம்.ஜி.ஆருடைய ஸ்டண்ட் கோஷ்டியினர் நாடகம் போடுவார்கள். எம்.ஜி.ஆரது படங்களில் கொடூரமான வில்லன்களாக தோன்றும் அவர்கள் அன்று ‘நல்ல’ கேரக்டர்களில் உருக வைப்பார்கள். குழந்தைகளின் கலைநிகழ்ச்சி நடக்கும். அன்று தாய்வீட்டுக்கு வருகை தருபவர்களுக்கு கைக்கு கிடைத்ததை எல்லாம் அள்ளி அள்ளி கொடுப்பார் எம்.ஜி.ஆர்., தாய்வீட்டு பொங்கல் விழாவுக்கு அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்ததுண்டு.

நியாயமாகப் பார்க்கப்போனால் எம்.ஜி.ஆரின் மனதுக்கு மிகவும் நெருக்கமான அந்த ‘தாய்வீடு’தான் அவரது நினைவு இல்லம் ஆகியிருக்க வேண்டும். இப்போது அந்த வீடு யாருடைய ஆளுகையில் இருக்கிறதோ தெரியவில்லை.

எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனதுமே நன்றி மறவாமல் வி.பி.ராமனை தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் ஆக்கினார்.  அவருக்கு இரண்டு மகன்கள். இளையவர் பி.எஸ்.ராமன். இவரும் 2006ல் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலாக பதவியேற்றார்.
மூத்தவர் மோகன்ராம். நாம் அடிக்கடி சினிமாக்களில் பார்க்கும் அதே மோகன்ராம்தான். சினிமா, டிவி நாடகங்களின் படப்பிடிப்புக்கு தன் வீட்டை தந்துவந்த இவரும் தற்செயலாக நடிகர் ஆனதாக சொல்வார்கள். படங்களில் சிறிய பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தவரை ‘மர்மதேசம்’ தொலைக்காட்சித் தொடர் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமாக்கியது.

தாய்வீட்டின் நிஜவாரிசான மோகன்ராமின் வாரிசுதான் நம்ம ஜென்னீ.

5 ஜனவரி, 2013

காத்தாடி

நந்தகுமாரின் போனவருடத்து டயரியிலிருந்து
காத்தாடி விடுவது சிறுவயதிலிருந்தே பிடித்தமான செயல். எட்டு வயதில் வால் வைத்த கலர் காத்தாடி. பத்து வயதில் பாம்பே ரெடிமேட் காத்தாடி. பண்ணிரெண்டு வயதில் ஃபுல்ஷீட் பாணா காத்தாடி. நூல்கண்டு முழுக்க தீரும் வரையில் பறக்க விட்டு.. எண்ணிப் பார்க்க முடியாத உயரத்தில் அமைதியாக, நிலையாக நாம் விடும் காத்தாடி பறப்பதை காணும்போது, ஒருவகையான மோனநிலையில் மனம் அமைதி கொள்ளும்.
இதில் இரண்டு பிரச்னைகள்.
ஒன்று, மாஞ்சா போடுவது. முன்பெல்லாம் ரெடிமேட் மாஞ்சா நூல்கண்டு கிடைக்காது. வெள்ளை நூல் வாங்கி, பிரத்யேகமாக மாஞ்சா தடவவேண்டும். பெருவண்டு, சிறுவண்டு என்று இருநூல் வகை. பெருவண்டு நூலில் காத்தாடி விட்டால் இடையில்தொப்பைவிழும். சிறுவண்டு ஸ்ட்ரிப்பாக இருக்கும். ஆனால் டீலுக்கு தாங்காது. மாஞ்சாநூல் இல்லாமல் காத்தாடி விடுபவன் சப்பை. அவனால்டீல்போக முடியாது. எனவே உயரவும் பறக்க மாட்டான். தன் காத்தாடிக்கு அருகில் வேறொரு காத்தாடியை பார்த்ததுமே பயந்துப்போய் தரையிறங்கிவிடுவான்.
மாஞ்சாவுக்கான கச்சாவான கலவையை தயாரிப்பது கல்யாணவேலை. தனிமனித முயற்சியில் சாத்தியமாகாது. கலர் பவுடர், வஜ்ஜிரம், நைஸ் கண்ணாடி பீஸ், இன்னபிற சமாச்சாரங்கள் போட்டு, சுண்டக் காய்ச்ச வேண்டும். காத்தாடியை பறக்கவிட்டு வெள்ளைநூலில் திக்காக மாஞ்சாவை தடவிக்கொண்டே வரவேண்டும். விரல் அறுபடாமல் மாஞ்சா போடுவது தனி கலை. எல்லோருக்கும் வராது. முழு நூல்கண்டும் முடிந்தவுடன், மாஞ்சா காய்வதற்கு கொஞ்சம் நேரமெடுக்கும். மாஞ்சா போடும்போது எவனாவது டீல் விட்டால் முடிந்தது கதை.
கை மாஞ்சா என்றொரு ரிஸ்க் இல்லாத முறை இருக்கிறது. காத்தாடி இல்லாமல் மாஞ்சா போடும் முறை. இரண்டு மரங்களுக்கு இடையே நூலை இழுத்து, இழுத்து கிட்டத்தட்ட நெசவு பாவும் வேலை போல மாஞ்சா போடும் முறை. கை மாஞ்சா போடும் பயல்களுக்கு ஏரியாவில் மரியாதையே இருக்காது.
சில டொக்குகள் ட்வைன் நூல் வாங்கி மாஞ்சா போட்டு வைத்துக் கொள்வார்கள். ட்வைன் நூலில் காத்தாடி விடுவதைப் போல கோழைத்தனம் வேறில்லை. ரொம்ப உயரப்போக முடியாது என்பதோடு டீலும் போடமுடியாது. டீல் போட்டால் ட்வைன் நூல் அறவே அறாது. அதே நேரம் அறுக்கவும் செய்யாது.
இரண்டு, காற்று. காலை பத்து மணிக்கு மேல் கிரவுண்டில் காற்று அடிப்பது கிட்டத்தட்ட நின்றுவிடும். மரங்களில் இலைகள் அசையவே அசையாது. அந்த நேரத்தில் காத்தாடி விட நினைப்பவனை விட பெரிய துரதிருஷ்டசாலி வேறு யாரும் இருந்துவிட முடியாது. காத்தாடிடேக் ஆஃப்ஆகாது. யாராவது காத்தாடியை பிடித்து தூக்கிவிட்டு உதவினால் மட்டுமே, தட்டி தட்டி மேலே ஏற்ற முடியும். அதற்கும் கூட சூத்திரநூல் நேர்த்தியாக போடப்பட்டிருக்க வேண்டும். எல்லா காத்தாடிக்கும் சூத்திரம் நறுக்காக அமையாது. அவ்வாறு அமையப்பெறாத காத்தாடிகள் எழும்புவது நல்ல காற்று அடிக்கும்போது மட்டுமே சாத்தியம்.
இம்மாதிரி நேரங்களில் காத்தாடியை கிளப்ப சில நேரங்களில் இரண்டு மணி நேரம்கூட ஆகும். எத்தனையோ முறை வியர்வை தெறிக்க ஓடி ஓடி கிளப்பியிருக்கிறேன். அவ்வாறு கிளப்ப முடியாத சந்தர்ப்பங்களில் சில முறை வெறுத்துப் போய் காத்தாடியை கிழித்துப் போட்டுவிடுவேன். வேறு புது காத்தாடி வாங்க அப்பாவிடம் காசு கேட்டு கெஞ்சுவேன்.
புது காத்தாடி வாங்கி முதல்முறையாக பறக்க விட்டதுமேடீல்போட மனம் வராது. அப்படியும் யாராவது டீலுக்கு வர்றியா என்று கேட்டுக்கொண்டே இருப்பான். கேட்டுக்கொண்டே இருப்பான் என்றால் வாய்திறந்து கேட்கமாட்டான். அவனுடைய காத்தாடியும், நம்முடைய காத்தாடியும் வானத்தில் சமிக்ஞை மூலமாக பேசிக்கொள்ளும். டீலுக்கு ரெடி என்றதுமேசர்ரென்று சப்தம் எழுப்பிக்கொண்டே அவனுடைய காத்தாடி நம் காத்தாடிக்கு அருகில் வரும். நாமும் அவனை நெருங்குவோம். டீல் விழுந்ததுமே நம் கைவிரல்கள் ஒரு அதிர்வை உணரும். வேகமாக நூல் விட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். க்ரிப் இல்லாமல் காத்தாடி அப்படியே வானில் நழுவி விழுவது மாதிரி தெரியும். நூல்கண்டு முடிந்துவிட்டாலோ அல்லது நூல்விடுவதில் போதிய திறமையில்லாமல் இருந்தாலோ டீலில் தோற்றுவிடுவோம். நூல் அறுந்து, நம் காத்தாடி நான்கைந்து கிலோ மீட்டர் தாண்டி எங்காவது போய் விழும். சாமர்த்தியமிருப்பவர்கள் ஓடிப்போய் எடுத்துக்கொள்ளலாம். இல்லாதவர்கள் புது நூல்கண்டும், புது காத்தாடியும் வாங்கிக் கொள்ள வேண்டியதுதான். நான் பல டீல்களில் வென்றிருக்கிறேன். போலவே பல டீல்களில் தோற்றுமிருக்கிறேன். டீலில் தோற்ற நேரங்களில் அறுந்து, வீழும் என்னுடைய காத்தாடிகள் என்ன ஆனது என்று இன்றுவரை தெரியவில்லை. நான் காத்தாடி பிடிக்க ஓடியதுமில்லை.

02-01-2013 தினகடிதம் நாளிதழிலிருந்து

மயிலாப்பூரைச் சேர்ந்தவர் நந்தகுமார் (34). சோழிங்கநல்லூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு புனிதா (27) என்கிற மனைவியும், சம்யுக்தா (2) என்கிற அழகான பெண் குழந்தையும் உண்டு. இவர் குடும்பத்தோடு புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடினார். மதியத்துக்கு மேல் தன் மனைவியையும், குழந்தையையும் அழைத்துக்கொண்டு பிரியாணி வாங்கிக்கொண்டு, புளியந்தோப்பில் இருக்கும் மாமியார் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.
சென்ட்ரல் தாண்டி வால்டாக்ஸ் ரோட்டில் சென்றுக் கொண்டிருந்தபோது, திடீரென பறந்துவந்த பட்டம் ஒன்றின் மாஞ்சா நூல் சிக்கி பைக் விபத்துக்குள்ளானது. நந்தகுமாரின் மனைவியும், குழந்தையும் படுகாயம் அடைந்தனர். மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியிலேயே நந்தகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

4 ஜனவரி, 2013

‘ராஜா’ங்கம்

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை ‘நீதானே என் பொன்வசந்தம்’. காதல், காதலர்கள், ஈகோ என்று ஏற்கனவே பார்த்து சலித்த கதையை ஃப்ரெஷ்ஷாக கவுதம் இயக்கியிருக்கிறார். ஆனாலும் இசைதான் படத்தை திரும்பத் திரும்ப பார்க்கத் தூண்டுகிறது.
முப்பத்தியெட்டு வருடங்களாக ஒரு இசையமைப்பாளர் எப்படி அதே consistencyயை தொடர்ச்சியாக maintain செய்ய முடியும் என்று எப்படி யோசித்தாலும் புரிபடவில்லை. அதனால்தான் இளையராஜா இசைஞானி. இதுவரை வந்த இளையராஜா படங்களிலேயே சிறைச்சாலையும், ரமணாவும்தான் பின்னணியிசையில் தலைசிறந்தது, அந்த சாதனையை உடைக்கவே முடியாது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நீ.எ.பொ.வ மிகச்சுலபமாக உடைத்தெறிந்திருக்கிறது. எங்கே டிரம்ஸ் அடிக்க வேண்டும், எங்கே கிடாரை மீட்டவேண்டும், எங்கே வயலினை முழங்கவேண்டும் என்பது மட்டுமில்லாமல் எங்கே மவுனிக்க வேண்டும் என்கிற வித்தையை கற்றுத் தேர்ந்திருப்பதில்தான் ராஜாவின் இமாலய வெற்றி அடங்கியிருக்கிறது. இயக்குனர் எடுத்திருக்கும் காட்சிகளின் வீரியத்தை அல்லது பலகீனத்தை முழுமையாக உணர்ந்து, எங்கே மேம்படுத்த வேண்டும், எங்கே சரிக்கட்ட வேண்டும் என இளையராஜா அளவுக்கு இசையமைக்கும் இசையமைப்பாளர் உலகில் வேறு யாரும் இருந்துவிட முடியாது.
பாடல்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். கிட்டத்தட்ட முக்கா மணி நேரத்துக்கு ராஜா பாட்டுதான். பல பாடல்களை கவுதம் திரும்பத் திரும்ப ரிபீட் அடித்திருப்பதால் எப்படியும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீ.எ.பொ.வ பாடல்களாலேயே நிறைந்திருக்கிறது. ஒரு சர்வதேசத்தரம் வாய்ந்த வீடியோ இசை ஆல்பத்தை காணும் அனுபவம் இதனாலேயே படம் பார்க்கும்போது கிடைக்கிறது. இந்த அற்புதமான, அழகான அனுபவத்தை உள்வாங்கிக் கொள்ள முடியாதவர்களை பார்த்து அனுதாபம்தான் கொள்ள முடிகிறது.
நீ.எ.பொ.வ.வின் எட்டு பாடல்களும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத எட்டு அதிசயங்கள். ‘காற்றை கொஞ்சம் நிற்கச் சொன்னேன்’ என்று கார்த்திக் பாடும்போது, லேசாக காற்றடித்து உங்கள் முன்னந்தலை முடி அசைந்து நிற்கும் உணர்வு உங்களுக்கு ஏற்படவில்லையெனில், உங்கள் காதில் ஏதோ கோளாறு என்று பொருள். ‘சாய்ந்து சாய்ந்து உனை பார்க்கும்போது’ என யுவன்ஷங்கர் ராஜா உருகும்போது தேன்வந்து பாயுது காதினிலே. அப்போது காதைத் தொட்டுப் பாருங்கள். நிஜமாகவே தேனின் பிசுபிசுப்பு. ‘என்னோடு வா வா’வுக்கு உங்கள் கால்கள் தாளம் போடவில்லையெனில், சைக்காலஜிக்கலாகவே எதனாலோ நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று நினைத்துக் கொள்ளலாம். ‘பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா’, ’சற்று முன்பு பார்த்த’, ’முதல் முறை’ என்று, படத்தின் எல்லாப் பாடல்களிலுமே ராஜா நிகழ்த்தியிருக்கும் சாதனை அசாத்தியமானது.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ராஜாவின் இசையை மட்டுமே பிரதானமாக நம்பி இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. ராஜாவின் நண்பர்கள் அவருடைய இசையில் படமெடுத்திருக்கிறார்கள். ராஜாவே சொந்தமாக படம் எடுத்திருக்கிறார். ஆனால் இதுவரை எந்த இயக்குனரும் தன்னுடைய ஈகோவை சுத்தமாக விட்டுக் கொடுத்து, அவருக்கு தந்திராத மிகப்பெரிய இடத்தை, கவுரவத்தை நீ.எ.பொ.வ.வில் கவுதம் தந்திருக்கிறார். நாடி, நரம்பெல்லாம் ராஜாவின் இசைவெறி ஏறிப்போன ஒரு ரசிகனால் மட்டுமே இப்படிப்பட்ட படத்தை கொடுக்க முடியும். படத்தின் டைட்டிலே ராஜாவுக்கு செய்யப்பட்டிருக்கும் tributeதான் எனும்போது, மேலும் விளக்கி விளங்கிக்கொள்ள ஏதுமில்லை.
once again thank you gautham!

31 டிசம்பர், 2012

bye bye 2012


2012, சொல்லிக் கொள்ளும்படியான வருடமாக இல்லையென்றாலும், நிச்சயமாக மோசமான வருடம் இல்லை.
வருடத்தின் தொடக்கத்தில் திடீரென அர்த்தமில்லாத ஏதோ ஒரு மிதப்பு வந்து ஒட்டிக்கொண்டது. இதுதந்த எதிர்மறையான கூடுதல் உற்சாகத்தில் இலக்கு நோக்கிய பாதையை கொஞ்சம் தவறியிருக்கிறேன். எல்லாமே எனக்குத் தெரியும், என்னைவிட்டா வேறு யார் இருக்கா என்றெல்லாம் கொஞ்சம் முட்டாள்த்தனமாக இருந்திருக்கிறேன். நல்லது, கெட்டதை எடைபோட முடியாமல் குழம்பியிருக்கிறேன். போதாக்குறைக்கு எப்பவுமே இல்லாத ஆசையாக சினிமா ஆசை வேறு. டிஸ்கஷன், லொட்டு, லொசுக்கென்று நிறைய நேரம் தேவையில்லாமல் வீணானது.
நல்ல நண்பர்கள் வாய்த்தவர்கள் பாக்கியவான்கள். தவறாக எடுத்துக் கொள்வேனோ என்று நினைக்காமல் சரியான நேரத்தில் இதையெல்லாம் சுட்டிக் காட்டினார்கள். ஆகஸ்ட்டு மாத வாக்கில் ஏதோ ஒரு போதிமரத்தடியில் மல்லாந்து படுத்திருந்தபோது திடீரென்று ஞானம் வந்துவிட்டது. காலத்தை எப்படியெல்லாம் வீணடித்திருக்கிறேன் என்று அடுத்த இருமாதங்களுக்கு பொறுமையாக அசை போட்டேன். எதை செய்யவேண்டும், எதை செய்யக்கூடாது என்பது தெளிவாய் புரிந்தது.
வருடத்தின் கடைசி இரு மாதங்களில் கிடைத்திருக்கும் ‘எனர்ஜி லெவல்’ முன்னெப்போதும் இருந்ததில்லை. இதே லெவல் அடுத்த வருடமும் நீடித்தால் நிச்சயமாக ஏதோ ஒரு கோட்டைக்கு ராஜாதான். வருடத் தொடக்கத்தில் ஏற்பட்ட பேரழிவுகளை கடைசியில் வேகவேகமாக சீரமைக்க முடிந்தது. குறிப்பிடும்படியாகவும் பணியாற்ற முடிந்தது. என்ன ஒரே வருத்தம். பதினாறு அடி பாயவேண்டிய இடத்தில் நாலு அடிதான் பாய்ந்திருக்கிறேன். இந்த தூரத்தையும் சேர்த்து அடுத்தாண்டு கூடுதலாக பாய்ந்தாக வேண்டும். 2013 முழுக்க நிற்க நேரமிருக்காது என்று தோன்றுகிறது.
தீவிரமாக யோசித்துப் பார்த்தால் வருடம் முழுக்க மகிழ்ச்சியாகவே இருந்திருக்கிறேன். இந்த மனநிலையை தக்கவைத்துக் கொள்ள முடிந்ததற்கு என்னை சுற்றியிருக்கும் அனைவருக்கும் நன்றி சொல்ல வேண்டும்.
புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

29 டிசம்பர், 2012

என்றும் முதுமை அடையாத கன்னி

படம் : முருகு

தாவணிக் கனவுகள்’ படத்தில் சிவாஜி ஒரு டயலாக் சொல்வார். “சிந்துபாத் கதையா? நான் பட்டாளத்துலே சேர்ந்தப்போ ஆரம்பமாச்சி. இப்போ ரிட்டையரும் ஆயிட்டேன். கதை மட்டும் முடிஞ்சபாடில்லே”.

தாவணிக் கனவுகள் திரைப்படம் வந்தே இருபத்தெட்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. இடையில் நடிகர் திலகம் சிவாஜி கூட காலமாகி விட்டார். ஆனால் சிந்துபாத்தின் கன்னித்தீவுக்கு மட்டும் முடிவேயில்லை.

கன்னித்தீவு கதையை எழுதுபவரின் பெயரை சஸ்பென்ஸாக, சர்ப்ரைஸாக வைத்திருக்க ‘தினத்தந்தி’ விரும்புகிறது. கோகோ கோலா ஃபார்முலா மாதிரி இது டாப் சீக்ரெட். ஐம்பத்தி மூன்று ஆண்டுகளாக ஒரே கதாசிரியர்தான் எழுதி வருகிறார் என்கிறார்கள். ஆனாலும் இதை எழுதுவதற்காக அவர் ஒருமுறை கூட சலிப்பு கொண்டதே இல்லையாம். இத்தனைக்கும் அவர் பத்திரிகையுலக ஜாம்பவான்களில் ஒருவர். ஒரு நாளின் இருபத்தி நான்கு மணி நேரங்கள் போதாமல் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டே இருந்தவர். கன்னித்தீவுக்கு படம் வரையும் ஓவியர்கள் மட்டும் மாறி வருவதை தொடர்ந்து வாசிக்கும் நாமே அறியமுடியும்.

முடிவே இல்லாத சமாச்சாரங்களுக்கு கன்னித்தீவை ஒப்பிட்டு ஜோக் அடிப்பது தமிழ் சமூகத்தின் வழக்கம்.

நிருபர் : உங்க வயது பதினாறுன்னு நீங்க சொல்றது அப்பட்டமான பொய்.

நடிகை : எப்படி சொல்றீங்க?

நிருபர் : தினத்தந்தியில் கன்னித்தீவு கதையை ஆரம்பத்திலே இருந்து படிச்சிட்டு வர்றதா ஒரு பேட்டியில் சொல்லியிருக்கீங்களே?

1982ஆம் ஆண்டு ‘சாவி’ பத்திரிகையில் வெளிவந்த ஜோக் இது. ஒருவகையில் சொல்லப் போனால் இப்போதெல்லாம் ஐந்து வருடங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக தொலைக்காட்சிகளில் இப்போது ஒளிபரப்பப்படும் மெகாசீரியல்களுக்கு முன்னோடியே நம் ‘கன்னித்தீவு’தான்.

நம்முடைய இந்த கிண்டலையெல்லாம் தினத்தந்தி சீரியஸாக பொருட்படுத்தாமல், ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொள்வதால்தான் கன்னித்தீவு பத்தொன்பதாயிரமாவது நாளை நெருங்கி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. “உலகளவில் எந்த ஒரு ‘காமிக்ஸ்’ தொடரும் இத்தனை நாட்களாய் தொடர்ந்ததில்லை. அந்த வகையில் இது ஒரு உலகசாதனை. தினத்தந்தி நிர்வாகம் இந்த சாதனையை கின்னஸுக்கு விண்ணப்பித்தால், நிச்சயம் அப்புத்தகத்திலும் ‘கன்னித்தீவு’ இடம்பெறும்” என்கிறார் காமிக்ஸ் ஆர்வலரான விஸ்வா.

கன்னித்தீவின் கதைதான் என்ன?

கதையின் மூலம் மட்டுமே அரபுக்கதைகளிலிருந்து எடுக்கப்பட்டது. மற்றபடி கதையின் போக்கு முழுக்க முழுக்க ஆசிரியரின் கற்பனைதான். நாயகன் சிந்துபாத் ஓர் அரசனின் தளபதி. கன்னித்தீவு என்பது அழகிகள் நிறைந்த தீவு. உலகின் சிறந்த அழகிகளையெல்லாம் சிறைபிடித்து இத்தீவில் அடைத்து, உல்லாசமாக இருப்பது வில்லனான மந்திரவாதி மூசாவின் பொழுதுபோக்கு. சமகால உலக அழகி யாரென்று அறிய அவன் ஒரு மந்திரக்கண்ணாடி பயன்படுத்துவான். அந்த கண்ணாடி ஒருமுறை கதையின் நாயகி லைலாவை காட்டுகிறது. லைலாவை வழக்கமான முறையில் சிறைபிடிக்க முடியாத மூசா, கடுப்பில் மந்திரசக்தி கொண்டு அவளை அளவில் சிறியவளாக மாற்றி விடுகிறான். மீண்டும் லைலா பழைய உருவத்தை அடையவேண்டுமானால் கன்னித்தீவுக்கு போய் மந்திரவாதி மூசாவை பிடிக்க வேண்டும். இந்த பொறுப்பு அரசனால் தளபதி சிந்துபாத்திடம் ஒப்படைக்கப் படுகிறது. முடிவில்லா பயணத்தை நோக்கிச் செல்கிறான் சிந்துபாத். இந்தப் பயணத்தில் அவனுக்கு ஏற்படும் விசித்திரமான அனுபவங்கள்தான் கதை.மொத்தம் ஏழு பயணம். ஒவ்வொரு பயணத்திலும் துண்டு துண்டாக கிளைக்கதைகள் நிறைய தோன்றும். இந்த ஒவ்வொரு கதைக்கும் ஏதோ ஒரு தொடர்ச்சி இருக்கும். இதுதான் கன்னித்தீவின் வடிவம்.

யாரேனும் தொடர்ச்சியாக கன்னித்தீவைப் படிக்கிறார்களா?

“குறிப்பிட்ட நிகழ்வுகள் தொடர்ந்து ஒரு சுற்றாக திரும்பத் திரும்ப நடப்பதாக கதை கொண்டுச் செல்லப் படுகிறது. தொடர்ந்து வாசிக்கும்போது ஏற்கனவே வாசித்த நிகழ்வுகள் மீண்டும் வருவதைப் போல இருக்கும். இதனால்தான் பலருக்கும் தொடர்ச்சியாக படிக்க ஆர்வம் இருப்பதில்லை. அதனால் என்ன? என் தாத்தாவும் கன்னித்தீவு படித்திருப்பார். என் அப்பாவும் படித்தார். இப்போது நானும் படிக்கிறேன். கன்னித்தீவு தலைமுறைகளை கடந்தது. அதுதான் இத்தொடரின் மகத்தான சாதனை” என்கிறார் கன்னித்தீவு வாசகரான அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன். கன்னித்தீவு உருவானதில் தொடங்கி, அதன் பின்னணித் தகவல்களையும், எழுத்தாளரையும், ஓவியர்களையும் பற்றிய விவரங்களோடு தனியொரு புத்தகமாக தினத்தந்தி வெளியிட வேண்டும் என்பது இவரது கோரிக்கை.

தினத்தந்திக்கு சிந்துபாத் எவ்வளவு முக்கியம் என்பதற்கு ஒரு நிகழ்வு சான்று. அப்பத்திரிகையின் நிறுவனர் ஆதித்தனார் காலமானபோது அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு கருத்துப்படம் 1981ல் வெளியானது. அதில் ஆதித்தனார் உருவப்படத்துக்கு மாலை போட்டு, தினத்தந்தியின் சாகாவரம் பெற்ற பாத்திரங்களான சாணக்கியன், ஆண்டியார் ஆகியோரோடு சிந்துபாத்தும் கண்ணீர் அஞ்சலி செலுத்துவதாக வரையப்பட்டிருந்தது.
கன்னித்தீவுக்கு இத்தனை கெளரவம் கிடைப்பதற்கு  முக்கியமான காரணம்  வாசகர்களிடம் அது ஏற்படுத்தியுள்ள மகத்தான தாக்கம் இலக்கியவாதிகளும் கூட இதற்கு தப்பவில்லை. வைரமுத்து எழுதிய ஒரு கவிதையில் ‘கன்னித்தீவு முடியும்வரை ஆயுள் இருக்க வேண்டுமென்று ஆசை பலர்க்கு இருக்கிறது’ என்கிற வரிகள் இடம்பெறுகிறது.

முடிவேயில்லா கதை பற்றிய கட்டுரையை எப்படி முடிப்பது? ஓர் ஒருவரி கதையோடு இக்கட்டுரையை முடிக்கிறோம்.

‘உலகத்தின் கடைசி தினமன்று சிந்துபாத், கன்னித்தீவை வாசித்துக் கொண்டிருந்தான்’.

(நன்றி : புதிய தலைமுறை)