“யார் யாரோ வர்றாங்க. தேவருக்கு நூற்றாண்டு விழான்னு ஆரம்பிக்கிறாங்க. பேஷா செய்யலாமேன்னு சொல்றேன். போயி கலந்து பேசிட்டு உடனே வர்றோமுன்னு கிளம்புறாங்க. அவ்வளவுதான். அப்புறம் என்ன ஆனாங்கன்னே தெரியாது. தமிழ் சினிமாவுக்கு தேவர் எவ்வளவு பங்களிப்பு செஞ்சிருக்காரு. எவ்வளவு சாதனைகளை நிகழ்த்திக் காட்டியிருக்காரு. எத்தனை பேருக்கு வாழ்க்கை கொடுத்திருக்காரு. வள்ளலா வாரி வாரி வழங்கியிருக்காரே. கருத்து கட்சி வேறுபாடுகளை மறந்து எல்லாருமா சேர்ந்து எவ்வளவு பிரும்மாண்டமா நடத்திக் காட்டியிருக்கணும். மறந்துவிடக்கூடிய மனிதரா அவரு. வயசு மட்டும் ஒத்துழைச்சிருந்தா நானே ஆடி, ஓடி செஞ்சிருப்பேன்” கலைஞானத்தின் கண்களில் கடந்தகாலம் நிழலாடுகிறது.
எட்டு வயதில் டூரிங் தியேட்டரில் முறுக்கு விற்றுக் கொண்டிருந்த கலைஞானம், பிற்பாடு முப்பது படங்களுக்கு கதை எழுதி, நூற்றுக்கணக்கான படங்களின் திரைக்கதை விவாதங்களில் பங்குபெற்று, தயாரிப்பாளராகவும் உயர்ந்தவர். ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் தேவரின் கதை இலாகா அவ்வளவு பிரபலம். திரைப்படத்தின் டைட்டிலிலேயே ‘கதை : தேவர் கதை இலாகா’ என்று பெயர் வரும்போது ரசிகர்கள் கைத்தட்டி மகிழ்வார்கள். அந்த பிரசித்தி பெற்ற கதை இலாகாவின் தூண்களில் ஒருவராக இருந்தவர் கலைஞானம்.
சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் குறித்த தன்னுடைய நினைவலைகளை தினகரன் தீபாவளி மலருக்காக பகிர்ந்துக் கொண்டார்.
“எல்லாம் தேவரோட ஆசி. நான் நல்லா இருக்கணும்னு முதல் சந்திப்பிலேயே விரும்பினவரு அவரு. அப்போதான் சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறிக்கிட்டிருந்தேன். சிவம்னு ஒருத்தரு தேவரண்ணனோட குழுவில் இருந்தவரு. அவர்தான் என்னை அண்ணன் கிட்டே அழைச்சிட்டுப் போனாரு.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு நான் எழுதிக்கொடுத்த படங்களோட பேரையெல்லாம் வரிசையா சொன்னவரு, ‘இதையெல்லாம் நீதானே எழுதினே’ன்னு கேட்டாரு. ‘ஆமாம்’னு சொன்னேன். ‘கோபாலகிருஷ்ணனே அருமையா கதை சொல்லுவாரு. அவரையே நீ கதை சொல்லி அசத்தியிருக்கே. கெட்டிகாரன் தாம்பா’ன்னு பாராட்டினாரு.
கொஞ்ச நேரம் பேசிட்டு, குடும்ப நிலவரத்தை விசாரிச்சாரு. அப்போ நான் பெருசா சம்பாதிக்கலை. அதை சொன்னதும், ‘அடப்பாவி, இவ்வளவு ஹிட்டு கொடுத்துட்டு இன்னும் ஒண்ணும் சேர்த்து வைக்கலையா?’ன்னு கேட்டாரு.
உடனே தன்னோட தம்பிகிட்டே சொல்லி பத்தாயிரம் ரூபாய் எடுத்துக்கிட்டு வரச் சொன்னாரு. என் கையிலே கொடுத்து, ‘இது வெறும் அட்வான்ஸ்தான். இதை எடுத்துட்டு ஊருக்குப் போய் ஏதாவது நிலபுலன் வாங்கி போட்டுட்டு வா. எதிர்காலத்துக்கு உதவும். மத்ததையெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்’னு சொன்னாரு. இப்படிதான் நான் தேவர் கிட்டே சேர்ந்தேன்.
தேவரோட இருந்த ஒவ்வொருத்தருக்கும் இதுமாதிரிதான் அனுபவம் இருக்கும். அறிமுகமானவுடனேயே ஒருத்தர் மேலே அளவில்லாமே அக்கறை காட்ட தேவராலே மட்டும்தான் முடியும்.
தேவர் கிட்டே வேலைக்கு சேர்ந்ததுமே தினமும் ஒரு கதை சொல்ல சொல்லுவாரு. கதை இலாகாவை சேர்ந்தவங்களுக்கு இது மட்டும்தான் வேலை. நாங்க சொல்லிக்கிட்டே இருப்போம். அவரு கேட்டுக்கிட்டே இருப்பாரு. பிடிக்கலைன்னா துப்பிடுவாரு. பிடிச்சிருந்தா உடனே ஓக்கே பண்ணி வெச்சுப்பாரு. ஏதாவது படம் படப்பிடிப்பிலே இருந்தாகூட கேப் விடமாட்டார். நாங்க அடுத்தடுத்த படத்துக்கு கதை சொல்லிக்கிட்டே இருக்கணும். எங்களையெல்லாம் ஆசையா ‘டேய் கதைக்காரனுங்களா...’ன்னுதான் கூப்பிடுவாரு.
அவரும் சுவாரஸ்யமா கதை சொல்லுவாரு. அண்ணன் சொல்ல ஆரம்பிச்சாருன்னா நேரம் போறதே தெரியாது. அவரோட வாழ்க்கையோட ஒவ்வொரு அங்குலத்தையும் மனசு திறந்து எங்களிடம் சொல்லியிருக்காரு.
சின்ன வயசுலே அண்ணன் எக்சர்சைஸ் எல்லாம் பண்ணி உடம்பை நல்லா பலமா வெச்சிருப்பாரு. கோயமுத்தூர் ராமநாதபுரம் பகுதியிலே ‘மாருதி உடற்பயிற்சி நிலையம்’னு இருந்துச்சி. அங்கேதான் அண்ணன் பயிற்சி பண்ணுவாரு. அவருக்கு சினிமாவிலே பெரிய ஸ்டண்ட் கலைஞரா வரணும்னு ஆசை. அங்கேதான் எம்.ஜி.ஆரும் உடற்பயிற்சி செய்ய வருவார். இப்படியாக ரெண்டு பேருக்கும் நட்பு மலர்ந்துச்சி.
அண்ணன் மாச சம்பளத்துக்கு ஜூபிடர் பிக்சர்ஸ்லே வேலைக்கு சேர்ந்துட்டாரு. ஷூட்டிங் இருந்தாலும் சரி. இல்லைன்னாலும் சரி. அவருக்கு மாசாமாசம் சரியா சம்பளம் வந்துடும். ஆனா அப்போ எம்.ஜி.ஆர் காண்ட்ராக்டுலே இல்லை. அதனாலே அவருக்கு வேலை இருந்தாதான் காசு. குடும்ப கஷ்டம்.
ஒருமுறை தேவரண்ணன் எம்.ஜி.ஆர் வீட்டு வழியா நடந்து போய்க்கிட்டிருக்காரு. அப்போ எம்.ஜி.ஆரோட தாய் சத்யாம்மா தெருவிலே மிரண்டுப்போய் நின்னுக்கிட்டிருந்தாங்க. என்ன்ன்னு இவரு கேட்டிருக்காரு. ‘காசு வாங்கிட்டு வர்றேன்னு முதலாளியை பார்க்க ராமச்சந்திரன் போயிருக்கான். அவன் வந்து காசு கொடுத்தப்புறம்தான் அரிசி வாங்கி சமைக்கணும். இப்பவே இருட்டிடிச்சி. புள்ளை பசியோட வருவான். என்ன செய்யுறதுன்னு தெரியலை’ன்னு அம்மா சொல்லியிருக்காங்க. தேவருக்கு அப்படியே ஒரு மாதிரி ஆயிடிச்சி.
உடனே தன்னோட வீட்டுக்கு ஓடிப்போனவரு சமையலறைக்கு போய் அரிசிப்பானையிலே இருந்து அரிசியை எடுத்து தன்னோட சட்டை, டவுசர் பாக்கெட்டில் எல்லாம் நிரப்பிக்கிட்டு எம்.ஜி.ஆர் வீட்டுக்கு ஓடியிருக்காரு. அந்த அரிசியை கொடுத்து சீக்கிரமா சோறு வடிச்சி வைங்கம்மான்னு சொல்லியிருக்காரு.
நைட்டு வீட்டுக்கு வந்துப் பார்த்த எம்.ஜி.ஆர், சாதம் தயாரா இருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கார். சத்யாம்மா என்ன நடந்ததுன்னு மகன் கிட்டே சொல்லியிருக்காங்க. அப்படியே நெகிழ்ந்துப் போயிட்டாராம் எம்.ஜி.ஆர்.
பிற்பாடு எம்.ஜி.ஆரை வெச்சி தேவர் எப்படி அதிகப் படங்கள் தயாரிச்சாருங்கிறதுக்கு இந்த சம்பவம் ஒரு முக்கியமான காரணம். ஒருத்தரு மேலே ஒருத்தரு அவ்வளவு அன்பு ஆரம்பத்துலேருந்தே வெச்சிருந்தாங்க.
தேவருக்கு கல்யாணமாகி குழந்தைகள்லாம் பிறந்திருந்தது. சினிமாவையெல்லாம் மறந்துட்டு கோயமுத்தூரில் பால் கடை நடத்திக்கிட்டிருந்தாரு. நேர்மையா வியாபாரம் பார்க்குறவரு என்பதால் பிசினஸ் நல்லா இம்ப்ரூவ் ஆச்சி. பழைய சினிமா ஆளுங்க அப்பப்போ வந்து தேவரை பார்த்து பேசிட்டு போவாங்க. அப்படிதான் ஒருமுறை கேமிராமேன் விஜயனும், நடிகர் எஸ்.ஏ.நடராஜனும் பேசிக்கிட்டிருந்தாங்க.
பேச்சுவாக்கிலே நாமளே படம் தயாரிக்கலாம்னு திட்டம் தீட்டினாங்க. மூணு பேரும் காசு போட்டு படக்கம்பெனி ஆரம்பிச்சாங்க. பால் வியாபாரத்துலே சேர்த்த காசை தேவரண்ணன் முதலீடா போட்டாரு.
படம் பேரு ‘நல்ல தங்கை’. எஸ்.ஏ.நடராஜனே நடித்து இயக்கினார். கதை, வசனம் ஏ.பி.நாகராஜன். நம்பியார், ராஜசுலோசனா, மாதுரிதேவின்னு நடிக நடிகையர் எல்லாம் ஸ்டார்ஸ். படம் பூஜை போட்ட அன்னிக்கே நல்லா வியாபாரம் ஆச்சி. நல்லா வளர்ந்துக்கிட்டிருந்த நேரத்துலே ஒரு பிரச்சினை. பார்ட்னர் ஒருத்தர் கொஞ்சம் ‘அப்படி இப்படி’ புதுமுக நடிகை ஒருத்தர் கிட்டே நடந்துக்கிட்டு, விஷயம் தேவரண்ணன் காதுக்கு வந்துச்சி. இப்படியே போச்சின்னா தன்னோட பேரும் கெட்டுப் போயிடும்னு தேவர் போய் அவரோட சண்டை போட்டாரு. அடிதடி லெவலுக்கு போக அப்புறம் எல்லாரும் வந்து சமரசம் பண்ணி, தேவரண்ணன் தன்னோட பங்கை பிரிச்சி வாங்கிக்கிட்டாரு.
சினிமா ஃபீல்டுக்குள்ளே நுழையணும்னு ஆசைப்பட்டு இப்படி ஆகிப்போச்சேன்னு அவருக்கு வேதனை. ஏ.பி.நாகராஜன்தான் சமாதானப்படுத்தி, ‘நீங்களே தேவர் பிலிம்ஸ் என்கிற பேருலே படக்கம்பெனி ஆரம்பிக்கலாமே?’ன்னு யோசனை சொன்னாரு. தேவருக்கு படக்கம்பெனி ஆரம்பிக்கிற ஐடியாவை விட கம்பெனிக்கு ஏ.பி.என். சொன்ன பேரு ரொம்ப புடிச்சிருந்தது. குடும்பத்தை அப்படியே சென்னைக்கு கூட்டிட்டு வந்துட்டாரு. தி.நகரில் சின்னதா ஒரு ஆபிஸ் போட்டாரு. இப்படிதான் புகழ்பெற்ற தேவர் பிலிம்ஸ் நிறுவனம் தோன்றிச்சி.
முதல் படமே எம்.ஜி.ஆரை வெச்சிதான் தயாரிக்கணும்னு முடிவு பண்ணியிருந்தாரு. அதுதான் ‘தாய்க்குப் பின் தாரம்’. படம் எடுக்குறப்பவே தேவருக்கும், எம்.ஜி.ஆருக்கும் கதையோட முடிவு விஷயத்தில் சின்ன மனஸ்தாபம். இதனாலே அடுத்து ரஞ்சனை வெச்சி நீலமலைத் திருடன் எடுத்தாரு தேவர். இதுவும் வெற்றிப்படம் தான்னாலும் ‘தாய்க்குப் பின் தாரம்’ அடைந்த வெற்றியை தொட முடியலை. அடுத்து ‘செங்கோட்டை சிங்கம்’னு ஒரு படம். இது ஓடலை. ஜெமினியை வெச்சி ‘வாழவைத்த தெய்வம்’ எடுத்தாரு. சுமாராதான் போச்சி. ‘யானைப்பாகன்’, ‘கொங்கு நாட்டு தங்கம்’னு அடுத்தடுத்து ரெண்டு ஃபெய்லியர்.
தேவர் ஃபிலிம்ஸ்லே கலகலத்துப் போயிடிச்சி. இனிமேல் தேவர் அவ்வளவுதான்னு எல்லாரும் அவரை விட்டு விலக ஆரம்பிச்சாங்க. எல்லாத்தையும் செட்டில் பண்ணிட்டு கோயமுத்தூருக்கே திரும்பப்போய் ஏதாவது தொழில் செஞ்சி பிழைச்சுக்கலாம்னு அண்ணன் முடிவெடுத்திருக்காரு. அப்போதான் நாகிரெட்டி நிலைமையை கேள்விப்பட்டு கூப்பிட்டு அனுப்பியிருக்காரு. ‘நீங்க தொடர்ந்து சினிமா தயாரிக்கணும்’னு சொல்லி அவரோட ஸ்டுடியோவில் எந்த வேலையா இருந்தாலும் செஞ்சுக்கலாம். காசு பத்தியெல்லாம் பிற்பாடு பேசிக்கலாம்னு சொல்லிட்டாரு.
சரி. ஒருமுறை முயற்சிக்கலாம்னு அண்ணனும் சாங்ஸ் ரெக்கார்ட் பண்ணிட்டு வேலையை தொடங்கினாரு. அப்போ எம்.ஜி.ஆருக்கு கால் உடைஞ்சிருந்த சமயம். யதேச்சையா அண்ணனும், அவரும் வாகினி ஸ்டுடியோவில் எதிர்படுறாங்க. ஏற்கனவே இருந்த மனஸ்தாபத்தாலே அஞ்சு வருஷம் பிரிஞ்சிருந்த நண்பர்கள் ஒருத்தரை ஒருத்தர் கட்டி தழுவிக்கிறாங்க. தன்னைப் பத்தி பேசாம, எம்.ஜி.ஆரோட நலனைப் பத்தி மட்டுமே விசாரிச்சிக்கிட்டிருந்தாரு தேவர்.
அப்போ எம்.ஜி.ஆர் செஞ்ச ஒரு காரியம் மகத்தானது. தேவரை தன்னோடவே தன் வீட்டுக்கு கூட்டிக்கிட்டுப் போனார். அவரோட தாய் சத்யபாமா படத்துக்கு முன்னாடி ரெண்டு பேரும் மவுனமா நின்னாங்க. ‘அண்ணா! என் தாய் மீது ஆணை. இனிமேல் நீங்க எப்போ என்னை கேட்டாலும் கால்ஷீட் இல்லைன்னு சொல்லமாட்டேன்’னு சத்தியம் பண்ணினாரு.
சத்தியபாமா தாய் சொர்க்கத்திலிருந்தே தேவரை ஆசிர்வதிச்சிருக்கணும். உடனே தான் எடுத்துக்கிட்டிருந்த படத்துக்கு எம்.ஜி.ஆரை ஹீரோவா போட்டாரு. தேவர், படத்துக்கு வெச்ச பேரை பார்த்தோம்னா, அவரு எவ்வளவு பெரிய குசும்புக்காரருன்னு தெரியும். எம்.ஜி.ஆர் செய்த சத்தியத்தை நினைவுறுத்தும் விதமா ‘தாய் சொல்லைத் தட்டாதே’ன்னு பேரு வெச்சாரு.
அதில் தொடங்கி அடுத்தடுத்து எம்.ஜி.ஆரை வெச்சி பதினாறு படம் தயாரிச்சாரு. எம்.ஜி.ஆர் படம் எடுக்கலைன்னா தண்டாயுதபாணி பிலிம்ஸ் பேனரில் மிருகங்களை வெச்சி படம் எடுப்பாரு. பக்திப்படம் எடுப்பாரு. இந்திக்கெல்லாம் போய் ராஜேஷ்கண்ணாவை வெச்சு ‘ஹாத்தி மேரா சாத்தி’யெல்லாம் எடுத்து வெற்றிக்கொடி நாட்டினார். தேவர் பிலிம்ஸ் என்றால் நாடு முழுக்க தெரியுமளவுக்கு கம்பெனியை வளர்த்தார். கதையை முதல்லேயே பக்காவா ரெடி பண்ணி வெச்சுக்கிட்டு குறுகிய காலத்துலே படப்பிடிப்பை முடிச்சி நாற்பது, நாற்பத்தஞ்சி நாளில் முழுப்படத்தையும் எடுத்துடுவாரு. உழைப்புக்கு தாராளமா ஊதியம். அதே நேரத்தில் வேலையில் கறாரான கண்டிப்புங்கிறதுதான் தேவரோட ஃபார்முலா.
தன் கூட இருக்குறவங்களும் தன்னை மாதிரியே முன்னேறனும்னு நெனைக்கிற பரந்த மனசு. என்னை தயாரிப்பாளர் ஆக்கி அழகு பார்க்க விரும்பினார் தேவர். ‘எல்லாத்தையும் நானே கூட இருந்து முடிச்சிக் கொடுக்கறேன்’னு வாக்கும் கொடுத்தார். நானும் உற்சாகமா போய் முதன்முதலா ரஜினியை ஹீரோவா புக் பண்ணினேன். வில்லன் வேஷம் பண்ணிக்கிட்டிருக்குறவரை ஹீரோவாக்குறியே, சரிபடாதுன்னு தேவர் விலகிட்டாரு. அவரு பேச்சை கேட்கலைன்னு என் மேலே கோவம் கூட பட்டாரு.
எப்படியோ கஷ்டப்பட்டு ‘பைரவி’ படத்தை எடுத்து ரிலீஸ் பண்ணினேன். முதல் காட்சி முடிந்ததுமே தேவரண்ணன் கூப்பிட்டு அனுப்பினாரு. ‘நீ ஜெயிச்சிட்டடா’ன்னு சொன்னாரு. எனக்கு குழப்பமாயிடிச்சி. இப்போதானே முதல் காட்சியே முடிந்திருக்கு, அண்ணன் நம்மளை சமாதானப்படுத்த சொல்றாரோன்னு நெனைச்சேன். ‘நீங்க படம் பார்த்த அதே தியேட்டர்லேதாண்டா நானும் மாறுவேஷத்துலே பார்த்தேன். படம் பிரமாதம். நீ ஜெயிச்சிட்டே’ன்னு திரும்பச் சொன்னாரு. அப்போதான் அண்ணன் என் மேலே எவ்வளவு அக்கறையா இருந்திருக்காருன்னு தெரிஞ்சது.
நான் இந்தப் படத்தை தயாரிச்சிக்கிட்டிருந்த நேரத்துலே தினமும் பூஜையிலே உட்கார்ந்து, நான் ஜெயிக்கணும்னுதான் முருகனை வேண்டிக்கிட்டிருந்திருக்காரு. தயாரிப்பாளர் ஆயிட்டதாலே பொம்பளை, தண்ணீன்னு கெட்ட பழக்க வழக்கம் பக்கமா போறேனான்னு ஆளுங்களை வெச்சி கண்காணிச்சி இருக்காரு. அப்படியெல்லாம் இல்லைன்னு தெரிஞ்சதும்தான் என்னோட வெற்றியையே அங்கீகரிச்சாரு.
எந்த ரஜினியை வெச்சி படம் பண்ணக்கூடாதுன்னு அண்ணன் எனக்கு சொன்னாரோ, அதே ரஜினியை வெச்சி மூணு படம் அடுத்தடுத்து பண்ணனும்னு ஆசைப்பட்டாரு. என்னை கதைகூட ரெடி பண்ணச் சொன்னாரு. அந்த படம்தான் ‘தாய் மீது சத்தியம்’.
அதுக்காக அவரோட ஆபிசுக்கு போய் வந்துக்கிட்டு இருந்தேன். ஊட்டியிலே அமிதாப்பச்சனை வெச்சி தேவர் எடுத்துக்கிட்டிருந்த படத்தோட ஷூட்டிங். அதுக்கு கிளம்பிக்கிட்டிருந்தார். ஆபிஸில் அப்போ கொஞ்சம் கையாடல் மாதிரி ஊழல்கள் நடந்து, தேவரண்ணன் கொஞ்சம் மனவருத்தத்தில் இருந்தார். ஒரே நேரத்துலே மூணு படம் எடுக்கற டென்ஷன் வேற. முருகன் படத்துக்கு முன்னாடி நின்னு, “ஏண்டா என்னை இப்படி சோதிக்கறே? சீக்கிரமா என்னை கூப்பிட்டுக்கடா”ன்னு மனமுருக வேண்டினார். எனக்கு அப்படியே பக்குன்னு ஆயிடிச்சி.
மூணு நாள் கழிச்சி செய்தி வந்தது. எங்களை வாழவைத்த தெய்வம் எங்களை விட்டுப் போனது. அவர் கேட்டுக்கிட்ட மாதிரியே முருகன் அவரை அழைச்சிக்கிட்டான். இத்தனைக்கும் தேவரண்ணனுக்கு அப்போ வயசு வெறும் அறுபத்தி நாலுதான். நாற்பது வயசுலேதான் அவரோட சினிமா வாழ்க்கையே தொடங்கிச்சி. மிகக்குறுகிய காலத்தில் அப்படியொரு அமரப்புகழை அடைந்த மகத்தான சாதனையாளர் அவர். சினிமா எப்படி எடுக்கணும்னு கத்துக்கணும்னா, தேவர் என்னவெல்லாம் செஞ்சிருக்காருன்னு தெரிஞ்சிக்கிட்டாலே போதும். ஒரு மனிதன் எப்படி வாழணும்னாலும் அவருதான் எல்லாருக்கும் பாடம்”
(நன்றி : தினகரன் தீபாவளி மலர் 2015)