‘சென்னை எக்ஸ்பிரஸ்’ பார்த்துவிட்டு மஹிந்திரா க்ரூப்பின் சி.எம்.டி. ஆனந்த்
மஹிந்திரா ட்விட்டரில் இயக்குனர் ரோஹித்ஷெட்டியை பாராட்டியிருந்தார். சிறுவயதிலிருந்தே
ஆனந்தும் லுங்கி அணிகிறாராம். அதற்காக கிண்டலும் செய்யப்படுகிறாராம். சக லுங்கியன்
என்கிற முறையில் ஆசுவாசமாக இருக்கிறது. ஒரு மெயின்ஸ்ட்ரீம் சினிமா, லுங்கி டான்ஸ்
மூலமாக லுங்கியை கவுரவித்திருக்கிறது என்பது உலகம் முழுக்க பரவியிருக்கும்
லுங்கியார்வலர்களுக்கு ஆதரவான விஷயம்தான்.
பத்து வயதில் இருந்து லுங்கி
அணிகிறேன். அப்போதெல்லாம் மாஸ்டர் லுங்கி என்று உயரத்திலும், சுற்றளவிலும் வாமனன்
ஆக்கப்பட்ட லுங்கிகள் ரெடிமேடாக கிடைக்கும். பெரியவர்கள் அணியும் லுங்கியின்
ரெட்யூஸ் டூ ஃபிட் மாதிரி கவர்ச்சியாக இருக்கும். இப்போது மாஸ்டர் லுங்கி
கிடைக்கிறதா தெரியவில்லை. பாய்கள் கூட பெர்முடாஸுக்கு மாறிவிட்ட கலிகாலம் இது.
அப்பா, பிராண்டட் தயாரிப்பாகதான்
வாங்கிக் கொடுப்பார். லுங்கி, ஜட்டி, பனியன் விஷயங்களில் சிக்கனம் பார்க்கக்கூடாது
என்பது அவர் தரப்பு நியாயம். பிற்பாடு வளர்ந்து எனக்கு நானே உள்ளாடைகளை
வாங்கும்போது, காசுக்கு சுணங்கி லோக்கல் தயாரிப்புகள் வாங்கி அவதிப்பட்டதுண்டு.
காட்டன் லுங்கிதான் பெஸ்ட். க்ரிப்பாக
நிற்கும். என்ன பிரச்சினை என்றால் டிசைன்கள் குறைவு. டீக்கடை மாஸ்டர்கள்
பாலியஸ்டர் அணிவதுண்டு. புள்ளி, ஸ்டார் போட்ட வகை வகையான டிசைன்களில் கிடைக்கும்.
ஒரே பிரச்சினை. இடுப்பில் நிற்காது. ஒரு முறை ஆசைப்பட்டு வாங்கி கருடகர்வ பங்கம்
ஏற்பட்டு விட்டது.
முதன்முதலாக லுங்கி அணிந்தபோது
நான் அடைந்த உணர்வு சுதந்திரம். இவ்வுணர்வை வார்த்தைகளால் விவரிக்க இயலுமா என்று
தெரியவில்லை. பெண்கள் நைட்டி அணியும்போது இதே உணர்வை அடைவார்கள் என்று
கருதுகிறேன். இருபத்தைந்து ஆண்டுகளாக லுங்கிதான் வீட்டில் இருக்கும்போது அணியும்
சீருடை. மேலே சட்டையோ, பனியனோ இல்லாமல், இடையில் ஒரு லுங்கியை மட்டும் செருகிக்கொண்டு,
கட்டிலில் சாய்ந்து, இடுப்புக்கு மட்டும் ஒரு தலைகாணி முட்டுக்கொடுத்துவிட்டு
புத்தகம் வாசித்துப் பாருங்கள். வாசிப்பின்பம் என்கிற சொல்லின் பொருள் புரியும் (இதே
உடையில், இதே பாணியில் டிவி பார்த்தாலும் இதே சிற்றின்பத்தை பெறலாம்).
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு
லுங்கி ஓரளவுக்கு கவுரவமான ஆடையாகதான் கருதப்பட்டது. லுங்கியை தூக்கிக் கட்டுவதில்
ரெண்டு மூன்று ஸ்டைல் உண்டு. ஒருவர் தூக்கிக் கட்டியிருப்பதின் லாவகத்திலேயே அவருக்கு
லுங்கி கட்டுவதில் எவ்வளவு நீண்ட அனுபவம் இருக்கிறது என்பதை கண்டுகொள்ளலாம்.
படம் பார்க்க தியேட்டருக்கு
போகும்போது லுங்கியில் போயிருக்கிறேன். கல்யாணம் மாதிரி விசேஷங்களில் கூட புது லுங்கி,
வெள்ளைச்சட்டையோடு கம்பீரமாக வந்த விருந்தினர்களை பார்த்திருக்கிறேன். பேருந்தில்,
ரயில்களில், பொது இடங்களில் எங்கெங்கும் லுங்கிவாலாக்கள் நிறைந்திருந்த பொற்காலம் அது.
கோயில் மட்டும் விதிவிலக்கு.
தந்தை பெரியார் லுங்கியை விரும்பி
அணிந்திருக்கிறார். மலேசிய சுற்றுப்பயணத்தின் போது தன்னுடைய துணைவியாரையும் லுங்கி
அணியச் செய்திருக்கிறார். கலைஞரின் வீட்டில் எடுக்கப்பட்ட படங்களில் அவர்
லுங்கியோடுதான் இருந்திருக்கிறார். எம்.ஜி.ஆருடைய தனிப்பட்ட படமொன்றில் கூட அவர்
லுங்கி அணிந்திருந்ததை கண்டிருக்கிறேன். சாதாரண மனிதர்களில் தொடங்கி, வி.ஐ.பி.க்கள்
வரை லுங்கியை நேசித்திருக்கிறார்கள் என்பதற்காக இதைச் சொல்லவருகிறேன். சினிமாவில்
மட்டும்தான் பணக்காரர்கள் (குறிப்பாக சிவாஜி, மேஜர் சுந்தர்ராஜன்) ஹவுஸ்கோட்
போட்டிருப்பார்கள். எனக்குத் தெரிந்த பணக்காரர்கள் வீடுகளில் லுங்கிதான்
அணிந்திருந்தார்கள். ஆண்களின் இல்லறத்துக்கும் ஏற்ற உடை லுங்கிதான். இந்த ‘இல்லற
விஷயத்தில்’ வேட்டிக்கு வேறு சிக்கல்கள் உண்டு. அதை தனியாகப் பேசுவோம்.
மில்லெனியம் கருமாந்திரம்
வந்தாலும் வந்தது. நம்முடைய லைஃப்ஸ்டைல் ஒட்டுமொத்தமாக மாறிப்போய்விட்டது.
அசிங்கமாக தொடையைக் காட்டும் பெர்முடாஸ்கள் உள்ளே நுழைந்துவிட்டது. கிழம் கட்டைகள்
கூட இன்று வேட்டியையும், லுங்கியையும் புறக்கணித்துவிட்டு பெர்முடாஸோடு வாக்கிங்
என்கிற பெயரில் ஆபாசமாக அலைகின்றன. ஆனால் இவர்கள் சொல்கிறார்கள், லுங்கி அசிங்கமான
உடையாம். லுங்கி என்பது விளிம்புநிலை மக்களின் உடையலங்காரம் என்கிற பொதுப்புத்தியை
சினிமாவும், ஊடகங்களும் எப்படியோ மக்கள் மனதில் பதியவைத்துவிட்டன.
இன்று லுங்கி அணிந்துச் சென்றால்
தியேட்டரில் கூட அனுமதிக்க தயங்குகிறார்கள். மல்ட்டிப்ளக்ஸ்களில் வாய்ப்பே இல்லை. லுங்கி வெறியனான எனக்கும் கூட வீட்டை விட்டு அதை அணிந்து வெளியே வர தயக்கமாகதான் இருக்கிறது. தீண்டத்தகாதவனை
மாதிரி சமூகம் பார்க்கிறது. லுங்கியை தேசிய உடையாக அங்கீகரிக்கக்கூடிய விளிம்புநிலை
மனிதர்கள் கூட இன்று பேண்ட் அணிய ஆரம்பித்துவிட்டார்கள். லுங்கி அணிந்த ஆட்டோ ஓட்டுனரை
பார்த்து எவ்வளவு நாள் ஆகிறது. உலக வரலாற்றில் லுங்கிக்கு இம்மாதிரியான
சோதனைக்காலம் முன்னெப்போதும் இருந்ததில்லை.
உலக லுங்கியர்களே ஒன்றுபடுங்கள்!
தொடர்புடைய ஆராய்ச்சிப் பதிவு : லுங்கி
தொடர்புடைய ஆராய்ச்சிப் பதிவு : லுங்கி
எங்க ஊரில் லுங்கிக்கு பெயர் ‘சாரம்’.
பதிலளிநீக்கு16 வய்துக்கு பிறகுதான் ‘சாரம்’ கட்ட அனுமதிக்கப்பட்டேன்.
ஒரு தீபாவளிக்கு அடம் பிடித்து சாரமும்,பாலியெஸ்டர் சட்டையும் வாங்கினேன்.
சாரம் கட்டுவது என்னை பொறுத்தவரை ஆண்மையின் அடையாளம்.
பெர்முடாசை இன்றும் தீண்டத்தகாத லிஸ்டில் வைத்திருக்கிறேன்.
லுங்கி நம்ம ஃபேவரைட்...கேரளாவுல எப்படி காவி வேட்டி ஒரு அடையாளமா இருக்கோ அது மாதிரி லுங்கி இருந்திருக்கணும்.கால மாற்றம்..லுங்கி அணிபவர்களை ஒரு மாதிரியாய் பார்க்கிற நிலைமை வந்து விட்டிருக்கிறது.
பதிலளிநீக்குவீட்ல நமக்கு எப்பவும் லுங்கி தான்..பெஸ்ட்..
Ben Affleck has been cast as Batman in a forthcoming Superman sequel, bringing together the two superheroes in one film for the first time.
பதிலளிநீக்குபோஸ்ட்க்கும் படத்திற்க்கும் தொடர்பு இல்லாதபோது, போஸ்ட்க்கும் காமண்ட்டுக்கும் தொடர்பு இருக்கனுமா என்ன?
Look at the photo again. A lungi wearing person is ogling at the foreigners.
நீக்குலுங்கியில் இருக்கும் சவுகர்யம் பெர்முடாஸ்களுக்கு இல்லை என்பதே என் எண்ணம்
பதிலளிநீக்குநானும் ஒரு சாரப் பிரியன். எனக்கு 7/8 வயதாக இருக்கும்போதே அம்மா எனக்காக சாரம் (லுங்கி)தைத்து தந்தார். அன்றுமுதல் இன்றுவரை அதுவே எனது வீட்டுடை.
பதிலளிநீக்குஒருமுறை எனது கட்டட மின் தூக்கியில் (Lift) சாரத்துடன் பார்த்த ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி "What kind of skirt is this?" என்று கேட்டது இன்னமும் சிரிப்பை வரவைக்கும் நிகழ்வாகும்.
என்னைப் பொறுததவரை உடையில் எந்த உயர்வு தாழ்வும் இல்லை. அது அணிபவர் மனத்திலேயே உள்ளது.
நல்ல பதிவு.
good one
பதிலளிநீக்குஎன்னதான் லுங்கி சார்பாக சப்பைக்கட்டு கட்டினாலும், லுங்கி அசிங்கமான உடை என்பதில் ஐயமில்லை. லுங்கி அணிபவர்களைப் பார்த்தால் எனக்கு கசாப்புக்கடை முதலாளி நினைவுக்கு வருகிறது.
பதிலளிநீக்குதுவைத்துக் கட்டிய நாலுமுழ வேட்டியும் ஒரு காட்டன் சட்டையும் வீட்ட்டில் இருக்கும்போது அணிந்தால் ஏற்படும் மகிழ்ச்சியும் அமைதியும் லுங்கி தராது.
பத்திரிகைக்காரர்கள் “கபாலி” காரக்டரை மதிப்பிழக்கச் செய்வதுபோல, லுங்கியும் ஒருநாள் ஒழிந்து போகும் என்பது என் கருத்து.
அய்யா உங்க வயசுக்கு பல்வேறு stereotyping-க வாழ்க்கையில சந்திச்சிருப்பீங்கன்னு நம்பறேன்.
நீக்குசரியா சொன்னிங்க , தமிழ் சினிமாவில் லுங்கி டான்ஸ் காட்டி அதன் இமேஜை கெடுத்து விட்டார்கள் என்று நினைக்கிறேன் ,லுங்கியின் சுகமே வேறு , இன்றைய பெர்முடாஸ் அதன்கு முன் தூசு .
பதிலளிநீக்குWhat irritates me is racist North Indians call even Dhoti as Lungi.
பதிலளிநீக்கு@ஒரு வாசகன்
பதிலளிநீக்கு//போஸ்ட்க்கும் படத்திற்க்கும் தொடர்பு இல்லாதபோது//
அண்ணே, படத்துல நம்மாளு ஒருத்தர் கைலி கட்டிக்கிட்டு படுத்திருக்காரே பாக்கலையா ??நீங்களும் அவர போலவே அம்மணியவே பாத்தீங்க போலிருக்கு :)
Saturn730
'சாரம்' கட்டிய சுகாவின் அனுபவம்
பதிலளிநீக்குAlso at: http://throwww.com/a/msv
kaithari (handloom) lungies are going to non-existence phase due to textile revolution...Give hand to the weavers.............
பதிலளிநீக்குநான் இன்னும் கூட லுங்கி நேசிப்பாளன் தான்.
பதிலளிநீக்குஎங்கள் முன்னோர்கள் தான் லுங்கி தயாரிப்பாளர்கள்.
எனக்கும் கைத்தறியின் ஒரு பகுதி வேலை தெரியும்.
நான் லுங்கி அணிந்துகொண்டு தேவி paradise ல்
இரவுக்காட்சி கூட சென்றுள்ளேன்.
உண்மையில் அந்த காலம் பொற்காலம் தான்.
நான் லுங்கி உடுத்திக்கொண்டு பாரிஸ் நகர வீதிகளிலே உலாவியிருக்குறேன்.
நீக்குசுவாமி,
நீக்குகருடகர்வ பங்கம் என்றால் என்ன என்று விளக்கினால் தன்யனாவேன். இணையம் முழுக்கத் தேடிப்பார்த்தேன். பொருள் கிடைக்கவில்லை.
டியர் யுவா சார்,
பதிலளிநீக்குஅருமையாக ரசனையாக எழுதப்பட்ட பதிவு! சமூக அங்கீகாரம் என்பதை தாண்டி,பெர்முடாசில் உள்ள பல சௌக்கர்யங்கள் லுங்கியில் இல்லை.
1.பெர்முடாஸ் அணிவதற்கு அனுபவம்/பழக்கம் தேவையில்லை.யார் வேண்டுமானாலும் அணியலாம்.
2.3/4 - பெர்முடாஸ் எளிதில் கழன்டு விழாது.
3.இரண்டு பக்கம் பாக்கெட் இருப்பதால் மொபைல் கர்சீப் பர்ஸ் போன்றவற்றை எடுத்துசெல்வது சுலபம்.
4.தெரு நாய் துரத்தினால் ஓடி தப்பிப்பது எளிது.
5.மாடி படிகளில் ஏறும்போது எளிதில் தடுக்காது.
6.மாடியில் நடக்கும்போது, நாற்காலியில் அமரும் போது, கால்களை சேர்த்து வைத்துக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.
7.பெர்முடாசில் சைக்கிள் ஓட்டுவது வெகு சுலபம்.
8.தூங்கும் போது அவிழ்ந்து மூலைக்கு சென்று விடாது.
9. western toilet டுக்கு ஏற்ற உடை பெர்முடாஸ்.
10.உடல்பயிற்ச்சி செய்யும்போது பெர்முடாஸ் ரொம்ப வசதியாக இருக்கும்.
ஆகா அணிவதற்கு சுகம், கலாசாரம் என்பதை தாண்டி லுங்கியால் பெரிய பயன் ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை.
மேலே சட்டையோ, பனியனோ இல்லாமல், இடையில் ஒரு லுங்கியை மட்டும் செருகிக்கொண்டு, கட்டிலில் சாய்ந்து, இடுப்புக்கு மட்டும் ஒரு தலைகாணி முட்டுக்கொடுத்துவிட்டு புத்தகம் வாசித்துப் பாருங்கள். வாசிப்பின்பம் என்கிற சொல்லின் பொருள் புரியும் (இதே உடையில், இதே பாணியில் டிவி பார்த்தாலும் இதே சிற்றின்பத்தை பெறலாம்).
பதிலளிநீக்குஇந்த இன்பத்தை பெர்முடாஸ் குடுக்குமா?
நான் பல முறை பொது நிகழ்ச்சிகளுக்கு, டிவி. விவாதங்களுக்கு லுங்கி அணிந்து சென்றிருக்கிறேன். சில வருடங்கள் முன்பு கமலா தியேட்டர் சீரமைப்பு செய்யப்பட்டபின் லுங்கி அணிந்து வருவோருக்கு அனுமதி கிடையாது என்று போர்டு வசித்தது. அதைக் கண்டித்து என் பத்தியில் எழுதினேன். விதியைத் திரும்பப் பெறுவதாக தியேட்டர் மேனேஜர் எனக்கு போன் செய்து சொன்னார். அடுத்து லுங்கி அணிந்து அங்கே படம் பார்க்கச் சென்றேன். சில வருடம் முன்னர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் நான் புத்தகக் காட்சியில் என் அரங்குக்கு லுங்கி அணிந்து வரும் துணிவு உண்டா என்று கேள்வி எழுப்பினார்கள். என் வசச்ம் இருந்த லுங்கிகள் அப்போது கிழிந்துவிட்டிடிருந்தன. அவர்கள் புது லுங்கி வாங்கிக் கொடுத்தால் அதை அணிந்து வருவேன் என்று சொன்னேன். வாங்கிக் கொடுத்தார்கள். அணிந்துகொண்டு என் அரங்குக்கும் அவர்கள் அரங்குக்கும் சென்றேன். லுங்கி பொது உடை என்பது என் உறுதியான கருத்து.
பதிலளிநீக்குலுங்கி/சாரம் என்பதை வைத்து அரசியல் ,அக்கபோர் நடத்தலாம் என்பதைதெளிவாக புரிந்துகொள்ள முடிந்தது .நன்றிகள் . முன்பு முகனூலில் ஒரு பேராசிரியர் தனது 10வயது மகன் லுங்கி அணிந்துள்ள படத்தை போட்டு,இந்த வயதிலேயே சிறுபான்மை மக்களை மதிக்கும் மனப்பான்மை என்ற கருத்துப்பட பதிவிட்டிருந்தார்.அப்போது எனக்கு ஏற்ப்பட்ட குழப்பம் இந்தப் பதிவு,பின்னூட்டங்கள் மூலம் தீர்ந்து விட்டது .ஞானிஅவர்கள் தனது கருத்தைஉறுதியாக பின்பற்ற வாழ்த்துகள் .
பதிலளிநீக்குஎன் போன்ற எப்போதும் லுங்கி ,சாரம்,கைலி என்று அணியும் பரிதாபப்பட்ட மனிதர்கள் சார்பில் வாதாடி சாரத்துக்கு அங்கீகாரம் பெற்றுத்தர முணைந்த யுவாக்கு மிக்க நன்றி.உங்களின் இந்த லுங்கி புரட்சிக்கு என் போன்ற லுங்கி ஆர்வலர்களின் தார்மீக ஆதரவு எப்போதும் உண்டு.ஒன்று படுவோம்,போராடுவோம்.வேட்டி தினம் போல் லுங்கி தினம் கொண்டு வரும்வரை அயராது உழைப்போம்.
பதிலளிநீக்கு