5 அக்டோபர், 2010

திராவிட இயக்க கருவூலம்!


நமக்கெல்லாம் ஏதாவது குறிப்பெடுக்க வேண்டுமென்றால், அருகிலிருக்கும் உள்ளூர் நூலகத்துக்கு உடனே ஓடுவோம். முதல்வரும், அமைச்சர்களும் எங்கே போகிறார்கள்?

வேறெங்கு? திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையகம் அமைந்திருக்கும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருக்கும் பேராசிரியர் ஆய்வக நூல் நிலையத்துக்குதான். திமுக அறக்கட்டளையால் இலவசமாக நடத்தப்படும் இந்த நூல் நிலையம் 1987ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. எல்லோரையுமே உள்ளே அனுமதித்து விடுவதில்லை. நிஜமாகவே ஏதோ குறிப்புக்காகவோ, ஆய்வுக்காகவோ அல்லது வேறு ஏதேனும் அவசரக் காரியங்களுக்கோ தேவைப்படுகிறது என்பதை விசாரித்து அறிந்துவிட்டே உள்ளே விடுகிறார்கள்.

பொதுவாக ஆய்வு மாணவர்களின் ஆராய்ச்சிக் குறிப்புகளுக்கும் உதவும் நோக்கத்தில் இந்நூலகம் நடத்தப்படுகிறது. ஆசிரியர்களும் தங்களது ஆய்வுக் கட்டுரைகளுக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
சமூகம், இலக்கியம், வாழ்வியல் தொடர்பான நூல்கள் தோராயமாக 35,000 இருக்கிறது. அந்த காலத்து திராவிட நாடு, காஞ்சி, மன்றம், தென்றல் முதலான திராவிட இயக்க ஊடகங்களின் மொத்த இதழ்த் தொகுப்புகள் தொகுத்து வைக்கப்பட்டிருக்கின்றன. தி ஹிந்து, இண்டியன் எக்ஸ்பிரஸ், தினமணி, முரசொலி ஆகிய நாளேடுகளின் கடந்த முப்பதாண்டுகால முழு செய்தித்தாள்களும் இங்கே கிடைக்கும்.

திராவிட இயக்கநூல்களே பெருமளவு பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கிறது. இவற்றையடுத்து தமிழ், தமிழர் வாழ்வியல் தொடர்பான பண்டைய நூல்கள் ஏராளம். பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் எழுதிய நூல்களும், அவர்கள் தொடர்பாக மற்றவர்கள் எழுதிய நூல்கள் அனைத்தும் தனித்தனி அடுக்குகளில் அடுக்கப்பட்டிருக்கின்றன.

நல்ல வசதியான பெரிய அரங்கு. அமர்ந்து குறிப்பெடுத்துக்கொள்ள வாகாக சிறப்பானமுறையில் மேஜை நாற்காலிகள் என்று வசதி செய்யப்பட்டிருக்கிறது. பேராசிரியர் ஆய்வக நூல் நிலையத்துக்குள் நுழைந்தால் தமிழகத்தின் எழுபத்தைந்து ஆண்டுகால வரலாற்றுக்குள் பிரவேசிக்கலாம்.

4 அக்டோபர், 2010

ஸ்ரீராமருக்கே ஜெயம்!

இராமர் பாலம் கட்டப்பட்டபோது எடுத்த வண்ணப்படம். அணில் அப்போது வேலையில் பிஸியாக இருந்ததால் படத்தில் இல்லை.

உலகம் போற்றும் உத்தம பாரதம் புண்ணியபூமிதான் என்பதை மீண்டுமொரு முறை அலகாபாத் உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பின் வாயிலாக உறுதி செய்திருக்கிறது. மாட்சிமை பொருந்திய இந்த உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு மூன்றில் இரண்டு பங்கு நியாயமான தீர்ப்பினை வழங்கியிருக்கிறது. தீர்ப்பு வழங்கிய இருவரில் தரம்வீர் ஷர்மா மற்றும் சுதிர் அகர்வால் இருவரும் புண்ணிய மதத்தைச் சார்ந்தவர்கள். மீதியிருக்கும் ஒருவரான சிக்பத் உல்லா கான் மட்டும் முல்லா மதத்தைச் சார்ந்தவர். நாட்டை ஆளும் அண்டோமேனியாவின் மிஷினரி மதத்தைச் சார்ந்தவர் யாரும் இந்த குழுவில் இல்லை என்பதே ஹிந்துக்களுக்கு ஆறுதலான ஒரு விஷயம்.

ஷர்மா மற்றும் அகர்வால் இருவரும் ஸ்ரீராமரின் பிறப்பை உறுதி செய்திருக்கிறார்கள். அயோத்தியில் பாபரால் கட்டப்பட்ட கட்டடத்தின் முக்கியமான பகுதியில்தான் தசரதபிரானின் அரண்மனை இருந்ததாகவும், குறிப்பாக மசூதியின் முக்கியமான கோபுர மாடம் இருந்தப் பகுதியில்தான் ஸ்ரீராமர் அவதரித்ததாகவும் தங்களது தீர்ப்பில் உறுதியாக சொல்லியிருக்கிறார்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஹிந்து மாநிலம், உலகுக்கு தத்து தந்திருக்கும் உலகப்புகழ் தங்கத்தாரகை வழக்கம்போல தீர்ப்பினை வரவேற்று ஹிந்து மக்களின் வயிற்றில் பால்வார்த்திருக்கிறார். அகிலம் காக்கும் அம்மா கரசேவைக்கு செங்கல் அனுப்பி வைத்தவர் ஆயிற்றே? அவரிடமிருந்து மாற்று விமர்சனம் வந்திருந்தால்தான் நாம் ஆச்சரியம் கொள்ள ஏதுவாக அமைந்திருக்கும். ஸ்ரீமான் அத்வானி, ஸ்ரீமான் நரேந்திரமோடி வரிசையில் ஹிந்துஸ்தானத்தின் ஹிந்துமக்களுக்கு அபிமான தலைவராக புரட்சித்தலைவி தங்கத்தாரகை அவர்கள்தான் விளங்குகிறார் என்பது மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

அம்மாவின் அறிவுப்பூர்வமான அறிக்கை விடுத்திருக்கும் விளைவு தமிழ் ஹிந்துச்சூழலில் மிக முக்கியமானது. முன்னாள் திம்மிக்களாக விளங்கிய ஸ்ரீமான் கோபாலசாமி, ஸ்ரீமான் நெடுமாறன் ஆகியோர் இத்தீர்ப்பு குறித்து கிஞ்சித்தும் வாய்திறந்துவிட முடியாதபடி புரட்சித்தலைவியின் அறிக்கை அவர்களது வாயை திருநூல் கொண்டு கட்டிப்போட்டிருக்கிறது. உளறலுக்குப் பெயர்போன கம்யூனிஸ்டுகளும் கூட அம்மாவின் புண்ணியக் கட்டுப்பாட்டில் இருப்பதால் வழக்கமான உளறலை உளறித்தள்ளாமல் வாய்மூடி மவுனிகளாக மாறினார்கள். நம்மூர் தேசியத் திராவிட திம்மிக்கும் வேறு வழியில்லை, தீர்ப்பை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

"ஸ்ரீராமர் எந்த கல்லூரியில் பொறியியல் படித்தார்?" என்று முன்பு எள்ளிநகையாடிய மூத்த திராவிடத் திம்மி இப்போது எங்கேபோய் தன் முகத்தை வைத்துக் கொள்ளப் போகிறார் என்பதுதான் இப்போது ஹிந்துமக்கள் முன்பாக வைக்கப்பட்டிருக்கும் இன்றியமையாத கேள்வியாக இருக்கிறது. மாட்சிமை பொருந்திய நீதிபதிகளே ஸ்ரீராமர் பதினேழு இலட்சத்து இருபத்தி எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக அயோத்தியில் அவதரித்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அனேகமாக அவர்களிடம் சாட்சியாக தசரதபிரானின் திருமனைவியர்க்கு பிரசவம் பார்த்த கூனிக்கிழவி வழங்கிய பிறப்புச் சான்றிதழ், நம் தரப்பு வழக்கறிஞர்கள் மூலமாக சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் என்று தீர்ப்பினைக் கண்ட திருக்கணத்திலேயே உணர்ந்தோம்.

தீர்ப்பினை ஜீரணிக்க இயலாத தீயசக்தியான மூத்தத் திம்மி இப்போது ஒரு அறிக்கை விட்டிருக்கிறது. பதினேழு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக ஸ்ரீராமர் பிறந்ததையே உறுதிப்படுத்திவிட்டார்கள் ஆரியர்கள். வெறும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜசோழன் மறைந்ததை உறுதிப்படுத்த திராவிடர்களிடம் ஆவணங்கள் இல்லையே என்று புலம்பித் தள்ளியிருக்கிறது. மூத்தத் திம்மிக்கு இது முதல் அடி. அடுத்த அடியை மாட்சிமை பொருந்திய உச்சநீதிமன்றம் இன்னும் சில காலத்தில் வழங்க இருக்கிறது. ஸ்ரீராமர் தலைமையில் ஸ்ரீலட்சுமணர், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீசுக்ரீவர் மற்றும் ஸ்ரீவானரப்படையைச் சேர்ந்த பொறியியல் அறிஞர்கள் பதினேழு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக ஸ்ரீராமேஸ்வரத்திலிருந்து, ஸ்ரீஇலங்கைக்கு கட்டிய பாலம் குறித்தான வழக்கில் இந்த ஸ்ரீத்தீர்ப்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.

ஸ்ரீராமர் பிறந்ததையே ஆதாரப்பூர்வமாக, அறிவியல்பூர்வமாக, ஆவணப்பூர்வமாக நிரூபித்தவர்கள் ஹிந்துஸ்தானத்தின் புனித எண்பது கோடி ஹிந்துக்கள். ஸ்ரீராமர் பாலம் கட்டியதையா நிரூபிக்க முடியாமல் தோல்வி அடைவார்கள். ஸ்ரீராமர் எந்த கல்லூரியில் படித்தார்? என்ன பட்டம் வாங்கினார்? என்பதையெல்லாம் ஸ்ரீ ஹிந்துக்களின் வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் பல்கலைக்கழக ஆவணங்கள் மூலமாக நிரூபிப்பார்கள். அப்போது மூத்தத்திம்மியின் தீயக்கேள்விகளுக்கு திருவிடை கிடைக்கும். ஸ்ரீராமருக்கு பாலம் கட்ட உதவிய அணிலும் கூட நீதிப்படியேறி சாட்சி சொல்லத்தான் போகிறது. ஸ்ரீராமரின் பாலத்தை இடித்த மூத்தத் திம்மியே, அப்பாலத்தை வானரங்கள் துணைகொண்டு மீண்டும் கட்டிக் கொடுத்தாக வேண்டுமென்று தீர்ப்பு வரத்தான் போகிறது. அந்நாள்தான் ஹிந்துஸ்தானத்தின் எண்பதுகோடி ஹிந்துக்களின் வரலாற்றில் பொன்னாள்.

ஸ்ரீராமர் வானரங்கள் துணைகொண்டு பாலம் கட்டியபோது எடுத்த வண்ணப்படத்தை இங்கேயே பிரசுரித்திருக்கிறோம். இதையும் ஆதாரமாக எடுத்துக் கொண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகளால் நீதிநிலைநாட்டப்படுவது உறுதி. இறுதிவெற்றி ஸ்ரீராமருக்கே!

1 அக்டோபர், 2010

எந்திரன் (ஐ.எஸ்.ஓ. 9001 தரச்சான்று பெற்ற ஒரே விமர்சனம்)

திரையில் ஒரு ரஜினி தெரிந்தாலே வான வேடிக்கைதான். திரை முழுக்க நூற்றுக்கணக்கான ரஜினிகள் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தால்? வேறென்ன.. அதகளம்தான். இதுவரை இந்தியத் திரையுலகம் காணாத பிரம்மாண்டம். துல்லியமான தொழில்நுட்பம். சன்பிக்சர்ஸின் முதல் தயாரிப்பே சூப்பர் டூப்பர் ஹிட்டுதான்!

எந்திரன் ஷங்கர் படமா, கலாநிதிமாறன் படமா? என்றெல்லாம் கேள்வியே எழவில்லை. இது முழுக்க முழுக்க ரஜினி படம். அண்ணாமலை, பாட்ஷாவுக்கு பிறகு முதுகில் சுமந்த இமேஜ் மூட்டையை இறக்கிவைத்துவிட்டு, கேஷூவலாக நடித்துத் தள்ளியிருக்கிறார். ரஜினிதான் இருக்கிறாரே? கதைக்கு ரொம்பவும் மெனக்கெட வேண்டாமென்று ஷங்கர் முடிவெடுத்திருக்கலாம். ரஜினியின் கரிஷ்மா மீது பாரத்தைப் போட்டுவிட்டு, சீன்களை செதுக்கியிருக்கிறார். ஒவ்வொரு பிரேமுக்கும் விசிலும், கைத்தட்டலும்.. சந்திரனுக்கே கேட்குமளவுக்கு கரகோஷம்.

குறிப்பாக வில்லன் ரோபோ. பாடி லேங்குவேஜூக்காக ரஜினி ரொம்ப மெனக்கெடவில்லை. மூன்று முகம் அலெக்ஸ் பாண்டியனை அச்சுஅசலாக பிரசண்ட் செய்கிறார். வசீகரன் கேரக்டருக்கு சந்திரமுகி ரஜினி. 'ரொமான்ஸ்' ரோபோவுக்கு மட்டும் அந்நியன் ரெமோவை கடன் வாங்கியிருக்கிறார். சண்டைக் காட்சிகளிலும் அந்நியன் நெடி அதிகம்.

முதல் பாதி டைட்டாக பேக்கப் செய்யப்பட்ட காமெடி மசாலா. இரண்டாம் பாதி ஆக்‌ஷன் பேக்கேஜ் என்றாலும் ஆங்காங்கே லைட்டாக தொய்வு. ஷங்கருக்கு ஓவர் கிராபிக்ஸ் ஆர்வம். அசத்தலான படத்துக்கு திருஷ்டிபொட்டாக க்ளைமேக்ஸ். இராம.நாராயணன் கொஞ்சம் ஹைடெக்காக, தாராளாமாக செலவழித்து எடுத்தால் இதைவிட பர்ஃபெக்டான க்ளைமேக்ஸை எடுத்துவிடுவார். ரஜினி இருக்க காமெடிக்கு தனியாக மூளையைக் கசக்க வேண்டுமாவென்று ஷங்கர் அசட்டையாக இருந்திருக்கிறார். சந்தானமும், கருணாஸும் கிச்சுகிச்சு கூட மூட்டவில்லை. "என் கிட்டே இல்லாதது அவனுங்க கிட்டே என்ன இருக்கு?" என்று தன்னுடைய பாஸை, ரோபோ கலாய்க்கும் சீன் சூப்பர். இந்த காமெடியை க்ளைமேக்ஸில் நெகிழ்ச்சிக்காக கண்டினியூ செய்திருப்பதிலும் ஷங்கரின் அனுபவம் பளீர்.

ஹாலிவுட்காரர்கள் கூட படம்பிடிக்க முடியாத பெரு நாட்டில் பாடல்காட்சி படப்பிடிப்பு, அயல்நாட்டுத் தரத்தில் இசைக்கோர்ப்பு, உலக அழகி ஹீரோயின் என்றெல்லாம் தினம் தினம் சன்பிக்சர்ஸ் டுமீல் விட்டுக் கொண்டிருந்தாலும், படம் பார்க்கும்போது ரஜினி இருக்க, அதெல்லாம் எதுக்கு என்று தோன்றுகிறது. ஐஸ்வர்யாராயை பேஸ்மெண்டாக வைத்துதான் திரைக்கதை என்றாலும்கூட சதாவை ஹீரோயினாக போட்டிருந்தாலும் இதே எஃபெக்ட் கிடைத்திருக்கும்.

எந்திரப்படையை அடக்க நகர் முழுக்க மின்சாரவாரியத்தின் துணைகொண்டு மின்சாரத்தை நிறுத்திவிடுகிறார் வசீகரன். பேட்டரி சார்ஜ் செய்யமுடியாமல் எந்திரர்கள் ஒழிந்துவிடுவார்கள் என்பது அவர் திட்டம். ஆனால் புத்திசாலி எந்திரன், சார்ஜூக்கு மாற்றுவழியை கண்டுபிடித்து, மீண்டும் எந்திரப்படையை சண்டைக்கு முன்னெடுப்பது எதிர்பாரா திருப்பம். முதல் பாதியில் வரும் டிரெயின் ஃபைட் ஆவ்ஸம். ரஜினியின் சுறுசுறுப்பைக் காண கண் ரெண்டும் போதாது.

கமலஹாசனோ, ஷாருக்கானோ நடித்திருந்தால் இவ்வளவு கலர்ஃபுல்லாக, கொண்டாட்டமாக எந்திரன் உருவாகியிருக்குமா என்பது சந்தேகமே. இடையில் அஜித்தை வைத்து ஷங்கர் ரோபோவை தயாரிப்பதாக கூட செய்தி வந்தது. ரோபோவாக அஜித் நடித்திருந்தால் இந்த உலகம் தாங்கியிருக்காது.

"அறுபது வயதுக் கிழவன் ஆக்‌ஷன் படத்தில் உலக அழகியோடு காதல் களியாட்டங்களில் ஈடுபடுகிறான்" என்று படம் வருவதற்கு முன்பாக எஸ்.எம்.எஸ்.களிலும், மின்னஞ்சல்களிலும் பெரிதும் கேலி பேசப்பட்டது. ஒரே ஒரு சீனில் கூட ரஜினியின் வயது தெரியாத அளவுக்கு ஒப்பனை, உடை அலங்காரங்கள் அபாரமாக இருக்கிறது. ஐஸ்வர்யாராயோடு ரொமான்ஸ் ரோபோ போடும் ஆட்டம், சான்ஸே இல்லை. விஜய்க்கு அஜித்தோ, சூர்யாவோ போட்டியல்ல. இளம் நாயகர்களுக்கு இன்னமும் டஃப் ஃபைட் கொடுப்பது தி ஒன் அண்ட் ஒன்லி ரஜினி.

எந்திரன் - சினிமா ரசிகர்களுக்கு நிஜமான தீபாவளி!

27 செப்டம்பர், 2010

தளபதி - பர்ஸ்ட் டே, பர்ஸ்ட் ஷோ!

அரைடவுசர் போட்டுக் கொண்டிருந்த காலமது. கமல் ரசிகன் என்று வெளிப்படையாக அறிவித்துக் கொண்டு, ரஜினி ரசிகர்களோடு மூர்க்கமாக மோதிக் கொண்டிருந்தேன். ஆனால் அந்த தீபாவளிக்கு என்னுடைய பர்ஸ்ட் சாய்ஸாக 'தளபதி' தானிருந்தது என்பதை பத்தொன்பது ஆண்டு கழித்து இப்போது வெளிப்படையாக லஜ்ஜையின்றி தெரிவிக்கிறேன். இப்போது எந்திரனுக்கு இருக்கும் ஹைப்பையும், அப்போதைய தளபதிக்கு இருந்த ஹைப்பையும் ஒப்பீடு செய்துப் பார்க்கும்போது, ஏனோ எந்திரனை 'தளபதி'யே வெல்கிறார்.

பி.பி.எல். சான்யோவில் 'ராக்கம்மா கையத் தட்டுவை' எத்தனைமுறை ரீவைண்ட் செய்து கேட்டிருப்பேன் என்பதற்கு கணக்கேயில்லை. தளபதியோடு வெளியான 'குணா'வில் துரதிருஷ்டவசமாக 'கண்மனி' மட்டும்தான் சூப்பர்ஹிட்டு. மாறாக தளபதியில் ஒவ்வொரு பாட்டும் மெகாஹிட்டு. இளையராஜா கமலுக்கு துரோகம் இழைத்துவிட்டார் என்று நொந்துகொண்டேன். அப்போதெல்லாம் தீபாவளிக்கு தீபாவளி ரஜினி-கமல் அட்டகாசம் நிச்சயம். நாயகன் - மனிதன், வெற்றிவிழா - மாப்பிள்ளை, தளபதி - குணா, பாண்டியன் - தேவர்மகன்,  குருதிப்புனல் - முத்து என்று சிலவருட போட்டிகள் நினைவில் நிற்கிறது. போதாதற்கு விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக் படங்களும் ரேஸூக்கு உண்டு.

அபூர்வசகோதரர்கள், மைக்கேல் மதனகாமராஜன் என்று காமெடி கமர்ஷியல் ரூட்டில் போய்க்கொண்டிருந்த கமலுக்கு, பழைய குருடி கதவைத் திறடியென, 91ஆம் ஆண்டு திடீரென்று 'வித்தியாச' மோகம் பொத்துக்கொண்டு வந்துவிட்டிருக்க வேண்டும். 'குணா' படத்தின் ஸ்டில்கள் அவ்வளவாக கவரவில்லை. மாறாக 'தளபதி' கலக்கிக் கொண்டிருந்தார். கேசட் கவரில் (லஹரி கேசட்?) அச்சடிக்கப்பட்டிருந்த ரஜினியின் 'சைட் போஸ்' ஸ்டில் இன்றும் மறக்க முடியாதது. கிளாஸ் ரூமில் செந்தில்தான் கமலை காரணம் காட்டி என்னை வெறுப்பேற்றிக் கொண்டிருப்பான். கமல் ஏன் தான் போயும் போயும் பைத்தியக்காரனாக நடிக்கிறாரோ என்று நொந்துப் போயிருந்தேன்.

எப்படியும் செந்தில் முதல்நாளே தளபதியை பார்த்துவிட்டு, கிளாஸுக்கு வந்து திரைக்கதை சொல்லிக் கொண்டிருப்பான். நாம் 'குணா'வைப் பார்க்காவிட்டால் தலைவருக்கு எவ்வளவு கேவலம் என்று மனச்சாட்சி உறுத்தியது. துரதிருஷ்டவசமாக அந்தக் காலத்தில் என்னைச் சுற்றி இருந்த எல்லோரும் ரஜினி ரசிகர்களாக இருந்து தொலைத்தார்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 'ஒலியும், ஒளியும்' பார்க்கும்போது நான் பட்டபாடு இருக்கிறதே? உஸ்ஸப்பா...

பாடல்காட்சிகளில் கமல் கொஞ்சம் தாராளம், ஏதோ ஒரு பாட்டில் ஜட்டி போட்டுக் கொண்டு நீச்சல் குளத்தில் குளிப்பார். ரஜினியோ உடைவிஷயத்திலும் சரி, ஹீரோயினை காதலிக்கும் விஷயத்திலும் சரி. அநியாயத்துக்கு மிலிட்டரி கண்ணியம். இந்த 'பெண்' சகவாசத்தாலேயே கமலுக்கு கெட்டவன் என்ற இமேஜ் பெண்களிடமும் ஏறிவிட்டிருந்தது. இந்த இமேஜ் லாஜிக்படி பார்த்தால் கமலின் ரசிகனும் கெட்டவனாக, ஆம்பளை லோலாயியாக, இந்த எழவெடுத்த சமூகத்தில் பார்க்கப்படுவது வழக்கமாக இருக்கிறது. 

இந்த ரசிகமனோபாவ லாஜிக்கில் இன்னொரு குளறுபடி ஒன்றினையும் நான் அப்போது கண்டுபிடித்திருந்தேன். எம்.ஜி.ஆரை ரசித்தவர்கள் நிறையபேர் கமலை ரசித்தார்கள். சிவாஜியை ரசித்தவர்கள் ரஜினி ரசிகர்களாக இருந்தார்கள். ஆக்சுவலாக, இது உல்டாவாக இருந்திருக்க வேண்டும். ஆனால் ஏனோ தலைகீழாக இருந்ததை பெரும்பாலான ரசிகர்களிடம் அறிவியல்பூர்வமாக இல்லாமல் வாய்வழியாக எடுத்த ஒரு கணக்கெடுப்பில் உணரமுடிந்தது.

எங்கள் வீட்டிலேயே எனக்கு ஒரு ஜென்மவிரோதி இருந்தாள். என்னுடைய தங்கை. ஜோதி தியேட்டரில் வெளியான எல்லா ரஜினி படத்தையும் வெளியான ரெண்டு நாளிலேயே அப்பா அவளை அழைத்துப்போய் காட்டிவிடுவார். நான் மட்டும்தான் அனாதை. நானாகவே முயற்சி எடுத்துப் போய் கமலை திரையில் பார்த்தால்தான் உண்டு. (அப்பா எம்.ஜி.ஆர். வெறியர் என்றாலும், அரசியல் காரணங்களால் சிவாஜி ரசிகராக கன்வெர்ட் ஆகி பத்தாண்டுகளுக்கு மேல் ஆகியிருந்தது. எனவே சிவாஜி - ரஜினி என்ற தொடர்ச்சியான ரசிக மனோபாவம்). பிற்பாடு தளபதி பார்த்துவிட்டு அப்பா அடித்த கமெண்ட் "ஒவ்வொரு ஃபிரேமுக்கும் கலக்கியிருக்காண்டா. சிவாஜியை மிஞ்சிட்டான்!"

ஆன்லைன் புக்கிங்கெல்லாம் எதிர்காலத்தில் நடக்குமென்ற சாத்தியத்தையே திரையரங்குகள் அறியாத தீபாவளி அது. மூன்று நாட்களுக்கு முன்பாக ரிசர்வேஷன் தொடங்கும். என் பிரெண்டு (கம்) பங்காளி ஒருவனோடு உதயம் காம்ப்ளக்ஸுக்கு சைக்கிளில் போயிருந்தேன். அவனுக்கு தளபதி, எனக்கு குணாவென்று ஒப்பந்தம். கையில் தாராளமாக 50 ரூபாய் இருந்தது. பால்கனி டிக்கெட்டே பண்ணிரண்டோ, பதினைந்தோ என்பதாக நினைவு (உதயத்தில் அப்போது பால்கனி இருந்தது).

வளாகம் முழுக்க மனிதத்தலைகள். 'தளபதி' ஸ்டில் அச்சடிக்கப்பட்ட டி-ஷர்ட்டுகளில் ரஜினி ரசிகர்கள் வளைய வந்து கொண்டிருந்தார்கள். 'குணா' டிஷர்ட் எங்கேயாவது கிடைக்குமாவென்று விசாரிக்க வேண்டுமென முடிவெடுத்துக் கொண்டேன். இடதுபுறம் (பெட்ரோல் பங்கையொட்டி) ரஜினியின் கம்பீர மெகா கட்டவுட். வலதுபுறம் சன்னியாசி வேடத்தில் கமல் கட்டவுட், அய்யகோ. முகப்பில் ஆங்காங்கே கிடைத்த இடத்தில் சிறிய அளவுகளில் விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக்குக்கு எல்லாம் குட்டி குட்டி கட்டவுட். ரிலீஸ் தேதியன்று ரஜினி-கமல் கட்டவுட் இருதரப்பு ரசிகர்கள் மோதலால் இங்கேதான் எரிந்தது.

மடிப்பாக்கம் தவிர்த்த வெளியுலகில் ரஜினியின் நிஜமான மாஸை நான் நேரில் பார்த்த நாள் அதுதான். பத்து மணி ரிசர்வேஷனுக்கு எட்டு மணிக்கு போயிருந்தோம். எங்களுக்கு முன்பாக வரிசையில் குறைந்தபட்சம் 750 பேராவது நின்றிருந்தார்கள். ரிசர்வேஷன் கவுண்டரையே திறக்காமல், ரிசர்வேஷன் சார்ட்டில் முதல் நான்கு நாட்களுக்கு அனைத்து காட்சிகளும் 'ஹவுஸ்ஃபுல்' போட்டிருந்தார்கள். சந்திரனில் வெளியாகிய 'குணா'வுக்கு பெரிய வரவேற்பில்லை. அந்த கவுண்டர் ஓரளவுக்கு சொல்லிக் கொள்ளும்படியான கூட்டம்தான். தளபதி டிக்கெட் கிடைக்க வாய்ப்பேயில்லை என்று தெரிந்ததும் பங்காளி நொந்துப்போனான். இதனால் எனக்கும் 'குணா'வை ரிசர்வ் செய்யும் எண்ணம் போய்விட்டது. ஏற்கனவே பெரியதாக ஆர்வம் இல்லை என்பதும் வேறொரு காரணம்.

தீபாவளி அன்று காலையில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தேன். செந்தில் அண்ணா ப்ரெஷ்ஷாக சைக்கிளில் வந்தார். "குமாரு காலையில் 9 மணி ஷோ ஆல்பட்லே தளபதி இருக்கு. வர்றியா?" மனசுக்குள் சந்தோஷம். இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், "குணா இருந்தா சொல்லுண்ணா" என்று பிகு செய்தேன். செந்தில் அண்ணா கொஞ்சம் வித்தியாசமானவர். இன்றுவரை நான் பார்த்த மனிதர்களில் அவர் ஒருவர்தான் ஜெய்சங்கருக்கு தீவிர ரசிகராக இருந்தவர். "வர்றதுன்னா வா. வராங்காட்டிப் போய்க்கோ" என்று சட்டென்று அவர் சலித்துக்கொள்ள, 'பக்'கென்று ஆனது. ஓடிப்போய் அப்பாவிடம் பர்மிஷன் வாங்கிக்கொண்டு செந்தில் அண்ணாவின் சைக்கிளில் ஏறினேன்.

ஆல்பட்டில் ரசிகர்மன்ற சிறப்புக் காட்சி. திருவிழாக் கோலம் என்று சொல்லமுடியாது. உண்மையில் அங்கிருந்த ரசிகர்கள் பூண்டிருந்தது போர்க்கோலம். தினேஷை புரட்டியெடுத்துக் கொண்டு ரஜினி அறிமுகமாகும் காட்சியில்... நம்பினால் நம்புங்கள்... தியேட்டருக்குள் தவுசண்ட்வாலா சரம் நிஜமாகவே வெடிக்கப்பட்டது. ரஜினி பேசும் ஒவ்வொரு டயலாக்குக்கும் தொடர்ச்சியான விசில் சத்தம். படத்தின் 75 சதவிகித வசனங்கள் புரியாமலேயே படம் பார்க்க நேரிட்டது. படம் முடிந்ததும் "என் தலைவன் ஜெயிச்சிட்டாண்டோய்...!" என்று கத்திக்கொண்டே வெளியேறிய வெறிக்கூட்டம். எனக்கு 'குணா'வின் வெற்றி குறித்து பெருத்த கவலை உண்டாயிற்று. எதிர்ப்பார்த்தபடியே குணா பப்படமாக, தளபதி வெள்ளிவிழா.

தீபாவளி லீவெல்லாம் முடிந்து பள்ளிக்கு போனபோது, செந்தில் வழக்கம்போல கேப்பே விடாமல் தளபதி புகழ் ஓதிக் கொண்டிருந்தான். அவனும் முதல்நாள் முதல் காட்சி பார்த்திருக்கிறான். அடுத்த ஒரு மாதத்துக்கு தினமும் தளபதி கதையை திகட்டாமல், ஒவ்வொரு முறையும் புதியதாக சில காட்சிகள் சேர்த்து சொல்லிக்கொண்டேயிருந்தான். மாணவர்கள் மத்தியில் மட்டுமன்றி மாணவிகள் மத்தியிலும் அவனுக்கு ஹீரோ அந்தஸ்து. எல்லோர் மத்தியிலும் 'தோத்தாங்குளி' ஆகிவிட்ட அவமானம். (ஆனால் ஓராண்டு கழித்து வந்த அடுத்த தீபாவளியில் நல்லவேளையாக தேவர்மகன் வெளியாகி, அதே ஹீரோ அந்தஸ்தை வெற்றிகரமாக என்னால் கைப்பற்ற முடிந்தது என்பது தனி வரலாறு)

சுதாகர் என்னிடம் சோகமாக கேட்டான். அவன் பார்ட்-டைம் கமல் ரசிகன். "குணா பார்த்தியாடா"

"பார்த்துட்டேண்டா. பர்ஸ்ட் டே, பர்ஸ்ட் ஷோ. ஆக்டிங்குலே நம்ம தலைவருகிட்டே ரஜினியெல்லாம் வெறும் பச்சாடா!"

சுதாகரிடம் அப்பட்டமாக மனதறிந்தே பொய் சொன்னேன். அன்று மட்டுமில்லை. இன்றுவரை நான் முழுமையாக "குணா"வை பார்த்ததே இல்லை.

25 செப்டம்பர், 2010

எந்திரன் - திரை விமர்சனம்! (Endhiran Movie Review 5+)

சிவாஜி வெற்றிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், இயக்குனர் ஷங்கரும் இணையும் படம். சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் முதல்முறையாக பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கும் படம். இதனால் பெரிய எதிர்ப்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது. வழக்கமான காதல், சண்டை, மசாலா படம்தான். இண்டரெஸ்டிங்காக சொல்லியிருப்பதில்தான் இயக்குனர் ஷங்கரின் அனுபவம் வெளிப்படுகிறது.

நாட்டை காப்பாற்ற வேண்டும். கெட்டவர்களை ஒழிக்க வேண்டும் என்பது விஞ்ஞானி ரஜினியின் இலட்சியம். தனி மனிதனாக தன்னால் வில்லன்களை எதிர்கொள்ள முடியாது என்பதால் தன்னை போலவே உருவ அமைப்பு கொண்ட ஒரு ரோபோவை விஞ்ஞானி ரஜினி உருவாக்குகிறார். ஒரு எதிர்பாராத நேரத்தில் உலக அழகி ஐஸ்வர்யாராயை பார்த்து காதலிக்க தொடங்குகிறார். காதலிக்க தொடங்கிய ரஜினி கடமையை மறக்கிறார். இவருடைய ஆல்டர் ஈகோவான ரோபோவும் அதே ஐஸ்வர்யாராயை தான் உருவாக்கப்பட்டதற்கான காரணத்தை மறந்து காதலிக்கத் தொடங்குகிறது. இந்த காதலில் இருந்து வெளிவந்து விஞ்ஞானியும், ரோபோவும் எப்படி வில்லன்களை பழிவாங்குகிறார்கள் என்று சாதாரணமாக சொன்னாலும் ஷங்கரின் விஷூவல் ட்ரீட் என்னவென்பதை வெள்ளித்திரையில் காணுங்கள்.

குறுந்தாடியும், ஸ்பெக்ஸுமாக ஒரு விஞ்ஞானியை கண் முன்பாக நிறுத்துகிறார் ரஜினி. ஐஸ்வர்யாராயை பார்த்ததுமே காதலிப்பது, இவரைப்போலவே ரோபோவும் ஐஸ்வர்யாராயை ஜொள்ளுவிடுவது போன்ற காட்சிகளில் ரஜினியின் இளமை ஊஞ்சலாடுகிறது. இடைவேளைக்கு பிறகு காதலை மறந்து கடமையை செய்ய இரு ரஜினிகளும் கிளம்புவது என்று எந்திரன் மந்திரனாகி பட்டையை கிளப்புகிறார்.

ஐஸ்வர்யா ராய்க்கு பெரியதாக வேலை இல்லை. ரெண்டு ரஜினிகளையும் மாறி மாறி காதலிக்கிறார். கடைசியில் விஞ்ஞானியை கைப்பிடிக்கிறார். இவரை காதலுக்கும், பாடலுக்கும் மட்டுமே ஷங்கர் பயன்படுத்தி இருக்கிறார். உலக அழகி. ம்ம்ம்.. விஷுவலி ப்யூட்டிபுல். வில்லனாக டேனி டென்ஸோங்க்பா நடித்திருக்கிறார். இவர் இந்தியில் பல படங்களில் கலக்கியவர். கருணாஸ் சந்தானம் காமெடி பரவாயில்லை. முக்கியமாக ஹனீபா, கலாபவன் மணி நடிப்பு அட்டகாசம். மனிதபாம்புகளாய் மாறி ரஜினி கலக்கும் காட்சிகள் கிராபிக்ஸ் சூப்பர். படம் நெடுக நிறைய கேரக்டர்கள். ஆனால் எதுவுமே மனதில் பதியவில்லை. ரெண்டு ரஜினி மட்டுமே பதிகிறார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் ஆல்ரெடி ஹிட். சுட்டி சுட்டி ரோபோ, காதல் அணுக்கள் பாடல்களை ரசிகர்கள் மட்டுமன்றி, என்னுடைய திரையுலக நண்பர்களும் விரும்பி கேட்கிறார்கள். பின்னணி இசையிலும் ஆஸ்கார் நாயகன் பின்னி பெடலெடுத்திருக்கிறார். குறிப்பாக ரோபோவின் காதல் காட்சிகள், கிளைமேக்ஸ். சண்டை காட்சிகளை வடிவமைத்த பீட்டர் ஹெயினுக்கு பாராட்டுகள்.

படத்தின் பலத்திற்கு மிக முக்கியமான பலம் ரத்னவேலுவின் கேமிரா. முதல்பாதல் இளமைக்கு ஏற்ப லொக்கேஷன், லைட்டிங், கலர், ஷாட்ஸ் என்று அமைத்தவர், அடுத்த பாதி ஆக்‌ஷனுக்கு டெர்ரர் மூடை கேமிராவிலேயே கொண்டு வந்திருக்கிறார். எக்சலெண்ட். அதுவும் பெருங்குடியில் செட் போட்டு எடுக்கப்பட்ட சண்டைக்காட்சிகள் அதகளம்.

குசேலனின் படுதோல்விக்கு பிறகு ஒரு காதல் மசாலா கதையில் நடிக்க முன்வந்திருப்பதற்கு ரஜினிக்கு பாராட்டுக்கள். அதே நேரத்தில் பதினெட்டு ஆண்டுகளாக ஒரே கதையை இதுவரை பத்து படமாக எடுத்திருக்கும் இயக்குனர் ஷங்கரையும் நாம் பாராட்டிதான் ஆகவேண்டும். ரோபோ காதலிப்பது என்பதெல்லாம் ஹாலிவுட் உலகபடங்களில் வந்த கதைதான் என்றாலும் தமிழில் ப்ரெஷ்ஷாக கொடுத்திருப்பதால் வரவேற்றே ஆகவேண்டும். ஆனால் மனிதர்களை போலவே ரோபோவும் காதலை சொல்ல ரோஜாபூவைதான் கொடுக்க வேண்டியிருக்கிறது போன்ற வழக்கமான டெம்ப்ளேட் காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.

இந்தப் படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்காமல் இருந்திருந்தால் இன்னும் பாராட்டி விமர்சனம் எழுதியிருப்பேன். கலாநிதிமாறன் தயாரித்திருப்பதாலேயே அடக்கி வாசிக்க வேண்டியிருக்கிறது.  படம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே சன்பிக்சர்ஸ் லோகோ போடுவதாலேயே படத்தின் ஹைப் குறைகிறது. சைதை ராஜில் எனக்காக சிறப்புக் காட்சி போட்டார்கள். சவுண்ட் ஓக்கே. டிஜிட்டலில் திரையிடுகிறார்கள். ஆனால் பிலிம் தேய்ந்தது போல எபெக்ட். அந்த தியேட்டரில் இடைவேளையில் போடும் பாப்கார்ன் மட்டும்தான் நன்றாக இருக்கிறது. முட்டை பஜ்ஜியில் முட்டையே இல்லை.

எந்திரன் - கமர்சியல் மந்திரன்!

டிஸ்க்கி : நண்பர்களே / தோழர்களே / பிரெண்டுகளே! படம் பார்த்துதான் இணையத்தில் திரைவிமர்சனம் எழுதமுடியும் என்று நீங்கள் நினைத்தால்... உங்களைவிட பெரிய அறிவாளி வேறுயாரும் உலகத்தில் இருந்துவிட முடியாது.