25 நவம்பர், 2008
இரும்பு குதிரைகள்!
24 நவம்பர், 2008
விளம்பர உலகம்!
நூலின் பெயர் : சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்
ஆசிரியர் : யுவகிருஷ்ணா
பக்கங்கள் : 152
விலை : ரூ. 70/- வெளியீடு : கிழக்கு பதிப்பகம், எண் 33/15, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி : 044-42009601/03/04 தொலைநகல் : 044-43009701 மின்னஞ்சல் : support@nhm.in இணையம் : www.nhm.in சினிமாத்துறையைப் போலவே விளம்பரத்துறையும் பிரம்மாண்டமானது. பல கோடிகள் புழங்கும் துறை. பிரபலங்களை மேலும் பிரபலங்களாக்கும் துறை. இத்துறைக்குள் நுழைவது ஒன்றும் சக்கரவியூகத்துக்குள் நுழைவதுபோலக் கடினமானதல்ல. கொஞ்சம் முயற்சி செய்தால், விளம்பரங்கள் குறித்து கொஞ்சம் தெரிந்துகொண்டால் போதும். எளிதாக நுழைந்து வெற்றிக்கொடி நாட்டிவிடலாம். இப்போதெல்லாம் சினிமாத்துறைக்குள் நுழைய விரும்புபவர்கள் முன்னோட்டமாகத் தேர்ந்தெடுப்பது, விளம்பரத்துறையைத்தான் என்பதை மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், ஒரு குறை இருந்துகொண்டே இருக்கிறது. விளம்பரத்துறை குறித்த போதுமான புத்தகங்கள் தமிழில் இல்லை. பல விளம்பர முன்னோடிகள் தமிழர்களாக இருந்தும் இந்தத் துறையைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டுமானால், ஆங்கிலப் புத்தகங்களைத்தான் நாடவேண்டிய நிலை. ஆங்கிலத்தில் இந்தத் துறையின் ஒவ்வொரு பிரிவைப் பற்றியும் விரிவான பல நூல்கள் இருக்கின்றன. விளம்பரத்துறையின் மொழியே ஆங்கிலம்தான். அமெரிக்கப் பாணியில் நடத்தப்படும் விளம்பர ஏஜென்ஸிகளில் பணிபுரிய ஆங்கிலம் அத்தியாவசியமாக இருக்கிறது. இருந்தாலும் தமிழில் வாசிக்கும் சுகானுபவத்தை மற்ற மொழிகள் நமக்கு தந்துவிடுமா என்ன? நான் ஒரு ஏஜென்ஸியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, அங்கே நேர்முகத்தேர்வுக்காக ஓர் இருபது வயது இளைஞன் வந்திருந்தான். அவனது சொந்த ஊர் சிவகாசி. அங்கே சில அச்சகங்களில் ஓவியனாகப் பணியாற்றிய அனுபவம் அவனுக்கு இருந்தது. அருமையான ஓவியன். அவனிடம் ஒரு தயாரிப்பைப் பற்றிய சில விவரங்களைச் சொல்லி தலைப்புக் கொடுத்து ஒரு விளம்பரத்தை வரைந்து காட்டச் சொல்லியிருந்தேன். ஒரு பிரபல கிரிக்கெட் வீரரை வரைந்து தலைப்பு எங்கே வரவேண்டும், மற்ற விஷயங்கள் எங்கெங்கே வரவேண்டும் என்று வரைந்து காட்டியிருந்தானான். அவன் வரைந்து காட்டிய லேஅவுட் மிக அருமையாக வந்திருந்தது. "இந்த விளம்பரத்துக்கு எதற்காக கிரிக்கெட் வீரரை மாடலாக வைத்தாய்?' என்று கேட்டதற்கு, அவனால் சரியான பதில் அளிக்க முடியவில்லை. "இவர்தான் இப்போது நிறைய விளம்பரங்களில் வருகிறார். இவரை மாடலாக வைத்தால் விளம்பரம் நன்கு கவனிக்கப்படும்' என்று பதில் சொன்னான். அவனுக்கு நல்ல ஓவியத் திறமை இருந்தது. ஆனாலும் விளம்பர நிறுவனத்தில் பணியாற்ற அதுமட்டும் போதாது. விளம்பரத்துறை குறித்த போதுமான அறிவு இருக்க வேண்டும். அருமையாக லேஅவுட் செய்வதும், மார்க்கெட்டிங் செய்வதும், டி.வி. விளம்பரங்களை படம்பிடித்துக் கொடுப்பதும் மட்டுமே ஏஜென்ஸிகளின் வேலை அல்ல. சுருக்கமாகச் சொல்லப் போனால் விளம்பரம் வெளியிடுவது மட்டுமே ஏஜென்ஸிகளின் வேலை அல்ல, அதையும் தாண்டி பொருளின் விற்பனையைப் பெருக்க உதவவேண்டும். நம்மில் நிறையப் பேர் விளம்பரங்கள் என்றாலே மாடல்கள்தான் என்று அந்த சிவகாசி பையனைப்போல நினைத்துக் கொள்கிறோம். உண்மையில் சொல்லப் போனால் மாடலிங் என்பது தனித்துறை. விளம்பரத்துறையைச் சார்ந்த இன்னொரு பெரிய துறை. அப்படியென்றால் எது விளம்பரத்துறை,? விளம்பரத்துறையில் யார் யார் இருக்கிறார்கள்,? என்ன என்ன செய்கிறார்கள்? போன்ற சந்தேகங்கள் வரலாம். அந்தச் சந்தேகங்களை எல்லாம் இந்தப் புத்தகம் வாயிலாகத் தீர்த்துக்கொள்ளப்போகிறோம். விளம்பரத்துறையின் ஒவ்வொரு பிரிவுகள் குறித்தும் தனித்தனியாகவே புத்தகமாக எழுதமுடியும் என்றாலும், தமிழில் இந்தத் துறை குறித்து அறிந்துகொள்ளப் போதுமான புத்தகங்கள் இல்லாத நிலையில் இந்தத் துறை பற்றிய பறவைப் பார்வையைப் பார்க்க இந்தப் புத்தகம் நிச்சயம் உங்களுக்கு உதவும். - யுவ கிருஷ்ணா சென்னையைச் சேர்ந்த யுவகிருஷ்ணா எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக விளம்பர நிறுவனங்களில் பணியாற்றியவர். தற்போது கார்ப்பரேட் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருகிறார். விகடன் குழுமத்தின் இணையத்தளமான யூத்ஃபுல்.விகடன்.காமில் தொடர்ந்து எழுதிவரும் யுவகிருஷ்ணா, இணைய வலைப்பூக்களிலும், சஞ்சிகைகளிலும் ஏராளமாக எழுதிவருகிறார். இணையத்தில் இவரது பெயர் லக்கிலுக்.
18 நவம்பர், 2008
பகல் வேஷம்!
உத்திரமேருரூக்கு அருகில் இருக்கும் சில கிராமங்களில் இன்னமும் பகல்வேடக் காரர்கள் உண்டு. என்ன தொழிலை தான் மாற்றிக் கொண்டார்கள். பல பேர் விவசாயக் கூலிகளாகவும், கல்லுடைப்பவர்களாகவும் உருமாறியிருக்கிறார்கள். சமீபத்தில் உத்திரமேரூருக்கு அருகில் இருக்கும் திருப்புலிவனம் செல்ல நேர்ந்தது. அங்கே சில முன்னாள் பகல்வேடக் காரர்களை சந்தித்து உரையாடும் வாய்ப்பும் கிடைத்தது. சினிமா வரும் காலத்திற்கு முன்பாக மக்களுக்கு பொழுதுபோக்க பயன்பட்ட கலை தெருக்கூத்து. பண்டிகைக் காலங்களிலும், கோயில் திருவிழாக்களிலும் இரவுவேளைகளில் தெருக்கூத்து நடத்துவார்கள். தெருக்கூத்தின் சப்ஜெக்ட் பொதுவாக இதிகாசக் கதைகளாகவும், நாட்டுப்புறக் கதைகளாகவும் அமைந்திருக்கும். ராஜா வேடம் போடுபவரை ராஜபார்ட் என்றும், ராணி வேடமோ அல்லது பெண்வேடமோ தரிப்பவரை ஸ்த்ரீபார்ட் என்றும் அழைப்பார்களாம். பெண்கள் யாரும் தெருக்கூத்தில் பங்கேற்க அப்போது அனுமதியில்லை என்பதால் ஆண்களே பெண் வேடமும் அணியவேண்டிய நிலை இருந்திருக்கிறது. தெருக்கூத்து கட்டுபவர்கள் நல்ல பாடகர்களாகவும் இருப்பார்கள். தொழில்முறை தெருக்கூத்து கலைஞர்கள் மட்டுமல்லாமல் பார்ட் டைமாக விழாக்காலங்களில் மட்டும் கூத்து கட்டுபவர்களும் இருந்திருக்கிறார்கள். வருமானத்துக்கு என்றில்லாமல் புகழுக்காக இத்தொழிலை பகுதிநேரமாக செய்திருக்கிறார்கள். எனது தாய்வழி பாட்டனார் அப்படிப்பட்ட ஒரு கலைஞர். உத்திரமேரூருக்கு அருகில் இருக்கும் அகரம்தூளி என்ற கிராமத்தில் வாழ்ந்தவர் அவர். கோயில் திருவிழாக்களில் ராஜபார்ட் வேடம் கட்டுவாராம். அவரது உறவினர் ஒருவர் ஸ்த்ரீபார்ட் போடுவாராம். திருவிழா முடிந்ததுமே அவரவர் வேலையை (பொதுவாக விவசாயம்) கவனிக்கப் போய்விடுவார்கள். ஆனாலும் கூத்தையே தொழிலாக கொண்டவர்கள் தெருக்கூத்து இல்லாத காலங்களில் வருமானத்துக்காக பகல்வேடம் பூணுவார்கள். அதிகாலை நான்கு மணியளவில் எழுந்து முகம் முழுக்க அரிதாரம் பூசி சிவன், கிருஷ்ணன், ராமன், ராவணர், அசுரர், நாரதன் என்றெல்லாம் வேடம் பூண்டு அருகிலிருக்கும் கிராமங்களுக்கு செல்வார்கள். ஒவ்வொரு வீடாக சென்று பாட்டு பாடியோ, வசனம் பேசியோ பணமாகவோ, நெல்லாகவோ ஏதாவது பொருளாகவோ பெறுவார்கள். உணவும் ஏதோ ஒரு வீட்டில் விருந்தாக கிடைக்கும். அக்காலங்களில் பகல்வேடக் காரர்களுக்கு மக்களிடையே நல்ல மதிப்பும் இருந்திருக்கிறது. கடவுள் வேடம் போட்டவர்கள் ஆசீர்வதித்தால் தங்கள் குடும்பம் விளங்கும் என்ற நம்பிக்கையும் பலபேருக்கு இருந்திருக்கிறது. சில பகல்வேடக் காரர்கள் கூட்டமாக மற்ற மாவட்டங்களுக்கு ஓரிரு மாதங்கள் சுற்றுப்பயணமாக சென்றும் தங்கள் தொழிலை செய்வதுண்டு. அவ்வாறு வேடம் இட்டுவரும் பகல்வேடக் காரர்களிடமே அந்த வருட திருவிழாவுக்கு தெருக்கூத்து கட்ட பேரம் பேசி கிராமத்து முக்கியஸ்தர்கள் அட்வான்ஸும் கொடுத்து விடுவார்களாம். இதெல்லாம் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு. சினிமாத் தொழில் வளர்ந்ததால் பாதிக்கப்பட்டது நாடகக்கலை மட்டுமன்று, இக்கலையும் தான். இன்றைய தேதியில் மிக மிக குறைவானவர்களே பகல் வேடம் கட்டுகிறார்கள். தெருக்கூத்துக்கும் இளைய சமுதாயத்திடம் அவ்வளவாக வரவேற்பில்லை. ஒரு உன்னத கலையை தொழிலாக கொண்டவர்கள் மாறிவரும் சமூகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நம் கண்ணுக்கு தெரியாமலேயே மறைந்து கொண்டிருக்கிறார்கள். அடுத்த முறை சாலையில் எங்கேயாவது ராமன் வேடம் போட்டவரோ, ராவணர் வேடம் போட்டவரோ உங்களிடம் காசு கேட்டால் தயவுசெய்து எரிந்து விழாதீர்கள். நம் முன்னோர்கள் பொழுதுபோக்க உதவிய ஒரு பெரும் கலையின் மிச்சமாய் அவர்கள் மட்டுமாவது வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
17 நவம்பர், 2008
செய்திகள் வாசிப்பது!
14 நவம்பர், 2008
வாரணம் ஆயிரம்
இயக்கம் - கேமிரா - நடிப்பு - இசை மற்ற தொழில்நுட்ப இத்யாதிகள் என்று ஒரு திரைப்படத்துக்கு சிறப்பு சேர்க்கும் எல்லா காரணிகளுமே மிக சிறப்பாக அமைந்திருப்பது வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் சிறப்பு. ஆனால் இந்தியத் திரைப்படம் ஒன்றுக்கு அடிப்படைக் கட்டமைப்பை ஏற்படுத்தும் கதை என்ற ஒன்று இல்லாததால் திருவிழாவில் தொலைந்த குழந்தை மாதிரி படம் எங்கெங்கோ அலைபாய்கிறது. அப்பாவின் கல்லூரி காதலில் ஆரம்பித்து அவரது இறுதி மூச்சு வரைக்கான கதை என்று எடுத்துக் கொண்டாலும் இதில் மகன் வளர்வது, காதலிப்பது, மேட்டர் முடிப்பது, தண்ணியடிப்பது, டோபு அடிப்பது மாதிரியான கருமங்கள் எதற்காக? மகனின் பார்வையில் அப்பா என்ற கான்செப்டை எடுத்துக் கொண்டாலும் அப்பாவுக்கு நேரடி தொடர்பில்லாத மகனின் அந்தரங்கம் காட்சியாக்கப்பட்டிருப்பது எல்லாம் அனாவசியம். சுவாரஸ்யம் குறைவான ஒருவரின் வாழ்க்கை வரைபடம் இத்திரைப்படம். அனேகமாக இயக்குனர் கவுதமின் சொந்தக்கதையாக இருக்கலாம். மகன் சூர்யாவின் காஸ்ட்யூம், ஹேர்ஸ்டைல் அனைத்திலும் அச்சு அசலாக கவுதம் வாசுதேவ் மேனன். இயக்குனருக்கு சினிமா சென்ஸ் ரொம்பவும் அதிகம். தனித்தனி காட்சிகளாக பார்த்தால் காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டிருப்பது புலப்படும். ஆனால் ஒட்டுமொத்தமாக மூன்றுமணி நேரம் பொறுமையாக அமர்ந்து பார்க்கும்போது கொட்டாவிதான் வருகிறது. சாரி கவுதம், பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம். சூர்யாவுக்கு இப்படம் ஒரு மைல்கல். இப்படத்துக்கு அவர் செலவழித்திருக்கும் உழைப்பையும், சிரத்தையையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். அப்பா கேரக்டருக்கு ரகுவரன்; மகன் கேரக்டருக்கு கமல்ஹாசன் ஆகியோரின் உடல்மொழியை அப்பட்டமாக பின்பற்றுகிறார். இயக்குனர் கமல்ரசிகர் என்பது பல காட்சிகளில் வெளிப்படுகிறது. டீனேஜ் சூர்யா பைலட்டில் பார்க்கும் படம் ‘சத்யா'. அப்பா, மகன் இரண்டு கேரக்டரையும் சூர்யாவே எடுத்து நடித்தது ஏன் என்பதை அவராலும், இயக்குனராலும் ஜஸ்டிஃபை செய்யவே முடியாது. வேறொரு நடிகரை அப்பாவாக நடிக்க வைத்திருந்தால் தயாரிப்புச் செலவாவது குறைந்திருக்கும். ஆயினும் தசாவதாரத்தை மிஞ்சிய தொழில்நுட்ப சாத்தியங்கள் சில இரட்டை வேடம் என்பதால் இப்படத்தில் சாத்தியப்பட்டிருக்கிறது. துரதிருஷ்டவசமாக சராசரி சினிமா ரசிகன் அவற்றையெல்லாம் கண்டுகொள்ளப் போவதில்லை. வானில் ஹெலிகாப்டரில் மேஜர் சூர்யா பறக்கிறார் என்றால் அதை வானிலேயே சென்று படமாக்கும் மிஸ்டர் பர்ஃபெக்ட் இயக்குனர். அந்த ராணுவகாட்சிகளுக்கான டோன் அபாரம். திருட்டு டிவிடியில் படம் பார்ப்பவர்கள் திட்டிக் கொண்டே பார்ப்பார்கள். அமெரிக்க காட்சிகளும், பாடல்களும் வாவ். படத்தைப் பாராட்ட ஆயிரம் விஷயங்கள் இருந்தாலும் ஆமையை விட மெதுவாக நகரும் காட்சிகள் ஏற்படுத்தும் கடுப்பின் எல்லைக்கு அளவேயில்லை. இயக்குனருக்கு படத்தை முடிக்க மனமேயில்லாமல் முடித்திருக்கிறார். கொஞ்சம் விட்டால் பத்துமணி நேரத்துக்கு படமெடுத்திருப்பார் போலிருக்கிறது. இறுதிக்காட்சிக்கு இடையே தேவையில்லாமல் நுழைக்கப்பட்ட இராணுவமீட்பு சண்டை சூப்பர் என்றாலும் தேவையே இல்லை. சமீரா ரெட்டி என்ற சப்பை ஃபிகரை எப்படித்தான் சூர்யாவுக்கு ஜோடியாக சேர்த்தார்களோ? காதலை சொல்லும் கட்டத்தில் பூ மாதிரி முகத்தை மலரவைக்க வேண்டாமா? ரியாக்ஷன் காட்டுவதில் கஞ்சத்தனம். நல்லவேளையாக இடைவேளைக்குப் பிறகு குத்து ரம்யா (எ) திவ்யாவின் எண்ட்ரி வருவதால் கொஞ்சம் மூச்சுவிட முடிகிறது. மைசூர் சந்தனக்கட்டை மாதிரி மஜாவான ஃபிகர். ப்ளூ சுரிதாரில் பெட்டில் படுத்துக்கொண்டு சூர்யாவோடு பேசும் காட்சியில் காமிரா ஆங்கிளும், திவ்யாவின் பாடி ஆங்கிளும் பார்ப்பது தமிழ்படமா? ஆங்கிலப் படமா என்ற சந்தேகத்தை தருகிறது. ரெண்டு மூன்று கிளுகிளுப்பு காட்சிகளை சேர்த்திருந்தால் கொஞ்சம் திருப்தியாக படம் முடியும்போது ஃபீல் செய்திருக்கலாம். சிம்ரன் இளமையாக தோன்றும் காட்சிகள் நிறைவு. வயதான கெட்டப் மோசமென்றாலும், நடிப்பில் சோடைபோகவில்லை. கிராபிக்ஸில் பழைய சென்ட்ரல், அந்நாளைய ஸ்பென்ஸர் பிளாஸா ஆகியவற்றை பாடலில் சாத்தியமாக்கியிருக்கிறார் இயக்குனர். ஆனால் 60களில் இவை இப்படி இருந்திருக்குமா என்பது சந்தேகம். 1920களில் சென்ட்ரலும், ஸ்பென்சரும் இருந்த தோற்றங்கள் அவை. நிறைய இடங்களில் லாஜிக் இடிக்கிறது, மேஜிக்கும் இருக்கிறது. சராசரி தமிழ் சினிமா ரசிகனால் பார்க்கவே முடியாத படமிது. தெலுங்கிலும் டப் செய்திருக்கிறார்களாம், அங்கே திரையை ரசிகர்கள் கிழிக்காமல் இருந்தால் ஆச்சரியப்படலாம். வாரணம் ஆயிரம் - வயிற்றுவலி தரும் சூரணம்!