30 டிசம்பர், 2013

ஆ.ராசா எனக்கு அக்கா மகன்!

வருடத் தொடக்கமாக இருக்குமென்று நினைவு. மயிலாப்பூர் கச்சேரி சாலையில் அந்த டீக்கடையில் அமர்ந்து, அண்ணன் சிவராமனோடு பேசிக்கொண்டிருந்தேன். கடை வாசலில் திடீரென்று விசில் சப்தம். “தெனந்தோறும் ரிச்சா ஓட்டி பொழைக்கிறேன்” கணீரென கானாவோடு கடைக்குள் நுழைந்தார் அந்த விசிலவன்.

கிட்டத்தட்ட நிர்வாணமாக இருந்தார். இடையில் மட்டும் ஜட்டியா அல்லது டவுசரா என்று இனங்கண்டு கொள்ள முடியாத உடை. குள்ளமென்று சொல்ல முடியாது. நடுத்தரமான உயரம். நல்ல கருப்பு. எண்ணெய் காணாத தலை.

எங்களுக்கு அருகில் வந்து அமர்ந்தார். “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, ஓடு ராஜா” வாத்யார் பாட்டை அச்சு அசலான டி.எம்.எஸ். குரலில் பாட ஆரம்பித்தார். “அந்த காலத்துலேயே என்னாமா பாடியிருக்காரு பாரு. அசீத், விசய்க்கெல்லாம் இப்படி பாடுறதுக்கு வக்கிருக்கா?” என்று ஆரம்பித்தார்.

“நல்லா பாட்டுலாம் பாடுவேன். டி.எம்.எஸ்., பி.பி.எஸ்., சிதம்பரம் ஜெயராமன்னு எல்லாரு வாய்ஸும் நம்ம தொண்டைலே வரும்” சொல்லிவிட்டு “வாராய், நீ வாராய்” என்று லேசாக நாக்கை மடக்கி, சுத்தமான ராகத்தில் பாடினார்.

இடையில், “மாஸ்டர் ஒரு டீ!”

“பழைய பாக்கி என்னாச்சி?”

“டேய், வாத்யார் இல்லைன்னா மலையாளத்தானுங்கள்லாம் இங்கே வந்து இந்த அதட்டல் போடுவீங்களா? ஒழுங்கா டீயை கொடுர்றா. எஸ்.ஐ. வந்ததுமே எல்லாத்தையும் செட்டில் பண்ணிடறேன்”

“அதெல்லாம் கிடையாது. பழசுக்கு பதில் சொல்லிட்டு, புதுசா டீ கேளு” மாஸ்டரும் விடுவதாக இல்லை. சிவராமன் தன் கணக்கில் அவருக்கு ஒரு டீ சொன்னார்.

“எங்கே வேலை பார்க்குறீங்க? இங்கன உங்களையெல்லாம் பார்த்ததே இல்லையே?” என்று பேச ஆரம்பித்தார்.

“என்னை இங்கே எல்லாரும் எம்.ஜி.யாருன்னு கூப்பிடுவாங்க. வாத்யார்னு அவ்ளோ வெறி. ஒரு பாட்டு விடாம மனப்பாடமா பாடுவேன். பாடிக்காட்டறேன் பார். இந்த பாட்டு வந்தப்போ, நீங்கள்லாம் அம்மாவோட வவுத்துக்குள்ளே கூட இருந்திருக்க மாட்டீங்க....”

“அச்..ச்..சம் என்ப்பது மடையடாஆஆ.... அஞ்சாமை திராவிடர் உடமையடா.... ஆஆஆஅ... அஞ்சாமை திராவிடர் உடமையடா... டொக்.. டொக்.. டொக்.. டொக்...”

டீ வந்ததுமே கல்ப்பாக அடித்தார். மந்திரிகுமாரி டயலாக் ஒன்றை அப்படியே ஏற்ற, இறக்கத்தோடு படித்தார். “கலிஞ்சரு மாதிரி எழுதுறதுக்கு எவன் இருக்கான்? தமிழு.. தமிழு.. அருவி.. சொற்பொழிவு... பொன்முடி பார்த்திருக்கியா? பாவேந்தர் வசனம். அப்படியே காதல் கொட்டும்” அந்தப் படத்திலிருந்தும் ஒரு டயலாக்கை எடுத்துவிட்டார்.

“படம்னா படம்.. அது ரத்தக்கண்ணீருதான். அடியே காந்தா...” எம்.ஆர்.ராதா வாய்ஸில் பேசினார்.

“சினிமான்னா அம்புட்டு ஆசை. வாத்யாருன்னா இவ்ளோ (கைகளை அகல விரித்துக்காட்டி) உசுரு. அதாலேதான் அப்பவே மெட்ராசுக்கு வந்தேன். ரிச்சா ஓட்டுனேன். எழுபத்திரெண்டிலே கலைஞ்சர் ஃப்ரீயா ரிக்ச்சா கொடுத்தாரு. வாத்யாரு ரெயின்கோட், ஷூவெல்லாம் வாங்கித் தந்தாரு. லவ் மேரேஜி. வைஃபுக்கு நடக்க வராது. விதவைங்க, ஊனமுற்ற பெண்களை கல்யாணம் பண்ணிக்கறதுக்கு நல்லா இருக்குற இளைஞர்கள் தயாரா இருக்கணும்னு பெரியார் பேசினாரு. நான் அவரை ஃபாலோ பண்ணேன். நாந்தான் இப்படியிருக்கேன். என் பசங்க நல்லாதான் இருக்காங்க. வியாசர்பாடிலே வீடு. வீடு கிடையாது குடிசை”

வரிசைக்கிரமமாக இல்லாமல் விட்டு விட்டு பேசினார். இடையிடையில் பாடத்தொடங்கி விட்டார். “தர்மம் தலை காக்கும். தக்க சமயத்தில் உயிர் காக்கும்.... வாத்யார் படத்துலே சூப்பரா கார் ஓட்டுவார். ஒரு சீக்ரட் சொல்றேன் கேட்டுக்கோ. நெஜத்துலே அவரு கார் ஓட்டுனதே இல்லை”

“இன்னொரு டீ சாப்புடலாமா?” சிவராமன் கேட்டார்.

“வாணாம். நா சொல்றதை கேளு. ஆ.ராசா தெரியுமா? அப்படி சொன்னா தெரியாது. ஒரு லட்சத்தி எழுபத்தாறாயிரம் கோடின்னு சொன்னாதான் தெரியும். என் அக்கா மவன்தான். வேணும்னா யாரையா கேட்டு பாரு. நா சொல்றேன். என் மருமவன் அப்படிப்பட்ட ஆளு கிடையாது. அவ்ளோ பணம் சம்பாதிக்கிற ‘தெரவசு’ இருந்தா, ராசாவோட சொந்த பந்தமெல்லாம் ஏன் இப்படி இருக்கப் போறோம்? அநியாயமா பலி போட்டுட்டானுங்க”

எனக்கு ஆச்சரியம் அளவற்றுப் போனது. வெயிட்டான ஒரு ‘ஸ்டோரி’ ரெடியென்று பரபரப்பானேன். திடீரென்று ஏதோ ஒரு அறச்சிக்கல். இவரைப் போய் எதற்கு எக்ஸிபிஷன் ஆக்க வேண்டும் என்று தோன்றியது.

“இப்போ என்னண்ணா பண்ணிக்கிட்டிருக்கீங்க?”

“தோ.. இந்த ஸ்டேஷனுலேதான் வேலை பார்க்குறேன். பெருக்குறது, துடைக்கிறதுலே தொடங்கி எல்லா வேலையும் நான்தான். அய்யாமாருங்க டெய்லி துட்டு கொடுத்துடுவாங்க. ‘சரக்கு’ செலவு போவ மீதி காசு வூட்டுக்கு. இந்த ஸ்டேசனுக்கு வராத வி.ஐ.பி.ங்களே இல்லை. ஐஜிக்கெல்லாம் என்னை நல்லாத் தெரியும். வயசாயிடிச்சி. எனக்கு இன்னா வயசிருக்கும்னு நெனைக்கிறேன். எழுவது கிராஸ் பண்ணிட்டேன்னு நெனைக்கிறேன். ரிச்சா ஓட்டமுடியாது. ஆட்டோலாம் வந்ததுக்கப்புறம் ரிக்ச்சாவுக்கு கஸ்டமரும் கிடைக்கிறதில்லே”

சொல்லிவிட்டு மவுனமாக இருந்தார். நாங்களும் எதுவும் பேசவில்லை. மவுனத்தை உடைக்கும் விதமாக “காலங்களில் அவள் வசந்தம்” என்று பி.பி.எஸ்.ஸை பிரதியெடுத்து பாட ஆரம்பித்தார்.

“உலகத்துலேயே சந்தோஷமான மனுஷனை எங்காவது பார்த்திருக்கியா? இப்போ பார்த்துட்டே. நாந்தான் அது. ஸ்டேஷன்லே தேடுவாங்க. கெளம்புறேன். டீ வாங்கிக் கொடுத்ததுக்கு தாங்க்ஸ்” பகபகவென சிரித்தவாறே சொல்லிவிட்டு கிளம்பினார்.

“அசல் திராவிடன்” என்றார் சிவராமன்.

பிற்பாடு இவரைப் பற்றி வெளியில் விசாரித்தேன். எங்கள் அலுவலக வாசலில் டீக்கடை வைத்திருப்பவர் பெரம்பலூருக்கு பக்கத்தில் குன்னத்தூர்காரர். அதிமுககாரர். அண்ணன் ஆ.ராசா பற்றி நிறைய பேசுவார். “நீ பார்த்தது அ.ராசாவோட தாய்மாமன்தான்னு நெனைக்கிறேன். மயிலாப்பூர் ஸ்டேஷனில்தான் இருக்காரு. வியாசர்பாடி ஊடுன்னு சொன்னதெல்லாம் கரெக்டுதான்” என்றார் அவர்.

இப்போது யோசித்துப் பார்த்தால் அவர் முகம்கூட சரியாக நினைவில்லை. ஆனால் இந்த ஆண்டு நான் சந்தித்த மனிதர்களிலேயே சிறந்த மனிதர் அவர்தான்.

23 டிசம்பர், 2013

என்றென்றும் பிரியாணி

‘தி இந்து’ தமிழ் நாளிதழில் திரைவிமர்சனம் எழுதும் ‘எந்தரோ மாகானுபவலு’ யாரென்று தெரியவில்லை. உயிர்மை, காலச்சுவடு இதழ்களில் வரும் விமர்சனங்களைப் போலவே இலக்கியத் தரத்தோடு எழுதுகிறார். மொக்கை, சுமார் என்று இந்து எழுதும் விமர்சனங்களை வாசிக்கும் மக்கள், நிம்மதி பெருமூச்சு விட்டு “அப்படின்னா படம் நல்லாதான் இருக்கும்” என்று அரங்குகளுக்கு படையெடுக்கிறார்கள். நேற்று இரவுக் காட்சிக்கு மடிப்பாக்கம் குமரனில் ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ ரேஞ்சில் அலை அலையாக, குடும்பம் குடும்பமாக ‘பிரியாணி’க்கு கூட்டம்.

‘விண்ணைத்தாண்டி வருவாயா?’, ‘நீதானே என் பொன் வசந்தம்?’ வரிசையில் மற்றுமொரு ஃபீல்குட் மூவி ‘என்றென்றும் புன்னகை’. சினிமா சமூகத்துக்கு தீமை என்று பிரச்சாரம் செய்யும் பாட்டாளி மக்கள் கட்சியின் தயாரிப்பு. யெஸ், படத்தின் தயாரிப்பாளர் ஜி.கே.எம். தமிழ்குமரனின் தந்தை வேறு யாருமல்ல. அக்கட்சியின் தலைவரான ஜி.கே.மணிதான். ஒரு அரசியல் வாரிசு தயாரித்திருக்கும் இப்படத்தை இன்னொரு வாரிசான ‘ரெட் ஜெயண்ட்’ உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார். இப்போதைய சூழலில் திமுகவும், பாமகவும் அரசியல் களத்தில் கூட்டணி வைத்துக்கொள்ளவில்லை என்றாலும் திரையரங்குகளில் கூட்டணி அமைத்து வெற்றிக்கொடி ஏற்றுகிறார்கள்.

ஆடிக்கொரு முறை, அமாவாசைக்கு ஒரு முறைதான் தமிழில் படங்கள் ஹிட் ஆகுமென்ற நிலைமை மாறியிருக்கிறது. டிசம்பர் 20 தமிழ் சினிமாவுக்கு ஆடி அமாவாசை. ஒரே நாளில் ரெண்டு ஹிட்டு.

தமிழ் சினிமாவை அழிக்க வந்த கோடரிக்காம்பு திருட்டு டிவிடி கூட அல்ல. சென்சார் போர்ட்தான். இவர்கள் தணிக்கை செய்கிறார்களா அல்லது கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்களா என்றே தெரியவில்லை. பிரியாணியில் “இந்தப் பாட்டுக்குதாண்டா எல்லாரும் காத்திக்கிட்டிருக்காங்க” என்கிற கார்த்தியின் அறிமுகத்தோடு வரும் பாட்டு ‘மிஸ்ஸிஸிப்பி’. அந்தப் பாட்டை சேட்டிலைட் சேனல்களில் ‘கட்’ செய்துவிட்டுதான் ஒளிபரப்புவோம் என்று தயாரிப்பாளர்களிடம் வெள்ளை பேப்பரில் எழுதி வாங்கிக்கொண்டுதான் ‘யூ/ஏ’ சான்றிதழ் தந்திருக்கிறார்கள். பாட்டு மோசமென்று தணிக்கைத்துறை கருதினால், அதை ‘கட்’ செய்ய சொல்லி தொலைக்க வேண்டியதுதானே? அதென்ன அதை திரையரங்குகளில் ஒளிபரப்பலாம். டிவிக்களில் ஒளிபரப்பக்கூடாது என்று வெட்டி நிபந்தனை? தமிழ்ப் படங்களை தணிக்கை செய்பவர்கள் இந்தி, தெலுங்குப் படங்களையெல்லாம் பார்க்கிறார்களா இல்லையா? தமிழ் திரையுலகினர் முதலில் போராடவேண்டியது ‘ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு’ என்று செயல்படும் தணிக்கைத்துறையினரின் போக்கை எதிர்த்துதான்.

வருட இறுதியில் தமிழ்நாட்டின் தியேட்டர்களில் பைக் டோக்கன் போடுகிறவரும், கேண்டீன் விற்பனையாளரும் தொடர்ச்சியாக ‘பிஸி’யாகவே இருக்கிறார்கள். தகராறு, இவன் வேற மாதிரி, பிரியாணி, என்றென்றும் புன்னகையென்று வரிசையாக செம கல்லா. போதாக்குறைக்கு ‘தூம்-3’யின் தமிழ் டப்பிங் வேறு அதிரிபுதிரியாக ஓடிக்கொண்டிருக்கிறது. வரும் வருட தொடக்கத்திலேயே ‘வீரம்’, ‘ஜில்லா’வென்று உத்தரவாதமான வசூல் சுனாமி. கங்கிராஜுலேஷன்ஸ் தமிழ் சினிமா!
இணைய சம்பிரதாயப்படி “பிரியாணியில் பீஸ் இல்லை” என்று வழக்கம்போல இணைய விமர்சகர்கள் ஃபேஸ்புக், ட்விட்டரில் மொக்கையான ‘வேர்ட்ப்ளே’ ஸ்டேட்டஸ் போடுகிறார்கள். பாவம் அறிவுக் குருடர்கள். மாயாவாக வரும் மண்டி தாக்கரின் மெகா சைஸ் செஸ்ட் பீஸும், லெக் பீஸும் அவர்களது கண்களுக்கு தெரியவேயில்லை. ‘கட்டிப்புடி, கட்டிப்புடிடா’வுக்கு பிறகு ரசிகர்களுக்கு சிறப்பான எழுச்சி, புரட்சி.

கதை எழுதுபவர்கள் முதல் வரியிலேயே கதையை துவக்கிவிட வேண்டும் என்பது இளம் எழுத்தாளர்களுக்கு சுஜாதாவின் அறிவுரை. ‘பிரியாணி’ பர்ஸ்ட் ஃப்ரேமிலேயே தொடங்கிவிடுகிறது. பின்னர் கார்த்தியின் கேரக்டர் ஸ்கெட்ச்சுக்காக கொஞ்சம் ‘ஸ்லோ’ செய்தாலும், விரைவாகவே டாப் கீர் போட்டு விரைகிறார் இயக்குனர் வெங்கட்பிரபு.

ஆரம்பத்தில் இது ஒரு காமெடி கதையென்கிற தோற்றத்தைத் தந்தாலும், போகப்போக ராஜேஷ்குமாரின் க்ரைம்நாவலுக்கான அத்தனை ‘திடுக்’ திருப்பங்களோடும் த்ரில்லிங்காக பயணிக்கிறது. தமிழ் சினிமாவின் மரியாதைக்குரிய நடிகரான நாசரை எவ்வளவு பாடு படுத்தவேண்டுமோ, அவ்வளவு பாடு படுத்தியிருக்கிறார் இயக்குனர். அவரை ப்ரிட்ஜுக்குள் பிணமாக முடக்கியதில் தொடங்கி, பிரேம்ஜி அமரனை இமிடேட் செய்து நடிக்கவைப்பதென்று அராஜகம், அதகளம்.

எப்படியோ கார்த்திக்கும் ஒரு மாமாங்கம் கழித்து சொல்லிக் கொள்ளும்படியாக ஒரு ஹிட். மங்காத்தா மாதிரி இல்லையென்று குறைப்பட்டுக் கொள்கிறவர்கள், ஒரு விஷயத்தை மறந்துவிடுகிறார்கள். மங்காத்தாவில் ஹீரோ அஜித். யுவன்ஷங்கர் ராஜாவின் நூறாவது படமென்று சொல்லிக் கொள்ள பின்னணி இசையிலோ, பாடல்களிலோ சாட்சியங்கள் எதுவுமில்லை. அறிமுகப் படத்திலேயே இதைவிட சிறப்பான இசையை தந்தவர் யுவன். டைட்டிலில் தொடங்கி, எண்ட் கார்ட் வரை டைட்டான பக்கா எண்டெர்டெயினர்.
ஐ.அஹமத் மீடியாவில் முக்கியமான ஆள். டிவி, ரேடியோ நிகழ்ச்சிகளில் நல்ல அனுபவம். பண்பலை வானொலியான ரேடியோ சிட்டியை தமிழகத்தில் நிறுவியவர். ‘திங் எண்டெர்டெயின்மெண்ட்’ நிறுவனத்தின் பார்ட்னர். யூடிவி மாதிரி பெரிய நிறுவனங்களில் கிரியேட்டிவ் டைரக்டராக இருந்தவர்.

எல்லோரைப் போலவும் இவருக்கும் சினிமா ஆசை. ‘வாமனன்’ என்கிற படத்தை இயக்கினார். “தன் வாழ்நாளின் மாஸ்டர் பீஸ்” என்று இப்படத்தைதான் ஹீரோ ஜெய் முன்பு ஒருமுறை சொல்லி, அவரது மற்ற படங்களின் தயாரிப்பாளர்களிடம் வாங்கி கட்டிக் கொண்டார். நல்ல மேக்கிங் என்று வாமனன் பெயர் வாங்கியிருந்தாலும், கல்லாப்பெட்டி மட்டும் நிரம்பவில்லை. அந்த குறையைப் போக்க ‘என்றென்றும் புன்னகை’ எடுத்திருக்கிறார்.

பானுமதி, சாவித்ரி, குஷ்பு, சிம்ரன் வரிசையில் த்ரிஷாவும் ஏன் இடம்பெறுகிறார் என்கிற கேள்விக்கு விடை இப்படத்தில் இருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு மேல் ஃபீல்டில் இருந்தாலும் அந்த மூஞ்சூறு முகத்தில்தான் இன்னமும் எவ்வளவு அழகு, இளமை, உணர்ச்சிகள். நன்றாக நடிக்கக் கற்றுக்கொண்ட ஜீவாவேகூட காம்பினேஷன் காட்சிகளில் த்ரிஷாவிடம் படுதோல்வி அடைகிறார்.

ஜீவாதான் ஹீரோ. ஆனால் ஹீரோக்குரிய இலக்கணங்கள் எதுவும் அவரிடமில்லை. வாழ்க்கை குறித்த எதிர்மறையான நம்பிக்கை. பெண்கள் என்றாலே பேய்கள் எனும் அவநம்பிக்கை. அளவுக்கதிகமான ஈகோ. கட்டுக்கடங்காத திமிர் என்று முற்றிலும் எதிர்மறையான பாத்திரம். ‘sorry’ என்கிற வார்த்தையை உச்சரிக்கவே மாட்டேன் என்று வீம்பு. படத்தின் எண்ட் கார்ட் போடும்போது ‘ஐ லவ் யூ’ சொல்லுவதில் மட்டுமே சமரசமென்று தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதிய பாத்திரப் படைப்பு. ஜீவாவின் கேரியரில் ஒரு முக்கியமான படம்.

சமீபமாக நொண்டி அடித்துக் கொண்டிருந்த ஹாரிஸ் ஜெயராஜ் ஃப்ரெஷ் ஆகியிருக்கிறார். பாடல்களில் இளமையும், இனிமையும் தாலாட்டுகிறது. போலவே சந்தானமும். “எங்கியாவது லேடீஸ் செருப்பைப் பார்த்தாகூட ஏறிடுவான்” மாதிரி பச்சையான டயலாக்குகள் இருந்தாலும், அது ஆபாசமாக தெரியாத அளவுக்கு சிறப்பான படமாக்கம். கிரேட் ஷோ. வாழ்த்துகள் அஹமத்!

20 டிசம்பர், 2013

பாக்கெட் நாவல் அசோகனுக்கு பாராட்டு விழா


17 டிசம்பர், 2013

கர்ணனோடு நாற்பது வாரங்கள்

ஜனவரி 1, 2013. அண்ணன் சிவராமனும், நண்பர் விஸ்வாவும் சோளிங்கர் மலையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். “குங்குமத்துலே ஒரு தொடர் எழுதணும். கரு சிக்கவே மாட்டேங்குது” என்று கொஞ்சநாட்களாக சொல்லிக் கொண்டிருந்தார் சிவராமன். அன்று காமிக்ஸ், அரசியல், சமூகம், சொந்த வாழ்க்கை, காதல், சினிமாவென்று கலந்துகட்டி மனசுவிட்டு பேசினோம்.
விஸ்வா ஏதோ ஒரு மொக்கை இந்திப்படத்தை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். “படம் பெருசா போகலை. ஆனா நல்ல ஐடியா” என்றார். அந்த ஐடியாவை அவர் சொன்னதுமே, சிவராமன் பிடித்துக் கொண்டார். “இந்த லைனை நான் கதை எழுத எடுத்துக்கட்டுமா?” என்று விஸ்வாவிடம் அனுமதி கேட்டார். “எங்கிட்டே ஏன் சார் கேட்குறீங்க. நானா படம் எடுத்தேன்” என்று விஸ்வா ஜோக் அடித்தார்.
கர்ணனின் கவசம் பிறந்தது.
ஆரம்பத்தில் எனக்கு இந்த டைட்டிலில் கொஞ்சம் பிரச்சினை இருந்தது. ‘கர்ண கவசம்’தான் என்பதில் உறுதியாக இருந்தேன். ‘னின்’ தேவையில்லாமல் உறுத்திக் கொண்டிருப்பதாக தோன்றியது. ஆனால் போகப்போக இந்த டைட்டிலே சிறப்பானதாக இருப்பதாக பட்டது.
மயிலாப்பூர் தினகரன் அலுவலக வாசலில் இருக்கும் டீக்கடைதான் டிஸ்கஷன் ரூம். நண்பர் நரேனும், நானும் துணை இயக்குனர்கள் மாதிரி சிவராமனோடு பேசிக்கொண்டிருப்போம். கதை எங்கே ஆரம்பிக்க வேண்டும், எப்படி நகரவேண்டும், வசனங்கள் எப்படி அமையவேண்டும் என்று ஒரு பக்காவான சினிமாவுக்கு ப்ளான் போட்டோம்.
உண்மையில் நாங்கள் திட்டமிட்டிருந்ததில் ஐம்பது சதவிகிதம் கூட கர்ணனின் கவசமாக வரவில்லை. தண்டகாரண்யா, நக்சல்பாரிகள் எல்லாம் கதையில் பிரதானமாக வருவதை போல ஆரம்பகால திட்டம். பாரதத்தின் பரம்பரைச் சொத்தை அபகரிக்க வெளிநாட்டு சதி என்பதுபோலெல்லாம் இண்டர்நேஷனல் லெவலில் டிஸ்கஷன் செய்தோம். கதை தொடங்கி, அதன் போக்கில் ஓடிவிட்டது. முதலில் நாங்கள் பேசிய லைனையே கூட மீண்டும் சிவராமன் எழுதலாம்.
கதையில் வரும் களத்துக்காக சில இடங்களுக்கு லொக்கேஷனை நேரில் சென்று பார்க்க விரும்பினோம். துரதிருஷ்டவசமாக முடியவில்லை. காஞ்சிபுரம் மட்டும் போய், யாத்ரிகர்கள் அவ்வளவாக அறியாத ஜீனகாஞ்சியில் கள ஆய்வு செய்தோம். கைலாசநாதர் கோயிலில் நிறைய நேரம் செலவிட்டோம்.
அசிஸ்டண்ட் டைரக்டர் போல அசிஸ்டண்ட் ரைட்டராக பணிபுரிந்த இந்த நாற்பது வாரங்கள் என்னுடைய வாழ்க்கையின் மிக முக்கியமான காலக்கட்டம். சிலிர்ப்பான நாட்கள். ஒரு வேளை இந்த வாய்ப்பு எனக்கு சில வருடங்களுக்கு முன்பாக கிடைத்திருந்தால், இந்நேரம் நானும் நாலு பேர் பேசக்கூடிய நான்கு நாவல்களை எழுதியிருக்க முடியும். ஏற்கனவே எழுதிய அழிக்கப் பிறந்தவனை இன்னும் சிறப்பாக எழுதியிருக்க முடியும். வேறு சில முக்கியமான எழுத்தாளர்களிடமும் இதுமாதிரி அசிஸ்டெண்டாக சேர்த்துக்கொள்ள முடியுமா என்று வாய்ப்பு கேட்க வேண்டும். கதையென்று எதையாவது கீபோர்டில் தட்டும்போது, கொஞ்சம் அச்சமாக இருக்கும். இப்போது 2014ல் உருப்படியாக ஒரு நாவல் எழுதிவிட முடியுமென்று தன்னம்பிக்கை பிறந்திருக்கிறது.
திங்கள் மதியம் சாப்டர் மெயிலுக்கு வரும். வாசித்துவிட்டு உடனடியாக போனில் நிறை, குறைகளை அலசுவோம். நான் குறிப்பாக ‘கண்டினியூட்டி’ கவனித்துக் கொண்டிருந்தேன். கதையின் ஆரம்ப நாட்களில் நடந்த சம்பவங்களின் தொடர்ச்சியும், பாத்திரங்களின் பெயர்களும் எதுவும் மாறிவந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். இல்லாவிட்டால் வாசகர் கடிதங்களில் பல்லிளித்துவிடும். ஐந்தாவது சாப்டரில் ஆதித்த கரிகாலனாக இருந்தவர், முப்பத்தியெட்டாவது சாப்டரில் ஆதித்த‘க்’ கரிகாலனாக மாறிவிடுவார். இதையெல்லாம் மிகக்கவனமாக பழைய சாப்டர்களை ‘ரெஃபர்’ செய்து திருத்த வேண்டும்.
ரா.கி.ரங்கராஜன் எழுதிய ‘எப்படி கதை எழுதுவது?’ நூலை நிறைய பேர் வாசித்திருக்கலாம். ‘கர்ணனின் கவசம்’ முழுக்க முழுக்க அந்த நூல் அறிவுறுத்தும் ஆலோசனைகளின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிறது. இந்த நாற்பது வாரங்களும் சிவராமன் மிக ரிலாக்ஸாகவே இருந்தார். ஞாயிறு முழுக்க யோசிப்பதை, திங்கள் காலையில் எழுதிவிடுவார். அத்தியாயத்துக்கு ஆயிரம் முதல் ஆயிரத்து இருநூறு வரை வார்த்தைகள் இருக்கும். ஓவியருக்கு முன்கூட்டியே வரப்போகும் அத்தியாயத்தில் இருந்து ஒரு காட்சியை சொல்லிவிடுவார்.
தொடர் வந்துக்கொண்டிருந்த கட்டத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என்று நிறைய படங்கள் பார்த்தோம். கர்ணனின் கவசத்தில் குறைந்தபட்சம் பத்து படங்களின் பாதிப்பாவது இருக்கிறது. ‘கிராவிட்டி’ படத்தின் ஒரு காட்சிகூட கதையில் வருகிறது. அவ்வளவு ஈஸியாக யாரும் கண்டுபிடித்துவிட முடியாது. நாவல்கள், சிறுகதைகள், டிவி நிகழ்ச்சிகள், செய்திகள் என்று சமகால சங்கதிகள் சகலத்தின் தாக்கமும் கதையில் வெளிப்படுகிறது.
வாயால் எவ்வளவு வேண்டுமானாலும் வடை சுடலாம். ஆனால் தொழில் கற்றுக்கொள்வது என்பது அவ்வளவு சுலபமல்ல. அசாத்திய பொறுமையும், கடுமையான உழைப்பும் அவசியம். எப்படி காட்சிகளை யோசிப்பது, அவற்றை எப்படி கதைக்குள் பொருத்தமான இடத்தில் செருகுவது என்று ஏராளமான எழுத்து நுட்பங்களை பிராக்டிக்கலாக கற்றுக்கொள்ள வாய்ப்பளித்த அண்ணன் சிவராமனுக்கும், உடன் பணியாற்றிய தோழர் நரேனுக்கும் நாற்பது வாரங்கள் முடிந்த நிலையில் நெகிழ்ச்சியோடு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்தொடர் தொடர்பாக பேசும் இடங்களில் எல்லாம் தவறாமல் என்னையும், நரேனையும் மறக்காமல் உச்சரித்துக் கொண்டிருக்கிறார் சிவராமன். அது அவருடைய பெருந்தன்மை. எங்கள் மீதான அன்பு. உண்மையில் நாங்கள் அணில்கள். பாலம் அமைத்து லங்காவை வென்றவர் அவர்தான். இந்நூலுக்கு உரிய பெருமை முழுக்க முழுக்க அவரைதான் சாரும்.


இன்னும் சில நாட்களில் ‘கர்ணனின் கவசம்’ தடிமனான நூலாக, சூரியன் பதிப்பகத்தால் வெளியிடப்படுகிறது. நானும் பணியாற்றினேன் என்பதற்காக அல்ல. நாற்பது வாரங்கள் தவறாமல் வாசித்த வாசகனாக சொல்கிறேன். இந்த கதை உங்களுக்கு தரப்போவது இதுவரை நீங்கள் அனுபவிக்காத அனுபவத்தை. வரலாறு ஒரு பாத்திரமாக உங்களையும் உள்ளே இழுத்துக்கொள்ளும் அதிசயத்தை உணர்வீர்கள். புராண களத்தில் நீங்கள் அறிந்திருக்கும் புகழ்பெற்ற பாத்திரங்களோடு தோளோடு தோள் உரசி நடப்பீர்கள். குறிப்பாக, ஹாரிபாட்டர் மாதிரியெல்லாம் தமிழில் யாரு சார் எழுதறாங்க என்று அலுத்துக்கொள்ளும் ‘என்னத்த கன்னய்யா’ வாசகர்கள், தயவுசெய்து ஒருமுறை ‘கர்ணனின் கவசம்’ நூலை தவறாமல் வாசியுங்கள்.

’கர்ணனின் கவசம்’ தொடங்கியபோது எழுதிய பதிவை வாசிக்க இங்கே க்ளிக்குங்கள்...

16 டிசம்பர், 2013

பத்ரியின் அழும்பு

‘தமிழ் ஊடகங்களின் அழும்பு’ என்று பத்ரி (பதிப்பாளர், கிழக்கு பதிப்பகம்) அருமையாக எழுதியிருக்கிறார். காமன்மேனாக அதை வாசித்ததுமே எனக்குள்ளும் எரிமலை வெடித்தது. ஆனால், இதை பத்ரி (பதிப்பாளர், கிழக்கு பதிப்பகம்) எழுதியிருக்கிறார் என்பதுதான் ஆச்சரியத்தை தருகிறது. ஊடகங்கள் எப்படி இயங்குகிறது என்பதின் இன்னொரு பக்கத்தையும் அறிந்தவர் அவர். என்னைப் போன்ற ஏராளமான ஊடகத் தொழிலாளிகளோடு நெருக்கமாக பேசக்கூடியவர்.

க்ரிக் இன்ஃபோ நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர் அவர். ‘லைவ்’வில் தங்களுடைய ‘லோகோ’ தெரியவேண்டும் என்பதற்காக கார்ப்பரேட் நிறுவனங்கள் எவ்வளவு கோடி செலவழிக்கிறது என்பது பத்ரிக்கு (பதிப்பாளர், கிழக்கு பதிப்பகம்) தெரியாமல் இருக்காது. Branding குறித்த பரவலான அறிவு அவருக்கு இருக்கிறது. நான் கிழக்குக்காக எழுதிய புத்தகமான ‘சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்’ நூலை மிகச்சிறப்பாக எடிட் செய்தவரே அவர்தான்.

மேலும் அவரே ‘ஆழம்’ என்றொரு பத்திரிகையையும் நடத்தி வருகிறார். ஆயிரக்கணக்கான புத்தகங்களை ‘நியூ ஹாரிசன் மீடியா’ குழுமத்தின் சார்பாக பதிப்பித்த பத்ரி (பதிப்பாளர், கிழக்கு பதிப்பகம்), அப்புத்தகங்களின் பின்னட்டையில் எழுத்தாளர்களுக்கு தரும் அறிமுகத்தின்போது, எழுத்தாளர்கள் பணியாற்றும், நடத்தும் நிறுவனத்தின் பெயரையும் சேர்த்து பதிப்பித்திருக்கிறாரா என்று தெரியவில்லை.

பத்ரி (பதிப்பாளர், கிழக்கு பதிப்பகம்) குறிப்பிட்டிருக்கும் விஷயம் நிகழ்ந்தது குங்குமம் தோழி பத்திரிகையில். பத்ரியின் (பதிப்பாளர், கிழக்கு பதிப்பகம்) சட்டையில் இருந்த கிழக்கு லோகோவை அழிக்கச் சொல்லி நிச்சயமாக தினகரன் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ஆர்.எம்.ரமேஷ் சொல்லியிருக்க மாட்டார். தோழியின் ஆசிரியரான வள்ளிதாசனுக்கு, பத்ரியின்  (பதிப்பாளர், கிழக்கு பதிப்பகம்) சட்டையில் இருந்த லோகோ பற்றி தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை. உண்மையில் பத்திரிகையின் மேல்மட்டத்தில் இயங்குபவர்களுக்கு இதெல்லாம் ‘சில்லி’ மேட்டர். அவர்களுக்கு ஆயிரத்தெட்டு பிரச்சினைகள். பத்ரி (பதிப்பாளர், கிழக்கு பதிப்பகம்) இப்படி ஒரு விதிமுறையை விதித்திருக்கிறார் என்று என்னைப் போன்ற நடுவாந்திர பொறுப்பில் இருக்கும் ஊழியர்கள் கூட இதைப்பற்றியெல்லாம் அவர்களிடம் பேசமுடியாது. இம்மாதிரி சில்லி மேட்டரை ஒரு பெரிய பிரச்சினையாக எடிட்டோரியல் மீட்டிங்கில் விவாதிக்க முற்பட்டோமானால், “நீயெல்லாம் வேலைக்கே லாயக்கு இல்லே” என்று துரத்திவிடுவார்கள்.

என்ன நடந்திருக்கும் என்று யூகிக்க முடிகிறது. அங்கு பணிபுரியும் லே-அவுட் ஆர்ட்டிஸ்டிடம் எப்போதோ ஏதோ ஒரு நிறுவனத்தின் சின்னத்தை அழிக்க சொல்லியிருப்பார்கள். அதற்கு தகுந்த காரணம் இருந்திருக்கும். அந்த லே-அவுட் பணியாளர் இதையே தன் பணிக்கான standardising ஆக எடுத்துக் கொண்டிருப்பார். எந்த போட்டோ வந்தாலும், அதில் ஏதாவது ‘லோகோ’ இருக்கிறதா என்று உற்றுப்பார்த்து, அதை அழித்துவிடுவார். அல்லது லே-அவுட்டில் ஒரு படத்தை இடும்போது வண்ணச்சேர்க்கைக்கு ஒட்டாமல் இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட இடத்தில் திருத்தங்கள் செய்வது அவரது உரிமை. பத்திரிகை தயாரிக்கும் பணியில் இருக்கும் issue incharge (பொதுவாக பொறுப்பாசிரியர்கள், துணை ஆசிரியர்கள் இப்பொறுப்பில் இருப்பார்கள்) கூட இதையெல்லாம் கேள்வி கேட்க மாட்டார். கண்டுகொள்ள மாட்டார். பல பத்திரிகைகளில் அரசியல்வாதிகளின் கரைவேட்டியின் ‘கரை’ கூட வாசகர்களுக்கு உறுத்தும் என்று அழிப்பதுண்டு. இது வழக்கமான நடைமுறைதான். இதற்குப் பின்னால் பத்திரிகை நிர்வாகத்துக்கு ஏதேனும் பாலிசியோ, உள்நோக்கமோ இருக்குமென்று சந்தேகிப்பதில் அர்த்தமேயில்லை.

தினகரன் குழுமமும் ‘சூரியன் பதிப்பகம்’ என்கிற பெயரில் ஒரு பதிப்பகம் நடத்துகிறது. எனவே தங்களது போட்டி நிறுவனங்களின் ‘லோகோ’ advertorial எனப்படும் paidnewsகள் மற்றும் விளம்பரங்கள் தவிர்த்த வாசகர்களுக்கான பக்கங்களில் இடம்பெறக்கூடாது என்று ஒரு விதிமுறையை ஏற்படுத்தியிருந்தாலும் அது ஏற்றுக்கொள்ளத்தக்கதே.

நீங்கள் நாளிதழ்களில் வரும் சினிமா விளம்பரங்களில் இதை கண்டிருக்கலாம். “அருமையான ஆக்‌ஷன் திரைப்படம் – நன்றி ஒரு நாளிதழ்” என்று போட்டிருப்பார்கள். அது தினகரனில் வெளிவந்த விளம்பரமாக இருக்கும்பட்சத்தில், மேற்கோள் காட்டப்பட்ட திரைவிமர்சனம் தினத்தந்தியிலோ அல்லது தினமலரிலோ வந்திருக்கக்கூடும். இது பல்லாண்டுகளாக நடைமுறையில் இருக்கும் ஒரு விஷயம்தான். விளம்பரம் பெறுவதிலேயே கூட இம்மாதிரி விதிமுறைகள் பத்திரிகைகளின் விளம்பர ஏஜெண்டுகளுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது.

இம்மாதிரி ஒவ்வொரு நிறுவனத்துக்கும் பிரத்யேகமாக சில கொள்கைகள் இருக்கக்கூடும். எங்களது ‘புதிய தலைமுறை’ பத்திரிகையில் வெளிவரும் பேட்டியாளர்களின் படங்கள் எல்லாமே கண்ணியமான தோற்றத்தில்தான் இருக்கும். ஒருமுறை பேட்டியளித்த ஒரு பெண் பிரபலம் ஸ்லீவ்லெஸ் அணிந்த போட்டோ இருந்தது என்பதால், அந்த கட்டுரையே அச்சுக்கு செல்லுவது நிறுத்தப்பட்டு தாமதமானது என்கிற அளவுக்கு கடுமையான வழிகாட்டு நெறிகள் எங்களுக்கு இருக்கிறது. இவ்வளவு ஏன்? எனக்கு தெரிந்து ‘உடலுறவு’ என்கிற வார்த்தையேகூட, புதிய தலைமுறை இருநூறு இதழ்களை கடந்த நிலையில் ஒரே ஒருமுறைதான் (தவிர்க்க இயலாத வகையில் கலாப்ரியாவின் தொடரில் வந்துவிட்டது) எங்கள் பத்திரிகையில் இடம்பெற்றிப்பதாக ஞாபகம்.

சரி. இப்போது பத்ரிக்கு (பதிப்பாளர், கிழக்கு பதிப்பகம்) வருவோம். எந்த ஒரு முதலாளிக்கும், நிர்வாகிக்கும் தன்னுடைய நிறுவனத்தின் பெயர் பிரபலப்பட வேண்டும் என்கிற ஆசை இருப்பது நியாயமானதுதான். எனக்கு ‘உயிர்மை’ நிறுவனத்தின் ‘சுஜாதா விருது’ வழங்கப்பட்டபோது, “நீங்க ‘புதிய தலைமுறை’யில் வேலை பார்க்குறீங்கன்னு அவங்க குறிப்பிட்டிருக்கலாமே?” என்றுதான் எங்கள் ஆசிரியரும் கேட்டார். மனுஷ்யபுத்திரனை போய் கேட்கவா முடியும்? மனுஷ்யபுத்திரன் எங்கள் பத்திரிகைக்கு எழுதும்போது கவிஞர், எழுத்தாளர் என்றுதானே அடைமொழி இட்டிருக்கிறோம். எங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கூட அதேமாதிரி அடைமொழிகள்தான் அவருக்கு தரப்படுகிறது. ஆனால் உயிர்மை சம்பந்தப்பட்ட ஒருவருக்கு பெருமை கிடைக்கிறது எனும்போது, அதில் ‘உயிர்மை’ என்கிற பெயருக்கு ஓரிடத்தை மனுஷ்யபுத்திரன் எதிர்ப்பார்ப்பது இயல்பானதுதான். இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமா என்பதுதான் தெரியவில்லை. எங்கள் ஆசிரியரின் கட்டுரையோ, பேட்டியோ வெளி இதழ்களில் வெளிவரும்போதும் எழுத்தாளர், மூத்த பத்திரிகையாளர் என்றுதான் குறிப்பிடுகிறார்கள். தவிர்க்க முடியாத பொருத்தமான இடங்களில் மட்டுமே அவர் எந்தப் பத்திரிகைக்கு ஆசிரியர் என்று குறிப்பிடப்படுகிறது. பத்ரி  (பதிப்பாளர், கிழக்கு பதிப்பகம்)  பதிப்பகத்தொழில் தொடர்பான ஒரு கட்டுரையிலோ, பேட்டியிலோ பேசும்போது பதிப்பாளர் என்கிற அடைமொழிதான் அவரது நிறுவனத்தின் பெயரோடு சேர்த்து குறிப்பிடப்படும். நாங்களே கூட குறிப்பிட்டிருக்கிறோம்.

எங்களுடைய பத்திரிகை தொடங்கியதிலிருந்தே பத்ரி (பதிப்பாளர், கிழக்கு பதிப்பகம்) எங்களுக்கு தொடர்ச்சியாக ஆதரவு அளித்து வருபவர். குறைந்தபட்சம் பத்து முறையாவது அவரது படம் எங்கள் பத்திரிகையில் அச்சாகியிருக்கிறது. உலகின் சர்வ பிரச்சினைகளிலும் அவருக்கு ஒரு ஆழமான கருத்து இருக்கிறது. அவரே பதிவில் குறிப்பிடப்பட்டிருப்பதைப் போல அவருக்கு வழங்கப்பட்ட அத்தனை அடைமொழிகளையும் நாங்கள் வழங்கியிருக்கிறோம். எங்கள் இதழைப் பொறுத்தவரை பத்ரி விதிக்கும் இந்த புதிய விதிமுறையால் எதுவும் பிரச்சினை இருக்காது என்று கருதுகிறேன். ஆனால் மற்ற ஊடகங்களில் நிலைமை எப்படியோ தெரியாது.

பத்ரியைப்  (பதிப்பாளர், கிழக்கு பதிப்பகம்) போலவே எல்லாரும் இதே விதியை விதிக்க ஆரம்பித்துவிட்டால் என்னாகும்? ஊடகங்களின் பாலிசி மாறிவிடுமென்று யாரும் நினைத்துவிடாதீர்கள். என்னை மாதிரி பத்திரிகை தொழிலாளிகளின் பொழைப்புதான் டப்பா டான்ஸாகிவிடும் :-(

12 டிசம்பர், 2013

கல்யாண சமையல் சாதம்

எவ்வளவு உருவினாலும்.. மன்னிக்கவும்.. உதைத்தாலும் ஸ்கூட்டர் ‘ஸ்டார்ட்’ ஆகவில்லை என்பதுதான் படத்தின் ஒன்லைன். இருபத்தைந்து, முப்பது ஆண்டுகளுக்கு முன்பே இதே லைனை வைத்துக்கொண்டு காசிநாத்தின் ‘முதலிரவே வா வா’ கன்னடத்திலும், தமிழிலும் வூடு கட்டி அடித்து தயாரிப்பாளர் ஏக்நாத்தின் டப்பாவை கதற கதற ரொப்பியிருக்கிறது. ஆனால் காசிநாத்துக்கு இருந்த ‘தில்’ இயக்குனர் பிரசன்னாவுக்கு இல்லையென்பதால் வேலு மிலிட்டரியில் தயிர்சாதம் ஆர்டர் செய்து சாப்பிட்டமாதிரி சப்பென்று ஆகிவிட்டது.

திரைக்கதையின் அடிப்படையான விஷயம் ஒன்று உண்டு. வெற்றிகரமான எந்தவொரு படத்திலும் இதை நீங்கள் கவனிக்கலாம். முரணை மிகச்சரியாக இண்டர்வெல் ப்ளாக்கில்தான் சொருக வேண்டும். ஹீரோ பிரசன்னாவின் பேட்டரி ‘செல்ஃப்’ எடுக்கவில்லை என்பதை படம் ஆரம்பித்து, கொஞ்ச நேரத்திலேயே ‘லீக்’ செய்துவிடுவதால், முழுப்படத்துக்கும் சுவாரஸ்யமாக ‘சீன்’ பிடிக்கமுடியாமல், ‘ஃபோர்ப்ளே’ செய்தே க்ளைமேக்ஸ் வரை ஜவ்வடிக்க வேண்டியதாகி விட்டது.

படத்தின் டைட்டிலில் தொடங்கி ஏதோ ஆவணப்பட எஃபெக்டில் ஒரு பெண் குழந்தை எப்படி வளர்ந்து பெரியவளாகிறாள் என்று வாய்ஸ் ஓவரில் தொடங்குகிறது. படம் முழுக்க ஆங்காங்கே யார் யாரோ வாய்ஸ் ஓவர் கொடுக்கிறார்கள். ரொம்ப ஓவர். கதை சொல்வது யாரென்று பிடிபடாமல் ஒரு மாதிரியாக ‘நான்லீனியராக’ குழம்பிப் போகிறோம். அவசரத்துக்கு ஒரு போன் செய்யவோ, தம் அடிக்கவோ ரெண்டு நிமிஷம் வெளியே போய்விட்டு வந்தால், வேறு யாரோ கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

மிக தைரியமான ஒரு தீமை எடுத்துக்கொண்டு, ‘ஏ’ சர்ட்டிபிகேட் கொடுத்துவிடுவார்களோ என்கிற பயத்திலேயே மிக பலவீனமான படத்தை கொடுத்திருக்கிறார்கள். இறங்கி குத்து, குத்துவென குத்தியிருக்க வேண்டாமா? எஸ்.ஜே.சூர்யாவும், பாக்யராஜும் இதே கதையில் களமிறங்கி இருந்தால் தமிழ்நாட்டில் இளைஞர்களிடையே எப்படிப்பட்ட ‘எழுச்சி’ ஏற்பட்டிருக்கும்.

ஹீரோ பிரசன்னாவுக்கு இம்மாதிரி ‘எழுச்சி’ சாத்தியப்படாமல் போனதற்கு ‘பிட்ச்’ சரியில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாமென்று, சில குளோசப் ஷாட்களை கண்டபோது தோன்றியது. முந்தானை முடிச்சில் பாக்யராஜ் ஏன் தீபாவை போட்டார் என்பதை இளம் இயக்குனர்கள் ஆராய்ச்சி நடத்தி கண்டுபிடித்தால், அவர்கள் அனைவருமே வெள்ளிவிழா இயக்குனர்களாக பரிணமிக்கலாம்.

படம் ரொம்ப அந்நியமாக தெரிவதற்கு முக்கியமான காரணம், படத்தின் பார்ப்பனத்தன்மை. தமிழ்ச்சூழலில் மிக சிறுபான்மையினராக இருக்கும் பார்ப்பனர்களின் கலாச்சாரத்தையும், மொழியையும் சின்சியராக இயக்குனர் பதிவு செய்ய நினைத்தாலும், ஏதோ உஸ்பெகிஸ்தான் படத்தை சென்னை சர்வதேச திரைப்படவிழாவில் பார்ப்பதைப் போன்ற எண்ணமே ரிச்சா வலிக்கும் முனுசாமிக்கு ஏற்படுகிறது. ஏற்கனவெ மேடைநாடகம், செவ்வாய்க்கிழமை தூர்தர்ஷன் நாடகம் என்று அடுத்தடுத்து பார்ப்பனர்கள் ஆக்கிரமித்து அந்த களங்களையெல்லாம் வெற்றிகரமாக சமாதி கட்டிவிட்டார்கள். எல்லோருக்கும் பொருந்தக்கூடிய ஒரு பொதுவான கதைக்கு பார்ப்பன குடும்பக்களம் (வியட்நாம் வீடு, ஆஹா போன்றவை உதாரணம்) இருந்தால் ஓக்கே. இப்படம் அமெரிக்கவாழ் பார்ப்பனர்கள் ‘ஹேப்பி’ ஆவதற்கு என்றே எடுக்கப்பட்டதுமாதிரி இருக்கிறது. ‘ஸ்கைப் வாத்தியார்’ மாதிரி சின்சியர் கிரியேட்டிவிட்டியை பார்த்து, தமிழ்நாட்டில் நூற்றுக்கு மூன்று பேர்தான் சிரிக்கிறார்கள். மீதி தொண்ணூற்றியேழு பேருக்கு வாத்யார் என்றால் எம்.ஜி.ஆரோ, சுஜாதாவோ அல்லது ஸ்கூல் வாத்யாரோதான்.

அடிக்கடி பிரசன்னாவின் வாய்ஸ் ஓவரில் கப்பல் கவிழ்ந்துவிட்டது மாதிரி ‘பெரிய பிரச்சினை’ ஏதாவது புதுசு புதுசாக சொல்லப்படுகிறது. ஏதோ சங்கீத்தோ என்ன எழவு சடங்கோ, அதில் காக்ராசோளி போடுவேன் என்று மணப்பெண் சொல்வதும், அதை மாமியார்காரி எதிர்ப்பதும் அவ்வளவு பெரிய பிரச்சினையா என்று தெரியவில்லை. க்ளைமேக்ஸில் ஹீரோயினை ஆச்சரியப்படுத்த, ஹீரோ எங்கேயோ படகில் அழைத்துப்போய் மெகாசீரியலுக்கு சீரியல் லைட் செட் போட்டமாதிரி தீவையெல்லாம் சுற்றிக் காட்டுகிறார். லோ பட்ஜெட் படமென்பதால் வேறு வழியில்லாமல் ஹீரோயின் ஆச்சரியப்பட்டு, ஹீரோவை செம லவ்வு லவ்வுகிறார் (ரோஜாவில் மதுபாலாவின் கண்களை மூடிக்கொண்டு போய், புதுவெள்ளை மழை சாங் ஸ்டார்ட் ஆகும்போது அரவிந்த்சாமி திறப்பாரே, மதுபாலா அப்படியே கவிழ்ந்திடுவாரே அதுமாதிரி). நமக்குதான் அக்கடாவென்று இருக்கிறது.

ஒரு வழியாக படம் முடியும் முடியுமென்று ஆத்திரத்தை கட்டுப்படுத்திக்கொண்டு, டாய்லெட்டுக்கு போக முனையும்போது தேவையில்லாமல் பின்னிணைப்பாக காட்சிகள் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஒருவழியாக ஹெலிகாப்டர் ‘ஷாட்’ அடித்து ஹீரோ பிரசன்னா ஆட்டத்தை முடிக்கிறார். நமக்குதான் முடியலை.

6 டிசம்பர், 2013

சமையல் மந்திரம்

பத்தோடு பதினொன்றாக ஏதோ ஒரு சமையல் நிகழ்ச்சி என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தேன். சரி அந்த கருமத்தை ஏன் நைட்டு பதினொன்று மணிக்கு ஒளிபரப்புகிறார்கள் என்கிற ஆர்வத்தில் என்றோ ஒருநாள் கேப்டன் டிவியின் உள்ளே நுழைந்தவுடன்தான் தெரிந்தது இது மன்மத மந்திரம் என்று. புதிரா புனிதமாவையெல்லாம் ஓவர்நைட்டில் பீட் செய்துவிட்டார்கள். கேப்டன் அரசியலுக்கு வந்ததால் தமிழர்களுக்கு இது ஒன்றுதான் பிரயோசனமான விஷயம்.

நீண்டகால செயல்பாட்டுக்காகவும், முறுக்குக் கம்பி மாதிரி வலிமையை பெறவும் ஏதோ பேருக்கு ஒரு சமையல் குறிப்பு. ‘இச்சையை கிளப்பும் மொச்சை’, ’ஆண்மை வீரியத்துக்கு அமோக கிழங்கு’, ‘நரம்பு ஸ்டெடியாக புடலங்காய் கூட்டு’, ’குஜால் குன்னூர் ஜாம்’ மாதிரி ஏதோ ஒரு கிக்கான சமையல் குறிப்பு. யாராவது சமைத்துப் பார்த்து ‘பலன்’ தெரிந்ததா என்று தெரியவில்லை. ஆனால் நிகழ்ச்சியே சும்மா கிர்ரென்றிருப்பது என்னவோ நிஜம்தான்.
கேமிராவை ஆன் செய்தவுடனேயே திருதிருவென்று முழித்தவாறே பேசுகிறார், நிகழ்ச்சியின் கதாநாயகன் டாக்டர் சின்னையா. இவர் ஒரிஜினல் டாக்டர் தானா என்று சி.பி.ஐ.தான் விசாரித்து சொல்லவேண்டும். குறுந்தாடி, பாக்யராஜ் பாணி குரல் என்று அவரது தோற்றமே ஒரு மாதிரியாக நிகழ்ச்சியோடு ரசிகர்களை ஒன்றவைத்துவிடுகிறது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கிரிஜா ஸ்ரீதான் ஹைலைட். டாக்டரே கொஞ்சம் அடக்கி வாசித்தாலும், அம்மணி அநியாயத்துக்கு ஆட்டம் போடுகிறார்.

சமையல் குறிப்பு முடிந்ததுமே ஆலோசனை நேரம். நேயர்கள் யாராவது சந்தேகம் கேட்கிறார்கள். அந்த கடிதத்தை நிகழ்ச்சி பார்க்கும் நாமே கூச்சப்படும் வகையிலான குரலில் கொஞ்சிக் கொஞ்சி தொகுப்பாளர் படிப்பார். டாக்டரும் அசால்டாக, சிவராஜ் சித்தவைத்தியரை மிஞ்சும் வகையில் பதில் சொல்வார். இம்மாதிரி நிகழ்ச்சிகளில் கேட்கப்படும் கேள்விகள் ஒரே மாதிரியாகதான் அலுப்பூட்டும். ‘இருபது வருட கைவேலை, ரொம்ப சிறுத்திடிச்சி’, ‘கல்யாணம் முடிஞ்சி எட்டு மாசமாவது, இதுவரைக்கும் ஒண்ணுமே முடியலை’ ரேஞ்சு சந்தேகங்கள்தான்.
கேள்வியைப் படித்துக் கொண்டிருக்கும்போதே டாக்டர் குறுக்கிட்டு ஏதாவது கமெண்டு சொல்வார். “மெட்ரோ வாட்டர் பைப் மாதிரி யூஸ் பண்ணுவார் போலிருக்கே?” என்று டாக்டர் ஒரு போடு போட, கிரிஜா ஸ்ரீயோ ஒரு படி மேலே போய் “ஆமாம். அப்படித்தான் நானும் நினைக்கிறேன்” என்று புகுந்து விளையாடுகிறார். “இவருக்கு இன்னேரம் கைரேகையெல்லாம் அழிஞ்சிட்டிருக்கும்னு நெனைக்கிறேன்” என்று டாக்டர் சீரியஸாக கமெண்ட் செய்ய, “பின்னே.. கொஞ்ச நஞ்ச உழைப்பா” என்று டாக்டரையே காலி செய்கிறார் கிரிஜா.

கடிதம் போடுபவர்களில் பெரும்பாலானவர்கள் ஏன் ‘கேப்டனுக்கு வாழ்த்துகள்’ என்று ஆரம்பித்துவிட்டு, தங்கள் பாலியல் சந்தேகத்தை கேட்கிறார்கள் என்பதன் லாஜிக் மட்டும் புரியவில்லை. நிகழ்ச்சிக்கு பிரமாதமான வரவேற்பு இருப்பதால், நிகழ்ச்சி நேரத்தை கொஞ்சம் ‘நீட்டிக்க’ சொல்லி நிறைய நேயர்கள் கேட்கிறார்கள். கேப்டன்தான் மனசு வைக்கணும்.|

டோண்ட் மிஸ் இட்!

4 டிசம்பர், 2013

விடியும் முன் : மனநிலை பிறழ்ந்தவர்களின் சொர்க்கம்

இணையத்தின் வழியாக கட்டமைக்கப்படும் அபிப்ராயங்கள் ஏனோ எனக்கு பெருமளவு ஏமாற்றத்தையே வழங்குகின்றன. லேட்டஸ்டாக பல்பு வாங்கியது ‘விடியும் முன்’.

படம் பார்த்ததிலிருந்து ஒருமாதிரி மனம் நிலை கொள்ளாமல், இந்நொடி வரை பதட்டமாகவே உணர்கிறேன். ஒரு மாதிரியான மோசமான மனநிலை இது. எதிலும் மனதை முழுமையாக ஈடுபடுத்த முடியாதபடி தொந்தரவு செய்யக்கூடிய உளவியல் சிக்கல் இது. இந்நிலை உங்களில் யாருக்கும் வரவேண்டாம். தயவுசெய்து ‘விடியும் முன்’ படத்தை தியேட்டரிலோ, திருட்டு டிவிடியிலோ கூட பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

திரைப்படங்களை பற்றி எழுதுவதற்கு எனக்கு முன்மாதிரியாக விளங்கும் அமரர் எஸ்.ஏ.பி.யின் திரைப்பட விமர்சனக் கொள்கைக்கு எதிர்மாறான கோரிக்கைதான் இது என்றாலும் வேறு வழியில்லை.

விடியும் முன் படத்தை ஏன் புறக்கணிக்க வேண்டும்?

ஒன்று : காமக்கதை எழுதுபவனோ, நீலப்படம் எடுப்பவனோ கூட நம் சூழலில் ‘ஆண்டி’களை வைத்துதான் எடுப்பானே தவிர, குழந்தைகளை முன்வைத்து கற்பனை செய்யமாட்டான். குறைந்தபட்ச அறம் என்பது அயோக்கியனுக்கும் உண்டு. பிட்டு படங்களையோ, கதைகளையோ விரும்பி வாசிக்கக்கூடிய நம்மைப் போன்ற அயோக்கியர்களும் அதில் ‘குழந்தை’ சம்பந்தப்படுவதை விரும்புவதில்லை.

இரண்டு : விலை மாது ஒருத்தி பதினோரு, பன்னிரெண்டு வயது மதிக்கத்தக்க பெண்குழந்தையை ஒரு நாள் ஒப்பந்தத்துக்கு ஒரு பெரிய மனிதருக்கு கூட்டிக்கொடுக்க அழைத்து வருகிறாள். அந்த குழந்தைக்கு ஒப்பனை செய்யும் காட்சியை எல்லாம் காட்டுவது என்பது மனநிலை பிறழ்ந்த நிலையிலிருக்கும் ஒரு இயக்குனரின் கற்பனையில் மட்டுமே உதிக்கும். அப்போது குழந்தை கேட்கிறாள் : “நீ மேக்கப் போட்டுக்கலையா?”. விலைமாதுவின் பதில் : “இன்னைக்கு நீ தான் ராணி”

மூன்று : மேலே அறையில் இருந்து குழந்தையின் அலறல் சத்தம் கேட்கிறது. கீழே இருக்கும் விலைமாது ஓடிப்போய் பார்க்கிறாள். குழந்தை கைகள் கட்டப்பட்டு தொங்கவிடப்பட்டிருக்கிறாள். பெரிய மனிதர் கையில் க்ளவுஸ் அணிந்து, ஒரு ப்ளேடு வைத்திருக்கிறார். ஆபாசமாக எடுக்க ஆயிரம் வாய்ப்புகள் இருந்தும், கண்ணியமாக படமெடுத்திருக்கிறார் இயக்குனர் என்று ஏதோ ஒரு விமர்சன மாகானுபவன் இணையத்தில் எழுதியிருந்தார். நேரடிக்காட்சிதான் ஆபாசமா? கையில் ப்ளேடு வைத்திருக்கிறார், அடுத்து அவர் என்ன செய்ய உத்தேசித்திருப்பார் என்று ரசிகனை யூகிக்க வைப்பதை மாதிரி ஆபாசம் நேரடியான உடலுறவுக் காட்சியில் கூட வெளிப்படாது. நேரடிக் காட்சிகளில் உருவாகும் கிளர்ச்சியின் பாதிப்பு சில மணி நேரத்துக்குதான்.  ஆனால் இதுபோன்ற காட்சிகள் சாதாரணர்களையும் வக்கிரர்களாக மாற்றக்கூடிய ஆபத்தான ஆயுதங்கள்.

இந்தப் படத்தை ‘ஆகா, ஓகோ’வென்று பாராட்டுபவர்கள் எதற்காக பாராட்டுகிறார்கள் என்றே புரியவில்லை. தொழில்நுட்பரீதியாக இதைவிட பன்மடங்கு சிறப்பாக எடுக்கப்பட்டிருந்த நடுநிசிநாய்களை கழுவிக் கழுவி ஊற்றியவர்கள் இவர்கள்தான். அதே மாதிரி.. இல்லை இல்லை.. அதைவிட மோசமான உள்ளடக்கத்தோடு கூடிய ஒரு குப்பையை ஏன்தான் தலைமீது தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்களோ தெரியவில்லை. இதெல்லாம் நடப்பதே இல்லையா, நடப்பதைதானே சினிமாவில் காட்டுகிறார்கள் என்று வாதாடுபவர்களுக்கு மாஸ் மீடியாவை பற்றிய குறைந்தபட்ச அறிவுகூட இல்லையென்று அர்த்தம். மகாநதியிலும் இதேமாதிரி காட்சி உண்டு. அதை எப்படி கலை ஆக்கினார்கள், எவ்வகையில் சமூக அக்கறையை நோக்கும் காட்சியாக உருமாற்றினார்கள் என்பதை மீண்டும் அப்படத்தை பார்த்துதான் உணரவேண்டும்.

விலங்குகளை கூட திரைப்படங்களில் பயன்படுத்துவதை ஆட்சேபிக்கும் தேசம், குழந்தைகளை மோசமான முறையில் படம் பிடித்துக் காட்டும் ‘விடியும் முன்’ போன்ற திரைப்படங்களை எப்படி சகித்துக் கொள்கிறது? காரணகாரியமில்லாமல் கண்டதையும் வெட்டும் ‘சென்சார்’ எனும் மனமகிழ் அமைப்புக்கு ‘மூளை’ என்றொரு வஸ்து இருக்கிறதா? இந்த படத்தை வெளியிடலாம் என்று சான்று கொடுத்த அதிகாரிகள் யாருமே, அந்த பதவியில் இருக்க லாயக்கற்றவர்கள்.

மசாலாவே வாழ்க்கை!

தீவிர இலக்கியத்தின் வாசல் மட்டுமல்ல. ஆரோக்கியமான சமூகத்தின் அடையாளமும் வெகுஜன இலக்கியமே என்று தீவிரமாக நம்புகிறோம். இலக்கியத்துக்கு மட்டுமல்ல. வெகுஜன முயற்சிகள் சமூகத்தின் எல்லா தளங்களிலும் ஏற்படும் இடைவெளிகளையும் நிரப்புகின்றன. எல்லா துறைகளுமே தொடர்ச்சியான இயங்குதலுலை நடத்த இது அத்தியாவசியமான பணியும் கூட.

துரதிருஷ்டவசமாக டிஜிட்டல் தலைமுறை இளைஞர்களுக்கு வெகுஜன கலை இரண்டாம் தரமானதாகவோ அல்லது தீண்டப்பட தகாததாகவோ படுகிறது. அவர்களை சொல்லி குற்றமில்லை. பல்வேறு காரணங்களால் தொண்ணூறுகளின் இறுதியில் ஏற்பட்ட தொய்வு இதற்கு காரணமாகிறது. எழுபதுகளின் இறுதியிலும், எண்பதுகளின் தொடக்கத்திலும் பிறந்த எங்களுக்குதான் சமையலுக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் ‘மசாலா’ எவ்வளவு அவசியமானது என்று தெரியும். நண்பர்களுக்குள் பேசிக்கொள்ளும்போது இதையெல்லாம் மிகத்தீவிரமாக விவாதித்திருக்கிறோம்.  இதன் விளைவே LIPS (எ) Life is pulp society. நாங்கள் நம்பும் கருத்தாக்கங்களுக்கு எங்களுடைய பங்காக எதையாவது செய்யவேண்டும். அது நமது கடமையும் கூட.

LIPS அமைப்பின் தொடக்கம் வரும் ஞாயிறு (08-12-2013) அன்று காலை 10.30 மணிக்கு சென்னை திருவான்மியூர் பனுவல் புத்தக விற்பனை நிலையத்தில் நிகழ்கிறது.

எங்களது முதல் நிகழ்வே ‘வாசகருக்கு மரியாதை’

வாசகர்தான் வேர் என்கிற அடிப்படையில், வெகுஜன இதழ்களை வாசிக்கவும், வாசித்தபின் அதுகுறித்த கருத்துகளை வெளிப்படுத்தவும் (நம் மொழியில் சொல்லப்போனால் பின்னூட்டம், கமெண்ட்) கடந்த முப்பத்தைண்டு ஆண்டு காலமாக தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் வாசக மனங்களின் மன்னன் அயன்புரம் சத்தியநாராயணன் அவர்களுக்கு சிறியளவில் பாராட்டு விழா நடத்துகிறோம். ‘அந்நியன்’ திரைப்படத்தில் ஒரு பத்திரிகையாளர் பாத்திரத்துக்கு வாத்யார் சுஜாதா, அயன்புரம் சத்தியநாராயணன் அவர்களது பெயரை சூட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை பத்திரிகை அதிபர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் பாராட்டு விழாக்கள் நிறைய நடைபெற்றிருக்கிறன. நாம் நடத்தப்போவது அப்படியே உல்டா. ஒரு பத்திரிகை ஆசிரியர், வாசகரை பாராட்டுகிறார். அயன்புரம் சத்தியநாராயணன் அவர்களை கவுரவித்து உரையாற்ற குங்குமம் இதழின் முதன்மை ஆசிரியர் அண்ணன் தி.முருகன் அவர்கள் பெருமனதோடு ஒப்புக்கொண்டிருக்கிறார். இடம் கொடுத்து உதவும் பனுவல் புத்தக நிலையத்தாருக்கும், பரிசல் செந்தில்நாதன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

எவ்வளவோ எழுத்தாளர்களோடு ‘வாசகர் சந்திப்பு’ நடைபெற்றிருக்கிறது. ஒரு வாசகரோடு வாசகர் சந்திப்பு நடத்த அனைவரையும் அன்போடு அழைக்கிறோம். தொடர்ச்சியாக இம்மாதிரி நிகழ்வுகளை நடத்த உத்தேசித்திருக்கிறோம். உங்களது அன்பான வருகையும், அவசியமான ஆலோசனையும் எங்களை வழிநடத்த வேண்டுமென்று விரும்புகிறோம். ஞாயிறு காலை உங்கள் அனைவரின் அப்பாயிண்ட்மெண்டும் எங்களுக்கு தேவை.