அதிமுகவினரின் அம்மாவுக்கு பிறந்தநாள் இன்று. காவடி தூக்குவது, பால்குடம் சுமப்பது, தீச்சட்டி ஏந்துவது, வேப்பிலை ஆடை உடுத்துவது, நாக்கில் வேல் குத்திக் கொள்வது, நெருப்பு மிதிப்பது, அங்கபிரதட்சணம் செய்வது என்று ஆயிரத்தெட்டு பகுத்தறிவு வழிமுறைகளில் இந்நன்னாள் அக்கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இருந்தாலும் தமிழனுக்கு கொண்டாட்டம் என்றால் தமிழ் கலாசார செயல்பாடாக பாரம்பரியமாக நடைபெறுவது பட்டிமன்றம்தான். அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘பயா டிவி’யில் நடைபெறும் கற்பனை காமெடி பட்டிமன்றம் வாசகர்களுக்காக லைவ்வாக...
நடுவராக சபாநாயகர் தனபால். ஓ.பன்னீர்செல்வம், வளர்மதி, நத்தம் விஸ்வநாதன், சரத்குமார் ஆகியோர் வாதிடுகிறார்கள்.
தனபால் : அம்மா என்றாலே சாதனைதான். அம்மா என்றாலும் மூன்றெழுத்து. சாதனை என்றாலும் மூன்றெழுத்து (பலத்த கைத்தட்டல்). இருந்தாலும் கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் ஐ.நா.சபையே வியக்கும் வண்ணம் அவரது சாதனைகள் ஸ்டிக்கராக உலகம் முழுக்க ஒட்டப்பட்டிருக்கின்றன. அதிக ஸ்டிக்கர் ஒட்டிய ஆட்சி என்று கின்னஸ் புத்தகமே பாராட்டுகிறது. அதுபோல அமெரிக்க அதிபர் மாளிகையிலே கூட அம்மாவின் நூத்திப் பத்து அறிவிப்புகளை பிட்டு அடித்து அதே மாதிரியான அறிவிப்புகளை ஒபாமா வெளியிட ஆலோசனைகள் நடைபெறுகின்றன. இப்படி பிரபஞ்சமே பாராட்டும் புரட்சித்தலைவி அவர்களின் முத்தாய்ப்பான இந்த இரண்டு சாதனைகளில் எது பெரிய சாதனை என்று வாதிட நம் பேச்சாளர்கள் துப்பாக்கியிலிருந்து பாயும் தோட்டா கணக்காக தயாராக இருக்கிறார்கள்.
முட்டையும் முட்டையும் மோதிக்கொண்டால் ஆஃப் பாயில். மொட்டையும் மொட்டையும் மோதிக்கொண்டால்? இவர்கள் முட்டையா அல்லது திருப்பதி மொட்டையா என்பது கொஞ்ச நேரத்தில் தெரிந்துவிடும்.
(பலமான கைத்தட்டல்)
சரத்குமார் பேசவருகிறார். பின்னணியில் ‘நாட்டாமை பாதம் பட்டா...’ பாடல் ஒலிக்கிறது.
சரத்குமார் : மாண்புமிகு நடுவர் அவர்களே. நான் ஸ்டிக்கர் அல்ல. கருவேப்பிலை. எனவே நூத்தி பத்துக்காக பேசுகிறேன். அகில இந்திய சமத்துவக் கட்சி, அதிமுகவுக்காக அதிமுகவினரை விட அதிகம் குனிந்த கட்சி. அப்படியிருக்க ஆட்சியின் முடிவில் எங்களுக்கு தரப்பட்டிருக்கும் பரிசு 110 அல்ல 111 (மூன்று விரல்களை நாமம் போல போட்டு காட்டுகிறார்) என்பதை நடுவருக்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். ஆகவே 110 அறிவிப்பில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு ரெண்டு சீட்டு கொடுக்கப்படுமேயானால்...”
தனபால் : வரம்பு மீறி பேசுகிறீர்கள். உங்களுக்கு பேசக் கொடுத்த நேரம் முடிந்துவிட்டது. உட்காருங்கள்.
வளர்மதி : சரத்குமார் எங்களைவிட புரட்சித்தலைவி அம்மாவுக்கு விசுவாசமாக இருந்ததாக குறிப்பிடுவது நித்தமும் அம்மாவின் காலில் விழுந்து சேவித்து எழும் எங்களையெல்லாம் கேவலப்படுத்துவது மாதிரி இருக்கிறது.
(ஆவேசமாக)
செவுரு இருக்கிறது. ஸ்டிக்கர் ஒட்டுகிறது. உனக்கேன் ஸ்பெஷலாக அறிவிக்க வேண்டும் நூத்தி பத்து? எங்களை போல நெற்றியில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டாயா? பசை தடவினாயா? பஞ்சர் ஒட்டினாயா? எவரோ கொடுத்த வெள்ள நிவாரணப் பொருட்களுக்கு எல்லாம் எம் ரத்தத்தின் ரத்தங்கள் ஸ்டிக்கர் ஒட்டி உரிமை கொண்டாடியபோது கூடமாட உட்கார்ந்து ஒட்டாமல் எங்கே போயிருந்தாய்? டெபாசிட் இல்லாதவரே... நீ என்ன எங்கள் கட்சியின் மாவட்ட செயலாளரா? வார்டு கவுன்சிலரா? நீ ஏன் கேட்கிறாய் 110 அறிவிப்பு? ஓட்டு இல்லாத ஓடப்பரே, அம்மாவின் காலில் விழுந்து எழுந்து மக்களிடம் ஓட்டு கேட்கும் அதிமுக மறவர் கூட்டம் உன் அசமகவினரின் அஞ்சாறு ஓட்டுகளையும் எங்கள் ஓட்டுகளாக தேர்தலில் குத்திவிடும். ஜாக்கிரதை.
(விசில் சப்தம் விண்ணைப் பிளக்கிறது. கரவொலி காதை கிழிக்கிறது. நடுவர் தனபாலே தனக்கு முன்னிருக்கும் பெஞ்சை தட்டி ஒலி எழுப்புகிறார்)
சரத்குமார் : நான் என்ன சொல்ல வந்தேன் என்றால்..?
தனபால் : நீங்கள் என்ன சொல்லுவது? அம்மா சொல்லுவார் உங்களைப் பற்றி. வரம்புமீறி பேசுகிறீர்கள். நீங்கள் பேசியதை நான் நீக்குகிறேன். ஒழுங்காக பட்டிமன்ற மாண்பை கடைப்பிடிக்கும் வகையில் வெளிநடப்பு செய்யுங்கள். இல்லையேல் காவலர்களை வைத்து குண்டுக்கட்டாக தூக்கி வெளியே எறிந்து தமிழர்களின் மானத்தை காப்பேன்.
நத்தம் விஸ்வநாதன் : சரத்குமார் வீட்டின் மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டு, மிச்சமாகும் மின்சாரம் ஏழைபாழைகளுக்கு பகிர்ந்து வழங்கப்படுமென புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணைக்கினங்க அறிவிக்கிறேன். இதனால் ஏழு கோடி ஏழைகள் பயன்பெறுவார்கள். அம்மா வாழ்க. புரட்சித்தலைவி வாழ்வாங்கு வாழ்க. தங்கத்தலைவி நீடுழி வாழ்க.
ஓ.பன்னீர் செல்வம் : சரத்குமாரை அழைத்ததற்கு பதிலாக மாஃபா பாண்டியராஜனையோ, செ.கு.தமிழரசனையோ பேச அழைத்திருக்கலாம். தேர்தலில் சீட்டு கொடுக்காவிட்டாலும் விசுவாசத்தில் நம்மையும் மிஞ்சி, நம்மைவிட மிகசிறப்பாக புரட்சித்தலைவி அம்மா அவர்களின் புகழ்பாடும் தகுதி பெற்றவர்கள் அவர்கள்தான்.
நத்தம் விஸ்வநாதன் : இதை நான் வழிமொழிகிறேன். அம்மா வாழ்க. ஸ்டிக்கர் வாழ்க. பேனர் வாழ்க. வெள்ள நிவாரணம் வாழ்க. மின்தடை வாழ்க.
தனபால் : பட்டிமன்றம் மிக அருமையாக நடக்கிறது. மக்களுக்கு பயன் தரக்கூடிய இதுபோன்ற விவாதங்கள் அம்மாவை பற்றி பேசும்போதுதான் அர்த்தம் பெறுகிறது. ‘அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே, அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே’ என்று கவிஞன் சும்மாவா பாடினான்?
வளர்மதி : ஆலுமா டோலுமா ஸ்டிக்கர் ஒட்டுனா போதும்மா
ஓ.பன்னீர்செல்வம் : டேரா டேரா டேரா பைட்டா ஸ்டிக்கர் இருக்கு. பிட்டு பிட்டா ஒட்ட ஒட்ட ஏறும் கிறுக்கு. நூத்தி பத்து. அம்மா... அம்மா.. நூத்தி பத்து. அம்மா.. அம்மா.. லெட் அஸ் கெட் எ நூத்தி பத்து.. அம்மா... அம்மா.... ( ‘செல்ஃபீ புள்ள’ ராகத்தில் டேபிளை தட்டியபடியே பாடுகிறார்)
தனபால் : அடடா.. அடடா.. சும்மா அள்ளுதே. தீர்ப்பு சொல்ல வேண்டிய நேரம் வந்துடிச்சி..
(திடீரென்று எங்கிருந்தோ பாய்ந்து வருகிறார் நாஞ்சில் சம்பத்)
நாஞ்சில் : அப்படியெல்லாம் சட்டுபுட்டுன்னு தீர்ப்பு கீர்ப்பு சொல்லிடக்கூடாது. அம்மா வரட்டும். காத்திருப்போம்.
(செம்பரம்பாக்கம் வெள்ளம் வந்தபோது, அம்மா வரட்டும் என்று நாடே காத்திருந்ததை போல பட்டிமன்ற அவை மொத்தமும் அப்படியே காத்திருக்கிறது)
நன்றி : தினகரன் தேர்தல் களம்
சேற்றில் உழலும் பன்றியினும் கேடு கெட்டவர்கள்.
பதிலளிநீக்குசுயமரியாதை இயக்கத்திலிருந்து கிளைத்து வந்தது
இந்த அடிமைகள் திருடர்கள் முன்னேற்ற கழகம் என்றால்
வேறு துளை வழியாகத்தான் சிரிக்க வேண்டும்.
ஆனால் இவர்கள் வெறும் அப்பாவி அடிமைகள் அல்ல.
அனைவருமே காரிய பைத்தியகாரர்கள்.
நெருக்கமானவர்கள் அல்லது உற்ற துணையிடம்
வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்
இந்த "அம்மா"வைப்பற்றி காது கருகும் அளவுக்கு
புறம் பேசுவார்கள் என்பது திண்ணம்.
அடிக்கும் கொள்ளையில் அவரவர் திறமை,உழைப்பு,
தகுதிக்கேற்ப பங்கு கிடைக்கும்போது அந்த நன்றியை
விசுவாசத்தை இப்படி காலை நக்கியாவது
காட்டவேண்டிய கட்டாயம் அவர்களுக்கிருப்பதை
நாமும் புரிந்து கொள்ளத்தான் வேண்டும்.