28 ஜூன், 2014

துலக்கம்

அமெரிக்காவில் ஒரு சிறுவனை திடீரென்று காணவில்லை. பெற்றோர் பதறிப்போய் தேடுகிறார்கள். சிறுவனுக்கு ‘ஆட்டிசம்’ பிரச்சினை வேறு உண்டு. மூன்று நாட்கள் கழித்து, அவர்கள் இருந்த ஊரிலிருந்து அறுபது கிலோ மீட்டர் தள்ளி வேறொரு ஊரில் அவனை கண்டுபிடித்தார்கள். அந்த மூன்று நாட்களும் பெற்றோர் பட்ட பாடு சொல்லி மாளாது. சாதாரண நிலையில் இருக்கும் குழந்தைகள் காணோம் என்றாலே கண்டுபிடிப்பது கடினம். இவனோ ஆட்டிச பாதிப்பில் இருப்பவன். ஆட்டிசம் பற்றிய புரிதல் இல்லாதவர்களைப் பொறுத்தவரை அவன் மனநிலை பிறழ்ந்தவன். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளோடு பழகிய அனுபவம் கொண்டவரான பாலபாரதி இந்த செய்தியை ஓர் இணையத்தளத்தில் வாசிக்கிறார். அவருக்குள் ஒரு குறுநாவலுக்கான கரு தோன்றுகிறது. அதுதான் ‘துலக்கம்’.

சமீப பத்து, பதினைந்து வருடங்களில் தமிழ் இலக்கியம் பல்வேறு மாற்றங்களை தனக்குள் உருவாக்கிக் கொண்டு வருகிறது. வாழ்வு குறித்த புரிதல்களை தெளிவாக்கிக் கொண்டு, அதை எதிர்கொள்வது குறித்த தீர்வுகளை முன்வைப்பதே பொதுவாக இலக்கிய நாவல் மரபு. உயர்தர மொழி கட்டமைப்பில், எளிய வெகுஜனவாசகர்கள் சுலபத்தில் அணுகிவிட முடியாதபடி, அறிவுஜீவிகள் பொத்தி பொத்தி பாதுகாத்த இலக்கியம் இன்று அனைவருக்குமானதாக மாறிவருகிறது. குறிப்பாக சிறு பத்திரிகைகள் தங்களுடைய கறார்தன்மையில் சமரசம் செய்துகொண்டு ‘எல்லோருக்குமானது இலக்கியம்’ என்று செயல்பட துவங்கியிருக்கும் காலக்கட்டம் இது. இதன் மூலமாக இதுவரை தீவிர இலக்கியம் என்று பேசப்பட்டதற்கும், வெகுஜன வாசிப்புக்கான எழுத்துகளுக்கும் இடைநிலையில் புதிய தலைமுறை எழுத்தாளர்கள் ஏராளமாக உருவாகி வருகிறார்கள். மரபான நாவல்முறையை உடைத்து புதிய வடிவங்களை முயற்சிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. பின்நவீனத்துவ எழுத்தாளர்களும் இதே காலக்கட்டத்தில்தான் கோலோச்சி வருகிறார்கள் என்றாலும், அவர்கள் வேற்றுக்கிரகத்தில் வாழ்பவர்கள் என்பதால் அவர்களை விட்டுவிடுவோம்.

இந்த புதிய போக்கில் பத்திரிகையாளர்களும் புனைவிலக்கியம் பக்கமாக தங்கள் பார்வையை திருப்பியிருப்பது ஒரு முக்கியமான திருப்பம். குறிப்பாக பத்திரிகைத்துறையில் நீண்டகால அனுபவம் பெற்ற எழுத்தாளர் மனோஜை குறிப்பிடலாம். முக்கியமான சிறுகதைகள் சிலவற்றை தமிழில் எழுதியிருக்கும் இவரது எழுத்துப்பாணி ‘ரிப்போர்ட்டிங் ஸ்டைல்’ என்று சொல்லக்கூடிய வெகுஜன பத்திரிகை நடையில், இதுவரை இலக்கியம் என்று நம்பப்பட்ட மதிப்பீடுகளை கதையாக்குவது. ‘துலக்கம்’ நாவலையும் இந்த வகையில் சேர்க்கலாம். யெஸ்.பாலபாரதியும் சுமார் பதினைந்து ஆண்டுகால பத்திரிகையுலக அனுபவம் கொண்டவர். குஜராத்தில் இனப்படுகொலை நடந்தபோது அதை நேரடியாக அங்கேயே சென்று, குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு ரிப்போர்ட்டிங் செய்தவர்.

‘துலக்கம்’ – காணாமல் போன ‘அஸ்வின்’ என்கிற சிறுவனைப் பற்றிய துல்லியமான ரிப்போர்ட்டிங். இருவேறு கிளைகளில் பிரிந்து பயணிக்கும் கதையை, கடைசி அத்தியாயத்தில் ஒன்றிணைக்கும் வழக்கமான பாணிதான் என்றால், பத்திரிகையாளருக்கே உரிய விவரணைகளோடு ‘ஆட்டிஸம்’ என்கிற மனகுறைபாடு குறித்த பார்வையை எல்லோருக்குள்ளும் ஆழமாக விதைக்கிறது.

நகரில் கள்ளநோட்டு கும்பலின் அட்டகாசம் அதிகரிக்கிறது. சுமார் நாற்பது பேர் கொண்ட கும்பல் இதற்காக நகரெங்கும் ஊடுருவியிருப்பதாக ஒரு தகவல். இத்தகைய சூழலில் வண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர் முருகனிடம் ஒரு சிறுவன் மாட்டுகிறான். தோற்றத்திலும், நடவடிக்கையிலும் வித்தியாசமாக தோன்றும் அவன்மீது சந்தேகப்படுகிறார்.

இதே நேரம் சென்னை புறநகர் மடிப்பாக்கத்தில் கல்யாண் என்பவர் தன்னுடைய மகன் காணாமல் போனதாக காவல்நிலையத்தில் புகார் கொடுக்கிறார். அவனுக்கு ஆட்டிசப் பாதிப்பு இருப்பதாக விசாரணையில் கூறுகிறார். புகாரை வாங்கும் போலிஸ்காரர்களோ ஆட்டிஸம் என்பதை மனநிலை தவறியதாக புரிந்துக் கொள்கிறார்கள். இப்படியாக இரண்டு டிராக்குகளில் கதை நகர்கிறது.

முருகன் தன்னிடம் மாட்டிய சிறுவனை விசாரிக்கும் முயற்சியில் ‘ஆட்டிஸம்’ பற்றி அறிந்துக் கொள்கிறார். கல்யாண் தன்னுடைய மகன் தொலைந்த சோகத்தில் இருக்கும்போது ப்ளாஷ்பேக்கில், தன் குழந்தைக்கு ஆட்டிஸம் என்று கண்டறிந்ததில் இருந்து, அதிலிருந்து அவனை மீட்க செய்யும் போராட்டங்கள் என்று கதை விரிகிறது.

துலக்கம் என்கிற சொல்லுக்கு குத்துமதிப்பாக ‘விசாரணை’ என்று பொருள் கொள்ளலாம். ‘துப்புதுலக்குவது’ என்று ஏற்கனவே நமக்கு பரிச்சயமான வார்த்தையில் வரும் ‘துலக்குவது’தான் துலக்கம். ஆட்டிஸம் குறித்த விசாரணை என்று துலக்கத்தின் ஒன்லைனர் அமைந்திருப்பதால், மிக கச்சிதமாக கதைக்கு தலைப்பு பொருந்துகிறது.

கரணம் தப்பினாலும் டாக்குமெண்டரி ஆகிவிடக்கூடிய கதையை சுவாரஸ்யமான நடையில் சிறப்பான நாவலாக உருவாக்கியிருக்கிறார் பாலபாரதி. அனேகமாக ‘ஆட்டிஸம்’ குறித்து தமிழில் வெளிவந்திருக்கும் முதல் நாவலாக இதுவாகதான் இருக்கக்கூடும். எழுதத் தெரிந்த யாருமே எதைப்பற்றியும் எழுதிவிடலாம் என்று தன்னம்பிக்கை கொண்டிருப்பார்கள். ஆனால், உண்மையில் இம்மாதிரி குறிப்பிட்ட ஒரு பிரச்சினை சார்ந்த எழுத்தை எவ்வித தர்க்கப்பிழையுமின்றி எழுதுவதற்கு சலிக்காத உழைப்பும், அப்பிரச்சினை குறித்த தெளிவான பார்வையும் இருக்க வேண்டும். பாலபாரதிக்கு இருந்திருப்பதால் ‘துலக்கம்’ சாத்தியமாகி இருக்கிறது. எளிதில் வாசிக்கக்கூடிய நடையை மிகக்கவனமாக அவர் தேர்ந்தெடுத்திருப்பதற்கு பின்னால், ‘ஆட்டிஸம்’ குறித்த விழிப்புணர்வு எல்லா தரப்புக்கும் போய்ச்சேர வேண்டும் என்கிற அக்கறை இருப்பதை உணரமுடிகிறது. கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு வாசித்தாலும் குறைகள் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு கச்சிதமான எடிட்டிங். சுவாரஸ்யமான வாசிப்பு அனுபவத்துக்கு மட்டுமல்ல, சமூகம் சந்தித்து வரும் ஒரு முக்கியமான பிரச்சினை குறித்த புரிதலுக்காகவும் துலக்கத்தை அனைவரும் வாசிக்கலாம்.

நூல் : துலக்கம்
எழுதியவர் : யெஸ்.பாலபாரதி
பக்கங்கள் : 128
விலை : ரூ.85
வெளியீடு : விகடன் பிரசுரம்
757, அண்ணாசாலை, சென்னை-600 002
போன் : 044-42634283/84 மின்னஞ்சல் : books@vikatan.com

‘துலக்கம்’ நூல் வெளியீடு, நாளை மாலை சென்னையில் நடக்கிறது. வாய்ப்புள்ளவர்கள் அனைவரும் கலந்துக் கொள்ளலாம்.

2 கருத்துகள்:

  1. பெயரில்லா11:58 PM, ஜூன் 28, 2014

    Sub standard reporting style by both of you. Font blame serious literature. Set ur stds high

    பதிலளிநீக்கு
  2. இணையத்தில் வாங்க...
    http://www.wecanshopping.com/products/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-.html

    பதிலளிநீக்கு