25 நவம்பர், 2008

இரும்பு குதிரைகள்!

பத்தாண்டுகளுக்கு முன்பாக முதன்முறையாக இந்நாவலை வாசித்தபோது பாலகுமாரன் மீது செம கிறுகிறுப்பு இருந்தது. வார்த்தைக்கு வார்த்தை சிலாகித்து படித்தேன். காதலன், பாட்ஷா மாதிரியான சூப்பர்ஹிட் படங்களுக்கு வேறு வசனம் எழுதி பாலகுமாரன் என்னை ஆக்கிரமித்திருந்தார். ஒரு மனிதருக்கு ஒன்றுதான் மாஸ்டர்பீஸாக இருக்கமுடியும். பாலகுமாரனுக்கோ இரும்பு குதிரைகள், மெர்க்குரிப் பூக்கள் என்று இரண்டு மாஸ்டர்பீஸ்கள். என்னைப் பொறுத்தவரை 'பழமுதிர்க் குன்றம்' அவரது மாஸ்டர்பீஸ்களுக்கெல்லாம் மாஸ்டர்பீஸ். துரதிருஷ்டவசமாக அது சூப்பர்ஹிட் ஆகவில்லை. ஏதோ ஒரு ஆங்கிலநாவலை தழுவி எழுதியிருந்தார்.
பாலகுமாரனிடம் சிருங்கார வர்ணனைகள் குறைவு. எழுத்துக்கள் எளிமை. இந்த இரண்டையும் ப்ளஸ் பாயிண்டென்று சொன்னால், பெய்யெனப் பெய்யும் அவரது அட்வைஸ் மழையை மைனஸ் பாயிண்ட் என்று சொல்லலாம். கருத்து கந்தசாமி மாதிரி வாழ்க்கையைப் போதிக்க பாலகுமாரன் ஆரம்பித்தால் சரியாக இரண்டு பக்கங்களை இரக்கமேயின்றி திருப்பிவிடுவேன். டீனேஜில் இருந்தது போலவே இப்போது அட்வைஸ் என்றால் கசக்கிறது. ஏற்கனவே ஏதாவதொரு நாவலிலோ, தொடரிலோ சொன்னதை தான் வேறு வேறு வார்த்தைகளில் திரும்ப திரும்ப சொல்லுவார். திடீரென யோகா, ஆன்மீகம் என்று நியூஸ் ரீல் பாணியில் டாக்குமெண்டரியும் ஓட்டிவிடுவார்.
ஏனோ இரண்டு மூன்று நாட்களாக மீண்டும் பாலகுமாரனை வாசித்தேயாக வேண்டும் என்றொரு வெறிவந்தது. மூன்று மாதங்களுக்கு முன்பாக கூட மெர்க்குரிப்பூக்களை மீள்வாசிப்பு செய்திருந்ததால் இம்முறை இரும்பு குதிரை. இரும்புக்கு பக்கத்தில் 'க்' இருக்காது. 'க்' போட்டால் ஸ்லோ ஆகிவிடுமாம். குதிரையென்றால் அசுரவேகத்தில் பறக்க வேண்டுமென்பதால் 'க்' மிஸ்ஸிங்.
கேரக்டர் எஸ்டாப்ளிஷ்மெண்ட் தான் பாலகுமாரனின் பலம். நாயக்கர், முதலியார், ராவுத்தர், காந்திலால், விஸ்வநாதன், தாரிணி, கவுசல்யா, வசந்தா, செல்லதம்பி, கரீம்பாய், வடிவேலு, நாணு அய்யர், காயத்ரி என்று ஏகப்பட்ட கேரக்டர்களை சரம் சரமாக இரும்புகுதிரைகளில் தொங்கவிட்டிருப்பார். ஒவ்வொரு கேரக்டரையும் சிற்பியின் நுணுக்கத்தோடு பேனாவால் செதுக்கு செதுக்கென்று செதுக்கியிருப்பார். விஸ்வநாதன் கேரக்டர் தான் பாலகுமாரன் என்பதை ஒரு சில அத்தியாயங்களிலேயே உணர்ந்துவிட முடியும்.
மனிதர் டாஃபேயில் இருந்தபோது நேர்ந்த அனுபவங்களை இரும்பு குதிரைகளாக ஓடவிட்டிருப்பார். லாரியும், லாரியை சார்ந்த மனிதர்களும், சம்பவங்களும் தான் கதை. இது கல்கியில் தொடராக வந்தது என்று அப்பா ஒருமுறை சொல்லியிருந்ததாக நினைவு. ஒரு தொடருக்குரிய அம்சங்கள், தொடரும் போடும்போது வைக்கவேண்டிய குட்டி சஸ்பென்ஸ் எதுவுமே இரும்பு குதிரைகளில் இல்லை. தொடர்கதை என்று சொல்ல இதில் தொடர்ச்சியான கதை கூட கிடையாது. ஒட்டுமொத்த சம்பவங்களின் தொகுப்பு. கிட்டத்தட்ட சாருவின் ராஸலீலா மாதிரி.
விஸ்வநாதன் கேரக்டரை ரொம்ப புனிதனாக காட்டியிருப்பார். விஸ்வநாதனுக்கு கிடைத்தமாதிரியான வாய்ப்புகள் கிடைத்தால் நான் கூட அயோக்கியனாகி விடுவேன். பாலியல் சேவகரான வசந்தாவோடு ஓரிரவில் பேசிக்கொண்டேயிருப்பார். நெற்றியில் லேசாக முத்தமிடுவார். 'இந்த குழந்தை வாழ்வில் எல்லா வளமும் பெறவேண்டும்' என்று இறையை வேண்டுவார். அடிக்கடி குதிரை கவிதை எழுதுவார். 'பனிவிழும் மலர்வனம்' பாட்டை முணுமுணுத்துக் கொண்டேயிருப்பார். அலுவலகத்தில் நல்ல அதிகாரி. யோசித்துப் பார்த்தால் ஆர்ட்ஃபிலிம் ஹீரோ மாதிரியான கேரக்டர்.
நாவலில் அடிக்கடி வரும் குதிரைகவிதைகளை முதல்தடவை படித்தபோதே பொருள்புரியாமல் நொந்துவிட்டேன். அது மரபுக்கவிதையா, புதுக்கவிதையா என்ற குழப்பம் வேறு. இம்முறை வாசிக்கும்போது கவனமாக குதிரைக்கவிதைகளை தவிர்த்தே வாசித்தேன். ஒன்றும் கெட்டுப்போகவில்லை. இத்தனைக்கும் குதிரைக்கவிதைகள் இந்நாவலுக்கு மிக மிக அத்தியாவசியமான ஒரு அம்சம்.
ஒரேநாளில் இரண்டு லாரிகளை இழந்துவிடும் ராவுத்தர், லாரித்தொழிலாளர் ஸ்ட்ரைக்கால் நஷ்டமடையும் காந்திலால், பாலியல் சேவகர் வசந்தா, இன்னொரு பாலியல் சேவகர் கவுசல்யா, வடிவேலு என்று எல்லா கேரக்டர்களையுமே லேசாக கோடுபோட்டுக் காட்டாமல் பின்னணிக் கதைகளை நேரில் பார்ப்பதுபோல படம்பிடித்துக் காட்டும் ஆற்றல் அப்போது பாலகுமாரனுக்கு இருந்திருக்கிறது. நாணு அய்யர் எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம். அவரிடம் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். அவளது இரண்டாவது மகள் காயத்ரி அவருடைய ஜெராக்ஸ். கல்யாணம் வேணாம், எனக்கு குழந்தை மட்டும் குடு என்று விஸ்வநாதனை தைரியமாக கேட்பவள். மகளுடைய ஆசை நியாயமானதுதான் என்று நாணு அய்யரும் ஒத்துக்கொள்கிறார். பாலச்சந்தர் ஏன் இந்த கேரக்டர்களை சினிமாவில் கொண்டுவராமல் விட்டுவைத்தார் என்று தெரியவில்லை.
லாரி தொழிலின் தொழில்நுணுக்கங்களை எளிமையாக எழுதியிருப்பார். ஒரு லாரித் தொழிலாளி கூட இவ்வளவு நுணுக்கமாக எழுதியிருக்கமுடியுமா என்பது சந்தேகம். பெரிய ஆராய்ச்சிக்குப் பிறகே இவ்வளவு நேர்த்தியைக் கொண்டுவந்திருக்க முடியும். இவ்விஷயத்தில் பாலகுமாரனின் உழைப்பு கொண்டாடப்பட வேண்டியது.
இரும்பு குதிரைகள் - வாசிப்பை நேசிப்பவர்களுக்கு எக்ஸ்பிரஸ்.

1 கருத்து: