4 ஜூலை, 2017

MCR / MCP chappals

சில மாதங்களுக்கு முன்பாக மிகக்கடுமையான முதுகுவலியில் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன். குறிப்பாக இருசக்கர வாகனம் ஓட்டும்போது நடுமுதுகில் நெருப்பை எடுத்துக் கொட்டியது மாதிரி எரியும். இரவில் வீட்டுக்குச் சென்ற பிறகும் இந்த எரிச்சல் குறையாது. தூக்கம் வராது.

தெரிந்த சில மருத்துவர்களிடம் கேட்டபோது அலுவலக இருக்கையை மாற்றிப்பார் என்றார்கள். முயற்சித்தேன். சில நாட்களுக்கு சரியான மாதிரி இருந்தது. மீண்டும் எரிச்சல் தொடங்கும்.

அப்போதுதான் MCR chappals பற்றி சில நண்பர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். மயிலாப்பூரில் National Leather Works என்கிற நூற்றாண்டு காணப்போகும் செருப்புக்கடை ஒன்று இருக்கிறது. புரட்சித்தலைவி அம்மாவுக்கே இவர்கள்தான் செருப்பு செய்துக் கொடுத்தவர்கள் (சொத்துக் குவிப்பு வழக்கில் இவர்களுடைய சாட்சியமும் உண்டு). சிவராமன் அண்ணன் அந்தக் கடைக்கு அழைத்துச் சென்று ஒரு ஜோடி செருப்பு வாங்கிக் கொடுத்தார்.

கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக அந்த செருப்பைதான் வாரத்துக்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் பயன்படுத்துகிறேன். முதுகு எரிச்சல் கொஞ்சமும் இல்லை.

ஒரிரு தலைமுறைக்கு முன்பு செருப்பு என்பது ஆடம்பரமாக இருந்திருக்கிறது. மனிதர்கள் பெரும்பாலும் செருப்பை பயன்படுத்தாமலேயே நடந்திருக்கிறார்கள். கடந்த நாற்பது ஆண்டுகளாக செருப்பு என்பது உடையை போலவே அத்தியாவசியமான அணிகலனாக ஆகிவிட்டது. செருப்பு அணிந்து நடக்கும்போது நம்முடைய இயல்பான நடை மாறுவதால், நரம்புகளில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டு இடுப்பு, முதுகுவலிகள் ஏற்பட காரணமாகின்றன. மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் தற்காலிக நிவாரணம் தருகின்றனவே தவிர, பிரச்சினையை முற்றிலுமாக தீர்ப்பதில்லை. எனவே ஆர்த்தோ மருத்துவர்களே MCR/MCP செருப்புகளை சமீபகாலமாக தங்கள் பேஷண்டுகளுக்கு பரிந்துரைத்து வருகிறார்கள்.

Multicellular rubber (MCR), Multicellular polyurethane (MCP) செருப்புகள் சிறப்பு ரப்பர் மூலப்பொருட்களால் உருவாக்கப்படுபவை. இவற்றை அணிந்து நடக்கும்போது நம்முடைய இயல்பான நடையில் எந்த மாற்றமும் இருப்பதில்லை. நரம்பியல்ரீதியான பிரச்சினையும் ஏற்படுவதில்லை. என் அம்மாகூட மூட்டுவலி பிரச்சினை கொண்டவர். அவரும் MCP செருப்புகளைதான் பயன்படுத்துகிறார்.

விலை கொஞ்சம் கூடுதல்தான். நான் பயன்படுத்தும் அடிப்படை மாடல் செருப்பே 500 ரூபாயில்தான் தொடங்குகிறது. ஏற்கனவே தயார் செய்திருக்கும் செருப்பை நேஷனல் லெதர் நிறுவனத்தார் விற்பதில்லை. நம் கால் அளவுக்கு ஏற்ப, புதுசாக தயார் செய்து கொடுக்கிறார்கள். MCR / MCP முறையில் ஷூ வேண்டுமென்றால், அதையும் செய்துக் கொடுக்கிறார்கள் (விலை ரூ.1500 வரலாம்)

தலித்துகளுக்கு திமுக என்ன செய்தது?

திமுக தலித்துகளுக்கு என்ன செய்தது என்று முன்பு பார்ப்பனர்கள் வாயால் ஏரோப்ளேன் ஓட்டிக் கொண்டிருந்தார்கள். பார்ப்பனர்கள் சொன்னால் பரமனே சொன்னமாதிரி என்று நம்பும் தலித்துகளும் இப்போது ஹெலிகாஃப்டர் ஓட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தியாவிலேயே திமுக அரசு அளவுக்கு தலித்துகளுக்கு நலத்திட்டங்களை சிந்தித்து செயல்படுத்தியவர்கள் வேறெங்கும் இல்லை.

சில உதாரணங்கள் :

- நாட்டிலேயே ஆதிதிராவிடருக்கு என்று தனியாக நலத்துறை அமைத்து அதற்கு பிரத்யேகமாக அமைச்சரை நியமித்தது திமுகவே.

- கலப்பு மணத்தை சட்டரீதியாக அங்கீகரித்ததோடு மட்டுமின்றி, கலப்புமணம் செய்துக் கொள்வோர்களுக்கு பரிசுகள், தொழிற்கடன் போன்றவற்றை வழங்கும் திட்டங்களை தொடங்கியதே திமுக அரசுதான்.

- ஆதிதிராவிடருக்கு என்று தனியே வீட்டு வசதிக்கழகம் உருவாக்கியது திமுக ஆட்சி. இந்த திட்டத்தால் கவரப்பட்ட மத்திய அரசு, அதை நாடெங்கும் விரிவுப்படுத்தி ‘இந்திரா வீட்டுவசதித் திட்டம்’ என்று கொண்டுச் சென்றது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்காலங்களில் மட்டுமே ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட கான்க்ரீட் இல்லங்கள் இந்த திட்டத்தின் மூலம் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 16% ஆக இருந்த இடஒதுக்கீடை 18% ஆக உயர்த்தியது திமுக அரசே. 1989ல் ஆட்சிக்கு வந்தவுடன் பொதுப்பிரிவில் இருந்து 1%ஐ எடுத்து பழங்குடியினருக்கு தனிஒதுக்கீடு கொடுத்து, ஆதிதிராவிடருக்கே ஒட்டுமொத்த 18% இடஒதுக்கீடும் கிடைக்க வழிசெய்தது. பிற்பாடு அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு செய்ததும் திமுக அரசே.

- மதம் மாறிய ஆதிதிராவிட கிறிஸ்தவர்களின் முதல் தலைமுறைக்கு மட்டும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இடஒதுக்கீடு என்றிருந்த நிலைமையை மாற்றி, எல்லா தலைமுறையினருக்கும் இடஒதுக்கீடு என்கிற ஆணையை பிறப்பித்தது திமுக அரசாங்கம்.

- அரசுப் பதவிகளில் ஆதிதிராவிடர்/பழங்குடியினருக்கான பதவிகள் நிரப்பப்படாத நிலை இருந்தால், அந்த காலியிடங்களையே இடஒதுக்கீட்டில் இருந்து எடுத்துவிடும் நிலை இருந்தது. ஓர் அரசாணையின் மூலம் அந்த போக்கினை மாற்றி ஏராளமான SC/ST இளைஞர்கள் அரசுப்பணிகளில் சேர காரணமாக இருந்தது திமுக அரசே.

- திமுகவின் கனவுத்திட்டமான பெரியார் நினைவு சமத்துவபுரங்களில் ஆதிதிராவிடர்களுக்கு 40% வீடுகள் இடஒதுக்கீடு செய்யப்பட்டன.

- 96ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றவுடன் சுமார் 3 லட்சம் ஆதிதிராவிடர்களுக்கு வீட்டுமனை வழங்கப்பட்டது.

- ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் தனிப்பள்ளிகள், கணினிக் கல்வி கற்க ஆய்வகங்கள், மாணவ/மாணவியர் விடுதிகள், உணவுச்சலுகை என்று கல்விரீதியாக தலித் மக்களை முன்னேறச் செய்த திட்டங்கள் அனைத்தும் திமுக ஆட்சியின் சிந்தனைகளே.

- சென்னை வியாசர்பாடியில் அண்ணல் அம்பேத்கர் பெயரில் கலைக்கல்லூரி, அம்பேத்கரின் நூற்றாண்டையொட்டி சென்னை சட்டக்கல்லூரிக்கு அம்பேத்கர் பெயர், அம்பேத்கரின் பெயரில் இந்தியாவின் முதல் சட்டப்பல்கலைக்கழகம், கக்கனுக்கு மதுரையில் சிலை நினைவு மண்டபம், வீரன் சுந்தரலிங்கம் பெயரில் பாஞ்சாலங்குறிச்சி அருகே நகரம் என்று தலித் தலைவர்களின் நினைவைப் போற்றும் ஏராளமான செயல்பாடுகளை திமுக ஆட்சி அமைத்தபோதெல்லாம் நிகழ்த்திக் காட்டியிருக்கிறது.

திமுகவின் சாதனைத் துளிகளில் இவை குறைவே. கடலளவு திட்டங்களும், செயல்பாடுகளும் இன்னும் உண்டு. அவற்றையெல்லாம் எடுத்துச் சொல்ல தனிநூல் தான் எழுத வேண்டும்.

தலித்துகளின் காவலன் திமுகவே. அந்த சமுதாயத்தை சேர்ந்த மக்கள் கல்வி கற்க வேண்டும், நல்ல பணிகளில் சேரவேண்டும் என்கிற அக்கறை கொண்ட ஒரே இயக்கம் தமிழகத்தில் திமுக மட்டும்தான். மற்ற கட்சிகளை போல அவர்களை வெறும் ஓட்டு வங்கியாகவும், கூட்டம் சேர்க்கவும் பயன்படுத்தும் இயக்கம் திமுகவல்ல.

திமுகவை தலித் விரோதி என்று நிறுவ முற்படுபவர்கள், இவ்வளவு திட்டங்களை தலித்துகளுக்காக முன்னெடுத்த அரசு ஏதேனும் இந்தியாவில் உண்டா என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கவும்.

பொய், புளுகு, பித்தலாட்டங்கள் மலிந்திருக்கும் சூழலில் நிஜமான அக்கறையின் பேரில் திமுக செய்த இதையெல்லாம் சொல்லிக் காட்டி புரியவைக்க வேண்டியிருக்கிறதே என்பதை நினைத்தாலே வேதனையாக இருக்கிறது  

குழப்பத்துக்கு பிறந்தவனுங்க!

நான் சைக்கிள் கத்துக்க ஆரம்பிச்சப்போ கடையிலே பத்தாம் நம்பர் சைக்கிள் இல்லைன்னா, ஆணியே புடுங்க வேணாம்னு போயிடுவேன். கடைக்காரர், ‘டேய், ஏழாம் நம்பர் எடுத்துட்டு போடா’ன்னு சொல்லுவாரு. பசங்க யாருமே ஏழாம் நம்பரை தொடமாட்டோம். பார் இல்லாத சைக்கிளை ஓட்டிக்கிட்டு போனா, ஆண்மைக்கு இழுக்குன்னு அப்படியொரு மூடநம்பிக்கை அப்போ.

இப்போ ஒரு இருபத்தஞ்சி வருஷம் கழிச்சிப் பார்த்தா எந்த சைக்கிளிலும் பாரே இல்லை. கேட்டா unisex சைக்கிள்னு சொல்றானுங்க. சைக்கிள் ரேட்டும் பன்னெண்டாயிரம், பதினஞ்சாயிரமாம். வாடகை சைக்கிள் கடையே எங்கேயும் இருக்குறதா தெரியலை. சைக்கிள் ஓட்ட கத்துக்கணும்னா சொந்தமாதான் சைக்கிள் வாங்கணும். அதுவுமில்லாமே இப்போ யாரு சைக்கிள் கத்துக்கறாங்க, டைரக்டா பைக்குதான். முன்னாடி டைப்ரைட்டிங் இன்ஸ்ட்யூட்டுக்கு போய் ஜூனியர், சீனியர், ஹைஸ்பீடுன்னு எக்ஸாமெல்லாம் எழுதி கவர்மெண்ட் சர்ட்டிஃபிகேட் வாங்குவோம். இப்போ டைரக்டா எல்லாரும் கம்ப்யூட்டரில் டைப் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.

93-94 வாக்கில் காட் ஒப்பந்த எழவுலே கையெழுத்து போட்டாலும் போட்டானுங்க. நாட்டுலே என்ன எழவு நடக்குதுன்னே தெரியலை. unisexஆதான் எல்லா பிராக்டக்ட்டை கன்ஸ்யூமரிசேஸன் செய்ய வேண்டியிருக்குன்னு சொல்லுறாங்க. “மேல்நாட்டுலே இன்னும் barbie பொம்மை சேல்ஸ் அப்படியேதானேடா இருக்கு? இங்கே மட்டும் ஏன் மரப்பாச்சி பொம்மையை காணோம்?”னு கேட்டா எம்.பி.ஏ. படிச்சவனுங்களுக்கே ஆன்ஸர் தெரியலை.

திடீர்னு பார்த்தா லேடீஸெல்லாம் ஜெண்ட்ஸ் மாதிரி கிராப் வெட்டிக்கிறதை இங்கே சமூகக் கடமையாக பெண்ணியப் போராட்ட வடிவத்துலே நடத்துறாங்க. இன்னும் ஹாலிவுட் ஹீரோயின்களே கூட நீளமா லூஸ் ஹேர் விட்டுக்கிறதை அப்பப்போ சினிமாவிலே எல்லாம் பார்க்குறோம். நம்மூருலே என்னதான் நடக்குதுன்னு புரியலை. தமிழனின் பாரம்பரியத்தை காப்பாத்தணும்னு ஜல்லிக்கட்டுலே கோஷம் போட்டுக்கிட்டிருந்த பொண்ணு, இப்போ பிக்பாஸ் புரோகிராம்லே இளம் நடிகன் ஒருத்தனுக்கு ரூட்டு விட்டிக்கிட்டிருக்கு.

நம்மாலே முழுமையா மேற்கத்திய நாகரிகத்துக்கும் adopt ஆகமுடியலை. இங்கே establish ஆன பண்பாட்டையும் கத்தரிச்சிக்கிட்டு போக முடியலை. பீட்ஸா வடிவத்துலே களி கிண்டிக்கிட்டிருக்கோம்.

முன்னெப்போதையும்விட கடுமையான குழப்பத்தில் வாழ்ந்துக்கிட்டிருக்கிறது நம்ம தலைமுறைதான்னு நெனைக்கிறேன். அரசாங்கம் நிறைய மனநோய் விடுதிகளை திறக்கணும். அதுக்கான தேவை அதிகரிச்சிக்கிட்டே போகுது :(

சினிமா வீரன்

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய ‘சினிமா வீரன்’ பார்த்தேன். நீங்கள் சினிமா ரசிகராக (குறிப்பாக ஆக்‌ஷன் ரசிகராக) இருக்கும் பட்சத்தில், இந்த ஆவணப்படத்தின் எண்ட்கார்ட் போடப்படும்போது இருதுளி கண்ணீரையாவது சிந்துவீர்கள்.

இந்தப் படத்தில் ஃபெப்சி விஜயன் சொல்கிறார்.

“எங்க ஸ்டண்ட் யூனியன் சுவத்துலே வால்பேப்பர் ஒட்டுறதுக்கு தேவையே ஏற்படலை. ஏன்னா, சினிமாவில் ஸ்டண்ட் பண்ணுறப்போ செத்துப்போனவங்க படங்களை மாட்டியே சுவரெல்லாம் நிறைஞ்சிடிச்சி”

ஜூடோ ரத்தினம், ஃபெப்சி விஜயன், பீட்டர் ஹெய்ன், ஸ்டண்ட் சில்வா ஆகிய மாஸ்டர்களும் ஏராளமான ஃபைட்டர்களும் சொல்லும் அனுபவங்கள் நம் முதுகெலும்பையே முறிக்கக்கூடிய அளவுக்கு த்ரில்லானவை. குறிப்பாக ‘முதல்வன்’ படத்தில் அர்ஜூனாக பீட்டர் ஹெய்ன் தன் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு எரிந்தது, ‘அந்நியன்’ விக்ரமாக ஸ்டண்ட் சில்வா நந்தனம் டெம்பிள் டவர்ஸ் பில்டிங்கில் இருந்து தாவித்தாவி உயிரைப் பணயம் வைத்தது, ‘முரட்டுக்காளை’ இறுதிக்காட்சிக்கு ஜூடோரத்தினம் அமைத்த ரிஸ்க்கான ரயில் சண்டைக்காட்சி என்று ஏகத்துக்கும் மயிர்க்கூச்செறிய வைக்கும் அனுபவங்கள்.

வீரமும், காதலும், கண்ணீரும்தான் ஸ்டண்ட் நடிகர்களின் சொத்து. இந்த ஆவணப் படத்தில் ஸ்டண்ட் கலைஞர்கள் குறித்து அவர்களது குடும்பத்தாரின் பார்வையும் இடம்பெற்றிருப்பது சிறப்பானது. எந்த ஸ்டண்ட் கலைஞருக்குமே அரேஞ்ச்ட் மேரேஜ் அமைவதில்லை. யாராவது காதலித்தால் மட்டுமே கல்யாணவரம் கிடைக்குமாம்.

புலிகேசி புருஷோத்தம்மன் என்கிற ஸ்டண்ட் கலைஞர். ஷூட்டிங்கின்போது இவரை புலி மார்பில் அறைந்துவிடுகிறது. பத்து நாள் ஜி.எச்.சில் கவலைக்கிடமாக இருந்து மறைகிறார். இவரை அடக்கம் செய்யக்கூட யாரிடமும் காசில்லை. ஸ்டண்ட் நடிகர்கள் தங்களிடமிருந்து ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் போட்டு காசு திரட்டுகிறார்கள். சுடுகாட்டில் ஒன்றுகூடி கதறுகிறார்கள். எத்தனை காலத்துக்குதான் செத்துக்கொண்டே இருப்பது என்று குமுறியவர்கள் 1966ல் ஸ்டண்ட் யூனியன் அமைத்து தங்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்கத் தொடங்குகிறார்கள். சுடுகாட்டில் தொடங்கப்பட்ட யூனியன் என்கிற பெருமை கொண்டது நம் ஸ்டண்ட் கலைஞர்களின் யூனியன். இன்றும் கூட ஸ்டண்ட் கலைஞர்களுக்கு தோராயமாக ஒரு நாள் ஊதியம் 400 ரூபாய்தான்.

ஸ்டண்ட் யூனியன் கட்டிடத்தை காட்டும்போது அந்த காலத்தில் இறந்துப் போனவர்களில் புலி பாஷா என்கிறவரின் படத்தைப் பார்த்தேன். அனேகமாக இவர்தான் அசோகமித்திரனின் ‘புலிக்கலைஞன்’ இன்ஸ்பிரேஷனாக இருக்க வேண்டும்.

சினிமாவில் ஸ்டண்ட் வேலை செய்பவர்கள், லைஃப் இன்சூரன்ஸ் செய்துக்கொள்ள முடியாது. தேசிய, மாநில விருதுகளில் இவர்களுக்கு இடமில்லை. ஏன், நம்மூரை விடுங்கள். ஆஸ்கரிலேயேகூட இவர்களுக்கு அங்கீகாரம் கிடையாது.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு எடுக்கப்பட்டிருக்கும் இந்த ஆவணப்படத்தை தமிழகமெங்கும் இருக்கும் திரையரங்குகள் சனி, ஞாயிறுகளில் காலை காட்சியாக மக்களுக்கு இலவசமாக போட்டு காட்ட வேண்டும். அல்லது ஸ்டண்ட் யூனியனே செலவு செய்து, இந்த திரையிடலை தமிழகமெங்கும் நடத்த வேண்டும். தாங்கள் கொண்டாடும் மாஸ் ஹீரோக்களை, முன்னாள் மற்றும் நாளைய முதல்வர்களை உருவாக்கியவர்கள் இன்னமும் மரணக்குழிகளுக்குள்தான் வசிக்கிறார்கள் என்பதை மக்களும் அறியவேண்டாமா?

ரஜினியின் மகளாய் பிறந்ததற்கு நியாயம் செய்திருக்கிறார் ஐஸ்வர்யா. Hats off!

சிவகாசி காமிக்ஸ் குடும்பத்தார்!

 இரும்புக்கை மாயாவியை தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்க முடியுமா? லாரன்ஸ் டேவிட், ஜானி நீரோ, ஸ்பைடர், டெக்ஸ் வில்லர், லக்கிலுக் என்று கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக தமிழ் வாசிப்பில் ரசனையை கூட்டும் காமிக்ஸ் ஹீரோக்கள் அத்தனை பேருக்குமே சிவகாசியில்தான் டப்பிங் கொடுக்கப்படுகிறது.

எழுபதுகளின் தொடக்கத்தில் ‘முத்து காமிக்ஸ்’, எண்பதுகளின் மத்தியில் ‘லயன் காமிக்ஸ்’ என்று தொடரும் இந்த காமிக்ஸ் பயணத்துக்கு முடிவே இல்லை. இப்போது சர்வதேசத் தரத்தில் வழுவழு தாள்களில் முழுவண்ணத்தோடு புதுப்பொலிவோடு பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

தாத்தா சவுந்தரபாண்டியன், ‘முத்து காமிக்ஸ்’ தொடங்கினார். அப்பா விஜயன், ‘லயன் காமிக்ஸ்’ ஆரம்பித்தார். மூன்றாவது தலைமுறையாக இப்போது இத்தொழிலில் புதுமுகமாக களமிறங்குகிறார் விஜயனின் மகன் விக்ரம். ‘முத்து காமிக்’ஸின் 400வது இதழ், ‘லயன் காமிக்’ஸின் 300வது இதழ் என்று ஒரே மாதத்தில் - ஜூலையில் - இரண்டு இதழியல் துறை மைல்கற்களை எட்டியிருக்கிறார்கள்!

லயன் காமிக்ஸின் ஜூனியர் எடிட்டரான விக்ரம் விஜயனை, தீபாவளிக்காக பரபரப்பாக தயாராகிக் கொண்டிருக்கும் கந்தக பூமியான தகதக சிவகாசியில் ஒரு மதியவேளையில் சந்தித்தோம். 

“இருபத்தைந்து வயதை இப்போதான் எட்டப்போறேன். நான் கொஞ்சம் லேட்டு. அப்பா விஜயன், பதினேழு வயசிலேயே ‘லயன் காமிக்’ஸுக்கு ஆசிரியராகி சாதித்தவர். சிவகாசியில் ஸ்கூல் முடிச்சேன். சென்னையில் பி.டெக் படிச்சேன்.

தாத்தா, அந்தக் கால ஐரோப்பிய காமிக்ஸ்களின் பரம ரசிகர். காமிக்ஸ் புத்தகங்களை தமிழில் வெளியிடுவதை ஒரு தொழிலாக இல்லாமல் தன்னுடைய கடமையாகத் தொடங்கினார். அப்பா, அதை விரிவுபடுத்தினார். சின்ன வயசுலே எங்க வீடு முழுக்கவே காமிக்ஸ் நிறைஞ்சி கிடக்கும். காமிக்ஸ் தவிர்த்து கார்ட்டூன் சேனல்கள் பார்த்துக்கிட்டிருப்பேன்.

லக்கிலுக், டின்டின்னு கார்ட்டூன் ஹீரோக்கள் என் மனசுக்குள்ளேயே எப்பவும் வசிக்கிறாங்க. எங்க குடும்பத்துக்கு உலகம் முழுக்க இருக்குற தமிழர்கள் மத்தியில் அடையாளம் கொடுத்தது காமிக்ஸ்தான். அப்படியிருக்க எனக்கு மட்டும் எப்படி இதில் ஆர்வம் வராமல் போகும்?”  கேள்வி கேட்கப் போன நம்மையே கேள்வியோடு எதிர்கொண்டார் விக்ரம்.
“உங்க ஊரு பட்டாசுகளை வெடிச்சி, காசை கரியாக்குறோம்னு எங்களைத்தான் எல்லாரும் சொல்லுவாங்க. நீங்க காமிக்ஸிலே பெரிய முதலீடு போட்டு காசை கரியாக்குறீங்களே?”

“கரியாக்குறோம்னு சொல்ல முடியாது. மத்த தொழில் மாதிரி இதுலே பெருசா லாபமெல்லாம் பார்க்க முடியாது. ஆனா, பெரிய முதலீடு தேவைப்படும் தொழில்தான் இது. தமிழில் காமிக்ஸ் வெளியிட, ஒரிஜினல் கதைகளின் அயல்நாட்டு தயாரிப்பாளர்களுக்கு பெரிய ராயல்டி தொகை தருகிறோம். 

அதைத் தவிர்த்து மொழிபெயர்ப்பு, அச்சு என்று நிறைய செலவாகிறது. இதைத் தொழிலாக லாபம் எதிர்பார்த்து செய்வதாக இருந்தால், நிச்சயமாக வாசகர்களுக்கு இவ்வளவு குறைந்த விலையில் எங்களால் காமிக்ஸ் வழங்க முடியாது. என் அப்பாவும், தாத்தாவும் பயங்கரமான காமிக்ஸ் ஆர்வலர்கள். இப்போ தாத்தா ஓய்வில் இருக்க அப்பாவும், சித்தப்பாவும்தான் எங்க தொழில்களை நிர்வகிக்கிறார்கள். சித்தப்பாவுக்கும் காமிக்ஸ் ஆர்வம் உண்டு. அவங்க ரசனை அப்படியே எனக்கும் வந்திருக்கு.

எங்க குடும்பம் பாரம்பரியமா அச்சுத்தொழில் செய்துகிட்டு வருது. அது தொடர்பான நெடிய அனுபவம் எங்களுக்கு இருக்கு. சிவகாசி மாதிரியான தொழில் நகரத்தில் இயங்குறோம் என்பதால் மார்க்கெட் நல்லா அத்துப்படி ஆகியிருக்கு. திடீர் விலையேற்றங்களை எதிர் பார்த்து, அதற்கேற்ப புதிய தொழில் யுக்திகளை கையாண்டு எங்க செலவுகளை கட்டுக்குள் வெச்சிருக்கோம். 

அதனால்தான் மூன்று தலைமுறைகளாக, நாற்பத்தைந்து ஆண்டுகளாக நாங்கள் தொடர்ச்சியா செயல்பட முடியுது. இப்போ எங்க காமிக்ஸ்களில் என் அப்பாவின் ஈடுபாடும், உழைப்பும்தான் நூறு சதவிகிதம். ஆன்லைன் விற்பனையை நிர்வகிப்பது, சமூக வலைத்தளங்களில் மார்க்கெட்டிங் செய்வது போன்றவற்றில் நான் இறங்கியிருக்கிறேன்”
“வாசகர்கள் இன்னமும் அதே ஆர்வத்தோடு காமிக்ஸ் புத்தகங்களை வாசிக்கிறார்களா?”

“அப்பா, தாத்தா காலத்து காமிக்ஸ் வரவேற்பைப் பற்றி நான் நேரடியாக அறியவில்லை. இப்போ அஞ்சு வருஷமாதான் தயாரிப்பு, திட்டமிடல் போன்றவற்றில் அப்பாவுக்கு துணையா இருக்கேன். எண்பதுகளைத்தான் காமிக்ஸ்களின் பொற்காலம் என்று வாசகர்கள் பலரும் சொல்றாங்க. 

ஆனா, இப்போ முன்பு எப்போதும் தமிழ் காமிக்ஸ் துறையில் இல்லாத அளவுக்கு புதுமைகளையும், தரத்தையும் எட்டியிருக்கோம். ஆக்‌ஷன், கெளபாய், கார்ட்டூன், சூப்பர்ஹீரோக்கள், கிராஃபிக் நாவல்கள் என்று வாசகர்களுக்கு வெரைட்டியா விருந்து பரிமாறுகிறோம். எங்களுக்கு வரவேற்பு எப்படியிருக்கிறது என்று நீங்களே புத்தகக் காட்சிகளின்போது எங்க ஸ்டாலுக்கு வந்து பார்க்கலாம். ஒருவேளை இன்னும் இருபது வருஷம் கழிச்சி இப்போதைய காலம்தான் காமிக்ஸ்களின் பொற்காலம் என்றுகூட சொல்லப்படலாம்”

“காமிக்ஸ்களுக்கு என்று பிரத்யேகமாக நடத்தப்படும் comic con போன்ற புத்தகச்சந்தை நிகழ்வுகளில் பங்கேற்கிறீர்களா ?”

“நாங்களும் நம்முடைய தமிழ் காமிக்ஸ்களை எடுத்துக்கொண்டு ஆரம்பத்தில் இரண்டு ஆண்டுகள் பங்கேற்றோம். பெங்களூர், மும்பை, டெல்லி, ஹைதராபாத், பூனே என்று எங்கெங்கோ அவற்றை நடத்துகிறார்கள். சென்னைக்கு மட்டும் வரமாட்டேன் என்கிறார்கள். தமிழர்களுக்கும் நீண்டகால காமிக்ஸ் வாசிப்பு உண்டு என்பதை அவர்கள் அறியவேண்டும். என்றேனும் ஒருநாள் இங்கும் நடத்துவார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. இப்போதைக்கு தமிழகத்தில் நடக்கும் பெரிய புத்தகக்காட்சிகளில் நாங்க பங்கேற்கிறோம். புத்தகக்காட்சி  அமைப்பாளர்களும் நாங்க பங்கேற்பதை விரும்பறாங்க”
“முன்பெல்லாம் பெட்டிக்கடைகளிலும் கூட ‘முத்து’ / ‘லயன்’ காமிக்ஸ்கள் தொங்கும். இப்போது அப்படியில்லையே..?”

“சின்ன வாசகர் வட்டம். போதுமான அளவுக்கு விற்பனை என்று நாங்களே எங்களை வரையறைத்து வைத்திருக்கிறோம். பெரியளவில் விளம்பரம் செய்து விற்பனை செய்யும் சக்தி எங்களுக்கு இல்லை. வாட்ஸப் குழுமங்கள், சமூக வலைத்தளங்கள் மூலம் எங்கள் வாசகர்களே எங்களுக்கு விளம்பரம் கொடுக்கிறார்கள். புத்தகக் காட்சிகளின் போது புதிய வாசகர்கள் உருவாகிறார்கள். 

எல்லாத் துறையிலும் ராக்கெட் வேக மாற்றங்கள் நடைபெறுகின்றன. நம் தமிழ் காமிக்ஸ் துறை அந்தளவுக்கு வேகமாக மாறமுடியவில்லை என்றாலும், போட்டி நிறைந்த சூழலில் நாங்களும் எங்களுக்கான ராஜபாட்டையில் கம்பீரமாக நடை போடுகிறோம். இன்டர்நெட் மூலமாவே எங்க வாசகர் வட்டத்தை ஊக்கமாக செயல்பட வைக்கிறோம். வாசகர்களின் ரசனை மாற்றங்களை இப்போ உடனுக்குடன்  தெரிஞ்சுக்கவும் இன்டர்நெட் உதவுது.

இன்றைக்கும் முக்கிய நகரங்களில் எங்களுக்கு ஏஜெண்டுகள் இருக்கிறார்கள். எங்களது இப்போதைய வெளியீடுகள் நல்ல ஆர்ட் பேப்பரில், முழு வண்ணத்தில் சர்வதேசத் தரத்தில் உருவாக்கப்படுகின்றன. விலையை தொடர்ச்சியாக ஒரே மாதிரி கட்டுக்குள் வைக்க முடிவதில்லை. ஒரு இதழ் 50 ரூபாய் என்றால் அடுத்த இதழ் 100 ரூபாயாக இருக்கும். எனவே சிறிய கடைகளில் விற்க முடிவதில்லை.

வாசகர்களின் நேரடி சந்தா, ஆன்லைன் விற்பனை, புத்தகக் காட்சிகளில் பங்கேற்பு போன்ற முறைகளில் விற்பனை செய்து வருகிறோம். பல்லாயிரம் ரூபாய் செலவழித்து உரிமை வாங்கும் கதைகளை, இங்கே மிகக்குறைவான வாசகர்  வட்டத்துக்குத்தான் கொண்டு செல்ல முடிகிறது என்கிற சங்கடம் எங்கள் குடும்பத்துக்கு உண்டு!”

(நன்றி : குங்குமம்)