அபிமான நடிகர் நடித்த திரைப்படத்தை சொந்த ஊர் டெண்டு கொட்டாயில் பார்த்துவிட்டு, சினிமா ஆசையால் சென்னைக்கு ஓடிவருபவர்கள் நிறைய பேரை நாம் கேள்விப்பட்டதுண்டு. இதுமாதிரியே அரசியல் தலைவர்கள் மீதான அபிமானத்தால், அவர்களை மாதிரியே தலைவர்களாய் வளரவேண்டும் என்று விருப்பப்பட்டு பட்டணத்துக்கு மூட்டை கட்டிக்கொண்டு வருபவர்களும் உண்டு. சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், எழுத்தாளர்கள் என்று பலருக்கும் இதுமாதிரி ரசிகர்கள் இருப்பது சகஜம்தான்.
முத்துவேல் கொஞ்சம் வித்தியாசமான இளைஞர். ஐ.ஏ.எஸ். அதிகாரியான இறையன்புவின் மீது அபிமானம் கொண்டு அவரைப்போலவே ஐ.ஏ.எஸ். ஆவேன் என்ற சபதத்தோடு சென்னைக்கு வந்திருப்பவர். சிறுவயதில் இருந்தே இறையன்பு குறித்த செய்திகளை ஊடகங்களில் ஆர்வமாக படிப்பாராம். தொலைக்காட்சிகளில் இறையன்பு பேசுகிறார் என்றால் முத்துவேலுக்கு கையும் ஓடாது, காலும் ஓடாது. இறையன்புவின் தமிழ் மீது முத்துவேலுக்கு அவ்வளவு காதல். சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு அருகே பாதரக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் இவர்.
இறையன்புவாக என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தவர், நல்ல தமிழைப் பேசிப்பழக ஆரம்பித்தார். 1330 திருக்குறளையும் மனனம் செய்து குன்றக்குடி அடிகளார் முன்பாக ஒப்புவித்து விருது பெற்றார். பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டியில் கலைஞர் கையால் பரிசு, தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்த விழிப்புணர்வுக்காக நேரு யுவகேந்திரா நடத்திய பேச்சுப்போட்டியில் ப.சிதம்பரமிடமிருந்து பரிசு, சமீபத்தில் செம்மொழி மாநாட்டில் துணைமுதல்வர் ஸ்டாலின் கையால் பரிசு என்று அடுத்தடுத்து ஏராளமான விருதுகளையும், பரிசுகளையும் தமிழால் வென்றிருக்கிறார். இறையன்புவாக மாறவேண்டுமென்ற அவருடைய ஆசை, அதுவாகவே தன்னை வளர்த்துக் கொண்டு ஒரு நல்ல தமிழ்ப் பேச்சாளரை இன்று சமூகத்துக்கு கொடுத்திருக்கிறது. இறையன்புவும் ஒரு பேச்சாளர் என்பதை இங்கே நினைவில் கொள்க.
"என்னுடைய எட்டு வயதில் தந்தை எங்களை விட்டு பிரிந்து போய் விட்டார். கடுமையான வறுமை. அம்மா கிடைத்த வேலைகளை செய்து என்னையும், தம்பியையும் காப்பாற்றினார். அம்மாவுக்கு கிடைத்த சொற்ப வருமானத்தில் வயிறு முழுமையாக நிறையாது.
ஒருமுறை மதியவேளையில் மோசமான பசி. பசியை வெல்ல என்ன செய்வதென்றே தெரியவில்லை. அருகிலிருந்து நூலகத்துக்குச் சென்று புத்தகங்களை புரட்டிப் படிக்க ஆரம்பித்தேன். வாசிப்பு பசியை மறக்கச் செய்தது. வறுமை தந்த பரிசு தமிழறிவு. இதனால் நூலகத்தில் கிடைக்கும் கிட்டத்தட்ட எல்லாப் புத்தகங்களையும் இலக்கணம், இலக்கியம் என்று பாரபட்சமில்லாமல் ஒருகட்டத்தில் என்னால் படிக்க முடிந்தது. இந்த காலக்கட்டத்தில்தான் இறையன்பு எழுதிய தன்னம்பிக்கை எழுத்துகளை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரை மானசீக வழிகாட்டியாக மனதுக்குள் வரிந்துகொண்டேன்.
எனக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியையாக அமைந்த செண்பகவள்ளி தெய்வம். முடங்கிப் போனபோதெல்லாம் என்னை தட்டிக் கொடுத்து ஊக்குவித்தவர். மாநிலம் முழுக்க நிறைய பேச்சுப்போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளாக வாங்கிக் குவித்தேன். கிடைத்த பரிசுப்பணம் எனக்கும், தம்பிக்கும் கல்விச்செலவுக்கு உதவியது. நிறைய நல்ல உள்ளங்கள் உதவின. எப்படியோ தட்டுத்தடுமாறி இளங்கலை கணினி முதல் வகுப்பில் தேறிவிட்டேன். தமிழ்வழியில் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி, இறையன்பு போல அதிகாரியாக வேண்டும் என்பதுதான் என் இலட்சியம்" என்கிறார் முத்துவேல்.
இவரது இலட்சியத்துக்கு இப்போது சிறு தடங்கல்.
இதுவரை உழைத்து இவரையும், இவரது தம்பியையும் காப்பாற்றி வந்த இவரது தாய் இப்போது உடல்நலமின்றி பணிக்கு செல்ல முடியவில்லை. எனவே உடனடியாக ஏதாவது வேலையில் சேர்ந்து குடும்பத்துக்கு சம்பாதித்தே ஆகவேண்டிய கட்டாயம். இலட்சியத்தை தள்ளி வைத்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருக்கிறார்.
"அது ஒண்ணும் பெரிய பிரச்சினை இல்லைங்க. ஒரு காலத்தில் பள்ளிக் கல்வியே கிடைக்க வாய்ப்பில்லைங்கிற நிலைமை. அதையெல்லாம் தாண்டி இன்று பட்டம் வரைக்கும் வந்துட்டேன். இன்னும் கொஞ்சம் காலம் அதே மாதிரி கஷ்டப்பட்டு எட்டிப் பிடிச்சேன்னா ஐ.ஏ.எஸ். அவ்வளவுதானே? நான் கற்ற தமிழ் என்னை காப்பாற்றும்" என்று கம்பீரமாக சொல்கிறார் முத்துவேல்.
நல்ல கனவுகள் தோற்பதில்லை. முத்துவேலின் கனவும் விரைவில் நனவாக வாழ்த்துவோம்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றின் செய்திப்பிரிவில் பணியாற்றும் இளங்கோவன் அண்ணன் மூலமாக முத்துவேல் எனக்கு அறிமுகமானார். ஒரு மதியப் பொழுதில் அவரோடு பேசிக்கொண்டிருந்தபோது, அவர் பேச்சில் ஒரு விஷயம் என்னை நெகிழச் செய்தது. அதாவது பசியை மறக்க நூல்களை வாசிப்பது. இதுநாள் வரை முத்துவேலையும், அவரது தம்பியையும் காப்பாற்றிக் கொண்டிருந்தவர் அவரது தாய். ஆண்டுக்கு நூறுநாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வரும் சொற்ப வருமானத்திலேயே ஒரு மகனை பட்டதாரி ஆக்கியிருக்கிறார். மறு மகனை கல்லூரியில் சேர்த்திருக்கிறார்.
இப்போது உடல்நலம் குன்றி அந்த தாய் பணிக்கு செல்ல இயலாத நிலை. உடனடியாக ஒரு பணியில் சேர்ந்து தாயையும், தம்பியையும் காப்பாற்றியாக வேண்டும். தனது கனவான ஐ.ஏ.எஸ். தேர்வுக்கும் தயாராக வேண்டும் என்ற நிலையில் முத்துவேல் இருக்கிறார். சென்னைக்கு வந்தால் நிச்சயம் வேலை கிடைக்கும் என்று வந்திருக்கிறார். இந்நகரின் பிரம்மாண்டமும், அலங்காரமுமான சூழல் அவருக்கு கொஞ்சம் அச்சத்தையும், கூச்சத்தையும் கொடுத்திருக்கிறது.
இதுபோன்ற ஏழை இளைஞர்கள் சிலருக்கு சமூகப்பார்வை கொண்ட பதிவர் ஒருவர் வேலைவாய்ப்புக்கு வழிகாட்டி வந்தார். முத்துவேலின் கெட்டநேரமோ என்னவோ தெரியவில்லை. அந்தப் பதிவர் இப்போது ஒரு நெருக்கடியான சூழலில் இருக்கிறார். இவருக்கு உடனடியாக உதவமுடியாத நிலை. இப்பதிவை வாசிப்பவர்கள் யாரேனும் முத்துவேலுக்கு உதவலாம். தங்கள் நிறுவனத்தில் ஏதாவது காலியிடம் இருந்தாலோ, அல்லது நண்பர்களிடம் சொல்லிவைத்தோ ஒரு ஏழை இளைஞரின் வாழ்வில் விளக்கேற்றலாம். நம்மாலும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி உருவாகிவிட்டு போகட்டுமே! நிச்சயமாக பண உதவி வேண்டாம். வேலைவாய்ப்பு மட்டும் போதும்.
முத்துவேலுக்கு உதவ நினைப்பவர்கள் எனக்கு மடல் அனுப்பலாம் : yuvakrishna@gmail.com
முத்துவேல் இன்னும்
பதிலளிநீக்குசென்னையில் என் நண்பரின் அறையில் தங்கி ஒவ்வொரு திசையாய் அலைந்து வேலைதேடிக்கொண்டிருக்கிறார்.
உதவுங்கள். உங்களுக்குத் தெரிந்த திசையைக்காட்டுங்கள்.
பி.பீ.ஓ.க்கள் கூப்பிட்டு வேலை தரும் இந்த நாளில் கணிப்பொறி படித்த ஒருவருக்கு வேலையில்லையா? வெறுமே சுய முன்னேற்றப் புத்தகங்களைப் படிக்காமல் வேலை வாய்ப்புக்குறிய தகுதிகளையும் வளர்த்துக் கொள்ளவேண்டும் என்று தெரிகிறது.
பதிலளிநீக்குஅவரது ரெஸ்யூமே- ஐ ஸ்கேன் செய்து உங்கள் தளத்தில் போட்டால் வேலை கொடுக்க நினைப்பவர்களுக்கு உதவும்.
முத்துவேலுக்கு நல்ல வேலை அமைய என் வாழ்த்துக்கள். கனவு மெய்ப்படட்டும்.
பதிலளிநீக்குPl more Jobs in Airforce, BSP/ IT/Govt/freshers
பதிலளிநீக்குpl visit
http://saigokulakrishna.blogspot.com
தங்கள் முயற்சிக்கும், நல்லெண்ணத்திற்கும் வாழ்த்துக்கள்...ஆனால் இந்திய ஆட்சிப் பணிக்கு தயாராக வேண்டிய ஒரு மாணவருக்கு இப்படி வெளிப்படையாக பொது தளத்தில் உதவி கேட்கலாமா என்று தெரியவில்லை.. நாளை அவருக்கு அது தர்ம சங்கடமாக இருக்காதா?
பதிலளிநீக்குஅன்புடன்
ஈ. ரா
வணக்கம். உங்கள் "இரண்டாம் இறையன்பு!" பதிவை "IdlyVadai - இட்லிவடை" வலைப்பூவின் மூலம் கண்டேன். இந்தப் பதிவை திரு.இறையன்பு இ.ஆ.ப அவர்களுக்கும், சில நண்பர்களுக்கும் அனுப்பியுள்ளேன். விரைவில் பணிகிடைக்க வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு