4 ஜூன், 2014

தமிழ் சினிமாவில் புரட்சி?

‘என்னமோ ஏதோ’ என்று பயந்துவிடாதீர்கள். இவ்வாண்டின் தொடக்கத்தில் இருந்து தமிழில் வெளியாகியிருக்கும் திரைப்படங்களின் எண்ணிக்கை நான்கே மாதங்களில் செஞ்சுரி போட்டு விட்டது. வதவதவென வாராவாரம் வெள்ளிக்கிழமைக்கு ஆறு, எட்டு, பத்து என்கிற எண்ணிக்கைகளில் படங்கள் வெளியாவது புரட்சியா அல்லது வீழ்ச்சியா. தமிழ் சினிமாவில் ‘என்னமோ நடக்குது’ என்பது மட்டும் நிச்சயம்.

நூற்றி எட்டு

தமிழில் வருடத்துக்கு எத்தனை திரைப்படங்கள் வெளிவரும்?

நேரடி தமிழ்ப்படங்கள் தவிர்த்து இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் என்று மற்ற மொழிகளில் இருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட படங்களையும் சேர்த்து ஆண்டுக்கு நூற்றி முப்பதிலிருந்து நூற்றி ஐம்பது படங்கள் வரை வெளியிடப்படுகின்றன. இது கடந்த பத்து ஆண்டுகளின் சராசரி.

ஆனால் இந்த ஆண்டின் முதல் அரையாண்டிலேயே இந்த எண்ணிக்கையை தமிழ் சினிமா கடக்கப் போகிறது. ஜனவரி முதல் ஏப்ரல் வரை முதல் நான்கு மாதங்களில் மொத்தம் நூற்றி எட்டு புதிய படங்கள் அரங்குகளில் திரையிடப்பட்டிருக்கின்றன. இவற்றில் டப்பிங் படங்களை கழித்துவிட்டால் நேரடி தமிழ்த் திரைப்படங்களின் எண்ணிக்கையே எண்பதை தொடுகிறது.

இந்த அசாத்தியமான எண்ணிக்கை தமிழ் சினிமா தொழில்ரீதியாக ஆரோக்கியமாக இருப்பதை காட்டுகிறதா அல்லது வீக்கத்தின் வெளிப்பாடா என்பதுதான் நம் முன் இருக்கும் கேள்வி.

இவ்வாண்டு வசூல்ரீதியாக வெற்றியடைந்த திரைப்படங்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணுவதற்கு ஒரு கை மட்டுமே போதும். அதிலேயே கூட ஒன்றோ இரண்டோ விரல்கள் மிச்சமிருக்கக் கூடும்.

தொழில்நுட்பத்தின் பங்கு

திரைப்படங்கள் அதிகமாக தயாரிக்கப்படுவதற்கு தொழில்நுட்ப வளர்ச்சி பிரதானமான காரணமாக இருக்கிறது. முன்பு நெகட்டிவ் பிலிம்களில் படம் பிடிப்பது படத்தின் பட்ஜெட்டில் பெரிய இடத்தை அடைத்துக் கொண்டிருந்தது. வெறும் நான்கு நிமிடம் படம் பிடிக்கவே தோராயமாக பிலிம் செலவு பதிமூன்றாயிரம் ரூபாய் ஆகும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதற்கு பிரகாசமான லைட்டிங் வசதி ஏற்படுத்த வேண்டும். லைட்டுகள் வாடகை. அவற்றை இயக்க ஜெனரேட்டர் இயக்கி மின்சாரம். இதற்கெல்லாம் மிகப்பெரிய யூனிட்டே வேலை பார்க்கும். அவர்களுக்கு உணவு, சம்பளம், பேட்டா என்று பட்ஜெட் எல்லா வகையிலும் எகிறும். ரெட், 5டி போன்ற டிஜிட்டல் கேமிராக்கள் புழக்கத்துக்கு வந்தபிறகு இவ்வகையிலான பெரும் செலவு மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. இப்போது ஒரே ஒரு கேமிராமேனே மாபெரும் யூனிட்டுக்கு சமம்.

படப்பிடிப்பில் செய்யப்படும் தவறுகளை கூட பிற்பாடு எடிட்டிங்கிலேயே சரிசெய்துக்கொள்ளலாம். மீண்டும் படம் பிடிக்க வேண்டிய நிலை இல்லை. லைட்டிங் குறைபாடுகளை சீர் செய்யலாம். வண்ணங்களை நினைத்த மாதிரி மேம்படுத்தலாம். ப்ளூமேட் முறையில் வெளிநாட்டுக்கு போகாமலேயே உள்ளூரிலேயே காட்சிகளையும், பாடல்களையும் படம்பிடித்து, பின்னணியை மாற்றி வெளிநாட்டில் எடுத்த காட்சிகளை மாதிரிகூட அசலாக காட்டமுடியும். கிட்டத்தட்ட எல்லாமே சாத்தியம். தகவல் தொழில்நுட்ப புரட்சி ஹாலிவுட்டுக்கும், கோலிவுட்டுக்குமான இடைவெளியை பெருமளவில் குறைத்துவிட்டது.

“படப்பிடிப்புக்கான செலவு நிச்சயம் குறைந்திருக்கிறது. விரைவாகவும் படம் எடுக்க முடிகிறது. எனவே தயாரிக்கப்படும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதே நேரம் எங்கள் தொழிலின் தரமும் வெகுவாக குறைந்து வருவது கவலைப்படத்தக்க அம்சம். சினிமா தொழில்நுட்பம் தெரிந்த தகுதியான ஆட்களை வைத்துதான் வேலை பார்க்க வேண்டும். கேமிராவை ஆபரேட் செய்தாலே படம் எடுத்துவிட முடியுமென்ற தொழில்நுட்ப சாத்தியத்தால் கத்துக்குட்டிகள் ஏராளமானோர் படம் பிடிக்க வந்துவிடுகிறார்கள். செல்போனில் வீடியோ எடுப்பது மாதிரி எடுத்துத் தொலைக்கிறார்கள். இதனால் ஏகப்பட்ட எண்ணிக்கையில் மொக்கைப்படங்கள் வெளிவந்து படுதோல்வி அடைந்து இண்டஸ்ட்ரிக்கே பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. எதிர்காலத்தில் இதனால் தொழில்நுட்பம் மீதே அவநம்பிக்கை வந்துவிடக்கூடிய ஆபத்து இருக்கிறது” என்று அச்சப்படுகிறார் கேமிராமேன் விஜய் ஆம்ஸ்ட்ராங்.

திரையரங்குகளும் முழுக்க டிஜிட்டல் மயமாகி இருக்கின்றன. பிலிம் புரொஜெக்டர்களை நீக்கிவிட்டு, டிஜிட்டல் புரொஜெக்டர்களைதான் கிட்டத்தட்ட எல்லா தியேட்டர்களுமே பயன்படுத்துகின்றன. சாட்டிலைட் மூலமாகவோ, ஹார்ட் டிஸ்கில் சேமித்தோ திரையில் நமக்கு படம் காட்டுகிறார்கள். பிலிம் புரொஜெக்டர்கள் காலத்தில் வெளியாகும் ஒவ்வொரு பிரிண்டுக்கும் லட்சக்கணக்கில் செலவாகும். படம் ஓடாத காலக்கட்டத்திலும் அந்த பிரிண்டுகள் அழிந்துவிடாமல் சேமிக்க செலவழித்துக்கொண்டெ இருக்க வேண்டும். இப்போது அந்த செலவெல்லாம் மிக கணிசமாக குறைந்திருக்கிறது. டிஜிட்டல் முறையில் படத்தை திரையிடுவது உழைப்பு ரீதியில் சுலபமானதாகவும், செலவு ரீதியில் சிக்கனமானதாகவும் இருப்பதால் ஒரே திரையரங்கு வளாகத்தில் நிறைய திரைப்படங்களை ரிலீஸ் செய்ய முடிகிறது.

ஆனாலும் பெரிய நட்சத்திரங்கள் பங்குபெறும் படங்களின் பட்ஜெட் இந்த தொழில்நுட்ப வளர்ச்சியால் சிக்கனமாகவில்லை. வருடாவருடம் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. அதற்கு வெவ்வேறு காரணங்கள் இருக்கின்றன. அவற்றை சரியாக இனங்கண்டு சரிசெய்ய வேண்டியது சினிமா சங்கங்களின், தொழில் ஆர்வலர்களின் கடமை.

பாராட்டுவதா பயப்படுவதா?

அரை நூற்றாண்டுக்கும் மேலாக சினிமாவை மட்டுமே தொழிலாக எடுத்துக் கொண்டவர்கள்தான் இத்துறையில் புழங்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால் சமீபமாக வேறு துறையில் ஈடுபடுபவர்களும் பங்களிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ‘பார்ட் டைம்’ தொழிலாக சினிமாவையும் சேர்த்துக் கொள்கிறார்கள். லாபம் ஈட்டக்கூடிய, சம்பாதிப்பதற்கு தகுதியான தொழிற்துறையாக தமிழ் சினிமா வளர்ந்திருப்பதான நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாகவே இந்த போக்கை நாம் எடுத்துக் கொள்ளலாம். படங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். சில நாட்களுக்கு முன்பாக இதை குறிப்பிட்டு சினிமா விழா ஒன்றில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் பேசினார்.

“நிறைய தொழில் அதிபர்கள் சினிமாவுக்கு வந்து கொண்டிருப்பது வரவேற்கத்தக்க விஷயம். டாக்டர், பைலட், சாஃப்ட்வேர் என்ஜினியர் என்று பல்வேறு துறைகளச் சார்ந்தவர்களும் சினிமாவுக்கு பங்களிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். சமூகத்தில் சினிமாவை கேவலமாக நினைத்துக் கொண்டிருந்த காலம் மாறிவிட்டது.

ஆனால் படங்கள் சரியாக ஓடாததால் கடந்த சில மாதங்களில் மட்டுமே சுமார் இருநூறு கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட இழப்பை தமிழ் சினிமா சந்தித்திருக்கிறது. தியேட்டர் வசூல் படுமோசம். வெளிவராமல் முடங்கிக் கிடக்கும் சினிமாக்களின் எண்ணிக்கை அச்சமூட்டுகிறது.

கடந்த ஆண்டு மட்டுமே நூற்றி எண்பது புதுமுகங்கள் அறிமுகமாகி இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் எத்தனை பேர் மேலே வந்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையை எல்லாம் பார்த்து பாராட்டுவதா அல்லது பயப்படுவதா என்றே எனக்கு தெரியவில்லை” என்று வேதனையோடு குறிப்பிட்டார் கேயார்.

சென்சார் சான்றிதழ் வாங்கியும் இன்னும் வெளியாகாத படங்களின் எண்ணிக்கை மட்டுமே நானூறை எட்டுகிறது. புற்றீசல் மாதிரி எண்ணிக்கையில் அதிகமாக படங்கள் வெளியாவதால் எந்தவொரு படத்துக்கும் குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்க வகையில்லாமல் வசூல் பரவலாகி, அனைவருமே இழப்பை சந்திக்க நேர்கிறது. முன்பு வெள்ளிக்கிழமை இத்தனை படம்தான் வெளியாக வேண்டும், பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் நஷ்டத்தை சந்திக்க வழியில்லாத தேதிகளில் வெளியிடப்பட வேண்டும் என்றெல்லாம் தயாரிப்பாளர் சங்கம் படவெளியீடுகளை முறைப்படுத்த முனைந்தது. இப்போது யாருமே அந்த வழிமுறைகளை பின்பற்றுவதில்லை.

நிலைமை கொஞ்சம் மோசம்தான்

நவீனத் தொழில்நுட்பம், சமீபமாக இத்துறைக்கு கிடைத்துவரும் ஏராளமான மனிதவளம், தொழிலாக அங்கீகரித்து சினிமாவில் கொட்டப்படும் கோடிக்கணக்கான முதலீடு போன்ற அம்சங்கள்தான் திரைப்படங்களின் திடீர் எண்ணிக்கை அதிகரிப்புக்கு பிரதானமான காரணங்களாக இருக்கின்றன. இது ஆரோக்கியமான திசைக்கு தமிழ் சினிமாவை அழைத்துச் செல்லாமல், எதிர்திசையில் படுவேகமாக ஓடி அழித்துக் கொண்டிருக்கிறது என்கிற முரண்தான் வேதனையான விஷயம்.

வெள்ளிக்கிழமை காலையில் படம் வெளியிடப்படுகிறது. அன்று மாலையே வெற்றி பெற்றுவிட்டதாக அறிவித்து ‘சக்சஸ் மீட்’ நடத்துகிறார்கள். அடுத்த இரண்டு நாட்களுக்கு எப்படி வெற்றியடைந்தோம் என்று படக்குழுவினர், பாரபட்சமின்றி எல்லா சேனல்களிலுமே பேட்டி கொடுக்கிறார்கள். திங்கள் காலை வரலாறு காணாத வெற்றியென்று போஸ்டர் ஒட்டுகிறார்கள். சினிமாக்காரர்கள் தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்களா அல்லது மக்களை ஏமாற்றுகிறார்களா என்று புரியவில்லை.

திரைப்படத் தயாரிப்புக்கு செய்யப்படும் செலவுக்கு இணையாக விளம்பரங்களுக்கும் செலவு செய்கிறார்கள். சுமாரான அல்லது மோசமான படத்தை விளம்பரம் மூலமாக வெற்றியடையச் செய்ய முடியுமென்று நம்புகிறார்கள். விளம்பரக் கட்டுப்பாடு பற்றி முன்பு திரைத்துறையினர் பேசினார்கள். பத்திரிகைகளில் வெளியிடப்படும் விளம்பரங்களுக்கு கட்டுப்பாடுகளை கொண்டுவந்தார்கள். ஆனால் டிவி சேனல்களுக்கு வழங்கப்படும் வீண் விளம்பரங்கள் குறித்து யாருக்கும் அக்கறையில்லை. விளம்பரங்களை குறைத்துவிட்டால் ‘சேட்டிலைட் ரைட்ஸ்’ மூலம் கிடைக்கக்கூடிய வருமானம் குறைந்துவிடுமோவென்று அவர்களுக்கு அச்சம்.

திருட்டு டிவிடி, ஆன்லைன் பைரஸி மூலமாக தமிழகத்தில் ஒரு தியேட்டருக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய வருவாய் ஐம்பது சதவிகிதம் வரை சமீபகாலமாக குறைந்துவிட்டதாக ஆய்வுகள் சொல்கின்றன. ஆந்திரா, கேரளா, கர்நாடகம் ஆகிய தென் மாநிலங்களில், ஒரு புதுப்படம் வெளிவந்து குறைந்தபட்சம் ஒரு மாதத்துக்கு பைரஸியால் வசூல் பாதிப்பு இல்லை என்கிற நிலைமையை அங்கிருக்கும் அரசாங்கங்களும், திரைப்படத்துறையும் உறுதிப்படுத்தி இருக்கின்றன.

இந்த வீடியோ பைரஸிக்கு எதிராக சமீபத்தில் எப்போதாவது திரைப்படச் சங்கங்கள் போராட்டம் நடத்தியிருக்கிறதா. ஒட்டுமொத்த சங்கங்களும் முதல்வரை சந்தித்து தங்கள் தொழிலுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை சரிசெய்ய சொல்லி கோரிக்கை வைத்திருக்கிறார்களா. தொழிலின் அடிப்படையே ஆட்டம் கண்டுவிட்ட நிலையிலும் இன்னும் திரைத்துறையினர் ஏன் மெத்தனமாக இருக்கிறார்கள் என்கிற கேள்விக்கு விடையே இல்லை.

தீர்வு உண்டா?

தீர்க்கப்படாத பிரச்சினைகள் உலகத்திலேயே இல்லை. திரைப்பட வெளியீட்டு முறைகளில் சில மாற்றங்களை கொண்டுவருவதின் மூலம், தமிழ் சினிமாவை லாபகரமான தொழிலாக மாற்றலாமென்று சினிமா கார்ப்பரேட் நிறுவனமான டிஸ்னி-யூடிவி மோஷன் பிக்சர்ஸின் தென்னக தலைமை அதிகாரியான கோ.தனஞ்செயன் கூறுகிறார்.

“டிஜிட்டல் புரட்சியால் படங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை. பணம் முதலீடு செய்ய தயாராக இருக்கும் யார் வேண்டுமானாலும் இன்று தயாரிப்பாளர் ஆகிவிடலாம். எதையும் யாரும் தடுக்க முடியாது. ஆனால் முறைப்படுத்த முடியும்.

நம்முடைய மாநிலத்தில் திரையரங்குகள் குறைவு. அப்படிப்பட்ட நிலையில் பண்டிகை நாட்களில் மூன்று, மற்ற வாரங்களில் இரண்டு என்று பேசிவைத்து படங்களை வெளியிட்டால் எல்லாருமே லாபம் பார்க்க முடியும். அல்லது பெருமளவு நஷ்டத்தை தவிர்க்க முடியும்.

பெரிய நடிகர் நடித்த படம், பெரிய நிறுவனம் தயாரித்த படமென்று எல்லா தியேட்டர்களையும் அவர்களே வசப்படுத்துவதை மாற்ற வேண்டும். பெரிய பட்ஜெட் படங்கள் வெளியீட்டுக்கு அதிகபட்சம் முன்னூறு தியேட்டர், நடுத்தர படங்களுக்கு இருநூறு தியேட்டர், குறைந்த பட்ஜெட் படங்களுக்கு நூறு தியேட்டர் என்று ஒதுக்கீடு செய்யலாம். இம்மாதிரி கட்டுப்பாடுகள் கேரளாவில் உண்டு என்பதால் அவர்களது திரைத்துறை கொஞ்சம் லாபகரமாகவே நடக்கிறது என்பது நமக்கு நல்ல முன்னுதாரணம். சிறிய பட்ஜெட் படங்களுக்கு சிறியளவிலான முன்னூறு முதல் நானூறு சீட்டுகள் கொண்ட திரையரங்கங்களாக பார்த்து இடம் ஒதுக்க முன்னுரிமை தரவேண்டும்” என்று தன்னுடைய யோசனையை தீர்வாக முன்வைக்கிறார் தனஞ்செயன்.

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் நடக்கிறது, திரையரங்குகளுக்கு கூட்டம் குறைவாகதான் வருமென்று தெரிந்தும்கூட கோடைவிடுமுறையால் மக்கள் எப்படியும் தியேட்டருக்கு வருவார்கள் என்கிற குருட்டுத்தனமான சூதாட்ட நம்பிக்கையில் வரைமுறையின்றி இஷ்டத்துக்கும் படங்களை வெளியிட்டு வருகிறார்கள். ஏற்கனவே ஓரளவுக்கு வசூல் பார்த்துக் கொண்டிருந்த படங்களின் வசூலையும் சேர்த்து இவர்களே காலி செய்கிறார்கள். பெரிய நடிகர்களின் படங்கள் இல்லாத காலங்களில்தான் புதுமுகங்களின் படங்களையும், சிறிய பட்ஜெட் படங்களையும் வெளியிட முடிகிறது. நாங்கள் என்ன செய்வது என்று நியாயமான கேள்வியைதான் கேட்கிறார்கள். ஆனால் அதற்காக தானே தற்கொலை செய்துக் கொள்வதா?

தனஞ்செயன் முன்வைக்கும் தீர்வினை அனைத்துத் தரப்பும் ஏற்றுக் கொள்வார்களா என்று தெரியவில்லை. ஏனெனில் இன்னும் தியேட்டர் கிடைக்காமல் நானூறு படங்கள், சென்சார் சான்றிதழை காட்டிக்கொண்டு வரிசை கட்டி நிற்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் காட்டாற்று வெள்ளத்தில் காட்டு மரங்களோடு சந்தன மரங்களும் அடித்துச் செல்லும் ஆபத்தை இது குறைக்கும். மோசமான படங்களால், நல்ல படங்களும் வெற்றிவாய்ப்பை இழப்பதை தடுத்து நிறுத்தக்கூடிய வாய்ப்பு நம்மிடமே இருக்கிறது.

ஒளி தெரிகிறதா?

சினிமாத் தொழிலின் அடுத்த வடிவம், எதிர்காலத்தில் செய்யவேண்டிய மாற்றங்கள் பற்றிய விவாதம், அத்தொழிலோடு அவ்வளவாக நேரடித் தொடர்பில்லாத மாற்று சினிமா ஆர்வலர்களால் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகிறது. சினிமாவை கலையாக முன்னெடுப்பதுதான் இவர்களது முதன்மைத் தெரிவு. திரைப்படங்களின் உள்ளடக்க ரீதியாகதான் இவர்களது அக்கறை இருக்கிறது. ஆனால் வணிகமாகவும் பார்க்கவேண்டிய கட்டாயம் திரைத்துறை சங்கங்களுக்கு உண்டு.

சமீபத்தில் கவிஞர் வைரமுத்து சினிமா விழா ஒன்றில் சினிமாவின் எதிர்காலம் குறித்து தன்னுடைய கருத்தை சொன்னார். “இந்த நூற்றாண்டின் இறுதியில் திரைத்துறையில் மாற்றம் வரும். அப்போது சினிமா திரையரங்குகளை தாண்டி நேரடியாக மக்களிடம் வரும். வினியோகஸ்தர்களின் தேவை தீர்ந்துவிடும். குறைந்த முதலீட்டில் நிறைய படங்கள் வரும். வீட்டுக்கு வீடு செய்தித்தாள் வீசி செல்லப்படுவதை போல, புதுப்பட டிவிடிக்கள் வீசப்படும். தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும். காலம் மாறும். கலை மேம்படும்”. கவிஞர் அல்லவா? அபாரமான கற்பனையில் இத்துறையின் எதிர்காலம் குறித்த சித்திரத்தை நம் மனதில் ஏற்றுகிறார்.

உண்மையில் இப்போதைக்கு தமிழ் சினிமாவின் எதிர்காலத்தை கணிப்பது என்பது யானையை தடவிப் பார்க்கும் பார்வையற்றோரின் நிலையாகவே அனைத்துத் தரப்புக்கும் இருக்கிறது. ஏதேனும் ஒரு வெளிச்சக்கீற்று தெரியாமலா போய்விடும்?



எக்ஸ்ட்ரா மேட்டர் :


தாதாவின் லொள்ளு

பெரிய நடிகர்களின் படங்களுக்காக தியேட்டர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு விடுவதால், சிறிய படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு காலம் காலமாகவே தமிழ் திரையுலகில் சொல்லப்பட்டு வருகிறது. சமீபகாலமாக பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் தியேட்டர்களை ஆக்கிரமித்து மற்றவர்களின் படங்களின் வெளியீட்டுக்கு சிக்கல் ஏற்படுத்தி வருகிறார்கள். இது பற்றி முணுமுணுப்பு தொடர்ந்துக் கொண்டிருந்தாலும் பெரிய ஆட்களை பகைத்துக்கொள்ள விருப்பமின்றி யாரும் நேரடியாக வாய் திறப்பதில்லை. மன்சூர் அலிகானின் ‘லொள்ளு தாதா பராக் பராக்’ படம் வெளியிடப்பட முடியாமல் முடங்கிக் கிடந்தபோது ஆவேசமாக ஒரு விளம்பரம் வெளியிட்டார். “எல்லா திரையையும் நீங்களே எடுத்துக்கிட்டா, என் படத்தை என்ன கழிவறையிலும், கேண்டீனிலுமா ஓட்டுவேன்” என்கிற வாசகங்களோடு வெளிவந்த அந்த விளம்பரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


கார்ப்பரேட் சதி

கார்ப்பரேட் நிறுவனங்கள் சொந்தமாக படங்களை தயாரிப்பதோடு, மற்ற தயாரிப்பாளர்களின் படங்களையும் மொத்தமாக விலை கொடுத்து வாங்கி விடுகிறார்கள். தாங்கள் வெளியிடும் ஒரு திரைப்படம் படுதோல்வி அடைந்துவிட்டாலும், உடனடியாக தியேட்டரிலிருந்து அந்த படத்தை தூக்குவதில்லை. அவ்வாறு தூக்கினால் வேறு படம் வெளியாகி வெற்றி பெற்று தங்களது அடுத்த படவெளியீட்டுக்கு தியேட்டர் கிடைக்காதோ என்று அஞ்சி, நஷ்டம் அடைந்தாலும் பரவாயில்லை என்று தோல்விப்படத்தையே தொடர்ந்து ஓட்டுகிறார்கள். இதனாலேயே நல்ல தியேட்டர்கள் கிடைக்காமல், கிடைத்த தியேட்டரில் படத்தை வெளியிட்டு பலத்த நஷ்டத்துக்கு சிறு தயாரிப்பாளர்கள் ஆளாக வேண்டியிருக்கிறது.


பவர் ஸ்டார்களின் கூத்து

ஒருபக்கம் நிறைய படங்கள் வெளியாகி தொடர்ச்சியாக தோல்வி. இன்னொரு பக்கம் படங்கள் வெளியிட சரியான தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்று இரண்டு நேரெதிர் பிரச்சினைகளுக்கு நடுவே அவ்வப்போது பவர் ஸ்டார் மாதிரி திடீர் ஆட்கள் தோன்றி ஒட்டுமொத்த சூழலையும் பகடிக்கு உள்ளாக்குகிறார்கள். படு கோராமையாக எடுக்கப்படும் ‘பவர் ஸ்டார்’ வகை படங்கள் ஆளே இல்லாத தியேட்டர்களில் அனாயசமாக நூறு நாள், இரு நாள் ஓட்டப்படுகிறது. பணத்தை தண்ணீராக செலவழித்து ஒருநாள் கூட உருப்படியாக ஓட வக்கில்லாத தங்கள் படங்களுக்கு நூறு நாள், இருநூறு நாள் போஸ்டர் ஒட்டி, வெற்றிவிழா கொண்டாடி சினிமா இண்டஸ்ட்ரியையே பகடிக்குள்ளாக்குகிறார்கள். முன்பு ஜே.கே.ரித்தீஷ், இப்போது பாஸ் என்று இந்த திடீர் சினிமாக்காரர்களால் கலகலத்துப் போயிருக்கிறது கோடம்பாக்கம்.


கோச்சடையான்


போனவாரம் வெளியாகியிருக்கும் கோச்சடையான் ஒரே காம்ப்ளக்ஸில் இருக்கும் அனைத்துத் தியேட்டர்களின் திரையையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது. “கோடை விடுமுறையில்தான் கொஞ்சம் காசு பார்க்க முடியும் என்று நினைத்தால், இவர்களே எல்லா மெயின் தியேட்டர்களையும் பிடித்துக் கொண்டு அநியாயமாக சம்பாதிக்கிறார்கள்என்று புலம்பினார் சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர் ஒருவர்.

(நன்றி : புதிய தலைமுறை)

5 கருத்துகள்:

  1. Very good article..but you forgot to speak about Artist Salary everyone is being paid heavily & 60% of the production cost is incurred only on Tehcnician Salary..how r they planning to reduce it?? How will they look at alternative source of Income DTH, DVD, Online release cant depend only on theatre income alone..

    பதிலளிநீக்கு
  2. Respected YuvaKrishna ji,
    i am one of the regular visitor's your blog. I wish to publish my Blogs here. this is for who are suffering & loss in the share market. If they wish 'll ready to help them related this field .i am giving free services.if you wish you 'll publish my blogs here this is my blog ID : http://tradersguides.blogspot.in/
    Thanks in advance
    Regds P.Bharath

    பதிலளிநீக்கு
  3. /திருட்டு டிவிடி, ஆன்லைன் பைரஸி மூலமாக தமிழகத்தில் ஒரு தியேட்டருக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய வருவாய் ஐம்பது சதவிகிதம் வரை சமீபகாலமாக குறைந்துவிட்டதாக ஆய்வுகள் சொல்கின்றன./
    Even though Govt streamlined the ticket prices many theatres ( not all ) are charging heavily through other sources which creates frusturation for public and they think its better to watch through pirated DVD's or in online . In addition to ticket cost , theatres are charging processing fee , high parking fee , rental for 3D glasses etc etc . If they charge reasonably more people will come to theatre . Still Theatres like Udayam and AVM Rajeswari charges reasonably for parking and other chanrges .

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா1:12 AM, ஜூன் 06, 2014

    Stop watching movies and cricket. As a country we are wasting lot of man hours by watching movies and cricket. Not only this movie stars have their say in politics and other social issues as well. This is not good for society.
    Nellai

    பதிலளிநீக்கு
  5. "செல்போனில் வீடியோ எடுப்பது மாதிரி எடுத்துத் தொலைக்கிறார்கள். இதனால் ஏகப்பட்ட எண்ணிக்கையில் மொக்கைப்படங்கள் வெளிவந்து படுதோல்வி அடைந்து இண்டஸ்ட்ரிக்கே பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. எதிர்காலத்தில் இதனால் தொழில்நுட்பம் மீதே அவநம்பிக்கை வந்துவிடக்கூடிய ஆபத்து இருக்கிறது” என்று அச்சப்படுகிறார் கேமிராமேன் விஜய் ஆம்ஸ்ட்ராங்.

    சினிமாவில் உதவி இயக்குநர்கள் நடத்தப்படும் விதத்தைப் பார்த்தவர்கள்தான் சுயேச்சையாக படம் எடுக்க முன் வருகிறார்கள்.

    பதிலளிநீக்கு