6 செப்டம்பர், 2014

வாழ்த்துகள் நண்பா!

ஆரம்பத்தில் சாருவின் வாசகராகதான் அந்த நண்பர் அறிமுகமானார். எப்போதுமே கார்ப்பரேட் டிரெஸ் கோடில் பளிச்சென்றுதான் இருப்பார். நிறைய பேசுவார். பேச்சுக்கு இடையே ‘டக் டக்’கென்று ஏதாவது ஒரு வித்தியாசமான கேள்வியைப் போடுவார். அந்த கேள்விக்கு பதில் சொல்ல யோசித்துக் கொண்டிருக்கும்போதே, பேச்சை வளர்த்து மேலும் சில கேள்விகளை போடுவார். அவரது பேச்சில் ஒரு faculty தன்மை இருக்கும்.

பேச்சை ஆரம்பிப்பதற்கு முன்பாக ‘நமஸ்காரம்’ என்பார். போனில் கூட ‘ஹலோ’வுக்கு பதிலாக ‘நமஸ்காரம்’தான். என் வாழ்க்கையிலேயே எனக்கு ‘நமஸ்காரம்’ மூலம் வினோதமாக வணக்கம் தெரிவிக்கும் ஒரே மனிதர் இவர்தான். கடந்த நூற்றாண்டிலேயே வழக்கொழிந்துப்போன ‘நமஸ்காரம்’ இவருக்கு மட்டும் எங்கிருந்து ஒட்டிக் கொண்டது என்று தெரியவில்லை.

சாருவின் நூல்களில்தான் அவருக்கு இலக்கிய அறிமுகம் கிடைத்தது என்றாலும், பிற்பாடு சாரு அறிமுகப்படுத்திய இலக்கியவாதிகளை வாசித்து தன்னுடைய அறிவை வளர்த்துக் கொண்டார். குறிப்பாக ஜெயமோகனின் தீவிர வாசகர் ஆகிவிட்டார். ‘அறம்’, ‘புறப்பாடு’ சீரியஸ்களின் தீவிர வாசகர். “அவரோட மகாபாரதம் சட்டுன்னு புரியலைன்னா கூட, மொழியிலே ஒரு வசீகரம் இருக்கு தலைவா” என்பார்.

பின்னர் எங்களோடு மொக்கை ஃப்லிம் க்ளப் படங்களுக்கு வர ஆரம்பித்தார். பைலட் மாதிரி தரை டிக்கெட் ரேஞ்ச் தியேட்டர்களோடு செட் ஆகாமல் சங்கடப்படுவார். “அடிக்கடி தெலுங்கு படம் போறீங்களே? அப்படி அதுலே என்னதாங்க இருக்கு?” என்று கேட்டு ஜூனியர் என்.டி.ஆரின் ‘பாட்ஷா’வுக்கு கூட வந்தார். படம் மட்டுமல்ல. படம் பார்த்த ஆடியன்ஸும் அவரை மிரட்சிப்படுத்தி விட்டார்கள் போல. அதிலிருந்து படம் பார்ப்பதையே விட்டுவிட்டார். “டிவியிலே கூட சினிமா போட்டா பார்க்குறதில்லைங்க” என்கிறார்.

ஒரு மாதிரி மிடுக்கான நடை, உடை, பாவனையோடு இருந்த அவரை ‘பார்ன் வித் கோல்டன் ஸ்பூன்’ என்றுதான் ஆரம்பத்தில் நினைத்திருந்தோம். பொதுவாக எங்கள் செட் நண்பர்கள், மற்றவர்களின் ‘டூ பர்சனலான’ தகவல்களில் தேவையின்றி ஆர்வம் காட்டுவதில்லை. அதே நேரம் போக்கு சரியில்லை என்றால் தவறுகளை சுட்டிக்காட்டவும் தயங்குவதில்லை.

ஏனோ தெரியவில்லை. ஒரு நாள் டீக்கடை சந்திப்பில் மனம் திறந்து பேச ஆரம்பித்தார்.

தமிழகத்தின் மேற்கு மாவட்டம் ஒன்றில் பிறந்தவர். அப்பா லாரி டிரைவர். படுமோசமான ஏழ்மை. பள்ளியில் நன்றாக படித்திருந்தாலும், கல்லூரியில் படிக்க வைக்கும் அளவுக்கு வசதியில்லை. பள்ளிப்படிப்பு முடிந்ததுமே பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை. பெட்ரோல் போடும் நேரம் போக மற்ற கணக்கு வழக்குகளிலும் முதலாளிக்கு உதவியிருக்கிறார். ‘டிகிரி படிச்சவன் மாதிரி வேலை பார்க்குறானே’ என்று ஆச்சரியப்பட்ட முதலாளி விசாரித்திருக்கிறார். குடும்பச்சூழல் காரணமாக மேற்படிப்புக்கு வாய்ப்பில்லை என்று இவர் சொன்னதும், ‘ஏதோ கம்ப்யூட்டர்னு சொல்றாங்களேப்பா, அதுலே ஏதாவது கோர்ஸ் படியேன்’ என்பது மாதிரி அறிவுறுத்தியிருக்கிறார்.

அப்படிதான் ஏதோ ஒரு ஷார்ட் டெர்ம் டிப்ளமோ கோர்ஸில் சேர்ந்தார். இவருடைய சின்சியாரிட்டியை பார்த்த அந்த இன்ஸ்டிட்யூட், இவரது கோர்ஸ் முடிந்ததும் இவரையே ஃபேகல்டியாக பணிக்கு சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். வகுப்பு முடிந்ததும் கம்ப்யூட்டரை நோண்டிக் கொண்டிருப்பார். இண்டர்நெட்டில் தேடித்தேடி நிறைய தளங்களை பார்த்து புரோகிராமிங் கற்றார். மேலும் அறிவு பெறுவதற்காக ஏதோ கோர்ஸில் இணைந்து codingல் விற்பன்னர் ஆனார்.

சென்னையில் ஒரு சிறிய நிறுவனத்தில் சொற்ப சம்பளத்துக்கு வேலை கிடைத்தது. சம்பளத்தை பற்றிய பிரக்ஞையை மறந்து சின்சியராக வேலை பார்க்க, துறையில் சொல்லிக் கொள்ளும்படி பெயர் பெற்றார். டிகிரியே இல்லாமல் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு பெற்ற அனுபவம் அவரை உயர்த்தியதின் காரணமாக இன்று இன்னொரு மென்பொருள் நிறுவனத்தில் உயர்பதவியில் இருக்கிறார். நல்ல சம்பளம் என்பதைத் தனியாக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதில்லை.

ஊரில் இருந்த குடிசைவீட்டை அகற்றி மாடிவீடு கட்டினார். சகோதரிக்கு திருமணம் செய்துவைத்தார். பெற்றோரை நன்கு பார்த்துக் கொள்கிறார். பத்து, பன்னிரெண்டு ஆண்டுகளில் ஒட்டுமொத்த குடும்பச் சூழலையே மாற்றி சாதித்துக் காட்டியிருக்கிறார்.

இவரது கதையை கேட்டதுமே, “பாஸ், எங்க பத்திரிகைக்கு பேட்டி கொடுங்களேன்” என்று முந்திரிக்கொட்டை தன்மையாக கேட்டேன். ‘பெட்ரோல் பங்க் ஊழியர் இன்று சாஃப்ட்வேர் நிறுவன உயர் அதிகாரி’ என்று டப்பென்று ஒன்லைனர் ரெடி ஆனது. ‘நமஸ்காரம்’ சொல்லி, “ஆளை விடுங்க” என்று எஸ்கேப் ஆனார். “போட்டோவெல்லாம் பெருசா போடுவோம் தலைவரே” என்றாலும் வேண்டாமென்று மறுத்துவிட்டார். “தன்னம்பிக்கை கதைதான்னாலும் அனுதாபம் தேடறமாதிரி ஆயிடும். ஒவ்வொருத்தனும் இதுமாதிரி போராடித்தானே முன்னுக்கு வர்றான், நான் மட்டும் என்ன ஸ்பெஷல்?” என்று மறுத்துவிட்டார். அதனால் என்ன? இதோ இங்கே எழுதிவிட்டேனே.

சென்னையிலேயே நீண்டகாலம் தனியாகதான் வசித்து வந்தார். “கல்யாணம் பண்ணிக்கக்கூடாதா?” என்று கேட்போம். “பார்த்துக்கிட்டிருக்காங்க. ஜாதகம் எதுவும் செட் ஆகமாட்டேங்குது. நமக்கு லவ்வு பண்ணவும் துப்பு இல்லே” என்று நொந்துக் கொள்வார்.

நடுவில் எங்களுக்குள் கொஞ்சம் கேப். அவருக்கு பணிரீதியாக அநியாயத்துக்கு பளு. திடீரென ஒருநாள் அலுவலகம் வந்தவர் தன்னுடைய திருமணப் பத்திரிகையை வெட்கத்தோடு நீட்டினார். நாளைக்கு கல்யாணம். இதோ கிளம்பிக் கொண்டிருக்கிறோம். வாழ்த்துகள் நண்பா!

6 கருத்துகள்: