11 நவம்பர், 2008
யுவதா!
தெலுங்கில் அடிதடி, மசாலா, அஜால் குஜால் காலக்கட்டங்களை எல்லாம் தாண்டி காமெடிக்கு வந்துவிட்டார்கள் போலிருக்கிறது. சமீபத்தில் பார்த்த 'யுவதா'வும் காமெடி மசாலா. காமெடி என்று இறங்கிவிட்டால் லாஜிக்கெல்லாம் பார்த்தால் வேலைக்கு ஆகுமா? ஊரில் மாமா வீட்டில் இருந்து சிட்டிக்கு வரும் ஹீரோ பாபு. மகிழ்ச்சி, கொண்டாட்டம், கும்மாளம் - இதைத்தவிர அவனுக்கு வேறெதுவுமே தெரியாது. நட்புக்காக உயிரையும் கொடுப்பான். சிட்டியில் பட வாய்ப்பு தேடும் ஒரு அசிஸ்டண்ட் டைரக்டர், காதலியை கைப்பிடிப்பதற்காகவே அமெரிக்காவுக்கு போக முயற்சிக்கும் ஒரு சாஃப்ட்வேர் என்ஜினியர், வங்கிப் பணத்தை பாதுகாக்கும் ஒரு செக்யூரிட்டி ஆபிஸர் என்று அவனுக்கு மூன்று நண்பர்கள். நண்பர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதே பாபுவின் வேலை. இடையில் எகனை மொகனை போன் கால் ஒன்றில் பேபி என்ற ஒரு அழகான காதலியும் பாபுவுக்கு கிடைக்கிறாள். மகிழ்ச்சியாக பயணப்படும் திரைக்கதையில் திடீரென்று ஒரு ஜெர்க் அடித்து அடிதடியை நுழைத்து படத்தை த்ரில்லர் ஆக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர். நண்பனின் உயிரைக் காக்க ஒரு வட்டிக்கார வில்லனிடம் மாட்டிக்கொள்ளும் மற்ற நண்பர்கள், வங்கியை கொள்ளையடிக்க முயற்சித்து, யாரோ அடித்த இருபது கோடி கொள்ளைக்காக ஜெயிலுக்குப் போகிறார்கள். அதன் பின்னர் வரிசையாக தடாலடியாக இறக்கிவிடப்படும் கொடூர வில்லன்கள் ஒவ்வொருத்தராக காமெடியன்களாகி விட இறுதியில் ஒரிஜினல் வில்லன் ஜெயிலுக்குப் போகிறார். நண்பர்கள் மகிழ்ச்சியோடு தொடர்கிறார்கள். நட்பு தான் பெஸ்ட்டு என்று அழுத்தமாக சொல்கிறார் இயக்குனர். இடைவேளைக்கு முன்பு வேறுபடம், இடைவேளைக்குப் பின்பு வேறுபடம் என்று சந்தேகம் கொள்ளத்தக்க வகையில் காட்சியமைப்புகள். நல்லவேளையாக ஹீரோ, ஹீரோயின் போன்றவர்கள் மாறாமல் இருப்பதால் ஒரே படம் தான் என்று நம்பமுடிகிறது. ஹீரோ நிகில் செம அசத்து அசத்தியிருக்கிறார். உங்கள் வீட்டருகில் பஸ் ஸ்டேண்டு பக்கத்தில் பொட்டிக்கடை இருந்தால் அங்கே யாராவது ஒரு பையனை அடிக்கடி பார்த்திருப்பீர்களே? அதுபோன்ற ஒரு சராசரி தோற்றம். தமிழில் மொழிமாற்றம் செய்தால் தனுஷ் நச்சென்று செட் ஆவார். சராசரித் தோற்றத்துக்கு அசாதாரண அழகியான அக்ஷா ஹீரோயின் -பாடல்களில் தாராளம். ரியாக்ஷன்களில் சிக்கனம். அடுத்தடுத்த தொடர்ச்சியான காட்சிகளாலேயே படத்தை நகர்த்திக் கொண்டு செல்வது அபாரம். தேவையில்லாமல் திணிக்கப்பட்ட சண்டைக்காட்சியோ என்று எண்ணும்போது, அந்த சண்டைக்காட்சியே கதையின் திருப்பத்துக்கு மூலகாரணமாக அமைகிறது. ஹாஸ்பிட்டலில் நடப்பதாக சொல்லப்படும் ஆள்மாறாட்டம் காதுல பூ! இரண்டு ஜோடி காதலர்கள் இருந்தாலே சாங்குகளாக போட்டு சாவடிப்பார்கள் தெலுங்கு இயக்குனர்கள். இந்தப் படத்தின் இயக்குனர் கவனமாக சதையை தவிர்த்து கதைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். அறிமுக இயக்குனர், அவ்வளவாக அறிமுகமில்லாத கதாநாயகன் என்றாலும் கதை, திரைக்கதை, நகைச்சுவைக்காக குடும்பத்தோடு காணலாம். யுவதா - யூத்துடா!!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக