
வால்மீகி படவிழாவில் இளையராஜா பேசியதை கேட்டு எனக்கும் முதலில் அதிர்ச்சியாக இருந்தது. யாரையும் இவ்வளவு விட்டேத்தியாக மேடையில் அவர் பேசியதாக நினைவில்லை. சில மேடைகளில் சூடாகியிருக்கிறார். ஆனாலும் தனிப்பட்ட முறையில் பெயரையெல்லாம் சொல்லித் திட்டியதில்லை.
மிஷ்கினைப் பற்றி பெரிய அபிப்பிராயம் எதுவும் எனக்கு கிடையாது. அவரது முதல் படம் மற்றவர்கள் சொல்லுமளவுக்கு ஆஹா, ஓஹோவென்றெல்லாம் எனக்கு படவில்லை. ’வாளமீனுக்கும்’ பாட்டால் தப்பித்தது. இரண்டாவது படமும் சுமார்தான். ஆனாலும் அவரது பேட்டிகளைப் பார்த்தால் ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் மாதிரி பேசுவார்.
கிட்டத்தட்ட தொண்ணூறு சதவிகிதம் யோகியாக மாறிவிட்ட இளையராஜா அவர் மீது கோபப்பட என்னதான் காரணம் இருக்கமுடியும்?
மிஷ்கினின் நந்தலாலா படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். இப்படம் பற்றி பேசும்போதெல்லாம் இளையராஜாவைப் பற்றி தவறாமல் சொல்லிவந்தார் மிஷ்கின். சிலநாட்களாக இளையராஜாவின் பெயரை அவர் உச்சரிக்காதது போல தெரிந்தது. ஏதோ புகைச்சல் என்று அப்போதே யூகிக்க முடிந்தது. விசாரித்துப் பார்த்தால் இளையராஜாவை வற்புறுத்தி ஐந்து பாடல்கள் கேட்டு வாங்கியவர் படத்தில் இரண்டு பாடல்களை மட்டுமே பயன்படுத்திக் கொண்டதாக சொல்கிறார்கள். அதுகூட இயக்குனரின் சுதந்திரம்.
இருப்பினும் இளையராஜாவுக்கு தெரியாமலேயே ‘ஏலிலோ’ என்ற நரிக்குறவப் பாடல் ஒன்றினை படத்தில் மிஷ்கின் சேர்த்ததாக சொல்கிறார்கள். அதாவது அப்படத்தின் இசையமைப்பாளருக்கு தெரியாமலேயே ரெகார்டிங் ஸ்டுடியோவில் ஒரு சவுண்ட் என்ஜினியரின் உதவியோடு இப்பாடல் ரெக்கார்ட் செய்யப்பட்டதாம். இப்படி ஒரு பாடல் படத்தில் இருப்பதையே அப்படத்தின் இசையமைப்பாளர் யாரோ சொல்லி கேள்விப்படுவது கொடுமைதானே?
‘வால்மீகி’ இசைமேடையில் மிஷ்கினை பார்த்ததுமே இளையராஜா பொங்கிவிட்டதின் பின்னணி இதுதான் என்று சினிமா நண்பர்கள் சொல்கிறார்கள்.
இளையராஜா இதுபோல தொழிற்முறை சர்ச்சைகளில் அடிபடுவது இது முதல்முறையல்ல. ‘அஞ்சலி’ திரைப்படத்தின் நூறாவது நாள் விழாவின் போது இளையராஜாவின் கால்களில் திரையுலக முக்கியஸ்தர்கள் விழுந்து ஆசிப்பெற்றார்களாம். அக்காலக் கட்டத்தில் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த ராஜ்கிரண் போன்றோர் அம்மாவின் காலில் விழும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மாதிரி இளையராஜாவைக் கண்டதுமே காலில் ‘தொப்பென்று’ விழுவது வழக்கம்.
அதே மேடையில் வீற்றிருந்த தமிழ் சினிமாவின் உச்சத்துக்கு அது உறுத்தியதாம். உச்சமும், இளையராஜாவும் அடுத்தப் படத்தில் இணைந்திருந்தார்கள். அப்படத்திலும் இளையராஜாவின் கொடி உச்சத்தின் புகழைவிடவும் அதிகமாக பறந்தது. தமிழின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக இன்றளவும் பட்டியலிடப்படும் அப்படத்தின் இயக்கம், நடிப்பினையும் தாண்டி இளையராஜாவின் இசை சிரஞ்சீவியாக வாழுவதற்கு இன்றும் பி.பி.சி.யின் உலகளவில் பிரபலமான பாடல்கள் பட்டியலே சாட்சி. அதன்பின்னரே இளையராஜா குறிவைத்து முதுகில் குத்தப்பட்டதாக சொல்வார்கள்.
இளையராஜாவிடமும் குறை இருக்கிறது. அவரது கர்வம் மற்றவர்களிடமிருந்து அவரை தனிமைப்படுத்தியிருக்கிறது. மற்றவர்களுக்கும் கர்வம் உண்டு. ஆனால் வெளிப்படையாகக் காட்டிக்கொள்வதில்லை. கவிப்பேரரசு வைரமுத்துவின் ‘இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்’ நூலை நீங்கள் வாசித்திருக்கலாம். அந்நூலில் இளையராஜா குறித்த கவிஞரின் கருத்துகள் மிக முக்கியமானவை. அவற்றை இளையராஜா ஏற்றுக் கொள்கிறாரோ இல்லையோ, மற்றவர்கள் ஒப்புக்கொள்ளும் வண்ணம் எழுதியிருப்பார் கவிஞர்.
இளையராஜா தனது கர்வத்தையும், போராட்டக் குணத்தையும் காட்ட வேண்டிய நேரத்தில் காட்டாததே அவரது பின்னடைவுக்கு காரணமாக அமைந்தது என்பதையும் மறுக்கமுடியாது. திருவண்ணாமலை கோவில் கும்பாபிஷேக விவகாரம் இதற்கு நல்ல சாட்சி. தலித் மக்கள் இளையராஜாவை அம்பேத்கருக்கு இணையாக தங்கள் சுவரொட்டிகளில் வெளிப்படுத்தியப்போது, ‘சாதி அடையாளம் வேண்டாம்’ என்றுகூறி அதைத் தீவிரமாக எதிர்த்தவர் திருவண்ணாமலை கோவில் விவகாரத்தில் மவுனமாக அடங்கியது, அவர்மீதான இமேஜை உடைத்தது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் ‘நவீன பார்ப்பனர்’ என்ற அவர்மீதான சொல்லடிகளுக்குப் பின்னால் நியாயமுண்டு என்றுகூட எண்ணத் தோன்றுகிறது.
‘சிம்பொனி’ சர்ச்சை குறித்து இதுவரை இளையராஜாவிடம் இருந்து தெளிவான பதில் வந்ததே இல்லை. அவர் நிஜமாகவே சிம்பொனிக்கு இசையமைத்தாரா இல்லையா என்பதெல்லாம் பிரச்சினையே இல்லை. அவரது சிம்பொனியை கேட்டுதான் அவரை நேசிக்க வேண்டும் என்ற காரணமெல்லாம் தமிழனுக்கும் இல்லை.
இளையராஜாவின் இசை மட்டுமல்ல, அவரது கர்வத்தையும் சேர்த்தே அவரை ஏனோ எனக்குப் பிடித்திருக்கிறது!