11 மே, 2009

பிரச்சாரம் - யாரு பெஸ்ட்?


தேர்தலில் வாக்குகளை கவருவதில் பிரச்சாரத்துக்கு பிரதான இடமுண்டு. திமுகவின் பிரச்சாரம் பொதுவாக நடுத்தர வர்க்கத்தை குறிவைத்தே நடத்தப்படும். எம்.ஜி.ஆர் தனிக்கட்சி ஆரம்பித்தவுடன் அடித்தட்டு மக்களை அடிப்படையாக கொண்டு பிரச்சாரத்தை நடத்தினார். அடித்தட்டு மக்களுக்கான பிரச்சாரம் தான் எடுபடும் என்பதை தன்னுடைய அறுபதாண்டுக்கால அரசியல் அனுபவத்தில் கடந்த 2006 தேர்தலில் தான் கலைஞர் உணர்ந்தார்.

சிறுவயதில் டி.ராஜேந்தரின் பிரச்சாரத்தை கண்டு அதிசயித்திருக்கிறேன். மேடையில் பேசும்போது விரல் சொடுக்கி பேக்கிரவுண்டு மியூசிக் தந்து ‘லஞ்சம் லஞ்சம் ஊரெல்லாம் லஞ்சம்.. டண்டனக்கா’ என்று பாடுவார். கூட்டம் சொக்கிப்போய் நிற்கும். தீப்பொறி, வண்ணை தேவகி, வெற்றிகொண்டான் வகையறாக்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு லாயக்கில்லை. இதே லிஸ்டில் வைகோவையும் சேர்த்துக் கொள்ளலாம். லோக்கல் பாலிடிக்ஸ் பேசாமல் உலக அரசியலும், ஈழப்போராட்டமும் பேசி பிரச்சாரம் செய்வதில் அர்த்தமேயில்லை. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுகளின் பிரச்சாரம் இதனால் தான் எப்போதும் விழலுக்கு இறைத்த நீராகிறது. இந்திய கம்யூனிஸ்டாவது விவசாயிகள் பிரச்சினை பற்றிப் பேசுகிறது.

கூட்டங்கள் தவிர்த்துப் பார்த்தால் சுவர் விளம்பரங்கள், பிளெக்ஸ் பேனர்கள் போன்றவை சின்னங்களை திரும்ப திரும்ப ஞாபகப்படுத்தும் பிரச்சார சாதனங்கள். தேர்தல் கமிஷனின் கெடுபிடியெல்லாம் நகர எல்லைகளோடு முடிந்துவிடுகிறது. தாம்பரத்தை தாண்டினால் எல்லா வருமே ஏதோ ஒரு கட்சி வண்ணத்தை தாங்கித்தான் ஆகவேண்டியிருக்கிறது.

ஜெ. பிரச்சாரமே செய்யவேண்டியதில்லை. அவர் வந்து நின்றாலே போதும். இம்முறை ஜெ.வின் பிரச்சாரம் புதுமையானது. டெல்லி தலைவர்கள் பாணியில் பிரச்சாரம் செய்திருக்கிறார். இது தமிழ்நாட்டுக்கு புதியது. ஒவ்வொரு தொகுதியில் ஒரு பிரச்சார மாநாடு. தெருத்தெருவாக வேனில் போய் பேசவில்லை. ஹெலிகாப்டரில் பதவிசாக இறங்கி குவிக்கப்பட்ட பிரம்மாண்ட கூட்டத்தைப் பார்த்து ’தனி ஈழம்’ என்று முழங்கினார். போயஸ் கார்டனிலிருந்து ஆவடிக்குப் போகக்கூட, மீனம்பாக்கம் போய் ஹெலிகாஃப்டரில் பயணித்த அம்மான்னா அம்மாதான். ஒவ்வொரு பிரச்சாரக் கூட்டமும் ஒரு மாநிலமாநாட்டுக்கு சமம். இதுபோன்ற கூட்டங்களில் பொதுமக்களின் பங்களிப்பு குறைவு. அக்கட்சி சார்பான ஊடகங்கள் இதை எப்படி பூஸ்ட் செய்து காண்பிக்கிறது என்பது முக்கியம். ஜெயாடிவி அதை சரியாகவே செய்திருக்கிறது. ஆனால் எத்தனை பேர் ஜெயாடிவியை பார்த்திருப்பார்கள்? என்ற கேள்வியை புறந்தள்ளிவிட முடியாது.

கலைஞரின் பிரச்சாரம் மிகக்குறைந்த அளவே இருந்த தேர்தல் இது. திருச்சியில் நல்லக் கூட்டம். சென்னை தீவுத்திடலில் கூடிய கூட்டம் தேசியமுன்னணிக்கு 89ல் கூடிய கூட்டத்தை நினைவுப்படுத்தியது. ஈழவிவகாரத்தில் கலைஞர் மீது திமுக உடன்பிறப்புகளே கடுங்கோபத்தில் இருந்தார்கள். உண்ணாவிரதம், அப்போலோவில் படுத்துக்கொண்டே உரை என்று அடுத்தடுத்து கலைஞர் போட்ட போடு மக்களை கன்வின்ஸ் செய்ததோ இல்லையோ, திமுக உடன்பிறப்புகளை கன்வின்ஸ் செய்திருக்கிறது. என்ன ஆனாலும் சரி. கலைஞர் இருக்கும் வரை உதயசூரியனுக்கே கண்ணை மூடிக்கொண்டு ஓட்டை போட்டுவிட வேண்டியதுதான் என்ற முடிவுக்கு பல உடன்பிறப்புகள் வந்திருக்கிறார்கள்.

திமுகவின் பிரச்சாரம் தளபதி ஸ்டாலினையே இம்முறை நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. சில காலம் முன்பு உடல்நலம் குன்றியிருந்த தளபதி தாங்குவாரா? என்ற கேள்வி திமுகவினருக்கு இருந்தது. கிட்டத்தட்ட 85 சதவிகித தமிழ்நாட்டை வேனிலேயே சுற்றி வந்து ஒரு நாளைக்கு பதினைந்து மணி நேரத்துக்கும் மேலாக தினமும் பிரச்சாரம் செய்து திமுகவின் அடுத்தத் தலைவர் என்ற இமேஜை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் தளபதி. இதுவரை இவர் பாமக தலைவர் மருத்துவர் அய்யாவை இந்த தேர்தலில் சீண்டிய அளவுக்கு முன்னெப்போதும் சீண்டியதில்லை. ‘அரசியல் வியாபாரி’ என்று தளபதி விமர்சித்தது என்னைப் போன்ற திமுகவில் இருக்கும் அய்யா அனுதாபிகளுக்கு கொஞ்சம் அதிருப்தியாக தானிருக்கிறது. ஆனாலும் மக்கள் ரசித்து கைத்தட்டுகிறார்களே? என்ன செய்வது?

தளபதியை விட மிக அதிகமாக இத்தேர்தலில் உழைத்தவர் கேப்டன் விஜயகாந்த். கடந்த சட்டமன்றத் தேர்தலைப் போலவே இம்முறையும் இருபத்தைந்தாயிரத்துக்கும் மேற்பட்ட கிலோ மீட்டர் தூரத்தை எம்.ஜி.ஆரின் பிரச்சார வேனிலேயே பயணித்து சிங்கிள் சிங்கமாய் முரசுக்கு வாக்கு கேட்டு வந்தார். கடந்த முறை தினமலர், விகடன் போன்ற ஊடகங்கள் கைகொடுத்தது. இம்முறை ஊடகங்களின் ஆதரவு பெரியளவில் அவருக்கு இல்லாவிட்டாலும் ஒவ்வொரு ஊருக்கும் நேரில் சென்று வாக்கு கேட்ட அவரது பண்பு அவருக்கு கைகொடுக்கலாம்.

மருத்துவர் அய்யாவின் பிரச்சாரம் இந்த முறை கொஞ்சம் டல் தான். அவருக்கு வயதாகிறது இல்லையா? சின்ன அய்யாவை களமிறக்கியிருக்கிறார். “கொல்லைப்புற வழியா ஏன் வந்தேன்னு உன் தங்கச்சியை கேளு. முப்பது வருஷமா உன் மாமாவைக் கேட்டியா?” என்று தயாநிதி ரேஞ்சில் ஸ்டாலினை ஒத்தைக்கு ஒத்தை அழைத்தது சூப்பர். ஆனாலும் தமிழ்நாடு முழுக்கச் செல்லாமல் குறிப்பிட்ட தொகுதிகளிலில் மட்டும் லைட்டாக உடலை வருத்திக் கொள்ளாமல் பிரச்சாரம் செய்தார். எப்போதுமே கிராமங்களில் திண்ணை பிரச்சாரம் செய்யும் பா.ம.க. இம்முறை மேடைப்பிரச்சாரங்களிலே அதிகக் கவனம் செலுத்தியதாகத் தெரிகிறது.

காங்கிரஸின் பிரச்சாரத்தைப் பற்றி என்ன எழுதுவது? சூரியன் உச்சிக்கு வந்ததுமே பிரச்சாரத்தை முடிச்சுக்கலாமா? என்பார்கள். டெல்லியிலிருந்து யாராவது தலைவர் வந்தால் உடல்நோகாமல் ஒரு கூட்டத்தை நடத்திவிட்டு போதுமென்ற மனதோடு திருப்தியடைந்து விடுவார்கள். கூட்டணிக்கட்சிகள் இல்லாவிட்டால் காங்கிரஸ் பிரச்சார மேட்டரிலும் ஜீரோதான். திருமாவின் பிரச்சார வீச்சு இம்முறை ரொம்பவும் குறைவு. காங்கிரஸ் கூட்டணியில் இருப்பது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

சீமான் - பாரதிராஜா கூட்டம் கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. என் பார்வையில் இந்த கூட்டம் ஒரு பெரிய காமெடியன்கள் கூட்டமாகவே தெரிகிறது. காங்கிரஸுக்கு எதிரான பிரச்சாரம் என்று இவர்கள் நடத்திய கூட்டங்களில் கலந்துகொண்டவர்கள் தொண்ணூறு சதவிகிதம் அதிமுக கூட்டணித் தொண்டர்கள். மீதி பேர் சினிமாக்காரர்களை வேடிக்கை பார்க்க வந்தவர்கள். இவர்கள் பிரச்சாரம் செய்யாமலேயே காங்கிரஸ் தலைவர்கள் தோல்வியடையும் நிலையில் தான் இருக்கிறார்கள். தோற்றதும், எங்களால் தான் தோற்றார்கள் என்று மார்தட்டிக் கொள்ளப் போகிறார்கள்.

பிரச்சாரம் என்ற அடிப்படையில் பார்க்கப் போனால் இந்த முறை அம்மா தான் லீடிங். ஆனால் இத்தேர்தலில் மேடை மற்றும் தெருப்பிரச்சாரத்தைவிட முக்கியமான நவீன பிரச்சார மேட்டர் ஒன்றிருக்கிறது. அரசல் புரசலாக கேள்விப்படுவதில் ஒரு வாக்குக்கு ரூ.200/- என்று தொகுதி தொகுதியாக கட்சிப்பேதமில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. எந்தக் கட்சி முழுமையாக இந்த மேட்டரில் கவரேஜ் செய்கிறதோ அக்கட்சிக்கே ’பிரச்சார’ அனுகூலம் அதிகம். தோராயமாக பத்து லட்சம் வாக்காளர்களை கொண்ட ஒரு தொகுதியில் 100% பிரச்சாரத்தை ஒரு கட்சி முடித்துவிட்டதாக கேள்விப்பட்டதில் மயக்கமே வந்துவிட்டது. அதிகாரப்பூர்வமாக நேற்று மாலையோடு மற்ற பிரச்சாரங்கள் முடிந்துவிட்டாலும் தேர்தல் நாளான நாளை மாலை வரைக்கும் கூட இந்த நவீனப்பிரச்சாரம் நடந்து கொண்டுதானிருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக