30 ஜூன், 2014

இலங்கையில் இஸ்லாமியர்கள் ஏன் தாக்கப்படுகிறார்கள்?

“இலங்கையில் மதங்களுக்கு இடையேயான பதட்டநிலை பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. முஸ்லிம், இந்து, பவுத்த மதங்களை சேர்ந்த மக்கள் ஒருவருக்கொருவர் அவநம்பிக்கையோடு இருக்கிறார்கள்” அமெரிக்க காங்கிரஸுக்கு அந்நாட்டு அரசாங்கம் கடந்த ஆண்டு இறுதியில் சமர்ப்பித்த அறிக்கை ஒன்றில் இடம்பெற்றிருந்த வரிகள் இவை. இலங்கையில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஆங்காங்கே நடந்த சிறு தாக்குதல்கள், பவுத்த பிக்குகளால் இஸ்லாமிய பள்ளிவாசல்கள் அழிப்பு என்று நடந்த சம்பவங்களை அவ்வறிக்கையில் எடுத்து சொல்லப்பட்டிருந்தது. இலங்கையில் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் மதமோதல்கள் எழலாம் என்றும் கவலையோடு அமெரிக்க அரசு சுட்டிக் காட்டியிருந்தது.

அளுத்கமாவில் வெடித்த கலவரம்

இலங்கையின் மக்கள்தொகையில் இஸ்லாமியர் கிட்டத்தட்ட பத்து சதவிகிதம் பேர் இருக்கிறார்கள். இவர்கள் இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பதாக நெடுங்காலமாகவே பவுத்த பிக்குகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இவர்களது பிடியில் இலங்கை போய்விடக்கூடாது என்று வலியுறுத்தி ஆங்காங்கே கூட்டங்கள், பேரணிகள் நடத்தத் தொடங்கினார்கள். குறிப்பாக இஸ்லாமியர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஊர்வலமாக சென்று அவர்களுக்கு எதிராக கோஷம் இட்டு வந்தனர். இப்படிதான் இருதரப்புக்கும் இடையே மோதல் சமீபமாக தொடங்கியது.
ஒரு ஞாயிறு மாலை அன்று இலங்கையின் தென்மேற்கு பகுதியிலிருக்கும் அளுத்கமா, பெருவலா ஆகிய கடலோர நகரங்களில் நடந்த பேரணியில் கடுமையான வன்முறை ஏற்பட்டது. மூன்று முஸ்லிம்கள் பலியாகினர். எழுபத்தைந்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மசூதிகள் தாக்கப்பட்டன. தொழுது கொண்டிருந்தவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடக்க சிதறி ஓடினர்.

வேடிக்கையான முரண் என்னவென்றால், மத வன்முறையால் ஆங்காங்கே மோதல்களும், நாடு முழுக்க மக்கள் மத்தியில் மனதளவிலான பதட்டமும் நிலவிவரும் இதே வேளையில் பொலிவியாவில் ராஜபக்‌ஷேவுக்கு அமைதிக்கான விருது வழங்கப்படுகிறது. அங்கிருந்தபடியே கூலாக “சட்டம் தன் கடமையை செய்யும்” என்று அதிபர் அறிவிக்கிறார்.

யார் தூண்டியது?

வலதுசாரி புத்தமத குழுவான ‘போது பல சேனா’ (புத்த வீரப்படை) என்கிற அமைப்புதான் இப்பகுதியில் வன்முறை வெடிக்க காரணமாக இருந்திருக்கிறது. இவர்கள் நடத்திய பேரணியில்தான் இஸ்லாமியரை வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து தாக்குதலில் இறங்கியிருக்கிறார்கள்.
ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற அந்த பேரணியில் புத்த வீரப்படையின் தலைவர் கலகோடா அத்தே ஞானசரா, மதவெறுப்பு தொனிக்க படுமோசமாக பேசியிருக்கிறார். “எந்த இஸ்லாமியராவது இனி சிங்களர்கள் மீது கைவைக்க நினைத்தால் – குறிப்பாக புத்த துறவிகளை சீண்டினால் – அதுதான் இஸ்லாமியர்களின் இறுதிநாளாக இருக்கும்” என்று அவர் நேரடியாகவே எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

இவரது பேச்சை கேட்டதுமே வெறிபிடித்த கூட்டம் அப்படியே இஸ்லாமிய குடியிருப்புகளுக்கு போய் தாக்குதலை ஆரம்பித்தது. இஸ்லாமியர்களின் வணிக நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஏராளமானோர் வீட்டை விட்டு வெளியேறி அங்கிருக்கும் மசூதியில் பாதுகாப்புக்காக தஞ்சமடைந்தனர்.

குரான் எரிப்பு

“ஒவ்வொரு இரவையும் அச்சத்தோடே கடக்கிறோம். காவல்துறையினர் எங்களுக்கு பாதுகாப்பு அளிப்பார்கள் என்கிற நம்பிக்கை இல்லை” என்று அப்பகுதி இஸ்லாமியர் சர்வதேச ஊடகங்களிடம் குமுறுகிறார்கள்.
“எங்கள் வீட்டை அடித்து நொறுக்கியவர்களிடம் கெஞ்சினோம். அவர்கள் எங்களை ஆபாசமாக ஏசினார்கள். வீட்டுக்குள் இருந்த குரானை கொண்டு போய் நடுரோட்டில் போட்டு எரித்தார்கள்” என்று கண்கலங்குகிறார் எண்பது வயது பன்சியா ஃபைரூஸ்.

கொல்லப்பட்ட மூன்று முஸ்லிம்களில் இருவரது உடலில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்திருக்கிறது. நான்காவதாக கொல்லப்பட்ட ஒருவர் தமிழர். ஒரு இஸ்லாமியரின் நிறுவனத்தில் காவல்காரராக பணிபுரிந்த அவர்மீதும் கொலைவெறி தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள்.

இந்த வன்முறை வெடித்ததற்கு முந்தைய நாள் ஒரு புத்தமத துறவி மீது இஸ்லாமிய இளைஞர்கள் சிலர் தாக்கினார்கள் என்றொரு தகவல் பரவியிருந்தது குறிப்பிடத்தக்கது.

“புத்த வீரப்படை இப்படியெல்லாம் வன்முறையில் ஈடுபடும் அமைப்பில்லை. இதில் ஈடுபட்டவர்கள் யாரென்று காவல்துறைதான் கண்டுபிடிக்க வேண்டும். அன்று எங்கள் தலைவர் கொஞ்சம் காட்டமாக பேசியது உண்மைதான். ஆனால் வன்முறையை தூண்டவில்லை. எல்லா மக்களும் அமைதிவழியில் வாழவேண்டும் என்றுதான் அவர் கேட்டுக்கொண்டார்” என்று புத்தவீரப்படையின் தலைமை செயலரான திலந்தா வித்தனாகே அவசர அவசரமாக மறுத்திருக்கிறார்.

அரசியல் ஆகிறது மதம்

மியான்மரை போலவே இலங்கையிலும் பவுத்தமதம் அரசியலில் ஆளுகை செலுத்த முயல்கிறது. அதிபர் ராஜபக்‌ஷேவுக்கு நெருக்கமானவர்கள், அமைச்சரவை சகாக்களே கூட மதவன்முறையை ஊதிப்பெருக்கும் வேலைகளில் ஈடுபடுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

இலங்கை அரசின் சட்டத்துறை அமைச்சரான ஹக்கீமே கூட இச்சம்பவங்களை குறிப்பிட்டு, “பவுத்தர்கள் நடத்திய தாக்குதலை காவல்துறையினர் கைகட்டி வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். இலங்கை அரசில் அங்கம் வகிப்பதற்காக நான் அவமானப்படுகிறேன்” என்று குமுறினார்.

அமைதியை விரும்பும் புத்த துறவியான வடாரகா விஜிதா தெரோ இருதரப்பு மக்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்த கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். அவரை புத்த வீரப்படையின் ஞானசரா வெளிப்படையாகவே அவரது அமைதிப்பணிகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எச்சரித்தார். சில வாரங்களுக்கு முன்பாக உடல் முழுவதும் ஆழமான வெட்டுக்காயங்களோடு கொழும்புவின் புறநகர் சாலை ஒன்றில் குற்றுயிரும் குலையுயிருமாக விழுந்து கிடந்தார் விஜிதா தெரோ.
புத்த வீரப்படைக்கு அதிபர் ராஜபக்‌ஷேவின் மறைமுக ஆசி இருக்கிறது என்று வெளிப்படையாகவே எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இதுவரை அதை அதிபரும் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையை சேர்ந்த கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், அறிவுஜீவிகள் என்று சுமார் முன்னூறு பேர் புத்தவீரப்படை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஞானசராவின் மதவெறி பேச்சுகளை தடுத்து நிறுத்தவேண்டும் என்றுகோரி கையெழுத்து இயக்கம் நடத்தியிருக்கிறார்கள்.

பொலிவியா நாட்டின் ஜி-77 சந்திப்பு முடிந்ததுமே நாடு திரும்பிய ராஜபக்‌ஷே பாதிக்கப்பட்ட இஸ்லாமிய கிராமம் ஒன்றுக்கு நேரில் சென்றார். வன்முறை சம்பவங்கள் தொடர்பாக நடுநிலைமையான விசாரணை நடத்தப்படும் என்று உறுதிகூறினார். ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களை கைது செய்திருக்கிறோம் என்று காவல்துறையும் அறிவித்திருக்கிறது.
ஆனால், இதெல்லாம் வெறும் கண்துடைப்பு. புத்த வீரப்படை மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்று அரசினை நோக்கி கேட்கிறார்கள் இஸ்லாமியர்கள். அரசு எதுவும் செய்யக்கூடிய எண்ணத்தில் இல்லை என்பதுதான் கடைசிக்கட்ட நிலவரம்.

(நன்றி : புதிய தலைமுறை)

28 ஜூன், 2014

துலக்கம்

அமெரிக்காவில் ஒரு சிறுவனை திடீரென்று காணவில்லை. பெற்றோர் பதறிப்போய் தேடுகிறார்கள். சிறுவனுக்கு ‘ஆட்டிசம்’ பிரச்சினை வேறு உண்டு. மூன்று நாட்கள் கழித்து, அவர்கள் இருந்த ஊரிலிருந்து அறுபது கிலோ மீட்டர் தள்ளி வேறொரு ஊரில் அவனை கண்டுபிடித்தார்கள். அந்த மூன்று நாட்களும் பெற்றோர் பட்ட பாடு சொல்லி மாளாது. சாதாரண நிலையில் இருக்கும் குழந்தைகள் காணோம் என்றாலே கண்டுபிடிப்பது கடினம். இவனோ ஆட்டிச பாதிப்பில் இருப்பவன். ஆட்டிசம் பற்றிய புரிதல் இல்லாதவர்களைப் பொறுத்தவரை அவன் மனநிலை பிறழ்ந்தவன். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளோடு பழகிய அனுபவம் கொண்டவரான பாலபாரதி இந்த செய்தியை ஓர் இணையத்தளத்தில் வாசிக்கிறார். அவருக்குள் ஒரு குறுநாவலுக்கான கரு தோன்றுகிறது. அதுதான் ‘துலக்கம்’.

சமீப பத்து, பதினைந்து வருடங்களில் தமிழ் இலக்கியம் பல்வேறு மாற்றங்களை தனக்குள் உருவாக்கிக் கொண்டு வருகிறது. வாழ்வு குறித்த புரிதல்களை தெளிவாக்கிக் கொண்டு, அதை எதிர்கொள்வது குறித்த தீர்வுகளை முன்வைப்பதே பொதுவாக இலக்கிய நாவல் மரபு. உயர்தர மொழி கட்டமைப்பில், எளிய வெகுஜனவாசகர்கள் சுலபத்தில் அணுகிவிட முடியாதபடி, அறிவுஜீவிகள் பொத்தி பொத்தி பாதுகாத்த இலக்கியம் இன்று அனைவருக்குமானதாக மாறிவருகிறது. குறிப்பாக சிறு பத்திரிகைகள் தங்களுடைய கறார்தன்மையில் சமரசம் செய்துகொண்டு ‘எல்லோருக்குமானது இலக்கியம்’ என்று செயல்பட துவங்கியிருக்கும் காலக்கட்டம் இது. இதன் மூலமாக இதுவரை தீவிர இலக்கியம் என்று பேசப்பட்டதற்கும், வெகுஜன வாசிப்புக்கான எழுத்துகளுக்கும் இடைநிலையில் புதிய தலைமுறை எழுத்தாளர்கள் ஏராளமாக உருவாகி வருகிறார்கள். மரபான நாவல்முறையை உடைத்து புதிய வடிவங்களை முயற்சிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. பின்நவீனத்துவ எழுத்தாளர்களும் இதே காலக்கட்டத்தில்தான் கோலோச்சி வருகிறார்கள் என்றாலும், அவர்கள் வேற்றுக்கிரகத்தில் வாழ்பவர்கள் என்பதால் அவர்களை விட்டுவிடுவோம்.

இந்த புதிய போக்கில் பத்திரிகையாளர்களும் புனைவிலக்கியம் பக்கமாக தங்கள் பார்வையை திருப்பியிருப்பது ஒரு முக்கியமான திருப்பம். குறிப்பாக பத்திரிகைத்துறையில் நீண்டகால அனுபவம் பெற்ற எழுத்தாளர் மனோஜை குறிப்பிடலாம். முக்கியமான சிறுகதைகள் சிலவற்றை தமிழில் எழுதியிருக்கும் இவரது எழுத்துப்பாணி ‘ரிப்போர்ட்டிங் ஸ்டைல்’ என்று சொல்லக்கூடிய வெகுஜன பத்திரிகை நடையில், இதுவரை இலக்கியம் என்று நம்பப்பட்ட மதிப்பீடுகளை கதையாக்குவது. ‘துலக்கம்’ நாவலையும் இந்த வகையில் சேர்க்கலாம். யெஸ்.பாலபாரதியும் சுமார் பதினைந்து ஆண்டுகால பத்திரிகையுலக அனுபவம் கொண்டவர். குஜராத்தில் இனப்படுகொலை நடந்தபோது அதை நேரடியாக அங்கேயே சென்று, குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு ரிப்போர்ட்டிங் செய்தவர்.

‘துலக்கம்’ – காணாமல் போன ‘அஸ்வின்’ என்கிற சிறுவனைப் பற்றிய துல்லியமான ரிப்போர்ட்டிங். இருவேறு கிளைகளில் பிரிந்து பயணிக்கும் கதையை, கடைசி அத்தியாயத்தில் ஒன்றிணைக்கும் வழக்கமான பாணிதான் என்றால், பத்திரிகையாளருக்கே உரிய விவரணைகளோடு ‘ஆட்டிஸம்’ என்கிற மனகுறைபாடு குறித்த பார்வையை எல்லோருக்குள்ளும் ஆழமாக விதைக்கிறது.

நகரில் கள்ளநோட்டு கும்பலின் அட்டகாசம் அதிகரிக்கிறது. சுமார் நாற்பது பேர் கொண்ட கும்பல் இதற்காக நகரெங்கும் ஊடுருவியிருப்பதாக ஒரு தகவல். இத்தகைய சூழலில் வண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர் முருகனிடம் ஒரு சிறுவன் மாட்டுகிறான். தோற்றத்திலும், நடவடிக்கையிலும் வித்தியாசமாக தோன்றும் அவன்மீது சந்தேகப்படுகிறார்.

இதே நேரம் சென்னை புறநகர் மடிப்பாக்கத்தில் கல்யாண் என்பவர் தன்னுடைய மகன் காணாமல் போனதாக காவல்நிலையத்தில் புகார் கொடுக்கிறார். அவனுக்கு ஆட்டிசப் பாதிப்பு இருப்பதாக விசாரணையில் கூறுகிறார். புகாரை வாங்கும் போலிஸ்காரர்களோ ஆட்டிஸம் என்பதை மனநிலை தவறியதாக புரிந்துக் கொள்கிறார்கள். இப்படியாக இரண்டு டிராக்குகளில் கதை நகர்கிறது.

முருகன் தன்னிடம் மாட்டிய சிறுவனை விசாரிக்கும் முயற்சியில் ‘ஆட்டிஸம்’ பற்றி அறிந்துக் கொள்கிறார். கல்யாண் தன்னுடைய மகன் தொலைந்த சோகத்தில் இருக்கும்போது ப்ளாஷ்பேக்கில், தன் குழந்தைக்கு ஆட்டிஸம் என்று கண்டறிந்ததில் இருந்து, அதிலிருந்து அவனை மீட்க செய்யும் போராட்டங்கள் என்று கதை விரிகிறது.

துலக்கம் என்கிற சொல்லுக்கு குத்துமதிப்பாக ‘விசாரணை’ என்று பொருள் கொள்ளலாம். ‘துப்புதுலக்குவது’ என்று ஏற்கனவே நமக்கு பரிச்சயமான வார்த்தையில் வரும் ‘துலக்குவது’தான் துலக்கம். ஆட்டிஸம் குறித்த விசாரணை என்று துலக்கத்தின் ஒன்லைனர் அமைந்திருப்பதால், மிக கச்சிதமாக கதைக்கு தலைப்பு பொருந்துகிறது.

கரணம் தப்பினாலும் டாக்குமெண்டரி ஆகிவிடக்கூடிய கதையை சுவாரஸ்யமான நடையில் சிறப்பான நாவலாக உருவாக்கியிருக்கிறார் பாலபாரதி. அனேகமாக ‘ஆட்டிஸம்’ குறித்து தமிழில் வெளிவந்திருக்கும் முதல் நாவலாக இதுவாகதான் இருக்கக்கூடும். எழுதத் தெரிந்த யாருமே எதைப்பற்றியும் எழுதிவிடலாம் என்று தன்னம்பிக்கை கொண்டிருப்பார்கள். ஆனால், உண்மையில் இம்மாதிரி குறிப்பிட்ட ஒரு பிரச்சினை சார்ந்த எழுத்தை எவ்வித தர்க்கப்பிழையுமின்றி எழுதுவதற்கு சலிக்காத உழைப்பும், அப்பிரச்சினை குறித்த தெளிவான பார்வையும் இருக்க வேண்டும். பாலபாரதிக்கு இருந்திருப்பதால் ‘துலக்கம்’ சாத்தியமாகி இருக்கிறது. எளிதில் வாசிக்கக்கூடிய நடையை மிகக்கவனமாக அவர் தேர்ந்தெடுத்திருப்பதற்கு பின்னால், ‘ஆட்டிஸம்’ குறித்த விழிப்புணர்வு எல்லா தரப்புக்கும் போய்ச்சேர வேண்டும் என்கிற அக்கறை இருப்பதை உணரமுடிகிறது. கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு வாசித்தாலும் குறைகள் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு கச்சிதமான எடிட்டிங். சுவாரஸ்யமான வாசிப்பு அனுபவத்துக்கு மட்டுமல்ல, சமூகம் சந்தித்து வரும் ஒரு முக்கியமான பிரச்சினை குறித்த புரிதலுக்காகவும் துலக்கத்தை அனைவரும் வாசிக்கலாம்.

நூல் : துலக்கம்
எழுதியவர் : யெஸ்.பாலபாரதி
பக்கங்கள் : 128
விலை : ரூ.85
வெளியீடு : விகடன் பிரசுரம்
757, அண்ணாசாலை, சென்னை-600 002
போன் : 044-42634283/84 மின்னஞ்சல் : books@vikatan.com

‘துலக்கம்’ நூல் வெளியீடு, நாளை மாலை சென்னையில் நடக்கிறது. வாய்ப்புள்ளவர்கள் அனைவரும் கலந்துக் கொள்ளலாம்.

27 ஜூன், 2014

நெய்மார் அடித்த சூப்பர் கோல்

பிரேஸில் ஒட்டுமொத்தமாக தூக்கத்தில் கூட ‘நெய்மார், நெய்மார்’ என்று பினாத்திக் கொண்டிருக்கிறது. எப்படியும் உலகக் கோப்பையை உதைத்து கொடுத்து விடுவார் என்று நாடு முழுக்க நம்பிக்கை பரவியிருக்கிறது. இருபத்தி இரண்டு வயது நெய்மாருக்கு இளம்பெண்கள் மத்தியில் அப்படியொரு கிரேஸ். ஆளும் பார்க்க கொஞ்சம் சுமாராகவே இருக்கிறார். அவரது காலுக்கு பால் வந்துவிட்டால், எதிரணியினர் பந்தை திரும்ப எடுக்க முடியாத அளவுக்கு காந்தம் மாதிரி ஒட்டிக் கொள்கிறது. தலையில் முட்டியோ அல்லது காலால் தள்ளியோ லாகவமாக அவர் கோல் போட்டதுமே, போட்டியை பார்க்கும் பெண்களும் தங்கள் டீஷர்ட்டை கழட்டி தலைக்கு மேல் சுழற்றி இன்ப அதிர்ச்சி வழங்கும் கிளுகிளுப்பான காட்சியை நள்ளிரவில் கண்முழித்து டிவியில் கண்டுகளித்து நாமே இங்கு சிலிர்த்துக் கொண்டிருக்கிறோம்.

அப்படிப்பட்ட நெய்மாருக்கு உலகக்கோப்பை துவங்கும்போது பயங்கரமான பிராண சங்கடம் ஏற்பட்டு விட்டது. நகத்தை கடித்துக்கொண்டே வெட்கமாய் சங்கடப்பட்டார். பார்ப்பவரெல்லாம் “ம்... ம்... நடக்கட்டும்.. நடக்கட்டும்” என்று சீண்டிவிட, கடுப்பாகிப் போய் கோர்ட்டுக்குப் போனார். விவகாரம் என்னவென்றால், ப்ளேபாய் கொஞ்சம் விபரீதமான பத்திரிகை என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. ப்ளேபாயின் ஜூன் மாத பிரேஸில் பதிப்பில் ஒரு சூப்பர் அட்டைப்படம் இடம்பெற்றிருந்தது. பேட்ரிசியா ஜோர்டான் எனும் பிரேஸிலின் ஹாட்டான மாடல், கோல் கீப்பரின் கிளவுஸை (மட்டுமே) அணிந்துக்கொண்டு சூப்பர் போஸ் கொடுத்திருந்தார் (எச்சரிக்கை : சாம்பிள் படம் பதிவின் கீழே இணைக்கப்பட்டிருக்கிறது)

வெறும் படத்தை மட்டும் ப்ளேபாய் பிரசுரித்திருந்தால் நம்மை மாதிரியே நெய்மாரும் ஹேப்பி ஆகியிருப்பார். ஆனால், ‘நெய்மாரின் மனங்கவர்ந்த மாது இவர்’ என்று டைட்டிலும் போட்டுத் தொலைத்துவிட்டதால்தான் இவ்வளவு சங்கடம். “அடப்பாவீங்களா. நீங்கள்லாம் அண்ணன் தம்பியோடவே பொறக்கலையா? இனிமே எனக்கு யாரு பொண்ணு கொடுப்பா” என்று மூக்கால் அழுதுக்கொண்டே நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். உடனடியாக பேட்ரிசியாவை ட்விட்டரில் அவர் அன்ஃபாலோ செய்துவிட்டார் என்றொரு உறுதியாகாத தகவல் ஒன்றை லக்கிலுக் ஆன்லைன் டாட் காம் உறுதி செய்திருக்கிறது.

விசாரணை செய்த நீதிபதி, “முதல்லே படத்தை கண்ணுலே காட்டுங்கய்யா. அதுக்கப்புறம்தான் தீர்ப்பு சொல்ல முடியும்” என்று தெளிவாகவே சொல்லிவிட்டாராம். நெய்மார் தரப்பு வக்கீல் கருப்பு கோட்டில் நெஞ்சோடு மறைத்துவைத்திருந்த அந்த ப்ளேபாய் இதழை வெட்கப்பட்டுக் கொண்டே நீதிபதியிடம் சமர்ப்பித்திருக்கிறார். அரை மணி நேரத்துக்கு அட்டைப்படத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த நீதிபதி, தீர்ப்பை தள்ளிவைத்துவிட்டு ஓய்வறைக்கு சென்றும் படத்தை உற்று உற்றுப் பார்த்து விட்டு, நெஞ்சில் நீதி நெருப்பாய் எரிய கோர்ட்டுக்கு வந்து வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தீர்ப்பினை வழங்கியிருக்கிறார்.

“ப்ளேபாய் உடனடியாக பிரேசிலில் விற்கக்கூடிய தன்னுடைய ஜூன் மாத இதழ்களை திரும்பப் பெறவேண்டும். இம்மாத இதழ்களுக்கு இந்த கோர்ட் தடையை விதிக்கிறது. இல்லையேல் புத்தகம் கடையில் கிடைக்கக்கூடிய ஒவ்வொரு நாளும் நாலாயிரத்து ஐநூறு டாலரை அபராதமாக நீதிமன்றத்துக்கு கட்ட வேண்டும்”

தீர்ப்பை கேட்டதுமே நெய்மாரின் வழக்கறிஞர், நீதியரசருக்கு அருகில் வந்து தலையை சொறிந்தவாறே நின்றிருக்கிறார்.

“அதுதான் தீர்ப்பு கொடுத்தாச்சில்லே. அப்புறம் என்னய்யா?” என்று ஸ்பானிஷ்மொழியில் நீதிபதி கேட்டார்.

“என்னோட புக்கை கொடுத்திட்டீங்கன்னா வீட்டுக்கு கெளம்பிடுவேன்” என்று வக்கீலும் தன்னுடைய உரிமையை விட்டுக் கொடுக்காமல் பதிலளித்திருக்கிறார்.

தீர்ப்பை கேட்ட நெய்மாருக்கு சந்தோஷம்தான். ஆனால், “கடைசியில் மிச்சம் மீதி சாஸ்திரத்துக்கு ஒரு காப்பியையும் வைக்காமல் இலக்கிய ஆர்வம் காரணமாக ஒட்டுமொத்தமாக ஒண்ணாம் தேதியே வாசகர்கள் காலி செய்துவிட்டார்களே, நெய்மாரின் கற்பு போனது போனதுதான்” என்று ரியோடிஜெனிரோ பெரிய பஸ் ஸ்டேண்டில் வெத்தலைப்பாக்கு கடை வைத்திருக்கும் பெட்டிக்கடைக்காரரான சோகபாரா பிதல்காஸ்த்ரோகூபா நம்மிடம் வருத்தத்தோடு கூறினார்.

கடைசியாக, பிரேஸில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டால் ப்ளேபாய் அட்டைப்பட காஸ்ட்யூமிலேயே ஸ்டேடியத்துக்கு போய் நெய்மாரை குஷிப்படுத்தலாமா என்று பேட்ரிஷியா யோசித்துவருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘பின்’குறிப்பு : ஒரிஜினல் அட்டைப்படத்தில் முன்பக்கமாக ‘போஸ்’ கொடுத்திருக்கிறார்

25 ஜூன், 2014

ஒப நத்துவா ஒப எக்கா

‘ஒப நத்துவா ஒப எகா’ என்கிற சிங்கள வாக்கியத்துக்கு ‘உன்னோடு இருந்தபோது, நீ இல்லாதபோது’ என்று பொருளாம். அதாவது தமிழர்களுக்கு புரியும்படி சொல்வதாக இருந்தால் With you, Without you. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட திரைப்படம் திடீரென தமிழகத்தில் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. அரிதான இயக்குனர்களின் திரைப்படங்கள் என்கிற வரிசையில் பி.வி.ஆர். சினிமாஸ், இலங்கை இயக்குனர் பிரசன்ன விதாங்கேவின் இந்த திரைப்படத்தை திரையிட முயற்சித்ததின் அடிப்படையில் இந்த சர்ச்சை எழுந்திருக்கிறது. தியேட்டரில் திரையிட முடியாத நிலை ஏற்பட்டவுடன், நண்பர் தமிழ் ஸ்டுடியோ அருண் ஏற்பாட்டில் படம் பார்க்க விரும்புபவர்களுக்காக பிரத்யேக திரையிடல் சென்னையில் நடந்தது.

நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக தஸ்தாவேஸ்கி எழுதிய கதை ஒன்றினை தழுவி இப்படத்தின் கதையை அமைத்திருக்கிறார் பிரசன்ன. நிகழ்வில் இயக்குனர் பேசும்போது தான் தமிழகத்தோடு தொழில்ரீதியாகவும், நட்புரீதியாகவும் பல்லாண்டுகளாக தொடர்பில் இருப்பவன் என்று தெளிவுப்படுத்தினார். முன்பாக அவருடைய திரைப்படமான ‘ஆகாச குசும்’ தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ‘ஆகாய பூக்கள்’ என்கிற பெயரில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது. முப்பதாண்டு இனப்பிரச்சினை காலத்தில் யாழ்ப்பாணத்தில் தன்னுடைய படத்தை திரையிட்ட ஒரே சிங்கள இயக்குனர் அவர்தான். எனவே ஈழத்தமிழர்கள் மத்தியில் அவருக்கு உயர்வான மதிப்பு இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
ஐம்பத்தி இரண்டு வயதாகும் பிரசன்ன, இலங்கையின் மிக முக்கியமான இயக்குனர் என்பது அவரது கடந்தகால செயல்பாடுகளில் தெரியவருகிறது. அவருடைய முதல் படமே இலங்கைக்கான ஓ.சி.ஐ.சி. விருதுகளில் ஒன்பது பிரிவுகளில் வெற்றி பெற்றிருக்கிறது. லியோ டால்ஸ்டாயின் நாவலான புத்துயிர்ப்பு நாவலை தழுவி இவர் இயக்கிய படம் ஏராளமான சர்வதேச விருதுகளை வென்று குவித்திருக்கிறது. இலங்கையின் கலைப்படத்துறையில் தவிர்க்க இயலாத இயக்குனராக உருவெடுத்திருக்கும் இவர், இதுவரை ஏழு படங்களை இயக்கியிருக்கிறார்.

‘ஒப நத்துவா ஒப எகா’, போருக்குப் பின்னான இலங்கை மக்களின் மனவோட்டத்தை ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் வழியாக ஆராய்கிறது. மனரீதியாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுவிட்ட பிரிவினையை கவலையோடு காண்கிறது. அன்பு, பிளவுகண்ட மனங்களுக்கு மத்தியிலான பாலமாக அமையலாம் என்கிற யோசனையை முன்வைக்கிறது.

சரத்ஸ்ரீ நடுத்தர வயதினை எட்டிய சிங்களவன். தேநீர் தோட்டங்களுக்கு மத்தியில் அமைந்திருக்கும் சிறுநகரில் அடகுக்கடை நடத்தி வருகிறான். இயல்பிலேயே தனிமையை விரும்புபவனாக சித்தரிக்கப்படும் அவனுக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் WWF மல்யுத்த விளையாட்டுதான் ஒரே பொழுதுபோக்கு. அவனுடைய கடைக்கு அடிக்கடி வந்து ஏதோ ஒரு நகையை அடகுவைத்து பணம் வாங்கிச் செல்லும் தமிழ்ப்பெண்ணான செல்வி அவனுக்கு வித்தியாசமாகப் படுகிறாள். தன்னுடைய பணிப்பெண் மூலமாக செல்வியைப் பற்றிய பின்னணி விவரங்களை அறிகிறான். யாழ்ப்பாணத்து பெண்ணான செல்வி போர்க்காலத்தில் அவளுடைய பெற்றோரால் இங்கே கொண்டுவந்து விடப்படுகிறாள். அவளுக்கு துணையாக இருப்பவர்களுக்கு இவள் பெரும் பாரமாக இருக்கிறாள். எனவே ஒரு செல்வந்தரான கிழவருக்கு அவளை மணம் முடித்துத்தர முயற்சிக்கிறார்கள்.

செல்வியை அணுகும் சரத்ஸ்ரீ அவளை திருமணம் செய்துக்கொள்ள தன்னுடைய விருப்பத்தை தெரிவிக்கிறான். வேறு திக்கற்ற செல்வியும் ஒப்புக் கொள்கிறாள். திருமணத்துக்கு பிறகு மகிழ்ச்சியான இல்லறவாழ்வை இருவரும் அனுபவிக்கிறார்கள். சரத்ஸ்ரீயின் வணிக நியாயங்கள் அவளுக்கு புரிபடவில்லை. செல்வியின் தனிப்பட்ட ரசனை மீது சரத்ஸ்ரீக்கு எந்த பிரச்சினையுமில்லை. வேற்றுமையில் ஒற்றுமையாய் வாழும் தம்பதிகளின் வாழ்வில் திடீர் புயல்.

காமினி என்கிற பழைய நண்பன் சரத்ஸ்ரீயை காணவருகிறான். முன்னாள் இராணுவவீரனான அவன் மூலமாக சரத்தின் பழைய வாழ்க்கை செல்விக்கு தெரியவருகிறது. இராணுவத்தில் பணிபுரிந்த சரத், விருப்ப ஓய்வு கேட்டு வாங்கி அடகுக்கடைகாரனாய் தற்போது அமைதியான வாழ்க்கையை (பாட்ஷா, மாணிக்கம் ஆனது மாதிரி) வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஓர் அடகுக்கடைகாரன் சிங்களவனாய் இருந்தாலும் அவனை மனமொத்து கணவனாய் ஏற்றுக்கொள்ள முடிகிற செல்விக்கு, தன் கணவன் இராணுவத்தில் இருந்தவன் என்கிற உண்மையை ஜீரணிக்க முடியவில்லை. இருவருக்குள்ளும் மனரீதியானபிளவு தோன்றுகிறது.

ஒருவரை ஒருவர் மாறி மாறி வருத்திக் கொள்கிறார்கள். கடைசியில் ஒருவர் இல்லாமல் மற்றொருவர் வாழமுடியாது என்கிற உண்மையை உணர்கிறார்கள். செல்விக்காக தன்னுடைய கடையை விற்று இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள சரத்ஸ்ரீ முயற்சிக்கிறான். அவனில்லாமல் வாழவும் முடியவில்லை, அவனோடு வாழவும் முடியவில்லை என்கிற நிலையில் அதிர்ச்சிகரமான முடிவை செல்வி எடுக்கிறாள்.

இதுதான் ‘ஒப நத்துவா ஒப எகா’வின் கதை.

இந்த படத்தை போய் எந்த இயக்கம் திரையிடக்கூடாது என்று எதிர்த்தது என்று தெரியவில்லை. எந்த எதிர்ப்புமின்றி இது சென்னையில் வெளியாகியிருக்கும் பட்சத்தில் மிஞ்சிப்போனால் நூறு, இருநூறு பேர்தான் இப்படத்தை பார்த்திருப்பார்கள். பிறகு நான்கைந்து பேர் அதை சிலாகித்திருந்தாலே அதிகமாக இருந்திருக்கும்.
பிரசன்ன, சினிமா மொழியில் நல்ல பாண்டித்யம் பெற்றவர் என்று தெரிகிறது. படத்தில் இடம்பெற்ற கலைஞர்களை அவர் வேலைவாங்கி இருக்கும் விதத்தை வைத்துப் பார்த்தால் அவருடைய சர்வதேச தரம் புலப்படுகிறது. காட்சிகளுக்கு அவர் வைத்திருக்கும் கோணங்கள் புதுமையானதாகவும், திரைக்கதைக்கு வலு சேர்க்கும் அவசியமுள்ளவையாகவும் இருக்கிறது. நாயகன், நாயகி என்று இருவரின் வர்ணனைகளால் மாறி மாறி கதை சொல்லும் முறையும் சுவாரஸ்யமாகதான் இருக்கிறது. குறிப்பாக நாயகியாக நடித்திருக்கும் அஞ்சலி பாட்டில் அட்டகாசப்படுத்தி இருக்கிறார். நாசிக்கில் பிறந்த அஞ்சலி, யாழ்ப்பாணத் தமிழ் பெண் பாத்திரத்துக்கு அவ்வளவு அசலாக பொருந்துகிறார்.

ஆனாலும் மாபெரும் கலைப்படைப்பு என்று ஒரு சார்பு அறிவுஜீவிகளாலும், கலைஞர்களாலும் முன்வைக்கப்படும் இப்படம் நமக்கு ரொம்ப சாதாரணமாகதான் பட்டது. “அப்புறமென்ன மைனர் குஞ்சு அந்தப் பொண்ணு மேலே கையை வெச்சிட்டான். நம்ம வழக்கப்படி ஆயிரம் ரூவாய் பஞ்சாயத்துக்கு கட்டிப்புடணும். இதுதான் பஞ்சாயத்து அவனுக்கு கொடுக்கிற தண்டனை. என்னப்பா சொல்றீங்க” என்று நாட்டாமை தீர்ப்பு சொல்வதை மாதிரி கணக்காக இப்படம் நமக்கு தோன்றுகிறது.

போருக்குப் பின்னான இலங்கையில் தமிழ் மக்களின் பொருளாதார உளவியல் சிக்கல்களை ஒரு சிங்கள இயக்குனர் காட்சிப்படுத்த முனைந்திருப்பது நிச்சயம் பாராட்டத்தக்க முயற்சிதான். நியாயமாக பார்க்கப்போனால் இணையத்தளங்களில் வாய்கிழிய பேசும் புலம்பெயர் தமிழர்களோ, போராட்டங்களில் கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் தமிழக திரைப்பட கலைஞர்களோ இதை செய்திருக்க வேண்டும். ஆனால், பிரசன்னவின் கலையில் தென்படும் ‘சிங்களப் பெருந்தன்மை’தான் இடிக்கிறது. சிங்களவர்களுக்கு போர் குறித்த குற்றவுணர்ச்சி நிச்சயம் உண்டு. ஆனால் தமிழர்களோடு அவர்கள் சகஜமாகவே வசிக்க விரும்புகிறார்கள் என்கிற செய்தியை உலகத்துக்கு அறிவிக்க இப்படம் மூலமாக விரும்புகிறார் என்று புரிந்துகொள்ள முடிகிறது. ஈழத்தமிழர்களுக்கும் இந்த ஏற்பாடு பிடித்துதான் இருக்கிறது என்பது அவர்கள் படத்தை உள்வாங்கி, வெளியிட்ட கருத்துகளில் இருந்து அறிந்து கொள்கிறோம். கனவிலும் கூட துப்பாக்கிக் குண்டுகள் பாயாத, குண்டுவீச்சுகள் நடக்காத நிம்மதியான உறக்கத்தை அவர்கள் எதிர்ப்பார்ப்பது இயல்புதான்.

ஆனாலும், நம்முடைய தனிப்பட்ட ரசனை, அரசியல் விருப்பு வெறுப்பு அளவுகோல்களின் படி பிரசன்னவின் இந்த படத்தைதான் நாம் இம்மாதிரியெல்லாம் விமர்சிக்க மட்டும்தான் முடியும். அவருடைய கலை உள்ளத்தை மரியாதையோடே அணுகுவதுதான் பண்பாடு. தமிழர்கள் மீது நம்பிக்கை வைத்து தமிழகத்துக்கு வந்து தன் படத்தை திரையிடுகிறார். தமிழ் ஸ்டுடியோ ஏற்பாடு செய்திருந்த திரையிடல் நிகழ்வில் அர்த்தமற்ற கேள்விகளையும், பிரசன்னவுக்கு நேரடித்தொடர்பில்லாத அரசியல் விளக்கங்களையும் தமிழகத்து தமிழ்தேசியப் போராளிகள் கேட்டு, தம்முடைய அறிவீனத்தை உலகறிய செய்துவிட்டார்கள்.

“2009க்கு பிறகு தமிழீழத்தில் எத்தனை அத்துமீறல்கள் நடந்திருக்கிறது என்கிற ஆவணம் மொத்தமாக என்னிடம் இருக்கிறது. இதை நீங்கள் படித்திருக்கிறீர்களா? இதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?” என்று கையில் ஃபைலை வைத்துக்கொண்டு ஒருவர் பிரசன்னவை கேட்டார். இதற்கு சினிமா இயக்குனரான பிரசன்ன என்ன பதில் சொல்ல முடியுமென்று தெரியவில்லை. அவர் என்ன அதிபர் ராஜபக்‌ஷேவா?

அடுத்து ஒரு போராளி, “இலங்கையில் நடந்தது போர்க்குற்றம் என்று நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். தமிழர்களுக்கு தனி ஈழமே தீர்வு என்று அறிவிக்க வேண்டும்” என்று கேள்வி(!) கேட்டார்.

மைக்கை பிடுங்கிய ஜிலுஜிலு சிகப்பு சட்டைக்காரர் ஒருவர் தான் மூன்று கேள்விகள் கேட்க இருப்பதாக படுமோசமான உடைந்த ஆங்கிலத்தில் ஆரம்பித்தார். சுமார் பத்து நிமிடங்களுக்கு இயக்குனருக்கும், பார்வையாளர்களுக்கும் பெரும் ரோதனையாக அவருடைய பேச்சு அமைந்தது. ‘கொஸ்டின் நெம்பர் ஒன்’ என்று அவர் ஆரம்பித்தபோது அவரிடமிருந்து மைக் பிடுங்கப்பட்டது.

இதே பாணியில் ஆங்காங்கே இருந்து போர்க்குரல் எழுப்பப்பட்டுக் கொண்டிருந்தது. ஒருவர் “ஏன் படம் முழுக்க பின்னணியில் எல்.ஆர்.ஈஸ்வரியின் தமிழ் பாடல்கள் ஒலிக்கிறது என்கிற அரசியலை தெரிவிக்க வேண்டும்” என்று கேட்டு செமையாக அசத்தினார்.

படம் பார்க்க வந்த ஈழத்தமிழர்கள் பெரும்பாலானோர் இயக்குனருக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்கள். அம்மாதிரி பேசிக்கொண்டிருந்த ஒரு பெண்மணியை பார்த்து சேகுவேரா மாதிரி ஆவேசமாக இருந்த தோழர் ஒருவர் சொன்னார். “போயும் போயும் உங்களுக்கு போய் இங்கே ஸ்ட்ரைக்கெல்லாம் பண்ணி போராடினோமே? நாடு விட்டு நாடு வந்த உங்களுக்கு எங்களோட அருமை எப்படி தெரியும்?”

வாழ்க பிரபாகரன். மலர்க தமிழீழம்!

16 ஜூன், 2014

How old are you?

‘How old are you?’

மலையாளத்தில் மஞ்சுவாரியரின் நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக கேரளாவெங்கும் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம். நடுத்தர வயதை எட்டிவிட்ட மத்தியவர்க்க பெண் ஒருவர் கணவரின் வேலை, குழந்தையின் கல்வி காரணமாக அயர்லாந்துக்கு இடம்பெயர முயற்சிக்கிறார். அங்கே வேலை கிடைக்காவிட்டால் பொருளாதாரரீதியாக சமாளிக்க முடியாது. ஒவ்வொரு முறை வேலைக்கு முயற்சிக்கும்போதும் அவர் எதிர்கொள்ளும் கேள்வி இதுதான். ‘முப்பத்தியாறு’ என்று வயதை சொன்னதுமே எல்லா நேர்முகத் தேர்வுகளிலும் திருப்பி அனுப்பப்படுகிறார். இதனால் தன்னம்பிக்கை குலைந்து, மனவுளைச்சலுக்கு உள்ளாகி அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்தான் படத்தின் கதை.

Life is stranger than cinema.
விஜயவாடாவில் பிறந்த பாலாமணிக்கு பதினாறு வயதில் திருமணம் ஆனது. அப்போது பத்தாம் வகுப்புதான் முடித்திருந்தார். மேற்கொண்டு படிக்க ஆசை. இருந்தாலும் இல்லற வாழ்க்கை அனுமதிக்கவில்லை. ஓய்வு நேரத்தில் டைப்ரைட்டிங் பழகத் தொடங்கினார். இதற்கிடையே ஒரு பெண், ஒரு ஆண் என்று இரண்டு குழந்தைகள் பிறந்துவிட இல்லற ஜோதியில் முற்றிலுமாக ஐக்கியமானார்.

கணவர் ராஜனுக்கு மத்திய அரசின் செய்தித்துறையில் ‘கிளார்க்’ பணி. அன்பானவர். அதிர்ந்துகூட பேசமாட்டார். சொற்ப வருமானம்தான். இருந்தாலும் உலகின் ஒட்டுமொத்த சந்தோஷங்களையும் அள்ளித்தந்தது வாழ்க்கை. குழந்தைகளை பள்ளிக்கு தயார் செய்வது, கணவருக்கு ‘லஞ்ச்’ தயாரிப்பது என்று எல்லா குடும்பத் தலைவிகளையும் மாதிரியே பாலாமணியும் எப்போதும் பிஸி. வார இறுதிகள் சினிமா, டிராமா என்று மகிழ்ச்சியாக குடும்பத்தோடு கழிந்தது.

பெண் வளர்ந்து எம்.சி.ஏ., முடித்து நல்ல வேலையில் சேர்ந்தார். கல்யாணம் முடிந்தது. பையன் பி.டெக்., படித்துவிட்டு அயல்நாட்டில் எம்.பி.ஏ., படிக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். கல்யாணக் கடன், பையனின் கல்விச்செலவு என்று ஏகத்துக்கும் பொருளாதாரம் நெருக்கிக் கொண்டிருந்த நிலையில் திடீரென ராஜன், ஹார்ட் அட்டாக்கில் காலம் ஆனார்.

முப்பத்தைந்து ஆண்டுகால மகிழ்ச்சியை ஒரே நாளில் தொலைத்தார் பாலாமணி. கணவரின் கண்கள் வழியாக உலகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு திடீரென பார்வை பறிபோனது போல ஆனது. கணவர் வாங்கியிருந்த கடன்களின் சுமை வேறு தனியாக கழுத்தை நெறித்தது. ‘பென்ஷன்’ வரவும் தாமதமானது. பொருளாதாரம் மட்டுமல்ல. தன்னுடைய தனிப்பட்ட சோகத்தில் இருந்து மீளவும் அவருக்கு வாழ்க்கையில் செகண்ட் இன்னிங்ஸ் தேவைப்பட்டது. வேலைக்கு போகலாம் என்று முடிவெடுத்தார். ஆனால் நாற்பத்தி ஒன்பது வயது பெண்ணுக்கு யார் வேலை தருவார்?

நான்கு சுவர்களுக்கு நடுவில் முடங்கிப் போயிருந்தவர் கதவை திறந்துக்கொண்டு வெளியே வந்தார். பேனா எடுத்து எழுதத் தொடங்கினார்.

“அய்யா. நான் இப்போது விதவை. என்னுடைய கணவர் மத்திய அரசுப்பணியில் இருந்து திடீரென காலமாகி விட்டார். பொருளாதாரத்துக்காக மட்டுமல்ல. நான் மீளவும், மீதியிருக்கும் என்னுடைய வாழ்வை மகிழ்ச்சியாக கடத்தவும் எனக்கு உடனடியாக ஒரு வேலை தேவை. கருணை அடிப்படையில் கொடுத்து உதவுங்கள்”

ஒரு கடிதம் ஆந்திர அரசுக்கு. மற்றொன்று மத்திய அரசில் கணவர் பணிபுரிந்துவந்த அமைச்சகத்துக்கு. மூன்றாவது கடிதம் இந்திய ஜனாதிபதிக்கு. மனுக்கள் கிணற்றில் போட்ட கல்லானது. பட்ட காலிலேயே படும். கெட்ட குடியே கெடும். கணவரின் நினைவிலேயே சோகத்தோடு நாட்களை கழித்து வந்தவருக்கு திடீரென பக்கவாதம் ஏற்பட்டு கையும், காலும் செயலிழந்தது.

அந்த நேரத்தில்தான் அந்த கடிதம் வந்தது. ஜனாதிபதி மாளிகை, பாலாமணிக்கு உதவுமாறு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறைக்கு பரிந்துரை செய்தது தொடர்பான அத்தாட்சிக் கடிதம். பாலாமணியின் உடலும், உள்ளமும் மீண்டும் சுறுசுறுப்பானது. வேலை தொடர்பாக விவரம் கேட்க டெல்லிக்கு அவரே கிளம்பினார். தெலுங்கு தவிர்த்து வேறு மொழிகள் எதுவும் அவருக்கு தெரியாது. மகளின் உதவியோடு டெல்லிக்கு வந்தவர் யார் யாரையோ பார்த்து, பேசி கருணை அடிப்படையில் வேலை வாங்கிவிட்டார். சென்னையில் பணிபுரிய வேண்டும். நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனின் பிரஸ் இன்ஃபர்மேஷன் பீரோவில் வேலை.

வேலைக்கு சேருவதற்கு முன்பாக இன்னொரு பிரச்சினை. அவரது சாதி சான்றிதழ். மாநில அரசு கொடுத்திருந்த சான்றிதழ், மத்திய அரசின் அளவுகோல்களில் இல்லை. மீண்டும் அலைச்சல். இருந்தாலும் வேலை கிடைத்துவிட்டது என்கிற உணர்வில் சுறுசுறுப்பாக அலைந்து திரிந்து எல்லாவற்றையும் சரிசெய்தார்.

அண்டை மாநிலம். அந்நியச் சூழல். புது மொழி. பழக்கமற்ற பணி. பாலாமணி சோர்ந்துவிடவில்லை. அதுவரை பிள்ளைகளின் கம்ப்யூட்டரில் ‘கேம்’ ஆடிய அனுபவம் மட்டுமே அவருக்கு உண்டு. மிக விரைவாகவே வேலையை கற்றுக் கொண்டார். கூட பணிபுரிபவர்கள் எல்லாரும் வயதில் குறைந்தவர்கள். அதனால் என்ன, வேலையில் அவர்கள்தானே சீனியர்கள்? கவுரவம் பார்க்காமல் ஒவ்வொரு சந்தேகமாக கேட்டு தெளிந்துக் கொண்டார்.

வேலைக்கு சேர்ந்து நான்கு ஆண்டுகள் ஆகிறது. கணவர் வாங்கிய கடன்களை பெரும்பாலும் அடைத்துவிட்டார். இப்போது தமிழையும், ஆங்கிலத்தையும் நன்கு புரிந்துக் கொள்கிறார். கொச்சைத்தமிழில் பேசுகிறார். சென்னை கோடம்பாக்கத்தில் தனி வீடு எடுத்து தங்கியிருக்கிறார். பேரம் பேசி காய்கறி வாங்குகிறார். கணவரை இழந்த இரண்டு நாத்தனார்களும் அவ்வப்போது வருகிறார்கள். விடுப்பு நாட்களில் அவர்களோடு லூட்டி. விடுமுறையோடு கூடிய பயணப்படி (LTC) அப்ளை செய்து, அவர்களோடு ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா போய்விட்டு சமீபத்தில்தான் திரும்பினார். இது ‘சிங்கிள் விமன் ஏரியா’. கணவரை இழந்துவிட்டால் குழந்தைகளை சார்ந்துதான் ஒரு பெண் வாழவேண்டும் என்கிற சமூகவிதியை அனாயசமாக உடைத்தெறிந்து சாதித்திருக்கிறார் பாலாமணி.

“வாழ்க்கையை வண்ணமயமாக வாழவேண்டும் என்று எனக்கு ஆசை. என் கணவர் இருந்தபோது அப்படிதான் என்னை வாழவைத்தார். பளிச்சென்று அலங்கரித்துக் கொள்ள வேண்டும். ஊர் சுற்ற வேண்டும். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். கணவரின் மரணத்துக்கு பிறகு திடீரென தடைபட்ட இந்த சுழற்சியை, இப்போது மீண்டும் பணி கிடைத்தபிறகு நானே தொடர்கிறேன்” என்கிறார்.
‘ஆண்ட்டி’ என்று சக ஊழியர்கள் யாரும் இவருக்கு சலுகைகள் எதுவும் தருவதில்லை. பணியில் தப்பு செய்தால், எல்லாரும் வாங்குவது மாதிரி இவரும் திட்டு வாங்குகிறார். இதுமாதிரி மற்றவர்கள் தன்னை இயல்பாக நடத்துவதைதான் பாலாமணியும் விரும்புகிறார்.

“செய்தித்துறையின் செல்லம் அவர். ஏதாவது அவரிடம் வேலை வாங்க வேண்டுமென்றால் ‘ஐஸ்க்ரீம்’ வாங்கிக் கொடுத்து தாஜா செய்வோம். ஐம்பது வயதில் பணிக்கு சேர்ந்தார் என்பதால், அந்த வயதுக்கேயுரிய சில பலகீனங்களும் அவருக்கு உண்டு. ஆனால், பெண்கள் மேம்பாட்டுக்காக பிரச்சாரம் செய்யும் நாங்களே வயதை காரணம் காட்டி ஒரு பெண்ணை நிராகரித்திருக்க முடியாது. மற்றவர்களை காட்டிலும் அரசுக்கு கூடுதலாக சமூகப் பொறுப்பு இருக்கிறதில்லையா?” என்கிறார் அவரது மேலதிகாரியான கீதா இளங்கோவன்.

ஓய்வெடுக்க வேண்டிய வயதில் ஒரு குடும்பத்தலைவி வேலைக்கு சேர்ந்து பணியாற்றுவது குறித்து விமர்சனமும் இருக்கிறது. இந்த வயதில் இவருக்கு மத்திய அரசு பணி கொடுத்திருப்பதால், வேலையில்லாத ஏதோ ஒரு இளைஞன் காத்திருப்புப் பட்டியலில் இருக்கிறான் என்றும் சிலர் விசனப்படுகிறார்கள்.

“அப்படியெல்லாம் தர்க்கம் பேசி எங்களை முடக்கிவிட முடியாது தம்பி. ஐம்பது வயதில் ஓர் ஆணுக்கு என்னவெல்லாம் இங்கு சாத்தியமோ, அதெல்லாம் பெண்ணுக்கும் சாத்தியம்தான். நான் வேலைக்கு வருவது என்பது வெறும் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமில்லை. பல நூறு ஆண்டுகளாக சிறைபட்டிருக்கும் எங்கள் உரிமைகளை கேட்டு வெல்வது. இப்போது நான் பெற்றிருக்கும் சுதந்திரம் சாதாரணமானதல்ல. இது தனிப்பட்ட வெற்றியுமல்ல. என்னை பின்பற்றி ஏராளமானோர் வருவார்கள். காத்திருங்கள்” என்கிறார் பாலாமணி.

‘How old are you?’ திரைப்படத்தின் இறுதியில் ஜனாதிபதி தன்னுடைய மாளிகைக்கு அழைத்து தனிப்பட்ட முறையில் விருந்தளித்து மஞ்சுவாரியரை கவுரவிக்கும் அளவுக்கு சாதனை செய்திருப்பார். அன்று அவருக்கு பிறந்தநாளும் கூட. போனில் அழைத்து வாழ்த்து சொல்லும் தோழி கேட்பாள். “How old are you?”. மஞ்சுவாரியர் சொல்லும் பதில். “It doesn’t matter”.

பாலாமணியிடம் வயதை கேட்டாலும் அதையேதான் சொல்லுவார்.

(நன்றி : புதிய தலைமுறை)