கோவை மாவட்ட ஆட்சியர் எத்தனையோ மனுக்களை கண்டிருக்கிறார். ஆனால் இப்படி ஒரு மனுவை, வாழ்வில் முதன்முறையாக வாசிக்கிறார். ஒரு அரசமரம் நேரடியாக வாய்திறந்துப் பேசுவதைப் போன்ற வார்த்தைகள். திரும்ப திரும்ப வாசிக்கிறார்.
"நான் உங்களுக்கு நிழல் தருகிறேன். சுவாசக்காற்று தருகிறேன். அப்படியிருந்தும் என்னை ஏன் அழிக்க நினைக்கிறீர்கள்? என்னை அழித்துவிட்டு வெயிலில் வாடி, வதங்கி நீங்கள் அழிந்துப் போகாதீர்கள். என்னை நீங்கள் சாய்த்துவிட்டால், என்னை நம்பி, கிளைகள் மீது கூடுகட்டி வாழும் புள்ளினங்களுக்கு என்ன
பதில் சொல்வேன்? கார்பன்-டை-ஆக்ஸைடை நான் எடுத்துக்கொண்டு, சுத்தமான பிராணவாயுவை உங்களுக்கு தரும் என்னை அழித்திடாமல் மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் காத்திட வேண்டும்!"
பீளமேட்டைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவன் அருண்குமாரும், அவனது நண்பர்கள் குழாமும் சேர்ந்து எழுதியிருந்த மனுவில் இடம்பெற்றிருந்த வாசகங்கள் இவை.
என்ன பிரச்சினை?
கோவையைச் சேர்ந்த வின்சென்ட் விளக்குகிறார். சுற்றுப்புறச் சூழல் ஆர்வலரான இவர், இது பசுமை தொடர்பான விழிப்புணர்வுப் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருக்கிறார். மர வளம் என்ற பெயரில் இணையத்தளம் ஒன்றையும் இதற்காக நடத்தி வருகிறார்.
"செம்மொழி மாநாடு கோவையில் நடந்ததை ஒட்டி, சமீபகாலமாக நகரத்தின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. சாலை விரிவாக்கத்துக்காக பல்லாயிரம் மரங்கள் வெட்டி வீழ்த்தப்படுவதை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனையோடு பார்த்து நின்றோம்.
கோவை அவினாசி பிரதான சாலையிலிருந்து 200 மீட்டர் தூரத்தில், மசாக்காளிபாளையம் செல்லும் சாலையில் பிள்ளையார் கோயில் ஒன்றும், அம்மன் கோயில் ஒன்றும் இருந்தது. இக்கோயில்களை ஒட்டி பழமையான பிரம்மாண்டமான அரசமரம் ஒன்று, அப்பகுதி மக்களுக்கு பசுமையான நிழலையும், சுத்தமான காற்றையும் 55 வருடங்களாக தந்து வந்தது.
சாலை விரிவாக்கத்துக்காக இம்மரம் வெட்டப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். கோயில்கள் அகற்றப்பட்டுவிட்ட நிலையில், அப்பகுதி மாணவர் அருண்குமாரும், அவரது நண்பர்களும் குறைதீர்க்கும் நாளன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனுவொன்று கொடுத்தார்கள்" என்று வின்சென்ட் பின்னணிக் கதையை சொல்லி முடித்தார்.
அரச மரத்தின் இன்றைய கதி என்ன? நேராக அங்கேயே சென்று பார்த்துவிடுவோமே?
எந்தவித சேதாரமுமின்றி மரம் தன்னுடைய கம்பீரத் தோற்றத்தோடு இன்னமும் அங்கேயே வீற்றிருக்கிறது. மரத்தைச் சுற்றியும் சாலைகள் போடப்பட்டிருக்கின்றன. மரத்தை நம்பி கூடுகட்டி வாழும் நூற்றுக்கணக்கான பறவைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அச்சாலையிலேயே இன்று 'நிழல்தரும் ஒரே குளிர்தரு' இதுமட்டும்தான்.
மரம் காத்த மாணவக் கூட்டம், மரத்தின் நிழலில் நின்று கூட்டாக வெற்றிப் புன்னகையோடு போஸ் கொடுக்கிறார்கள். "இது எங்கள் தாத்தா பாட்டி நட்ட மரம். எங்கள் அப்பாக்கள் ஓடி பிடித்து விளையாடிய இடம். எங்கள் முன்னோர் சொத்தை நாங்களும் அனுபவிக்க வேண்டாமா?" என்கிறார்கள். அருகிலிருக்கும் கடைக்காரர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், குழந்தைகளின் பெற்றோர் என்று அனைவருக்குமே ஆனந்தம்.
மாணவர்களின் மனுவில் இருந்த நியாயத்தைப் புரிந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் மரத்தை வெட்டக்கூடாது என்று நேரடியாக ஆணையிட்டு தடுத்திடுக்கிறார்.
"எங்கள் குழந்தைகளுக்கு தன்னிச்சையாகவே இம்மரத்தை காக்க வேண்டுமென்று ஆர்வம் இருந்தது. எப்படி காப்பது என்று நடைமுறைகளை மட்டுமே சொல்லிக் கொடுத்தோம். அருண்குமார் மனு தயாரிக்க, இப்பகுதி குழந்தைகள் அனைவரும் கையெழுத்திட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார்கள். மாவட்ட ஆட்சியரும் பெருந்தன்மையோடு நடவடிக்கை எடுத்திருக்கிறார்" என்றார் தண்டபாணி. இவர் அருண்குமாரின் தந்தை.
இயற்கையை காக்க வேண்டும் என்ற அக்கறையை இம்மாணவர்களுக்குள் விதைத்திருக்கும் அவர்களது பெற்றோரும், ஆசிரியருமே முதலில் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
மரத்தை காக்க மாணவர்கள் மனு கொடுக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர் அதனை கனிவோடு பரிசீலிக்கிறார். மரம் தப்புகிறது. - அரசிடம் பிரச்சினைகளுக்காக சென்றால் தீர்வே கிடைக்காது என்று புலம்புபவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய நிகழ்வு இது.
(நன்றி : புதிய தலைமுறை)
Mr Vincent's post at the eblow link:
பதிலளிநீக்குhttp://maravalam.blogspot.com/2010/06/blog-post_22.html
செம்மொழி மாநாட்டிற்காக கோவையில் பல மரங்கள் வெட்டப்பட்டன. அவற்றை தங்கள் நண்பர் செல்வேந்திரன் அவர்களே தன்னுடைய பிளாக்கில் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார் நண்பரே, ஒரு மரம் மட்டும் காப்பாற்றப்பட்டுள்ளது அதுவும் மாணவர்கள் மன்றாடி மனு கொடுத்த பிறகு , என்ன நமது அரசாங்கத்தின் பெருந்தன்மை, என்ன மாவட்ட ஆட்சித் தலைவரின் கரிசனம், வாழிய வாழியவே
பதிலளிநீக்குஇது போன்ற பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு கிடைக்கும் தான் ஏனெனில் இந்த மரம் காப்பாற்றப்படுவதால் அரசியல்வாதிகளுக்கு ஒரு நஷ்டமும் இல்லை.... ஆனால் கட் அவுட் ,பேனர் மறைத்ததால் அதே கோவையில் சில உயிர்கள் பறி போன சம்பவம் நாடறிந்த உண்மை ... இதை வைத்து சாலையை மறைத்து பேனர் வைக்க அனுமதிக்க வேண்டாம் என்று மனு கொடுத்து ப்பாருங்கள் ...கலக்டர் என்ன செய்கிறார் என்று.
பதிலளிநீக்குமிகவும் பெருமை படவேண்டிய விஷயம். இந்த சிறு வயதில் மரங்களின் மேல் உள்ள ஆர்வத்திற்கே அவர்களை நாம் பாராட்ட வேண்டும். மேலும் அவர்களின் நம்பிக்கைக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்த கலெக்டர் அவர்களையும் பாராட்ட வேண்டியது நம் அனைவரின் கடமை. அச்சிறார்களின் பெற்றோர்களும் பாராட்டப்பட வேண்டியவர்களே
பதிலளிநீக்குஇப்படி ஒரு பதிவை வெளியிட்டதற்கு நன்றி.
மிகவும் பெருமை படவேண்டிய விஷயம். இந்த சிறு வயதில் மரங்களின் மேல் உள்ள ஆர்வத்திற்கே அவர்களை நாம் பாராட்ட வேண்டும். மேலும் அவர்களின் நம்பிக்கைக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்த கலெக்டர் அவர்களையும் பாராட்ட வேண்டியது நம் அனைவரின் கடமை. அச்சிறார்களின் பெற்றோர்களும் பாராட்டப்பட வேண்டியவர்களே
பதிலளிநீக்குஇப்படி ஒரு பதிவை வெளியிட்டதற்கு நன்றி.
மாணவர்களின் பணி போற்றத்தக்கது...ஆரோக்கியமான கட்டுரை நண்பரே..
பதிலளிநீக்குthey are not gone to idiot politicians.that is more important here.
பதிலளிநீக்குபுதிய தலைமுறை படிக்கவில்லை, ஆனாலும் புதிய தலைமுறை அருமையாக வளர்வதைப் பற்றி அறிகையில் மகிழ்ச்சியாக உள்ள்ளது..
பதிலளிநீக்குஇந்த மரமாவது காப்பாற்றப் பட்டதே...
நல்ல பதிவு..நன்றி
அன்புடன்
ஈ ரா