கலைஞர் இல்லாத முதல் பொதுத்தேர்தலை இந்தியா சந்தித்திருக்கிறது. அவர் சார்ந்த திராவிட முன்னேற்றக் கழகம், தமிழகத்தில் சரித்திர வெற்றியை எட்டியிருக்கிறது.
இந்த வெற்றியை கலைஞர் எப்படி கொண்டாடி இருப்பார்?
திமுகவின் மகத்தான வெற்றியைவிட மக்கள் சபையில் ஒற்றை இலக்க எண்ணிக்கையில்தான் இடதுசாரிகளுக்கு இடம் கிடைத்திருக்கிறது என்கிற கவலையைத்தான் அவர் அதிகம் வெளிப்படுத்தி இருப்பார்.
இடதுசாரிகளுக்கு ஒட்டுமொத்தமாகக் கிடைத்த ஐந்து இடங்களில் நான்கு இடங்கள் தமிழகத்தில் இருந்து கிடைத்தது குறித்த ஆறுதல் மட்டுமே அவருக்கு இருந்திருக்கும். இனி வரும் காலங்களில், தேசம் முழுக்க மதச்சார்பற்ற சக்திகள் வலிமை பெற வேண்டியதின் அவசியத்தைத்தான் அவர் எடுத்துரைத்திருப்பார்.
2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுகவால் ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்டாலும், தமிழக சட்டமன்ற வரலாற்றில் அதுவரையில் இல்லாத அளவுக்கு எண்ணிக்கை அடிப்படையில் வலிமையான எதிர்க்கட்சியாக 89 இடங்களை திமுக பெற்றிருந்தது.
அப்போதும்கூட ஒரே ஒரு கம்யூனிஸ்டு எம்எல்ஏ கூட இல்லாத சட்டமன்றமாக இது அமைந்துவிட்டதே என்றுதான் கலைஞர் கவலை கொண்டார்.
கலைஞரைப் பொறுத்தவரை அரசியலிலும் சரி, தனிப்பட்ட வாழ்விலும் சரி, ஒற்றுமையே வெற்றியைத் தேடித்தரும் என்பதில் பெரும் நம்பிக்கை கொண்டவர். வலியோர், எளியோரை மதிக்க வேண்டும் என்கிற பண்பு நிறைந்தவர்.
இந்திய ஜனநாயகத்தில் ‘எண்ணிக்கை’க்குத்தான் முக்கியத்துவம். கலைஞரோ எண்ணிக்கையைவிட எண்ணத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசியல் செய்தவர். தமக்கு எதிரணியில் நின்றவர்களைக்கூட அவர்களின் கொள்கைப் பிடிப்பு காரணமாக மரியாதைக்குரிய இடத்தில் வைத்திருந்தவர்.
அவருடைய எண்பது ஆண்டு கால பொதுவாழ்வில் எவரையும் அவர் எதிரியாகக் கருதியதில்லை. எதிர்நிலையில் இருக்கிறார்கள் என்று மட்டுமே நினைப்பார்.
முதன்முறையாக குளித்தலை சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று இளம் எதிர்க்கட்சி எம்எல்ஏவாக சட்டமன்றத்தையே கலைஞர் அதிரச் செய்து
கொண்டிருந்தபோது, தமிழகத்தின் நிதியமைச்சராக இருந்தவர் சி.சுப்பிரமணியம். அப்போது காமராஜர் தலைமையிலான அமைச்சர்கள், சட்டமன்றத்தில் கலைஞரின் வாயில் விழுந்துவிடக் கூடாதே என்று அஞ்சுமளவுக்கு அவரது உரைவீச்சு வாள்முனையின் கூர்மைக்கு ஒப்பானதாக இருந்து வந்தது.
நிதியமைச்சர் என்கிற வகையில் சி.சுப்பிரமணியம், அடிக்கடி கலைஞரால் தாக்குதலுக்கு உள்ளாவது வழக்கம். பின்னாளில் திமுக ஆட்சிக்கு வந்து கலைஞர், பொதுப்பணித்துறை அமைச்சராக அண்ணா அரசில் பொறுப்பேற்றார். அதன் பிறகு முதலமைச்சராக ஐந்து முறை பணியாற்றினார். மிகச்சிறந்த நிர்வாகியாக நாடு முழுக்க பெயர் எடுத்தார்.
எனினும், நிர்வாகத்தில் தன்னுடைய குரு என்று தன்னால் அதிகமுறை சட்டமன்றத்தில் தாக்குதலுக்கு உள்ளான சி.சுப்பிரமணியத்தின் பெயரைத்தான் கலைஞர் குறிப்பிடுவார்!எதிர்க்கட்சி உறுப்பினராக தன்னுடைய தர்மத்தை கலைஞர் மேற்கொண்டார். அதற்காக அவர் சி.சுப்பிரமணியத்தை
எதிரியாகக் கருதியதில்லை. மனசுக்குள் மானசீகமாக குரு என்கிற நிலையில் வைத்துத்தான் மரியாதை செய்திருக்கிறார்.அரசியலில் கலைஞருடைய பல நிலைப்பாடுகள், அடுத்தடுத்த நகர்வுகளில் கடுமையான முரண்பாடாகத் தெரியும்.
ஆனால் -
நீண்டகால நோக்கில் பார்க்கப் போனால், அது திமுகவின் நன்மையை உத்தேசித்த முடிவாகவே இருந்திருக்கும். தனிப்பட்ட முறையில் தன்னுடைய பெயரும், இடமும் விமர்சிக்கப்படுவதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. இயக்கத்தின் இருப்பு குறித்த ஓர்மையோடுதான் ஒவ்வொரு அரசியல் முடிவையும் எடுத்திருக்கிறார்.
அண்ணாவின் தம்பியல்லவா? சுவர் இருந்தால்தான் சித்திரம் என்பதை முழுமையாக உணர்ந்தவர்.‘இந்திராதான் இந்தியா’ முழக்கம் எழுந்த எழுபதுகளில், மத்திய ஆட்சியை அனுசரித்துப் போயிருந்தால் கலைஞர் தன் பதவியைத் தக்கவைத்துக் கொண்டிருக்க முடியும்.
ஆனால், பதவியைப் பற்றி கவலைப்படாமல் இந்திராகாந்தி ஆட்சியின் எமர்ஜென்ஸியை எதிர்த்து தீரத்தோடு போராடினார். ஆட்சியை இழந்தார். குடும்பத்தினர், கட்சியினர் அத்தனை பேரும் சிறைப்பட்டு, சித்திரவதைப் படுத்தப்பட்டபோதும் தனிமனிதராக ‘முரசொலி’ என்கிற எழுத்து ஆயுதம் கொண்டு அடக்குமுறையைக் கடுமையாக எதிர்த்தார்.
அரசியல் சூழல் மாறியபோது பழைய எமர்ஜென்ஸி விரோதத்தை அவர் இந்திராகாந்தி மீது காட்டியதில்லை. ‘நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக’ என்று அழைத்து, தமிழகத்தில் பெருவாரியான வெற்றியை காங்கிரஸ் பெறுவதற்குக் காரணமாக இருந்தார். எமர்ஜென்ஸியின்போது சேதாரமான திமுகவின் கட்டமைப்பை சீர்படுத்துவதற்கும் அந்த பாராளுமன்ற வெற்றி கலைஞருக்கு உதவியது.
“எதிர்த்தாலும் சரி, ஆதரித்தாலும் சரி, இரண்டிலுமே முழுத் தீவிரமாக இருப்பார் கலைஞர்...” என்று அவரது அரசியலுக்கு சான்றிதழ் வழங்கினார் இந்திராகாந்தி. அந்தக் கூட்டணி முடிவினால் தனிப்பட்ட முறையில் கலைஞர் பலவாறாக விமர்சிக்கப்பட்டாலும், தான் சார்ந்த இயக்கத்தின் நலன் மட்டுமே அவரது முடிவுக்குக் காரணமாக அமைந்தது.
தன் மீது பல திசைகளிலிருந்தும் பாயும் விமர்சனக் கணைகளைப் பொருட்படுத்தாமல் திமுகவின் எதிர்காலத்தை மட்டுமே உத்தேசித்து அவர் எடுத்த முடிவுகளினால்தான் உலகளவிலேயே இல்லாத அதிசயமாக ஒரு பிராந்திய அரசியல் இயக்கம், எழுபது ஆண்டுகளைக் கடந்தும் மக்கள் செல்வாக்குள்ள வலிமையான அமைப்பாக இன்றும் செயல்பட முடிகிறது.
இடைப்பட்ட இந்தக் காலத்தில் கட்சியில் எத்தனையோ பிளவுகள்; எவ்வளவோ தலைவர்கள் பிரிந்து சென்றிருக்கிறார்கள்.
இருந்தும், திமுகவுக்குப் பிறகு தொடங்கப்பட்டு ஒரு காலத்தில் பிரபலமாக வலிமையாக இருந்த பல இயக்கங்களின் பெயர் கூட இன்று யாருக்கும் நினைவில் இல்லை. தனிப்பட்ட விரோதம் பாராமல் அனைவரையும் ஒருங்கிணைத்து, தேர்தலை பதவிக்கான பாதையாக மட்டும் கருதாமல், இயக்கத்தின் எதிர்காலத்தை ஒட்டியே முடிவுகளை எடுக்கும் கலைஞரின் தலைமைப் பண்புதான் திமுகவின் நீண்டகால இருப்புக்கு முழுமுதற் காரணம்.
தன் சுயலாபத்துக்காக, தான் சார்ந்த இயக்கத்தை எந்நாளும் அவர் விட்டுக் கொடுத்தவரில்லை என்பதே கலைஞரின் சிறப்புகளுக்கு எல்லாம் சிறப்பு.
சிறுவயதிலேயே அவருக்கு இந்தப் பண்பு இயல்பாக இருந்திருக்கிறது. அதுவே பின்னாளில் அரசியலுக்கும் உதவியிருக்கிறது.
டீன் ஏஜில் இருந்தபோது திருவாரூரில் கலைஞர், சீர்திருத்தச் சங்கம் என்கிற இளைஞர் அமைப்பை நிறுவி நடத்திக் கொண்டிருந்தார். சங்கத்தில் ஏதோ சலசலப்பு. கலைஞரின் நண்பராக இருந்த தியாகராஜன் என்பவர் சங்கத்தை உடைத்தார். ‘இளைஞர் சங்கம்’ என்கிற பெயரில் புதிய சங்கத்தைத் துவக்கினார்.
ஊரில் சீர்திருத்தச் சங்கமும், இளைஞர் சங்கமும் கருத்துரீதியில் மட்டுமில்லாமல், களரீதியிலும் அவ்வப்போது மோதிக்கொண்டார்கள். எது உண்மையான சங்கம் என்பதை முடிவு செய்ய தேர்தல் நடத்தலாம் என்று ஊர் முக்கியஸ்தர்களின் ஏற்பாட்டுக்கு இருதரப்பும் ஒப்புக் கொண்டார்கள்.
தேர்தல் என்று வந்துவிட்டால் கலைஞர் சிங்கம் அல்லவா?பிரசாரம், பொதுக்கூட்டம், தேர்தல் நிதி, நிதி திரட்ட கலைநிகழ்ச்சிகள் என்று அட்டகாசப்படுத்தினார்.
இவர்களை எதிர்கொள்ள எதிர்த்தரப்பும் ஒரு நாடகம் போட்டு நிதி திரட்ட முற்பட்டார்கள். நாடகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு, நுழைவுச் சீட்டுகளையும் விற்றுவிட்டார்கள். கடைசி நேரத்தில் நாடகத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடிக்க வேண்டிய நடிகர் ஒருவர் மாயமாகி விட்டார். நாடகத்தை நடத்தாவிட்டால் நுழைவுச்சீட்டை காசு கொடுத்து வாங்கிய ரசிகர்கள் ஒருவழியாக்கி விடுவார்கள்.
தியாகராஜனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் என்று முடிவெடுத்தார். ஏனெனில், மாயமாகிவிட்ட நடிகரின் கதாபாத்திரத்தை நடிக்க முடிந்த ஒரே நடிகர் அப்போது கலைஞர்தான்! அவருக்குத்தான் வசனங்களும், காட்சியும் மனப்பாடமாகத் தெரியும்.தயங்கித் தயங்கி கலைஞரை அணுகினார்.
இதற்குத்தானே அவரும் காத்திருந்தார்?
“தியாகராஜா, நடிப்பதில் எனக்கு சம்மதமே. அது என் கடமையும்கூட. ஆனால், இந்த நாடகத்தை நான் சார்ந்திருக்கும் சீர்திருத்தச் சங்கத்துக்கு எதிராக நடத்துகிறாய். அதில் நான் சம்பளம் வாங்கிக்கொண்டு நடிப்பதாக இருந்தால் அது என்னுடைய சங்கத்துக்கு எதிராக நான் செயல்படுவதற்கு ஒப்பாகும்...” என்று நிறுத்திவிட்டு தியாகராஜனைப் பார்த்தார்.
தியாகராஜனோ பரிதாபமாக, “நான் என்னதான் செய்யவேண்டும் என்பதையும் நீயே சொல்லிவிடு...” என்றார்.“நாடகம் தொடங்குவதற்கு முன்பாக, சீர்திருத்தச் சங்கத்தில், இளைஞர் சங்கம் இணைந்துவிட்டது என்று அறிவித்துவிடு! அப்போது நாம் ஒரே சங்கமாகிவிடுவோம். நான் நடிப்பது குறித்து யாரும் ஆட்சேபிக்க முடியாது. எனக்கும் தயக்கம் இருக்காது!” என்று கிடுக்கிப்பிடி போட்டார்.
தனிப்பட்ட முறையில் தன் பெயரைக் கெடுத்துக் கொள்வதைவிட சங்கத்தை இணைத்துவிட்டு நாடகத்தை நடத்தி, தப்பித்தால் போதும் என்கிற நிலையில் தியாகராஜனும் அவ்வாறே செய்தார்.
அப்போது கலைஞர் செய்த அதே சீர்திருத்தச் சங்க அரசியலைத்தான் காலம் முழுக்க செய்துவந்தார். தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதைத் தவிர்த்து, தன்னுடைய இயக்க நலனையே பிரதானமாக முன்வைத்தார். அரசியலில் அவர் மகத்தான வெற்றிகளைக் குவிக்க அவரது இயக்கம் காரணமாக இருந்தது. படுமோசமான தோல்விகளின்போது இயக்கமே அவருக்கு பாதுகாப்புக் கேடயமாக இருந்து, அடுத்த போருக்கு தயார் செய்தது.
தனிமனிதர்கள் தற்காலிகமானவர்கள். அமைப்பே நிரந்தரம்!
கலைஞர் கற்றுக் கொடுத்திருக்கும் இந்தப் பாடம், அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமானதும்தான். அமைப்பு என்கிற இடத்தில் குடும்பம், வீடு, தெரு, ஊர், சமுதாயம், நிறுவனம், மாநிலம், நாடு என்று அவரவருக்கான அமைப்பின் பெயரைப் போட்டு, அவரவருக்கான பாடமாக எடுத்துக் கொள்ளலாம்!
தந்தை வழியில் தனயன்!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால், இப்போதைய சூழலில் முதல்வராகி இருக்க முடியாதா?
முடியும். முயற்சித்திருந்தால் ஜெயலலிதா மறைந்தபோதேகூட ஆகியிருப்பார்.அதற்காக நிறைய பின்வாசல்களை அவர் திறந்திருக்க வேண்டும். பின்வாசல் அரசியல் என்பது ராஜதந்திரமாக, அரசியல் தர்மமாக பார்க்கப்படும் இன்றைய சூழலில், அதை அவர் செய்திருந்தாலும் யாரும் தவறாக எடுத்துக் கொள்ளப்போவதில்லை.
பதவிக்கு வருவதுதான் முக்கியம். எந்த வழியாக வந்தார்கள் என்று யார் கவலைப்படப் போகிறார்கள்?
ஆனால் -
தான் முதல்வர் ஆவதைவிட, கலைஞருக்குப் பிறகு, தான் பொறுப்பேற்றிருக்கும் திமுக, மக்கள் செல்வாக்கோடு மாபெரும் வெற்றி பெறுவதையே ஸ்டாலின் விரும்பினார்.
கலைஞர் இல்லாமல் திமுக சந்தித்த முதல் தேர்தலில், கலைஞரின் உயிரான இயக்கம், நாடே திரும்பிப் பார்க்கும் மகத்தான வெற்றியைப் பெற்றிருப்பதையே கலைஞரின் இந்த ஆண்டு பிறந்தநாள் பரிசாக அவர் நினைவிடத்தில் சமர்ப்பித்திருக்கிறார் ஸ்டாலின்!தன்னைவிட தன்னுடைய இயக்கம்தான் முக்கியம் என்கிற தந்தை வழியிலேயே தனயனும் பயணப்படுவது திமுகவின் தொண்டர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
(நன்றி : குங்குமம்)