1 ஜூலை, 2014

போலாம் ரைட்!

“மோசமான சர்வீஸ்” என்று பொதுமக்கள் புலம்புகிறார்கள். “எவ்வளவு உழைச்சாலும் நல்ல பேரே இல்லைங்க. ஜனங்களுக்கு நன்றியே கிடையாது” என்று போக்குவரத்துத் துறையினரும் புலம்புகிறார்கள். பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டாலும் தமிழகத்தை பொறுத்தவரை பொது போக்குவரத்தின் சூப்பர் ஸ்டார் பஸ்தான்.

நாட்டிலேயே அதிக அரசுப் பேருந்துகள் தமிழகத்தில்தான் ஓடுகிறது. 1972ல் பேருந்துகள் தேசியமயமாக்கப்பட்டதில் தொடங்கும் இத்துறையின் வரலாறு படைத்திருக்கும் மகத்தான சாதனைகள் ஏராளம். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது வெறும் முப்பது பஸ்களோடு சென்னை மாகாணத்தில் தொடங்கப்பட்ட சேவை இது. இன்று தோராயமாக இருபதாயிரம் பேருந்துகள். ஒரு லட்சத்து முப்பதாயிரம் தொழிலாளர்கள். நிர்வாக வசதிக்காக எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கும் அரசுப்பேருந்து போக்குவரத்துத் துறை தமிழகத்தில் மட்டுமின்றி ஆந்திரம், கேரளா, கர்னாடகா, பாண்டிச்சேரி என்று அண்டை மாநிலங்களுக்கும் பஸ் விட்டு தென்னிந்தியாவுக்கே பெரும் சேவை செய்து வருகிறது.

அதிலும் தமிழக அரசு நடத்திவரும் சேவையில் இருக்குமளவுக்கு வகை வகையான பேருந்துகள் இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லை. நகர நெரிசலை கணக்கில் கொண்டு நகரப்பேருந்து மற்றும் தாழ்தளப் பேருந்து, புறநகர்ப் பகுதிகளை நகரோடு இணைக்கும் புறநகர்ப் பேருந்து, பெரிய நகரங்களுக்கு இடையே ஓடும் வீடியோ கோச் மற்றும் டீலக்ஸ் பேருந்து, பிசினஸ் ட்ரிப் அடிக்கும் தொழிலதிபர்களின் தேவையை மனதில் நிறுத்தி அல்ட்ரா டீலக்ஸ் பேருந்து, பெருநகரங்களை இணைக்கும் வண்ணம் சொகுசான பயணம் தரும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட செமி ஸ்லீப்பர் கோச் பேருந்து, வால்வோ பேருந்து என்று டிசைன் டிசைனாக பட்டையைக் கிளப்புகிறார்கள்.

“எல்லாம் சரிதான். ஆனால் கஸ்டமர் சர்வீஸ் படுமோசம். கண்டக்டர்கள் பயணிகளுக்கு மரியாதையே தருவதில்லை. வயதான பயணிகளையும் கூட ஒருமையில் ஏய்ச்சுகிறார்கள். டிரைவர்கள் வேண்டுமென்றே ஸ்டாப்பிங்கை விட்டு தள்ளிதான் நிறுத்துகிறார்கள். எப்போதுமே சரியான சில்லறையை பையில் வைத்திருக்க முடியுமா. சில்லறை இல்லையென்றால் ‘வள்’ளென்று விழுகிறார்கள். நேரத்துக்கு வண்டிகள் வருவதில்லை. சாதாரண ஒயிட் போர்ட் பேருந்துகள் அபூர்வம். சொகுசுப் பேருந்து என்று போர்ட் மாட்டி கொள்ளை அடிக்கிறார்கள். இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். முதல்வரோ, போக்குவரத்துத்துறை அமைச்சரோ ஒருமுறை மாறுவேடத்தில் பஸ்ஸில் பயணித்தால்தான் மக்களின் கஷ்டம் அவர்களுக்கு தெரியும்” என்று பொறிந்துத் தள்ளுகிறார் சென்னையில் பணிபுரியும் ஆக்னஸ். வழக்கமாக பேருந்தில் பயணிக்கும் பயணிகள் அத்தனை பேருமே சொல்லி வைத்தாற்போல இதேபோலதான் பொங்குகிறார்கள்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் போக்குவரத்துக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கிறது. குறுகிய தூர பயணமோ அல்லது நீண்டதூர பயணமோ, பயணம் என்பது பணிகள் தடையற நடப்பதற்கும், தொழில்வளர்ச்சிக்கும் இன்றியமையாதது. சமூகமும், பொருளாதாரமும் இணையும் புள்ளி போக்குவரத்தில் இருக்கிறது. சாலைவழி போக்குவரத்துதான் பிரதானம் எனும்போது பேருந்து போக்குவரத்தில் இருக்கும் பிரச்சினைகள் எல்லாத் தரப்பினரையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிப்புக்கு உள்ளாக்கக்கூடிய தன்மை கொண்டவை.

பொதுவாக தமிழக போக்குவரத்துத்துறை மீது பயணிகளால் சாட்டப்படும் குற்றச்சாட்டுகள் என்ன?

* அடிக்கடி பேருந்து வருவதில்லை. குறிப்பாக காலை அலுவலகம்/பள்ளி/கல்லூரி நேரங்களில் போதுமான இடைவெளியில் பேருந்துகள் தேவை. குறைவான வண்டிகள் இயக்கப்படும் பகுதிகளில் கூட்டம் அதிகமாகி பயணிப்பவர்களுக்கு நரகவேதனையாக அமைகிறது.

* பெரும்பாலான பேருந்து வழித்தடங்கள் வசூலை மனதில் கொண்டே திட்டமிடப்படுகின்றன. இதனால் செல்லவேண்டிய இடத்துக்கு இரண்டு, மூன்று பேருந்துகள் பிடித்து செல்லவேண்டியதால் ஏற்படும் காலதாமதம், போக்குவரத்து நெரிசல், மனவுளைச்சல்.

* சமீப காலங்களில் அரசு போக்குவரத்து நிறுவனங்களில் கட்டண உயர்வு இரண்டு மூன்று மடங்காக ஏறிவிட்டது. சாதாரணப் பேருந்துகளையே கூட சொகுசுப்பேருந்து என்று பெயர் மாற்றி அநியாயமாக கொள்ளையடிக்கிறார்கள்.

* பேருந்து நிலையங்கள் குறைந்த இடைவெளி இல்லாமல் மிக தூரமாக அமைக்கப்படுகின்றன. இதனால் நீண்டதூரம் நடந்துவந்து பஸ் ஏறவேண்டியிருக்கிறது. சில குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் எல்லா பஸ்களும் நிற்பதில்லை.

* குறிப்பிட்ட நேரத்துக்கு பஸ்கள் வருவதில்லை. வருமென்று உறுதிசொல்ல ‘டைம் கீப்பர்கள்’ இருப்பதில்லை. எனவே நீண்டநேரம் காத்திருத்தலிலேயே ஒரு பயணி காலம் கழிக்க வேண்டியிருக்கிறது.

* இரவு நேரங்களில் பேருந்து நிலையங்களில் போதுமான பாதுகாப்பு இல்லை. சமூக விரோதிகளிடமிருந்து பயணிகளை பாதுகாக்க போக்குவரத்துத்துறை எந்த ஏற்பாடும் செய்வதில்லை.

* பேருந்து நிலையங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. அழுக்காக, சுகாதாரமற்ற நிலையில் இருக்கின்றன.

* மோசமான நிலையில் பராமரிக்கப்படும் பேருந்துகளால் விபத்துகள் நேருகின்றன.

“இதில் பெரும்பாலானவை ஏற்றுக்கொள்ளக் கூடிய குற்றச்சாட்டுகளே அல்ல. இவை உலகளவில் எல்லா நாடுகளிலுமே பஸ் போக்குவரத்து குறித்து சொல்லக்கூடிய பொதுவான விஷயங்கள்தான். மற்ற மாநிலங்களுக்கு போய் பஸ்ஸில் பயணித்துப் பார்த்தால், தமிழகம் எவ்வளவு மேல் என்பதை அறிவீர்கள். நம்முடைய பேருந்துகளின் எண்ணிக்கை மிக அதிகம். ஆனால் மக்கள் தொகைக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. மேலும் மேலும் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டே போகுமளவுக்கு சாலை வசதிகள் இல்லை. இப்போதே போக்குவரத்துச் சிக்கலில் முழி பிதுங்குகிறது. எனவேதான் சிறியரக பேருந்துகளை சென்னையில் அறிமுகப்படுத்தியிருக்கிறோம். படிப்படியாக இச்சேவை எல்லா நகரங்களுக்கும் விரிவாக்கப்படலாம்.

சேவைதான் என்றாலும் நாங்களும் அரசுக்கு லாபம் காட்டவேண்டிய அல்லது குறைந்த நஷ்டத்தை கணக்கு காட்ட வேண்டிய நிலையில் இருக்கிறோம். எனவே வசூலையும் கூட மனதில் வைத்து பேருந்து வழித்தடங்களை முடிவு செய்கிறோம். அதிலென்ன தவறு. இத்தனைக்கும் கட்டணத்தைப் பொறுத்தவரை லாப நோக்கில் நாங்கள் நிர்ணயிக்கவில்லை. எரிபொருள் விலையேற்றம், வாகனங்களின்/உதிரிபாகங்களின் விலையை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டால் கிட்டத்தட்ட நாங்கள் செய்துவரும் சேவை மிகக்குறைந்த விலை சேவைதான்.

சில டிப்போக்களில் சாதாரணப் பேருந்துகளின் போர்டை சொகுசுப் பேருந்து என்று மாற்றி ஓட்டுகிறார்கள். அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். அந்தந்த டிப்போ மேலாளர்கள் அதிக வசூல் காட்டி சாதனை புரியவேண்டும் என்கிற ஆர்வக்கோளாறில் செய்யும் செயல் இது. தகுந்த ஆதாரங்களோடு செய்யப்படும் புகார்களுக்கு அவ்வப்போது நடவடிக்கை எடுத்துதான் வருகிறோம்.

மேலும் குறைகளே இல்லாமல் இயங்குவதற்கு அதிகாரிகள் மட்டத்தில் தீர்வுகள் இல்லை. இப்போது இருக்கும் கட்டமைப்பை வைத்து, எவ்வளவு சிறப்பாக செய்யமுடியுமோ அவ்வளவு சிறப்பாக செய்கிறோம். பொதுபோக்குவரத்து குறித்து அரசின் கொள்கைகளிலேயே மாற்றங்கள் கொண்டுவந்தால்தான் சரிசெய்ய முடியும். இவற்றையெல்லாம் செய்ய பெரும் நிதி தேவைப்படும். நம்முடைய நிதி ஒதுக்கீட்டில் போக்குவரத்துக்கு பெரிய ஒதுக்கீடும் இல்லை” என்றார் போக்குவரத்துறையின் உயர் அதிகாரி ஒருவர்.

சென்னை தவிர்த்து தமிழகத்தின் மற்ற ஊர்களில் தனியார் பஸ்கள் ஓடுகின்றன. சென்னையிலிருந்து வெளியூர்களுக்கும் ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு பஸ்களின் மீது சாட்டப்படும் குற்றச்சாட்டுகளை தனியார் மீதும் வைக்கலாம். ஆனால் மக்களோ தனியாரை ‘அட்ஜஸ்ட்’ செய்துக் கொள்கிறார்கள்.

“திங்களூரிலிருந்து தினமும் ஈரோடுக்கு தனியார் பஸ்ஸில்தான் போகிறேன். முன்பு எங்கள் ஊருக்கு நிறைய பஸ் விடவேண்டும் என்று அரசிடம் கேட்டுக் கொண்டிருந்தோம். ஆனால் தனியார் வண்டிகள் நிறைய வந்தபிறகு அந்த கோரிக்கைக்கு தேவை இல்லாமல் போய்விட்டது. நடுத்தர வர்க்கத்துக்கு பஸ் ஒரு வரம். இருசக்கர வாகனமோ/காரோ பயன்படுத்தினால் நம்முடைய வருமானத்தில் பெரும் பகுதியை அது எடுத்துக் கொள்ளும்” என்கிறார் ஈரோட்டில் வீடியோகிராபராக பணியாற்றும் மூர்த்தி.

“அடித்தட்டு மக்களும், நடுத்தர வர்க்கத்தினரும் பேருந்தையே அதிகம் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. சென்னை நகரில் மட்டும் சுமார் மூவாயிரம் பேருந்துகள் ஓடுகின்றன. இந்த எண்ணிக்கை இன்னும் இரண்டு மடங்காக வேண்டும். அதற்கேற்ப நகரின் கட்டுமான வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். தகவல் தொழில்நுட்ப யுகத்தில் இருக்கும் நாம், நம்முடைய பேருந்துகளில் ஜி.பி.எஸ் போன்ற வசதிகளை ஏற்படுத்தினால் பயணம் என்பது குறைகளற்ற நல்ல அனுபவமாக மக்களுக்கு அமையும்” என்கிறார் சென்னை கனெக்ட் அமைப்பின் திட்ட இயக்குனரான ராஜ் செருபால்.

சிறப்பான பேருந்து சேவையை மேம்படுத்தி மக்களுக்கு அளிக்க அரசு இன்னும் என்னவெல்லாம் செய்யலாம்?

* உலகளாவிய தர அளவுகோல்களையொட்டி வடிவமைக்கப்படும் பேருந்துகளை அரசு வாங்க வேண்டும். நிற்பதற்கு வசதியாக நிறைய இடம், உடல் ஊனமுற்றோர் பயன்படுத்த வாகான படிக்கட்டு மற்றும் இருக்கைகள், லக்கேஜ் வைக்க வசதி, சைக்கிள்களை ஏற்ற இடம் போன்றவை ஒருங்கே அமையுமாறு பேருந்துகளை உருவாக்க வேண்டும்.

* உள்ளாட்சி அமைப்புகளை நம்பாமல் பேருந்து நிறுத்தங்களில் நிலையங்களை போக்குவரத்து நிறுவனமே கட்ட வேண்டும். வெயில்/மழை படாமல் இருக்க தரமான மேற்கூறை, அமருவதற்கு வசதி, இரவுகளிலும் பயணி பாதுகாப்பை உணர மின்னொளி வசதி, எல்லாவற்றுக்கும் மேலாக இவற்றுக்கு முறையான பராமரிப்பு ஆகியவற்றை உருவாக்க வேண்டும். முக்கியமான பேருந்து நிலையங்களில் நவீன கழிப்பறை வசதி கட்டாயம் அமையவேண்டும்.

* பயணிகளோடு டிரைவர்/கண்டக்டர் ஆகியோருக்கு நல்லுறவு கட்டாயம். இதை அதிகாரிகள் தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். கண்டக்டர்களின் வேலைப்பளுவை குறைக்கும் வகையில் ஸ்மார்ட்கார்ட் போன்ற டிக்கெட் முறைகளை அறிமுகப்படுத்தலாம்.

* பெரும்பாலான மக்கள் நீண்டதூர பயணங்களை திட்டமிடும்போது போய் சேரவேண்டிய இடங்களுக்கு பஸ் வசதி இருக்கிறதா, இருந்தால் எத்தனை மணிக்கு கிளம்பும் போன்ற விவரங்கள் தெரியாததாலேயே ரயில் போக்குவரத்தை பெரிதும் விரும்புகிறார்கள். அரசு போக்குவரத்து சேவை குறித்த தகவல்களை இருபத்து நான்கு மணி நேரமும் இலவசமாக தர ‘கால் சென்டர்’ போன்ற அமைப்பை நிறுவலாம்.

* பேருந்து வழித்தட சேவையை பொறுத்தவரை கருத்தியல்ரீதியாக அந்தந்த பகுதி மக்களின் பங்கேற்பும் இருந்தால் நல்லது. போக்குவரத்து அதிகாரிகள் தாம் பணிபுரியும் பகுதிகளில் இருக்கும் மக்கள் நல அமைப்புகளோடு நல்லுறவில் இருக்க வேண்டும்.

4 கருத்துகள்:

  1. //நாட்டிலேயே அதிக அரசுப் பேருந்துகள் தமிழகத்தில்தான் ஓடுகிறது.// உண்மையா?

    பதிலளிநீக்கு
  2. ஸ்மார்ட்கார்ட்: need of the hr. change is hard to come.

    பதிலளிநீக்கு
  3. Not even call center will be required;;The big newspapers of various cities must sync with transport corporations to publish mobile time-table and route planner apps, and the hard-prints of time tables(latest) must be distributed iin buses.

    பதிலளிநீக்கு