26 ஜூலை, 2009

கீழைத்தீ - புதினத்தில் மலர்ந்த புரட்சித்தீ!

தோழர் பாட்டாளியின் எழுத்துளியால் செதுக்கப்பட்ட கீழைத்தீ புதினம் கம்பீரமான சிற்பமாக கருத்தை கவருகிறது. ஒரு புதினத்தில் இவ்வளவு கிளைக்கதைகளை, புரட்சிக்கருத்துக்களை, சந்தேகங்களுக்கு விடைகளை தரமுடியும் என்ற சாத்தியத்தை மெய்யாக்கியிருக்கிறார் தோழர். இப்புதினத்துக்கு பின்னால் இருக்கும் அவரது உழைப்பை, உழைப்பென்று சொல்லமுடியாது, தியாகம்.. தியாகத்தை தமிழர் யாவரும் கொண்டாட வேண்டியது அவசியம்.

புதினத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மொழி எனக்கு புதியது. முதலிரண்டு அத்தியாயங்களை வாசிப்பதற்குள் திணறிவிட்டேன். அதன்பிறகு தஞ்சைத்தமிழ் நமக்கு பழகிவிடுகிறது. கீழ்வெண்மணி படுகொலைகளுக்கு பிறகான கீழ்த்தஞ்சையை களமாக எடுத்துக்கொண்டிருக்கிறார் பாட்டாளி.

எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வருவதை அப்பாவி விவசாய கூலித்தொழிலாளி கொண்டாடுவதும், வீட்டு விசேஷத்துக்கு மைக் செட்டை கூட சவுண்டாக வைக்கமுடியாத சாதி அவலமும், தச்சுத் தொழிலின் நுட்பமும், சன்னாசித் தாத்தாவின் கதைகளும், பார்ப்பனீய அசிங்கமும், போலிச்சாமியார்களின் பொய் வேஷமும், இடையே சாதிமறுப்பு காதலும், பண்ணையார்களின் அடாவடியும், பாட்டாளிகளின் போராட்டமும், நக்சல்பாரிகளின் எழுச்சியும், அழித்தொழிப்பும், கம்யூனிஸவாதிகளின் சுயவிமர்சனமும்.. அப்பப்பா.. எவ்வளவு விஷயங்களை அனாயசமாக தொட்டுச்செல்கிறார் தோழர். புதினத்தை வாசித்துமுடித்ததுமே அறுபதுகளில் கீழத்தஞ்சையில் பள்ளராகவோ, பறையராகவோ பிறந்து நக்சல்பாரி இயக்கத்தில் நாம் இயங்கியிருக்கக் கூடாதா என்ற ஏக்கம் வருகிறது.

நெல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவரான கோபாலகிருஷ்ண நாயுடு அரைபடி நெல்லை கூலியாக உயர்த்திக் கேட்ட பாவத்துக்காக வெண்மணியில் 44 பேரை உயிரோடு கொளுத்தி, நீதிமன்றத்தில் சாட்சிகளை கலைத்து குற்றமற்றவர் என்ற தீர்ப்பை பணத்தால் வாங்குகிறார். நக்சல்பாரிகள் இயக்கம் கட்டமைத்து அந்த கொடுங்கோலனை அழித்தொழிப்பது தான் புதினத்தின் மையக்கரு.

கோபாலகிருஷ்ண நாயுடுவை சினிமா வில்லன் கணக்காக சித்தரிக்கிறார் தோழர். அவர் மீது வாசகனுக்கு வெறுப்பு ஏற்படவேண்டுமென்பதற்காக சில பக்கங்கள் வீணடிக்கப்பட்டதாக கருதுகிறேன். குறிப்பாக சவரத் தொழிலாளியை அழைத்து தனது அந்தரங்கப் பகுதியை சுத்தப்படுத்தச் சொல்வதும், பின்னர் அத்தொழிலாளியையே கைமைதுனம் செய்துதரச் சொல்வதையும், தன் பண்ணையில் வேலைபார்க்கும் கூலிப்பெண்களின் அங்கங்களை ஆபாசமாக அவன் வர்ணிப்பதையும் சொல்லலாம். இந்தளவுக்கு சித்தரித்தால் தான் அவன் மீது அறச்சீற்றம் வாசகனுக்கு எழும்பும் என்பதில்லை. கோபாலகிருஷ்ண நாயுடு என்ற பெயர் ஒன்றே போதும், கட்டற்ற வெறுப்பு வருவதற்கு.

வயதுக்கே வராத பெண் ஒருத்தியை கடத்தி கோபாலகிருஷ்ணநாயுடு பாலியல் வன்புணர்வு செய்வதாக சில காட்சிகள் வருகிறது. வெண்மணி சம்பவத்தை சித்தரித்து எழுதப்பட்ட குருதிப்புனல் என்ற புதினத்தில், கோபாலகிருஷ்ணநாயுடு ஆண்மையற்றவர் என்பதால் மனச்சிதைவு ஏற்பட்டு வெண்மணி கொலைகளை செய்தார், அது வர்க்கப் போராட்டமல்ல என்பதைப் போல எழுதியிருந்ததால், அதற்கு கவுண்டர் பாயிண்டாக கோபாலகிருஷ்ணநாயுடு ஒரு காமாந்தகன் என்பதாக பாட்டாளி சித்தரித்திருக்கலாம்.

பள்ளர் சாதியை சேர்ந்த ஜோதிக்கும், ஆச்சாரி சாதியை சேர்ந்த வெங்கிட்டுக்கும் மலரும் காதல் தீப்பிடித்து எரியும் மைதானத்துக்கு இடையே மலரும் ரோஜாப்பூ போல அழகும், சுவாரஸ்யமும் நிறைந்ததாக இருக்கிறது. ஜோதியை பின் தொடர்ந்து ஆற்றங்கரைக்கு சென்று வெங்கிட்டு பேசுவது, திருவிழாவில் வளையலும், குஞ்சமும் வாங்கித்தந்து காதல்மொழி பேசுவதெல்லாம் செம அழகு. போலிச்சாமியாரின் முகமூடியை ஆசைத்தம்பி கிழித்தெறிவது, சன்னாசித் தாத்தாவின் ஈமக்கிரியைகளின் போது பார்ப்பனன் ஏமாற்றுவது எல்லாம் நகைச்சுவையோடு சொல்லப்பட்ட சமூக அவலங்கள்.

கோபாலகிருஷ்ணநாயுடுவை அழித்தொழித்த சிலகாலத்தில் நக்சல்பாரி இயக்கம் தனது வர்க்க எதிரி அழித்தொழிப்புப் பணிகளை இந்தியா முழுமைக்கும் நிறுத்திவிடுகிறது. எந்தச் சூழ்நிலையில் அந்த முடிவெடுக்கப்படுகிறது, ஏன் எடுக்கப்படுகிறது என்பது குறித்து விலாவரியாக இறுதியில் சொல்லப்படவில்லை. ஆனாலும் இதனால் நக்சல்பாரி இயக்கங்கள் குறித்த மேலதிகத் தகவல்களை வாசிக்க ஆர்வம் ஏற்படுகிறது. கம்யூனிஸ இயக்கங்களால் இந்தியாவில் ஏன் புரட்சியை ஏற்படுத்த இயலவில்லை என்பதை மிக எளியமொழியில் கதாபாத்திரங்களின் வசனங்கள் மூலமாக சொல்கிறார் பாட்டாளி.

தயவுதாட்சணியமில்லாத திராவிட மறுப்புத்தொனி நாவலில் பல இடங்களில் காணமுடிகிறது. வர்க்க எதிர்ப்பில் எப்படி தோழர்களின் பங்களிப்பை எவனும் மறுக்கமுடியாதோ, அதுபோல சமூகநீதிக்கான பங்களிப்பில் திராவிட இயக்கத்தாரின் பங்களிப்பையும் எவனும் மறுதலிக்கமுடியாது. வெங்கட்டு - ஜோதி கலப்புமணம் மூலமாக நக்சல்பாரிகள் சமூகநீதியையும் தொட்டுச் சென்றிருக்கிறார்கள் என்பதாக பாட்டாளி சித்தரித்திருக்கிறார்.

இப்படியெல்லாம் சித்தரித்து தான் நக்சல்பாரிகளின் பங்களிப்பை சொல்லவேண்டுமென்பதில்லை, தோழர்களின் தியாகம் எப்போதும் மறக்கப்படாதது, மறைக்கமுடியாதது. ஆனால் கலப்புமணப்புரட்சியை தமிழகத்தில் ஏற்படுத்திய திராவிட இயக்கத்தாரின் பங்களிப்பையும் நாம் நன்றியோடு நினைத்துப் பார்க்கவேண்டும். இவ்விஷயத்தில் திராவிட இயக்கத்தாரின் சிந்தனை மற்றும் செயலாக்கத்தை தோழர்கள் சொந்தம் கொண்டாடுவது தேவையில்லாத விஷயம். புதினத்தில் எனக்கு நெருடிய சில விஷயங்களில் இதுவும் ஒன்று.

நாவலை வாசித்து முடித்ததும் நாட்டின் இப்போதைய சூழல் நக்சல்பாரி பாணி புரட்சிக்கு நம்மை அழைத்துச் செல்கிறதோ என்ற எண்ணம் வருகிறது. அத்தியாவசியப் பொருட்களை கூட தன் குடிமக்களுக்கு ஒழுங்காக வழங்க வக்கில்லாத நிலையில், அமெரிக்காவுக்கு அடிவருடுவதையே தன் பிறப்பின் கடமையாக நினைப்பவர்கள் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்புக்கு கடந்த பதினேழு ஆண்டுகளாக வருவதும், அவர்களால் வெகுஜனமக்களின் வாழ்வாதாரம், கலாச்சாரம் பறிக்கப்படுவதையும் கண்டால் புரட்சி மலர்வதை யாராலும் தடுக்க இயலாது என்றே தோன்றுகிறது. அப்படி புரட்சி ஏற்படும் சூழலில் இயக்கப் பாகுபாடில்லாமல் பாட்டாளிகளோடு, படித்தவர்களும், அதிகாரத்தின் கீழ்மட்டத்தில் இருப்பவர்களும் இணைவார்கள் என்பதும் உறுதி.


நூல் : கீழைத்தீ

ஆசிரியர் : பாட்டாளி

வெளியீடு :
புதிய பயணம் வெளியீட்டகம்
எண், 6, 7வது வடக்கு சந்து,
சிம்மக்கல், மதுரை - 625 001.

விலை : ரூ.150/- (மக்கள் பதிப்பு)

25 ஜூலை, 2009

ஷகீலா


மன்மதப்புயல் ஷகீலா என்றாலே முகம் சுளிப்பவர்கள் கூட சனிக்கிழமை இரவுகளில் ரகசியமாக முக்காடு போட்டுக் கொண்டு 'சூர்யா டிவி' பார்ப்பதை கண்டிருக்கிறேன். ஷகீலா மிகவும் வெள்ளந்தியானவர், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல் எதிலுமே ‘வெளிப்படையாக' இருப்பவர் என்று சமீபத்தில் அவரை பேட்டி எடுக்க முயற்சித்த நமது பத்திரிகை நண்பர் ஒருவர் சொன்னார். சினிமா இண்டஸ்ட்ரியில் 'ஷகீலா' போன்ற நல்ல குணநலன்களோடு இப்போதும் ஒரு நடிகை இருப்பது ஆச்சரியமானது என்றும் அந்த நண்பர் சொன்னார்.

* ஷகீலா தனது பதினைந்தாம் வயதில் துணைநடிகையாக நடிக்கத் தொடங்கினார். அவர் நடித்த முதல் படம் ‘ப்ளே கேர்ள்ஸ்'. சில்க் ஸ்மிதா கதாநாயகியாக நடித்த திரைப்படம் இது.

* ஷகீலாவின் குடும்பம் பொருளாதாரரீதியாக ரொம்பவும் மோசமான நிலையில் இருந்த காலக்கட்டம் அது. பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவே “ச்சீய்” ரக படங்களில் அதன்பின்னர் நடிக்க ஆரம்பித்தார்.

* ”மறுமலர்ச்சி” என்ற மம்முட்டி நடித்த படத்தை பார்த்திருக்கிறீர்களா? அந்தப் படத்தில் விவேக்குக்கு ஜோடியாக ஷகீலா நடித்திருப்பார்.

* ஷகீலா நடித்த ‘கிணரத்தும்பிகள்' படம் மெகாஹிட்.

* ஒரு கட்டத்தில் தொடர்ந்து ஆண்டுக்கு ஆறுபடங்களாவது ஷகீலா நடித்து, அவை செம ஹிட் ஆக மலையாள திரையுலகமே அதிர்ந்தது. மம்முட்டி, மோகன்லால் படங்களின் வசூல் ஷகிலாவால் பாதித்தது. ஷகிலா படங்கள் வெளியாகிறதென்றால் மற்ற படங்களின் வெளியீட்டுத் தேதியை அப்போதெல்லாம் தள்ளி வைத்து விடுவார்களாம். ஷகிலா படங்களை முடக்க மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களும், தயாரிப்பாளர்களும் முயன்றார்கள் என்று பேசப்பட்டது.

* ஷகீலா “ச்சீய்” ரக படங்களில் நடித்தாலும் அவருக்கு பாசில் போன்ற இயக்குனர்களின் இயக்கத்தில் மம்முட்டி, மோகன்லால் போன்ற நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக காமெடி வேடங்களில் நடிப்பதில் அவருக்கு அலாதிப்பிரியம்.

* ஷகீலா மன்மதப் புயலாக அறியப்பட்ட பிறகு தமிழில் ஜெயம், தூள், அழகிய தமிழ்மகன் போன்ற படங்களில் தலையைக் காட்டினார்.

* சினிமா இண்டஸ்ட்ரியில் "Cyclone" "லேடி லால்” போன்ற பெயர்களால் ஷகீலாவை குறிப்பிடுகிறார்கள்.

* 'வில்ஸ் பில்டர்' சிகரெட்டை விரும்பி புகைப்பாராம்.

* ஷகீலா நடித்த சூப்பர்ஹிட் திரைப்படங்களில் சில : 'ஆலில தோணி', 'மிஸ் சாலு', 'ஸ்நேகா', ‘சாகரா', 'அக்னிபுத்ரி', 'சவுந்தர்யலஹரி', 'பெண்மனசு', 'வீண்டும் துலாபாரம்' போன்றவை. இப்படங்களையே அடிக்கடி பெயர் மாற்றி, சில பிட்டுகளை சேர்த்து புதியப் படங்கள் போல ஆங்காங்கே திரையிடுவது வழக்கம்.

* மலையாளத் திரைப்படங்களில் இப்போது அவ்வளவாக ஷகீலா ஆர்வம் காட்டுவதில்லை. மற்ற மொழித் திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். ‘மோனலிசா' திரைப்படம் மூலமாக (இப்படத்தில் ஷகீலாவை விட சதா அதிகமாக காட்டியிருப்பார்) கன்னடத்திலும் கரைகடந்திருக்கிறது இந்தப் புயல்.

* இயக்குனர் தரணியின் படங்களில் ஷகீலாவுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. தரணி தெலுங்கில் இயக்கிய 'பங்காரம்' திரைப்படம் மூலமாக தெலுங்கிலும் ஒரு ரவுண்டு கட்டி அடிக்க ஆரம்பித்திருக்கிறார் ஷகீலா.

* தமிழில் டப் செய்யப்படும் ஷகீலாவின் திரைப்படங்களுக்கான ப்ரீமியர் காட்சி பரங்கிமலை ஜோதியில் தவறாது காட்டப்படுகிறது.

லக் - மரணவிளையாட்டு!

ஒரிஜினல்!

டூப்ளிகேட்!

பிரெஞ்ச் படமான ட்ஸாமெடியை (Tzameti) யாருக்கும் தெரியாமல் நைசாக இயக்குனர் சோஹம்ஷா உருவிவிட்டதாக பாலிவுட் வட்டாரத்தில் புகைந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் வந்த ஹாலிவுட் மொக்கையான டெத்ரேஸ் (Death race 2008) படத்தின் பாதிப்பும் நிறைய உண்டு இந்த லக்கில்.

லக்கியான ஆட்களைப் பற்றிய படமிது. சஞ்சய்தத் ஒரு லக்கியான ஆள். கரப்பான் பூச்சி மாதிரி. காலில் போட்டு நசுக்கினாலும் ஏதோ லக்கால் உயிர்பிழைத்துக் கொள்வார். உலகம் முழுவதுமிருந்து அவரை மாதிரி லக்கிகளை பிடித்து வந்து யாருக்கு அதிர்ஷ்டம் அதிகமென்று பெட் கட்டி விளையாடுகிறார். இண்டர்நெட்டில் கோடி கோடியாக பெட் கட்டுகிறார்கள். சஞ்சய்தத் மொழியில் சொன்னால் Its purely business. விளையாட்டு என்றால் சாதாரண விளையாட்டு இல்லை. தோற்றவர்களுக்கு உடலில் உயிர் இருக்காது. மரணவிளையாட்டு. செத்து செத்து விளையாடுவதுதான் இந்தப் படமே.

கலந்துகொள்பவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி. எல்லோருக்கும் உயிரைவிட அதிகபட்சத் தேவையாக இருப்பது பணம் என்பது மட்டுமே ஒற்றுமை. தொடர்ந்து நடக்கும் தொடர் மரண விளையாட்டுகளும், மில்லியன் மில்லியனாக குவியும் பணமும்தான் மீதி கதை. ஒவ்வொரு காட்சியும், விளையாட்டும் இதயத்தை பலமாக பதம் பார்க்கும் வேகத்தோடு படமாக்கப்பட்டிருக்கிறது. நாடோடிகள் ‘சம்போ சிவ சம்போ’ ரேஞ்சில் ஹை-டெம்போவுக்கு ஒரு அதிரடி தீம் பாடலும் உண்டு.

கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் அறிமுகமாகும் படம் என்பதால் தமிழகத்திலும் எதிர்ப்பார்ப்பு அதிகம். ஸ்ருதி ஹாலிவுட் நடிகைகளுக்கு சவால் விடும் கவர்ச்சி காட்டுகிறார். நீச்சல்குளத்தில் இருந்து எழுந்துவரும் காட்சியில் விண்ணதிர விசில் பறக்கிறது. அப்பாவை மாதிரியே அச்சு அசலாக முகம், குறிப்பாக அந்த முண்டக்கண்கள். தாராளமாக பாஸ் மார்க் போடலாம். ஹீரோ இம்ரான்கான் அபிஷேக் பாதி, ஹ்ருத்திக் பாதி கலந்து செய்த கலவை.

துப்பாக்கியில் ஒருவருக்கு ஒருவர் சுட்டுக் கொள்வது, பாராசூட்டில் குதிப்பது, சுறாமீன்களிடம் கடலில் தப்பிப்பது என்று விதம்விதமான விளையாட்டுகளை காட்டி எதிர்ப்பார்ப்புகளை எகிறவைத்து விடுகிறார் இயக்குனர். ஆனால் க்ளைமேக்ஸில் அரதப்பழசான ட்ரெயின் விளையாட்டு காட்டுவது கொடுமையிலும் கொடுமை. மெஷின் கன் வைத்து ஹீரோவை பத்து அடி தூரத்தில் இருந்து சுட்டால் கூட ஒரு குண்டு கூட அவர் மீது படுவதில்லை. லக்கோ லக்! மொத்தமாக வெடித்துச் சிதறிய பெட்டியில் இருந்து மேஜர் மிதுன் சக்ரபோர்த்தி எழுந்து வருவதன் மூலமாக டன் கணக்கில் காதில் பூ சுற்றுகிறார்கள்.

கேமிரா, ஸ்டண்ட், பிண்ணனி இசை, தடதடவென்று ஓடும் திரைக்கதை என்று பல தளங்களிலும் தரம் அபாரம். படம் நல்ல டைம் பாஸ். தயாரிப்பாளருக்கு லக் அதிகம். பணம் வானத்தைப் பிளந்துகொண்டு கொட்டோ கொட்டுவென்று கொட்டப்போகிறது!

லக் - இரண்டரை மணி நேர பக்.. பக்..

24 ஜூலை, 2009

அப்பாவி அடிமைகளுக்கு!

"அம்மா! ராமு புதுசா பேட் வாங்கியிருக்கான். அவன் கூட கிரவுண்டுக்கு வெளையாட போறேம்மா"

"கிருஷ்ணா ஒழுங்கா சமர்த்தா போய் படுத்து தூங்கு. லீவு வந்தாலே போதுமே. வெய்யில்ல சுத்த கிளம்பிடுவியே"

"அம்மா. ப்ளீஸ்மா ஹோம் ஒர்க் எல்லாம் சமர்த்தா முடிச்சிட்டேம்மா. ப்ளீஸ்மா."

"சொன்னா கேட்க மாட்டே. டாடி வந்தா அடிச்சுடுவார். போயி தூங்குடா"

----------------------------------------------------------------

"சார் பையன் மேத்ஸ், சயின்ஸ் ரெண்டுத்தேலேயும் நைண்டி பர்சண்ட் ஸ்கோர் பண்ணியிருக்கான் சார். தயவுசெஞ்சி பர்ஸ்ட் குரூப்பே கொடுத்துடுங்க"

"இல்லே சார். பர்ஸ்ட் குரூப்லே மொத்தம் 24 வேகன்ஸி தான் இருக்கு. அதுலே நாலு ஏரியா கவுன்சிலர் ஆக்குபை பண்ணிட்டார். 10 மேனேஜ்மெண்ட் ஆளுங்க எடுத்துக்கிட்டாங்க. மீதி பத்து டொனோர்ஸ்க்கு போயிடும். முடிஞ்சா 25 ரூபா ரெடி பண்ணிடுங்க. டோனோர்ஸ் கோட்டால கொடுத்திடலாம்"

"சார். நான் ஒரு பிரைவேட் கம்பெனிலே கிளார்க்கா இருக்கேன். ஹையர் செகண்டரிக்கே 25 ரூவா எல்லாம் செலவு பண்ண முடியாது சார். பையன் நல்லா படிப்பான். உங்க ஸ்கூல் பேரைக் காப்பாத்துவான்"

"இல்லே சார். பாலிசி டிசிஸன் இது. நான் நெனைச்சா மாத்த முடியாது. பிரின்ஸிபால் சொந்தக்காரப் பையன் ஒருத்தனுக்கே தேர்ட் க்ரூப் தான் கொடுத்திருக்கார். வேணும்னா உங்களுக்கு தேர்ட் குரூப் ஹிஸ்டரிக்கு பதிலா மேத்ஸ் கொடுக்க ட்ரை பண்ணுறேன்"

----------------------------------------------------------------

"சார். தீவாளி கேம்பைனுக்கு புதுசா ஒரு கான்செப்ட் ரெடி பண்ணியிருக்கேன். அட்டகாசமா வந்துருக்கு. ஓபனிங்லே புராடக்ட் லாங் ஷாட்டுலே இருந்து ஜூம் ஆகுது. அப்போ ஒரு பொடியன் கையிலே ராக்கெட்டோட வந்து......."

"குமார் உங்களுக்கு எதுக்கு தேவையில்லாத வேலை? நீங்க சாதாரண விஷுவலைஸர். கிரியேட்டிவ் டைரக்டர் இல்லே. ஞாபகம் வெச்சுக்கங்க"

"இல்லே சார். எம்.டி. சொல்லியிருக்காரு. யாரு வேணும்னாலும் கான்செப்ட் கிரியேட் பண்ணலாம்னு"

"யோவ் எத்தனை வாட்டி சொல்லுறது? மாசாமாசம் ஒழுங்கா சம்பளம் வருதில்லே. அதை வாங்கிட்டு ஒழிய வேண்டியது தானே? எதுக்குய்யா எங்க தாலி அறுக்கறே?"

----------------------------------------------------------------

"ஏண்டா. எவன் எவன் வெள்ளை சட்டை போட்டுக்கிட்டு வாட்ச் கட்டிக்கிட்டு போறதுன்னு வெவஸ்தை இல்லையா?"

"இல்லே எஜமான். பட்டணத்துலே வேலை செய்யுற எம் மவன் ஆசையா வாங்கிக் கொடுத்து அனுப்பிச்சான் எஜமான்"

"அதுக்கு பகட்டா நீ பாட்டுக்கு வெள்ளை வேட்டியும், கையிலே வாட்சும் கட்டிக்கிட்டு ஊருக்குல்லே நடந்தேன்னா, நாளைக்கு எவண்டா என்ன மதிப்பான்? உன்னை எல்லாம்.........."

----------------------------------------------------------------

"ஏங்க. கல்லுல்லே மாவரைச்சு மாவரைச்சு மாரெல்லாம் வலிக்குது. ஒரு கிரைண்டர் வாங்கணுங்க"

"வாங்கலாம்மா"

"எப்போங்க?"

"எதுக்குடி இப்போ நொய் நொய்ன்னு உயிரை எடுக்கறே? ஸ்ட்ரைக் முடிஞ்சு போனஸும், அரியர்ஸும் வரட்டும், வாங்கிடலாம்"

----------------------------------------------------------------

"தலைவா. இதெல்லாம் நியாயமில்லே. அசெம்பிளி எலெக்சனுலே தான் இதயத்திலே இடம் கொடுத்துட்டு கவுத்திட்டீங்க. லோக்கல்லேயாவது நம்ம ஆளுங்களை திருப்தி படுத்தற மாதிரி ஏதாவது இடம் கொடுங்க"

"இருந்தா இல்லேன்னாய்யா சொல்லப்போறேன். திண்டிவனத்தான், வந்தவாசிக்காரன், நாகைப்பட்டினத்துக்காரன், இடது, வலது எல்லாத்துக்கும் பிரிச்சி கொடுத்துட்டு கடைசியிலே எனக்கே ஒண்ணும் நிக்கலையேய்யா. பார்க்கலாம். மேல் சபை கொண்டாந்து உன் கட்சியிலே சில பேரை எம்.எல்.சி. ஆக்கறேன்"

"அதுவரைக்கும் நான் என்னத்த அரசியல் பண்ணுறது? ஏற்கனவே மதுரைக்காரன் கட்சியை உடைச்சிடுவேன்னு மெரட்டிக்கிட்டிருக்கான்"

"அப்போ ஒண்ணு பண்ணு... என்னை புடுங்காம அந்தப் பொம்பளை காலுலே போயி விழு...."

----------------------------------------------------------------

"ப்ளீஸ்மா. இன்னைக்கு மட்டும்"

"நோ. முடியாது"

"ப்ளீஸ்... ப்ளீஸ்... வருஷத்துக்கு ஒரு முறை தான் நியூ இயர். வெறும் பீர் மட்டும் தான்"

"இன்னைக்கு பீர்னு சொல்லுவீங்க. நாளைக்கு பிராந்தி. அப்புறம் மறுபடியும் சிகரெட், பான்பராகுன்னு பழைய வழிக்கு திரும்பிடுவீங்க. இனிமே உங்க பிரண்ட்ஸ் யார்கூடவும் நீங்க வெளிய போகக்கூடாதுன்னா போகக்கூடாது தான்."

----------------------------------------------------------------

"இன்னைக்கு எங்க டியூட்டி"

"வேளச்சேரி சுபிக்சாவிலே"

"டே மட்டும் தானே?"

"ஆமா சார். ஈவ்னிங் என் மச்சினிச்சிக்கு நிச்சியதார்த்தம். 6 மணிக்கெல்லாம் போயிடுவேன்"

"மணி லீவுலே இருக்கான் தெரியுமில்லே. யுனிவர்ஸல் டியூட்டி 7 மணிக்கும் நீதான் பார்த்துக்கணும்"

"இல்லே சார். நான் வீட்டுக்கு மூத்த மருமவன். அதான்...."

"யோவ். சொன்னா கேட்க மாட்டே. முதலாளி சொன்னதை தான் நான் சொல்லுறேன். டியூட்டி பார்த்தா பாரு. இல்லேன்னா இப்போவே மச்சினிச்சி நிச்சயதார்த்தத்துக்கு போயிடு. திரும்ப வரவே வராதே"

----------------------------------------------------------------

"தலை. எத்தினி நாளுக்கு தான் கத்தி, கபடான்னு உன் பின்னாலேயே சுத்திக்கிட்டு இருக்கறது. அந்த போக் ரோடு பார் டெண்டர் எடுத்துக் கொடு"

"ஏண்டா. வளர்ந்துட்டியா?"

"இல்லே தலை. எனக்கும் குடும்பம், குட்டின்னு இருக்கு. பையனை அடுத்த வருஷம் காலேசில சேர்க்கணும். நாலு காசு பார்க்கணும்.... எவ்வளவு நாளைக்கு தான்....."

"அடிங்கொ........ ஆளாளுக்கு வெள்ளை வேட்டி கட்ட ஆசை வந்துட்டா. நாங்கள்லாம் என்னாத்தைடா பண்ணுறது? அளவுக்கேத்த ஆசை வேணாமா? போடா.... பொழைப்பை பாரு.... என்னடா முறைக்கிறே"

----------------------------------------------------------------

"லொள்.... லொள்...."

"லொள்.... லொள்.... லொள்...." - கொஞ்சம் கோபமாக...

"லொள்.... லொள்.... லொள்.... லொள்...." - கொஞ்சம் ஆவேசமாக...

"லொள்.... லொள்.... லொள்...." - கொலைவெறியுடன்...

"லொள்.... லொள்...." - கொஞ்சம் சத்தம் குறைத்து வாலை ஆட்டி புறமுதுகிட்டு....

"லொள்.... லொள்.... லொள்.... லொள்...." - ஓவர் சவுண்டுடன். மனதுக்குள் "ஏரியா விட்டு ஏரியா வந்து சைட் அடிக்கிறியா? மவனே கொளுத்திடுவேன்"...

----------------------------------------------------------------

நாட்டுக்கு விடுதலை கெடைச்சி 60 வருஷமானாலும் பொருளாதாரரீதியா, வர்க்கரீதியா, சாதிரீதியா, மதரீதியா, அரசியல்ரீதியா, குடும்பரீதியா.... இன்னும் ஏகப்பட்ட ரீதிகளாக அடிமைப்பட்டிருக்கும் அப்பாவிகளுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்........

----------------------------------------------------------------

- 2006ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தேன்கூடு-தமிழோவியம் போட்டியில் முதல் பரிசு பெற்ற படைப்பு!

23 ஜூலை, 2009

எம்.ஜி.ஆர். நினைவு இல்லம்!


சென்னை தி.நகர் ஆற்காடு தெருவில் இருக்கிறது எம்.ஜி.ஆர் நினைவு இல்லம். சிவாஜியும், எம்.ஜி.ஆரும் ஒரு காலத்தில் பக்கத்து, பக்கத்து தெருக்காரர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதே ஆச்சரியமான ஒரு விஷயம். இந்திபிரச்சார சபாவுக்கு அருகில் சிம்பு வீட்டிலிருந்து தெற்கு போக் ரோடு வழியாக சிவாஜியின் அன்னை இல்லத்தை கடந்து சென்றால் பீச்சாங்கை பக்கமாக ஆற்காடு சாலை வரும்.

தமிழ் சினிமாவை கட்டி ஆண்ட சூப்பர் ஸ்டாரின் வீடு போல இல்லாமல் மேல்நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஒருவரின் வீடுபோல எளிமையோ எளிமை. எம்.ஜி.ஆர் அறக்கட்டளை நிர்வகிக்கிறது. 1990ஆம் ஆண்டு ஜானகி எம்.ஜி.ஆர் திறந்து வைத்ததாக கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. சுற்றிப் பார்க்க கட்டணம் இல்லை. ஆனால் வெளியே செருப்பினை விட மட்டும் 50 காசு கட்டவேண்டும். செவ்வாய் விடுமுறை. எம்.ஜி.ஆர் மறைந்து இருபத்தி இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், இன்றும் தினமும் ஐம்பது பேராவது நினைவு இல்லத்தை தரிசித்து செல்கிறார்கள்.

கீழ்த்தள ஹால் பெரியது. 1950களில் தொடங்கி எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்ட நினைவுப்பரிசுகள் இந்த ஹாலினை அலங்கரிக்கிறது. சுவற்றையொட்டி வைக்கப்பட்டிருக்கும் அலமாரிகள் முழுக்க நினைவுப்பரிசுகள். நினைவுப்பரிசுகள் பலவற்றிலும் கருப்பு சிவப்பு திமுக கொடி. பல நினைவுப்பரிசுகள் வேடிக்கையாகவும் இருக்கின்றன.

கிட்டத்தட்ட எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் 90 சதவிகிதப் படங்களுக்கு நூறாவது நாள் விழா ஷீல்டு கொடுத்திருக்கிறார்கள். இந்த நினைவுப்பரிசுகளை பாதுகாக்கவே எம்.ஜி.ஆர் மிகவும் மெனக்கெட்டிருக்க வேண்டும். ஹாலுக்கு மையத்தில் எம்.ஜி.ஆர் பயன்படுத்திய 4777 எண்ணுள்ள, சைரன் பொருத்தப்பட்ட அம்பாஸிடர் கார் புதுமெருகோடு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

முதல் தளத்திலும் நினைவுப்பரிசுகளின் ஆதிக்கம். எம்.ஜி.ஆரின் வேட்டி சட்டை, டாக்டர் பட்டம் பெற்றபோது அணிந்த அங்கி, இடுப்பில் செருகும் குறுவாள், சாட்டை, மெகா சைஸ் பேனாக்கள் என்று அவர் பயன்படுத்திய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. எம்.ஜி.ஆருக்கு அவரது ரசிகர்களும் தொண்டர்களும் வாள் வழங்குவதில் ஆர்வம் அதிகமாக காட்டியிருக்கிறார்கள். அவர் வளர்த்த சிங்கமான ராஜாவின் பதம் செய்யப்பட்ட பிரம்மாண்ட உடல் பிரமிப்பூட்டுகிறது. இந்த சிங்கம் அடிமைப்பெண் படத்தில் நடித்ததாக சொல்கிறார்கள்.

ஆச்சரியமான விஷயம் எம்.ஜி.ஆரின் நூலகம். வீடு முழுக்க ஆங்காங்கே அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நூல்களின் எண்ணிக்கை குறைந்தது ஐயாயிரமாகவாவது இருக்கக்கூடும். நிறைய ஆங்கிலநூல்களும் இருப்பது எதிர்பாராத விஷயம். எம்.ஜி.ஆர் ஆங்கிலமும் வாசிப்பார் என்பதை அவர் நூலகத்தில் இருக்கும் நூல்களை வைத்தே அறிய முடிகிறது. எம்.ஜி.ஆரின் பிரத்யேக அலுவல் அறை அப்படியே இருக்கிறது. மேஜையில் அவரது டிரேட் மார்க் தொப்பி.

அலுவல் அறை வழியாக மீண்டும் கீழ்தளத்தின் முன்பக்கத்துக்கு படிக்கட்டுகள் வழியாக வரமுடிகிறது. இவ்வறைகளில் எம்.ஜி.ஆர் நடித்த படங்களின் ஸ்டில்கள் வரிசையாக சதிலீலாவதியிலிருந்து, மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை (136 படங்கள்) பிரேம் போட்டு மாட்டப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட நாற்பதாண்டுக்காலம் திரைத்துறையில் வெற்றிகரமாகப் பணியாற்றியது அவரது அசைக்க முடியாத சாதனை. திரைப்பட ஸ்டில்கள் மட்டுமன்றி பல தலைவர்களோடு எம்.ஜி.ஆர் எடுத்துக்கொண்ட அரியப் புகைப்படங்கள் இல்லம் முழுக்க ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கிறது.

இல்லம் முழுக்க கவனித்ததில் ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. எம்.ஜி.ஆரோடு நெருக்கமாக இருந்த ஜெயலலிதா பெயரும் சரி, கலைஞர் பெயரும் சரி, சரிசமமாகவே இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா எம்.ஜி.ஆருக்கு வழங்கிய ப்ளவர் வாஷ் ஒன்று, கலைஞர் எம்.ஜி.ஆருக்கு ஐரோப்பாவில் இருந்து எழுதிய ஒரு கடிதம், ஓரிரு புகைப்படங்கள் மட்டுமே இடம்பெற்றிருப்பது ஆச்சரியகரமானது.