30 மே, 2009

கிம்-கி-டுக்!


தான் எடுத்த முதல் படத்தை பத்திரிகையாளர்களுக்கு போட்டு காட்ட விரும்பினார் அந்த இயக்குனர். பத்திரிகையாளர் பலரையும் தானே போன் போட்டு அழைத்தார். மூத்தப் பத்திரிகையாளர்கள் சிலரை நேரில் சென்றும் அழைத்தார். சாமானியத் தோற்றம் கொண்ட அந்த இயக்குனரை ஏனோ பத்திரிகையாளர்கள் அவ்வளவாக மதிக்கவில்லை. பத்திரிகையாளர் காட்சிக்கு வந்தவர்களும் கூட படம் பற்றி சுமாராகவே எழுதினார்கள்.

ஆனால் அதே படம் பூசன் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோது, ‘எங்கள் கிம்-கி-டுக்’ என்று கொரிய பத்திரிகைகள் கொண்டாடின. அந்தப்படம் 1996ல் வெளிவந்த க்ரோகோடைல். சியோலின் ஹான் ஆற்றின் கரையில் வாழும் ஒருவன் தற்கொலைக்கு முயற்சிக்கும் பெண்ணை காப்பாற்றுகிறான். அவளோடு வன்புணர்வு கொள்கிறான். மோசமாக நடத்துகிறான். ஒருக்கட்டத்தில் இருவருக்குமிடையே அன்னியோன்யம் ஏற்படுகிறது. உறவுகளுக்கு இடையேயான முரணை இப்படம் வெகு அழுத்தமாக சுட்டிக் காட்டுகிறது.

கிம்-கி-டுக்-கின் முதல் படத்துக்கு கிடைத்த சர்வதேச வரவேற்பு, அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்புகளை வாரி வழங்கியது. வருடத்துக்கு ஒன்றிரண்டு படங்களை குறைந்த செலவில் தரமாக எடுக்கத் தொடங்கினார். 2000மாவது ஆண்டு வெளிவந்த அவரது திரைப்படமான ’தி ஐல்’ (The Isle) வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட, ஐரோப்பா கிம்-கி-டுக்கை தத்தெடுத்துக் கொண்டது.

யார் இந்த கிம்-கி-டுக்?

1960ல் பிறந்த கிம், ஒன்பது வயதாக இருந்தபோது அவரது குடும்பம் தலைநகர் சியோலுக்கு இடம்பெயர்ந்தது. பதினேழு வயதாக இருக்கும்போது பள்ளிப்படிப்பினை நிறுத்திக் கொண்டவர் ஆலைகளில் பணியாற்றத் தொடங்கினார். அதன்பின்னர் வயிற்றுப் பாட்டுக்காக பல வேலைகளை கிம் செய்யவேண்டியிருந்தது. ஒருக்கட்டத்தில் பாதிரியாராகும் எண்ணத்தில் தேவாலயம் ஒன்றில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார்.

இலக்கின்றி வாழ்ந்தவர் கிம். திடீரென ஒருநாள் அதுவரை தான் சேமித்து வைத்திருந்த மொத்தப் பணத்தையும் எடுத்துக்கொண்டு பிரான்சுக்கு பறந்தார். சிறந்த ஓவியரான கிம் தான் வரைந்திருந்த ஓவியங்களை பாரிஸ் தெருக்களில் பரப்பி விற்பனைக்கு வைத்தார். சொற்ப வருமானம் வந்தது. அதைவைத்து வயிற்றுப்பசியை தீர்த்துக் கொண்டார். இந்த காலக்கட்டத்தில் தான் வாழ்க்கையிலேயே முதன்முதலாக திரையரங்கம் சென்று படம் பார்த்ததாக பின்நாளில் பேட்டியொன்றில் குறிப்பிடுகிறார். சைலன்ஸ் ஆஃப் தி லேம்ப்ஸ் படம் பார்த்தபிறகு தூக்கமின்றி அவதிப்பட்டாராம்.

போன பாராவில் இலக்கின்றி வாழ்ந்தவர் இந்த பாராவில் தனக்கொரு இலக்கினை நிர்ணயித்துக் கொண்டு கொரியாவுக்கு திரும்புகிறார். நாடகங்களுக்கு கதை, வசனம் எழுதினார். ’ஏ பெயிண்டர் அண்ட் க்ரிமினல் கண்டெம்ட் டூ டெத்’ என்ற அவரது படைப்புக்கு 93ஆம் ஆண்டு ’எஜூகேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்க்ரிப்ட் ரைட்டிங்’ நிறுவனத்தின் விருது கிடைத்தது. இதையடுத்து 94ஆம் ஆண்டில் கொரிய தயாரிப்பாளர் கவுன்சிலிடம் ‘டபுள் எக்ஸ்போஷர்’ என்ற படைப்புக்காக மூன்றாவது பரிசும், 95ஆம் ஆண்டில் ’ஜேவாக்கிங்’ என்ற படைப்புக்காக முதல் பரிசும் வென்றார். கிம்-கி-டுக்-குக்கு கொரிய சினிமா கதவினை அகலமாக திறந்து காத்திருந்தது.

’தி ஐல்’ படத்துக்குப் பிறகு ஐரோப்பாவில் ஒரு முக்கியமான படைப்பாளியாக கிம் கருதப்பட்டாலும், அவரது தாய்நிலத்தில் விமர்சகர்கள் கிம்மினை குதறிக் கொண்டிருக்கிறார்கள். அவர் ஒரு விலங்கென்றும், சைக்கோவென்றும், தருதலை படத்தயாரிப்பாளர் என்றும் தூற்றப்பட்டார். பத்திரிகையாளர்கள் நேரடியாகவே தங்கள் பத்திரிகைகளில் இதுபோன்ற வார்த்தைகளில் விமர்சிக்க, “இனி எந்த கொரியப் பத்திரிகையாளனுடனும் பேசப்போவதில்லை” என்று காட்டமாக சபதமெடுத்தார் கிம். வெகுவிரைவிலேயே அந்த சபதத்தை வாபஸும் வாங்கிக் கொண்டார்.

கலைப்பட லெவலுக்கு எடுத்துக் கொண்டிருந்ததால் கொரிய ரசிகர்கள் கிம்மை கண்டுகொள்ளாமலேயே இருந்தார்கள். 2002ல் வெளிவந்த ’பேட் கை’ திரைப்படம் கிம்மையும் கொரியாவின் வசூல்ராஜா ஆக்கியது. வசூலில் வென்ற படம் என்றாலும் தரத்தில் எந்த குறையையும் வைக்கவில்லை கிம். பெர்லின் திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது.

அடுத்தடுத்து வெளியான படங்கள் சர்வதேச அங்கீகாரங்களை வென்று குவித்தாலும், ஏனோ ’பேட் கை’ அளவுக்கு கொரியர்களை கவரவில்லை. சமூகத்தின் விளிம்புநிலை மாந்தர்களின் வாழ்க்கையை யதார்த்தம் குன்றாமல் படமாக்குவது கிம்மின் பாணி. அமெரிக்க மோகத்தில் அலையும் கொரியர்கள் எதிர்பார்க்கும் ஃபேண்டஸி அவரிடம் குறைவு. ’ஸ்ப்ரிங், சம்மர், ஃபால், விண்டர்.. அண்ட் ஸ்ப்ரிங்’ என்ற அவரது திரைப்படம் ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. 2004ஆம் ஆண்டு ’சமாரிடன் கேர்ள்’ திரைப்படம் பெர்லினிலும், ’3-அயன்’ வெனிஸிலும் சிறந்த இயக்கத்துக்கான விருதுகளை அள்ளியது.

மிகக்குறைவான வசனங்களோடு, விஷூவலாகவே படங்களை எடுப்பதை கிம் பாணியாக கொண்டிருக்கிறார். வசனங்கள் குறைவு என்பதாலோ என்னவோ அயல்நாட்டு ரசிகர்களை கிம் மிக சுலபமாக அடைகிறார். சர்வதேசநாடுகளில் கொரியாவின் சிறந்த இயக்குனராக கிம்-கி-டுக் மதிக்கப்பட்டாலும், சொந்தநாட்டில் சர்ச்சைக்குரியவராகவே பார்க்கப்படுகிறார். அடிக்கடி ஏதாவது எடக்குமடக்காக அறிக்கை விட்டு மாட்டிக்கொள்வது கிம்மின் வழக்கம்.

“ஏராளமான சர்வதேச விருதுகளை குவித்ததற்குப் பின்னால் கொரிய ரசிகர்களை சர்வதேச ரசனைக்கு மாற்ற முரட்டுத்தனமாக முயன்றேன். மக்கள் இதற்காக என்னை மன்னிக்க வேண்டும்” - கிம் விடுத்த ஸ்டேட்மெண்டுகளில் ஒன்று இது. கிம் இப்போதும் சொல்கிறார். ”என்னுடைய அடுத்தப்படம் கொரியாவில் திரையிடப்படாவிட்டாலும், எனக்கொன்றும் கவலையில்லை!”

பின்குறிப்பு : உலகப்படங்கள் பற்றியும், உலகப்பட இயக்குனர்கள் பற்றியும் பேச அப்படங்களை பார்த்தவர்களால் மட்டும்தான் எழுதமுடியும், பேசமுடியும் என்ற நிலை இன்றில்லை. தகவல் தொழில்நுட்பப் புரட்சியால் உலகம் சுருங்கிக் கொண்டிருக்கிறது. தகவல்களை பெறுவது இன்றைய தேதியில் டீக்கடைக்கு போய் டீ வாங்கிக் குடிப்பதைப் போல சுலபமானது. உலகப்பட ரசிகர்கள், வெறியர்கள் என்று ஃபிலிம் காட்டிவரும் பலரும் எப்படி எழுதுகிறார்கள் என்ற பரிசோதனையை நானே செய்துப் பார்த்ததின் விளைவுதான் மேற்கண்ட கட்டுரை. நான் கிம்-கி-டுக்-கின் ஒரு படத்தை கூட பார்த்ததில்லை. உலகப்படங்கள் குறித்த அறிமுகத்தை தமிழ்வாசகர்களுக்கு பெருமளவில் தந்துவரும் சாருவின் மூலமாகவே அவர் அறிமுகம். உலகப்படங்களை பார்க்க வேண்டுமென்ற ஆவல் இருந்தாலும் பொறுமையும், சூழலும் அமைவதில்லை.

என்னைப்போன்ற அறிவிலிகளுக்காக சென்னைப்பதிவர்கள் மாதம் ஒரு உலகப்படம் திரையிடும் திட்டத்தை கொண்டுவந்திருக்கிறார்கள். முதல் படமாக கிம்-கி-டுக்கின் ’ஸ்பிரிங், சம்மர், பால், விண்டர்... அண்ட் ஸ்பிரிங்’ திரைப்படம் ஜூன் 7, ஞாயிறு அன்று சரியாக மாலை நான்கு மணிக்கு திரையிடப்படுகிறது. இடம் : ஸ்ரீ பார்வதி ஹால், எல்டாம்ஸ் ரோடு, சென்னை.

மேலும் விபரங்களுக்கு :
பைத்தியக்காரன் அவர்களின் விரிவான பதிவு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக