4 நவம்பர், 2008
சிந்தக்கைலா ரவி!
தெலுங்கில் கூட இதுமாதிரி படம் வருமா என்பது ஆச்சரியம். குத்துப்பாட்டு இல்லாமல், இரத்தம் தெறிக்கும் ஆக்சன் இல்லாமல் ஒரு ரொமாண்டிக் லவ் ஸ்டோரி. சில ஆண்டுகளுக்கு முன் தேசிக்களை (என்.ஆர்.ஐ) கவரும் வகையில் ஷாருக்கான் படங்கள் வரிசையாக வந்துகொண்டிருந்தது. தெலுங்கு என்.ஆர்.ஐ.க்களை குறிவைத்து வந்திருக்கும் சிந்தக்கைலா ரவி அமெரிக்காவில் மட்டுமன்றி இந்தியாவிலும் சூப்பர் ஹிட். ஏகப்பட்ட இந்திப்படங்களை கலந்து காக்டெயில் அடித்திருக்கிறார்கள். சிந்தக்கைலா ரவி என்பது ஒரு பெயர். செந்தழல் ரவி மாதிரி. நம்ம செந்தழல் ரவியை பார்த்து தான் இந்த கேரக்டரையே டைரக்டர் உருவாக்கியிருப்பாரோ என்ற அளவுக்கு சிந்தக்கைலாவுக்கும், செந்தழலுக்கும் அவ்வளவு ஒற்றுமை. நியூயார்க்கில் இருக்கும் சைபர் வேவ் என்ற பாரில் சீஃப் பார் டெண்டராக சிந்தக்கைலா ரவி (வெங்கடேஷ்) பணிபுரிகிறார். அவரது அப்பா கடன் வாங்கி சாப்ட்வேர் படிக்க அமெரிக்காவுக்கு ரவியை அனுப்பி வைக்கிறார். தவிர்க்க இயலாத ஒரு சம்பவத்தால் மனிதநேயம் கொண்ட ரவி அப்பணத்தை ஒரு உயிரைக் காப்பாற்ற செலவழித்து விடுகிறார். பணமில்லாததால் பாரில் பார் டெண்டராக பணிபுரிகிறார். ஊரைப் பொறுத்தவரை அவர் அமெரிக்காவில் பில்கேட்ஸே மதிக்கும் பெரிய சாப்ட்வேர் என்ஜினியர். இவரது அம்மா சேஷாம்பாள் (லட்சுமி) தன் மகன் சாப்ட்வேர் என்ஜினியர் என்று பந்தா விட்டு பெரிய இடத்து பெண்களாக தன் மகனுக்கு தேடிக்கொண்டிருக்கிறார். தான் பாரில் பணிபுரிவதாக தெரிந்தால் அம்மா உயிரையே விட்டுவிடுவார் என்பதால் தனது பொய்முகத்தை தொடர்கிறார் ரவி. பெரிய வீட்டுப் பெண்ணான லாவண்யாவை (மம்தா) ரவிக்கு பெண்பார்க்கிறார் சேஷாம்பாள். லாவண்யா அமெரிக்காவில் இருக்கும் தன் நண்பி சுனிதா (அனுஷ்கா) மூலமாக மணமகனைப் பற்றி விசாரிக்கிறாள். சில பல குழப்பங்களுக்கு பிறகு ரவி ஒரு பார்டெண்டர் என்று தெரிந்து கல்யாணம் நின்றுவிட இடைவேளை. இடைவேளைக்குப் பிறகு தன் திருமணத்தை நிறுத்தும் சுனிதாவை துரத்தி துரத்தி கலாய்க்கிறார் ரவி. சுனிதாவை பார்க்க வரும் மாப்பிள்ளைகளை பொய்சொல்லி விரட்டியடிக்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் ரவியின் மனிதாபிமானமும், நல்ல குணங்களையும் உணரும் சுனிதா ரவியை காதலிக்கிறாள். ரவிக்கும் அவள் மீது ஈர்ப்பு வந்துவிடுகிறது. இதே நேரத்தில் ஊரில் இருக்கும் லாவண்யா குடும்பத்துக்கு ரவியைப் பற்றிய உண்மையான விவரங்கள் தெரிகிறது. ஒரு உயிரைக் காப்பாற்றிய அவரது மனிதாபிமானம் அவர்களை கவர மீண்டும் ரவி - லாவண்யா திருமணம் ரவியின் அம்மா ஏற்பாட்டில் நடைபெறுகிறது. லாவண்யா ரவியை காதலிக்க, ரவி சுனிதாவையும், சுனிதா ரவியையும் காதலிக்க குழப்ப முடிச்சுகளை அழகாக க்ளைமேக்ஸில் அவிழ்க்கிறார் இயக்குனர். படம் முழுக்க நொடிக்கொரு முறை சிரிக்க வைக்கிறார்கள். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தமாதிரியே வெங்கடேஷ் இன்னமும் இளமையாக இருக்கிறார். "சுனிதா எம்.பி.ஏ., நேனோ பி.ஏ.ன்னியே மூடு முறை தெங்.." என்று வெங்கடேஷ் நிறுத்தும் போது தியேட்டர் அதிர்கிறது. ஆங்காங்கே லைட்டாக இதுபோல இரட்டை நெடி காமெடிகள் தூவப்பட்டிருந்தாலும் ரசிக்க வைக்கிறது. வெங்கடேஷும், அனுஷ்காவும் கணவன் மனைவியாக நடிக்கும் காட்சி ஹம் தும்மில் பார்த்தமாதிரி ஞாபகம். அந்த ஒரு நிமிட காட்சியின் இறுதியில் இருவருக்கும் மவுனமாக காதல் பூப்பது அழகு. க்ளைமேக்ஸ் காட்சிகள் ஹம் ஆப்கே ஹைன் கோன்-ஐ நினைவுபடுத்துகிறது. இரட்டை கதாநாயகிகள் மம்தா - அனுஷ்கா என்று தீபாவளி டபுள் ஷாட். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நிறைவான ஒரு தெலுங்குப் படம்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக