23 செப்டம்பர், 2008

பரபரப்பான பத்து நிமிடங்கள்!



ஹாலிவுட் சினிமாக்களில் மட்டுமே அந்த காட்சியை நம்மால் பார்த்திருக்க முடியும். பத்தே நிமிடங்களில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தை சென்னையில் பரபரப்பான பகல்வேளையில் கடப்பது சாத்தியமா? ஆம்புலன்சுக்கு கூட வழிவிட மனமில்லாத சென்னை வாகன ஓட்டிகளின் சவாலை ஒரு காவல்துறையின் ஊர்தி கடந்து சாதித்திருக்கிறது. சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் அந்த கார் சாலைகளில் கடந்ததை பார்த்தவர்கள் மின்னலை கண்டதாக சொல்கிறார்கள். சபாஷ் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை. ஷூமேக்கர் வேகத்தில் ஒரு போலிஸ்காரர் காரை ஓட்டிச்செல்ல காரணம் என்னவாக இருக்கும்?

ஒரு உயிரைக் காக்க...

ஹிதேந்திரன் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன். அப்பா அசோகனும், அம்மா புஷ்பாஞ்சலியும் மருத்துவர்கள். மகாபலிபுரத்துக்கு அருகில் இருக்கும் திருக்கழுக்குன்றத்தில் சொந்தமாக மருத்துவமனை நடத்தி வருகிறார்கள். கடந்த சனிக்கிழமை அப்பாவின் பைக்கை எடுத்துக்கொண்டு நண்பனை சந்தித்து திரும்பியவனுக்கு எமன் ஒரு மீன்பாடி வண்டி ரூபத்தில் வந்தது. எதிர்பாராமல் நடந்த அந்த விபத்தில் தலையில் ஹிதேந்திரனுக்கு அடிபட்டது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் முதலுதவிக்காக சேர்க்கப்பட்டவன் நினைவிழந்த நிலையில் மேல்சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோவுக்கு கொண்டு செல்லப்பட்டான்.

பரிசோதித்த மருத்துவர்கள் கை விரித்தார்கள். ஹிதேந்திரனின் மூளை செயல் இழந்து விட்டது (பிரைன் டெத்). கிட்டத்தட்ட மரணம். இதயம் மட்டுமே துடிக்கும். பெற்றோரும் மருத்துவர்கள் ஆயிற்றே? பிரச்சினையை புரிந்துகொண்டார்கள். தன் மகனின் உடல் உறுப்புகளை தானமாக தர விரும்பினார்கள். கண்கள், இதயம், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் ஆகிய உறுப்புகள் அகற்றப்பட்டன. புரட்சித்தலைவி ஜெ. ஜெயலலிதா நகரில் இருக்கும் செரியன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த சிறுவன் ஒருவனுக்கு இதயம் அவசரமாக தேவைப்பட்டது. ஹிதேந்திரனின் இதயம் அகற்றப்பட்டு 20 நிமிடங்களில் அந்த சிறுவனுக்கு பொருத்தப்பட வேண்டும். போக்குவரத்து நெரிசல் மிக்க சென்னையின் 20 கிலோ மீட்டர் தூரத்தை 20 நிமிடங்களில் அடைவது சாத்தியமா?

மருத்துவமனையின் நிர்வாகம் சார்பில் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையை அணுகினார்கள். பிரச்சினையின் தீவிரத்தை புரிந்துகொண்ட கூடுதல் ஆணையாளர் சுனில் உடனடியாக ஒரு உதவி ஆணையாளரை அனுப்பி வைத்து உதவுமாறு உத்தரவிட்டார். உதவி கமிஷனர் மனோகரன் இந்த ஆபரேஷனுக்கு திட்டமிட்டார். தன் சக அதிகாரிகளோடு தொடர்புகொண்டவர் குறிப்பிட்ட அந்த நேரத்துக்கு போக்குவரத்து சிக்கல் இல்லாதவாறு திட்டம் தீட்டினார். சிக்னல்கள் முழுக்க போலிசாரின் கட்டுப்பாட்டுக்கு சில நிமிடங்களில் வந்தது. ஒரு ஆம்புலன்ஸில் இதயத்தை எடுத்துச் செல்லவும், அந்த ஆம்புலன்ஸுக்கு வழிவிட ஆக்சண்ட் காரில் ஏ.சி. மனோகரனே முன்செல்லவும் திட்டம் தீட்டப்பட்டது.

ஹிதேந்திரனின் இதயத்தை ஒரு பெட்டியில் வைத்து படபடப்போடு மருத்துவர்கள் ஓடிவந்தார்கள். படபடப்பில் இருந்ததால் ஆம்புலன்ஸில் ஏறுவதற்கு பதிலாக ஏ.சி.யின் காரில் ஏறிவிட்டார்கள். ஒரு நொடியை கூட வீணடிக்க விரும்பாத ஏ.சி. தனது டிரைவரான கான்ஸ்டபிள் மோகனை புயல்வேகத்தில் ஓட்ட சொன்னார். ஏ.சி.யின் கார் இலகுவாக செல்ல வழியெங்கும் போக்குவரத்து சீர் செய்யப்பட்டிருந்தது. போனில் போலிஸ்காரர்களிடம் பேசியபடியே வழியில் இருந்த தடங்கல்களையெல்லாம் அகற்றினார் ஏ.சி.

மேட்லி ரோடு, தி.நகர் புதிய மேம்பாலம், லயோலா, சூளைமேடு, அமைந்தகரை, அண்ணா வளைவு வழியாக சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் மோகன் காரை விரட்டினார். திருப்பங்களில் கூட பிரேக்கில் மோகன் காலை வைக்கவில்லை. ஆக்ஸிலேட்டரில் வைத்த காலை எடுக்கவேயில்லை. பொதுவாக போக்குவரத்தில் இந்த தூரத்தை கடக்க சுமார் 50 நிமிடங்களில் இருந்து ஒன்றரை மணி நேரம் வரை பிடிக்கும். மருத்துவர்கள் கொடுத்திருந்த டார்கெட் 20 நிமிடம். பத்தே நிமிடங்களில் செரியன் மருத்துவமனையை ஏ.சி.யின் கார் அடைந்திருந்தது. ஆறு மணி நேரம் நடந்த இருதய மாற்று அறுவை சிகிச்சை சக்சஸ்!

இனி ஹிதேந்திரனின் இதயம் வாழும்!!

மருத்துவத்துறை காவல்துறையோடு இணைந்து இந்த சாதனையை செய்திருக்கிறது. சென்னையில் மருத்துவத்துறை சாதனைகள் புரிவது ஒன்றும் அதிசயமல்ல என்றாலும், காவல்துறையின் இந்த அதிரடி சாதனை சென்னை மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. வாய்ப்புகள் கிடைத்தால் எங்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்துக் காட்டிய சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறைக்கு சல்யூட்.

3 கருத்துகள்:

  1. பெயரில்லா11:40 AM, மார்ச் 29, 2013

    அட..? அருமை யுவா..!
    ஹன்ஸா காஷ்யப்.

    பதிலளிநீக்கு
  2. நிச்சயம் பாராட்டப்பட வேண்டும். தன் மகனின் இதயத்தை தானம் செய்த அந்த பெற்றோரையும்
    காவல் துறை அதிகாரிகளுக்கும் தலை வணங்குகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. டிராபிக் படத்தில் மலையாளிகளின் நடிப்பு மிகவும் பாராட்டும் விதமாக இருந்தது. சென்னையில் நடந்ததை சென்னையில் படமாக்க இத்தனை காலம் ஆகிவிட்டது. இருந்தும் காத்திருக்கிறோம் சற்று கலக்கத்துடனேயே.

    பதிலளிநீக்கு