10 நவம்பர், 2008

காதை மட்டும் கொண்டாங்க!

இரட்டை கும்மிப்பதிவர்கள் இருவரையும் அடிக்கடி பெரியார் திடல் பக்கம் பார்க்க முடிகிறதாம். அமாவாசைக்கும் அப்துல்காதர்களுக்கும் என்ன சம்பந்தம்? நாளைய வெற்றியை சரித்திரம் சொல்லும்... * - * - * - * - * - * - * - * - * - * - * அவர் பிரபல செய்தியாளர். அவ்வப்போது வலைப்பதிவும் செய்கிறார். எங்கு செல்ல வேண்டுமானாலும் அலுவலக மகிழுந்து தயாராக இருந்தாலும், ஒரு இருசக்கர வாகனம் வைத்திருக்கிறார். "PRESS" என்று வண்டிகளில் ஸ்டிக்கர் ஒட்டியவர்கள் யாரும் சென்னையில் ஹெல்மெட் அணிவதில்லை. இருந்தாலும் நம்ம ஆளு கவசகுண்டலத்தோடு கர்ணனைப் போல எப்போதும் ஹெல்மெட் அணிந்தே காட்சியளிக்கிறாராம். வண்டி ஓட்டும் நேரம் தவிர்த்தும் கூட மற்ற எல்லா நேரமும், பாத்ரூமுக்கு போகும்போதும் கூட ஹெல்மெட்டோடே எச்சரிக்கையாக செல்கிறாராம். ”சிக்னல்ல ஹெல்மெட் இல்லாம போறவங்களை கமிஷனர் ஆபிஸ்லே இருந்துக்கிட்டே மானிட்டர்லே பார்க்குறாங்க. வேலை விஷயமா அங்கே போறப்போ நீங்கள்லாம் கூடவா சார்னு கேட்குறாங்க. அதுனாலே தான்” என்று ஹெல்மெட்டுக்குள் இருந்து காரணம் சொல்கிறார். மனிதர் எப்போதும் ஹெல்மெட்டுக்குள் தலையை கொடுத்து விடுவதால் அவரது கைப்பேசிக்கு ஒரு ரூபாய் போனில் இருந்து முயற்சி செய்யும் அப்பாவி புதுப்பதிவர்கள் லைன் கிடைக்காமல் கடுப்பாகி டாஸ்மாக்குக்கு செல்லும் போக்கு அதிகரித்து வருகிறது. சிங்காரி சரக்கு.. நல்ல சரக்கு.. * - * - * - * - * - * - * - * - * - * - * ஆசை ஆசையாக சினிமா ஃபீல்டுக்கு வந்த வலைப்பதிவர் அவர். சீனியர் போஸ்டில் இருப்பதால் தினம் தினம் மொக்கைப்படங்களாக ஓசியில் பார்த்து சினிமாவையே வெறுத்துவிட்டாராம். பதவியை ராஜினாமா செய்யும் மூடில் இருக்கிறாராம். கமல் ரசிகரான அவரின் அடுத்த அவதாரம் பத்திரிகையாளர் அவதாரமாக இருக்கக்கூடுமாம். புத்தாண்டில் புது அவதாரம் என்று காதைக்கடிக்கிறது அவருக்கு நெருக்கமான ஒரு சிட்டுக்குருவி. சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து... * - * - * - * - * - * - * - * - * - * - * பெண் பெயரில் ஆ(சா)பாசமாக களமிறங்கி பல 'பெருசு' பதிவர்களிடம் காதல் கடிதம் பெற்றவர் அந்தப் பதிவர். பிரம்மச்சாரி வேடம் அலுத்துவிட்டதாம். அடுத்தாண்டு ஆரம்பத்தில் மாமன் மகளை கைப்பிடிப்பார் என்று மருதமலையில் பேசிக்கொள்கிறார்கள். முன்னோட்டமாக 'தனி வீடு கூட பார்த்தாச்சு' என்று சரவணா ஸ்டோரில் அவர் ஷாப்பிங் செய்துக் கொண்டிருந்தபோது சந்தித்த பதிவர் ஒருவரிடம் கிசுகிசுத்திருக்கிறார். ரகசியம் பரமரகசியம்! * - * - * - * - * - * - * - * - * - * - * வயது நாற்பதை நெருங்கினாலும் அஜித் கலரில், ஜே.கே.ரித்தீஷ் தோற்றத்தில் ‘நச்'சென்றிருக்கும் பதிவர் அவர். அவரை நாயகனாக்கி ஒரு படம் இயக்க இரட்டை இயக்குனர்கள் கதை தயார் செய்துக் கொண்டிருக்கிறார்களாம். குறைந்தபட்சம் ஒரு ‘மேட்டர்' படத்திலாவது அப்பதிவரை நாயகனாக்கி பார்க்க இரட்டை இயக்குனர்கள் தொடர் குண்டுவெடிப்பு தீவிரத்தோடு அலைகிறார்கள். தயாரிப்பாளர் தான் இதுவரை மாட்டவில்லை. பேசாமல் நாயகனையே தயாரிப்பாளராக்கி ‘அஜால் குஜால்' படத்தை அவசரமாக முடித்து ரிலீஸ் செய்துவிட திட்டம் தீட்டியிருக்கிறார்களாம். சிம்மா.. நரசிம்மா.... * - * - * - * - * - * - * - * - * - * - * பதிவர் சந்திப்புகளில் மட்டும் முன்பெல்லாம் கலந்துகொண்டவர் அவர். அவருக்கென்று ஒரு வலைப்பதிவு கூட இருப்பதாக தெரியவில்லை. வெறுமனே வாசகர் என்று சொல்லிக் கொள்வார். குறிப்பாக 'மூத்த' வலைப்பதிவர் கலந்துகொள்ளும் கூட்டங்களில் கண்டிப்பாக ஆஜராவார். கடந்த ஒரு வருடமாக ஆளைக் காணவில்லை என்று தேடிக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் பார்த்தாலாவது அருகில் இருக்கும் காவல்நிலையத்துக்கு தெரியப்படுத்துங்கள். பூபாளம் இசைக்கும்.... * - * - * - * - * - * - * - * - * - * - * இரண்டாண்டுகளுக்கு முன்பாக பலமான ‘திராவக' சிந்தனையோடு களமிறங்கிய பதிவர். அடித்து ஆடுவதில் வல்லவர். இடையில் குடும்பம், குழந்தை, குட்டி, வேலை என்று பிஸியாகிவிட்டதால் வலைப்பதிவுக்கு நீண்ட லீவ் விட்டிருந்தார். இப்போது அழகிகள் நிறைந்த அயல்நாட்டில் பணியாற்றுபவருக்கு சமையல் வேலையெல்லாம் முடித்தபினி நிறைய நேரம் மிச்சமிருக்கிறதாம். மீண்டும் வலைப்பதிய தொடங்கியிருக்கிறார். மெதுவாக டொக்கு வைத்து ஆடிக்கொண்டிருப்பவர் சந்தர்ப்பம் கிடைத்ததுமே பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக விளாச ஆரம்பிப்பாராம். முன்பெல்லாம் பார்ட்னர்ஷிப்பில் அசத்திக் கொண்டிருந்தவர் இந்த முறை தனியாகவே கொளுத்து கொளுத்துவென்று கொளுத்த திட்டமிட்டிருக்கிறார். ஆடுங்கடா என்னை சுத்தி... * - * - * - * - * - * - * - * - * - * - * மொழிவாசனைக்குப் பிறகு பதிவர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் திரட்டி அது. மொழிவாசனை கொஞ்சநாட்களாக அடிக்கடி காய்ச்சல் வந்து படுத்துக் கொள்வதால் இத்திரட்டிக்கு நாளுக்கு நாள் ஹிட்ஸ் டபுள் ஆகிறதாம். வெற்றி தந்த உற்சாகத்தில் இருக்கும் திரட்டியின் உரிமையாளர் அடுத்ததாக ஆங்கிலத்தில் வலைப்பதியும் தமிழர்களுக்கான திரட்டி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் மும்முரமாக இருக்கிறாராம். வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக