7 ஜனவரி, 2016

குடும்பங்களின் வெற்றி!

ஒரு திரைப்படத்தின் ஒரே ஒரு காட்சியிலாவது உங்களை அறியாமல், கண்களில் கண்ணீர் துளிர்த்துவிட்டால் போதும். அந்த படம் நிச்சயம் மெகாஹிட். இரண்டாம் நபருக்கு தெரியாமல் நீங்கள் கர்ச்சீப்பை எடுத்து கண்ணைத் துடைத்துக் கொண்டது எந்தெந்த படங்களைப் பார்த்தபோது என்று யோசித்துப் பாருங்கள். இந்த உண்மை புரியும். ‘நேனு சைலஜா’ (தெலுங்கு) குறைந்தபட்சம் ஒரு காட்சியிலாவது இப்படி உலுக்கியெடுக்கிறது.

ராம் பொத்தினேனிக்கு இப்போது வயது இருபத்தெட்டுதான். ஆனால் ஹீரோவாகி பத்தாவது ஆண்டு. முதல் படமான ‘தேவதாசு’, பத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ஐநூறு நாட்களுக்கும் மேலாக ஓடி மகத்தான சாதனை புரிந்தது. பதினெட்டு வயதிலேயே ஒரு ஹீரோவுக்கு இத்தகைய வெற்றி என்பது தெலுங்கு சினிமாவில் மட்டும்தான் சாத்தியம். இதே மாதிரி சாதித்த இன்னொருவர் ஜூனியர் என்.டி.ஆர்., தெலுங்கில் இதுமாதிரி ஏராளமான சாதனைகள் உண்டு. உலகிலேயே அதிக ஹிட் ரேட் கொண்ட ஹீரோ அங்குதான் இருக்கிறார். ‘விக்டரி ஸ்டார்’ வெங்கடேஷ். அவர் நடித்த முதல் 50 படங்களில் 45 படங்கள் நூறுநாள் ஓடியவை.
ராம் எத்தகைய ஹீரோ என்று வரையறுப்பது கொஞ்சம் கடினம். சென்னையில் பிறந்து வளர்ந்தவர். கொஞ்சம் சிகப்பாக இருக்கிறாரே தவிர்த்து, நம்மூர் விமல் மாதிரிதான் சராசரித் தோற்றம். அதிக உயரமில்லை. கொஞ்சம் reduce to fit மாதிரிதான் இருப்பார். அதனாலோ என்னவோ சீமாந்திரா, தெலுங்கானா மாநிலங்களின் இரண்டாம் அடுக்கு நகர இளைஞர்கள், தங்களை சினிமாவில் பிரதிநிதித்துவப்படுத்தும் நாயகனாக இவரை கொண்டாடுகிறார்கள். ஒரு படம் மெகாஹிட் என்றால் அடுத்த படம் அட்டர் ப்ளாப் என்பதுதான் ராமுடைய பத்தாண்டு கேரியர் கிராப். இத்தகைய சிக்கலான சினிமா வாழ்க்கை என்றாலும் இதற்குள்ளேயே ‘ரெடி’, ‘காண்டிரேகா’ என்று தெலுங்கு இண்டஸ்ட்ரி பாக்ஸ் ஆபிஸையே சுக்குநூறாக்கிய இரண்டு ப்ளாக்பஸ்டர் மூவிகள் இவரது ஃபிலிமோகிராபியில் உண்டு.

ஓக்கே. லெட் அஸ் கம் டூ ‘நேனு சைலஜா’

சமீபமாக அடுத்தடுத்து ப்ளாப்களையே கொடுத்துவந்த ராம், தன்னுடைய ஆக்‌ஷன் இமேஜை (!) கைவிட்டு, ‘காதலுக்கு மரியாதை’ விஜய் கணக்காக காதல், குடும்பம், சென்டிமெண்ட் என்று களமிறங்கி இருக்கும் இந்தப் படம் 2016ன் முதல்நாளில் வெளிவந்து வசூல் சுனாமியை ஏற்படுத்தியிருக்கிறது. விமர்சகர்கள், தெலுங்கில் எடுக்கப்பட்ட ‘தில்வாலே துலானியா லே ஜாயங்கே’ என்று கொண்டாடுகிறார்கள். தமிழ், இந்தி மொழிகளுக்கு ரீமேக் உரிமை வாங்க போட்டாபோட்டி நடக்கிறதாம்.

தமிழில் முதல் படம் வெளிவருவதற்கு முன்பே பரபரப்பாக புக் ஆனவர் கீர்த்தி சுரேஷ். ஆனால், ‘இது என்ன மாயம்’ வெளியானபிறகு என்ன மாயமோ தெரியவில்லை. கீர்த்தியின் கீர்த்தி அதலபாதாளத்துக்கு போய்விட்டது. இதுபோல கோலிவுட்டில் மவுசு இழந்த ஹீரோயின்களுக்கு ‘வந்தாரை வாழவைக்கும் வடுகதேசம்’தான் வேடந்தாங்கல். கீர்த்தி, தெலுங்கில் அறிமுகமாகியிருக்கும் இந்த முதல்படமே ப்ளாக் பஸ்டர் ஹிட். அங்கு இன்னும் நான்கைந்து ஹிட்டுகளை அவர் கொடுத்தபிறகு, பல கோடிகளை கொடுத்து மீண்டும் கோலிவுட்டுக்கு கூப்பிடுவோம். ஸ்ரேயா, நயன்தாரா, தமன்னா, இலியானா என்று இந்த வரலாறுக்குதான் சமீபகாலத்திலேயே எவ்வளவு எடுத்துக்காட்டுகள்?
வழக்கமான, மிக சாதாரணமான காதல் கதைதான். அதில் எந்த சந்தேகமுமில்லை. குழந்தைப் பருவத்திலேயே ராமுக்கு கீர்த்தி மீது ஈர்ப்பு. ராமின் அப்பாவுக்கு வேறு ஊருக்கு மாற்றல் ஆகிறது. வளர்ந்து பெரியவர்கள் ஆனபிறகு சந்திக்கிறார்கள். ராம், கீர்த்தியிடம் காதலை வெளிப்படுத்துகிறான். ‘ஐ லவ் யூ. பட், ஐ ஆம் நாட் இன் லவ் வித் யூ’ என்று வித்தியாசமாக குழப்புகிறார் அவர்.

குழம்பிப் போன ராமுக்கு, தற்செயலாக கீர்த்தியினுடைய குடும்பப் பின்புலம் தெரியவருகிறது. ஒரு மாதிரி வடகொரியா கணக்காக இரும்புக்கோட்டையாக இருக்கும் அவர்களது குடும்பத்தை இளகவைக்கிறார். கீர்த்தியை கைப்பிடிக்கிறார். தட்ஸ் ஆல்.

இந்த சாதாரண ரொமான்ஸ் ஃபேமிலி டிராமாவில் இயக்குநர் அடுக்கியிருக்கும் காட்சித் தோரணங்கள்தான் சம்திங் ஸ்பெஷல். சின்ன சின்ன ஃப்ரேமை கூட விடாமல் ஒவ்வொரு பிக்ஸெலாக செதுக்கித் தள்ளியிருக்கும் ரிச் மேக்கிங். ஒவ்வொரு காட்சியுமே புத்திசாலித்தனமான ஐடியாவால், நறுக்கான வசனங்களால் ‘அட’ போடவைக்கிறது.

“நல்லா இருக்குங்கிறது வேற. நமக்கு பிடிச்சிருக்குங்கிறது வேற” – இதுமாதிரி எளிமையான, ஆனால் சுரீர் வசனங்கள்.
படத்தின் க்ளைமேக்ஸுக்கு சற்று முன்பாக ஒட்டுமொத்தப் படத்தின் சுமையையும் ஒரே காட்சியில் தங்கள் தோள்களுக்கு மாற்றிக் கொள்கிறார்கள் சத்யராஜும், ரோகிணியும். “பொண்ணுக்கு கல்யாணமானா பெத்தவங்களை விட்டுட்டு புகுந்த வீட்டுக்குப் போகணும்னு எவன்யா எழுதினான்? சத்தியமா சொல்றேன், அவன் பொண்ணு பெத்தவனா இருக்கமாட்டான்!” என்று சத்யராஜ் உருகும்போதும், “எல்லோரையும் மாதிரி என் புருஷனும் என்கூட நடந்துக்கணும்னுதான் ஆசை. ஆனா, அவரு என் குழந்தைகளுக்கு நல்ல தகப்பனா இருக்கணுங்கிறதுக்காக எவ்வளவோ இழந்திருக்காரு. அப்பா கிட்டே அவருக்கு கிடைக்காத கவுரவம், அவரோட பிள்ளைங்க கிட்டே கிடைச்சா போதும்” என்று ரோகிணி ஈரமான கண்களோடு பேசும்போதும் அதுவரை சிரித்து கும்மாளமாக படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் கண்களைத் துடைத்துக் கொள்கிறார்கள். இவ்வளவு திறமையான இந்த கலைஞர்களை வைத்து தமிழில் இன்னமும் அம்மி கொத்திக் கொண்டிருக்கிறோமே என்கிற வேதனைதான் நமக்கு ஏற்படுகிறது.

படம் முடியும்போது, இப்படத்தின் ஒவ்வொரு பாத்திரங்களின் சாயலையும் நம் உறவுகளில் தேடி ஒப்பிட்டு மகிழ்கிறோம். இரத்தமும் சதையுமான நம் ஒவ்வொருவரின் வாழ்வுக்கும் நெருக்கமான கதையை சொல்லியிருப்பதாலேயே ‘நேனு சைலஜா’ எவரெஸ்ட் ஹிட்டை எட்டியிருக்கிறது. இது, நம் இந்திய குடும்பமுறை பாரம்பரியமாக தொடரும் வெற்றிகரமான வாழ்வியலை அடையாளப்படுத்தும் மகத்தான வெற்றியும் கூட.

3 கருத்துகள்:

  1. ஸ்ரீராம்2:27 AM, ஜனவரி 09, 2016

    சத்யராஜ் ஒரு நல்ல நடிகன். அவரை நாம் ஒரு இமேஜ்க்குள் போட்டு அடைத்து வைத்திருக்கிறோம்.

    ஸ்ரேயா, நயன்தாரா, தமன்னா, இலியானா - பெரும்பாலும் தமிழில் வைப்பு கிடைக்காமல் தெலுகு போன நடிகைகள் எல்லாம் நடிக்க தெரியாதவர்கள். நயன்தாரா இப்போ தான் கொஞ்சம் நடிக்க ஆரம்பித்திருக்கிறார், அங்கிருந்து இங்கே வந்து விட்டார்.

    இந்த மாதிரி எமோசனல் செண்டிமெண்ட் படம் எல்லாம் தமிழ்ல 90 வந்து போச்சு. "காதலுக்கு மரியாதை" தெலுகில் சூப்பர் பிளாப் தெரியுமா?

    உங்கள் மொழி பற்று அப்பட்டமாக தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா3:10 PM, ஜனவரி 10, 2016

    Cable shankar kooda than telugu movie ku review eluthukirar..avar ena telugu karara?...this story man opt for Jeyam ravi..

    பதிலளிநீக்கு
  3. // தமிழ், இந்தி மொழிகளுக்கு ரீமேக் உரிமை வாங்க போட்டாபோட்டி நடக்கிறதாம் //

    ஆ ஊ-ன்னா இத ஒன்ன சொல்லிடுவீங்க.

    பதிலளிநீக்கு