14 நவம்பர், 2008

வாரணம் ஆயிரம்

இயக்கம் - கேமிரா - நடிப்பு - இசை மற்ற தொழில்நுட்ப இத்யாதிகள் என்று ஒரு திரைப்படத்துக்கு சிறப்பு சேர்க்கும் எல்லா காரணிகளுமே மிக சிறப்பாக அமைந்திருப்பது வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் சிறப்பு. ஆனால் இந்தியத் திரைப்படம் ஒன்றுக்கு அடிப்படைக் கட்டமைப்பை ஏற்படுத்தும் கதை என்ற ஒன்று இல்லாததால் திருவிழாவில் தொலைந்த குழந்தை மாதிரி படம் எங்கெங்கோ அலைபாய்கிறது. அப்பாவின் கல்லூரி காதலில் ஆரம்பித்து அவரது இறுதி மூச்சு வரைக்கான கதை என்று எடுத்துக் கொண்டாலும் இதில் மகன் வளர்வது, காதலிப்பது, மேட்டர் முடிப்பது, தண்ணியடிப்பது, டோபு அடிப்பது மாதிரியான கருமங்கள் எதற்காக? மகனின் பார்வையில் அப்பா என்ற கான்செப்டை எடுத்துக் கொண்டாலும் அப்பாவுக்கு நேரடி தொடர்பில்லாத மகனின் அந்தரங்கம் காட்சியாக்கப்பட்டிருப்பது எல்லாம் அனாவசியம். சுவாரஸ்யம் குறைவான ஒருவரின் வாழ்க்கை வரைபடம் இத்திரைப்படம். அனேகமாக இயக்குனர் கவுதமின் சொந்தக்கதையாக இருக்கலாம். மகன் சூர்யாவின் காஸ்ட்யூம், ஹேர்ஸ்டைல் அனைத்திலும் அச்சு அசலாக கவுதம் வாசுதேவ் மேனன். இயக்குனருக்கு சினிமா சென்ஸ் ரொம்பவும் அதிகம். தனித்தனி காட்சிகளாக பார்த்தால் காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டிருப்பது புலப்படும். ஆனால் ஒட்டுமொத்தமாக மூன்றுமணி நேரம் பொறுமையாக அமர்ந்து பார்க்கும்போது கொட்டாவிதான் வருகிறது. சாரி கவுதம், பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம். சூர்யாவுக்கு இப்படம் ஒரு மைல்கல். இப்படத்துக்கு அவர் செலவழித்திருக்கும் உழைப்பையும், சிரத்தையையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். அப்பா கேரக்டருக்கு ரகுவரன்; மகன் கேரக்டருக்கு கமல்ஹாசன் ஆகியோரின் உடல்மொழியை அப்பட்டமாக பின்பற்றுகிறார். இயக்குனர் கமல்ரசிகர் என்பது பல காட்சிகளில் வெளிப்படுகிறது. டீனேஜ் சூர்யா பைலட்டில் பார்க்கும் படம் ‘சத்யா'. அப்பா, மகன் இரண்டு கேரக்டரையும் சூர்யாவே எடுத்து நடித்தது ஏன் என்பதை அவராலும், இயக்குனராலும் ஜஸ்டிஃபை செய்யவே முடியாது. வேறொரு நடிகரை அப்பாவாக நடிக்க வைத்திருந்தால் தயாரிப்புச் செலவாவது குறைந்திருக்கும். ஆயினும் தசாவதாரத்தை மிஞ்சிய தொழில்நுட்ப சாத்தியங்கள் சில இரட்டை வேடம் என்பதால் இப்படத்தில் சாத்தியப்பட்டிருக்கிறது. துரதிருஷ்டவசமாக சராசரி சினிமா ரசிகன் அவற்றையெல்லாம் கண்டுகொள்ளப் போவதில்லை. வானில் ஹெலிகாப்டரில் மேஜர் சூர்யா பறக்கிறார் என்றால் அதை வானிலேயே சென்று படமாக்கும் மிஸ்டர் பர்ஃபெக்ட் இயக்குனர். அந்த ராணுவகாட்சிகளுக்கான டோன் அபாரம். திருட்டு டிவிடியில் படம் பார்ப்பவர்கள் திட்டிக் கொண்டே பார்ப்பார்கள். அமெரிக்க காட்சிகளும், பாடல்களும் வாவ். படத்தைப் பாராட்ட ஆயிரம் விஷயங்கள் இருந்தாலும் ஆமையை விட மெதுவாக நகரும் காட்சிகள் ஏற்படுத்தும் கடுப்பின் எல்லைக்கு அளவேயில்லை. இயக்குனருக்கு படத்தை முடிக்க மனமேயில்லாமல் முடித்திருக்கிறார். கொஞ்சம் விட்டால் பத்துமணி நேரத்துக்கு படமெடுத்திருப்பார் போலிருக்கிறது. இறுதிக்காட்சிக்கு இடையே தேவையில்லாமல் நுழைக்கப்பட்ட இராணுவமீட்பு சண்டை சூப்பர் என்றாலும் தேவையே இல்லை. சமீரா ரெட்டி என்ற சப்பை ஃபிகரை எப்படித்தான் சூர்யாவுக்கு ஜோடியாக சேர்த்தார்களோ? காதலை சொல்லும் கட்டத்தில் பூ மாதிரி முகத்தை மலரவைக்க வேண்டாமா? ரியாக்‌ஷன் காட்டுவதில் கஞ்சத்தனம். நல்லவேளையாக இடைவேளைக்குப் பிறகு குத்து ரம்யா (எ) திவ்யாவின் எண்ட்ரி வருவதால் கொஞ்சம் மூச்சுவிட முடிகிறது. மைசூர் சந்தனக்கட்டை மாதிரி மஜாவான ஃபிகர். ப்ளூ சுரிதாரில் பெட்டில் படுத்துக்கொண்டு சூர்யாவோடு பேசும் காட்சியில் காமிரா ஆங்கிளும், திவ்யாவின் பாடி ஆங்கிளும் பார்ப்பது தமிழ்படமா? ஆங்கிலப் படமா என்ற சந்தேகத்தை தருகிறது. ரெண்டு மூன்று கிளுகிளுப்பு காட்சிகளை சேர்த்திருந்தால் கொஞ்சம் திருப்தியாக படம் முடியும்போது ஃபீல் செய்திருக்கலாம். சிம்ரன் இளமையாக தோன்றும் காட்சிகள் நிறைவு. வயதான கெட்டப் மோசமென்றாலும், நடிப்பில் சோடைபோகவில்லை. கிராபிக்ஸில் பழைய சென்ட்ரல், அந்நாளைய ஸ்பென்ஸர் பிளாஸா ஆகியவற்றை பாடலில் சாத்தியமாக்கியிருக்கிறார் இயக்குனர். ஆனால் 60களில் இவை இப்படி இருந்திருக்குமா என்பது சந்தேகம். 1920களில் சென்ட்ரலும், ஸ்பென்சரும் இருந்த தோற்றங்கள் அவை. நிறைய இடங்களில் லாஜிக் இடிக்கிறது, மேஜிக்கும் இருக்கிறது. சராசரி தமிழ் சினிமா ரசிகனால் பார்க்கவே முடியாத படமிது. தெலுங்கிலும் டப் செய்திருக்கிறார்களாம், அங்கே திரையை ரசிகர்கள் கிழிக்காமல் இருந்தால் ஆச்சரியப்படலாம். வாரணம் ஆயிரம் - வயிற்றுவலி தரும் சூரணம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக