6 டிசம்பர், 2011

வந்துட்டாங்கய்யா.. வந்துட்டாங்க...

முன்பு டீக்கடைகளில் மோதிக்கொண்டார்கள். பின்பு மேடைகளில், தெருக்களில், தேர்தல் பூத்துக்களில், பத்திரிகைகளில், டி.வி.க்களில், கிடைத்த இடங்களிலெல்லாம். தகவல் தொழில்நுட்ப யுகம் என்பதால், இப்போது இணையத்துக்கும் வந்திருக்கிறார்கள் அரசியல்வாதிகள். ட்விட்டர், ஃபேஸ்புக், வலைப்பூக்கள் என்று சமூக வலைத்தளங்களில் ‘அரசியல் அனல்’ பறக்க ஆரம்பித்திருக்கிறது.

உலகளவில் ஒபாமா, ஹ்யூகோ சாவேஸ் என்று தலைவர்கள் கலக்க, நம்மூர் தேசிய அரசியலிலும் அத்வானி, சுஷ்மா ஸ்வரராஜ், நரேந்திரமோடி, சசிதரூர், கார்த்திக் சிதம்பரம், உமர் அப்துல்லா என்று அரசியல் நட்சத்திரங்கள் களமிறங்கி விட்டார்கள்.

இணையம் ஒன்றுதான் அரசியல்வாதிகளிடமிருந்து தப்பிப் பிழைத்த களம். அதையும் ஏன் இப்போது அவர்கள் விட்டுவைப்பதில்லை?

ரமணா விஜயகாந்த் ஸ்டைலில் ஒரு சின்ன கணக்கீடு : ‘இந்தியாவில் தோராயமாக பத்துகோடி பேர் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள். இது நம் நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பத்து சதவிகிதம். இவர்களில் சுமார் ஆறரை கோடி பேருக்கு சமூக வலைத்தளங்கள் அறிமுகமாகியிருக்கின்றன. கிட்டத்தட்ட மூன்றரை கோடி பேர் மொபைல் போன்களிலும் இணையத்தை பாவிக்கிறார்கள்’

இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் பல்கி, பெருகிக்கொண்டே போகிறது. மேடை போடாமல், ஊர் ஊராக அலையும் அலைச்சல் இல்லாமல் உட்கார்ந்த இடத்திலிருந்தே மக்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால், அரசியல்வாதிகளுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரிதான் இல்லையா?

உதாரணத்துக்கு குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை எடுத்துக் கொள்வோம். அவர் ஒரு கருத்தை பேட்டியிலோ, அறிக்கையிலோ தெரிவித்து அது டிவிக்களிலும், பத்திரிகைகளிலும் வெளிவந்து... அதை எத்தனை பேர் வாசித்து...? இந்தத் தொல்லையெல்லாம் இணையத்தில் இல்லை. நரேந்திரமோடியை ட்விட்டர் என்கிற இணையத்தளத்தில் தற்போது தொடர்பவர்களின் எண்ணிக்கை சுமார் நான்கு லட்சம். ’நறுக்’கென்று தன்னுடைய கருத்தை மோடி வைத்தால், அதை சுமார் நாலு லட்சம் பேர் உடனுக்குடன் அறிந்துக் கொள்கிறார்கள். அவர்கள் அக்கருத்தை தங்களுக்கு தெரிந்தவர்களிடம் பகிர பகிர லட்சக்கணக்கானோர், கோடிக்கணக்கானோருக்கு அக்கருத்து காட்டுத்தீ மாதிரி வேகவேகமாக பரவிவிடுகிறது. அவரை பின் தொடர்பவர்களுக்கு மோடியே தங்களோடு நேரடியாகப் பேசுவதைப் போன்ற உணர்வும் ஏற்படுகிறது. இதுதான் இணையத்தின் வசதி. அரசியல்வாதிகள் மட்டுமல்ல, மக்களோடு தொடர்பில் இருக்க வேண்டிய யாருக்குமே இணையம் ஒரு வரப்பிரசாதம்தான்.

உலகளவிலும், தேசிய அளவிலும் இணையத்தை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு அரசியல்வாதிகளுக்கு கிடைத்திருக்கிறது. நம்மூரில் எப்படி?

சமீபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் நீக்கப்பட்டபோது, அதிகம் அதிர்ந்தது ஃபேஸ்புக் இணையத்தளம்தான். ஏனெனில் வேல்முருகனின் ஃபேஸ்புக் நண்பர்கள் மட்டுமே பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள். கட்சியை விட்டு நீக்கப்பட்டதற்காக வேல்முருகனுக்கு ஆறுதலாகவும், பா.ம.க. தலைமைக்கு எதிராகவும் இணையத்தில் இவர்களில் பெரும்பாலானோர் பொங்கியெழத் தொடங்கினார்கள்.

“தமிழக அரசியல்வாதிகளில் இணையத்தைப் பயன்படுத்தத் தொடங்கிய முன்னோடிகளில் நான் ஒருவன். எனக்கு உலகநாடுகள் முழுக்க நண்பர்கள் உண்டு. அவர்களோடு தொலைபேசியில் உறவாடி வந்தேன். கட்சி மற்றும் மக்கள் பணிகளில் தீவிரமாக ஈடுபடும்போது, இதுபோன்ற அழைப்புகளை ஏற்று பேசமுடியாது. எனவேதான் இணையத்தளத்தை பயன்படுத்தத் தொடங்கினேன். நிறைய தமிழ் இளைஞர்களுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர், இணையத்துக்கு வந்து தங்களோடு நெருக்கமாக உறவாடுவது ஊக்கமாக இருந்தது. அரசியல், தமிழர் பிரச்சினைகளை என்னிடம் மனம் விட்டு பேசத் தொடங்கினார்கள். இப்போது கிராமப்புறங்களுக்கும் கம்ப்யூட்டரும், இணையமும் வந்துவிட்டது. மக்களுடன் தொடர்புகொள்ள எந்தெந்த நவீன வசதிகள் வந்துக் கொண்டிருக்கிறதோ, அத்தனையையும் மக்கள் பணியில் ஈடுபடுபவர்கள் பயன்படுத்திக் கொள்வது நல்லது. எனக்கென்று பிரத்யேகமாக ஒரு இணையத்தளத்தை இப்போது உருவாக்கிக் கொண்டிருக்கிறேன்” என்கிறார் வேல்முருகன்.

இவரைப் போலவே இளையதலைமுறை அரசியல்வாதிகள் சமீபக்காலமாக ஆர்வமாக இவ்விஷயத்தில் களமிறங்கியிருக்கிறார்கள். கடந்த உள்ளாட்சிமன்றத் தேர்தலின் போது சென்னை மேயர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுகவின் சைதை துரைசாமி, திமுகவின் மா.சுப்பிரமணியம் இருவருமே ஆளுக்கொரு ஃபேஸ்புக் கணக்கினைத் தொடங்கி சரமாரியாக பிரச்சாரம் செய்தார்கள். தேர்தலில் வென்ற சைதை துரைசாமி, தற்போது அப்பக்கத்தில் சென்னை மாநகர மக்கள் தங்கள் குறைகளை பதிவுசெய்ய அனுமதித்திருக்கிறார்.

“அந்தப் பக்கத்தில் பதியப்படும் அனைத்து புகார்களும், ஆலோசனைகளும் தொகுக்கப்பட்டு அவைகளின் மேல் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் உறுதிகூறுகிறார் சென்னை மேயர் சைதை துரைசாமி. மேயரே நேரடியாக இந்த ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்ப்பார் என்பதால் பலரும் இங்கே தங்கள் குறைகளை பதிவுசெய்ய ஆர்வமாக இருக்கிறார்கள். இங்கே பதியப்பட்டிருக்கும் குறைகளில் பெரும்பாலானவை சமீபத்திய மழையில் அடித்துச் சென்ற சாலைகளைப் பற்றிதான். மேயர் சார், சீக்கிரம் ரோடு போடுங்க...

அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலர்களில் ஒருவரான கரூர் ஜோதிமணி, வேறுவிதமாக இணையத்தை அணுகுகிறார்.

“டிவியிலும், செய்தித்தாள்களிலும், வானொலியிலும் செய்திகளை அறிந்துகொள்வதை விட, இணையம் மூலமாக மக்கள் நேரடியாக தரும் உள்ளூர் செய்திகளை அறிய விரும்புகிறேன். அரசியல் பணி நிமித்தமாக, டெல்லியில் இருக்கும் எனக்கு நம் தமிழ் மக்களின் நாடித்துடிப்பை அறிய ஃபேஸ்புக் பயன்படுகிறது. இணையம் ஒரு அற்புதமான தகவல் தொடர்பு ஊடகம். ஆரோக்கியமான விவாதக் களமாக இதைப் பயன்படுத்தலாம். டெல்லி அரசியல்வாதிகளில் பெரும்பாலானோர் சமூக வலைத்தளங்களை நோக்கி படையெடுக்கிறார்கள். நம்மூர் ஆட்களும் இங்கு வந்துசேரவேண்டிய கட்டாயம் உருவாகியிருக்கிறது” என்கிறார்.

சமீபத்தில் திமுகவின் பிரச்சார பீரங்கியாக களமிறங்கியிருக்கும் குஷ்பூவின் ட்விட்டர் செயல்பாடுகள் ஜனரஞ்சகமானவை. அரசியல்வாதியாக மட்டுமின்றி குழந்தைகளுக்கு தாயாக, திரைக்கலைஞராக, ரசிகராக, சமூக ஆர்வலராக என்று தன்னுடைய பன்முகங்களை காட்டுகிறார் குஷ்பூ. அவ்வப்போது அவர் அள்ளித்தெளிக்கும் அரசியல் தத்துவங்களுக்கு பெரிய ரசிகர் கூட்டமே உண்டு. உதாரணத்துக்கு ஒன்று : “நீங்கள் ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருப்பதால், உங்கள் சுய அடையாளத்தை இழந்துவிட்டதாக அர்த்தமில்லை. சுயம் சுயமாகவே இருக்கும்!”

இவர்கள் மட்டுமன்றி சி.பி.எம். எம்.எல்.ஏ., பாலபாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., ரவிக்குமார் என்று ஏராளமானோர் சமூக வலைத்தளங்களில் திறம்பட செயலாற்றுகிறார்கள். மக்களோடு மட்டுமின்றி, தங்கள் ஆதரவாளர்களோடும் உரையாட இது அவர்களுக்கு வாகாக இருக்கிறது. தமிழக சட்டமன்ற சபாநாயகர் ஜெயக்குமாருக்கும் கூட ஒரு ஃபேஸ்புக் கணக்கு உண்டு.

மதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் நிறையபேரை அடிக்கடி ஃபேஸ்புக்கில் காணமுடிகிறது. சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக இணையத்தளத்தில் செயல்படும் மதிமுகவினருக்கு என்று பிரத்யேகமான கூட்டத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நடத்தினார். இதன் அடிப்படையில்தான் ஒரு மேடையில் “இணையத்தளத்தில் இளைஞர்களிடையே செல்வாக்கு பெற்ற கட்சி மதிமுக” என்று அவர் பெருமிதமும் பட்டார்.

தமிழகத்தின் எந்தக் கட்சியை விடவும் திமுக இணையத்தள பயன்பாட்டில் கூடுதல் ஆர்வம் செலுத்துகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்களின் செல்வாக்கைப் பெற (குறிப்பாக தகவல்தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுபவர்களின்) திமுக தவறிவிட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுவதாலோ என்னவோ, திமுக தனது படையை இணையத்தில் களமிறக்கியிருக்கிறது.

அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் ஏற்கனவே வலைப்பூவில் எழுதிவருகிறார். திமுகவின் அமைப்புச் செயலர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., இளைஞர் அணி துணைப் பொதுச்செயலர் ஹசன் முகம்மது ஜின்னா, அரியலூர் மாவட்டச் செயலர் சிவசங்கரன் எம்.எல்.ஏ., டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ., மாவட்டச் செயலர் பெரியண்ணன் அரசு என்று ஏராளமானோர் ஃபேஸ்புக் இணையத்தளத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். திமுகவின் இணைய செயல்பாடுகள், எழுதப்படும் கட்டுரைகள் ஆகியவற்றை ‘பிரிண்ட் அவுட்’ எடுத்து, அக்கட்சியின் தலைவர் கலைஞரும் வாசிக்கிறார். சமீபத்தில் ‘இணைய உடன்பிறப்புகள் ஒன்றுகூடல்’ என்கிற பெயரில் திமுகவின் இளைஞரணி தலைமையகமான அன்பகத்தில் ஒரு கூட்டமும் கூட்டப்பட்டது. இணையத்தில் செயல்படும் அக்கட்சியினர் மாநிலம் முழுக்க இருந்து இக்கூட்டத்துக்கு வந்திருந்தனர். திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் இக்கூட்டத்துக்கு வந்திருந்தவர்களுக்கு ‘திராவிடப் பாடம்’ நடத்தினார்.

திமுகவின் இந்த அசுரப் பாய்ச்சலை அதிமுகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. விரைவில் அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகளும் அதிகளவில் ஃபேஸ்புக், ட்விட்டர் என்று களமிறங்கலாம். அதிசமீபத்திய தொழில்நுட்ப விஷயங்களில் ஆர்வம் கொண்டிருக்கும் நம் முதல்வரே இறங்கினாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை. அவரது பெயரில் போலியாக யாரோ ட்விட்டர் அக்கவுண்ட் உருவாக்கியபோது, உடனடியாக அது தனதல்ல என்று மறுப்பு தெரிவித்து, அவர் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னோட்டமாக சென்னையில் ஒரு நட்சத்திர ஓட்டலில், ‘இணைய அதிமுகவினர் சந்திப்பு’ என்று ஒரு சந்திப்பும் நடந்தேறியிருக்கிறது. அரசின் திட்டங்களை இணையத் தளங்களில் எடுத்துச் சொல்வது, எதிர்க்கட்சிகளின் புகார்களை எதிர்கொள்வது என்று பலவிஷயங்கள் இந்த சந்திப்பில் பேசப்பட்டது.

எல்லா கட்சிகளும் இணையத்தில் தொடை தட்டி இறங்கிவிட, அதிரடி அரசியலுக்குப் பெயர்போன தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சியான தேமுதிக மட்டும் இன்னும் விழித்துக் கொண்டதாக தெரியவில்லை. தேமுதிக தலைவர்கள் யாரையும் சமூக வலைத்தளங்களில் காண இயலுவதில்லை. தொண்டர்களும் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. சீக்கிரமா நீங்களும் துண்டு போட்டு சீட்டு புடிங்க கேப்டன்!

(நன்றி : புதிய தலைமுறை)

5 டிசம்பர், 2011

இணையமும், எழுத்தாளர்களும்!

உயிர்மை : பிரபல தமிழ் எழுத்தாளர்கள் இணைய தளங்களில் எழுத வரும்போது அவர்கள் தங்கள் புதிய வாசகப் பரப்பை எதிர்கொள்ளும் விதம் குறித்து என்ன கருகிறீர்கள்?

யுவகிருஷ்ணா : எழுத்தாளர் சுஜாதா ‘அம்பலம்’ இணையத் தளத்தில், வாசகர்களோடு ‘சாட்டிங்’ மூலம் உரையாடத் தொடங்கியதை ஆரம்பப் புள்ளிகளில் ஒன்றாக கருதலாம். பொதுவாக வெகுஜன வாசகர்களிடம் சுஜாதாவுக்கு ஒரு இமேஜ் உண்டு. வாசகர்களிடம் அவர் சகஜமாகப் பழக மாட்டார், மனம் விட்டு பேசமாட்டார் என்பார்கள். ‘ஒரு நல்ல வாசகன், எழுத்தாளனை சந்திக்க விரும்பமாட்டார்’ என்பது சுஜாதாவின் பிரபலமான சொல்லாடலும் கூட.

சுஜாதா சினிமாவிலும் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருந்த காலம். அவ்வளவு நேர நெருக்கடியான காலக்கட்டத்திலும், வாரந்தோறும் சனிக்கிழமை மிகச்சரியாக பத்து மணிக்கு ‘அம்பலம் சாட்டிங்’குக்கு வந்துவிடுவார். நம்மோடு உரையாடுவது சுஜாதாதானா என்றுகூட பல வாசகர்களும் நம்பமுடியாமல் திணறிக் கொண்டிருந்தார்கள். ஏனெனில் அவ்வளவு இயல்பான உரையாடல்கள் அவை. தேவன் வானுலகில் இருந்து கீழிறங்கி வந்து, மனிதர்களோடு தோளோடு தோள் உரசி பழகுவது மாதிரியான உன்னத உணர்வினை சுஜாதாவின் வாசகர்களுக்கு அம்பலம் வழங்கியது.

தொடக்கத்தில் தன்னை வாசித்தவர்களை, ஆராதித்தவர்களையே எதிர்கொண்டதால் சுஜாதாவுக்கும் இந்த உரையாடல் சுளுவாகவே இருந்தது. ஆண்டாள் முதல் ஐசக் அசிமோ வரை எதை கேட்டாலும் அட்சயப் பாத்திரமாக அள்ள, அள்ள பேசிக்கொண்டிருந்தார். வாசிப்புப் பழக்கத்தை முதன்முறையாக இணையத்தில் தொடங்கியவர்களும், பெரிய எழுத்தாளரோடு பேசுகிறோம் என்கிற உணர்வில் கலந்துக்கொள்ளத் தொடங்கினார்கள். இந்த உரையாடல் அளித்த உற்சாக உணர்வால் சுஜாதாவை தேடித்தேடி வாசித்தார்கள்.

ஆயினும் இணையம் வெறும் இலக்கிய/வெகுஜன வாசகர்கள் நிரம்பியது மட்டுமல்ல. இணையத்தில் பங்குபெறுபவர்களில் கணிசமானோர் அரசியல் சிந்தனை கொண்டவர்களாகவும் அல்லது அவ்வாறு இருப்பதாகவும் நம்பிக் கொண்டிருப்பவர்கள். இவர்களில் நிறைய பேர் தமிழ்த்தேசிய சிந்தனை கொண்டவர்களும் கூட. இது போதாதா? சுஜாதாவின் அம்பலம் உரையாடல்களுக்குள் இவர்கள் நுழைந்தபோது வெடித்தது கலகம். ‘சுஜாதாவின் அரசியல் நிலைப்பாடு என்ன?’ என்று கேள்வி எழுப்பத் தொடங்கினார்கள். ஆரம்பத்தில் ஜாலியாக இவர்களை கையாண்டுக் கொண்டிருந்த சுஜாதா, ஒரு கட்டத்தில் பொறுமையிழந்துப் போனார். ‘நான் அரசியல்வாதி கிடையாது. அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு நான் ஏன் விடையளிக்க வேண்டும்?’ என்கிற தொனியில் எரிச்சலும் அடைந்தார்.

அம்பலம் உரையாடல்களில் சுஜாதாவுக்கு ஆரம்பத்தில் கிடைத்த மகிழ்ச்சியும், பிற்பாடு அது எரிச்சலாக மாறிய அனுபவமும், இணையத்தில் எழுதவரும் எல்லா தமிழ் எழுத்தாளர்களுக்கும் ஏற்படுவதுதான். ஒரு பானை சோற்றுக்கு ஒரே ஒரு சுஜாதா பதம். சமீபத்தில் இங்கே வந்த விமலாதித்த மாமல்லன்வரை இப்போக்குக்கு ஏராளமான உதாரணங்களைக் காட்டலாம். இதற்காக இணையத்தில் இயங்குபவர்களை எரிச்சலோடு எழுத்தாளர்கள் எதிர்கொள்கிறார்கள் என்பதாக, ஒட்டுமொத்தமாக இதை எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.

இங்கே உருவாகும் புதிய வாசகப் பரப்பு எதையுமே புனிதப்படுத்துவதில்லை. பிரபலங்களுக்கு இங்கே இடமில்லை. தமிழில் நான்கு பத்திகளை தொடர்ச்சியாக வலைப்பதிவிலோ, ஃபேஸ்புக்கிலோ எழுதத் தெரிந்த யாருமே, தன்னை படைப்பாளியாக கருதிக் கொள்ளும் போக்கு தமிழ் இணையத்துக்கு உண்டு. இணையத்தின் இந்த அபத்தத் தன்மையை மிகச்சரியாகப் புரிந்துக்கொண்ட எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். எனவேதான் அவருடைய நீண்டக்கால இணைய அனுபவம் சச்சரவுகளின்றி நேர்க்கோட்டில் பயணிக்கிறது.

இணையத்துக்கு வரும் எழுத்தாளர்கள் தங்களுக்கு வாசகர் வட்டங்களை உருவாக்குவதிலும், ஃபேஸ்புக்கில் ‘லைக்’குகள் வாங்குவதில் செலுத்தும் ஆர்வத்தைக் காட்டிலும், தீவிரமான சில புதிய வாசகர்களை தங்களுக்கு உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் இணையத்துக்கு அவர்கள் வந்ததன் நோக்கமும் நிறைவேறும்.

(நன்றி : உயிர்மை நூறாவது இதழ்)

விஷ்ணுபுரம் விருது 2011

தமிழின் மூத்த படைப்பாளுமைகளை கவுரவிக்கும் பொருட்டு ‘விஷ்ணுபுரம் விருதுகள்’ கடந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் வழங்கப்படும் இந்த விருது பாராட்டு கேடயமும், ரூ.50,000/- ரொக்கப் பணமும் உள்ளடக்கியது.

கடந்த ஆண்டு இவ்விருது எழுத்தாளர் ஆ. மாதவன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இயக்குனர் மணிரத்னம் தலைமையில் கோவையில் நிகழ்ந்த விழாவில் ஆ.மாதவன் படைப்புலகம் குறித்து ஜெயமோகன் எழுதிய ‘கடைத்தெருவின் கலைஞன்’ எனும் நூலும் வெளியிடப்பட்டது.

2011ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது மூத்த எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. டிசம்பர் 18ம் தேதி கோவையில் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா அவர்களின் தலைமையில் விருது வழங்கும் விழா நடைபெற இருக்கிறது. விழாவில் ஜெயமோகன், நாஞ்சில் நாடன், எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்கள் கலந்துகொண்டு பூமணியை வாழ்த்த இருக்கிறார்கள்.

3 டிசம்பர், 2011

THE DIRTY PICTURE

வாய் வழியாக வழியும் ஜொள்ளை துடைத்துக் கொண்டு, நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு பரந்த மார்பையும், சிவந்த இடுப்பையும் ரசிக்கலாம் என்று நாய் மாதிரி அரங்குக்கு வந்த ஆண் ரசிகர்களை செருப்பால் அடித்திருக்கிறாள் சிலுக்கு.

சமீப காலங்களில் இந்திய சினிமா அடைந்திருக்கும் உயரத்துக்கு சரியான சான்று ‘தி டர்ட்டி பிக்சர்’. வாழ்க்கை சரிதை ஒன்றினை ஆவணப்படுத்துகிறோம், நேர்க்கோட்டில் வாழ்க்கையை சொல்கிறோம் என்றெல்லாம் ஜல்லி அடிக்காமல் நேர்மையாக ஒரு திரைப்படத்தை உருவாக்கியிருக்கும் இயக்குனர் மிலனுக்கு கிரேட் சல்யூட். படத்தில் சிலுக்கு சொல்லுவது மாதிரி, ‘சினிமா என்றால் எண்டெர்டெயிண்ட்மெண்ட்.. எண்டெர்டெயிண்மெண்ட்.. எண்டெர்டெயிண்மெண்ட்’. இந்த மந்திரச்சொல்லை மறந்துவிடாமல் படமாக்கியிருக்கிறார்கள்.

சிலுக்கின் வாழ்க்கை எழுத்துகளில் ஏராளமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எழுத்தாளர் தமிழ்மகன் எழுதிய ஏ.வி.எம். ஸ்டுடியோ ஏழாவது தளம், மிஸ் மாயா ஆகிய நாவல்களில் நீங்கள் அச்சு அசலான டர்ட்டி பிக்சரை வாசிக்கலாம். உண்மையில் சிலுக்கின் வாழ்க்கை என்பது அவரது வாழ்க்கை மட்டுமல்ல. சினிமா நடிகைகளின் வாழ்க்கை. ஏறத்தாழ ஒரே மாதிரி வாழ்க்கையும், முடிவும் பெரும்பாலான நடிகைகளுக்கு அமைவதுதான் அவலம். ஓரிரு விதிவிலக்குகள் பிறக்கும்போதே வரம் வாங்கி பிறந்தவர்களாக இருக்கக் கூடும்.

சினிமா மோகத்தால் ஊரில் இருந்து ஓடி வருவது. பட்டணத்தில் கெட்டு சீரழிவது. வாய்ப்புகளுக்காக இரவில் பாலியல் ரீதியான உடலுழைப்பு. பகலில் லைட்டுகளின் வெளிச்சத்தில், வெப்பத்தில் உடல் முழுக்க மேக்கப் பூசி உழைப்பது. யாரையாவது காதலித்து ஏமாறுவது. குடி, போதை பழக்கம். உடல் வனப்பு குலைந்தபிறகு தனிமை. சொந்தமாக படமெடுப்பது. நஷ்டம், கடன். கடைசியாக தற்கொலை. இது சிலுக்கின் கதை மட்டுமா?

கதாபாத்திரத்துக்கு பெயர் சிலுக்கு. அவரது வாழ்வின் சில சம்பவங்கள் காட்சியாக்கப் பட்டிருக்கின்றன. மற்றபடி புதியதாக கதை, திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது. இது நடிகைகளின் கதை.

டர்ட்டி பிக்சர் திரைப்படம் நேரிடையான வசனங்களும், காட்சிகளும் நிரம்பியது. தணிக்கைக்குப் பயந்து எதையும் குறிப்பால் உணர்த்தும் பயந்தாங்கொள்ளித்தனம் இயக்குனருக்கு இல்லை. பாலியல் தொடர்பான வசனங்களை இரட்டை அர்த்தத்தில்தான் கொடுத்தாக வேண்டும் என்கிற சினிமாப் பண்பை உடைத்தெறிந்தவகையில இது ஒரு பச்சையான, அதே சமயம் அவசியமான முன்னெடுப்பாக இருக்கிறது.

சிலுக்குடன் உச்சநடிகர் தனிமையில் இருக்கிறார். அவர் மீது படர்ந்து, சிலுக்கு அவரை இன்பப்படுத்தத் தொடங்குகிறார். கதவு தட்டப்படுகிறது. வெளியே நடிகரின் மனைவி. அவசர அவசரமாக சிலுக்கு, உடைகளை அள்ளிக் கொண்டு பக்கத்து அறைக்கு ஓடுகிறார். இப்போது உள்ளே வந்துவிட்ட மனைவியை நடிகர் கொஞ்சுகிறார். மனைவியை இன்பப்படுத்த அவர் மேல் இவர் படர்கிறார். வித்தியாசத்தைக் கவனியுங்கள். மனைவியையும், வப்பாட்டியையும் ஒரு ஆண் மனம் எவ்வாறு கையாளுகிறது என்பதை இதைவிட சிறப்பாக காட்சியாக்க முடியாது. ‘வேசி எனக்கு இன்பத்தைக் கொடுக்கப் படைக்கப்பட்டவள். மனைவிக்கு நான் இன்பத்தைத் தர கடமைப் பட்டவன்’ என்கிற ஆணின அதிகார வர்க்க பொறுக்கித்தனம்தான் இது.

சிலுக்குகளின் சீரழிந்த கதைகளுக்கு பிண்ணனிக்கு ஆணிவேர் ஆண் சமூகத்தின் பாலியல் வக்கிரம்தான். இது ஏதோ பாவப்பட்ட சினிமா நடிகைகளின் வாழ்க்கைக் கதை, எனவே, நடிகைகளை பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கும் அத்துறையின் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட சினிமாக்காரர்கள்தான் குற்றவாளிகள் என்று சொல்லி யாரும் தப்பித்துவிட முடியாது. ‘நேத்து ராத்திரி யம்மா’வுக்கும், ‘பொன்மேனி உருகுதே’வுக்கும் விசிலடித்த ஒவ்வொரு ஆணும் சிலுக்குவை கொலை செய்தவர்களே.

இறுதிக் காட்சிக்கு முன்பாக உச்சநடிகன் சொல்லும் வசனம் முக்கியமானது. “போய்ச் சேரட்டும். அவளுக்கு இனிமே இங்கே என்ன மிஞ்சி இருக்கு?”

ஆண் இனத்தின் நிரந்தர பாலியல் வறட்சிக்கு சோலைவனமாய் ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு ‘சிலுக்கு’ உருவாகிறாள். கடைசியில் அவளைக் கொண்டாடிய அதே ஆண் சமூகத்தால் கொலையும் செய்யப்படுகிறாள். உலகின் கடைசி ஆண், தன் ஆண்குறியை அறுத்துப் போடும் வரை இந்த கொலைப்பழி, ஆணாக பிறந்த ஒவ்வொருத்தனுக்கும் பொருந்தும்.

1 டிசம்பர், 2011

பிரபலமாவதற்கான விலை - Rock Star

ரஜினி முன்பெல்லாம் படம் முடிந்ததுமே இமயமலைக்கு சென்று விடுவார். இந்த வழக்கம் அவரது ரசிகர்களிடையே பிரபலம். ‘தலைவர் இமயமலைக்குப் போய் தியானமெல்லாம் பண்ணுவாரு’ என்று பெருமையாக சொல்லிக் கொள்வார்கள். ஊடகங்களுக்கோ இது செமத்தியான சரக்கு. அவருடைய இமயமலை போட்டோவை பிரசுரிப்பதற்கு போட்டா போட்டி நடக்கும். உச்சபட்சமாக ஒருவர் ரஜினியின் இமயமலை பயணத்தை முழுக்க வீடியோ செய்து காசு பார்த்ததும் கூட நடந்தது. சூப்பர் ஸ்டாரின் இந்த வழக்கத்தைப் பெரும்பாலும் கேலி செய்பவர்களே அதிகம். பத்திரிகைகளில் ரஜினியை கிண்டலடிக்க இந்த ‘இமயமலை பயணம்’ ஒரு நல்ல சாக்காக கிடைத்தது. ஒருமுறை அவர் அமெரிக்காவுக்கு போய் மொட்டை போட்டுக் கொண்டு வந்ததை அரசியல் மேடைகள் வெகுவாக கிண்டலடித்தன.

ஒவ்வொரு படம் முடிந்தவுடன் ரஜினி எங்காவது கண்காணாத தூரத்துக்கு ஓடிவிடுவதன் பின்னால் அவருடைய ‘வலி’ இருக்கிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை. நாற்பது வருடங்களுக்கு முன்னால் ரஜினியால் சென்னை நகரமெங்கும் ஒரு பழைய லேம்ப்ரட்டா ஸ்கூட்டரில் சுற்றி வர முடிந்தது. நினைத்தவுடனேயே எங்காவது ஒரு மதுபானக் கடை வாசலில் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு மூக்குப் புடிக்க குடிக்க முடிந்தது. நினைத்தால் பெங்களூருக்கு பஸ் ஏறுவார். எந்தப் பெட்டிக்கடை வாசலிலும் நின்று, தன்னை மறந்து ‘தம்’ அடிப்பார். பிற்பாடு ‘ஃபியட்’ வாங்கியவுடன் கூட, ‘அம்மா நானா ஒயின்ஸுக்கு’ வந்து ‘சரக்கு’ வாங்கிச் செல்லுமளவுக்கு எளிமையாகதான் வாழ்ந்துக் கொண்டிருந்தார். ஏதோ ஒரு படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ரஜினியின் புகைப்படத்தை முன்பொரு முறை குமுதம் இதழில் பார்த்திருக்கிறேன். படப்பிடிப்பு அலுப்பு தீர, ஒரு மரப்பெஞ்சில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த படம் அது. ‘சூப்பர் ஸ்டார்’ அந்தஸ்துக்காக, ரஜினி பலி கொடுத்த சுதந்திரங்கள் ஏராளம்.

இன்று ரஜினி விரும்புவது ஒன்றே ஒன்றுதான். சாமானிய ஒரு மனிதனை மாதிரி தான் சாலையில் நடந்துச் செல்ல வேண்டும். தனக்கு விருப்பமானவற்றை யார் கண்காணிப்புமோ, இடையூறோ இல்லாமல் சுதந்திரமாக செய்யவேண்டும். இந்த சுதந்திரம் அவருக்கு இமயத்தில் கிடைக்கிறது. இந்தியர்கள் குறைவாக வசிக்கும் அமெரிக்க, ஐரோப்பிய நகரங்களில் கிடைக்கிறது. எனவேதான் குடும்பத்தை, நாட்டை விட்டுப் பிரிந்துச் சென்று வாழ விரும்புகிறார்.


‘நீங்கள் விரும்பும் பிரபலம், கண்ணுக்கு தெரியாத ஏதோ ஒன்றுக்கு உங்களை அடிமையாக்குகிறது, ஆட்கொள்கிறது’ என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்கிறது ‘ராக் ஸ்டார்’ திரைப்படம்.

பிரபலமான ராக் ஸ்டார் ஆக விரும்பும் ஜனார்த்தனன் (எ) ஜோர்டானுக்கு கனவுகள் மட்டுமே முதலீடு. பெரிய முயற்சிகள் ஏதுமில்லாமல் சுற்றித் திரிகிறான். ‘வலி இல்லாமல் உன்னால் எவ்வாறு வெல்ல இயலும்?’ என்று கேட்கிறார் அவனுடைய கல்லூரி கேண்டீன் முதலாளி. வெல்வதற்காக வலியை தேடிச் செல்கிறான் ஜனார்த்தனன். கல்லூரியிலேயே அழகான பெண்ணைப் பார்த்து ‘ஐ லவ் யூ’ சொல்கிறான். அவள் நிராகரித்ததுமே தனக்குள் ‘வலி’ ஏற்பட்டுவிடும், வென்று விடலாம் என்பது அவனது யுக்தி.

ஆரம்பத்தில் நிராகரிக்கும் அழகி, பிற்பாடு அவனுடைய துறுதுறுப்பான குணங்களால் கவரப்பட்டு நட்பாகிறாள். அடுத்த மாதம் கல்யாணம் ஆகப்போகும் அவளுக்கு ஏராளமான ஆசைகள். ‘பிட்டு’ படம் பார்க்க வேண்டும். ‘சரக்கு’ அடிக்க வேண்டும் என்பது மாதிரி குட்டி, குட்டி ஆசைகள். ஜனார்த்தனன் அனைத்தையும் நிறைவேற்றுகிறான். துரதிருஷ்டவசமாக அவள் தன்னை காதலிக்கவில்லை என்கிற விஷயம் எவ்வகையிலும் அவனை பாதிக்கவோ, வலி ஏற்படுத்தவோ இல்லை.

அவளுடைய திருமணத்துக்காக காஷ்மீர் போகிறான். அங்கும் அவள் கேட்கும் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றுகிறான். திருமணம் முடிந்து ஊர் திரும்பும்போது பிரச்சினை. காஷ்மீர் போய்வந்த செலவுகளுக்காக வீட்டில் பணம் திருடியதாக, வீட்டை விட்டு துரத்தப்படுகிறான். சாப்பாட்டுக்கு வழியில்லாத நிலையில் ஒரு தர்காவில் போய் பாடுகிறான். ஒரு மாத காலம் பசிக்கு பிரச்சினையில்லை. இம்மாதிரி பாடுவது அவனுக்கு உற்சாகத்தையும் தருகிறது.

அந்த தர்காவுக்கு வழக்கமாக வரும் பத்மபூஷன் விருது பெற்ற இசைக்கலைஞர் ஒருவர் இவனது பாட்டை கவனிக்கிறார். தனக்குத் தெரிந்த பெரிய இசை நிறுவனம் ஒன்றில் இவனை சிபாரிசு செய்கிறார். ஓரளவுக்கு அங்கே பிரபலமாகிறான். அப்போது அந்நிறுவனத்தில் இருந்து ஒரு இசைக்குழு ஐரோப்பாவில் நிகழ்ச்சி நடத்தச் செல்வதை அறிகிறான். அந்நிகழ்ச்சி நடக்கும் நாட்டில்தான் கல்யாணமாகி அந்த அழகி செட்டில் ஆகி இருக்கிறாள். திடீரென அவளது நினைவு தோன்றவே தானாகவே அந்த இசைக்குழுவில் சேர்ந்து ஐரோப்பா செல்கிறான்.

இதற்கிடைய திருமணமாகி சென்றவள், ஏதோ உளவியல் நோயால் பாதிக்கப்பட்டு தொடர்சிகிச்சை பெற்று வருகிறாள். அவளது உடல்நலம் குன்றிவரும் நிலையில் திடீரென ஜோர்டானை சந்திக்க, பழைய நினைவுகளால் கிளறப்படுகிறாள். இங்கும் அவளுக்கு நிறைய சின்னச் சின்ன ஆசைகள். விபச்சாரிகளை மாதிரி ரோட்டில் நின்று, கஸ்டமரை அழைக்க வேண்டுமென்பது கூட அவளது ஒரு சின்ன ஆசை. அனைத்தையும் வழக்கம்போல நிறைவேற்றி வைக்கிறான்.

இவர்கள் இருவருக்குமான உறவு என்பது நட்பு, காதலாக இல்லாமல் வேறு ஒரு மூன்றாவது கோணத்தில் இயக்குனரால் சித்தரிக்கப்படுகிறது. “நமக்குள் இருப்பது நட்போ, காதலோ இல்லை. இவற்றை விட உயர்வான ஏதோ ஒன்று” என்று ‘குணா’ பாணி வசனம் கூட உண்டு. ‘எனக்கு நீ வேண்டும்’ என்று ஒரு காட்சியில் கூறி முத்தமிடும்போது, திருமணமான அவளோ சமூகவேலிக்குள் இருந்து வெளிவரும் சிக்கலை உணர்ந்து இவனைப் பிரிகிறாள்.

முதன்முறையாக வலியை உணர்கிறான் ஜோர்டான். இந்த வலி, அவனது இசையை வலிமை மிகுந்ததாக மாற்றுகிறது. ஜோர்டான் நடத்தும் நிகழ்ச்சிகளெல்லாம் சூப்பர்ஹிட். எந்தப் பிரபலத்துக்காக டெல்லியில் தவம் கிடந்தானோ, அதைவிட கூடுதல் பிரபலம் அவனுக்கு கிடைக்கிறது. ஆனால் இப்போது ஜோர்டானுக்கு இது தேவையில்லை. தான் இழந்துவிட்ட ‘அவள்’ நினைவாகவே திரிகிறான். ரசிகர்களிடமும், ஊடகங்களிடமும் முரட்டுத்தனமாக நடந்துக் கொள்கிறான். அவனது இந்தப் போக்கினையே தனது வணிகத்துக்கு வாகாக ப்ராண்டிங் செய்துக் கொள்கிறது இசை நிறுவனம்.

இந்தியாவுக்கு திரும்புவதற்கு முன்பாக அவளை பார்க்கச் சென்று, அவளது கணவனிடம் சிக்குகிறான். போலிஸில் பிடித்துத் தரப்படுகிறான். இந்த குற்றத்துக்காக நாட்டுக்கு திருப்பி அனுப்பி, சில நாட்கள் சிறையில் கழிக்கிறான். இதையும் வணிகமாக்கி ‘சுதந்திரத்துக்காக ஏங்கும் கலைஞன்’ என்கிறவகையில் மக்களிடம் பிரபலப்படுத்தப் படுகிறான் ஜோர்டான். இந்நிகழ்வுக்குப் பிறகு ஜோர்டான் நடத்தும் நிகழ்ச்சிகளெல்லாம் ‘சுதந்திரம்’ பிரதானப்படுத்தப்படுகிறது. ஒரு போராளிக்குரிய படிமம் இயல்பாகவே ஜோர்டானுக்கு மக்களிடம் கிடைத்துவிடுகிறது.

இப்போது ஜோர்டான் எக்கச்சக்க பிரபலம். அவன் செல்லுமிடமெல்லாம் மைக்கை நீட்டிக் கொண்டு ஊடகங்கள் பின் தொடர்கிறார்கள். மக்கள் கூட்டம், கூட்டமாக அவனைப் பார்க்க வருகிறார்கள். இந்த பிரபலத்துக்கு விலையாக தன்னுடைய சுதந்திரத்தை இழந்துவிட்ட அவன், மனநிலைப் பிறழ்ந்தவனாய் முரட்டுத்தனமாக நடந்துக் கொள்கிறான்.

எல்லாவற்றையும் விட்டு விட்டு ஒரு நாள் எங்கோ ஓடிவிடுகிறான். நிகழ்ச்சி நடத்த ஒப்பந்தம் போட்டவர்களும், நிறுவனமும் வலை வீசி தேடுகிறது. அவனோ ஊரின் ஒதுக்குப்புறமான இடத்தில், அவனை யாரென்றே அறியாத விலைமாதர்கள் மத்தியில் மகிழ்ச்சியாக பாடிக் கொண்டிருக்கிறான். அவனுடைய மேனேஜர் அவனைத் தேடிவந்து கண்டித்து அழைத்துச் செல்கிறார். மனதுக்குப் பிடித்தமான வேலையை செய்யமுடியாத இந்த பிரபலத்தை இக்கட்டத்தில் அறவே வெறுக்க ஆரம்பிக்கிறான் ஜோர்டான்.

அவனுக்குப் பிடித்த அவள் இல்லாத உலகத்தில் வாழ்வதற்கே பிரம்மப் பிரயத்தனம் செய்துக் கொண்டிருப்பவனுக்கு இந்த பிரபலம் பெரிய இடையூறு. அவனுடைய குழந்தைத் தன்மையை முற்றிலும் சிதைக்கச் செய்துவிட்டது பிரபலம்.

இதற்கிடையே இவனைப் பிரிந்த அவளுக்கு ஏதோ தீர்க்க முடியாத ஒரு விசித்திர வியாதியும் வந்துவிட்டது. இவனைத் தேடி டெல்லிக்கு வருகிறாள். பிரிவுத் துயரால் பரஸ்பரம் பாதிக்கப்பட்ட இருவருக்கும் இந்த நாட்கள் இளைப்பாறக் கிடைத்த சொர்க்கம். ஒருக்கட்டத்தில் உணர்வு மிகுதியில் உடலாலும் இணைகிறார்கள்.

நோய் முற்றி அவள் மரணமடையும் இறுதிக்காட்சி மிக உருக்கமானது. அவள் தன்னை விட்டு நிரந்தரமாகப் பிரிந்துவிட்டதை ஏற்றுக் கொள்ள முடியாமல் மனம் ஒடிந்து மருத்துவமனையை விட்டு வெளியே வருகிறான். இவன் அங்கு வந்திருந்ததை அறிந்து ஆயிரக்கணக்கான ரசிகர்களும், ஊடகங்களும் வாயிலில் குவிந்து விடுகிறார்கள். என்ன கருமத்தாலோ போராளி படிமம் பெற்றுவிட்ட இவன், அவர்களுக்கு முன்பாக அழக்கூட முடியாமல் இறுகிய முகத்தோடு நடக்கிறான். மனதுக்கு உகந்தவள் மறைந்ததற்காக மனதுவிட்டு அழக்கூட முடியாத துர்ப்பாக்கிய நிலையே தனது பிரபலத்துக்கு அவன் கொடுக்கும் விலை. வழக்கம்போல இக்காட்சியிலும் கேள்வி கேட்டு நச்சரிக்கும் மீடியாகாரனை அடிக்கிறான். தடுக்க வந்த போலிஸ்காரனை தூக்கிப் போட்டு மிதிக்கிறான். சிறைப்படுகிறான். இதனாலே மேலும் மேலும் பிரபலமாகிறான் இந்த ‘போராளி’.

இந்தியாவின் மாபெரும் இசைக்கலைஞனாக, ராக்ஸ்டாராக உருவெடுத்துவிட்ட ஜோர்டானுக்கு இப்போது அவன் ஆரம்பத்தில் விரும்பிய பிரபலத்துக்கு அளவேயில்லை. ஏனெனில் அளவிட முடியாத, ஆற்றமுடியாத ‘வலி’ அவனுக்குள் நிரந்தரமாய் இருந்துக்கொண்டே இருக்கிறது.

அபாரமான கதை, திரைக்கதை கொண்ட இத்திரைப்படத்தின் சர்ப்ரைஸ் போனஸ் ஏ.ஆர்.ரகுமானின் இசை. இசைக்கலைஞனின் வாழ்க்கை என்பதால் உருகிப்போய் செதுக்கி, செதுக்கி இசைத்திருக்கிறார் ரகுமான். பத்துக்கும் மேற்பட்ட பாடல்கள். சங்கராபரணத்தின் சமகால நவீன வடிவம் மாதிரி எதிர்காலத்திலும் மறக்கப்படாத திரைக்காவியமாக நிச்சயமாக நினைவு கூறப்படும் இந்த ‘ராக் ஸ்டார்’