28 பிப்ரவரி, 2011

இண்டர்நெட்டில் பிரபலங்கள்!

ஏ.ஆர்.ரகுமான், ஹாலிவுட் நடிகை ஷரன்ஸ்டோனுடன் டின்னர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

சச்சின் டெண்டுல்கர் குடும்பத்தோடும், நண்பர்களுடனும் வார இறுதியை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.

த்ரிஷா மைசூரில் படப்பிடிப்புக்கு போயிருக்கிறார்.

மு.க. ஸ்டாலினுக்கு சேலத்தில் ஒரு அரசு நிகழ்ச்சி.

சுஷ்மா ஸ்வரராஜ், நாகப்பட்டினத்துக்கு வருகிறார்.

பிரபலங்களைப் பற்றிய சின்னச் சின்ன செய்திகளைக் கூட தெரிந்து வைத்துக் கொள்வதில் சாமானியர்களுக்குதான் எவ்வளவு ஆவல்? முன்பெல்லாம் இந்தச் செய்திகளை தெரிந்துகொள்ள ஊடகங்களைதான் சார்ந்திருக்க வேண்டும். தகவல் தொழில்நுட்பப் புரட்சி பிரபலங்களுக்கும், சாமானியர்களுக்கும் இடையிலான இடைவெளியை அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கிறது. ட்விட்டர், ஃபேஸ்புக், ஆர்குட், வலைப்பூக்கள் (Blogs) என இணையம் எல்லோருக்குமான வலையை விரித்து வைத்திருக்கிறது.

முன்பெல்லாம் ஒரு நடிகரோ, அரசியல் பிரபலமோ ஏதேனும் பத்திரிகைப் பேட்டியில் சொல்லியிருந்த கருத்து ஒருவருக்குப் பிடித்திருந்தால் அல்லது மாற்றுக் கருத்து இருந்தால் பத்திரிகைக்கு 'வாசகர் கடிதம்' எழுதி தெரிவிக்க முடியும். இல்லையேல் அந்தப் பிரபலத்தின் முகவரியை எப்பாடுபட்டாவது கண்டுபிடித்து கடிதம் எழுதுவார்கள். அந்தக் காலமெல்லாம் இப்போது மலையேறிப் போயாச்சி! நாகார்ஜூனா நடிக்கும் புதுப்படத்தின் பெயர் உங்களுக்குப் பிடிக்கவில்லையா? ட்விட்டரில் நுழைந்து 'பெயரை மாற்றித் தொலையுங்களேன்' என்று நேரடியாக சொல்லிவிடலாம்.

ஹாலிவுட், அமெரிக்கா, ஐரோப்பாவென்று பார்க்கப் போனால் பிரபலமாக இருக்கும் ஒருவர் நிச்சயமாக ஃபேஸ்புக்கிலோ, ட்விட்டரிலோ, மைஸ்பேஸ் தளத்திலோ, ஆர்குட்டிலோ கட்டாயம் இருப்பார். அல்லது வலைப்பூவாவது எழுதுவார். அமெரிக்க அதிபர் ஒபாமா, ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஆகியோரையெல்லாம் அடிக்கடி ட்விட்டரில் காணலாம்.

இப்போது இந்திய பிரபலங்களும் இணையத்தை பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். சினிமா நட்சத்திரங்கள், தங்கள் ரசிகர்களோடு நேரிடையாக உரையாடுகிறார்கள். எழுத்தாளர்கள் தங்கள் வாசகர்களோடு பேசுகிறார்கள். அரசியல்வாதிகள் மக்களோடு பழகுகிறார்கள். முன்பெல்லாம் இந்த இரு தரப்புக்கும் இடையே ஓர் 'ஊடகம்' தேவையாக இருந்தது.

இந்திய அளவில் அமிதாப் பச்சன், அமீர்கான், சல்மான்கான், லாலுபிரசாத் யாதவ், சசிதரூர், சச்சின் டெண்டுல்கர், ஏ.ஆர்.ரஹ்மான், விஜய் மல்லையா என்று ஏராளமான பிரபலங்கள் இணைய வலைப்பின்னல்களில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்திய சினிமாவின் உச்சநட்சத்திரங்களான் 'கான்'கள் இங்கே கருத்தால் அடித்துக் கொள்வதும் கூடுதல் சுவாரஸ்யம்.

தமிழக அளவில் பார்க்கப் போனால் பிரபலமான சினிமா நட்சத்திரங்கள்தான் அதிகளவில் இணையத்தில் புழங்குகிறார்கள். நரேன் கார்த்திகேயன், முரளிவிஜய் போன்ற விளையாட்டு வீரர்கள் சிலரும் உண்டு. துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.வி.சேகர், ரவிக்குமார் போன்ற சிலரைத் தவிர்த்துப் பார்த்தோமானால், அரசியல் பிரபலங்களுக்கு இன்னமும் இக்கலாச்சாரம் பெரியளவில் சென்று சேரவில்லை. மாறாக தமிழ் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் போன்று எழுத்து சார்ந்து இயங்குபவர்கள் பெரும்பாலானோர் ட்விட்டர், ஃபேஸ்புக், வலைப்பூவென்று எங்காவது ஓரிடத்தை கெட்டியாகப் பிடித்து வைத்திருக்கிறார்கள்.

தயாநிதி அழகிரி, வெங்கட்பிரபு, மாதவன், சிம்பு, ஜீவா, வெற்றிமாறன், தனுஷ், பிரகாஷ்ராஜ், யுவன்ஷங்கர்ராஜா, ஸ்ருதிஹாசன், சுசித்ரா, ஸ்ரேயா, நமிதா, பி.சி.ஸ்ரீராம், சுப்பிரமணியன்சாமி, விஸ்வநாதன் ஆனந்த், இந்திரா பார்த்தசாரதி, மனுஷ்யபுத்திரன், பா.ராகவன், சாருநிவேதிதா, ஜெயமோகன், ஞாநி, நாஞ்சில்நாடன், ஹிந்து ராம், புதிய தலைமுறை மாலன், குமுதம் ப்ரியா கல்யாணராமன், ஆனந்தவிகடன் ரா.கண்ணன் என்று பலதளங்களில் முக்கியமான ஆட்கள் பலரையும் நீங்கள் ஏதோ ஒரு சமூக வலைப்பின்னல் தளத்தில் நண்பராக்கிக் கொண்டு உரையாட முடியும்.

பிரபலங்கள் ஏன் இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டுகிறார்கள்?

ட்விட்டர், ஃபேஸ்புக் மாதிரியான இணையத்தில் புழங்குவது மிக எளிதானது. சாமானியர்களோடு தொடர்பில் இருக்க முடிகிறது. தங்கள் தொடர்பான சம்பவங்கள், சந்தித்த மனிதர்கள், தனிப்பட்ட கருத்துகளை எல்லோரிடமும் 'பிரபலப் பூச்சு' இல்லாமல் பகிர்ந்துகொள்ள முடிகிறது. மனதில் தோன்றியதை எழுதியவுடனேயே பலருக்கும் போய்ச் சேருகிறது. தினமும் என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிற விவரத்தை, தங்களை அபிமானமாக கருதுபவர்களுக்கு சொல்லிக்கொண்டே இருக்க முடிகிறது.  மற்றவர்களின் கருத்தையும் உடனுக்குடன் அறிய முடிகிறது. மொபைல் போன் மூலமாகவே ட்விட்டர் போன்ற இணையத் தளங்களில் இயங்கலாம். புகைப்படங்களையும் பகிர்ந்துகொள்ளலாம்.

"சமத்துவமான சமூகம் உருவாக இளைஞர்கள் தோள் கொடுக்கவேண்டும். உங்களோடு நானும் சேர்ந்து தோள் கொடுப்பேன்" என்று தமிழகத்தின் துணைமுதல்வரான மு.க.ஸ்டாலின் தன்னுடைய வலைப்பூவில் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். 2008ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக இந்த வலைப்பூ மூலமாக தனது கட்சிக்காரர்களுடனும், மக்களோடும் மு.க.ஸ்டாலின் உரையாடல் நிகழ்த்தி வருகிறார். (http://mkstalin.net/blog)

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான எஸ்.வி.சேகர் தன்னுடைய வலைப்பூவில் இவ்வாறாக எழுதியிருக்கிறார். "பொதுமக்களுக்கும், சட்டமன்ற உறுப்பினருக்குமான வெளிப்படையான விவாதங்களை ஊக்குவிக்கவும், அவற்றை ஆவணப்படுத்தவும் இந்த வலைப்பூ உருவாக்கப்பட்டிருக்கிறது. தங்களது சட்டமன்ற உறுப்பினரோடு சேர்ந்து, தொகுதிமக்களும் தங்களது குரலை உயர்த்திச் சொல்லவும் இது பயன்படும்". (http://mylaporemla.blogspot.com)

இணையத்தில் இயங்கும் தமிழர்கள் பலருக்கும் தங்களது பிராந்தியப் பிரச்சினையை வட இந்திய ஊடகங்களும், பிரபலங்களும் கண்டுகொள்வதில்லை என்று ஒரு குறை உண்டு. சமீபத்தில் நாகப்பட்டினத்தில் நடந்த மீனவர் படுகொலையின் போது 'ட்விட்டர்' தளத்தின் மூலமாக தொடர்ச்சியான பிரச்சாரத்தை மேற்கொண்டு, பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்றத் தலைவர் சுஷ்மாஸ்வரராஜையே அசைத்துவிட்டார்கள். ட்விட்டரில் இந்திய அளவில் ஐந்து நாட்களுக்கு மீனவர் பிரச்சினையை ( #tnfisherman என்கிற அடையாளத்தில்) இவர்கள் முதலிடத்தில் வைத்திருந்தார்கள். இதற்குப் பிறகே வட இந்திய ஊடகப் புள்ளிகள் இதைக் கவனித்து தமிழக மீனவர் பிரச்சினை குறித்த செய்திகளை முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பினார்கள்.

பெங்களூரைச் சேர்ந்த இளம் எழுத்தாளரான சரவணகார்த்திகேயன், தனது முதல் நூலுக்கான பதிப்பாளரையே, இதுபோன்ற சமூகத்தளம் ஒன்றில்தான் கண்டறிந்ததாக சொல்கிறார். 'சந்திராயன்' என்கிற அந்த நூல், கடந்தாண்டு சிறந்த அறிவியல் நூலுக்கான தமிழக அரசின் பரிசினை வென்றது.

இதெல்லாம் லாபங்கள். சில பாதகங்களும் நிச்சயமாக உண்டு. உதாரணத்துக்கு முன்னாள் வெளியுறத்துறை இணையமைச்சர் சசிதரூரை சொல்லலாம். யதார்த்தமாக தனது மனதுக்குப் பட்டதை 'ட்விட்டர்' இணையத்தளத்தில் இவர் சொல்லிவிட, ஒரு அமைச்சரே எப்படி இப்படிப் பேசலாம் என்று சர்ச்சை கச்சைக் கட்டிக் கொண்டது. அவரது சொந்தக் கட்சியினரே அவரை விமர்சிக்க ஆரம்பித்தனர். வேறு வழியின்றி, தான் சொன்னது 'ஜோக்' என்று கட்சித்தலைமையிடமும், ஆட்சித்தலைமையிடமும் சொல்லித் தப்பித்தார். அமெரிக்க அதிபர் ஒபாமா ட்விட்டரில் கருத்தெழுவதை கண்டு, இவரும் ட்விட்டருக்கு வந்தாராம்.

இதேபோல பின்னணிப் பாடகி சின்மயி சொன்ன ஒரு கருத்தும் கூட, ட்விட்டரில் சில நாட்களுக்குப் புயலை கிளப்பியது. பலரும் அவரோடு மல்லுக்கட்டினர்.

பிரபலங்கள் சொல்லும் சாதாரண கருத்துகளைக் கூட சீரியஸாக மற்றவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். தங்களுக்கு உவப்பில்லாத் கருத்து சொன்னவர் ஒரு பிரபலமென்று தெரிந்தால், இரட்டை மடங்கு உக்கிரத்தோடு சண்டைக்கோழிகளாய் மாறிப் போகிறார்கள். இதனாலேயே பிரபலங்கள், தாங்கள் சொல்லவரும் ஒவ்வொரு வார்த்தையையும் ஒன்றுக்கு நான்கு முறை நன்றாக சோதித்துவிட்டே பயன்படுத்த வேண்டியதாகிறது.

எது எப்படியிருந்தாலும் பிரபலங்களுக்கு தங்களது 'பிரபலம்' எனும் முகமூடி ஒரு கூடுதல் சுமை. ரஜினிகாந்த் ஒவ்வொரு படத்தையும் முடித்துவிட்டு, இமயமலைக்குச் சென்று சாதாரணர்களில் ஒருவராக மாறி இயல்படைவதை இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். பிரபல கழற்றிவைத்துவிட்டு சாதாரணமாக உரையாட ஒரு வெளி இவர்களுக்கு தேவை. இணையம் அத்தகைய இடமாக இருக்கிறது.

எக்ஸ்ட்ரா மேட்டர் : இணைய தளங்களில் சில பிரபலங்கள் சம்பந்தமில்லாமல் உளறுவார்கள். என்ன ஏதுவென்று கொஞ்சம் ஆராய்ந்துப் பார்த்தால்தான் தெரியும். பிரபலங்கள் பெயரில் யாராவது 'குறும்பர்கள்' விளையாடியிருப்பார்கள். மன்மோகன்சிங், சோனியாகாந்தி பெயர்களில் கூட யாராவது கும்மி அடிப்பது உண்டு. குறிப்பாக இளம் நடிகைகள் பெயரில் கணக்கு துவக்கி விளையாடுவது அதிகமாக நடக்கும்.

அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா பெயரில் ஒரு குறும்பர் யாரோ 'ட்விட்டர்' தளத்தில் கொஞ்சம் ஓவராகவே விளையாடி விட்டார். கட்சிக்காரர்கள் 'அம்மா'வின் காதுக்கு விஷயத்தைக் கொண்டு சென்றவுடன், அவர் டென்ஷன் ஆகி ஒரு அறிக்கை கூட விட்டிருக்கிறார். ட்விட்டர் தளத்தில் தான் எழுதுவதில்லை என்றும், தன் பெயரை யாராவது தவறாகப் பயன்படுத்தினால் சைபர்-க்ரைம் மூலமாக நடவடிக்கை எடுப்பேன் என்றும் ஜெயலலிதா அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

பிரபலங்களாக இருந்தாலே தொல்லைதான். எனவே பிரபலங்களே! உங்கள் பெயரில் யாராவது போலிக்கணக்கு துவக்குவதற்கு முன்பாக, நீங்களே நேரடியாக இணைய குளத்தில் குதித்து விடுவதுதான் உத்தமம்!

(நன்றி : புதிய தலைமுறை)

25 பிப்ரவரி, 2011

இந்தியாவின் சிறந்த மாநிலம் தமிழகம்!


கடந்த ஐந்தாண்டுகால தமிழக ஆட்சி மிக சிறப்பான ஒன்று என்று நாம் வாய்கிழிய கத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் தமிழுணர்வாளர்கள் என்று சமீபகாலமாக சொல்லிக் கொள்கிறவர்களோ 'இலை மலர்ந்தால் ஈழம் மலரும்' என்று கடந்த 2009 பாராளுமன்றத் தேர்தலில் இருந்து குருட்டுத்தனமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

கலைஞர் ஆளும் போதெல்லாம் தமிழன் முன்னேறியிருக்கிறான். தமிழகம் வளர்ந்திருக்கிறது என்பதுதான் வரலாறு. கலைஞரின் ஆட்சி ஏன் சிறந்தது என்பதை நாமே எத்தனை முறைதான் சொல்லிக் கொண்டிருப்பது?

இதோ சி.என்.என். - ஐ.பி.என். செய்தி நிறுவனம், கலைஞர் ஆட்சி நல்லாட்சி என்று சான்றிதழ் வழங்கியிருக்கிறது. டெல்லியில் நடைபெற்ற விழாவில் தமிழக அரசு பல்வேறு துறைகளிலும் விருதுகளை அள்ளிக் குவித்திருக்கிறது.

2011 ஆம் ஆண்டுக்கான ஐபிஎன் வைர விருதுகள் :

Winners of IBN7 Diamond States Awards 2011
Category
Best Big State
Best Small State
Citizen Security
Tamil Nadu
Sikkim
Core Infrastructure
Gujarat
Delhi
Education
Kerala
Himachal Pradesh
Employment
Andhra Pradesh
Mizoram
Environment
N/A
Jammu & Kashmir
Healthcare
Kerala
Goa
Poverty Reduction
Chhattisgarh
Himachal Pradesh
Water and Sanitation
Tamil Nadu
Tripura
Women Empowerment
Tamil Nadu
Nagaland



















இந்த விருது தமிழக அரசின் சிறப்பான செயல்பாடுகளின் அடிப்படையில் பல்வேறு புள்ளி விவரங்களையும், செயல்பாடுகளையும் நிபுணர் குழு ஒன்று பல்வேறு மட்டத்தில் ஆராய்ந்து வழங்கியிருக்கிறது.

மாநிலங்களின் ஒட்டுமொத்த செயல்பாடுகள் அடிப்படையில் :

India's Best States for their Overall Performance
Top 3 Big States
Top 3 Small States
Tamil Nadu
Himachal Pradesh
Kerala
Goa
Gujarat
Arunachal Pradesh








மேலும் விபரங்களுக்கு : விருது பட்டியல் முழு விபரம்

இப்படிப்பட்ட நல்லாட்சி மீண்டும் மலர விரும்புபவர்கள் தமிழினத் துரோகிகள் என்று தமிழின திடீர் காட்ஃபாதர்களால் தூற்றப்படுவார்களேயானால், துரோகியாக இருப்பதே எமது விருப்பம்.

நாடு நலம் பெற, நல்லாட்சி மீண்டும் மலர...
வாக்களிப்பீர் உதயசூரியனுக்கே!

22 பிப்ரவரி, 2011

ஹாலிவுட்டில் ஜாலி!

அது ஆச்சி ஒரு பதிமூன்று, பதினான்கு வருஷம். அப்போது எல்டாம்ஸ் சாலையில் ஒரு கிராபிக்ஸ் சென்டரில் லே-அவுட் ஆர்ட்டிஸ்டாக பணிபுரிந்து கொண்டிருந்தேன். ஆறு மணி ஆனாலே எஸ்.ஐ.ஈ.டி பேருந்து நிலையத்துக்கு வந்துவிடுவேன், ஃபிகர் வெட்டுவதற்காக. கையில் ஒரு இந்தியாடுடேவையோ, விகடனையோ, குமுதத்தையோ சும்மா ஸ்டைலுக்கு சுருட்டி வைத்திருப்பேன். அன்று கையில் எதுவும் புத்தகமில்லை. அப்போதெல்லாம் எஸ்.ஐ.ஈ.டி பஸ் ஸ்டேண்டில் வரிசையாக நான்கைந்து பெட்டிக்கடைகள் இருக்கும். பத்திரிகைகளும் விற்பார்கள். நான் சைட்டிக் கொண்டிருந்த அனகாபுத்தூர் விஜயலஷ்மி வர கொஞ்சம் தாமதமானதால், ஏதாவது பத்திரிகை வாங்கிப் படிக்கலாம் என்று முடிவெடுத்தேன். லயன் காமிக்ஸ் தொங்கிக் கொண்டிருந்தது. டைட்டில் : ஹாலிவுட்டில் ஜாலி.

புத்தகத்தை வாங்கி, சென்டர் பின்னை வாயால் கடித்து திறந்தேன். நான்கைந்து பக்கங்களை சும்மா புரட்டிப் பார்த்தேன். அவ்வளவுதான். அந்த மாயச்சுழலுக்குள் ஒட்டுமொத்தமாய் வசம் இழந்தேன். அனகாபுத்தூர் விஜயலட்சுமி வந்து என்னை ஓரக்கண்ணால் பார்த்ததும் (ஒரு நம்பிக்கைதான்) தெரியாது. நான் ஏறவேண்டிய 6.50 பஸ்ஸான F51 கடந்துச் சென்றதும் தெரியாது. பொது இடமென்றும் பாராமல், பைத்தியக்காரன் மாதிரி எனக்கு நானே அவ்வப்போது சத்தமாக வாய்விட்டு சிரித்து, குட்டிச்சுவரில் உட்கார்ந்து வாசித்து முடித்தேன் ஹாலிவுட்டில் ஜாலியை.

கதை மிகவும் சிம்பிள். செவ்விந்திய கிராமம் ஒன்றின் சீஃப் தம் இனத்தின் சீரிய கலாச்சாரத்தை உலகம் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற நோக்கில், ஒரு சினிமாப்படம் எடுக்க ஹாலிவுட்டுக்கு வருகிறார். அப்போதெல்லாம் ஹாலிவுட் படங்களில் செவ்விந்தியர்களை கொடூரமான வில்லன்களாக காட்டி வந்தார்கள். நம் சீஃப் எடுக்கும் படத்தில் செவ்விந்தியர்கள்தான் ஹீரோக்கள். அவர்கள் வில்லையும், அம்பையும் வைத்து, துப்பாக்கி சுமந்த வெள்ளையர்களை சின்னாபின்னம் ஆக்குகிறார்கள். போர்க்களத்துக்கு நடுவே மலரும் பூவாய் ஒரு காதல். படா சீரியஸான கதையை எடுக்க நினைக்கிறார் சீஃப். இதற்காக இவர் ஒரு தயாரிப்பாளரை தேடுவது, இயக்குனரை நியமிப்பது, ஹீரோ – ஹீரோயின்களை கண்டறிவது என்று காமெடியாக கதை நகரும். இறுதிக்காட்சி மட்டும் சென்னை-600028 மாதிரி ஆண்டி-க்ளைமேக்ஸ்.

'ஹாலிவுட்டில் ஜாலி'யை கிட்டத்தட்ட ஒன்றரை decade கடந்துவிட்ட நிலையிலும் அவ்வப்போது நினைத்து சிரித்துக் கொள்வேன். எத்தனை முறை இந்தப் புத்தகத்தை திரும்ப திரும்ப வாசித்திருக்கிறேன் என்பதற்கு கணக்கு வழக்கே இல்லை. ஒவ்வொரு முறை புரட்டும்போதும், முந்தைய வாசிப்பில் 'மிஸ்' செய்துவிட்ட புதிய வஸ்து ஒன்றினை மூழ்கி, கண்டெத்து மகிழ்ந்திட முடியும்.

- * - * - * - * - * - * - * - * - * - * -

பண்ணிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ராம்கோபால்வர்மா நேரடியாக ஒரு தெலுங்குப் படத்தை இயக்கி, கடந்த வாரம் வெளியிட்டிருக்கிறார். 'கதா, ஸ்க்ரீன்ப்ளே, தர்சாகத்வம் – அப்பளராஜூ' (கதை, திரைக்கதை, இயக்கம் – அப்பளராஜூ). சுருக்கமாக கே.எஸ்.டி. அப்பளராஜூ.

இப்படத்தின் இயக்குனர் ராம்கோபால் வர்மாவுக்கு அறிமுகமே தேவையில்லை. வடஇந்தியாவில் மதிக்கப்படும் தென்னிந்திய ஆளுமைகளில் மணிரத்னத்துக்கும், ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் அடுத்த இடத்தில் இருக்கிறார். காமெடி நடிகரான சுனில்தான் இந்தப் படத்தின் ஹீரோ. அவர் நாயகனாக நடித்த முந்தையப் படம் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய மரியாதை ராமண்ணா சூப்பர்ஹிட். 1973ல் பிறந்த சுனிலுக்கு ஐந்து வயதிருக்கும் போது அவரது தந்தை இறந்துவிட்டார். வழக்கமான கதைதான். விதவைத்தாய் பத்துப் பாத்திரம் தேய்த்து, தன் ஒரே மகனை கஷ்டப்பட்டு வளர்த்தார். மகன் டாக்டராகவோ, என்ஜினியராகவோ உருவெடுக்க வேண்டும் என்பது அவரது கனவு.

மகனுக்கோ சினிமாதான் உயிர். பள்ளிப் பருவத்திலேயே கிளாஸ் கட் அடித்துவிட்டு சிரஞ்சீவி படங்களை பார்க்க கிளம்பி விடுவார். சிரஞ்சீவிக்கு பிரபுதேவா அமைத்த நடன அசைவுகள் அனைத்தும் மனப்பாடம். சிரஞ்சீவி மாதிரியே ஆடி பயிற்சி செய்வார். இதனால் சுனில் பள்ளியில் மாணவர்கள் மத்தியில் ஒரு ஹீரோ. கலையுணர்ச்சி மிகுந்த சுனிலுக்கு படிப்பு கொஞ்சம் சுமார்தான். நன்றாக ஓவியம் வரைவார். பள்ளி முடிந்தவுடன் BFA படிக்குமாறு அவரது ஆசிரியர் ஒருவர் வழிகாட்டினார். ஆர்ட் டைரக்டராக சினிமாவுக்குள் நுழைந்துவிட முடியுமென்பதால் சுனில் சந்தோஷமாக கலைக்கல்லூரிக்குச் சென்றார்.

கல்லூரி முடிந்ததும் ஹைதராபாத்துக்கு படையெடுத்தார். ஜூனியர் டேன்ஸராக சில படங்களில் ஆடினார். முறையாக நடனம் பயில நடனப்பள்ளி ஒன்றில் சேர்ந்தார். டோலிவுட்டின் கொடூரமான வில்லனாக மாறவேண்டும் என்பது அவரது கனவு. சிரஞ்சீவி அவரது துரோணர். எனவே அவரைப்போலவே வில்லன் டூ ஹீரோ ரூட்டை தேர்ந்தெடுத்தார். குருவைப்போலவே நடை, உடை, பாவனைகளை மாற்றிக்கொண்டார். ஆனால் துரதிருஷ்டமாக (அ) அதிர்ஷ்டவசமாக அவர் காமெடி நடிகர் ஆனார். சிரஞ்சீவியை மிமிக் செய்து (சில நேரங்களில் அவரைவிட சிறப்பாகவும்) சில படங்களில் ஹீரோவோடு, நடனம் ஆடினார். படிப்படியாக முன்னேறி 2006ல் 'அந்தால ராமுடு' படத்தில் ஹீரோ. போன வருடம் 'மரியாதை ராமண்ணா'. இந்த வருடம் 'கே.எஸ்.டி அப்பளராஜூ'.

வாசிக்கும்போது மிக சுலபமாக கடந்து விடலாம் சுனிலின் கதையை. ஆனால் இந்த பதினைந்து ஆண்டிலும், ஒவ்வொரு நொடியாக போராடி, போராடி, வீழ்ந்து, எழுந்து, எப்படியோ இந்த நிலைக்கு வந்திருக்கிறார் சுனில். ராம்கோபால் வர்மாவின் கதையும் கிட்டத்தட்ட இதேமாதிரிதான். சுனிலுக்கு சிரஞ்சீவி. ஆர்.ஜி.வீ.க்கு மணிரத்னம். இவர்களது கதையையே கொஞ்சம் பட்டி பார்த்து, மசாலா சேர்த்து ஒரு சூப்பர் ஹிட்லு சினிமாவாக்கி விட்டால் என்ன?

'கே.எஸ்.டி. அப்பளராஜூ' ஸ்க்ரிப்ட் ரெடி.

அமலாபுரம் அப்பளராஜூ ரம்பா தியேட்டரில் ஒரு தெலுங்குப் படத்தை விடுவதில்லை. அது எவ்வளவு த்ராபை படமாக இருந்தாலும் சரி. எப்படியாவது டைரக்டர் ஆகிவிட வேண்டும் என்பது அவன் கனவு. தேவதாஸ், சங்கராபரணம், கீதாஞ்சலி ரேஞ்சுக்கு ஒரு காவியத்தைப் படைத்துவிட வேண்டும் என்பது லட்சியம். 'நாயகி' என்கிற ஹீரோ ஓரியண்டட் சப்ஜெக்ட்டைத் தயார் செய்கிறான். அமலாபுரத்துக்கு ஜூட் விட்டுவிட்டு, ஹைதராபாத்துக்கு கிளம்புகிறான். ஓர் உப்புமா தயாரிப்பாளர் மாட்டுகிறார். ஏதேதோ கோல்-மால் செய்து, படைப்பு அடிப்படையில் ஆயிரம் சமரசங்களோடும், போராட்டங்களோடும் இறுதியாக 'நாயகி' வண்ணத் திரைக்கு வருகிறாள். ஆந்திராவின் அதிகபட்ச விருதான குர்ரம் விருது (குதிரை விருது – நந்தி விருதுக்கு மாற்றாக) அப்பளராஜூக்கு கிடைக்கிறது. அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தாலும், அவன் மட்டும் மனதுக்குள் அழுது வெளியே சிரிப்பதாக படம் முடிகிறது. ஏனெனில் காவியம் படைக்க நினைத்தவன், காமெடிப்பட இயக்குனர் ஆகிவிடுகிறான்.

தமிழில் வெளிவந்த 'வெள்ளித்திரை' பாணியில் படம் முழுக்க சினிமாவுக்குள்ளிருந்தே சினிமாவை கிண்டலடிக்கிறார் வர்மா. டோலிவுட்டின் ஒரு ஹீரோ பாக்கியில்லை. கவனமாக என்.டி.ஆரை மட்டும் தவிர்த்திருக்கிறார். ஹீரோக்கள் மட்டுமல்ல. ஹீரோயின், தயாரிப்பாளர், உதவி இயக்குனர்கள், இசை அமைப்பாளர், பாடலாசிரியரில் தொடங்கி விநியோகஸ்தர்கள், கார்ப்பரேட் சினிமா நிறுவனங்கள், விமர்சன ஊடகங்கள் வரை ஓட்டு ஓட்டுவென செம ஓட்டு ஓட்டுகிறார். ஒவ்வொருவனும் அவனவனுக்கு ஹீரோ. உலகம் கோமாளியாக அவனைப் பார்த்தாலும் கூட. இந்த உளவியலை படத்தின் ஒவ்வொரு பாத்திரத்துக்கும் பொருத்துகிறார். காமெடியனை ஹீரோவாகப் போட்டு, காமெடி காட்சிகளை நிறைத்திருந்தாலும் (பாடல் காட்சிகளும் கூட காமெடிதான்), 'கே.எஸ்.டி. அப்பளராஜூ' ஒரு சீரியஸ் சினிமா. தான் சார்ந்த துறையை, தன்னுடைய சொந்த அனுபவங்களின் வாயிலாக, இத்தனை ஆண்டுகள் கழித்து கேலியாகப் பார்க்கிறார் ராம்கோபால் வர்மா.

கேங்ஸ்டர் படங்களுக்குப் பெயர் போன இயக்குனர் காமெடிப் படத்தை இயக்கியிருக்கிறார் என்பதால் எதிர்ப்பார்ப்பு, டோலிவுட்டில் அதிரிபுதிரியாக இருந்தது. படத்தில் வர்மாவால் காயடிக்கப்பட்ட சினிமா விமர்சகர்கள், நிஜத்திலும் கொதித்துப் போயிருக்கிறார்கள். கே.எஸ்.டி.யை டார்டாராக கிழித்தெறிந்து விட்டார்கள்.

வெளியான முதல் நாளிலேயே கே.எஸ்.டி.க்கு அநியாயத்துக்கு கெட்ட பேர். இரண்டேமுக்கால் மணி நேரம் படம் ஓடுவதை ஒரு பெரிய குறையாக விமர்சகர்கள் முன்வைத்தார்கள். நல்ல ஓபனிங் கிடைத்தும், அடுத்து பிக்கப் ஆக படம் திணறிக் கொண்டிருந்தது. எனவே படத்தின் நீளத்தில் 32 நிமிடங்களை குறைத்து, இப்போது திரையரங்குகளில் திரையிட ஏற்பாடு செய்திருக்கிறார் இயக்குனர். எப்படியாவது படம் ஸ்லோ பிக்கப் ஆகிவிடும் என்பது லேட்டஸ்ட் செய்தி.

- * - * - * - * - * - * - * - * - * - * -

பி.கு : இந்தக் கட்டுரையை, தினகரன் வெள்ளிமலரில் WOODடாலங்கடி எழுதிவரும் கே.என்.சிவராமனுக்கு tribute செய்கிறேன்.

19 பிப்ரவரி, 2011

நடுநிசி நாய்கள்!

ஆபாசம் ஒரு பிரச்சினையா? நிச்சயமாக இல்லை. அடிப்படையில் ஒரு ஆபாச இலக்கிய ரசிகன் என்பதால் நிச்சயமாக நமக்கு அந்தப் பிரச்சினையே இல்லை. ஆபாசத் தொடர் எழுத்தாளன் என்று வினவுத் தோழர்களாலேயே பாராட்டப்பட்டோம் என்பதால் சர்வநிச்சயமாக நமக்கு அந்தப் பிரச்சினை இல்லவே இல்லை. 'பிட்டு' படங்களை பரங்கிமலை ஜோதி, போரூர் பானு, மவுண்ட்ரோடு கெயிட்டி, ஆலந்தூர் ராஜாவென்று தேடித்தேடிப் பார்த்திருக்கிறோம் என்கிற முறையில் 'ஆபாச எதிர்ப்பு' மனநிலை நமக்கு சுத்தமாக இல்லை.

ஆயினும் 'நடுநிசி நாய்களை' கடுமையாக எதிர்க்கிறோம். தெருநாய்களால் கூட புணரப்பட லாயக்கில்லாதவை இந்த நடுநிசி நாய்கள் என்று நம்புகிறோம். தயவுசெய்து இந்தப் படத்தை யாரும் திரையரங்குக்குச் சென்று பார்த்து ஆதரிக்க வேண்டாமென்று வேண்டுகோளும் விடுக்கிறோம். மீறி பார்ப்பவர்கள் திரையைப் பார்த்து – சரியாக கவுதம் மேனன் பெயர் டைட்டிலில் காட்டும்போது – பான்பராக், மாவா போட்டாவது எச்சிலைத் திரட்டி கொத்தாக காறித்துப்பி விட்டு வருமாறு (சத்யம், ஐனாக்ஸாக இருந்தாலும் பரவாயில்லை) கேட்டுக் கொள்கிறோம்.

ரஜினியை, ஷாருக்கை பார்த்து இளைஞர்கள் 'தம்' அடிக்கிறார்கள் என்கிற வாதத்தில் நமக்கு பெரிய நம்பிக்கையில்லை. ஆனால் கவுதம் மேனனின் நடுநிசி நாய்களை கண்டுகளிக்கும் விடலைப் பையன் ஒருவன் குறைந்தபட்சம் நாலு பாலியல் வன்புணர்வு, இரண்டு படுகொலைகளையாவது செய்யக்கூடிய வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. 90களின் மத்தியில் கெயிட்டி திரையரங்கில் நாம் கண்டுகளித்த நேரடி நீலப்படமான 'மதன மர்ம மாளிகை', Content அடிப்படையில் இப்படத்தை விட ஆகச்சிறந்தது.

'ஆபாசம்' என்கிற நம்முடைய வழக்கமான அளவுகோலில் – அதாவது பெண்களின் பெருத்த மார்புகள், ஆழமான தொப்புள் சுழி, மதமதவென தொடைகள் – ஒரு காட்சியை கூட கவுதம் மேனன் காட்டவில்லை. இது எதுவுமே இல்லாமல் நடுநிசி நாய்களில் காட்டப்படக் கூடிய ஒரு வன்புணர்வு காட்சி குறைந்தது ஆயிரம் காமக்கொடூர சைக்கோக்களை உருவாக்கக்கூடிய வல்லமை கொண்டது. வயது வித்தியாசம், உறவுமுறை பாராமல் காணக்கிடைக்கிற பெண்களை எல்லாம் பாலியல் பண்டமாக நுகர்வுகொள்ள மோகம் கொள்ள வைக்கும் வலிமை வாய்ந்தது.

எவ்வளவோ இன்செஸ்ட் கதைகள் இணையத்தில் காணக்கிடைக்கிறது. அப்பா-மகன் இன்செஸ்ட் இதுவரை ஒன்றுகூட நாம் வாசித்ததில்லை. அதற்காக அப்படி ஒரு உறவே சாத்தியமில்லை என்று கருதக்கூடிய அளவுக்கு நாம் முட்டாள்களும் அல்ல. கவுதம் மேனனின் வக்கிரம் பிடித்த மூளை கூட்டு பாலியலோடு இணைத்து தந்தை-மகன் உறவை கொச்சைப்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டில் ஒரே ஒரு மகன், தன் அப்பாவைக் கண்டு தன்னை தவறாகப் பயன்படுத்திக் கொள்வாரோ என்று அஞ்சிவிட்டாலும் கூட, அந்த அப்பா நேராக இந்தப் படத்தின் படக்குழுவினரை தேடிப்பிடித்து செருப்பால் அடிக்க வேண்டும்.

'ஓத்தா, ங்கொம்மால..' போன்ற அருமையான சொற்பிரயோகங்களை எந்த எந்த இடங்களில் பயன்படுத்துவது என்கிற குறைந்தபட்ச அறிவுகூட இல்லாமல், கண்ட இடங்களிலும் தேவையின்றி பயன்படுத்துகிறார் இந்த 'பீட்டர்' இயக்குனர். இவருக்கு இந்த வார்த்தைகளை திரையில் கொண்டு வருவதில் அப்படி ஒரு Passion என்பது இவருடைய முந்தையப் படங்களை காண்பதிலும் புரிந்துகொள்ள முடிகிறது. நடுநிசி நாய்களைப் பார்த்துவிட்டு ஒவ்வொரு ரசிகனும், இயக்குனரை தியேட்டரில் இதே வார்த்தைகளை சொல்லித் திட்டுகிறான் பாருங்கள். அதுதான் இவ்வார்த்தைகளை பிரயோகிப்பதற்கான சரியான தருணம்.

"என்னா கேமிரா? என்னா எடிட்டிங்? என்னா ஷாட்?" என்று கவுதமின் வழக்கமான மெட்ரோ மொக்கைகள் வேண்டுமானால் நடுநிசி நாய்களை கொஞ்சலாம். செங்கல்பட்டுக்கு அந்தப் பக்கமாக இப்படத்தின் போஸ்டர் மீது தமிழ் ரசிகன் நிச்சயமாக ஒண்ணுக்கு அடிப்பான்.

ஆர்.கே. செல்வமணி எடுத்த குற்றப்பத்திரிகை என்கிற மகா மொன்னைப் படத்தையே, 'வன்முறையை தூண்டும்' என்கிறமாதிரி ஏதோ சப்பைக் காரணம் காட்டி, இந்திய தணிக்கைக் குழு தடை செய்தது. தொழில்நுட்பரீதியிலாக உச்சபட்ச நேர்த்தியோடு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த நேரடி விஷத்தை இந்தியப் பார்வையாளர்களுக்கு எப்படி தணிக்கைக்குழு சான்றிதழ் கொடுத்து பரிந்துரைத்திருக்கிறது என்று புரியவில்லை.

நமக்கு மரணதண்டனை மீது ஒப்புதல் இல்லை. ஆனால் நடுநிசி நாய்கள் ஒவ்வொன்றும் தூக்கிலிடப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். Fuck you Damn!

4 பிப்ரவரி, 2011

பொதுக்கூட்டம்!


சிறுவனாக இருந்தபோது சென்னையில் கலைஞர் கலந்துகொள்ளும் எந்த கூட்டமாக இருந்தாலும் சரி. அப்பா என்னை கட்சிக்கொடி கட்டிய சைக்கிளில் உட்காரவைத்து அழைத்துப் போய்விடுவார். நான் கண்ட பெரும்பாலான கூட்டங்கள் சீரணி அரங்கில் நடந்தவை. சிலநேரம் சிந்தாதிரிப்பேட்டை, சைதாப்பேட்டை, அமைந்தகரை போன்ற இடங்களுக்கும் போய்வந்த ஞாபகம். வடசென்னையில் நடக்கும் கூட்டங்களுக்கு அப்பா மட்டும் போய்வருவார். பரங்கிமலை ஒன்றிய அளவில் நடக்கும் கூட்டங்களில் அப்பா பேசுவார். மைக் பிடித்து அவர் பேசுவதை பெருமையோடு பார்ப்பேன் (இன்றும் ஏராளமான பிளாக் & ஒயிட் புகைப்படச் சொத்துகளை பாதுகாத்து வருகிறேன்). மேடைப்பேச்சு முடிந்து இரவு வீடு திரும்புகையில், எதிர்க்கட்சியினரின் தாக்குதலுக்கும் உள்ளாகியிருக்கிறார். 86 உள்ளாட்சித் தேர்தலில் அப்பாவின் நண்பருக்கு (அதிமுக) மேடையேறி, மழலைக்குரலில் நான் பிரச்சாரமும் கூட செய்திருக்கிறேன்.

சிறுவயது கூட்டங்களின் நினைவு மங்கலாக நினைவுக்கு வருகிறது. தொண்டர்கள் சாரை சாரையாக சைக்கிளில் கருப்புச் சிவப்பு கொடியேந்தி வருவார்கள். திமுகவில் அப்போதெல்லாம் ஏராளமான பேச்சாளர்கள். குறைந்தது இருபது பேராவது பேசி முடித்தபின் தான் 'முக்கியத் தலைகள்' பேசும். கூட்டம் முடிய ஒன்று, ஒன்றரை ஆகிவிடும். நன்றியுரை வரை கூட்டம் கலையாமல், அப்படியே கட்டுக்கோப்பாக இருக்கும். திமுக கூட்டங்களில் 'பெண்கள்' அவ்வளவாக கலந்துகொள்ள மாட்டார்கள். 90 சதவிகிதம் ஆண்கள்தான். மாறாக அதிமுக பொதுக்கூட்டங்களில் கொடிவண்ண சேலையணிந்த மகளிர் கூட்டம் கும்மாளமாக கும்மும். மகளிரை கவரும் கலைநிகழ்ச்சிகள் பலவற்றையும் அதிமுகவினர் ஏற்பாடு செய்திருப்பார்கள் என்பது இதற்கு கூடுதல் காரணம். திமுகவில் வெறும் பேச்சு மட்டும்தான்.

கலைஞர் கலந்துகொள்ளும் கூட்டங்களுக்கு கட்சிக்காரர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் ஏராளமாக வருவார்கள். "என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்பே" என்ற கரகர குரலை கேட்டு கண்ணீர் விட்ட தொண்டர்களை கண்டிருக்கிறேன். அப்பாவும் கூட சினிமா டாக்டர் மாதிரி, கண்ணாடியை கழற்றி லேசாக கண்ணைத் துடைத்துக் கொள்வார். கலைஞர் பேச ஆரம்பித்ததுமே குறைந்தது மூன்று நிமிடங்களுக்கு கரகோஷம் அதிரும். வானவேடிக்கை, பட்டாசு சத்தத்தில் ஏரியாவே அலறும். சத்தத்தில் அவரால் பேச இயலாது. ஆனாலும் கடுமை காட்டாமல் பொறுமையாக சந்தடி அடங்க காத்திருப்பார். இந்த ஆரவாரமான நிமிடங்களில் இனமானப் பேராசிரியர் அவர்களேயில் தொடங்கி சைதைப் பகுதி பொருளாளர் அவர்களே வரைக்கும் 'அவர்களே' சொல்வதற்கான நேரமாக எடுத்துக் கொள்வார்.

பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் அவரை குளோஸ்-அப் எடுக்க வாகாக, அவ்வப்போது அப்படியே 'ஸ்டில்' ஆகிவிடுவதும் அவரது வாடிக்கை. கூட்டத்தில் என்ன முக்கியமான பிரச்சினை என்பதை பேச்சின் ஆரம்பத்திலேயே வெளிப்படுத்திவிடுவார். அப்படி பேசினால்தான் அடுத்த நாள் காலை நாளிதழ்களில் செய்தி இடம்பெறும். அனாயசமாக ரெண்டு, ரெண்டரை மணி நேரம் பேசுவார். இடையில் சோடா, கீடா குடித்ததாக எனக்கு நினைவேயில்லை. பேச்சை முடிக்க 15 நிமிடம் இருக்கும்போது ஒரு 'க்ளூ' இருக்கும். அந்த 'க்ளூ' வாடிக்கையாக எதிரே இருக்கும் தொண்டர்களுக்குப் புரியும். கூட்டத்தில் இருக்கும் மகளிர், கூட்டம் முடிந்ததும் ஏற்படும் நெரிசலில் அவதிப்படாமல் இல்லம் திரும்ப உடனே கிளம்பிவிடுவார்கள்.

மறக்க முடியாத கூட்டமென்றால் சென்னையில் தேசியமுன்னணி தொடக்கவிழாதான். கடற்கரையெங்கும் மனித உடல்களால் ஏற்பட்ட கச கச நெரிசல். என்னை தோள் மீது தூக்கி வைத்து அழைத்துப்போனார் அப்பா. அன்று கண்ட எழுச்சியையும், எண்ணிக்கையையும் திரும்ப வாழ்நாளில் காணவே முடியாது என்று இருபது ஆண்டுகளாக நினைத்திருந்தேன். கடந்தாண்டு கோவையில் நடந்த செம்மொழி மாநாடு அக்குறையைப் போக்கியது.

மதுரை, தஞ்சை, கோவை, சேலம் என்று தமிழகத்தின் பெருநகரங்களில் வசிக்கும் திமுக நண்பர்கள் முன்பெல்லாம் சொல்வார்கள். "சென்னைக்கு வரும்போது தாய்வீட்டுக்குள்ளே நுழையுற எண்ணம் வருதப்பா!". அது உண்மைதான். 1959ல் மாநகராட்சியை திமுக கைப்பற்றியதிலிருந்தே சென்னை திமுகவின் கோட்டைதான். செயிண்ட் ஜார்ஜ் கோட்டை வேண்டுமானால் யாரிடமும் இருக்கலாம். எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்திலேயே சென்னை மட்டும் திமுகவிடம்தான் இருக்கும். இந்தப் பெருமையெல்லாம் 96 வரைக்கும்தான்.

90களின் தொடக்கத்தில் திமுக முகாமில் ஏகப்பட்ட குழப்பம். நானும் கொஞ்சம் வளர்ந்துவிட்டேன் என்பதால், அப்பாவின் உதவியில்லாமல் தனியாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டேன். திமுக கூட்டம் என்றில்லாமல், எந்த கூட்டமாக இருந்தாலும் ஆவலுடன் முன்வரிசையில் போய் உட்கார்ந்துக் கொள்வேன். திராவிடர் கழகத்தில் இணைந்து செயல்பட்டதால், அம்மா அனுதாபியாகவும் இருந்தேன் (அப்போது தி.க., அதிமுகவை ஆதரித்தது). ஆயினும் கொஞ்சநாளிலேயே அம்மாவின் பாசிஸ நடவடிக்கைகள் பிடிக்காமல் போய்விட்டது. திமுகவில் இருந்து வைகோ நீக்கப்பட்டபோது கொதித்துப் போனேன் (உள்ளகரம்-புழுதிவாக்கம் நகர கழகச் செயலாளராக இருந்த குபேரா.முனுசாமி அவர்களின் குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக மதிமுகவுக்கு மாறியதும் ஒரு ஸ்பெஷல் காரணம்). சென்னையெங்கும் நடந்த மதிமுக பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு விடிய விடிய உணர்ச்சிவசப்பட்டு அழுதிருக்கிறேன். சென்னைக்கு வைகோ பாதயாத்திரையாக வந்தால் தாம்பரத்துக்கு அந்தப் பக்கமாக போய் வரவேற்று, பாதம் தேய தேய நகருக்கு நடந்துவருவேன். இந்நாட்களில் எல்லாம் வீட்டில் தினமும் அரசியல் சண்டைதான். அப்பா கலைஞருக்கும், நான் ஆரம்பத்தில் அம்மாவுக்கும், பிறகு வைகோவுக்குமாக சண்டை போட்டுக் கொண்டிருப்போம்.

95-96 காலக்கட்டத்தில் ஜூனியர் விகடன், நக்கீரன் இதழ்களையெல்லாம் தொடர்ச்சியாக வாசித்து, வாசித்து திமுக ஆதரவாளனாக முழுமையாக மாறிவிட்டேன். இடையில் வைகோவின் 'சப்பை'யான பல நடவடிக்கைகளும் (வெறுமனே செண்டிமெண்ட் அரசியல்) இதற்கு காரணம். தேர்தல் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டேன். சென்னை, காஞ்சி மாவட்டங்களில் நடைபெறும் பெரிய கூட்டங்கள் எதையுமே விட்டதில்லை. கலைஞருக்கு விஜயகாந்த் நடத்திய கடற்கரைப் பாராட்டுவிழாக் கூட்டம் பசுமையாக நினைவிருக்கிறது. ஒரு ஓட்டை எக்ஸ்ஃப்ளோரர் வண்டியில் த்ரிபிள்ஸ் போய், கல்யாணி ஹாஸ்பிடல் அருகே விழுந்து வாரி எழுந்து வந்தோம். இந்த காலக்கட்டம் வரையில் மட்டும், சிறுவயதிலிருந்து குறைந்தபட்சம் ஐநூறு, அறுநூறு கூட்டங்களுக்குப் போய்வந்திருப்பேன் என்று நினைக்கிறேன். திமுக, அதிமுக, மதிமுக, திக, பாஜக, ஜனதாதளமென்று கட்சி வேறுபாடெல்லாம் பார்த்ததில்லை. அயோத்தியா மண்டபம் உபன்யாசங்களுக்கு கூட மூன்று, நான்கு முறை சென்று வந்ததுண்டு.

இதற்குப் பிறகு காதல், கருமாந்திரமென்று திசை மாறித் தொலைத்துவிட்டதால் பொதுக்கூட்டங்களுக்கு போய்வரும் பழக்கம் வெகுவாக குறைந்தது. இதற்கேற்றாற்போல சீரணி அரங்கத்துக்கும் 'அம்மா' புண்ணியம் தேடிக்கொண்டார். நகரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்த தோதான இடம் எதுவும் இப்போது சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அதே  சிந்தாதிரிப்பேட்டை, புல்லா ரெட்டி அவென்யூ, காரணீஸ்வரர் கோயில், சின்னமலை என்று மொக்கையான லொக்கேஷன்கள்தான் திரும்ப திரும்பவும்.

இடையில் மடிப்பாக்கத்தில் நடந்த சில கூட்டங்களில் பேசியிருக்கிறேன். இடஒதுக்கீட்டுக்காக திமுக நடத்திய பொதுவேலைநிறுத்தம் குறித்து விளக்கம் கூறி நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் ஆவேசமாகப் பேசினேன். அப்பாவின் அந்தக் காலத்து நண்பரான ஆர்.எஸ்.பாரதி, பெருமையோடு என்னைப் பாராட்டினார்.

கலைஞரின் 83வது பிறந்தாள் என்று நினைவு. சின்னமலையில் நடந்த பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நினைவிருக்கிறது. பெரியார், அண்ணா ஆகியோரின் சிந்தனைகளையே இன்னமும் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறோம். கலைஞர் புதிய சிந்தனைகளை உருவாக்க வேண்டுமென வீரபாண்டியார் கர்ஜித்தார். அவ்வளவு சுவாரஸ்யமான கூட்டங்கள் எல்லாம் இப்போது எங்கே நடக்கின்றன? இப்போதெல்லாம் கண்டன ஆர்ப்பாட்டங்களும், மறியலும்தான் நடக்கிறது. பொதுக்கூட்டம் எங்கே நடக்கிறது?  இப்போதெல்லாம் டிவியும் பெருமளவு பயன்பாட்டுக்கு வந்துவிட்டதால், பெரிய கூட்டங்களை லைவ்வாகவே கலைஞர் செய்திகளிலும், ஜெயா நியூஸிலும், கேப்டன் டிவியிலும் பார்த்துக்கொள்ள முடிகிறது.

நேற்று திமுக பொதுக்குழு விளக்கக்கூட்டம் சைதையில் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. சைதை மாதிரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் திமுகவினர் கிரிக்கெட் போட்டிதான் நடத்துவார்கள். இப்போது பொதுக்கூட்டம் நடத்துகிறார்கள் என்றதுமே ஆவலோடு விரைந்தேன். அடடா.. என்னே அற்புதம்? 96க்கு முந்தைய காலக்கட்டம் நினைவுக்கு வருகிறது. சாரை சாரையாக தொண்டர்கள். பெரிய மைதானம். பிரம்மாண்டமான மேடை. எதிரே மைதானம் முழுக்க மனிதத் தலைகள். குறைந்தபட்சம் 50,000 பேராவது கூடியிருப்பார்கள். ஆச்சரியப்படும் வகையில் மகளிர் கூட்டம் அதிகமாக இருந்தது. திமுக பழைய மேடைப்பேச்சு கலாச்சாரத்தை மீண்டும் வழக்கில் கொண்டு வருவதாக தோன்றுகிறது. ஏனெனில் ஊடகங்களில் பெரும்பாலானவை திமுகவுக்கு எதிராக மாறிவிட்ட சூழல் நிலவுகிறது. எனவே மக்களை இனி நேரடியாகவே சந்திக்க திமுக தலைமை முடிவெடுத்திருக்கலாம்.

ஜெ. அன்பழகன், சற்குணப் பாண்டியன், ஆற்காடு, தளபதி, பேராசிரியர் என்று அனைவரும் பேசி முடிக்க.. இரவு 9 மணிக்கு மைக்கைப் பிடித்தார் கலைஞர். "என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே!" கரகர குரலைக் கேட்டதுமே, அந்தக் காலத்தில் கேட்ட அதே கரகோஷத்தை பலவருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கேட்டேன். இந்தக் குரலை கேட்கவே கூடியிருந்த கூட்டம் மொத்தமும் எழுந்து நின்று, கைகளை விரித்து உதயசூரியன் சின்னத்தை மேடை நோக்கி காட்டியது. எனக்கு அருகில் அமர்ந்திருந்த 60 வயது மதிக்கத்தக்க உடன்பிறப்பு ஒருவர், துண்டு எடுத்து கண்களை துடைத்துக் கொண்டார். எனக்கு அப்பா ஞாபகம் வந்தது.