27 செப்டம்பர், 2010

தளபதி - பர்ஸ்ட் டே, பர்ஸ்ட் ஷோ!

அரைடவுசர் போட்டுக் கொண்டிருந்த காலமது. கமல் ரசிகன் என்று வெளிப்படையாக அறிவித்துக் கொண்டு, ரஜினி ரசிகர்களோடு மூர்க்கமாக மோதிக் கொண்டிருந்தேன். ஆனால் அந்த தீபாவளிக்கு என்னுடைய பர்ஸ்ட் சாய்ஸாக 'தளபதி' தானிருந்தது என்பதை பத்தொன்பது ஆண்டு கழித்து இப்போது வெளிப்படையாக லஜ்ஜையின்றி தெரிவிக்கிறேன். இப்போது எந்திரனுக்கு இருக்கும் ஹைப்பையும், அப்போதைய தளபதிக்கு இருந்த ஹைப்பையும் ஒப்பீடு செய்துப் பார்க்கும்போது, ஏனோ எந்திரனை 'தளபதி'யே வெல்கிறார்.

பி.பி.எல். சான்யோவில் 'ராக்கம்மா கையத் தட்டுவை' எத்தனைமுறை ரீவைண்ட் செய்து கேட்டிருப்பேன் என்பதற்கு கணக்கேயில்லை. தளபதியோடு வெளியான 'குணா'வில் துரதிருஷ்டவசமாக 'கண்மனி' மட்டும்தான் சூப்பர்ஹிட்டு. மாறாக தளபதியில் ஒவ்வொரு பாட்டும் மெகாஹிட்டு. இளையராஜா கமலுக்கு துரோகம் இழைத்துவிட்டார் என்று நொந்துகொண்டேன். அப்போதெல்லாம் தீபாவளிக்கு தீபாவளி ரஜினி-கமல் அட்டகாசம் நிச்சயம். நாயகன் - மனிதன், வெற்றிவிழா - மாப்பிள்ளை, தளபதி - குணா, பாண்டியன் - தேவர்மகன்,  குருதிப்புனல் - முத்து என்று சிலவருட போட்டிகள் நினைவில் நிற்கிறது. போதாதற்கு விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக் படங்களும் ரேஸூக்கு உண்டு.

அபூர்வசகோதரர்கள், மைக்கேல் மதனகாமராஜன் என்று காமெடி கமர்ஷியல் ரூட்டில் போய்க்கொண்டிருந்த கமலுக்கு, பழைய குருடி கதவைத் திறடியென, 91ஆம் ஆண்டு திடீரென்று 'வித்தியாச' மோகம் பொத்துக்கொண்டு வந்துவிட்டிருக்க வேண்டும். 'குணா' படத்தின் ஸ்டில்கள் அவ்வளவாக கவரவில்லை. மாறாக 'தளபதி' கலக்கிக் கொண்டிருந்தார். கேசட் கவரில் (லஹரி கேசட்?) அச்சடிக்கப்பட்டிருந்த ரஜினியின் 'சைட் போஸ்' ஸ்டில் இன்றும் மறக்க முடியாதது. கிளாஸ் ரூமில் செந்தில்தான் கமலை காரணம் காட்டி என்னை வெறுப்பேற்றிக் கொண்டிருப்பான். கமல் ஏன் தான் போயும் போயும் பைத்தியக்காரனாக நடிக்கிறாரோ என்று நொந்துப் போயிருந்தேன்.

எப்படியும் செந்தில் முதல்நாளே தளபதியை பார்த்துவிட்டு, கிளாஸுக்கு வந்து திரைக்கதை சொல்லிக் கொண்டிருப்பான். நாம் 'குணா'வைப் பார்க்காவிட்டால் தலைவருக்கு எவ்வளவு கேவலம் என்று மனச்சாட்சி உறுத்தியது. துரதிருஷ்டவசமாக அந்தக் காலத்தில் என்னைச் சுற்றி இருந்த எல்லோரும் ரஜினி ரசிகர்களாக இருந்து தொலைத்தார்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 'ஒலியும், ஒளியும்' பார்க்கும்போது நான் பட்டபாடு இருக்கிறதே? உஸ்ஸப்பா...

பாடல்காட்சிகளில் கமல் கொஞ்சம் தாராளம், ஏதோ ஒரு பாட்டில் ஜட்டி போட்டுக் கொண்டு நீச்சல் குளத்தில் குளிப்பார். ரஜினியோ உடைவிஷயத்திலும் சரி, ஹீரோயினை காதலிக்கும் விஷயத்திலும் சரி. அநியாயத்துக்கு மிலிட்டரி கண்ணியம். இந்த 'பெண்' சகவாசத்தாலேயே கமலுக்கு கெட்டவன் என்ற இமேஜ் பெண்களிடமும் ஏறிவிட்டிருந்தது. இந்த இமேஜ் லாஜிக்படி பார்த்தால் கமலின் ரசிகனும் கெட்டவனாக, ஆம்பளை லோலாயியாக, இந்த எழவெடுத்த சமூகத்தில் பார்க்கப்படுவது வழக்கமாக இருக்கிறது. 

இந்த ரசிகமனோபாவ லாஜிக்கில் இன்னொரு குளறுபடி ஒன்றினையும் நான் அப்போது கண்டுபிடித்திருந்தேன். எம்.ஜி.ஆரை ரசித்தவர்கள் நிறையபேர் கமலை ரசித்தார்கள். சிவாஜியை ரசித்தவர்கள் ரஜினி ரசிகர்களாக இருந்தார்கள். ஆக்சுவலாக, இது உல்டாவாக இருந்திருக்க வேண்டும். ஆனால் ஏனோ தலைகீழாக இருந்ததை பெரும்பாலான ரசிகர்களிடம் அறிவியல்பூர்வமாக இல்லாமல் வாய்வழியாக எடுத்த ஒரு கணக்கெடுப்பில் உணரமுடிந்தது.

எங்கள் வீட்டிலேயே எனக்கு ஒரு ஜென்மவிரோதி இருந்தாள். என்னுடைய தங்கை. ஜோதி தியேட்டரில் வெளியான எல்லா ரஜினி படத்தையும் வெளியான ரெண்டு நாளிலேயே அப்பா அவளை அழைத்துப்போய் காட்டிவிடுவார். நான் மட்டும்தான் அனாதை. நானாகவே முயற்சி எடுத்துப் போய் கமலை திரையில் பார்த்தால்தான் உண்டு. (அப்பா எம்.ஜி.ஆர். வெறியர் என்றாலும், அரசியல் காரணங்களால் சிவாஜி ரசிகராக கன்வெர்ட் ஆகி பத்தாண்டுகளுக்கு மேல் ஆகியிருந்தது. எனவே சிவாஜி - ரஜினி என்ற தொடர்ச்சியான ரசிக மனோபாவம்). பிற்பாடு தளபதி பார்த்துவிட்டு அப்பா அடித்த கமெண்ட் "ஒவ்வொரு ஃபிரேமுக்கும் கலக்கியிருக்காண்டா. சிவாஜியை மிஞ்சிட்டான்!"

ஆன்லைன் புக்கிங்கெல்லாம் எதிர்காலத்தில் நடக்குமென்ற சாத்தியத்தையே திரையரங்குகள் அறியாத தீபாவளி அது. மூன்று நாட்களுக்கு முன்பாக ரிசர்வேஷன் தொடங்கும். என் பிரெண்டு (கம்) பங்காளி ஒருவனோடு உதயம் காம்ப்ளக்ஸுக்கு சைக்கிளில் போயிருந்தேன். அவனுக்கு தளபதி, எனக்கு குணாவென்று ஒப்பந்தம். கையில் தாராளமாக 50 ரூபாய் இருந்தது. பால்கனி டிக்கெட்டே பண்ணிரண்டோ, பதினைந்தோ என்பதாக நினைவு (உதயத்தில் அப்போது பால்கனி இருந்தது).

வளாகம் முழுக்க மனிதத்தலைகள். 'தளபதி' ஸ்டில் அச்சடிக்கப்பட்ட டி-ஷர்ட்டுகளில் ரஜினி ரசிகர்கள் வளைய வந்து கொண்டிருந்தார்கள். 'குணா' டிஷர்ட் எங்கேயாவது கிடைக்குமாவென்று விசாரிக்க வேண்டுமென முடிவெடுத்துக் கொண்டேன். இடதுபுறம் (பெட்ரோல் பங்கையொட்டி) ரஜினியின் கம்பீர மெகா கட்டவுட். வலதுபுறம் சன்னியாசி வேடத்தில் கமல் கட்டவுட், அய்யகோ. முகப்பில் ஆங்காங்கே கிடைத்த இடத்தில் சிறிய அளவுகளில் விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக்குக்கு எல்லாம் குட்டி குட்டி கட்டவுட். ரிலீஸ் தேதியன்று ரஜினி-கமல் கட்டவுட் இருதரப்பு ரசிகர்கள் மோதலால் இங்கேதான் எரிந்தது.

மடிப்பாக்கம் தவிர்த்த வெளியுலகில் ரஜினியின் நிஜமான மாஸை நான் நேரில் பார்த்த நாள் அதுதான். பத்து மணி ரிசர்வேஷனுக்கு எட்டு மணிக்கு போயிருந்தோம். எங்களுக்கு முன்பாக வரிசையில் குறைந்தபட்சம் 750 பேராவது நின்றிருந்தார்கள். ரிசர்வேஷன் கவுண்டரையே திறக்காமல், ரிசர்வேஷன் சார்ட்டில் முதல் நான்கு நாட்களுக்கு அனைத்து காட்சிகளும் 'ஹவுஸ்ஃபுல்' போட்டிருந்தார்கள். சந்திரனில் வெளியாகிய 'குணா'வுக்கு பெரிய வரவேற்பில்லை. அந்த கவுண்டர் ஓரளவுக்கு சொல்லிக் கொள்ளும்படியான கூட்டம்தான். தளபதி டிக்கெட் கிடைக்க வாய்ப்பேயில்லை என்று தெரிந்ததும் பங்காளி நொந்துப்போனான். இதனால் எனக்கும் 'குணா'வை ரிசர்வ் செய்யும் எண்ணம் போய்விட்டது. ஏற்கனவே பெரியதாக ஆர்வம் இல்லை என்பதும் வேறொரு காரணம்.

தீபாவளி அன்று காலையில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தேன். செந்தில் அண்ணா ப்ரெஷ்ஷாக சைக்கிளில் வந்தார். "குமாரு காலையில் 9 மணி ஷோ ஆல்பட்லே தளபதி இருக்கு. வர்றியா?" மனசுக்குள் சந்தோஷம். இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், "குணா இருந்தா சொல்லுண்ணா" என்று பிகு செய்தேன். செந்தில் அண்ணா கொஞ்சம் வித்தியாசமானவர். இன்றுவரை நான் பார்த்த மனிதர்களில் அவர் ஒருவர்தான் ஜெய்சங்கருக்கு தீவிர ரசிகராக இருந்தவர். "வர்றதுன்னா வா. வராங்காட்டிப் போய்க்கோ" என்று சட்டென்று அவர் சலித்துக்கொள்ள, 'பக்'கென்று ஆனது. ஓடிப்போய் அப்பாவிடம் பர்மிஷன் வாங்கிக்கொண்டு செந்தில் அண்ணாவின் சைக்கிளில் ஏறினேன்.

ஆல்பட்டில் ரசிகர்மன்ற சிறப்புக் காட்சி. திருவிழாக் கோலம் என்று சொல்லமுடியாது. உண்மையில் அங்கிருந்த ரசிகர்கள் பூண்டிருந்தது போர்க்கோலம். தினேஷை புரட்டியெடுத்துக் கொண்டு ரஜினி அறிமுகமாகும் காட்சியில்... நம்பினால் நம்புங்கள்... தியேட்டருக்குள் தவுசண்ட்வாலா சரம் நிஜமாகவே வெடிக்கப்பட்டது. ரஜினி பேசும் ஒவ்வொரு டயலாக்குக்கும் தொடர்ச்சியான விசில் சத்தம். படத்தின் 75 சதவிகித வசனங்கள் புரியாமலேயே படம் பார்க்க நேரிட்டது. படம் முடிந்ததும் "என் தலைவன் ஜெயிச்சிட்டாண்டோய்...!" என்று கத்திக்கொண்டே வெளியேறிய வெறிக்கூட்டம். எனக்கு 'குணா'வின் வெற்றி குறித்து பெருத்த கவலை உண்டாயிற்று. எதிர்ப்பார்த்தபடியே குணா பப்படமாக, தளபதி வெள்ளிவிழா.

தீபாவளி லீவெல்லாம் முடிந்து பள்ளிக்கு போனபோது, செந்தில் வழக்கம்போல கேப்பே விடாமல் தளபதி புகழ் ஓதிக் கொண்டிருந்தான். அவனும் முதல்நாள் முதல் காட்சி பார்த்திருக்கிறான். அடுத்த ஒரு மாதத்துக்கு தினமும் தளபதி கதையை திகட்டாமல், ஒவ்வொரு முறையும் புதியதாக சில காட்சிகள் சேர்த்து சொல்லிக்கொண்டேயிருந்தான். மாணவர்கள் மத்தியில் மட்டுமன்றி மாணவிகள் மத்தியிலும் அவனுக்கு ஹீரோ அந்தஸ்து. எல்லோர் மத்தியிலும் 'தோத்தாங்குளி' ஆகிவிட்ட அவமானம். (ஆனால் ஓராண்டு கழித்து வந்த அடுத்த தீபாவளியில் நல்லவேளையாக தேவர்மகன் வெளியாகி, அதே ஹீரோ அந்தஸ்தை வெற்றிகரமாக என்னால் கைப்பற்ற முடிந்தது என்பது தனி வரலாறு)

சுதாகர் என்னிடம் சோகமாக கேட்டான். அவன் பார்ட்-டைம் கமல் ரசிகன். "குணா பார்த்தியாடா"

"பார்த்துட்டேண்டா. பர்ஸ்ட் டே, பர்ஸ்ட் ஷோ. ஆக்டிங்குலே நம்ம தலைவருகிட்டே ரஜினியெல்லாம் வெறும் பச்சாடா!"

சுதாகரிடம் அப்பட்டமாக மனதறிந்தே பொய் சொன்னேன். அன்று மட்டுமில்லை. இன்றுவரை நான் முழுமையாக "குணா"வை பார்த்ததே இல்லை.

48 கருத்துகள்:

  1. //எம்.ஜி.ஆரை ரசித்தவர்கள் நிறையபேர் கமலை ரசித்தார்கள்.//

    நல்லாத்தான் ஆராய்ஞ்சுருக்கிங்க.எங்க அப்பாவும் கூட இப்படித்தான்.. :)

    பதிலளிநீக்கு
  2. அந்த லஹரி ஆடியோ கேசட்டின் ஒருபுறம் சிலுப்பிய முடியுடன் அந்த "சைட் போஸு"ம் மறுபுறம் ஜப்பான் குடுமியுடனும் ஒரு படமும் இடம்பெற்றிருந்தது..தீவிர ரஜினி வெறியனான என் நண்பன் "தலைவரோட முடி சிங்கமாட்ட இருக்குது, செம பைட் இருக்கபோகுது என்று எல்லோரிடமும் கூறிக்கொண்டிருந்தான்.

    பதிலளிநீக்கு
  3. நானும் இன்றுவரை குணா முழுமையாக பார்த்ததில்லை. தளபதி பல முறை பார்த்திருக்கிறேன்.

    சொன்னால் நம்பமாட்டீர்கள் போன வெள்ளிக்கிழமை தான் குணா டி.வி.டி. வாங்கி வைத்திருக்கிறேன்.

    எந்திரன் ரிலீஸ் அன்றைக்கு முதல் காட்சி 11:30 வீட்டில் பார்க்க வேண்டும் :)

    பதிலளிநீக்கு
  4. நல்ல பகிர்வு..

    எனக்கு அப்போது குணா எனக்கு ரொம்பவும் பிடித்து இருந்தது.. காரணம் எங்கள் ஊர் முருகாலாயா தியேட்டரில் ரிலிசான படம்.

    ரஜினி படம் தளபதி ஏற்கனவே தேரிந்த கதை என்பதால் எனக்கு பெரிய சுவாரஸ்யம் இல்லை.
    நீங்கள் சொல்வது போல் தளபதி பாடல்களை நானும் எத்தனை முறை கேட்டு இருப்பேன் என்று கணக்கு இல்லை..
    அழகான கொசுவர்த்தி.

    பதிலளிநீக்கு
  5. கமல் ரசிகனாக இருந்தே நீங்கள் நொந்து போய் இருந்தால் , நான் எல்லாம் இளைய திலகம் பிரபு ரசிகனாக இருந்து என்ன பாடுபட்டு இருப்பேன் என்று எண்ணி பாருங்கள் தோழர். அதே 1991 தீபாவளிக்கு தான் பிரபு நடித்த "தாலாட்டு கேட்குதம்மா " படம் வந்து 100 நாள் ஓடியது தோழர் FYI.

    --Tharani.

    பதிலளிநீக்கு
  6. அட அட அட..என்ன ஒரு அசத்தலான பகிர்வு.. அப்டியே சும்மா எல்லோர் மனசுலயும் உள்ளே போய் மேட்டரை வெளியில் எடுத்து கொண்டு வந்த உணர்வு.. என்னை நான் சம்பந்த படுத்தி கொள்ள ஏகப்பட்ட மேட்டர் இந்த பதிவில்..

    அதே வெளியே கமல் உள்ளே ரஜினி பார்ட்டி நான்..இன்று வரை..

    அப்ப 10th படிச்சேன்..காலையில தீபாவளி சிறப்பு நிகழ்ச்சில, பர்ஸ்ட் “கண்மணி” பாட்டு..எல்லார்கிட்டேயும் தலைவர் நடிப்ப பாருங்கன்னு காலரை தூக்கி விட்டுட்டு உட்கார்ந்து இருக்கப்ப, கடைசி பாட்டு “ராக்கம்மா”..உண்மையிலேயே அன்னிக்கு உள்ளே என்னமோ சும்மா அதிருச்சு பாஸ்..என்னா ஒரு கம்போஸிங், லைட்டிங், ரஜினியோட மூவ்மெண்ட்ஸ்

    அதே பர்ஸ்ட் ஷோதான்..காது கிழிந்தது..அதுவும் பர்ஸ்ட் ஸீன் ஆத்துல விடறப்ப, கோரஸா ஒரு கெட்ட வார்த்தை வரும் பாருங்க ரசிக சிகாமணிகள்கிட்ட இருந்து.. பிரமாதம்.. அதே கெட்ட வார்த்தை அரவிந்சாமி சீன்ல எல்லாம் வரும் :)

    அதே மாதிரி எத்தனை சீ்ன்-தலைவா தலைவான்னு காதை கிழிக்க.. “வெறும் காகிதம்மா இது”, ”அவனுக்கு ஒண்ணும் ஆகாது..தேவாவே சொன்னான்”, ”உனக்கு எல்லாம் இருக்காங்க-எனக்கு யார்றா இருக்கா”, “அட்றா பார்க்கலாம்..அட்றா பார்க்கலாம்”..

    எத்தனை ஸ்டில்ஸ்..அந்த சைட் ஸ்டில் இல்லாத டீக்கடையும்,ஆட்டோவும் எங்க ஊருல பார்க்க முடியாது அப்ப..

    என்னோட ஆல்டைம் பெஸ்ட் ஸ்கீரின்பிளே தளபதிதான்..ரஜினியோட மாஸ் பவரை கரெக்டா மணி use பண்ணி இருப்பார்..பக்கா underplay!!

    நானும் ஓசி டிக்கட்லதான் போனேன்..வேண்டா வெறுப்பா போற மாதிரி ஆக்ட் பண்ணிட்டு.. :)

    great post :)

    பதிலளிநீக்கு
  7. நானும் கொஞ்சம் ஃபீலிங்ஸ் விட்டுக்கொண்டதுண்டு. இந்த அளவுக்கு மோசம் இல்ல.! :-)

    பதிலளிநீக்கு
  8. ஏகப்பட்ட பழைய நினைவுகளை கிளறி விட்ட பதிவு ..முதலில் பார்த்தது தளபதி என்றாலும் குணா எத்தனை முறை பார்த்தேன் என்ற எண்ணிக்கை மறந்து விட்டேன்.

    திருச்சியில் முதன் முறையாக ரஜினி கமல் ரசிகர்கள் கைகோர்த்து சுவரெங்கும் தளபதி குணா என எழுதித்தள்ளினார்கள்.

    எனக்குத் தெரிந்து நண்பர்கள் வட்டாரத்தில் கமல் ரசிகர்கள் ரஜினியையும் , ரஜினி ரசிகர்கள் கமலையும் பாராட்டி பேசிக்கொண்டது இந்த படங்கள் வெளியான போது தான்.

    எம்.ஜி.ஆர் - கமல் , சிவாஜி - ரஜினி ..நானும் அனுபவ பூர்வமாக உணர்ந்து பலமுறை பலரிடம் சொல்லியிருக்கிறேன் ..நான் அதிலே விதிவிலக்கு என்ற போதிலும் .

    பதிலளிநீக்கு
  9. யுவகிருஷ்ணா,
    எங்கள் ஊர் நாகர் கோவிலில் தளபதி ஓடிய நாட்கள் 65 , குணா ஓடிய நாட்கள் 90 ,அதுவும் பெரிய திரையரங்கில்

    பதிலளிநீக்கு
  10. உண்மைதான் குணாவை முக்கால்வாசிதான் பார்க்க முடிகிறது ஒருமுறை தான் முழுசா பார்த்தேன்...அப்புறம் முடியல! என்ன இருந்தாலும் கமலோட நடிப்பு....ம்ம்ம் நானும் கமல் ரசிகன்தான். கமல் ரசிகன் கெட்டவன் அந்த கொடுமைய யாழ்ப்பாணத்தில முழுசா அனுபவிச்சவன் நான்...இப்ப கூட சிலபேர் அப்படித்தான் பாக்கிறாங்க!

    பதிலளிநீக்கு
  11. அட ஆமாங்க!சிவாஜி ரசிகர்கள் ரஜினியைப் பிடிப்பதும்,எம்.ஜீ.யார் ரசிகர்களுக்கு கமலைப் பிடிப்பதும் ஒரு புரிபடாத காம்பினேஷன் தாங்க.. ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது.. என் பள்ளிப் பருவத்தில் அவ்வப்போது சிவாஜி கட்சி, எம்.ஜீ.யார் கட்சி என்று சீசனுக்கு சீசன் மாறி மாறி இருவர் படங்களையும் விடாமல் பார்த்து ரசித்த நாட்கள் நினைவுக்கு வருகிறது நண்பரே. ரொம்பவே ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  12. //குணாவை முக்கால்வாசிதான் பார்க்க முடிகிறது ஒருமுறை தான் முழுசா பார்த்தேன்...அப்புறம் முடியல//

    ஓ.கே.

    //ம்ம்ம் நானும் கமல் ரசிகன்தான்//

    என்னது ? !!!!!

    பதிலளிநீக்கு
  13. விருமாண்டி படத்திற்கு போய்தான் ஆகவேண்டும் என்று அப்பாவா கூட்டிக்கொண்டுப் போய் வாங்கிக்கட்டிக் கொண்டேன்.

    அதன் பிறகு கமல் படத்திற்கு தனியாகதான் போகிறேன். தசவதாரத்தினை வீட்டில் எல்லோரும் பார்த்து பாரட்டினார்கள். அந்த 12ம் நூற்றாண்டு மட்டும் படம் முழுதும் இருந்திருந்தால் எல்லா எம்.ஜி.ஆர் ரசிகர்களையும் கமல் பெற்றிருப்பார்.

    எந்திரனுக்கு டிக்கெட் வாங்கியாச்சா. 0

    பதிலளிநீக்கு
  14. //அந்த 12ம் நூற்றாண்டு மட்டும் படம் முழுதும் இருந்திருந்தால் எல்லா எம்.ஜி.ஆர் ரசிகர்களையும் கமல் பெற்றிருப்பார்//
    அது 12 நிமிஷம் மட்டும் இருந்ததால தான் நல்லா இருந்திச்சு ..படம் முழுக்க இருந்திருந்தா படம் 12 நாள் தான் ஓடியிருக்கும் :)

    பதிலளிநீக்கு
  15. Good post..........kindled lot of memories.......
    I had HUGE fights with my classmates about these two films..... I think this is one of the Rajini movies I liked........but Guna (I don;t know how many times I have seen it so far!) will always be very special to me..........poetry on screen (the pain of unfulfilled love beautifully shown), to put it mildly.

    BTW, Guna is not a "mentally challenged" person, he is "autistic" and that's why he is shown as having special talents like working with locks and cars........he was made to believe in Abhirami to purify himself as he is disgusted with what his mother does for a living and his surroundings........

    Ofcourse, Rakkamma and Yamunai ATRilE......are gems from IR.

    பதிலளிநீக்கு
  16. கமல் ரசிகன் sakala11:42 PM, செப்டம்பர் 27, 2010

    பழைய நினைவுகளை தூண்டி விட்ட பதிவு,

    எனக்கு தெரிந்து பாண்டிச்சேரியில் தளபதியை விட குணா நன்கு ஓடியதாக ஞாபகம். ஒருவேளை சென்னையில் வேறுமாதிரி இருக்கலாம். அதே சமயம், தளபதி பல ரசிகர்களை ஏமாற்றி விட்டாதாக எனக்கு தெரிந்து நினைவு. என் ஞாபங்களில் தளபது பட்ஜெட் அதிகம், பிலாப்புக்கும் சுமார் வெற்றிக்கும் நடு, எனவே கொஞ்சம் கையை கடித்த படம், அதே சமயம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட குணா ஓரளவு லாபம். உண்மை என்னன்னு நமக்கு தெரியாது! (அந்த சமயத்தில் எங்களுக்கு சொந்தமான திரை அரங்கில் தான் தளபதி ரிலீஸ் ஆனது!)

    ஆனால் அந்த தீபாவளிக்கு கமல் ரஜினி இருவரையும் பின்தள்ளி பெரிய வெற்றி பெற்றதாக சொல்லப்பட்ட படம், சத்யராஜ் குஸ்பு நடித்த பிரம்மா

    வே. விளையாடு ஐம்பதாவது நாள் காட்சி கமல் ரசிகர்களோடு சென்னை காசியில் பார்த்தபோது, குணா படம் 25 முறை பார்த்த ஒரு பெங்களூர் ஆட்டோக்காரரை சந்தித்தேன். நல்ல ரசனைப்படங்களை உயர்தட்டு நடுத்தர மக்கள் மட்டும் தான் ரசிப்பார்கள் என்ற என்ணத்தை உடைத்த ஒரு தருணம் அது. இத்தனைக்கும் அப்போது பெங்களூரில் தமிழ் படங்களுக்கு எதோ பிரச்சினை அதையும் மீறி போலீஸ் அடியெல்லாம் வாங்கி அவர் பலமுறை பார்த்ததாக சொன்னார்

    சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடலில் ரஜினி போட்ட வித்தியாசமான கொண்டை(ஜப்பான் ஸ்டைல்) பிடிக்காமல் ரசிகர்கள் கத்தினதாகவும் அதனால் அந்த பாடல் பல தியேட்டர்களில் வெட்டப்பட்டதாகவும் நினைவு. இப்போ ரஜினி கெட்டப் மாற்றாவிட்டால் படமே ஓடாது என்கிற நிலை! (சந்திரமுகி வேட்டையன், சிவாஜி மொட்டை, எந்திரன்)

    பதிலளிநீக்கு
  17. கமல் ரசிகன் sakala11:47 PM, செப்டம்பர் 27, 2010

    ரஜினி தளங்கள் அனைத்திலும் எந்திரன் இப்போவே சாதனை படித்துவிட்டதாகவும், அதை கமலால் கனவிலும் நினைத்துப்பார்க்க முடியாது என்பதுபோலவும் ரஜினி ரசிகர்கள் பதிவு போடுகிறார்கள். ஆனால் இந்த 30 வருடங்களில் ரஜினி ரிக்கார்டை கமல் அவ்வப்போது உடைத்துக்கொண்டே வந்திருக்கிறார் என்பதற்கு சமீபத்திய உதாரணம் தசாவதாரம்,. அது மட்டுமல்ல, ரஜினி கமலுடன் போட்டி போடுவது வசூலில் மட்டும்தான் என்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள். ரஜினி கமலுக்கு என்ன நடிப்பிலா போட்டி?!? ரஜினி சாதனைகளை உடைக்காமல் எப்படி இன்னமும் கமலை ரஜினிக்கு போட்டி என்றி சொல்லி வருகிறார்கள்?!

    பதிலளிநீக்கு
  18. சிவாஜி ரசிகர்களுக்கு ரஜினி பிடிக்க காரணம் அந்த ஸ்டைல் என நினைக்கிறேன். எம்ஜியார், கமல் இருவரும் அழகான ஹீரோவுக்குரிய இலக்கணம் பொருந்தியவர்கள். அத்தோடு கதாநாயகியை காதலோடு அணுகும் கலையறிந்தவர்கள்.
    என்னைக் கேட்டால் ரஜினி,கமல் இருவருமே அவர்களுக்கு முந்தையவ்ர்களை விஞ்சியவர்கள் அத்தோடு பிந்தையவர்களை முந்த விடாதவர்கள்.
    குணா நல்லப் படம். இப்போதும் ஒரு பழையப் படம் என்ற உணர்வு தோன்றாது. கொஞ்சம் முந்தி வந்து விட்ட படம். தளபதி என்ன சொல்வது, It 's not a movie it 's a movie (நன்றி - பிச்சைக்காரன் )

    பதிலளிநீக்கு
  19. நான்லாம் குணா ரிலீஸ் ஆகி ரெண்டு நாள் வெளியவே வரல. என்ன வெறுப்பேத்த எங்க வீட்டு ஜன்னல் வழியே 'குருவி ..குருவி ' னு குணா கமல் மாதிரி நண்பர்கள் கத்துனது ஞாபகம் வருது.. நல்ல பகிர்வுங்க....

    பதிலளிநீக்கு
  20. நான் அக்மார்க் கமல் ரசிகன் என்பதனால் ஏனோ தளபதிப் பாடல்கள் பிடித்திரூந்தாலும் குணா தான் முதலில் பார்த்தது.

    ரஜனியின் படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது தளபதிதான் எங்கள் இசைராஜாவும் உயிரைக் கொடுத்து இசை அமைத்திருப்பார். இனி அப்படி ஒரு படம் ரஜனியே நினைத்தாலும் நடிக்கமுடியாது. சிவாஜி சந்திரமுகி எந்திரன் என வசூல் வந்தாலும் சிறந்த படம் எப்போதும் தளபதிதான்.

    குணா படம் தான் தனுசை வைத்து செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன். கமல் சில விடயங்களை முந்தியே தந்திருப்பார்.

    பதிலளிநீக்கு
  21. முகப்பில் ஆங்காங்கே கிடைத்த இடத்தில் சிறிய அளவுகளில் விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக்குக்கு எல்லாம் குட்டி குட்டி கட்டவுட்.

    ------------------------
    அந்த தீபாவளிக்கு கார்த்திக்கின் படம் வரவில்லை. ரஜனியின் தளபதி, கமலின் குணா, பிரபுவின் தாலாட்டு கேட்குதம்மா , சத்தியராஜின் பிரம்மா, விஜய காந்த்தின் மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் , பாக்கியராஜின் ருத்ரா , நடிகை இளவரசியின் கணவர் நடித்த ஒருபடம் ஆகியவையே வந்தன. கார்த்திக்கின் அமரன் படம் தீபாவளிக்கு வராமல் பொங்கலுக்குத் தான் வந்தது.

    பதிலளிநீக்கு
  22. தளபதிய பார்த்துட்டு தான் என் அண்ணன் ரஜினி ரசிகனா கன்வர்ட் ஆனான்(என்னை வெறுப்பேற்றுவதுக்காகவே ஆனான்னு எனக்கு டவுட்டு). சகலகலாவல்லவன் காலத்துலேர்ந்து இன்னி வரைக்கும் கமல் ரசிகனாக இருக்கிற நான் குணா வெளியான காலத்துல அவமானப்பட்ட அளவுக்கு என் சொந்த தோல்விகளுக்காக கூட பட்டதில்லை. புதுசா ட்ரைனிங் வந்த டீச்சர் என் பெஞ்ச் அருகில் வந்து பாடம் நடத்தும் போது அவரின் புடவை கொஞ்சம் விலகவும், " பார்த்து மிஸ், அவன் கமல் ரசிகன்!" என்று பசங்க குரல் கொடுத்த போது முதல் பெஞ்ச்சில் இருந்த என்னை அந்த மிஸ் கலவரமாக பார்த்தது இன்னும் நினைவிலேயே இருக்கிறது (ref: பார்த்த விழி பாடலில் வரும் ஒரு காட்சி)

    பதிலளிநீக்கு
  23. நான் மூன்று மாதக் குழந்தையாய் இருந்த பொழுது என் அம்மா என்னை குணாவுக்கு கூட்டிச் சென்றதாய் சொன்னார்.நான் பார்த்த முதல் படம் அது.அதனால் தான் என்னவோ பிறகு பார்த்தவுடன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தளபதி படத்தை நான் இன்னும் முழுசாக பார்த்ததில்லை.

    பதிலளிநீக்கு
  24. எனக்கெல்லாம் என்திரன் ரிலீஸ் தேதிகூட தெரியமாட்டேங்குது. இந்த அரவிந்தன் மாதிரி ஆளுங்க இவ்வளுவு detailum எப்படித்தான் தெரிஞ்சு வைச்சிருக்கிராங்களோ!!

    பதிலளிநீக்கு
  25. ரஜினி கமலுடன் போட்டி போடுவது வசூலில் மட்டும்தான் என்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள். ரஜினி கமலுக்கு என்ன நடிப்பிலா போட்டி?!?

    --

    வாழப்பழத்துல ஊசி ஏத்துறதுதானே வேணாங்கிறது?

    சமீபத்திய உதாரணம் தசாவதாரம்
    ---

    சமீபத்திய உதாரணம் அல்ல. சொல்லிக்கொள்ளும் அளவுக்கு உள்ள ஒரே உதாரணம் கமலுக்கு தசாவதாரம். கமல் ரசிக நண்பர் சொன்னார்.. "இனி என் கட்டை நல்லா வேகும்டா. எங்க தலைவன் கடைசிவரைக்கும் இதுபோல ஒரு வெற்றியை கொடுக்காமலே இருந்துவிடப் போகிறார் என்ற நம்பிக்கையின்மையோடு இருந்தேன். நல்லவேளை.. முப்பது வருட காத்திருத்தல் வீண் போகவில்லை"

    ரஜினியின் ஆரம்ப படங்களில் காணப்பட்ட தேர்ந்த நடிப்பு, பிற்காலத்தில் ஸ்டைல், ஆக்ஷன் என வியாபார உலகில் அடியெடுத்து வைத்தபிறகு இல்லை. ஆனால் அதுவும் கமலுக்கு ஒரு வகையில் லாபமே. அப்படியில்லாமல், தொடர்ந்து ரஜினியும் நடிப்பில் கமலோடு ரஜினியும் சரிக்கு சரி போட்டிபோட ஆரம்பித்திருந்தால், கமலுக்கு "நடிப்பென்றால் கமல்" என்ற அந்தஸ்தும் கிடைத்திருக்காது.. கமல் மட்டும் சும்மாவா? ரஜினி நடிப்பது போன்ற மசாலா படங்களைத் தானும் செய்தால் மட்டுமே திரையுலகில் நிற்கமுடியும் என்ற பய ஊணர்வுடன், ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என நடித்து வந்தவர். ரஜினியால் இன்றைக்கும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் படம் ஒன்றை கமல் போல தரமுடியும். ஆனால், கமலால் ஒரு போதும் பாட்ஷா போன்ற ஆக்ஷன் படத்தை தரவே முடியாது. இதுதான் கமலுக்கும் ரஜினிக்கும் இடையே பொதிந்திருக்கும் கடலளவு வித்யாசம். இன்றைக்கும் எந்திரன் படத்தை உலகமே வியக்கிறது என்றால் அது ரஜினி என்ற மூன்றெழுத்து மந்திரமே.

    ரஜினியின் தளபதியை ஒப்பிடுகையில், குணா வசூலில் படு தோல்வி அடைந்த படம். . குணா படம் வந்த போது, ரசிகர்கள் சொன்னது ஞாபகம் வருகிறது. "எங்க ஆள் படம் இன்னும் பத்து பதினைந்து வருடங்கள் கழித்து வந்தால் வெற்றிப்படமாக அமைந்திருக்கும் என" எப்படி நோகாமல் இப்படி ஒரு பொய்யை என்றைக்கும் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்
    என புரியமாட்டேங்குது. குணா, ஹேராம் இதுபோன்ற எந்தப் படங்களும் இன்னும் ஐம்பது வருடம் கழித்து திரைக்கு வந்தாலும், கூட்டம் கூடாது. அதெல்லாம் தொல்லைக்காட்சியில் ஓசியில் பார்க்கத்தான் லாயக்கு.

    பதிலளிநீக்கு
  26. ரஜினி கமலுக்கு என்ன நடிப்பிலா போட்டி?!? ரஜினி சாதனைகளை உடைக்காமல் எப்படி இன்னமும் கமலை ரஜினிக்கு போட்டி என்றி சொல்லி வருகிறார்கள்?!

    ** வாழப்பழத்துல ஊசி ஏத்துறதுதானே வேணாங்கிறது?

    ஆனால் இந்த 30 வருடங்களில் ரஜினி ரிக்கார்டை கமல் அவ்வப்போது உடைத்துக்கொண்டே வந்திருக்கிறார் என்பதற்கு சமீபத்திய உதாரணம் தசாவதாரம்,.

    *** சமீபத்திய உதாரணம் அல்ல.
    சொல்லிக்கொள்ளும் அளவுக்கு உள்ள ஒரே உதாரணம் கமலுக்கு தசாவதாரம். கமல் ரசிக நண்பன் ஒருவர் சொன்னார்.. "இனி என் கட்டை நல்லா வேகும்டா. எங்க நம்ம தலைவன் கடைசிவரைக்கும் இதுபோல ஒரு வெற்றியை கொடுக்காமலே இருந்துவிடப் போகிறார் என்ற நம்பிக்கையின்மையோடு இருந்தேன். நல்லவேளை.. முப்பது வருட காத்திருத்தல் வீண் போகவில்லை"

    பதிலளிநீக்கு
  27. ஆனாலும் . . .தளபதி ரிலீஸான காலகட்டத்தில்
    ரஜினி ரசிகர்களை திருப்திபடுத்தாத படம் என்றுதான்
    சொல்லவேண்டும் ... குறிப்பாக ரஜினி - ஸ்ரீவித்யா நீண்ட
    அழுகைகாட்சி ரசிகர்களை டென்ஷன் ஆக்கிவிட்டது என்றே
    சொல்லலாம் . . . . .


    மயிலாடுதுறை பியர்லெஸ் திரையரங்கம் - தீபாவளி - தளபதி
    நினைவுகளை தூண்டியமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  28. //எம்.ஜி.ஆரை ரசித்தவர்கள் நிறையபேர் கமலை ரசித்தார்கள். சிவாஜியை ரசித்தவர்கள் ரஜினி ரசிகர்களாக இருந்தார்கள்//
    தமது தலைவர் இடத்தை எக்காரணம் கொண்டும் வேறு யாரும் நிரப்பிவிட கூடாது என்ற (மாற்றி ஆதரிக்கும்)மனநிலையாக இருக்கலாமோ?
    கும்பகோணத்தில் வாசு திரையரங்கில் "தளபதி"...முதல் ஷோ..!,காசியில் "குணா" இரவுக்காட்சி..! பார்த்தேன்..!
    நல்ல பகிர்வு...!(இரண்டு (அ) மூன்று நாட்களில் எல்லா படமும் பார்த்துவிடுவேன்).

    வெற்றி,
    http://www.vetripages.blogspot.com/

    பதிலளிநீக்கு
  29. கொசுவர்த்தியை சுழல வைத்தமைக்கு நன்றி கிருஷ்ணா....

    அபிராமி தியேட்டரில் (காம்ப்ளக்ஸ்)தளபதி படத்திற்கு டிக்கெட் கிடைக்காமல் முதலில் “குணா” பார்த்தேன்... பின்னர் தளபதி படத்தை ஆல்பர்ட் தியேட்டரில் பார்த்தேன்...

    80 களில் ராகதேவன் திரையுலகின் முடி சூடா அரசன் ஆயிற்றே.. அவரின் இசையாட்சி எல்லா படங்களிலும் தெரியும். கமலுக்கு கொஞ்சம் ஸ்பெஷலா இசையமைப்பார்..

    தளபதியில் “மணி”க்காக சிறப்பான ஸ்பெஷல் இசை... தளபதி ரிலீஸின் போது தான் ஜி.வி.ஃபிலிம்ஸாரின் ஷேர் விலை மார்க்கெட்டில் உச்சத்தை தொட்டது..

    பதிலளிநீக்கு
  30. //எம்.ஜி.ஆரை ரசித்தவர்கள் நிறையபேர் கமலை ரசித்தார்கள். சிவாஜியை ரசித்தவர்கள் ரஜினி ரசிகர்களாக இருந்தார்கள்.//

    எம்.ஜி.ஆர் மற்றும் கமலுக்கு அழகிலும் நிறத்திலும் ஒத்துப்போகிறவர்கள். ரஜினி யும் சிவாஜியும் (பெயரிலும்) ஸ்டைலிலும் ஒத்துப்போகிறார்கள் என்பது என் கருத்து.

    பதிலளிநீக்கு
  31. என்னை பொறுத்தவரை இந்த பதிவு உங்களுடைய 1 of the best!

    மிக நன்றாக இருந்தது!

    நன்றி!!

    அன்புடன்,
    சுவாசிகா
    http://ksaw.me

    பதிலளிநீக்கு
  32. ரஜினி கமலுக்கு என்ன நடிப்பிலா போட்டி?!?

    --

    ரஜினியால் கமல் போன்ற நடிப்பை தரமுடியும். ஆனால் என்றைக்கும் ரஜினியின் கமர்ஷியல் கரிஷ்மாவை கமலால் எட்டவே முடியாது. இன்று உலகமே திருவிழாக்கோலம் பூண்டிருக்கிறது எந்திரனுக்காக என்றால் அது ரஜினி என்ற மூன்றெழுத்து மந்திரமே. கமலால் அதுபோன்ற ஒரு பரிமாணத்தை அடையவே முடியாது.

    பதிலளிநீக்கு
  33. என் வாழ்நாளில் இரண்டு படங்கள் என்னை மிகவும் பாதித்தது(நாட்கணக்கில் மனதை உறுத்தியது)

    ஒன்று நான் மிக சிறியவனாய் இருந்த போது பார்த்த பில்லா...அட நிஜம் தான்....வீட்டில் யாருக்கும் தெரியாம தோட்டத்தில் உட்கார்ந்து மூன்று நாட்கள் அழுதேன் எதுக்கு தெரியுமா? ஒரிஜினல் பில்லா ரஜினி இறந்து விட்டார் என்று...

    அதற்கு பிறகு நிஜமாகவே என்னை பாதித்த படம் குணா....படத்தை நான் அது வெளியான பல ஆண்டுகள் கழித்து தான் முழுதாக பார்த்தேன். ஆனால் அப்படம் என் சகஜ வாழ்க்கையை மூன்று நான்கு நாட்களுக்கு புரட்டி போட்டது என்பது உண்மை...

    என்றும் அன்புடன்,
    நெ. பார்த்திபன்
    www.parthichezhian.com

    பதிலளிநீக்கு
  34. "எம்.ஜி.ஆரை ரசித்தவர்கள் நிறையபேர் கமலை ரசித்தார்கள்"

    செவத்தவன் பொய் சொல்லமாட்டாண்னே.

    பதிலளிநீக்கு
  35. கமல் ரசிகன் sakala7:34 PM, செப்டம்பர் 30, 2010

    இங்கே சில பேர் என்னமோ ரஜினி ஆரம்பகாலத்தில் நடித்டுகிழித்துவிட்டதாகவும் பிறகு அதை அவர் தொடர்ந்திருந்தால் என்னமோ கமலை விஞ்சி விடுவார் என்றும் சொல்கிறார்கள். எந்திரன் பில்டப் இருப்பது உண்மைதான். அதற்காக இந்த நேரத்தில் என்ன சொன்னாலும் நம்பிவிடுவார்கள் என்று நினைக்காதீர்கள்!! இன்று தனுஷ் ப்ரியாமணி கார்த்தி போன்ற புதுமுகங்கள் கூட நன்கு நடிக்கிறார்கள். ஆரம்பகாலத்தில் ரஜினி நடித்தது அந்தளவு தானே தவிர கொஞ்சமும் அவரின் நடிப்புத்திறமை அதிகமாகவில்லை. கமலுடன் ரஜினியின் நடிப்பை கம்பேர் பண்ணுவதெல்லாம், ஹி ஹி, பொறக்காத குழந்தை கூட சிரிக்கும்

    வசூல் வசூல் என்கிறீர்கள் என்னமோ தசாவதாரத்தை விட்டால் கமல் வசூல் சாதனையே பன்னவில்லைன்கர மாதிரி. ரஜினி அளவுக்கு இல்லையென்றாலும் பலதடவை ரஜினியின் ரிக்கார்ட் டான்சை உடைத்தவர் தான் கமல். இல்லாவிட்டால் இன்றுவரை அவரை ரஜினிக்கு போட்டி என்று சொல்ல மாட்டார்கள். அதே சமயம் கமலின் overall வசூல் ரஜினி படங்கள் விட கொஞ்சம் கம்மிதான் என்று ஒப்புக்கொள்கிறேன், ஒரு வேலை ரஜினி சுயமாக தனியாக நின்று தசாவதாரத்தில் கமல் செய்ததுபோல் தனி ஆளாக வந்து வசூல் சாதனை செய்து வென்று காட்டட்டும். பிறகு ஒத்துக்கொள்கிறோம் ரஜினி கிரேட் என்று.

    மற்றபடி இந்த எந்திரன் எதிர்பார்ப்பெல்லாம் ஒன்னும் புதுசும் இல்லை, ரஜினியின் புகழும் தென்னிந்தியாவை தாண்டவில்லை. பாபா படத்துக்கு இருந்த அதே எதிர்பார்ப்புதான். இப்போ மக்கள்தொகை அதிகம், தொழில்நுட்பம், ரஜினி தவிர பல சூப்பர் ஸ்டார்கள் (ஐசு, ரஹ்மான், சங்கர், பன் டிவி) இப்படி பல காரணங்கள் உள்ளன.

    சங்கர் ரஜினியிடம் போனார் அதனால் ரஜினிக்கு அதிர்ஷ்டம். ரஜினி ஒன்றும், சங்கரிடம் சென்று எனக்கு ரோபோ படம் தாருங்கள் என கேட்கவில்லை. ரஜினியின் கதை கேட்கும் திறமை, வெற்றியை கணிக்கும் திறமை நாளுக்கு நாள் மங்கி தான் வருகிறது. 30 வருஷம் இருந்தவருக்கு குசேலன் ஒரு குப்பை என்று தோன்றவில்லை.

    இவர் வழி தனி வழி, ஆனா தனியா வந்து ஜெயிக்க முடியாது

    பதிலளிநீக்கு
  36. கமல் ரசிகன் sakala8:03 PM, செப்டம்பர் 30, 2010

    ரஜினியின் கரிஷ்மா, கரீனா எல்லாம் சரி தான். அதை வைத்து ஒரு பாபா குசேலனை ஓட்ட முடியாதென்று உங்களுக்கே தெரியாதா. அதனால் தான் ஐசு, ரஹ்மான், சங்கர், பன் டிவி என்று பெரிய கேன்வாசுடனே வருகிறார். இந்த கரிஷ்மா கரீனாவெல்லாம் இல்லாமலேயே தசாவதாரம் வசூல் 60 போட்டு 250 எடுத்தார்கள். அனால் உங்க ஜிவாஜி 80 போட்டதாக சொல்லி(உண்மையில் 40 தான் தேறும்) 120 தான் எடுக்க முடிந்தது. இப்போ கூட எந்திரன் ஒரு ரிஸ்க் என்று சொல்லும், பழுத்த அனுபவஸ்தர்கள் இருக்கிறார்கள். அதன் முதலீடு அப்படி. ஆந்திராவில் படத்தை விற்றும் பலநாள் போணியாகவில்லை, ரெண்டு நாள் முன்னாடி, நிலைமை நாரக்கூடாதேன்று, விற்ற படத்தை மறுபடியும் இவர்களே வாங்கி விநியோகிக்கிறார்கள்.

    எப்போதும் ஆன்மிகம் அரசியல் பஞ்சு வசனம் பேசிய ரஜினியால், ஒரு ஆன்மீக அரசியல் பாபாவை ஒட்டமுடியவில்லை. ஆனால் கடவுளே இல்லை என்கிற கமலால் ஒரு semi-spiritual படத்தை கோடிக்கணக்கான நாத்திக கூட்டத்திடம் போட்டுக்காட்டி கொடிகள் அல்ல முடிகிறது. யார் புத்திசாலி?!?

    சரித்திரம் வரலாறு பூகோளம் எல்லாம் உங்களுக்கு தெரிந்தால், சிவாஜியை தசாவும், சந்திரமுகியை வே.விளையாடும், ஆந்திராவில் பாட்ஷாவை சதிலீலாவதியும், பாண்டியனை தேவர்மகனும், படையப்பாவை விட கொஞ்சமே கம்மியாக தெனாலியும், எதோ ஒரு ரஜினி படத்தை அபூர்வ சகோதரர்களும், இந்தியன் + அவ்வை ஷன்முகியும் மிஞ்சியது என்ற உண்மையை உங்களுக்கு ரிப்பீட் பண்ண வேண்டியதில்லை. இத்தனையும், உலகத்தரம், உலக்கைத்தரம், நல்ல கதை திரைக்கதை இன்னபிற எல்லாவற்றையும் சுமந்துகொண்டே சாதித்தார். அதுவும் நீங்கள் சொல்லும் கரிஷ்மா, கரீனாவெல்லாம் இல்லாமலேயே.

    பாப்பா முதல் பல்லு போன பாட்டி வரை தியேட்டருக்கு இழுக்க கமலுக்கு தெரியாது என்று நீங்கள் நினைகிறீர்களா?!? ஹையோ ஹையோ !!!

    பதிலளிநீக்கு
  37. கமல் ரசிகன் sakala9:11 PM, செப்டம்பர் 30, 2010

    வந்து நின்னாலே ஜெயிக்கும் ரஜினி, பலவகையில் பிற்போக்குவாதியான ரஜினி, இன்றைக்கு முற்போக்கான தொழில்நுட்பம், அனிமேஷன் ஜிகினா, ரோபோ பெசல்-எப்பெக்டஸ் எல்லாம் செய்யவேண்டிய அவசியம் என்ன? வேற என்ன, இன்னமும் அருணாசலம் கதையையே ரீமேக் செய்தால் ரஜினி வசூலை விஜய் அஜீத் எல்லாம் மிஞ்சிவிடுவார்கள் தானே. ஒரு காலத்தில் " நான் ஒண்ணுமே செய்ய மாட்டேங்குறேன், ஆனா கமல் இன்னும் இன்னும் புதுசா பண்ணனும்னு கஷ்டப்படுறார்"ன்னு மறைமுகமா பீற்றிக்கொண்டிருந்தவர், இன்னிக்கு, கமலைப்போல் prosthetics மேக்கப் போடவேண்டியிருக்கிறது, 17 மணி நேரம் பாத் டப்பிலேயே இருக்க வேண்டியுள்ளது, இன்னும் என்திரனுக்காக பலப்பல கடின உழைப்பை நல்கினார் இந்த, வந்து நின்னாலே ஜெயிக்கும் ரஜினி.

    சந்திரமுகி ஓடினாலும் ஓடியது, இந்த கிளைமேக்ஸ்ல ஒரு புது கெட்டப் காட்டி விசிலடிக்கவைக்க வேண்டியிருக்கு. சிவாஜி எந்திரன்னு கெட்டப் மேனியா தொடர்கிறது. ஒருகாலத்தில் கமலின் கெட்டப்ஸ் கிண்டலடிச்சதெல்லாம் மறந்து போச்சி.

    இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்? ரஜினியின் பழைய பப்பு இன்னிக்கு வேகாதுங்க!

    பதிலளிநீக்கு
  38. நண்பரே என்னுடைய இளமை பருவத்தை நியாபகம் படுத்தியது உங்களுடைய பதிவு. நானும் என்னோ ஆரம்ப காலங்களில் ரஜினி பைத்தியமாகவே இருந்தேன். அந்த நேரத்தில் பார்த்தது தான் தளபதி படமும் ஒன்று. நாகப்பட்டினம் பாண்டியன் தியேட்டரில் எனது மாமா உடன் சென்று பார்த்தேன். ராக்கம்மா கைய தட்டு பாடலின் போது திரையை சுத்தியும் கலர் கலர் லைட் எரிய செய்தனர். அதை பார்த்த போது ஏதோ ஜென்ம பலனை அடைந்து விட்டதாகவே நினைத்தேன். நான்கு நாட்களுக்கு தூக்கமே இல்லை.

    குணா திருத்துறைப்பூண்டி விஜிலா வில் பத்து பேர் மட்டுமே பார்த்தோம் ஒன்னுமே வெளங்கல ஒரு வாரமே ஓடியது. 2003 ம் வருடம் திரும்ப குணா பார்த்தேன் ஐயகோ 15 வருடம் கழித்து வரவேண்டிய ஒரு படத்தை கமல் அந்த காலத்திலே எடுத்து விட்டார். அன்று இருந்து கமல் ரசிகனானேன்.

    பதிலளிநீக்கு
  39. எப்போதும் ஆன்மிகம் அரசியல் பஞ்சு வசனம் பேசிய ரஜினியால், ஒரு ஆன்மீக அரசியல் பாபாவை ஒட்டமுடியவில்லை.

    --

    அய்யோ அய்யோ! என்னவோ கமலின் பழுத்த சினிமா அனுபவம் மட்டும் எப்போதும் அவர் படம் வணிக ரீதியாக கைகொடுப்பதுபோல! ஆளவந்தான் ஊத்திகிச்சு. சரி. புதிதான களம் என்றால், காமெடியில் என்னைப்போல ஆளில்லை என பந்தா காட்டிய கமலால் மும்பை எக்ஸ்பிரஸ் ஒரு அடி கூட ஓட முடியாமல் தடம் புரண்டது.

    ரஜினிக்கு குசேலன், பாபா படங்கள் கண் திருஷ்டி. எப்போதும் வெற்றிப்படமே கொடுத்துக்கொண்டிருந்தால் எங்க தலைவருக்கும் அலுப்பு தட்டுமில்ல. அதனாலதான். எந்திரன் என்ற கனவை ரஜினி நனவாக்கிவிட்டார். ஆனால் கமலோ இன்னும் மருதநாயகம், மர்மயோகி..கனவு கண்டுகொண்டே.. மொதல்ல யார் துணிச்சலா பணம் கொடுக்கிறது! கொடுத்தாலும் யார் துணிச்சலா வாங்க முன் வருவது? அப்படியே வாங்கினாலும், யாரெல்லாம் துணிச்சலா படம் பார்க்க போறது? ஆஸ்கர் ஆஸ்கர் என ஆட்டம் போட்ட காலம் எல்லாம் மலையேறி இப்போது உலக நாயகனுக்கு வந்தாச்சி. ஒரு ஆஸ்கருக்கு இரு ஆஸ்கர் ரஹ்மான் கையில். ரஜினியும் கூடிய விரையில் ஆஸ்கர் வாங்கி வருவார். கமலோ புகை போகும் பார்வையோடு "சீ சீ இந்த ஆஸ்கர் புளிக்கும்" என கொல்கத்தா எக்ஸ்பிரஸ் எடுக்க போய்விடுவார்!

    கமல் உலக காமெடியென்றால், அவர் ரசிகர்கள் அவரைவிட பல உலகமகா காமெடி. ஒரு படம் ஓடலைன்னா, "பதினைந்து வருடங்களுக்கு பிறகு வரவேண்டிய படம்" எனச் சொல்லியே தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக்கொள்வது. குணா, ஹேராம், மும்பை எக்ஸ்பிரஸ், ஆளவந்தான் போன்றவை பத்து பதினைந்து வருடங்கள் என்ன, நூறாண்டுகள் கழித்து வந்தாலும் தோல்வி படங்கள் தான்.

    பதிலளிநீக்கு
  40. எந்த கமல்...இந்த பிட்டுப் படங்களில் நடித்துக்கொண்டிருந்த பையனா?

    பதிலளிநீக்கு
  41. I love this yuva. unfortunately, i also passed through the same phase as a kamal fan whereas my brother and most of my friends being rajini fans.

    If possible and time permits, pl visit my blog www.intelhari.blogspot.com to read some reviews i have done as well as blogs. thanks. hari.

    பதிலளிநீக்கு