4 ஜூலை, 2017

சினிமா வீரன்

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய ‘சினிமா வீரன்’ பார்த்தேன். நீங்கள் சினிமா ரசிகராக (குறிப்பாக ஆக்‌ஷன் ரசிகராக) இருக்கும் பட்சத்தில், இந்த ஆவணப்படத்தின் எண்ட்கார்ட் போடப்படும்போது இருதுளி கண்ணீரையாவது சிந்துவீர்கள்.

இந்தப் படத்தில் ஃபெப்சி விஜயன் சொல்கிறார்.

“எங்க ஸ்டண்ட் யூனியன் சுவத்துலே வால்பேப்பர் ஒட்டுறதுக்கு தேவையே ஏற்படலை. ஏன்னா, சினிமாவில் ஸ்டண்ட் பண்ணுறப்போ செத்துப்போனவங்க படங்களை மாட்டியே சுவரெல்லாம் நிறைஞ்சிடிச்சி”

ஜூடோ ரத்தினம், ஃபெப்சி விஜயன், பீட்டர் ஹெய்ன், ஸ்டண்ட் சில்வா ஆகிய மாஸ்டர்களும் ஏராளமான ஃபைட்டர்களும் சொல்லும் அனுபவங்கள் நம் முதுகெலும்பையே முறிக்கக்கூடிய அளவுக்கு த்ரில்லானவை. குறிப்பாக ‘முதல்வன்’ படத்தில் அர்ஜூனாக பீட்டர் ஹெய்ன் தன் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு எரிந்தது, ‘அந்நியன்’ விக்ரமாக ஸ்டண்ட் சில்வா நந்தனம் டெம்பிள் டவர்ஸ் பில்டிங்கில் இருந்து தாவித்தாவி உயிரைப் பணயம் வைத்தது, ‘முரட்டுக்காளை’ இறுதிக்காட்சிக்கு ஜூடோரத்தினம் அமைத்த ரிஸ்க்கான ரயில் சண்டைக்காட்சி என்று ஏகத்துக்கும் மயிர்க்கூச்செறிய வைக்கும் அனுபவங்கள்.

வீரமும், காதலும், கண்ணீரும்தான் ஸ்டண்ட் நடிகர்களின் சொத்து. இந்த ஆவணப் படத்தில் ஸ்டண்ட் கலைஞர்கள் குறித்து அவர்களது குடும்பத்தாரின் பார்வையும் இடம்பெற்றிருப்பது சிறப்பானது. எந்த ஸ்டண்ட் கலைஞருக்குமே அரேஞ்ச்ட் மேரேஜ் அமைவதில்லை. யாராவது காதலித்தால் மட்டுமே கல்யாணவரம் கிடைக்குமாம்.

புலிகேசி புருஷோத்தம்மன் என்கிற ஸ்டண்ட் கலைஞர். ஷூட்டிங்கின்போது இவரை புலி மார்பில் அறைந்துவிடுகிறது. பத்து நாள் ஜி.எச்.சில் கவலைக்கிடமாக இருந்து மறைகிறார். இவரை அடக்கம் செய்யக்கூட யாரிடமும் காசில்லை. ஸ்டண்ட் நடிகர்கள் தங்களிடமிருந்து ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் போட்டு காசு திரட்டுகிறார்கள். சுடுகாட்டில் ஒன்றுகூடி கதறுகிறார்கள். எத்தனை காலத்துக்குதான் செத்துக்கொண்டே இருப்பது என்று குமுறியவர்கள் 1966ல் ஸ்டண்ட் யூனியன் அமைத்து தங்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்கத் தொடங்குகிறார்கள். சுடுகாட்டில் தொடங்கப்பட்ட யூனியன் என்கிற பெருமை கொண்டது நம் ஸ்டண்ட் கலைஞர்களின் யூனியன். இன்றும் கூட ஸ்டண்ட் கலைஞர்களுக்கு தோராயமாக ஒரு நாள் ஊதியம் 400 ரூபாய்தான்.

ஸ்டண்ட் யூனியன் கட்டிடத்தை காட்டும்போது அந்த காலத்தில் இறந்துப் போனவர்களில் புலி பாஷா என்கிறவரின் படத்தைப் பார்த்தேன். அனேகமாக இவர்தான் அசோகமித்திரனின் ‘புலிக்கலைஞன்’ இன்ஸ்பிரேஷனாக இருக்க வேண்டும்.

சினிமாவில் ஸ்டண்ட் வேலை செய்பவர்கள், லைஃப் இன்சூரன்ஸ் செய்துக்கொள்ள முடியாது. தேசிய, மாநில விருதுகளில் இவர்களுக்கு இடமில்லை. ஏன், நம்மூரை விடுங்கள். ஆஸ்கரிலேயேகூட இவர்களுக்கு அங்கீகாரம் கிடையாது.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு எடுக்கப்பட்டிருக்கும் இந்த ஆவணப்படத்தை தமிழகமெங்கும் இருக்கும் திரையரங்குகள் சனி, ஞாயிறுகளில் காலை காட்சியாக மக்களுக்கு இலவசமாக போட்டு காட்ட வேண்டும். அல்லது ஸ்டண்ட் யூனியனே செலவு செய்து, இந்த திரையிடலை தமிழகமெங்கும் நடத்த வேண்டும். தாங்கள் கொண்டாடும் மாஸ் ஹீரோக்களை, முன்னாள் மற்றும் நாளைய முதல்வர்களை உருவாக்கியவர்கள் இன்னமும் மரணக்குழிகளுக்குள்தான் வசிக்கிறார்கள் என்பதை மக்களும் அறியவேண்டாமா?

ரஜினியின் மகளாய் பிறந்ததற்கு நியாயம் செய்திருக்கிறார் ஐஸ்வர்யா. Hats off!

சிவகாசி காமிக்ஸ் குடும்பத்தார்!

 இரும்புக்கை மாயாவியை தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்க முடியுமா? லாரன்ஸ் டேவிட், ஜானி நீரோ, ஸ்பைடர், டெக்ஸ் வில்லர், லக்கிலுக் என்று கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக தமிழ் வாசிப்பில் ரசனையை கூட்டும் காமிக்ஸ் ஹீரோக்கள் அத்தனை பேருக்குமே சிவகாசியில்தான் டப்பிங் கொடுக்கப்படுகிறது.

எழுபதுகளின் தொடக்கத்தில் ‘முத்து காமிக்ஸ்’, எண்பதுகளின் மத்தியில் ‘லயன் காமிக்ஸ்’ என்று தொடரும் இந்த காமிக்ஸ் பயணத்துக்கு முடிவே இல்லை. இப்போது சர்வதேசத் தரத்தில் வழுவழு தாள்களில் முழுவண்ணத்தோடு புதுப்பொலிவோடு பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

தாத்தா சவுந்தரபாண்டியன், ‘முத்து காமிக்ஸ்’ தொடங்கினார். அப்பா விஜயன், ‘லயன் காமிக்ஸ்’ ஆரம்பித்தார். மூன்றாவது தலைமுறையாக இப்போது இத்தொழிலில் புதுமுகமாக களமிறங்குகிறார் விஜயனின் மகன் விக்ரம். ‘முத்து காமிக்’ஸின் 400வது இதழ், ‘லயன் காமிக்’ஸின் 300வது இதழ் என்று ஒரே மாதத்தில் - ஜூலையில் - இரண்டு இதழியல் துறை மைல்கற்களை எட்டியிருக்கிறார்கள்!

லயன் காமிக்ஸின் ஜூனியர் எடிட்டரான விக்ரம் விஜயனை, தீபாவளிக்காக பரபரப்பாக தயாராகிக் கொண்டிருக்கும் கந்தக பூமியான தகதக சிவகாசியில் ஒரு மதியவேளையில் சந்தித்தோம். 

“இருபத்தைந்து வயதை இப்போதான் எட்டப்போறேன். நான் கொஞ்சம் லேட்டு. அப்பா விஜயன், பதினேழு வயசிலேயே ‘லயன் காமிக்’ஸுக்கு ஆசிரியராகி சாதித்தவர். சிவகாசியில் ஸ்கூல் முடிச்சேன். சென்னையில் பி.டெக் படிச்சேன்.

தாத்தா, அந்தக் கால ஐரோப்பிய காமிக்ஸ்களின் பரம ரசிகர். காமிக்ஸ் புத்தகங்களை தமிழில் வெளியிடுவதை ஒரு தொழிலாக இல்லாமல் தன்னுடைய கடமையாகத் தொடங்கினார். அப்பா, அதை விரிவுபடுத்தினார். சின்ன வயசுலே எங்க வீடு முழுக்கவே காமிக்ஸ் நிறைஞ்சி கிடக்கும். காமிக்ஸ் தவிர்த்து கார்ட்டூன் சேனல்கள் பார்த்துக்கிட்டிருப்பேன்.

லக்கிலுக், டின்டின்னு கார்ட்டூன் ஹீரோக்கள் என் மனசுக்குள்ளேயே எப்பவும் வசிக்கிறாங்க. எங்க குடும்பத்துக்கு உலகம் முழுக்க இருக்குற தமிழர்கள் மத்தியில் அடையாளம் கொடுத்தது காமிக்ஸ்தான். அப்படியிருக்க எனக்கு மட்டும் எப்படி இதில் ஆர்வம் வராமல் போகும்?”  கேள்வி கேட்கப் போன நம்மையே கேள்வியோடு எதிர்கொண்டார் விக்ரம்.
“உங்க ஊரு பட்டாசுகளை வெடிச்சி, காசை கரியாக்குறோம்னு எங்களைத்தான் எல்லாரும் சொல்லுவாங்க. நீங்க காமிக்ஸிலே பெரிய முதலீடு போட்டு காசை கரியாக்குறீங்களே?”

“கரியாக்குறோம்னு சொல்ல முடியாது. மத்த தொழில் மாதிரி இதுலே பெருசா லாபமெல்லாம் பார்க்க முடியாது. ஆனா, பெரிய முதலீடு தேவைப்படும் தொழில்தான் இது. தமிழில் காமிக்ஸ் வெளியிட, ஒரிஜினல் கதைகளின் அயல்நாட்டு தயாரிப்பாளர்களுக்கு பெரிய ராயல்டி தொகை தருகிறோம். 

அதைத் தவிர்த்து மொழிபெயர்ப்பு, அச்சு என்று நிறைய செலவாகிறது. இதைத் தொழிலாக லாபம் எதிர்பார்த்து செய்வதாக இருந்தால், நிச்சயமாக வாசகர்களுக்கு இவ்வளவு குறைந்த விலையில் எங்களால் காமிக்ஸ் வழங்க முடியாது. என் அப்பாவும், தாத்தாவும் பயங்கரமான காமிக்ஸ் ஆர்வலர்கள். இப்போ தாத்தா ஓய்வில் இருக்க அப்பாவும், சித்தப்பாவும்தான் எங்க தொழில்களை நிர்வகிக்கிறார்கள். சித்தப்பாவுக்கும் காமிக்ஸ் ஆர்வம் உண்டு. அவங்க ரசனை அப்படியே எனக்கும் வந்திருக்கு.

எங்க குடும்பம் பாரம்பரியமா அச்சுத்தொழில் செய்துகிட்டு வருது. அது தொடர்பான நெடிய அனுபவம் எங்களுக்கு இருக்கு. சிவகாசி மாதிரியான தொழில் நகரத்தில் இயங்குறோம் என்பதால் மார்க்கெட் நல்லா அத்துப்படி ஆகியிருக்கு. திடீர் விலையேற்றங்களை எதிர் பார்த்து, அதற்கேற்ப புதிய தொழில் யுக்திகளை கையாண்டு எங்க செலவுகளை கட்டுக்குள் வெச்சிருக்கோம். 

அதனால்தான் மூன்று தலைமுறைகளாக, நாற்பத்தைந்து ஆண்டுகளாக நாங்கள் தொடர்ச்சியா செயல்பட முடியுது. இப்போ எங்க காமிக்ஸ்களில் என் அப்பாவின் ஈடுபாடும், உழைப்பும்தான் நூறு சதவிகிதம். ஆன்லைன் விற்பனையை நிர்வகிப்பது, சமூக வலைத்தளங்களில் மார்க்கெட்டிங் செய்வது போன்றவற்றில் நான் இறங்கியிருக்கிறேன்”
“வாசகர்கள் இன்னமும் அதே ஆர்வத்தோடு காமிக்ஸ் புத்தகங்களை வாசிக்கிறார்களா?”

“அப்பா, தாத்தா காலத்து காமிக்ஸ் வரவேற்பைப் பற்றி நான் நேரடியாக அறியவில்லை. இப்போ அஞ்சு வருஷமாதான் தயாரிப்பு, திட்டமிடல் போன்றவற்றில் அப்பாவுக்கு துணையா இருக்கேன். எண்பதுகளைத்தான் காமிக்ஸ்களின் பொற்காலம் என்று வாசகர்கள் பலரும் சொல்றாங்க. 

ஆனா, இப்போ முன்பு எப்போதும் தமிழ் காமிக்ஸ் துறையில் இல்லாத அளவுக்கு புதுமைகளையும், தரத்தையும் எட்டியிருக்கோம். ஆக்‌ஷன், கெளபாய், கார்ட்டூன், சூப்பர்ஹீரோக்கள், கிராஃபிக் நாவல்கள் என்று வாசகர்களுக்கு வெரைட்டியா விருந்து பரிமாறுகிறோம். எங்களுக்கு வரவேற்பு எப்படியிருக்கிறது என்று நீங்களே புத்தகக் காட்சிகளின்போது எங்க ஸ்டாலுக்கு வந்து பார்க்கலாம். ஒருவேளை இன்னும் இருபது வருஷம் கழிச்சி இப்போதைய காலம்தான் காமிக்ஸ்களின் பொற்காலம் என்றுகூட சொல்லப்படலாம்”

“காமிக்ஸ்களுக்கு என்று பிரத்யேகமாக நடத்தப்படும் comic con போன்ற புத்தகச்சந்தை நிகழ்வுகளில் பங்கேற்கிறீர்களா ?”

“நாங்களும் நம்முடைய தமிழ் காமிக்ஸ்களை எடுத்துக்கொண்டு ஆரம்பத்தில் இரண்டு ஆண்டுகள் பங்கேற்றோம். பெங்களூர், மும்பை, டெல்லி, ஹைதராபாத், பூனே என்று எங்கெங்கோ அவற்றை நடத்துகிறார்கள். சென்னைக்கு மட்டும் வரமாட்டேன் என்கிறார்கள். தமிழர்களுக்கும் நீண்டகால காமிக்ஸ் வாசிப்பு உண்டு என்பதை அவர்கள் அறியவேண்டும். என்றேனும் ஒருநாள் இங்கும் நடத்துவார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. இப்போதைக்கு தமிழகத்தில் நடக்கும் பெரிய புத்தகக்காட்சிகளில் நாங்க பங்கேற்கிறோம். புத்தகக்காட்சி  அமைப்பாளர்களும் நாங்க பங்கேற்பதை விரும்பறாங்க”
“முன்பெல்லாம் பெட்டிக்கடைகளிலும் கூட ‘முத்து’ / ‘லயன்’ காமிக்ஸ்கள் தொங்கும். இப்போது அப்படியில்லையே..?”

“சின்ன வாசகர் வட்டம். போதுமான அளவுக்கு விற்பனை என்று நாங்களே எங்களை வரையறைத்து வைத்திருக்கிறோம். பெரியளவில் விளம்பரம் செய்து விற்பனை செய்யும் சக்தி எங்களுக்கு இல்லை. வாட்ஸப் குழுமங்கள், சமூக வலைத்தளங்கள் மூலம் எங்கள் வாசகர்களே எங்களுக்கு விளம்பரம் கொடுக்கிறார்கள். புத்தகக் காட்சிகளின் போது புதிய வாசகர்கள் உருவாகிறார்கள். 

எல்லாத் துறையிலும் ராக்கெட் வேக மாற்றங்கள் நடைபெறுகின்றன. நம் தமிழ் காமிக்ஸ் துறை அந்தளவுக்கு வேகமாக மாறமுடியவில்லை என்றாலும், போட்டி நிறைந்த சூழலில் நாங்களும் எங்களுக்கான ராஜபாட்டையில் கம்பீரமாக நடை போடுகிறோம். இன்டர்நெட் மூலமாவே எங்க வாசகர் வட்டத்தை ஊக்கமாக செயல்பட வைக்கிறோம். வாசகர்களின் ரசனை மாற்றங்களை இப்போ உடனுக்குடன்  தெரிஞ்சுக்கவும் இன்டர்நெட் உதவுது.

இன்றைக்கும் முக்கிய நகரங்களில் எங்களுக்கு ஏஜெண்டுகள் இருக்கிறார்கள். எங்களது இப்போதைய வெளியீடுகள் நல்ல ஆர்ட் பேப்பரில், முழு வண்ணத்தில் சர்வதேசத் தரத்தில் உருவாக்கப்படுகின்றன. விலையை தொடர்ச்சியாக ஒரே மாதிரி கட்டுக்குள் வைக்க முடிவதில்லை. ஒரு இதழ் 50 ரூபாய் என்றால் அடுத்த இதழ் 100 ரூபாயாக இருக்கும். எனவே சிறிய கடைகளில் விற்க முடிவதில்லை.

வாசகர்களின் நேரடி சந்தா, ஆன்லைன் விற்பனை, புத்தகக் காட்சிகளில் பங்கேற்பு போன்ற முறைகளில் விற்பனை செய்து வருகிறோம். பல்லாயிரம் ரூபாய் செலவழித்து உரிமை வாங்கும் கதைகளை, இங்கே மிகக்குறைவான வாசகர்  வட்டத்துக்குத்தான் கொண்டு செல்ல முடிகிறது என்கிற சங்கடம் எங்கள் குடும்பத்துக்கு உண்டு!”

(நன்றி : குங்குமம்)

5 ஏப்ரல், 2017

குறும்பட உலகின் முன்னோடி!

நாடு சுதந்திரமடைந்த காலக்கட்டத்தில் பிறந்தவர்கள் வித்தியாசமான பிறவிகள். இதுவரையிலான உலகின் செயல்பாடுகள் எல்லாவற்றையுமே தங்களால் மாற்றிவிட முடியும் என்று உறுதியாக நம்பியவர்கள்.

இந்தியாவை வளர்ந்த நாடுகளின் வரிசையில் நிலைநிறுத்தியே ஆகவேண்டும் என்கிற நேருவின் ஆவேசமான முயற்சிகள் இந்த தலைமுறையினருக்குள் ஆழமான தாக்கத்தை உருவாக்கி இருந்தது. தங்கள் வாழ்நாளிலேயே பொன்னுலகை கண்டுவிட முடியும் என்று நம்பினார்கள். அந்த பொன்னுலகை நிறுவப் போகிறவர்களே தாங்கள்தான் என்கிற எண்ணமும் அவர்களுக்குள் இருந்தது.

நேரு காலமானதற்கு பிறகான நாட்டின் அரசியல் சூழல் அவர்களுக்குள் ஆரம்பத்தில் ஏமாற்றத்தைத் தந்தது. இந்திராகாந்தியின் அரசியல் செயல்பாடுகள் ஒருக்கட்டத்தில் அவர்களை கோபக்கார இளைஞர்களாக உருமாற்றியது. எதற்கெடுத்தாலும் ஆவேசமான எதிர்வினை என்பது அவர்களது இயல்பானது. ஏழ்மையை வெறுத்தார்கள். நாட்டில் ஏழ்மையே இருக்கக்கூடாது, ஒரே ஒரு பிச்சைக்காரனைகூட கண்ணில் காணக்கூடாது என்பது அவர்களது இலட்சியமாக இருந்தது. அவர்கள் கண்ணால் காணாத தேசங்களில் பிச்சைக்காரர்களே இல்லை, அயல்நாடுகள் எல்லாம் சொர்க்கங்கள் என்கிற மூடநம்பிக்கையும் அவர்களுக்கு ஊடகங்களால் விதைக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக, எமர்ஜென்ஸி.

எழுபதுகளில் இளைஞர்களாக இருந்தவர்கள் லட்சியவேட்கையோடு இருந்தார்கள் என்றால், அவர்கள் எமர்ஜென்ஸியை நேருக்கு நேராக சந்தித்தவர்கள் என்பதே முக்கியமான காரணம். இந்திய ஜனநாயகத்தின் மோசமான இன்னொரு பக்கத்தை தரிசித்தவர்கள். ஜெயப்பிரகாஷ் நாராயனின் ஊழல் எதிர்ப்பு இயக்கமும் அவர்களுக்குள் கனன்றுக் கொண்டிருந்த நெருப்பை ஊதிப்பெருக்கியது.

இந்த மனோபாவம் கலை இலக்கியத் துறைகளிலும் வெளிப்பட்டது. சந்தத்தோடு மரபுக் கவிதைகள் பாடிக் கொண்டிருந்த கவிஞர்களை நிற்கவைத்து, இந்த கவிதைகளால் மக்களுக்கு என்ன பிரயோசனம் என்று கேள்வி கேட்டார்கள். நெஞ்சை நக்கும் சிறுகதைகளாலும், அழகியல் உணர்வோடு வரிக்கு வரி செதுக்கப்பட்ட நாவல்களாலும் புரட்சி எப்படி சாத்தியப்படும் என்று விமர்சனம் வைத்தார்கள்.

குறிப்பாக எழுபதுகளின் இறுதி இந்த இளைஞர்களின் அனல் கக்கும் விமர்சனங்களால் வெப்பமயமாய் இருந்தது. தமிழில் குறும்படம் எடுக்கக்கூடிய முயற்சி இந்த ஆவேச மனோபாவத்தின் வெளிப்பாடு என்று சொன்னால் நம்புவதற்கு கொஞ்சம் கடினமாகதான் இருக்கும்.

தமிழ் சினிமாவில் கமல்ஹாசன், மனோபாலா, ராபர்ட் - ராஜசேகரன், பி.வாசு, பி.சி.ஸ்ரீராம், ருத்ரைய்யா, ஸ்ரீப்ரியா, ஜெயபாரதி என்று கலகக்காரர்கள் சினிமாவை மாற்றியே ஆகவேண்டும் என்று வெறியோடு திரிந்தார்கள். மாற்ற முடிந்ததா என்பதற்கு சமீபத்தில் வெளியான ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ போன்ற படங்களே பதில். இலக்கியம் பற்றி சொல்லவே வேண்டாம். இன்று ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டாலே, அதைத் தொகுத்து இலக்கியமாக்கி புத்தகமாகக் கொண்டுவந்துவிடலாம்.

அப்போது, எழுத்துலகில் பாலகுமாரன், மாலன், சுப்பிரமணியராஜூ என்று மூவேந்தர்கள். இளைஞர்களான இவர்களுக்கு பதில் சொல்லியே பழம்பெருசுகளுக்கு தாவூ தீர்ந்தது. இலக்கியக் கூட்டங்களில் இந்த மூவரணியைப் பார்த்தாலே ‘ஏதோ கலாட்டா நடக்கப்போவுது’ என்று பயந்தார்கள். ‘நாங்கள்தான் உங்கள் மெசைய்யாக்கள். வாசகர்களே எங்களிடம் வாருங்கள்’ என்று இயேசுமாதிரி அழைப்பார்களாம். அசோகமித்திரனின் ஆசிரியத்துவத்தில் வெளிவந்த ‘கணையாழி’ இவர்களுக்கு மேடை அமைத்துக் கொடுத்தது. ஜோல்னாப்பையை துறந்து ஸ்டைலான லுக்கில் வெளிப்பட்ட முதல் தலைமுறை இலக்கியவாதிகள் இவர்கள்தான் என்கிற சாதனைக்கு சொந்தக்காரர்கள்.

குமுதத்தில் ஒரு பக்கக் கதை எழுதினால் கூட அதில் சமூகத்துக்கு ஏதோ ஒரு மெசேஜ் இருக்க வேண்டும் என்று விரும்பியவர்கள் இவர்கள். சிற்றிதழ் மரபுக்கும், வெகுஜன இலக்கிய கலாச்சாரத்துக்குமான இடைவெளியை சரிசெய்ய நினைத்தவர்கள். அர்த்தமற்ற அலங்கார போதனைகளை கடுமையாக வெறுத்தார்கள். ஒருவகையில் பார்க்கப் போனால் முந்தைய தலைமுறையின் அர்த்தமற்ற மதிப்பீடுகளை, நாசூக்கு பார்க்காமல் கேள்வி கேட்கும் சுதந்திரத்தை நமக்கு பெற்றுக் கொடுத்த தலைமுறையினர் இவர்கள்தான்.

‘எப்படி கதை எழுத வேண்டும்?’ என்று பழசுகளுக்கு கிளாஸ் எடுக்கும் விதமாக ‘ஒரு தலைமுறையின் பதினோரு சிறுகதைகள்’ என்கிற நூலை ‘மாலன்’ நடத்திய ‘வாசகன்’ சிற்றிதழ் கொண்டுவந்தது. இதில் அன்றைய இளைஞர்களான ஆதவன், பாலகுமாரன், வண்ணதாசன், சுப்பிரமணியராஜூ, ஜெயபாரதி, மாலன், இந்துமதி, சிந்துஜா, எம்.சுப்பிரமணியன், கலாஸ்ரீ, அக்ரிஷ் ஆகியோரின் கதைகள் இடம்பெற்றன. இந்தத் தொகுதியின் அட்டைப்படத்தை வரைந்தவர் பாலகுமாரன். யெஸ், அப்போது கலைஞன் என்றால் எழுத்து, ஓவியம், லொட்டு, லொசுக்கு எல்லாவற்றிலும் மாஸ்டராக இருந்தாக வேண்டும்.

இந்த நூலுக்கான வெளியீடு வித்தியாசமான முறையில் (ஏனெனில் இவர்கள் மற்றவர்களிலிருந்து வித்தியாசமானவர்கள் ஆயிற்றே?) ஏற்பாடு செய்யப்பட்டது. மனோபாலா (இப்போது சினிமாக்களில் காமெடியனாக நடிக்கும் இயக்குநரேதான்) வரைந்த ஓவியங்களின் கண்காட்சி நடத்தப்பட்டு, அதில் புத்தகம் வெளியிடப்பட்டது. சுஜாதா, கமல் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு வித்தியாசமான இந்த விழா முயற்சியை பாராட்டினார்கள்.
இதோடு நின்றுவிடக் கூடாது என்று மாலனுக்கு தோன்றியது. அவருக்கு சினிமா என்கிற ஊடகத்தின் மீது எப்போதுமே கட்டுக்கடங்காத கோபம். காந்தி, ராஜாஜி, பெரியார் போன்றோர் சினிமாவை என்னச் சொல்லி விமர்சித்தார்களோ, அதே விமர்சனங்கள் மாலனுக்கும் உண்டு. தோற்றப்பொலிவு மிக்க இவருக்கு  நடிக்க நிறைய சான்ஸ் நிச்சயமாக கிடைத்திருக்கும். இவருடைய நண்பர்கள் ஏராளமானோர் சினிமாத்துறையில் பணியாற்றி இருந்தும், அத்துறை குறித்த ஒவ்வாமை இவருக்கு ஏனென்று தெரியவில்லை. ஒரே ஒரு படத்தில் மட்டும் மாலன் நடித்திருக்கிறார். அதுவும் அவரது நண்பர் கமலின் வற்புறுத்தலுக்கு இணங்க, மாலனாகவே அவர் நடித்த படம் ‘விருமாண்டி’.

மனோபாலா நடத்திய ‘வித்தியாசமான’ ஓவியங்கள் கணக்காக, வித்தியாசமான படங்கள் எடுக்கப்பட வேண்டும் என்பது மாலனின் கான்செப்ட். மூன்றிலிருந்து ஐந்து அல்லது ஆறு நிமிடங்களுக்கு ஒரு சிறுகதையை (ofcourse, with an strong social message) படமாக எடுப்பது என்று பேசினார்கள். இவரது முயற்சிக்கு நான்கைந்து பேர் ‘ஜே’ போட ஆளுக்கு ஒரு படம் எடுப்பதாக சபதம் செய்தார்கள்.

அப்போதெல்லாம் ஆவணப்படங்கள் எடுப்பதுண்டு. இதுபோல குறும்படங்களை யாரும் எடுத்ததில்லை. அந்த நாட்களில் வீடியோ கேமிராவே புழக்கத்துக்கு வரவில்லை. திரைப்படங்கள் 35 MM ஃபிலிமில் பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. அந்த ஃபிலிம் கொஞ்சம் காஸ்ட்லிதான். பணக்காரர்கள் வீட்டு திருமணங்கள் மட்டும் 8 MM ஃபிலிமில் ரெக்கார்ட் செய்யப்படுவது வழக்கம்.

கல்யாணப் படத்துக்கும், சினிமாப் படத்துக்கும் இடையிலான 16 MMல் படம் எடுக்க மாலன் திட்டமிட்டார்.

‘நகரவாழ்க்கையின் இயந்திரத்தனம், அதிலிருந்து விடுபட்டு ஓர் இளைஞன் இயற்கைத்தாயின் மடியில் இளைப்பாறுவது’ என்று ஒன்லைனர் பிடித்தார். இந்த இளைப்பாறுதலும் தற்காலிகமானதுதான், அவன் மீண்டும் இயந்திரமாவான் என்கிற மேசேஜை சொல்லும் திரைக்கதை. பரங்கிமலை ரயில் நிலையத்தில் தொடங்கி, கடற்கரை வரை படப்பிடிப்புக்கு லொக்கேஷன். ஹீரோ லுக்கில் இருந்த ஜெயபாரதிதான் இந்த குறும்படத்தின் நாயகன் (பின்னாளில் இவர்தான் ருத்ரைய்யாவின் ‘கிராமத்து அத்தியாயம்’ படத்தின் ஹீரோவாக படப்பிடிப்பில் கலந்துக்கொண்டு, பாதியில் கழட்டிவிடப்பட்டார். பாலச்சந்தர் ‘மூன்று முடிச்சு’ படத்தில் இவரைதான் ரஜினி நடித்த கேரக்டரில் நடிக்கவைக்க ஆசைப்பட்டார். ஞாநியின் ‘பரிக்‌ஷா’ குழு நடிகர்).

மாலன் எடுத்த அந்த குறும்படம் எங்கெங்கு திரையிடப்பட்டது, யார் யார் பார்த்தார்கள், என்னமாதிரியான விமர்சனங்கள் வந்தது என்பதை போன்ற தகவல்கள் எனக்கு கிடைக்கவில்லை. அவரைத் தொடர்ந்து மற்றவர்களும் குறும்படங்கள் எடுத்தார்களா என்று தெரியவில்லை. தூர்தர்ஷன் மட்டுமே டிவியாக இருந்த காலக்கட்டத்தில் இந்த முயற்சிக்கு என்னமாதிரி வரவேற்பு கிடைத்திருக்கக் கூடும் என்று யூகிக்கவே முடியவில்லை. எனினும், விடாமுயற்சி வேந்தரான ஞாநி மட்டும் ஏதாவது ட்ரை செய்திருப்பார் என்று யூகிக்கிறேன்.

எனினும், எண்பதுகளின் மத்தியில் இயக்குநர் வாய்ப்பு தேடியவர்கள், தங்களுக்கு தொழில் தெரியும் என்று காட்டுவதற்காக showreel மாதிரி குறும்படங்கள் எடுத்திருக்கிறார்கள்.  கமல்ஹாசனேகூட தன்னிடம் வாய்ப்பு கேட்டுவரும் புதுமுக இயக்குநர்களிடம் இதுமாதிரி ஏதேனும் சிறுகதையை showreel எடுத்துக் காட்டுமாறு கேட்டுக் கொண்டது உண்டாம்.

கலைஞர் தொலைக்காட்சியில் ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சி நடந்து, அதன் மூலம் ஏராளமான இளைஞர்கள் திரைத்துறைக்கு அறிமுகமான காலக்கட்டத்தில் நான், மாலனின் ஆசிரியர் குழுவில் பணிபுரிந்தேன். இந்த இளைஞர்களை குறித்து மிக ஆர்வமாகப் பேசுவார். அவர்களை ஊக்குவிக்க வேண்டும், அவர்கள் மூலம் சினிமாவுக்கு புதுரத்தம் பாய்ச்சப்படலாம் என்கிற கோணத்தில் பேசியிருக்கிறார். எனினும், அவர் எடுத்த ஆரம்பகால குறும்பட முயற்சி பற்றி எங்களிடம்கூட ஏனோ சொன்னதே இல்லை.

28 மார்ச், 2017

ஏங்க...

“ஏங்க....”

அமானுஷ்யமான குரலைக் கேட்டு பதறிப்போய் சட்டென்று கழுத்தில் வெட்டிக் கொண்டேன். கொஞ்சம் ஆழமான வெட்டு. ரத்தம் கொப்பளித்தது.

“எத்தனை தடவை சொல்லியிருக்கேன்... ஷேவிங் பண்ணறப்ப பிசாசு மாதிரி கத்தாதேன்னு...” எரிந்து விழுந்தபடி வெட்டுப்பட்ட இடத்தில் ‘கலோன்’ தடவினேன். தீயாய் எரிந்தது. “சொல்லித் தொலை. எதுக்கு இப்படி ‘ஏங்க ஏங்க’ன்னு உயிரை எடுக்கறே?”

“உங்க பொண்ணு என்னா சொல்றான்னு கேளுங்கன்னு கூப்பிட்டா இப்படி பைத்தியக்காரன் மாதிரி கத்தறீங்களே?” பதிலுக்கு இளவரசியும் சீறினாள்.

நேரடியாக சொல்ல மாட்டாள். கூடவே ஒரு ‘மாதிரி’யையும் இணைப்பாள். சொன்ன மாதிரியும் ஆச்சு. சொல்லாத மாதிரியும் ஆச்சு.

அப்பாவும், அம்மாவும் மாறி மாறி கத்துவதைப் பார்த்து ஷாலு மிரண்டாள். ஆறு வயதுக் குழந்தையை அரண்டுப்போக வைப்பதில் விருப்பமில்லை.

“என்னடா செல்லம்?” புன்னகைக்க முயன்றேன்.

“போடா மொக்கை அப்பா...” முகத்தை சுளித்து அம்மாவுக்கு பின்னால் ஒளிந்தாள்.

“அப்படியே ஆத்தாளை உரிச்சி வெச்சிக்கா...’’ பாத்ரூம் கதவை அறைந்தேன்.

திருமணத்துக்கு முன்பு வரை, ‘எதற்கும் அஞ்சமாட்டேன்...’ என நெஞ்சை நிமிர்த்தியபடி நடமாடினேன். முதலிரவில் இளவரசியின் ஹஸ்கி வாய்ஸில் - குரல் என்னவோ ‘வெறும் காத்துதாங்க வருது...’ எஸ்.ஜானகி மாதிரி இனிமைதான்! - “ஏங்க...” ஒலித்தபோது முதுகை சில்லிட வைக்கும் திகில் உணர்வை முதன்முதலாக உணர்ந்தேன்.

அப்போது ஆரம்பித்தது இந்த அமானுஷ்யம். இதுவரை லட்சம் முறையாவது ‘ஏங்க...’ ஒலித்திருக்கும். ஒவ்வொரு முறையும் அதே சில்லிடல். அதே உடல் நடுக்கம்.

மனநல மருத்துவனான நண்பனிடம் இந்தப் பிரச்னையை ஒருமுறை மனசு விட்டுப் பேசினேன். “உனக்குமாடா..?’’ என்றான். வீட்டுக்கு வீடு வாசப்படி. பெட்ரூமுக்கு பெட்ரூம் மண்டகப்படி.

ஈர டவலுடன் வெளியே வந்தவன் டிரெஸ்ஸிங் டேபிளில் வாகாக நின்றபடி தலைவார ஆரம்பித்தேன்.

டைனிங் டேபிளில் இருந்து மீண்டும் ‘‘ஏங்க...’’

பதட்டத்தில் டவல் அவிழ... அவசரமாக பேண்டுக்குள் காலைவிட்டு ஜிப்பை இழுக்க... ம்ஹும். மக்கர் செய்தது. முழு வலுவை பிரயோகித்ததும் ஜிப்பின் முனை கையோடு வந்துவிட்டது.

ஷாலுவை ஸ்கூலில் விட்டுவிட்டு அலுவலகம் செல்ல வேண்டும். மணி 8.55. வேறு பேண்டை அயர்ன் செய்ய நேரமில்லை. கைக்கு மாட்டியதை பீரோவில் இருந்து எடுத்து மாட்டினேன். சட்டைக்கும் பேண்டுக்கும் சுத்தமாக மேட்ச் ஆகாமல் சூரிக்கு, சமந்தா ஜோடி மாதிரி இருந்தது. ‘இன்’ செய்ய முற்பட்டபோது மீண்டும் ‘ஏங்க...’.

பெருகிய வியர்வையுடன் ஹாலுக்கு வந்தேன். ‘‘கோயில் கட்டி கும்பிடறேன். பேரை சொல்லி கூப்பிடு. வேணும்னா ‘டா’ கூட போட்டுக்கோ. தயவுசெஞ்சு ‘ஏங்க’ மட்டும் வேணாம். முடியலை...”

டென்ஷன் புரியாமல் சில்லறையாய் சிரித்தாள். நொந்தபடி குழந்தையை அழைத்துக் கொண்டு கிளம்பினேன்.

நல்லவேளையாக ஸ்கூல் வாசலில் ஷாலு அழுது ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. சமத்துப் பெண்ணாக வகுப்பறை போகும் வரை ‘டாட்டா’ காட்டினாள்.

நிம்மதியுடன் வண்டியை ஸ்டார்ட் செய்தேன்.

“ஏங்க...”

திரும்பிப் பார்த்தேன். கிளாஸ் மிஸ்.

“ஷாலுவுக்கு வர வர ஹேண்ட்ரைட்டிங் சரியில்லை. வீட்டுல எழுதச் சொல்லிக் கொடுங்க. கிளாஸ்ல சரியா கவனிக்க மாட்டேங்கிறா...’’ blah.. blah… blah…

மண்டையை மண்டையை ஆட்டி சமாதானம் சொல்லிவிட்டு பறந்தேன். டீச்சரும் என்னை ‘ஏங்க’ என்றழைத்தது நினைவுக்கு வந்தது. அதென்னவோ தெரியவில்லை. மனைவியைத் தவிர வேறு யார் ‘ஏங்க’ என்றாலும் எரிச்சல் வருவதில்லை.

சைதாப்பேட்டையை எட்டும்போது மணி ஒன்பது நாற்பது. நந்தனம் சிக்னலில் நத்தையாய் நகர்ந்துக் கொண்டிருந்த டிராஃபிக்கில் ஆளாளுக்கு கத்திக் கொண்டிருந்தார்கள். தேவையில்லாமல் ஹாரன் அலறியது. கார் ஓட்டுபவனும், டூவீலரில் ஆரோகணித்திருப்பவனும் ஒருவருக்கொருவர் ‘பீப்’ மொழியை பரிமாறிக் கொண்டார்கள்.

சுற்றிலும் டி.பி.கஜேந்திரன் மாதிரி பிபி ஏற எகிறிக் கொண்டிருந்தவர்களை வேலை மெனக்கெட்டு சர்வே எடுத்துப் பார்த்ததில் ஓர் உண்மை புரிந்தது. எல்லாருமே க்ளீன் ஷேவ். பெரும்பாலானவங்களின் கன்னத்தில் லேசான கீறல். ‘ஏங்க...’ புயலின் பாதிப்பு!

வாய்விட்டு சிரித்துவிட்டேன். பக்கத்தில் நின்றிருந்த ஆட்டோ டிரைவர் சினேகமாய் புன்னகைத்தார். கள்ளமில்லா வெள்ளைச் சிரிப்பு. நிச்சயம் பேச்சிலர்தான். தாடி வைத்திருக்கிறாரே...

அலுவலகத்தை அடைந்தபோது மணி பத்தரை. மேனேஜர் ரூமுக்கு அட்டெண்டன்ஸ் சென்றிருக்கும். இன்னும் ஒரு வருஷத்தில் ரிடையர் ஆகப்போகிற அந்த கிழத்துக்கு என்னை மாதிரி ரெகுலர் லேட் எப்போதும் இளக்காரம்தான். கண்ணாடிக்கு வலிக்காத மாதிரி கதவை திறந்தேன்.

காபியை உறிந்துக் கொண்டே கிழம் மானிட்டரை பார்த்துக் கொண்டிருந்தது. ‘பிட்டு’ படமாக இருக்கலாம். முகம் அச்சு அசல் உர்ராங் உடான். சைலண்டாக கையெழுத்து போட்டுவிட்டு எஸ்கேப் ஆக முடியாது. பாம்பு காது. காச்மூச்சென்று கத்தும்.

கையை விறைப்பாக தூக்கி நெற்றியருகே கொண்டுவந்து “குட்மார்னிங் சார்...” என டெஸிபலை கூட்டினேன்.

அதிர்ந்துப் போய் காபியை தன் சட்டையில் கொட்டிக் கொண்டார். சுட்டிருக்கும் போல. விருட்டென்று எழுந்தார்.

‘‘கதவைத் தட்டிட்டு வரத் தெரியாதா? சரி வந்தது வந்த... கையெழுத்து போட்டுட்டு போக வேண்டியதுதானே? நீ குட்மார்னிங் சொல்லலைனா எனக்கு பேட் மார்னிங் ஆகிடுமா..?’’

காதுக்குள் ‘ங்கொய்’ என்றது. பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு ஏறிட்டேன். காதுக்கு கீழே கன்னத்தில் லேசாக ஒரு பிளேடு தீற்றல்! மேனேஜருக்கும் ‘ஏங்க...’ கைங்கரியம்.

கண்ணாடிக்கு வெளியிலும் அவரது அலறல் கேட்டிருக்க வேண்டும். வெளியே வந்தபோது அனைவரும் ஓரக் கண்ணால் பார்த்தார்கள். வாரத்துக்கு நான்கு நாட்களாவது நடப்பதுதானே?

டேபிளுக்கு போய் லன்ச் பேக்கை வைத்துவிட்டு ‘தம்’ அடிக்க கிளம்பினேன்.
மூணு இழுப்புதான் முடிந்திருக்கும். செல்போன் ஒலித்தது. இளவரசிதான்.

‘‘ஏங்க...’’

‘‘ம்...’’ பல்லைக் கடித்தேன்.

“சிலிண்டர் புக் பண்ணச் சொல்லி ஒருவாரமா கரடி மாதிரி கத்திகிட்டிருக்கேன். நீங்க காதுலயே வாங்கலை. இப்ப பாருங்க கேஸ் தீர்ந்துடுச்சுடிச்சு…”

உச்சந்தலைக்கு வேகமாக ரத்தம் பாய்ந்தது. ‘‘ஆபிஸ் நேரத்துல ஏன்டி இப்படி போன் செஞ்சு உசுரை வாங்கறே...”

போனை கட் செய்த வேகத்தில் அவள் ஆடிப்போயிருப்பாள் என்று எனக்கு நானே நினைத்துக் கொண்டேன். அல்ப சந்தோஷம்தான். ஆனால், அதுவும் நிலைக்கவில்லை. அன்று முழுக்கவே நிறைய தப்புகள் செய்தேன். மேனேஜர் நாள் முழுக்க திட்டிக்கொண்டே இருந்தார்.

மாலை வீட்டுக்கு புறப்படும் போது கூட மண்டை முழுக்க ‘ஏங்க...’வின் எக்கோ. இன்றைய பொழுதை நாசமாக்கியதே காலையில் ஒலித்த இந்த ‘ஏங்க...’தான். நினைக்க நினைக்க உச்சி முதல் உள்ளங்கால் வரை அனல் படர்ந்தது.

க்ரின் சிக்னல் விழுந்தது கூட தெரியவில்லை. பின்னாலிருந்த ஆட்டோக்காரர் கொலைவெறியோடு ஹாரன் அடித்த பிறகே சுயநினைவுக்கு வந்து ஆக்சிலேட்டரை முறுக்கினேன். ‘‘காதுலே என்ன ‘பீப்’பா வெச்சிருக்கே?” கடக்கும்போதும் ஆட்டோகாரர் தன் உறுமலை நிறுத்தவில்லை. ‘ஏங்க’வை விடவா வேறு கெட்ட வார்த்தை என்னை கோபப்படுத்திவிடப் போகிறது? இன்றோடு இதற்கு முற்றுப்புள்ளி வைத்தே ஆகவேண்டும்.

வீட்டுக்குள் நுழைந்தபோது ஷாலு டியூஷனில் இருந்து திரும்பியிருந்தாள். தணியாத கோபத்துடன் இளவரசி கொடுத்த காபியை பருகினேன். உதடு வெந்தது.

சனியன்... வேணும்னுதான் இப்படி சுடச் சுட கொடுக்கறா. உன்ன...
இப்போது வேண்டாம். ஷாலு மிரள்வாள்.

பெட்ரூமுக்கு சென்று கைலி மாற்றிக் கொண்டேன். வழக்கமாக சிறிது நேரம் டிவி பார்ப்பேன். இன்று அப்படி செய்யவில்லை. மாறாக புத்தகம் படிக்க ஆரம்பித்தேன்.

வழக்கத்துக்கு மாறான என் அமைதி இளவரசிக்கு திகிலை கிளப்பியிருக்க வேண்டும். அருகில் வந்து ஈஷினாள்.

‘‘ஏங்க...’’

உதட்டைக் கடித்தபடி கண்களை மூடினேன்.

‘‘சாப்பிட்டு படுங்க...”

புத்தகத்தை வீசிவிட்டு எழுந்தேன். மவுனமாக சாப்பிட்டேன். கிச்சனில் பாத்திரங்கள் உருண்டன. கோபத்தின் சதவிகிதம் நூறு கடந்து ஆயிரத்தை தொட்டது.

தொப் என்று படுக்கையில் விழுந்த ஷாலுவுக்கு மூன்று பெட் டைம் ஸ்டோரிஸ் சொன்னேன். அசந்து தூங்கிவிட்டாள்.

கதவை தாளிடும் ஓசையும், டிவியை ஆஃப் செய்யும் சப்தமும் கேட்டது. வரட்டும். இன்று முடிவு கட்டியே ஆக வேண்டும். கைகளை தேய்த்தபடி காத்திருந்தேன். வரவில்லை. கிச்சனை துப்புரவு செய்கிறாள் போல.

ஐந்து நிமிடங்களுக்கு பின் வந்தாள். என் பார்வையில் அவள் வாளிப்பு படும்படி சேலையிலிருந்து நைட்டிக்கு மாறினாள். கோபத்தின் அளவு குறையாமல் மனதை ஒருமுகப்படுத்த முயற்சித்தேன்.

நெருங்கினாள். மல்லிகை மணமும், இளவரசிக்கே உரிய பிரத்யேக வியர்வை நெடியும் என்னை சூழ்ந்தது. இரு கைகளால் என் முகத்தை ஏந்தினாள். காலையில் பிளேடு வெட்டு விழுந்த இடத்தில் பஞ்சு மாதிரியான தன் இதழை சில்லென்று வைத்தாள்.

“ஏங்க...’’

(நன்றி : குங்குமம்)

27 பிப்ரவரி, 2017

ஹானர்ஸ் செல்வகுமார்

 “நீங்க இந்த கல்லூரியில் படிக்க முடியாது” கல்லூரி முதல்வர் சொன்னதுமே கண்கள் இருண்டது செல்வகுமாருக்கு.

“ஏன்?”

“காரணத்தை தனியா சொல்லணுமா? உங்களுக்கே தெரியாதா?”

“பரவாயில்லை. சொல்லுங்க”

“இந்தப் படிப்பு மின்னியல்/மின்னணுவியல் சம்பந்தமானது. நிறைய லேப் ஒர்க் இருக்கும். நடக்க முடியாத உங்களால் ஏதாவது விபத்து நடந்தா பெரிய பாதிப்பு ஏற்படும்”

சிறுவயதில் இருந்தே கனவில் கட்டிய மண்கோட்டை கண் முன்பாக சிதறுவதை கண்டு மனசு உடைந்தார் செல்வா.

லால்குடி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் முதலாவதாக வந்த மாணவன். அன்றைய திமுக அரசு அறிமுகப்படுத்தி இருந்த ஒற்றைச்சாளர முறையில் மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் அவருக்கு இடம் கிடைத்திருந்தது. கல்லூரியில் சேருவதற்காக போனபோதுதான் இந்த இடி.

இராமச்சந்திரன் - ஜோதி தம்பதியினரின் மூத்த மகன். செல்ல மகனுக்கு செல்வகுமார் என்று பெயரிட்டு மகிழ்ந்தார்கள். அவர்களது மகிழ்ச்சி நெடுநாள் நீடிக்கவில்லை. போலியோ பாதிப்பு காரணமாக செல்வாவின் இரு கால்களும் பாதிப்படைந்தது. திருச்சி ஆர்.சி. மேனிலைப் பள்ளியில் சேர்ந்தபோது அவரின் படிப்பு சுமார்தான். அப்பள்ளி தாளாளராக இருந்த தாமஸ் அடிகளார், செல்வாவை பார்த்து கனிவுடன் சொல்கிறார்.

“மை சன்! நீ மத்தவங்களை மாதிரி கிடையாதுன்னு உனக்கே தெரியும். நீ கடவுளோட ஸ்பெஷல் சைல்ட். நடக்க முடியலைன்னு நீ என்னிக்குமே வருத்தப்படக் கூடாது. உன் சொந்தக் காலில் உன்னால் நிற்க முடியும். கல்வி மட்டுமே உன்னை கரைசேர்க்கும். அது மட்டுமே உன்னை உயர்த்தும். இதை நீ எந்தக் காலத்திலும் மறந்துடக் கூடாது”

விளையாட்டுப் புத்தியை அன்றோடு ஏறக்கட்டினார் செல்வா. எப்போதும் புத்தகமும் கையுமாகவே இருந்தார். தந்தைக்கு இடமாற்றல் ஏற்பட்டதால் பன்னிரெண்டாம் வகுப்பை லால்குடி அரசினர் மேனிலைப் பள்ளியில் படித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் முத்துகிருஷ்ணனின் ஊக்குவிப்பால், +2 தேர்வில் பள்ளியிலேயே முதல் மாணவராக தேர்வானார்.

அவருக்குதான் என்ஜினியரிங் அட்மிஷன் கொடுக்க மறுத்தார் மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரி முதல்வர். தகுதி இழப்பாக, செல்வாவின் கால்கள் காட்டப்பட்டது. சோகத்தில் ஆழ்ந்த பெற்றோரை செல்வாதான் தேற்றினார். ‘அண்ணா பல்கலைக் கழகம் கொடுத்த அட்மிஷனை கல்லூரி முதல்வர் எப்படி மறுக்க முடியும்?’ மீண்டும் தந்தையோடு சென்னைக்கு படையெடுத்தார். போராடி தன்னுடைய உரிமை பெற்றார். எந்த கல்லூரி அவரை சேர்த்துக் கொள்ள முடியாது என்று மறுத்ததோ, அதே கல்லூரியில் அதே துறையில் கம்பீரமாக நுழைந்தார்.

“எல்லா கல்லூரி முதல்வர்களுமே அப்படிதான் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. மாற்றுத் திறனாளிகளை கல்விதான் கரை சேர்க்கும். அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர்களும் உண்டு. அடுத்து கல்லூரி முதல்வராக வந்த அபய்குமார், என்னை அணைத்து ஆறுதல் படுத்தினார். கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத் தலைவரான ராம்கோபால் அவர்களின் வழிகாட்டுதலையும் மறக்க முடியாது. கல்வி தவிர்த்து மற்ற செயல்பாடுகளிலும் என்னை அவர் ஈடுபடுத்தினார். கல்லூரி இறுதியாண்டில் நான் என்.எஸ்.எஸ். தலைவராகி, ஆண்டு விழாவில் சிறந்த மாணவர்களில் ஒருவனாக டிவிஎஸ் நிறுவனம் வழங்கிய பதக்கத்தை பெற்றேன்” என்று கல்லூரி நினைவுகளில் மூழ்குகிறார் செல்வகுமார்.

‘படிப்பு முடியப் போகிறது, அடுத்தது என்ன?’ என்கிற கேள்வி, செல்வாவின் முன்பாக பூதாகரமாக நின்றது. என்ஜினியரிங் படிக்கும் மாணவர்களுக்கு இன்றும் பீதியை ஏற்படுத்தும் வார்த்தை, ‘Next?' என்பதே. உடன் படிக்கும் மாணவர்களில் தொடங்கி, பெற்றோர், உறவினர், சுற்றம், நட்பு அனைவருமே கேட்கும் கேள்வி இதுதானே?

இறுதியாண்டு மாணவராக இருந்த செல்வா, சென்னையில் இருந்த லேசர் சாஃப்ட் நிறுவனர் சுரேஷ்காமத்துக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புகிறார். “ஐயா, என்னால் நடக்க முடியாது. என்னுடைய கால்களுக்குதான் அந்த வலிமை கிடையாதே தவிர, மனசுக்கு மற்றவர்களைவிட கூடுதல் வலிமை உண்டு. நீங்கள் எதிர்ப்பார்ப்பதையும் விட சிறப்பாக பணியாற்ற முடியும். உங்கள் நிறுவனம் எனக்கு வேலை கொடுக்குமா?”

என்ஜினியரிங் இறுதியாண்டு படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவனின் இந்த மின்னஞ்சல் சுரேஷ்காமத்தை உலுக்கியது. “உடனே சென்னைக்கு வா” என்று பதில் கொடுத்தார். நேர்முகத் தேர்வில் பங்கேற்று செல்வா தேர்வானார். படிப்பை முடித்ததுமே வந்து வேலையில் சேர்ந்துக் கொள்ளலாம் என்று நிறுவனம் அவருக்கு சலுகை வழங்கியது. தகவல் தொழில்நுட்பத் துறையில் பணி. நல்ல சம்பளம். லைஃபில் செட் ஆகிவிட்டோம் என்கிற திருப்தி மட்டும் செல்வாவுக்கு கிடைக்கவே இல்லை.

கோபால் புரோகிராமிங்கில் தன்னுடைய திறனை நன்கு வளர்த்துக் கொண்டார். ஐரோப்பிய ஒன்றியம், இந்திய அரசோடு இணைந்து நடத்திய தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கம் ஒன்றில் கலந்துக் கொள்வதற்கான வாய்ப்பு அவருக்கு அமைந்தது. அந்த கருத்தரங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் எத்தகைய பணிவாய்ப்புகள் உண்டு என்பதை பற்றி அவர் ஆற்றிய உரை குறிப்பிடத்தக்கது. தொழில்நுட்ப மேற்கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றியும் அவர் எடுத்துரைத்தது கருத்தரங்கில் பங்கு பெற்றவர்களை கவர்ந்தது.

அந்த கருத்தரங்கம் செல்வாவின் வாழ்வில் மிகப்பெரிய திறப்பு. அதன் பிறகு தனக்கு வேலை கொடுத்த லேசர் சாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் சுரேஷ்காமத்தை பொறுப்பாளராக்கி மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மையத்தை தொடங்கினார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் நாற்பது மாற்றுத் திறனாளிகள் இந்த மையத்தால் உந்துதல் பெற்றார்கள். அவர்கள் அனைவருக்கும் லேசர் சாஃப்ட் நிறுவனமே வேலையும் வழங்கியது.

“எங்கள் சிறப்பு மையத்தில் பயிற்சி பெற்ற ஓர் இளைஞன், ‘மஸ்குலர் அட்ரோபி’ என்கிற அரியநோயால் பாதிக்கப்பட்டவன். அவனால் பணி செய்ய முடியாது என்று நிறுவனத்தின் இரண்டாம் கட்ட அதிகாரிகள் பணி நியமனம் கொடுக்க மறுத்தார்கள். என் இயல்பான போராட்டக் குணத்தின் காரணமாக போராடத் தொடங்கினேன். கடைசியாக சுரேஷ்காமத்திடம் எனக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி, அந்த இளைஞனை பணியில் சேர்த்தேன். என்னுடைய வாழ்விலேயே எனக்கு பெரிய நிறைவு கொடுத்த சம்பவம் அது” என்கிறார் செல்வா.

அப்போது தமிழில் blogs எனப்படும் வலைப்பூக்கள் பிரபலமாகத் தொடங்கிய நேரம். செல்வாவுக்கு இயல்பாகவே சமூகநீதிக் கொள்கைகளின் மீதும், தமிழ் மொழியின் மீதும் இருந்த பிடிப்பின் காரணமாக அவரும் வலைப்பூக்களில் எழுத ஆரம்பித்தார். அப்போது அவருக்கு அறிமுகமான ‘விக்கிப்பீடியா’ ரவிசங்கர் மூலமாக, சுவீடனில் இலவச மேற்படிப்பு வாய்ப்புகள் குறித்த தகவல்கள் கிடைக்கின்றன. நிறுவனர் சுரேஷ்காமத்திடம் தான் சுவீடனில் படிக்க ஆசைப்படுவதை சொன்னார். அவர் பச்சைக்கொடி காட்ட, தேசிய வங்கி ஒன்றில் கல்விக்கடன் பெற்று சுவீடனுக்கு செல்கிறார். தன்னை போலவே பல தமிழக மாணவர்களும், இந்த இலவச மேற்படிப்பு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற நோக்கில் இணையத் தளங்களிலும், வாரப் பத்திரிகைகளிலும் ‘எப்படி சுவீடனில் மேற்படிப்புகளை படிக்க இயலும்?’ என்று கட்டுரைகள் எழுதுகிறார். இவற்றை வாசித்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் செல்வாவை தொடர்பு கொண்டு சுவீடனுக்கு சென்றார்கள். அங்கு கல்வி கற்று நல்ல நிலையில் இருக்கும் பலர் இன்றும் செல்வாவோடு நல்ல நட்பில் இருக்கிறார்கள்.

சாஃப்ட்வேர் என்ஜினியரிங்கில் முதுகலை பட்டத்தை அங்கே பெற்றார். அவருக்கு இப்போது இரண்டு வாய்ப்புகள், வாசல் கதவை தட்டுகிறது. ஒன்று, இத்தாலியில் தகவல் பாதுகாப்பு மற்றும் அகவுரிமைத் துறையில் ஆராய்ச்சி படிப்பிற்கான இடம். அடுத்தது, அவர் வாழ்வில் கற்பனை கூட செய்துப் பார்த்திரான சம்பளத்தோடு மலேசியப் பல்கலைக்கழகம் ஒன்றில் விரிவுரையாளர் பணி. என்ன செய்வது என்று மூளையை கசக்கிக் கொண்டவருக்கு தாமஸ் அடிகளார் சொன்ன அறிவுரை நினைவுக்கு வந்தது. “கல்வி மட்டுமே உன்னை கரைசேர்க்கும். அது மட்டுமே உன்னை உயர்த்தும்”

இத்தாலியில் படிப்புக்கு உதவித்தொகை கிடையாது. இருந்தாலும் பல லட்ச ரூபாய் சம்பளப் பணி வாய்ப்பை உதறிவிட்டு ஆராய்ச்சிப் படிப்புக்காக இத்தாலிக்குச் சென்றார். அங்கே ஆய்வகப் பேராசிரியர்களின் உதவியால், ஆய்வகத்தில் பகுதிநேரப் பணி செய்து சொற்ப வருமானம் கிடைத்தது. அதைவைத்து சமாளித்துக் கொண்டார்.

ஆய்வில் சிறப்பாக கவனம் செலுத்திய அவருக்கு உடனுக்குடன் பலன் கிடைத்தது. முதல் ஆண்டிலேயே முதலீடு செய்யும் திட்டம் ஒன்றில் இடமும், ஆய்வகத்தின் ஆராய்ச்சித்தாளில் செல்வாவின் பெயரும் இடம்பெற்றது. ஐரோப்பாவில் கணினித்துறையில் சாதிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான கூகுள் ஸ்காலர் விருதும் அவருக்கு கிடைக்கிறது. கூகிளின் ஐரோப்பிய தலைமையகம் அமைந்திருக்கும் ஜூரிச் நகரில் நடந்த ஒருவார பயிற்சியரங்கில் கலந்துக் கொண்டார். ஏழாயிரம் ஈரோக்கள் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் ரூபாய்) அவருக்கு சன்மானமாகவும் கொடுத்தார்கள்.
கல்வியில் ஒரு புறம் உயர்ந்துக்கொண்டே சென்றுக் கொண்டிருந்த நிலையில், வாழ்க்கையிலும் ஏற்றம் கண்டார் செல்வா. இவரது கட்டுரைகளை இணையத்தில் வாசித்து வாசகியாக அறிமுகமானவர் விஜயலட்சுமி சுப்பிரமணியன். செல்வாவுக்கு எப்போதும் விஜயலட்சுமியின் வார்த்தைகள் ஊக்கம் கொடுத்துக்கொண்டே இருக்கும். இருவருக்கும் மனம் ஒத்துப்போக இங்கிலாந்தில் திருமணம் நடந்தது. இவர்களது காதலுக்கு பரிசாக இப்போது ஒன்றரை வயதில் கார்த்திக் என்கிற மகன், மழலை பேசிக்கொண்டிருக்கிறான்.

இந்த ஆண்டு தொடக்கம் செல்வாவுக்கு அமோகமாக அமைந்திருக்கிறது. பல்கலைக்கழகத் தேர்வுக் குழுவால், அவரது ஆராய்ச்சி ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது. Kerckhoffs Ltd என்கிற தகவல் பாதுகாப்பு மற்றும் அகவுரிமை நிறுவனத்தை இங்கிலாந்தில் தொடங்கியிருக்கிறார். தொழில்நுட்ப சிறுநிறுவனங்களை ஊக்குவிக்கும் பிரிட்டிஷ் அரசக் குடும்பத்தினர் முதலீடு செய்யும் அறக்கட்டளையில் இவரது தொழில்நுட்ப முன்மாதிரியை சமர்ப்பிக்கக்கூடிய அரிய வாய்ப்பும் அவருக்கு கிடைத்திருக்கிறது.

ஐந்தாண்டு ஆராய்ச்சிகளுக்கு முனைவர் பட்டத்தை டென்ஷனோடு எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தவருக்கு இன்ப அதிர்ச்சியை பல்கலைக்கழக தேர்வுக்குழு வழங்கியிருக்கிறது. யெஸ். டாக்டரேட் பட்டத்தோடு சேர்த்து ‘ஹானர்ஸ்’ பட்டமும் வழங்கி கவுரவித்திருக்கிறார்கள். தன்னுடைய ஆராய்ச்சி நூலில் இந்தியாவில் சமூகநீதி காத்த தலைவர்களான பெரியார், அண்ணா, கலைஞர், வி.பி.சிங் ஆகியோருக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

“தமிழகத்தில் என்ஜினியரிங் கல்வியையே போராடி பெற முடிந்த நிலையில் இருந்த நான், இன்று ஐரோப்பாவில் ஹானர்ஸ் பட்டம் பெறுமளவுக்கு வளர்ந்திருப்பதற்கு அங்கே சமூகநீதி சிந்தனைகள் தோற்றுவித்து, செயல்பாட்டுக்கு கொண்டுவர பெரும் முயற்சி செய்த தலைவர்களே காரணம். எனவேதான் என்னுடைய நூலில் அவர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தேன்” என்று சொல்கிறார் செல்வா.

பொதுவாக மாற்றுத் திறனாளிகள் தங்கள் மீது யாரேனும் அனுதாபம் செலுத்தினால் அதை விரும்ப மாட்டார்கள். ஆனால், அதைப்பற்றி செல்வா அலட்டிக் கொள்வதில்லை.

“அனுதாபம் என்பதும் ஒருவகை அன்புதான். அதை மறுக்கக்கூடாது. நாம் மற்றவர்களிடமிருந்து கொஞ்சம் மாறுபட்டிருக்கிறோம் என்று அவர்கள் நம் மீது அன்பு செலுத்துகிறார்கள். திருப்பரங்குன்றம் கோயில் படிகளில் நான் தவழ்ந்து ஏறும்போது சில வடநாட்டு யாத்ரீகர்கள் காசு கொடுப்பார்கள். கவுரவம் பார்க்காமல் அதை வாங்கிக் கொள்வேன். மகிழ்ச்சியோடு போவார்கள். அந்த காசை கொண்டுபோய் கோயில் உண்டியில் போடுவேன். ‘பிச்சைக்காரன்னு நெனைச்சியா?’ என்று அவர்களிடம் நான் கோபத்தை காட்டியிருந்தால், அவர்களது அன்பை மறுக்கக்கூடியவனாக ஆகியிருப்பேன். ஏ.ஆர்.ரகுமான், ஆஸ்கர் விருது வாங்கும் மேடையில் சொன்னாரே, ‘அன்பு வழி என் வழி’ என்று. என்னுடைய வழியும் அதுதான். அன்பு வழியை தேர்ந்தெடுப்பவர்களுக்கு தோல்வியே இல்லை” என்று உணர்ச்சிப் பூர்வமாக பேசுகிறார்.

“ஓக்கே செல்வா. நெக்ஸ்ட்?”

“இப்போதெல்லாம் ‘நெக்ஸ்ட்?’ என்கிற கேள்வி என்னை பயமுறுத்துவதில்லை. மாறாக, அடுத்தடுத்து இந்த கேள்வி கேட்கப்பட்டால்தான் அடுத்தடுத்து ஏதாவது செய்துக்கொண்டே இருக்க முடியுமென்று நினைக்கிறேன். என்னுடைய நிறுவனம் சம்பாதிக்கக்கூடிய லாபத்தில் ஒரு பகுதியை, என்னை வளர்த்த சமூகத்துக்கு செலவழிக்க வேண்டுமென்று திட்டமிட்டிருக்கிறேன். தமிழகத்தில் பொறியியல் கல்லூரி ஒன்றில் தகவல் பாதுகாப்பு மற்றும் அகவுரிமை ஆய்வகத்தை அமைத்து, நம் மாணவர்களுக்கு மேம்பட்ட சிறப்பு வாய்ப்புகளை வழங்கும் திட்டமிருக்கிறது” என்கிறார் ஹானர்ஸ் செல்வகுமார்.

(நன்றி : தினகரன் வசந்தம்)