21 ஜனவரி, 2016

குடும்பம் + குற்றம் + செக்ஸ் = டோலிவுட் கோங்குரா

குழம்பிப் போயிருக்கிறார்கள் தெலுங்கர்கள். தொண்ணூறுகளின் இறுதியிலும், இரண்டாயிரங்களின் துவக்கத்திலும் தமிழர்கள் சந்தித்த அதே சூழல்தான்.

நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளில் இருந்து எழுபதுகளிலேயே தமிழர்கள் வெளிவரத் தொடங்கிவிட்டோம். நில சீர்த்திருத்தம் போன்ற அரசின் முன்னெடுப்புகளும் அந்த சமூக மாற்றத்தை விரைவுப்படுத்தியது. தொண்ணூறுகளின் முற்பகுதியில் இந்தியாவை ஆக்கிரமித்த உலகமயமாக்கலுக்கு தன்னை வேகமாக தயார்படுத்திக் கொண்ட முதல் இந்திய மாநிலம் தமிழகம் என்பதற்கு அதுவும் ஒரு காரணம். மைசூர் அரசுடனான நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் காலாவதியாகி காவிரி பிரச்சினை தலையெடுக்கத் தொடங்கியவுடனேயே தமிழக அரசு விழித்துக் கொண்டு தன்னை நகர்ப்புற கலாச்சாரத்துக்கு தகவமைத்துக் கொள்ள தயாராகி விட்டது. எனவேதான் இங்கே பண்ணையார்களும், நாட்டாமைகளும், ஜமீன்களும் மவுசு இழந்துப் போனார்கள்.

ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் டெல்லி, மும்பை, கொல்கத்தா என்று வேலைரீதியாக தமிழ் பார்ப்பனர்கள் பறக்க, அவர்களை பின்தொடர ஆரம்பித்தார்கள் மற்ற தமிழர்கள். உலகமயமாக்கலின் காரணமாக பணித்திறமைக்கு பற்றாக்குறை ஏற்பட்டபோது அதே பார்ப்பனர்களின் வாரிசுகள் அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு இடம்பெயர, நெல்லுக்கு பாயும் தண்ணீருக்கு பாய்ந்ததை போல பார்ப்பனரல்லாத மற்ற சாதியினரில் கல்வித்தகுதி பெற்ற என்ஜினியர்களும், சி.ஏ.க்களும், எம்.பி.ஏ.க்களுக்கும் அயல்நாடுகளில் பெரும் வரவேற்பு கிடைத்தது. தமிழ் சமூகம் கணிசமாக சம்பாதிக்க ஆரம்பித்தது. இன்று என்.ஆர்.ஐ. தமிழர்களை குறிவைத்து செயல்படக்கூடிய ஏராளமான வணிகங்களில் (என்.ஜி.ஓ.தான் ஆகப்பெரிய வணிகம்) சினிமாவுக்கே பிரதான இடம். ஓவர்சீஸில் காசு பார்க்கலாம் என்று எண்பதுகளின் இறுதியில் கமல் சொன்னபோதும், என்.ஆர்.ஐ.களின் முதலீட்டில் பெரிய படங்களை எடுக்க முடியும் என்றுகூறி ‘மருதநாயகம்’ முயற்சித்தபோதும், “இதெல்லாம் வேலைக்கு ஆவுறதில்ல....” என்று மஞ்சப்பையை கக்கத்தில் வைத்துக் கொண்டு கேலியாக சிரித்த சினிமாக்காரர்கள் இன்று ‘ஓவர்சீஸே சரணம்’ என்று காலில் விழுகிறார்கள். கமல் சொன்னது நம்மூர்காரர்களுக்கு புரியவில்லை. ஆனால் பாலிவுட்காரர்கள் விழித்துக்கொண்டு இருபது வருடங்களாக பணத்தை அறுவடை செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஓக்கே. லெட் அஸ் கமிங் டூ த கோர் பாயிண்ட்...

சிகப்பு கோலோச்சிய பூமியாக இருந்தாலும் ஆண்டான் – அடிமை ஜமீன் கலாச்சாரத்தில் இருந்து இன்றைய தேதி வரை முழுமையாக வெளிவர முடியாமல் அவதிப்படுகிறது தெலுங்குதேசம். நகர்ப்புற பிரதேசங்கள் சீமாந்திராவாகவும், சிறுநகரம் மற்றும் கிராமங்கள் பெரும்பாலும் அடங்கிய மாநிலமாக தெலுங்கானாவும் உருவாகிய பிறகு எல்லா வணிகமுமே அப்பகுதியில் எம்மாதிரியான யுக்திகளை செயல்படுத்தி தம்மை வளர்த்துக் கொள்வது என்கிற குழப்பத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள். சந்திரபாபு நாயுடுவின் சாஃப்ட்வேர் அபிமானத்தால் அங்கே கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் வெயிட்டாக உருவாகியிருக்கும் என்.ஆர்.ஐ தெலுங்கு சமூகம், நாம் முன்பு எதிர்கொண்டு, இப்போது சமாளித்துக் கொண்டிருக்கும் கலாச்சாரரீதியான இரண்டுங்கெட்டான் குழப்பத்தில் நீடிக்கிறது.

இந்த பிரச்சினைகளை எல்லாம் மிக எளிமையாக முதன்முதலாக அங்கே கடந்திருப்பவர்கள் சினிமாக்காரர்கள்தான். உலகிலேயே வேறெந்த பிரதேசத்திலும் தெலுங்கர்கள் அளவுக்கு சினிமாவை கொண்டாடுபவர்கள் இருப்பார்களா என்பது சந்தேகமே.

பொங்கலுக்கு தமிழில் நான்கு படங்களை வெளியிட்டு அவற்றில் ஒன்று ஹிட் ஆகி, இன்னொன்று ஜஸ்ட் பாஸ் ஆகி, மற்ற இரண்டு படங்கள் அட்டர் ப்ளாப் ஆகியிருக்கின்றன. அதே நேரம் தெலுங்கிலும் மகரசங்கராந்திக்கு நான்கு படங்கள்தான் வெளியாகி இருக்கின்றன. நான்குமே லாபம் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது. அவற்றில் ஒன்று சூப்பர்ஹிட். மற்றொன்று ப்ளாக்பஸ்டர் ஹிட். இவற்றில் மூன்று படங்கள் சென்னையில் வெளியாகியிருக்கின்றன. ஜூனியர் என்.டி.ஆர் படத்துக்கும், நாகார்ஜூனா படத்துக்கும் கூடிய கூட்டம் ரஜினி முருகனைவிட அதிகம். மூன்று படங்களுமே சென்னை கேசினோ திரையரங்கில் ஓடுகிறது. சர்வானந்த் நடித்த ‘எக்ஸ்பிரஸ் ராஜா’ மட்டும் நாளைதான் வெளியாகிறது.

இன்னமும் தமிழ் சினிமாவுக்கு கைவராத வெற்றி சூத்திரத்தை தெலுங்கில் கண்டறிந்து விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. படத்துக்கு பூஜை போட்ட அன்றே, இந்தப் படத்தின் ஒட்டுமொத்த வசூல் என்னவென்று கணித்து திட்டமிட்டு செலவுகளை வரையறை செய்து பக்காவாக துட்டு பண்ணுகிறார்கள். இந்த திட்டமிடலிலேயே படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், மார்க்கெட்டிங் எல்லாமே மிக துல்லியமாக அடையாளம் காணப்பட்டு விடுகிறது.
ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘நானாக்கு பிரேமத்தோ’ (அப்பாவுக்கு அன்புடன்), ஐரோப்பிய என்.ஆர்.ஐ குடும்பங்களின் தொழில்போட்டியை களமாக கொண்ட படம். உள்ளூரிலும் அந்த சரக்கை விற்கவேண்டுமே? எனவே உள்ளடக்கம் பக்கா லோக்கல். ஜூ.என்.டி.ஆரின் அப்பா ஒரு காலத்தில் பெரும் தொழில் சாம்ராஜ்யத்தின் அதிபதி. ஜெகபதி ராஜூவின் துரோகத்தால் சரிகிறார்.

மகன் வளர்ந்து, அப்பாவை ஏமாற்றியவனை அதலபாதாளத்துக்கு தள்ளுகிறான் என்கிற 70ஸ் கதைதான். போனஸாக வில்லனின் மகளை காதல் வலையில் வீழ்த்துகிறார் ஹீரோ. ‘தனி ஒருவன்’ பாணியில் கேட் vs மவுஸ் விளையாட்டு திரைக்கதையில் சுவாரஸ்யத்தின் உச்சியை எட்டுகிறது. இயக்குநர் சுகுமாரின் ட்ரீட்மெண்ட், இப்படத்தை தொழில்நுட்ப அடிப்படையில் சர்வதேச தரத்துக்கு கொண்டுச் சென்றிருக்கிறது. தரை டிக்கெட் ஹாலிவுட் கமர்ஷியல் மாதிரியான அதிவேக திரைக்கதை, அதிரடி ஸ்டண்ட், தெலுங்குக்கே உரித்தான கலர் காஸ்ட்யூம் டூயட்டுகள், குத்துப்பாட்டு என்று மிக்ஸிங் பக்காவாக இருப்பதால் உள்ளூரில் மட்டுமின்றி அயல்நாடுகளிலும் அமோக வசூல்.

நாகார்ஜூனாவின் ‘சொக்கடே சின்னி நாயனா’, இதுவரையிலான ஒட்டுமொத்த தெலுங்கு சினிமாக்களின் ஸ்பெசிமென் சாம்பிள். நாகார்ஜூனா என்கிற ஹீரோவுக்கு ஆன்ஸ்க்ரீனில் இருக்கும் ஆக்‌ஷன் + ரொமான்ஸ் இமேஜையும், ரசிகர்களின் மனதில் பதிந்திருக்கும் ஆஃப் ஸ்க்ரீன் ப்ளேபாய் இமேஜையும் (தென்னிந்தியாவின் ஹாட்டஸ்ட் ஸ்டார் அமலாவை கடும்போட்டியில் தட்டிக் கொண்டு போனவர் ஆயிற்றே?) அப்படியே புத்திசாலித்தனமாக காசாக்கியிருக்கிறார் இயக்குநர் கல்யாண் கிருஷ்ணா.

படத்தின் கதை ரொம்பவும் சிம்பிள்தான்.
அமெரிக்காவிலிருந்து ராமும், சீதாவும் சொந்த ஊருக்கு வருகிறார்கள். வந்த காரணம், விவாகரத்து வாங்குவது. மாமியார் ரம்யா கிருஷ்ணன் மருமகளிடம் காரணம் கேட்கிறார். மனைவியை கவனிக்காமல் எப்போதும் மருத்துவத்தொழிலையே கட்டி அழுதுக் கொண்டிருக்கிறான் ராம். கல்யாணமாகி மூன்று ஆண்டுகளில் மூணே மூன்று முறை மட்டுமே தம்பதிகளுக்குள் ‘அது’ நடந்திருக்கிறது. ஒரு நாளைக்கே மூன்று முறை ‘அது’ செய்யக்கூடிய தன் கணவனுக்கு இப்படி ஒரு பிள்ளையா என்று ரம்யாகிருஷ்ணனுக்கு கொதிப்பு ஏற்படுகிறது. இறந்துவிட்ட தன் கணவன் பங்காரம் (அதுவும் நாகார்ஜூனாதான்) போட்டோவுக்கு முன்பாக நின்று, “யோவ் பங்காரம், என்னை இப்படி தனியா தவிக்கவிட்டுட்டு போயிட்டே, உன் புள்ளைய கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கினா, இப்படி வாழ்க்கையை கெடுத்துக்கிட்டு வந்து நிக்கிறான்” என்று புலம்புகிறார்.

எமலோகத்தில் எமகன்னிகளோடு ஜல்ஸா புரிந்துக் கொண்டிருக்கும் பங்காரம், மகனின் பிரச்சினையை (!) சரிசெய்ய பூலோகத்துக்கு விரைகிறார். அவரை மனைவி ரம்யாகிருஷ்ணன் மட்டும்தான் பார்க்க முடியும். பேசமுடியும். வந்தது வந்துவிட்டோம், ஒருமுறை மனைவியோடு ஜாலியாக இருந்துவிடலாம் என்று முயற்சிக்கும் செத்துப்போன பங்காரத்துக்கு அதற்கெல்லாம் அலவ்ட் இல்லை என்கிற எமலோக விதியை எமன் சுட்டிக் காட்டுகிறார்.
எப்படியாவது மகன் ராமை முறுக்கேற்றி மகளோடு சேரவைக்க, அப்பா பங்காரம் சிட்டுக்குருவித்தனமாக சிந்தித்து சில ஐடியாக்களை செயல்படுத்துகிறார். இதே காலக்கட்டத்தில்தான் அவருக்கு தெரியவருகிறது, தான் இறந்தது விபத்தால் அல்ல சதியால் என்பது. மகனை மருமகளோடு நான்காவது முறையாக வெற்றிகரமாக சேரவைக்கிறார். அவர்களுக்கு இடையேயான பிரச்சினைகளை களைந்து ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பையும் காதலையும் புரியவைக்கிறார். தன்னை வீழ்த்திய வில்லன்களையும் மகன் மூலமே பழிவாங்குகிறார்.

அவ்வளவுதான் கதை. இதை தமிழில் எடுத்தால் பெரியார் பிறந்த பகுத்தறிவு மண்ணில் எடுபடாது. ஆனால் புராண மயக்கத்தில் கிறுகிறுத்துப் போயிருக்கும் ஆந்திராவுக்கு அல்வா மாதிரி சப்ஜெக்ட். எமனை காட்டி எத்தனையோ முறை கல்லா கட்டியும், ஒவ்வொரு முறையும் முந்தைய வசூல்சாதனையை முறியடித்துக் கொண்டே போகிறார்கள்.

சக்கைப்போடு போடும் மேற்கண்ட இரண்டு படங்களிலுமே குடும்பம், குற்றம், செக்ஸ் ஆகியவைதான் கச்சா. எதை எதை எந்தெந்த அளவுக்கு கலக்க வேண்டும் என்பதை படத்தின் பட்ஜெட், ஹீரோ முதலான விஷயங்கள் தீர்மானித்திருக்கின்றன. ஆனால், சொல்லி அடித்திருக்கும் சிக்ஸர்கள் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. இதை போல நமக்கே நமக்கான ஃபார்முலாவை நாம் எப்போதுதான் கண்டறியப் போகிறோம்?

நாம் சமூகம் குறித்த புரிதலில் கொஞ்சம் தெளிவாகி விட்டோம். அவர்கள் சினிமா எடுப்பதில் பயங்கர தெளிவாக இருக்கிறார்கள். அப்படியே உல்டா.

அதிருக்கட்டும். பாலகிருஷ்ணா நடித்த ‘டிக்டேட்டர்?’
இரண்டரை மணி நேரம் பாட்டு, ஃபைட்டு, பஞ்ச் டயலாக், டேன்ஸ் என்று பக்கா என்டெர்டெயின்மெண்ட். பாலைய்யாவை பார்த்து சிரிப்பு, அநீதியை உணர்ந்து ஆக்ரோஷம், ஹீரோயின் அஞ்சலியை நினைத்து காமம் உள்ளிட்ட நவரச உணர்வுகளையும் படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகனுக்கும் ஏற்படுத்துகிறார்கள். தியேட்டரை விட்டு வெளியே வந்ததுமே மூளை பிளாங்க் ஆகி ஒருமாதிரி போதிமரத்து ஞானம் (ஃபுல் அடித்த போதை என்றும் சொல்லலாம்) கிடைக்கிறது. படம் சம்பந்தப்பட்ட அத்தனை விவரங்களுமே மறந்துவிடுகின்றன. அடுத்த காட்சிக்கு க்யூவில் நிற்பவன் கேட்கிறான். “மூவி பாக உந்தியா அண்ணா?”. சட்டென்று பாலையா ஸ்டைலில் தொடை தட்டி, கண்கள் சிவந்து, விருட்டென்று ஒரு கையை உயர்த்தி அனிச்சையாக அவனை எச்சரிக்கும் தொனியில் உரத்த குரலில் சொல்கிறோம் “சூப்பருக்கா உந்திரா....”

9 ஜனவரி, 2016

குரங்கு கையில் பூமாலை... கூவம் நம் கைகளில்!!


வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டு சென்னை திரும்புபவர்கள் ஏதேனும் பாலங்களை கடக்கும்போதே மூக்கைப் பொத்திக்கொண்டு முணுமுணுப்பார்கள். “அங்கெல்லாம் ஆறு என்னம்மா ஓடுது தெரியுமா? நம்மூர்லேயும் கெடக்குதே கூவம் கழுதை...” அவர் வாயிலிருந்து அடுத்த அரை மணி நேரத்துக்கு கூவத்துக்கு அர்ச்சனை நடக்கும்.

பாவம். ஆறு என்ன செய்யும். ஆற்றை அசிங்கப்படுத்திய நம்மை அல்லவா நாமே காறித்துப்பிக் கொள்ள வேண்டும்?

கூவத்தை குடித்தார்கள்

நம்புங்கள்.

எல்லா நதிகளையுமே போலவே கூவமும் புனிதமான நதிதான். நதியென்றாலே புனிதம்தான். கூவம் ஆற்றின் நீரை நம் முன்னோர் குடித்திருக்கிறார்கள். குளித்திருக்கிறார்கள். வேளாண்மை செய்திருக்கிறார்கள். இந்நதியின் காரணமாக நாகரிகம் வளர்ந்திருக்கிறது. நகரங்கள் பிறந்திருக்கின்றன.

வள்ளல் பச்சையப்பா முதலியாரை தெரியும் இல்லையா? புகழ்பெற்ற சென்னை பச்சையப்பா கல்லூரி இவர் பேரில்தான் அமைந்திருக்கிறது. அந்த பச்சையப்பா முதலியார், கூவம் கரையோரம் அமைந்திருந்த கோமளீஸ்வரம்பேட்டையில்தான் (இன்றைய சிந்தாதிரிப்பேட்டை பகுதி) வசித்தார். அவர் காலத்தில் செல்வந்தர்கள் கூவம் கரையில்தான் பங்களா கட்டி வசித்தார்கள். கூவம் நதி கொடையாக தந்த குளிர்ந்த காற்றையும், அதன் கரைகளில் வளர்ந்த காட்டுச்செடி மலர்களின் சுகந்தத்தையும் அனுபவித்து வாழ்ந்தார்கள். பச்சையப்பா முதலியார் தினமும் காலையில் கூவத்தில் குளித்து சுத்தபத்தமாக கோமளீஸ்வரன் கோயிலுக்கு போய் இறைவனை வணங்கிவிட்டுதான் தன் அலுவல்களை தொடங்குவாராம். இதெல்லாம் ஏதோ கி.மு.வில் நடந்த நிகழ்ச்சிகள் அல்ல. வெறும் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தவைதான்.

வெள்ளையர்களை கவர்ந்த ஆறு

கூவம் நதி கடலில் சேரும் பகுதி ஓர் இயற்கை ஆச்சரியம். அதில் கவரப்பட்டதால்தான் கிழக்கிந்திய கம்பெனியின் பிரான்சிஸ் டே, சரக்குக் கப்பல்களை நிறுத்த இதைவிட வாகான இடம் கிடைக்காது என்று கருதி, அப்பகுதியின் வடக்கில் இருந்த பகுதிகளை விலைக்கு வாங்கி வணிக மையம் அமைத்தார். அப்பகுதியில் செயற்கை துறைமுகம் உருவாக்கப்பட்டு, அதைச்சுற்றி குடியிருப்புகள் உருவானது. கோட்டை எழுப்பப்பட்டது. நகரம் உருவானது. அவ்வகையில் மதறாஸ் (சென்னை) உருவானதற்கு கூவமும் ஒருவகையில் காரணம்.

இந்தியா, வெள்ளையர்களின் ஆளுகைக்கு உட்படவும் மறைமுகமான காரணமாக இந்நதியே இருந்திருக்கிறது எனும்போது, வரலாற்றில் எத்தகைய மகத்தான இடத்தை நாம் கூவத்துக்கு கொடுத்திருக்க வேண்டும்.

கூவம் ரூட் மேப்

கூவம் என்கிற பெயர் ‘கூபம்’ என்கிற பழந்தமிழ் சொல்லில் இருந்து மருவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. கூபம் என்றால் ஆழமான குளம் என்று பொருள். அக்காலத்தில் நீரியல் அறிவு கொண்ட வல்லுநர்களை ‘கூவாளன்’ என்றே அழைத்திருக்கிறார்கள்.

சென்னையிலிருந்து சுமார் 70 கி.மீ தூரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் கூவம் கிராமம்தான் இந்த ஆறு உருவாகும் இடம். அங்கிருந்து சிறு ஓடையாக ஓடி, ஐந்து கி.மீ தூரத்தில் இருக்கும் சட்டறை என்கிற கிராமத்தில் நதியாக உருவெடுக்கிறது. திருவள்ளூர், பூந்தமல்லி நகரங்களை ஒட்டி சுமார் 60 கி.மீ பாய்ந்து, சென்னைக்குள் கோயம்பேடு அருகில் நுழைகிறது. அரும்பாக்கம், சூளைமேடு, சேத்துப்பட்டு, எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டையை எட்டுகிறது. அங்கே இரண்டாக பிரிந்து சென்னைக்குள் ஒரு தீவினை உருவாக்குகிறது. பிரிந்த நதி மீண்டும் நேப்பியர் பாலம் அருகே இணைந்து, முகத்துவாரம் வாயிலாக வங்கக்கடலில் கலக்கிறது.

ஆவடிக்கு அருகில் பருத்திப்பட்டு அணைக்கட்டு வரை சராசரி ஆறாகவே இருக்கிறது கூவம். ஆக்கிரமிப்புகள், மணல் சுரண்டல் என்று எல்லா ஆறுகளுக்கும் நேரும் அவலம் கூவத்துக்கும் நேர்கிறது. இன்னமும் நிலத்தடி நீர் ஆதாரத்துக்கும், விவசாயத்துக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் கூவத்தை நம்பி பல கிராமங்கள் இருக்கின்றன.
சென்னை மாநகருக்குள் நுழைவதற்கு முன்பாகவே தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்புகளின் கழிவுநீர் அப்படியே விடப்பட்டு நம் பாவங்களை சிலுவையாக சுமந்து சாக்கடையாக கடனே என்றுதான் கடலுக்கு போய் சேர்கிறது. நகருக்குள் நரம்பாக செல்லக்கூடிய சுமார் 20 கி.மீ. தூரம்தான் கூவத்துக்கு நரகம். ஆற்றுநீர் கருப்பாக, துர்வாசனையோடு வேண்டாத விருந்தாளியாகதான் நகருக்குள் நகர்கிறது.

எப்போது மாசுபட்டது?

வெள்ளையரிடமிருந்து நாடு சுதந்திரம் பெற்ற பிறகு ஓன்றிரண்டு ஆண்டுகளில் நடந்த ஆய்வில், சென்னை மாநகருக்குள் கூவம் நதியில் சுமார் ஐம்பது வகை மீன் இனங்கள் வாழ்ந்ததாக தெரியவருகிறது. பழைய புகைப்படங்களை காணும்போது மீனவர்கள் மீன்பிடித்தொழிலை கூவம் ஆற்றில் செய்து வந்தது உறுதியாகிறது.

ஆனால் -

அடுத்த பத்தாண்டு காலத்துக்குள்ளேயே கூவத்தில் உயிர்வாழும் மீன் இனங்களின் எண்ணிக்கை வெறும் இருபதாகி இருக்கிறது. இன்று நீர்வாழ் உயிரினங்கள் வசிக்க லாயக்கற்ற ஆறு அது.

வெள்ளையர் நம்மை சுரண்டியிருந்தாலும், நம்மூர் ஆற்றின் மீது அவர்கள் அக்கறையாகதான் இருந்திருக்கிறார்கள். இந்நதியின் கரைகளில்தான் பெரும் மாளிகைகளை எழுப்பி, முக்கிய அதிகாரிகளையும், ஆளுநர்களையும் தங்க வைத்தனர். கூவத்தை கொன்ற பெருமை நம்மையே சாரும். 1960களின் தொடக்கத்திலேயே கூவம், முழுமையான சாக்கடையாக மாறிவிட்டது.

அண்ணாவின் கனவு

1967ல் அண்ணா ஆட்சி பொறுப்பேற்றபோது, ஒரு கோடியே பதினெட்டு லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கூவம் நதியை சீரமைக்க ஒரு திட்டம் தீட்டினார். அப்போது, “லண்டன் மாநகருக்கு தேம்ஸ் நதியை போல சென்னைக்கு கூவம் பெருமை சேர்ப்பதாய் அமைய வேண்டும்” என்று தன்னுடைய கனவினை வெளிப்படுத்தினார்.
அண்ணாவுக்கு பிறகு முதல்வராக பொறுப்பேற்ற கருணாநிதி கூவத்தில் படகுகளை விட்டு சுற்றுலாவை ஈர்க்க முயற்சித்தார். கடையேழு வள்ளல்கள் பெயரில் படகுத் துறைகளையும் கட்டினார். இன்றும் பாழடைந்த நிலையில் இருக்கும் அந்த படகுத்துறைகளை கூவம் கரைகளில் காணலாம்.

அதன் பின்னரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்நதியை சீர்படுத்தி மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர ஏராளமான முயற்சிகள் எடுக்கப்பட்டு பல கோடி ரூபாய்க்கு திட்டங்களாக திட்டங்கள் தீட்டப்பட்டன. குறிப்பாக சென்னை மாநகர மேயராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது, திமுக அரசு 2000ஆம் ஆண்டு ரூ.720 கோடி மதிப்பீட்டில் ஒரு திட்டத்தை அறிவித்தபோது கூவம் மணக்கும் என்றே உறுதியாக எண்ணப்பட்டது.

ஆனால், சாபக்கேடு கூவத்துக்கா அல்லது சென்னை மக்களுக்கா என்று தெரியவில்லை. ஆட்சி மாற்றத்தால் அந்த திட்டம் அம்பேல் ஆனது. அதன் பிறகும் அவ்வப்போது அறிவிப்புகள் வெளிவந்தாலும் மக்களும், கூவமும் அதை சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை. இன்றுவரை அண்ணாவின் கனவு நிறைவேறவில்லை.

பொறுத்த கூவம் பொங்கியது

இயற்கையை மனிதன் என்னதான் நாசப்படுத்தினாலும், அது ஒரு கட்டம் வரைதான் பொறுக்கும். பின்னர் தன்னையே ஒரு உலுக்கு உலுக்கி மனித நாசங்களை உதிர்க்கும். தன்னுடைய நாற்றத்தை தானே சகிக்க முடியாமலோ என்னவோ, சமீபத்திய பெருமழையில் கூவம் நம் பாவங்களை மொத்தமாக கழுவிக் கொண்டது. கால்வாய்கள் வழியாக வந்த வெள்ளநீர் நிரம்பி, சாக்கடைகளை ஒட்டுமொத்தமாக கடலுக்குள் கொண்டுச் சென்று கொட்டி தன்னைதானே அந்த ஆறு புதுப்பித்துக் கொண்டது. தெளிவான நீரோட்டம் இயல்பாக அமைந்தது.

ஆனால் அந்த சுத்தத்தின் ஆயுள் ஒரு மாதம் கூட முழுமையாக நீடிக்கவில்லை. மீண்டும் பழைய நிலைக்கே நீரின் நிறம் கருப்பாக மாறிக் கொண்டிருக்கிறது. துர்நாற்றம் வீச ஆரம்பித்திருக்கிறது.

என்ன செய்யப் போகிறோம்?
நம் பயன்பாட்டுக்கு இயற்கை அளித்த கொடையான நீர்நிலைகளை கூவம் மாதிரி விஷமாக்கிவிட்டு குடிப்பதற்கு, குளிப்பதற்கு, விவசாயத்துக்கு, இதர பயன்பாடுகளுக்கு எல்லாம் லாயக்கற்றதாக செய்துவிட்டு இமயமலை பனியை உருக்கி பயன்படுத்தப் போகிறோமா?
நதி ஓடுவது மனித சமூகம் உருவாக்கும் கழிவுகளை சுமப்பதற்கல்ல. நதியோரங்கள் தொழிற்பேட்டைகளோ அல்லது வேறு பயன்பாட்டுகளுக்கோ ஒதுக்கப்பட வேண்டிய இடங்கள் அல்ல. இதை நாம் மறந்ததால்தான் இன்று குடிநீருக்கு அவதிப்படுகிறோம். எதிர்காலத்தில் மூச்சுவிடவும் சிரமப்படுவோம்.

நதிகள் இணைப்பைவிட, நதிநீர் சீரமைப்புதான் இப்போது அவசிய அவசரபணி. நாம் இப்போது தொடங்காவிட்டால் வேறு எப்போதுதான் செய்யப் போகிறோம்?



சிங்கப்பூர் வழிகாட்டுகிறது!

சென்னையில் கூவம் மாதிரிதான் சிங்கப்பூரிலும் ஓர் ஆறு ஓடிக்கொண்டிருந்தது.

1819ல் சிங்கப்பூர் ஒரு நகரமாக உருவானதிலிருந்தே, அந்நகரின் வணிக நடவடிக்கைகளின் முதுகெலும்பாக சிங்கப்பூர் ஆறு இருந்து வந்தது. வேகமான நகரமயமாக்கல் அந்நதியையும் சாக்கடை ஆக்கியது. நம்மூர் கூவத்துக்கு என்ன நடந்ததோ, அதுவே அங்கும் நடந்தது.

1970களில் உலகமெங்கும் இருந்து சுற்றுலாப் பயணிகளை வசீகரிக்கத் தொடங்கிய சிங்கப்பூருக்கு நடுவே மாபெரும் சாக்கடை ஓடிக்கொண்டிருந்தது அரசுக்கு தர்மசங்கடத்தை கொடுத்தது. தவளைகள் கூட வாழ லாயக்கற்ற கருப்பான நீர் துர்நாற்றத்தோடு சீறிக்கொண்டிருக்க, சிங்கப்பூரில் கலை அழகை காண உலகின் கடைக்கோடியில் இருந்து வந்தவர்கள் எல்லாம் மூக்கைப் பிடித்துக் கொண்டார்கள்.

சகித்துக்கொள்ள முடியாத இந்த காட்சிக்கு ஒரு முடிவுகாண சிங்கப்பூர் அரசு முடிவெடுத்தது. செத்துப்போன நதிக்கு உயிர் கொடுக்க திட்டம் தீட்டியது.

1977ல் ‘ஆக்‌ஷன் ப்ளான்’ அமலுக்கு வந்தது.

· ஆற்றை ஒட்டி அமைந்திருந்த பதினாறாயிரம் குடும்பங்கள், அங்கிருந்து அகற்றப்பட்டு வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டார்கள்.

· போலவே ஆற்றின் கரைகளில் அமைந்து, நதிநீரை மாசுபடுத்திக் கொண்டிருந்த சுமார் மூன்றாயிரம் தொழில் நிலையங்கள், நகரின் வேறு இடத்தில் அமைக்கப்பட்ட இண்டஸ்ட்ரியில் எஸ்டேட்டுகளுக்கு இடம்பெயர்ந்தன.

· ஆற்றோரத்தில் இறைச்சி தேவைக்காக அமைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான பன்றி மற்றும் வாத்து பண்ணைகளை வேறு இடங்களுக்கு கொண்டுச் சென்றார்கள்.

· மாசு கட்டுப்பாட்டு அமைப்புகள் ‘ஓவர்டைம்’ வேலை பார்த்து நதியில் யாரெல்லாம் அசுத்தங்களை கலக்குகிறார்களோ, அவர்களது வயிறு கலங்கும் வண்ணம் எச்சரிக்கை நோட்டீஸ்களை கத்தை கத்தையாக வழங்கினார்கள். கழிவுநீரை மறுசுழற்சி செய்யும் கட்டமைப்புகளை கட்டாயமாக நிறுவ வகை செய்தார்கள்.

· இவையெல்லாம் முடிந்ததும் நதியை தூர்வாறத் தொடங்கினார்கள். பல்லாண்டுக் கணக்கில் சேர்ந்த மாசுகளை அகற்றினார்கள். நதியோரங்களில் பூங்காக்களை அமைத்தார்கள். மரக்கன்றுகள் நட்டார்கள். வாக்கிங் போக வசதியாக பாதைகள் உருவாக்கப்பட்டன. கரையோரத்தில் இருந்து ஆற்றை ரசிக்க வசதியாக மேற்கூரைகள் அமைக்கப்பட்ட பார்வையிடங்கள் உருவாகின.

· சிங்கப்பூரின் சுற்றுச்சூழல் அமைச்சகம்தான் இந்த பணியை முன்னெடுத்தது. இதன் தலைமையில் அரசின் எல்லா பிரிவுகளுமே அவை அவை செய்யமுடிந்த பணிகளை செய்தது. அரசு நிறுவனங்கள் மட்டுமின்றி அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், பெரிய தொழில் நிறுவனங்கள், சிவில் அமைப்புகளும் பங்கெடுத்துக் கொண்டன.
அவ்வளவுதான். 1987ல் சிங்கப்பூர் நதி மீண்டும் உயிர்பெற்றது. வெறும் பத்தாண்டுகளில் சிங்கப்பூர் அரசு, தன் மக்களோடு இணைந்து செய்திருக்கும் இந்த சாதனை ஒரு மகத்தான வரலாறு. நதிகளை சாகடித்துக் கொண்டிருக்கும் மற்ற வளரும் நாடுகளுக்கு முன்னுதாரணமான பாடம்.

திட்டமிட்டோம். முடித்துவிட்டோம். என்றெல்லாம் சிங்கப்பூர் அரசு கழண்டுக்கொள்ளவில்லை. மீண்டும் உயிர்ப்பித்த ஆற்றை, அதே உயிரோட்டத்தோடு ஓடவைக்க என்னென்ன கண்காணிப்பு அமைப்புகளை உருவாக்க வேண்டுமோ, அத்தனையையும் செய்து அவை முறையாக இயங்கக்கூடிய ஏற்பாடுகளையும் செய்திருக்கிறது.

நதியில் கழிவை கலப்பது என்பது நகரமயமாக்கல் கலாச்சாரத்தில் தவிர்க்க முடியாத செயல்பாடுதான். ஆனால் கலக்கப்படும் கழிவு அதிகபட்சம் எவ்வளவு மாசு கொண்டதாக இருக்கலாம் என்று தரக்கட்டுப்பாடு விதித்திருக்கிறது அந்த அரசு. கழிவுநீர் கலக்கப்படும் முகத்துவாரங்களில் இவற்றை கண்காணிக்க அமைப்புகள் செய்யப்பட்டிருக்கின்றன. கண்காணிப்பையும் மீறி ஆற்றில் சேரும் குப்பைக் கூளங்கள் அப்போதே அகற்றப்படவும் ஆட்கள் எந்நேரமும் தயாராக இருக்கிறார்கள். ஆற்றை அழகாக வைத்துக் கொள்வது தொடர்பான விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை நிரந்தரமாக அரசு மக்களிடையே நிகழ்த்தி வருகிறது.

ஆற்றை மாசுபடுத்துவது சட்டரீதியான குற்றம் என்கிற நிலையை கண்டிப்போடு அமல்படுத்துகிறது சிங்கப்பூர். தொழில் நிலையங்களில் அடிக்கடி சோதனை நிகழ்த்தப்பட்டு அவர்களது கழிவுகள் முறையாக மறுசுழற்சி செய்யப்படுகிறதா, ஆற்றில் கலந்துவிடும் நீர் அரசு விதித்திருக்கும் தரக்கட்டுப்பாட்டு அளவுக்குள் இருக்கிறதா என்றெல்லாம் ‘நேர்மையாக’ சோதனை செய்கிறார்கள் அதிகாரிகள்.

கூவத்தை தேம்ஸ் ஆக்க நாம் என்னவெல்லாம் செய்யவேண்டுமோ, அதையெல்லாம் சிங்கப்பூர் செய்துக் காட்டியிருக்கிறது. அட்சரசுத்தமாக அதை நாம் பின்தொடர்ந்தால் மட்டுமே போதும்.

சில ஆயிரம் கோடிகள் செலவழிக்க வேண்டும். செலவழிப்போம். மனித நாகரிகத்தை தோற்றுவித்த நதிகளுக்கு அதைகூட செய்யாவிட்டால் எப்படி?

(நன்றி : தினகரன் 09-01-2016)

7 ஜனவரி, 2016

குடும்பங்களின் வெற்றி!

ஒரு திரைப்படத்தின் ஒரே ஒரு காட்சியிலாவது உங்களை அறியாமல், கண்களில் கண்ணீர் துளிர்த்துவிட்டால் போதும். அந்த படம் நிச்சயம் மெகாஹிட். இரண்டாம் நபருக்கு தெரியாமல் நீங்கள் கர்ச்சீப்பை எடுத்து கண்ணைத் துடைத்துக் கொண்டது எந்தெந்த படங்களைப் பார்த்தபோது என்று யோசித்துப் பாருங்கள். இந்த உண்மை புரியும். ‘நேனு சைலஜா’ (தெலுங்கு) குறைந்தபட்சம் ஒரு காட்சியிலாவது இப்படி உலுக்கியெடுக்கிறது.

ராம் பொத்தினேனிக்கு இப்போது வயது இருபத்தெட்டுதான். ஆனால் ஹீரோவாகி பத்தாவது ஆண்டு. முதல் படமான ‘தேவதாசு’, பத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ஐநூறு நாட்களுக்கும் மேலாக ஓடி மகத்தான சாதனை புரிந்தது. பதினெட்டு வயதிலேயே ஒரு ஹீரோவுக்கு இத்தகைய வெற்றி என்பது தெலுங்கு சினிமாவில் மட்டும்தான் சாத்தியம். இதே மாதிரி சாதித்த இன்னொருவர் ஜூனியர் என்.டி.ஆர்., தெலுங்கில் இதுமாதிரி ஏராளமான சாதனைகள் உண்டு. உலகிலேயே அதிக ஹிட் ரேட் கொண்ட ஹீரோ அங்குதான் இருக்கிறார். ‘விக்டரி ஸ்டார்’ வெங்கடேஷ். அவர் நடித்த முதல் 50 படங்களில் 45 படங்கள் நூறுநாள் ஓடியவை.
ராம் எத்தகைய ஹீரோ என்று வரையறுப்பது கொஞ்சம் கடினம். சென்னையில் பிறந்து வளர்ந்தவர். கொஞ்சம் சிகப்பாக இருக்கிறாரே தவிர்த்து, நம்மூர் விமல் மாதிரிதான் சராசரித் தோற்றம். அதிக உயரமில்லை. கொஞ்சம் reduce to fit மாதிரிதான் இருப்பார். அதனாலோ என்னவோ சீமாந்திரா, தெலுங்கானா மாநிலங்களின் இரண்டாம் அடுக்கு நகர இளைஞர்கள், தங்களை சினிமாவில் பிரதிநிதித்துவப்படுத்தும் நாயகனாக இவரை கொண்டாடுகிறார்கள். ஒரு படம் மெகாஹிட் என்றால் அடுத்த படம் அட்டர் ப்ளாப் என்பதுதான் ராமுடைய பத்தாண்டு கேரியர் கிராப். இத்தகைய சிக்கலான சினிமா வாழ்க்கை என்றாலும் இதற்குள்ளேயே ‘ரெடி’, ‘காண்டிரேகா’ என்று தெலுங்கு இண்டஸ்ட்ரி பாக்ஸ் ஆபிஸையே சுக்குநூறாக்கிய இரண்டு ப்ளாக்பஸ்டர் மூவிகள் இவரது ஃபிலிமோகிராபியில் உண்டு.

ஓக்கே. லெட் அஸ் கம் டூ ‘நேனு சைலஜா’

சமீபமாக அடுத்தடுத்து ப்ளாப்களையே கொடுத்துவந்த ராம், தன்னுடைய ஆக்‌ஷன் இமேஜை (!) கைவிட்டு, ‘காதலுக்கு மரியாதை’ விஜய் கணக்காக காதல், குடும்பம், சென்டிமெண்ட் என்று களமிறங்கி இருக்கும் இந்தப் படம் 2016ன் முதல்நாளில் வெளிவந்து வசூல் சுனாமியை ஏற்படுத்தியிருக்கிறது. விமர்சகர்கள், தெலுங்கில் எடுக்கப்பட்ட ‘தில்வாலே துலானியா லே ஜாயங்கே’ என்று கொண்டாடுகிறார்கள். தமிழ், இந்தி மொழிகளுக்கு ரீமேக் உரிமை வாங்க போட்டாபோட்டி நடக்கிறதாம்.

தமிழில் முதல் படம் வெளிவருவதற்கு முன்பே பரபரப்பாக புக் ஆனவர் கீர்த்தி சுரேஷ். ஆனால், ‘இது என்ன மாயம்’ வெளியானபிறகு என்ன மாயமோ தெரியவில்லை. கீர்த்தியின் கீர்த்தி அதலபாதாளத்துக்கு போய்விட்டது. இதுபோல கோலிவுட்டில் மவுசு இழந்த ஹீரோயின்களுக்கு ‘வந்தாரை வாழவைக்கும் வடுகதேசம்’தான் வேடந்தாங்கல். கீர்த்தி, தெலுங்கில் அறிமுகமாகியிருக்கும் இந்த முதல்படமே ப்ளாக் பஸ்டர் ஹிட். அங்கு இன்னும் நான்கைந்து ஹிட்டுகளை அவர் கொடுத்தபிறகு, பல கோடிகளை கொடுத்து மீண்டும் கோலிவுட்டுக்கு கூப்பிடுவோம். ஸ்ரேயா, நயன்தாரா, தமன்னா, இலியானா என்று இந்த வரலாறுக்குதான் சமீபகாலத்திலேயே எவ்வளவு எடுத்துக்காட்டுகள்?
வழக்கமான, மிக சாதாரணமான காதல் கதைதான். அதில் எந்த சந்தேகமுமில்லை. குழந்தைப் பருவத்திலேயே ராமுக்கு கீர்த்தி மீது ஈர்ப்பு. ராமின் அப்பாவுக்கு வேறு ஊருக்கு மாற்றல் ஆகிறது. வளர்ந்து பெரியவர்கள் ஆனபிறகு சந்திக்கிறார்கள். ராம், கீர்த்தியிடம் காதலை வெளிப்படுத்துகிறான். ‘ஐ லவ் யூ. பட், ஐ ஆம் நாட் இன் லவ் வித் யூ’ என்று வித்தியாசமாக குழப்புகிறார் அவர்.

குழம்பிப் போன ராமுக்கு, தற்செயலாக கீர்த்தியினுடைய குடும்பப் பின்புலம் தெரியவருகிறது. ஒரு மாதிரி வடகொரியா கணக்காக இரும்புக்கோட்டையாக இருக்கும் அவர்களது குடும்பத்தை இளகவைக்கிறார். கீர்த்தியை கைப்பிடிக்கிறார். தட்ஸ் ஆல்.

இந்த சாதாரண ரொமான்ஸ் ஃபேமிலி டிராமாவில் இயக்குநர் அடுக்கியிருக்கும் காட்சித் தோரணங்கள்தான் சம்திங் ஸ்பெஷல். சின்ன சின்ன ஃப்ரேமை கூட விடாமல் ஒவ்வொரு பிக்ஸெலாக செதுக்கித் தள்ளியிருக்கும் ரிச் மேக்கிங். ஒவ்வொரு காட்சியுமே புத்திசாலித்தனமான ஐடியாவால், நறுக்கான வசனங்களால் ‘அட’ போடவைக்கிறது.

“நல்லா இருக்குங்கிறது வேற. நமக்கு பிடிச்சிருக்குங்கிறது வேற” – இதுமாதிரி எளிமையான, ஆனால் சுரீர் வசனங்கள்.
படத்தின் க்ளைமேக்ஸுக்கு சற்று முன்பாக ஒட்டுமொத்தப் படத்தின் சுமையையும் ஒரே காட்சியில் தங்கள் தோள்களுக்கு மாற்றிக் கொள்கிறார்கள் சத்யராஜும், ரோகிணியும். “பொண்ணுக்கு கல்யாணமானா பெத்தவங்களை விட்டுட்டு புகுந்த வீட்டுக்குப் போகணும்னு எவன்யா எழுதினான்? சத்தியமா சொல்றேன், அவன் பொண்ணு பெத்தவனா இருக்கமாட்டான்!” என்று சத்யராஜ் உருகும்போதும், “எல்லோரையும் மாதிரி என் புருஷனும் என்கூட நடந்துக்கணும்னுதான் ஆசை. ஆனா, அவரு என் குழந்தைகளுக்கு நல்ல தகப்பனா இருக்கணுங்கிறதுக்காக எவ்வளவோ இழந்திருக்காரு. அப்பா கிட்டே அவருக்கு கிடைக்காத கவுரவம், அவரோட பிள்ளைங்க கிட்டே கிடைச்சா போதும்” என்று ரோகிணி ஈரமான கண்களோடு பேசும்போதும் அதுவரை சிரித்து கும்மாளமாக படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் கண்களைத் துடைத்துக் கொள்கிறார்கள். இவ்வளவு திறமையான இந்த கலைஞர்களை வைத்து தமிழில் இன்னமும் அம்மி கொத்திக் கொண்டிருக்கிறோமே என்கிற வேதனைதான் நமக்கு ஏற்படுகிறது.

படம் முடியும்போது, இப்படத்தின் ஒவ்வொரு பாத்திரங்களின் சாயலையும் நம் உறவுகளில் தேடி ஒப்பிட்டு மகிழ்கிறோம். இரத்தமும் சதையுமான நம் ஒவ்வொருவரின் வாழ்வுக்கும் நெருக்கமான கதையை சொல்லியிருப்பதாலேயே ‘நேனு சைலஜா’ எவரெஸ்ட் ஹிட்டை எட்டியிருக்கிறது. இது, நம் இந்திய குடும்பமுறை பாரம்பரியமாக தொடரும் வெற்றிகரமான வாழ்வியலை அடையாளப்படுத்தும் மகத்தான வெற்றியும் கூட.

5 ஜனவரி, 2016

நண்பேண்டா!


ஜேன் கோம். பிரையன் ஆக்டன்.

இந்த இரண்டு பெயர்களையும் மறந்து விடாதீர்கள்.

ஏனெனில், இவர்கள்தான் ‘வாட்ஸப்’ புரட்சியை உருவாக்கிய தொழில்நுட்ப வல்லுனர்கள்.

கோமுக்கு இப்போது வயது முப்பத்தொன்பது. ஆக்டனின் வயது நாற்பத்தி மூன்று. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ‘ஃபேஸ்புக்’ நிறுவனம் ஆசை ஆசையாக இவர்களிடமிருந்துதான் ‘வாட்ஸப்’ உரிமையை காசு கொடுத்து வாங்கியது.

விலை எவ்வளவு கொடுத்திருப்பார்கள்?

குன்ஸாக சொல்லுங்களேன் பார்ப்போம்.

பத்து லட்சம்? ஐம்பது லட்சம்? ஒரு கோடி? பத்து கோடி? நூறு கோடி?

தலைசுற்றி மயங்கி விடாதீர்கள்.

வாட்ஸப்பை ஃபேஸ்புக் வாங்கியது ஜஸ்ட் ஒரு லட்சத்து இருபது ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து. எண்ணால் எப்படி எழுதுவது, எத்தனை பூச்சியம் போடுவது என்றெல்லாம் அப்புறமாக யோசியுங்கள்.

யார் இவர்கள்?

ஜேன் கோம், உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர். அந்நாட்டின் வறுமை இவரை அமெரிக்காவை நோக்கி துரத்தியது. பதினாறு வயதில் கலிஃபோர்னியா மாகாணத்தின் மவுண்டெயின் வியூ என்கிற இடத்துக்கு வந்து செட்டில் ஆனார். அவரும், அவருடைய அம்மாவும் அரசாங்கம் தரும் இலவச உணவுக்காக மணிக்கணக்கில் கியூவில் நின்றவர்கள்.

பத்தொன்பது வயதில் கோமுக்கு என்று சொந்தமாக ஒரு கம்யூட்டர் கிடைத்தது. கூடவே இணைய இணைப்பும். எந்நேரமும் கம்ப்யூட்டரும் கையுமாக உட்கார்ந்திருவர் ‘ஹேக்கிங்’ தொழில்நுட்பங்களில் கில்லாடி ஆனார். உலகெங்குமிருக்கும் பிரபலமான ஹேக்கிங் குழுக்களின் இணைந்து கலக்க ஆரம்பித்தார். பெரிய நிறுவனங்கள் பலவும் ஹேக்கிங் தொடர்பான உதவிகளுக்கு இவரை நாட ஆரம்பித்தார்கள் (ஹேக்கிங் என்பது தீய காரணங்களுக்காக மட்டுமல்ல, சில சமயங்களில் நல்ல விஷயத்துக்கும் தேவைப்படும்).

எர்னஸ்ட் & யங் என்கிற நிறுவனத்துக்கு மென்பொருள் பாதுகாப்பு சோதனைப் பணியாளராக பணிபுரிந்துகொண்டே கல்லூரியில் சேர்ந்து கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தார்.

யாஹூ நிறுவனத்தின் இணை நிறுவனரான டேவிட் ஃபைல் தங்களோடு வந்து இணையுமாறு இவரை நல்ல சம்பளத்துக்கு அழைக்க, கல்லூரியை பாதியிலேயே விட்டு விட்டு ‘யாஹூ’வில் இணைந்தார்.

பிரையன் ஆக்டன் அமெரிக்கர். ஃப்ளோரிடா மாகாணத்தில் வளர்ந்தவர். ஸ்டேண்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டரில் பட்டம் பெற்றவர். ‘ஆப்பிள்’ நிறுவனத்தில் சாஃப்ட்வேர் என்ஜினியராக தன் வாழ்க்கையைத் தொடங்கினார். 1996ல் ‘யாஹூ’ நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.

நட்பு மலர்ந்தது
அப்போது எர்னஸ்ட் & யங் நிறுவனத்தில் மென்பொருள் பாதுகாப்பு சோதனையாளராகப் பணியாற்றிய ஜேன் கோம் அடிக்கடி யாஹூவுக்கு பணி தொடர்பாக வரவேண்டி இருந்தது. கோமுடைய புத்திக்கூர்மையும், நேர்மையும் ஆக்டனை கவர்ந்தது.

சில மாதங்கள் கழித்து கோம், யாஹூவில் இணைந்தார். ஏற்கனவே இருவரும் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த மரியாதை, இணைந்து பணியாற்றிய போது நெருங்கிய நட்பாக மலர்ந்தது. பணி நேரத்திலும் சரி, பணி தாண்டிய நேரங்களிலும் சரி இரட்டையர்களாக ஒன்றாகவே சுற்றிக் கொண்டிருந்தார்கள்.

2007ஆம் ஆண்டு இருவரும் ஒன்றாகவே பணியை விட்டார்கள். தென்னமெரிக்காவுக்கு பயணித்தார்கள்.

வாட்ஸப் பிறந்தது

‘ஃபேஸ்புக்’ பிரபலமாகத் தொடங்கியது. இருவரும் இணைந்து வேலைக்கு விண்ணப்பித்தார்கள். ஆனால், ஏனோ இவர்களை பணிக்கு சேர்த்துக் கொள்ள ஃபேஸ்புக் மறுத்தது. யாஹூவில் சம்பாதித்து சேர்த்த கையிருப்பு இருவரிடமுமே கரையத் தொடங்கியிருந்தது.

ஜனவரி 2009. நண்பர் ஒருவரது வீட்டில் கோம் சினிமா பார்த்துக் கொண்டிருந்தார். ஆக்டனுக்கும் மற்ற நண்பர்களுக்கும் ஏதாவது மெசேஜ் அனுப்பிக் கொண்டே இருந்தார். மொபைல் போனில் இருந்த மெசேஜ் அப்ளிகேஷனுக்கு சில போதாமைகள் இருந்ததாக அவருக்கு பட்டது. ஒவ்வொரு எஸ்.எம்.எஸ்.சுக்கும் காசு செலவழிக்க வேண்டியிருக்கிறது. மெயில் செக் செய்ய பயன்படுத்தும் இண்டர்நெட் கனெக்‌ஷன் மூலமாகவே கூடுதல் காசு செலவில்லாமல் மெசேஜ் அனுப்பக்கூடிய வசதி இருந்தால் நன்றாக இருக்குமே என்று சட்டென ஓர் ஐடியா பளிச்சிட்டது.

ஆக்டனிடம் பேசினார். சில டெவலப்பர்களை கலந்தாலோசித்தார்கள். தான் புதியதாக உருவாக்க இருக்கும் அப்ளிகேஷனுக்கு ‘வாட்ஸப்’ என்று கோம்தான் பெயரிட்டார். பேச்சை நீட்டிக்க அடிக்கடி மெசேஜில் ‘அப்புறம் என்ன?’ (what’s up?) என்று கேட்போம் இல்லையா? அதையே தன் நிறுவனத்துக்கும் பெயராக வைத்து, கலிஃபோர்னியாவில் தன்னுடைய பிறந்தநாளான பிப்ரவரி 24, 2009 அன்று வாட்ஸப் இன்கார்ப்பரேஷனை ஜேன் கோம் தொடங்கினார்.

பொறுமை தந்த வெற்றி

ஆரம்பத்தில் ‘வாட்ஸப்’ அடிக்கடி சொதப்பியது. பயனாளர்களும் பெரிய ஆதரவு காட்டவில்லை. ஏற்கனவே மொபைல் போன்களில் மெசேஜ் ஆப்ஷன் இருக்க, புதுசாக இன்னொரு கந்தாயம் எதற்கு என்று நினைத்தார்கள்.

“இது வேலைக்கு ஆகாது. சம்பளம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை, எங்காவது வேலைக்கு போய்விடப் போகிறேன்” என்று கோம் சொன்னபோது, ஆக்டன் கோபத்துடன் மறுத்தார். “எனக்கென்னவோ இந்த ‘வாட்ஸப்’ எதையோ பெரியதாக சாதிக்கப் போகிறது என்று தோன்றுகிறது. ஒரு சில மாதங்கள் பொறுமையாக இரு” என்றார். நண்பனின் பேச்சுக்கு மறுபேச்சு ஏது? இத்தனைக்கும் அப்போது ஆக்டன் வேலை இல்லாமல் சும்மாதான் இருந்தார். ட்விட்டரில் வேலைக்கு சேர முயன்று, அவர்களும் சேர்த்துக் கொள்ள வில்லை.

தன்னுடைய வாட்ஸப்புக்கு பெரிய வரவேற்பு இல்லையென்றாலும் (வருமானமும் இல்லை), அதில் இருக்கும் குறைகளை அவ்வப்போது களைந்து கடமையே கண்ணாக அப்டேட் செய்துக் கொண்டிருந்தார் கோம். என்ன மாயமென்று தெரியவில்லை. திடீரென்று ஆப்பிள் பயனாளிகள் ஏகப்பட்ட பேர் வாட்ஸப்பை டவுன்லோடு செய்ய ஆரம்பித்தார்கள். இரவும், பகலுமாக வாட்ஸப்பில் கடலை போட ஆரம்பித்தார்கள். சட்டென்று சில நாட்களிலேயே சுமார் இரண்டரை லட்சம் பேர் வாட்ஸப் பயனாளிகள் ஆனார்கள்.

“நாம பெருசா பண்ணலாம் பாஸ்” என்று ஆக்டனையும் தன்னோடு வாட்ஸப் நிறுவனத்தில் அக்டோபர் 2009 வாக்கில் இணைத்துக் கொண்டார். முன்னாள் யாஹூ நண்பர்கள் சிலரிடம் பேசி ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக முதலீடு திரட்டி பிசினஸை கொஞ்சம் பெருசாக்கினார்கள். ஆப்பிளைத் தொடர்ந்து பிளாக்பெர்ரி போன்களுக்கும் வாட்ஸப் வசதியை நீட்டிக்க, ஆக்டன் முன்பு சொன்னமாதிரி நிஜமாகவே வாட்ஸப் பெரியதாக சாதிக்கத் தொடங்கியது.

இன்று?

கடந்த ஆறு வருடங்களில் வாட்ஸப் அடைந்திருக்கும் வளர்ச்சி யாருமே யூகித்தறிய முடியாதது. பெரிய முதலீட்டு நிறுவனங்கள் பல்லாயிரம் கோடியை இதில் முதலீடு செய்திருக்கின்றன. ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸப்பை எவ்வளவு கோடி ரூபாய் கொடுத்து வாங்கினார்கள் என்பதை மேலேயே சொல்லியிருக்கிறோம்.

நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக ஃபேஸ்புக்குக்கு கைமாற்றி விட்டுவிட்டாலும் இன்னமும் தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருப்பவர்கள் ஜேன் கோமும், பிரையன் ஆக்டனும்தான். கோம், வாட்ஸப்பின் மென்பொருள் தரத்தை பார்த்துக் கொள்கிறார். ஆக்டன், பிசினஸ் தொடர்பான விஷயங்களை கவனித்துக் கொள்கிறார். இருவரது உணர்வுப்பூர்வமான நட்புதான் வாட்ஸப்பை இந்த உயரத்துக்கு வளர்த்திருக்கிறது.

வெற்றிக்கு காரணம்?

பொதுவாக இணையத்தள பயன்பாடு என்றாலே எரிச்சலூட்டும் விளம்பரங்கள்தான் பெருந்தொல்லை. நிம்மதியாக ஒரு யூட்யூப் வீடியோவை கூட பார்த்துத் தொலைக்க முடியாமல், அதற்கு முன்பாக ஒரு இருபது நொடி விளம்பரத்தை சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. செய்திகளை வாசிக்கும்போது குறுக்கிடும் விளம்பர அட்டைகளை க்ளோஸ் செய்து, க்ளோஸ் செய்தே சோர்ந்து விடுகிறோம்.

வாட்ஸப் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் தன்னுடைய டேபிளில் பிரையன் ஆக்டன் எழுதி வைத்திருக்கும் மந்திரச்சொல்தான் வாட்ஸப்பின் வெற்றிக்குக் காரணம் என்கிறார்கள்.

“No Ads! No Games! No Gimmicks!”

நட்பு பரிமாறிக் கொள்ளும் சாளரமான வாட்ஸப்பில் வேறெந்த குறுக்கீடுகளும் எக்காலத்திலும் இருக்கக்கூடாது என்பதில் நண்பர்கள் இருவரும் உறுதியாக இருக்கிறார்கள். நட்பின் அருமையை அவர்களைவிட வேறு யார் அதிகமாக அறிய முடியும்?

எதிர்காலம்?

“சிலிகான் பள்ளத்தாக்கில் எங்கள் வாட்ஸப் நிறுவனத்தை போல நீங்கள் வேறெந்த நிறுவனத்தையும் பார்க்க முடியாது. பெரியதாக மிகப்பெரியதாக வளரவேண்டும் என்று நினைப்பதைவிட எங்களது அவ்வப்போதைய வெற்றியை தக்கவைத்துக் கொள்ளவே நாங்கள் கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறோம். கிடைத்த வெற்றியை தக்கவைத்துக் கொண்டால், அதுவே நம்மை மிகப்பெரிய வெற்றியை நோக்கி கொண்டுச் செல்லும். எங்கள் தயாரிப்பை முன்னிலைப்படுத்தி, எங்களை பின்னணியில் மறைத்துக் கொள்கிறோம். இதைத்தவிர எங்களுக்கு வேறெந்த பிசினஸ் சீக்ரட்டும் இல்லை” என்கிறார் ஆக்டன்.

வாட்ஸப், குழந்தையும் பயன்படுத்தும் வண்ணம் எளிதாக இருக்கிறது. பாதுகாப்பானது. வேகமானது. மற்ற சமூகவலைத்தளங்களைப் போல நேரத்தை விழுங்குவதில்லை. நாமறிந்த நம்முடன் தொடர்பில் இருக்கும் நண்பர்களோடு மட்டும் கருத்துகளை பரிமாறிக் கொள்ளவோ, குறிப்பிட்ட விஷயங்களுக்காக தனிக்குழு அமைத்து விவாதிக்கவோ உதவுகிறது. தகவல் பரிமாற்றம் இன்று இதன் அளவுக்கு எளிமையாகவும், வேகமாகவும் வேறு எந்த வடிவிலும் இல்லை.

ஆனால்-

யாருக்கு தெரியும்? ஆறு ஆண்டுகளுக்கு முன்பு யாராவது வாட்ஸப்பை நூறு கோடி பேர் பயன்படுத்தப் போகிறார்கள் என்று கணித்திருக்க முடியுமா? அதுபோல நாளை வேறொரு அப்ளிகேஷன் வரலாம். அது வாட்ஸப்பை வெற்றிக் கொள்ளவும் செய்யலாம்.

எனினும், அது அவ்வளவு எளிதல்ல. இந்த இரு நண்பர்களை தாண்டி ஓடவிரும்புபவர்கள் இவர்களை விட இரு மடங்கு வேகமாக ஓடவேண்டும். இன்றைய தேதியில் அதற்கு வாய்ப்பில்லை.

(நன்றி : வாட்ஸப் ஸ்பெஷல் - தமிழ் முரசு நாளிதழுடன் இணைப்பு)

4 ஜனவரி, 2016

நாஞ்சில் சம்பத்!

‘நெல்லை எங்களுக்கு எல்லை. குமரி எங்களுக்கு தொல்லை’ என்பது கலைஞரின் ஃபேமஸான பஞ்ச் டயலாக். நாஞ்சில் நாட்டில் என்றுமே திமுக கொஞ்சம் வீக்குதான். மொழி, இன உணர்வு மாநிலம் முழுக்க கொழுந்துவிட்டு எரிந்தாலும் காங்கிரஸ், இடதுசாரிகள், பாஜக என்று நாஞ்சில் நாடு மட்டும் தேசியநீரோட்டத்தில் டெல்லிரூட்டில்தான் என்றுமே பயணிக்கும்.

‘அண்ணா’, ‘தென்னகம்’ பத்திரிகைகளில் ‘ஆற்றல்மிகு அடலேறே!’ என்று அதிமுக தொண்டர்களை விளித்து நாஞ்சில் கி.மனோகரன் எழுதும் கடிதங்கள் எழுபதுகளில் திமுக தலைவர்களின் பி.பி.யை இஷ்டத்துக்கும் ஏற்றும். திமுகவில் உட்கட்சி குழப்பம் ஏற்பட்டபோது அவர் எழுதிய ‘கருவின் குற்றம்’ கவிதை ஏற்படுத்திய அதிர்வுகள் கொஞ்சநஞ்சமல்ல.

நாஞ்சில் சம்பத்தைப் பொறுத்தவரை மனோகரன் அளவுக்கு பெரிய தலைவர் எல்லாம் அல்ல. திமுகவில் இருந்தவரை தீப்பொறி ரேஞ்சைவிட குறைந்த நிலையில் இருந்த பேச்சாளர்தான். மதிமுகவில் இருந்த தலைவர்கள் ஒவ்வொருவராக தாய்வீட்டுக்கு படையெடுக்க இவரது கேரியர் கிராப் கொஞ்சம் கொஞ்சமாக அக்கட்சியில் ஏறத் தொடங்கியது. குறிப்பாக தொண்ணூறுகளின் இறுதியில் சம்பத்துக்கென்று கட்சி அபிமானங்களை தாண்டி நிறைய ரசிகர்கள் உருவானார்கள்.

பரங்கிமலை ஒன்றியம் என்றுமே பேச்சாளர்களின் கோட்டை. 67 மற்றும் 72 தேர்தல்களில் எம்.ஜி.ஆர் நின்று வென்ற தொகுதி பரங்கிமலை என்பதால் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்குமே இது கவுரவப் பிரச்சினையான இடம். மாவீரன் மிசா ஆபிரகாம் இருந்தவரை அதிமுகவினரை திமுகவினர் ஓட ஓட விரட்டிய களம். பிரசித்தி பெற்ற செங்கை மாவட்டத்தின் கிழக்கு எல்லை.

மதிமுக உருவானபோது மதுராந்தகம் ஆறுமுகம், பாலவாக்கம் சோமு, வேளச்சேரி மணிமாறன் என்று கழக செயல்வீரர்கள் பலரும் மதிமுகவுக்கு இடம்பெயர்ந்ததால் சென்னையின் சுற்றுப்புற வட்டாரத்திலேயே மதிமுக கொடி சொல்லிக் கொள்ளும்படி இந்த ஏரியாவில்தான் பறந்தது. 2000ஆம் ஆண்டு பிறந்தநாளில் மிகச்சரியாக இரவு 12.00 மணிக்கு வைகோ ‘மில்லெனியம் புத்தாண்டு வாழ்த்துகள்’ சொன்னதே மடிப்பாக்கம் கூட்ரோடு பொதுக்கூட்டத்தில்தான்.

பரங்கிமலை ரயில்நிலையம் அருகிலிருந்த திடல் (மதி தியேட்டர் எதிரே) ரொம்ப ஃபேமஸ். தமிழக அரசியலில் கோலோச்சிய அத்தனை தலைவர்களுமே ஒருமுறையாவது அங்கே பொதுக்கூட்டத்தில் பேசியிருப்பார்கள். குறிப்பாக வெற்றிகொண்டானுக்கு அது ஹோம்கிரவுண்டு மாதிரி. தென்சென்னை தொகுதி எம்.பி.யாக இருந்த வைஜயந்திமாலா ஏற்பாட்டின் பேரில் அங்கே சுரங்கப்பாதை பணிகள் தொடங்கிய காலத்தில் இந்த திடல் பறிபோனது.

இதன் பின்னர் ஆயில்மில் பஸ்நிலையம் அருகே சர்ச்சுக்கு பக்கத்திலிருந்த காலிமனையில்தான் கட்சி பொதுக்கூட்டங்கள் அதிகளவில் நடக்கும் (இப்போது அங்கே பெட்ரோல் பங்க் இருக்கிறது). கட்சி வேறுபாடில்லாமல் நூற்றுக்கணக்கான பேச்சாளர்களின் பேச்சை இங்கே நடந்த பொதுக்கூட்டங்களில்தான் செவிமடுத்திருக்கிறேன். கடந்த பதினைந்து ஆண்டுகளில் பறிபோன பொதுக்கூட்ட திடல்களை பற்றி தனியாக ஓர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இங்கே இந்து முன்னணி கூட்டமும் நடக்கும். அடுத்த வாரமே ஆராதனைப் பெருவிழாவும் நடக்கும். காளிமுத்து வந்து பேசுகிறார் என்றால் அடுத்த வாரமே துரைமுருகன் வருவார். இப்படி ஏட்டிக்கு போட்டியாக தொண்டர்களின் –- ரசிகர்களின் என்டெர்டெயின்மெண்டுக்கு கட்சிகள் நல்ல தீனி போட்டு வந்தன.

நாஞ்சில் சம்பத்தின் பேச்சை முதன்முதலாக இங்குதான் கேட்டேன். அனேகமாக 2002 ஆக இருக்கலாம். சில நாட்கள் முன்புதான் நாகர்கோயிலில் இருந்த அவரது பாரம்பரிய வீட்டை ஆக்கிரமிப்பு என்றுகூறி அதிமுக அரசு இடித்துத் தள்ளியிருந்தது. அன்றைக்கு நாஞ்சில், மேடையில் நடத்திக் காட்டியது ஒரு துன்பவியல் நாடகத்தின் உருக்கமான காட்சிகள். கருப்புத்துண்டை திடீரென்று இழுத்துப் பிடித்து வாள் மாதிரி உயரத் தூக்கிக் காட்டுவார். சட்டென்று அதே துண்டையெடுத்து வாய்பொத்தி கதறி கதறி அழுவார். வைகோவின் டிரேட்மார்க்கான ‘கிரேக்கத்திலே கலிங்கத்திலே’ பேச்சை அப்படியே இமிடேட் செய்தார். சங்கத்தமிழ் தண்ணி பட்ட பாடு. மாற்றுக் கட்சியின் எந்தத் தலைவருக்குமே மரியாதையில்லை. ‘அவன், அவள்’தான். அவருடைய பேச்சை முதன்முதலாக கேட்டதுமே தோன்றியது. “இவரிடம் சரக்கு சுத்தமாக இல்லை. ஆனால் கேட்பவர்களை கவரக்கூடிய ஈர்ப்பு இருக்கிறது”.

பின்னர் சில முறை மதிமுக தலைமையகமான தாயகத்தில் சந்தித்திருக்கிறேன். “இவங்களுக்கு டீ கொண்டாந்து கொடுப்பா” என்பதைகூட மேடையில் பேசும் பாவத்தில் உணர்ச்சிபூர்வமாகதான் சொல்லுவார்.

சங்கரன்கோயில் இடைத்தேர்தல் நடந்தபோது வைகோவின் கலிங்கப்பட்டி வீட்டுக்குச் சென்றிருந்தோம். வைகோ வீட்டுக்குள் ஓய்வில் இருந்தார். சாப்பிட்டுக் கொண்டிருந்த தொண்டர்களை சம்பத்தான் உபசரித்துக் கொண்டிருந்தார். அவரிடம் பேச முயன்றபோது, “சாயங்காலம் சங்கரன்கோயில் பஸ் ஸ்டேண்ட் கிட்டே பேசறேன். அங்கே வந்துருப்பா” என்றார்.

பஸ்ஸ்டேண்ட் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் நல்ல கூட்டம். உணர்ச்சிபூர்வமாக நெசவாளர்களின் துயரை பண்டைய கிரேக்கக் காலத்திலிருந்தே அடுக்கிக்கொண்டு வருகிறார். நெசவாளர்கள் நிறைந்த சங்கரன்கோயிலில் நன்கு எடுப்பட்ட பேச்சு அது. அப்போது திடீரென்று திமுக கொடி கட்டிய ஆட்டோ ஒன்று அந்தப் பக்கமாக போகிறது. மைக்கில் ‘சங்கரன்கோயில் பஸ் நிலையம் அருகே பிரச்சார பீரங்கி குஷ்பு உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்டுக் கொண்டிருக்கிறார். அனைவரும் அலைகடலென திரண்டு வாரீர்’ என்று ஆட்டோவில் கட்டப்பட்ட ஹாரனில் அறிவிப்பு. கூட்டம் சலசலத்தது.

பேசிக்கொண்டிருந்த நாஞ்சில் அப்படியே பேச்சை நிறுத்துகிறார். கூட்டத்தைப் பார்க்கிறார். “எவனெல்லாம் அவளைப் பார்க்கணும்னு நெனைக்கிறீயோ, அத்தனை பேரும் அப்படியே போயிடு. இங்கே உட்காராதே. எனக்கு அருவருப்பா இருக்கு”. பாதி கூட்டம் அப்படியே அம்பேல்.

“மேக்கப் போட்ட ஒரு நடிகை வார்றான்னா, அப்படியே போறீங்களேய்யா. ஒண்ணரை லட்சம் பேரு செத்திருக்கான். இன்னும் நீ சினிமா பார்த்துட்டு, வடநாட்டு நடிகைகளை வாயைப் பிளந்து ரசிச்சிக்கிட்டு இருக்கே. இந்த நாடு உருப்படுமா. தமிழினம் வாழுமா. நமக்கெல்லாம் எதுக்குய்யா கொள்கை, புடலங்காய். பேசாம நாமள்லாம் அந்த நடிகை நடத்துற கட்சியிலேயே போயி சேர்ந்துடலாம்”

கொஞ்ச நாட்களிலேயே சம்பத், அதிமுகவுக்கு போய்விட்டார்.