‘ஒப நத்துவா ஒப எகா’ என்கிற சிங்கள வாக்கியத்துக்கு ‘உன்னோடு இருந்தபோது, நீ இல்லாதபோது’ என்று பொருளாம். அதாவது தமிழர்களுக்கு புரியும்படி சொல்வதாக இருந்தால் With you, Without you. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட திரைப்படம் திடீரென தமிழகத்தில் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. அரிதான இயக்குனர்களின் திரைப்படங்கள் என்கிற வரிசையில் பி.வி.ஆர். சினிமாஸ், இலங்கை இயக்குனர் பிரசன்ன விதாங்கேவின் இந்த திரைப்படத்தை திரையிட முயற்சித்ததின் அடிப்படையில் இந்த சர்ச்சை எழுந்திருக்கிறது. தியேட்டரில் திரையிட முடியாத நிலை ஏற்பட்டவுடன், நண்பர் தமிழ் ஸ்டுடியோ அருண் ஏற்பாட்டில் படம் பார்க்க விரும்புபவர்களுக்காக பிரத்யேக திரையிடல் சென்னையில் நடந்தது.
நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக தஸ்தாவேஸ்கி எழுதிய கதை ஒன்றினை தழுவி இப்படத்தின் கதையை அமைத்திருக்கிறார் பிரசன்ன. நிகழ்வில் இயக்குனர் பேசும்போது தான் தமிழகத்தோடு தொழில்ரீதியாகவும், நட்புரீதியாகவும் பல்லாண்டுகளாக தொடர்பில் இருப்பவன் என்று தெளிவுப்படுத்தினார். முன்பாக அவருடைய திரைப்படமான ‘ஆகாச குசும்’ தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ‘ஆகாய பூக்கள்’ என்கிற பெயரில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது. முப்பதாண்டு இனப்பிரச்சினை காலத்தில் யாழ்ப்பாணத்தில் தன்னுடைய படத்தை திரையிட்ட ஒரே சிங்கள இயக்குனர் அவர்தான். எனவே ஈழத்தமிழர்கள் மத்தியில் அவருக்கு உயர்வான மதிப்பு இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
ஐம்பத்தி இரண்டு வயதாகும் பிரசன்ன, இலங்கையின் மிக முக்கியமான இயக்குனர் என்பது அவரது கடந்தகால செயல்பாடுகளில் தெரியவருகிறது. அவருடைய முதல் படமே இலங்கைக்கான ஓ.சி.ஐ.சி. விருதுகளில் ஒன்பது பிரிவுகளில் வெற்றி பெற்றிருக்கிறது. லியோ டால்ஸ்டாயின் நாவலான புத்துயிர்ப்பு நாவலை தழுவி இவர் இயக்கிய படம் ஏராளமான சர்வதேச விருதுகளை வென்று குவித்திருக்கிறது. இலங்கையின் கலைப்படத்துறையில் தவிர்க்க இயலாத இயக்குனராக உருவெடுத்திருக்கும் இவர், இதுவரை ஏழு படங்களை இயக்கியிருக்கிறார்.
‘ஒப நத்துவா ஒப எகா’, போருக்குப் பின்னான இலங்கை மக்களின் மனவோட்டத்தை ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் வழியாக ஆராய்கிறது. மனரீதியாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுவிட்ட பிரிவினையை கவலையோடு காண்கிறது. அன்பு, பிளவுகண்ட மனங்களுக்கு மத்தியிலான பாலமாக அமையலாம் என்கிற யோசனையை முன்வைக்கிறது.
சரத்ஸ்ரீ நடுத்தர வயதினை எட்டிய சிங்களவன். தேநீர் தோட்டங்களுக்கு மத்தியில் அமைந்திருக்கும் சிறுநகரில் அடகுக்கடை நடத்தி வருகிறான். இயல்பிலேயே தனிமையை விரும்புபவனாக சித்தரிக்கப்படும் அவனுக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் WWF மல்யுத்த விளையாட்டுதான் ஒரே பொழுதுபோக்கு. அவனுடைய கடைக்கு அடிக்கடி வந்து ஏதோ ஒரு நகையை அடகுவைத்து பணம் வாங்கிச் செல்லும் தமிழ்ப்பெண்ணான செல்வி அவனுக்கு வித்தியாசமாகப் படுகிறாள். தன்னுடைய பணிப்பெண் மூலமாக செல்வியைப் பற்றிய பின்னணி விவரங்களை அறிகிறான். யாழ்ப்பாணத்து பெண்ணான செல்வி போர்க்காலத்தில் அவளுடைய பெற்றோரால் இங்கே கொண்டுவந்து விடப்படுகிறாள். அவளுக்கு துணையாக இருப்பவர்களுக்கு இவள் பெரும் பாரமாக இருக்கிறாள். எனவே ஒரு செல்வந்தரான கிழவருக்கு அவளை மணம் முடித்துத்தர முயற்சிக்கிறார்கள்.
செல்வியை அணுகும் சரத்ஸ்ரீ அவளை திருமணம் செய்துக்கொள்ள தன்னுடைய விருப்பத்தை தெரிவிக்கிறான். வேறு திக்கற்ற செல்வியும் ஒப்புக் கொள்கிறாள். திருமணத்துக்கு பிறகு மகிழ்ச்சியான இல்லறவாழ்வை இருவரும் அனுபவிக்கிறார்கள். சரத்ஸ்ரீயின் வணிக நியாயங்கள் அவளுக்கு புரிபடவில்லை. செல்வியின் தனிப்பட்ட ரசனை மீது சரத்ஸ்ரீக்கு எந்த பிரச்சினையுமில்லை. வேற்றுமையில் ஒற்றுமையாய் வாழும் தம்பதிகளின் வாழ்வில் திடீர் புயல்.
காமினி என்கிற பழைய நண்பன் சரத்ஸ்ரீயை காணவருகிறான். முன்னாள் இராணுவவீரனான அவன் மூலமாக சரத்தின் பழைய வாழ்க்கை செல்விக்கு தெரியவருகிறது. இராணுவத்தில் பணிபுரிந்த சரத், விருப்ப ஓய்வு கேட்டு வாங்கி அடகுக்கடைகாரனாய் தற்போது அமைதியான வாழ்க்கையை (பாட்ஷா, மாணிக்கம் ஆனது மாதிரி) வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஓர் அடகுக்கடைகாரன் சிங்களவனாய் இருந்தாலும் அவனை மனமொத்து கணவனாய் ஏற்றுக்கொள்ள முடிகிற செல்விக்கு, தன் கணவன் இராணுவத்தில் இருந்தவன் என்கிற உண்மையை ஜீரணிக்க முடியவில்லை. இருவருக்குள்ளும் மனரீதியானபிளவு தோன்றுகிறது.
ஒருவரை ஒருவர் மாறி மாறி வருத்திக் கொள்கிறார்கள். கடைசியில் ஒருவர் இல்லாமல் மற்றொருவர் வாழமுடியாது என்கிற உண்மையை உணர்கிறார்கள். செல்விக்காக தன்னுடைய கடையை விற்று இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள சரத்ஸ்ரீ முயற்சிக்கிறான். அவனில்லாமல் வாழவும் முடியவில்லை, அவனோடு வாழவும் முடியவில்லை என்கிற நிலையில் அதிர்ச்சிகரமான முடிவை செல்வி எடுக்கிறாள்.
இதுதான் ‘ஒப நத்துவா ஒப எகா’வின் கதை.
இந்த படத்தை போய் எந்த இயக்கம் திரையிடக்கூடாது என்று எதிர்த்தது என்று தெரியவில்லை. எந்த எதிர்ப்புமின்றி இது சென்னையில் வெளியாகியிருக்கும் பட்சத்தில் மிஞ்சிப்போனால் நூறு, இருநூறு பேர்தான் இப்படத்தை பார்த்திருப்பார்கள். பிறகு நான்கைந்து பேர் அதை சிலாகித்திருந்தாலே அதிகமாக இருந்திருக்கும்.
பிரசன்ன, சினிமா மொழியில் நல்ல பாண்டித்யம் பெற்றவர் என்று தெரிகிறது. படத்தில் இடம்பெற்ற கலைஞர்களை அவர் வேலைவாங்கி இருக்கும் விதத்தை வைத்துப் பார்த்தால் அவருடைய சர்வதேச தரம் புலப்படுகிறது. காட்சிகளுக்கு அவர் வைத்திருக்கும் கோணங்கள் புதுமையானதாகவும், திரைக்கதைக்கு வலு சேர்க்கும் அவசியமுள்ளவையாகவும் இருக்கிறது. நாயகன், நாயகி என்று இருவரின் வர்ணனைகளால் மாறி மாறி கதை சொல்லும் முறையும் சுவாரஸ்யமாகதான் இருக்கிறது. குறிப்பாக நாயகியாக நடித்திருக்கும் அஞ்சலி பாட்டில் அட்டகாசப்படுத்தி இருக்கிறார். நாசிக்கில் பிறந்த அஞ்சலி, யாழ்ப்பாணத் தமிழ் பெண் பாத்திரத்துக்கு அவ்வளவு அசலாக பொருந்துகிறார்.
ஆனாலும் மாபெரும் கலைப்படைப்பு என்று ஒரு சார்பு அறிவுஜீவிகளாலும், கலைஞர்களாலும் முன்வைக்கப்படும் இப்படம் நமக்கு ரொம்ப சாதாரணமாகதான் பட்டது. “அப்புறமென்ன மைனர் குஞ்சு அந்தப் பொண்ணு மேலே கையை வெச்சிட்டான். நம்ம வழக்கப்படி ஆயிரம் ரூவாய் பஞ்சாயத்துக்கு கட்டிப்புடணும். இதுதான் பஞ்சாயத்து அவனுக்கு கொடுக்கிற தண்டனை. என்னப்பா சொல்றீங்க” என்று நாட்டாமை தீர்ப்பு சொல்வதை மாதிரி கணக்காக இப்படம் நமக்கு தோன்றுகிறது.
போருக்குப் பின்னான இலங்கையில் தமிழ் மக்களின் பொருளாதார உளவியல் சிக்கல்களை ஒரு சிங்கள இயக்குனர் காட்சிப்படுத்த முனைந்திருப்பது நிச்சயம் பாராட்டத்தக்க முயற்சிதான். நியாயமாக பார்க்கப்போனால் இணையத்தளங்களில் வாய்கிழிய பேசும் புலம்பெயர் தமிழர்களோ, போராட்டங்களில் கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் தமிழக திரைப்பட கலைஞர்களோ இதை செய்திருக்க வேண்டும். ஆனால், பிரசன்னவின் கலையில் தென்படும் ‘சிங்களப் பெருந்தன்மை’தான் இடிக்கிறது. சிங்களவர்களுக்கு போர் குறித்த குற்றவுணர்ச்சி நிச்சயம் உண்டு. ஆனால் தமிழர்களோடு அவர்கள் சகஜமாகவே வசிக்க விரும்புகிறார்கள் என்கிற செய்தியை உலகத்துக்கு அறிவிக்க இப்படம் மூலமாக விரும்புகிறார் என்று புரிந்துகொள்ள முடிகிறது. ஈழத்தமிழர்களுக்கும் இந்த ஏற்பாடு பிடித்துதான் இருக்கிறது என்பது அவர்கள் படத்தை உள்வாங்கி, வெளியிட்ட கருத்துகளில் இருந்து அறிந்து கொள்கிறோம். கனவிலும் கூட துப்பாக்கிக் குண்டுகள் பாயாத, குண்டுவீச்சுகள் நடக்காத நிம்மதியான உறக்கத்தை அவர்கள் எதிர்ப்பார்ப்பது இயல்புதான்.
ஆனாலும், நம்முடைய தனிப்பட்ட ரசனை, அரசியல் விருப்பு வெறுப்பு அளவுகோல்களின் படி பிரசன்னவின் இந்த படத்தைதான் நாம் இம்மாதிரியெல்லாம் விமர்சிக்க மட்டும்தான் முடியும். அவருடைய கலை உள்ளத்தை மரியாதையோடே அணுகுவதுதான் பண்பாடு. தமிழர்கள் மீது நம்பிக்கை வைத்து தமிழகத்துக்கு வந்து தன் படத்தை திரையிடுகிறார். தமிழ் ஸ்டுடியோ ஏற்பாடு செய்திருந்த திரையிடல் நிகழ்வில் அர்த்தமற்ற கேள்விகளையும், பிரசன்னவுக்கு நேரடித்தொடர்பில்லாத அரசியல் விளக்கங்களையும் தமிழகத்து தமிழ்தேசியப் போராளிகள் கேட்டு, தம்முடைய அறிவீனத்தை உலகறிய செய்துவிட்டார்கள்.
“2009க்கு பிறகு தமிழீழத்தில் எத்தனை அத்துமீறல்கள் நடந்திருக்கிறது என்கிற ஆவணம் மொத்தமாக என்னிடம் இருக்கிறது. இதை நீங்கள் படித்திருக்கிறீர்களா? இதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?” என்று கையில் ஃபைலை வைத்துக்கொண்டு ஒருவர் பிரசன்னவை கேட்டார். இதற்கு சினிமா இயக்குனரான பிரசன்ன என்ன பதில் சொல்ல முடியுமென்று தெரியவில்லை. அவர் என்ன அதிபர் ராஜபக்ஷேவா?
அடுத்து ஒரு போராளி, “இலங்கையில் நடந்தது போர்க்குற்றம் என்று நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். தமிழர்களுக்கு தனி ஈழமே தீர்வு என்று அறிவிக்க வேண்டும்” என்று கேள்வி(!) கேட்டார்.
மைக்கை பிடுங்கிய ஜிலுஜிலு சிகப்பு சட்டைக்காரர் ஒருவர் தான் மூன்று கேள்விகள் கேட்க இருப்பதாக படுமோசமான உடைந்த ஆங்கிலத்தில் ஆரம்பித்தார். சுமார் பத்து நிமிடங்களுக்கு இயக்குனருக்கும், பார்வையாளர்களுக்கும் பெரும் ரோதனையாக அவருடைய பேச்சு அமைந்தது. ‘கொஸ்டின் நெம்பர் ஒன்’ என்று அவர் ஆரம்பித்தபோது அவரிடமிருந்து மைக் பிடுங்கப்பட்டது.
இதே பாணியில் ஆங்காங்கே இருந்து போர்க்குரல் எழுப்பப்பட்டுக் கொண்டிருந்தது. ஒருவர் “ஏன் படம் முழுக்க பின்னணியில் எல்.ஆர்.ஈஸ்வரியின் தமிழ் பாடல்கள் ஒலிக்கிறது என்கிற அரசியலை தெரிவிக்க வேண்டும்” என்று கேட்டு செமையாக அசத்தினார்.
படம் பார்க்க வந்த ஈழத்தமிழர்கள் பெரும்பாலானோர் இயக்குனருக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்கள். அம்மாதிரி பேசிக்கொண்டிருந்த ஒரு பெண்மணியை பார்த்து சேகுவேரா மாதிரி ஆவேசமாக இருந்த தோழர் ஒருவர் சொன்னார். “போயும் போயும் உங்களுக்கு போய் இங்கே ஸ்ட்ரைக்கெல்லாம் பண்ணி போராடினோமே? நாடு விட்டு நாடு வந்த உங்களுக்கு எங்களோட அருமை எப்படி தெரியும்?”
வாழ்க பிரபாகரன். மலர்க தமிழீழம்!