
“சிறுகதை எழுதுவது எப்படி?”
இந்த கேள்வியை யாராவது பெருசுகளிடம் கேட்டால், “சுஜாதா புக் எழுதியிருக்கிறார். வாங்கிப்படி!” என்கிறார்கள். உண்மையில் அந்தப் பெருசுகள் அப்புத்தகத்தை படித்திருக்க வாய்ப்பேயில்லை என்று கருதலாம். ‘சிறுகதை எழுதுவது எப்படி?' என்பதே ஒரு சிறுகதைதான். அந்த சிறுகதை அடங்கிய சுஜாதாவின் சிறுகதைத் தொகுப்புக்கு சூட்டப்பட்ட பெயர் அது.
”சுஜாதா சிறுகதை எழுத சொல்லித் தருகிறார்!” என்று யாராவது சொன்னால் பரலோகத்தில் இருக்கும் சுஜாதாவே அதை மன்னிக்க மாட்டார். சிறுகதை எழுதுவதை பாடமாக எல்லாம் சொல்லித்தர முடியாது என்று நம்பியவர் அவர். ஆனால் ஒரு தேர்ந்த வாசகன் நிறைய சிறுகதைகள் வாசிப்பதின் மூலமாக சிறுகதைகளை எழுதும் ஆற்றலை பெற்றிட முடியும். குறிப்பாக சுஜாதாவின் சிறுகதைகளை நிறைய வாசிக்கலாம்.
சுஜாதா எழுதிய காலத்தில் அவரை ஒரு கமர்சியல் ரைட்டராகவும் ஏற்றுக் கொள்ளப் படாமல், இலக்கிய எழுத்தாளராகவும் ஒத்துக் கொள்ளப்படாமல் திரிசங்கு சொர்க்கத்தில் வாழ்வின் பெரும்பகுதியை வாழ்ந்திருக்கிறார். உண்மையில் அவருக்கு இலக்கிய அந்தஸ்து என்பது கடைசிக்காலத்தில் தான் கிடைத்தது என்று நம்புகிறேன். அதிலும் ஒரு தலைமுறையே, ”தங்களை சுஜாதா பாதித்திருக்கிறார்” என்று ஒட்டுமொத்தமாக சொன்னதின் பின்னால்தான் வேண்டாவெறுப்பாக ஒப்புக் கொள்ளப்பட்டார். அதிர்ஷ்டவசமாக சுஜாதாவுக்கு வாழும் காலத்திலேயே இந்த அந்தஸ்து கிடைத்துவிட்டது. சாண்டில்யன் எல்லாம் ரொம்ப பாவம். இப்போதும் கூட அவரை சரோஜாதேவிரக எழுத்தாளராகவே பல இலக்கிய விமர்சகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
எதையோ பேசவந்து எதையோ பேசிக்கொண்டிருக்கிறேன். எதை பேசவந்தேன்? ஆங்.. சிறுகதை எழுதுவது எப்படி?
சுஜாதா கருதியதைப் போல யாரும் விரல் பிடித்தெல்லாம் சொல்லித் தந்துவிட முடியாது. ஆனால் இப்போது பத்திரிகைகளில் எழுதி பிரபலமாக இருக்கும் எழுத்தாளர்களை விட பல திறமையான கதை சொல்லிகள், தங்கள் திறமையை அறியாமலேயே ஆயா வடை சுட்டக் கதையை தினுசு தினுசாக தங்கள் குழந்தைகளுக்கு சொல்லி வருகிறார்கள். நேரமும், வாய்ப்பும் வாய்த்தவர்கள் இன்று இணையங்களில் எழுதுகிறார்கள். எதை எழுதவேண்டும் என்று தெரிந்தவர்கள் கூட எப்படி எழுதுவது என்று தெரியாமல் சொதப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
உதாரணத்துக்கு என்னையே எடுத்துக் கொள்ளலாம். நான் ஒரு நல்ல கதைசொல்லி கிடையாது என்பது எனக்கே தெரியும். அப்படிப்பட்ட நான் கூட தைரியமாக கதை என்று எதையோ எழுதி, இணையங்களில் சில பரிசுகளை கூட வாங்கிவிட்டேன். ஒரு சில கதைகள் பத்திரிகைகளிலும் பிரசுரம் ஆகிவிட்டது என்பதெல்லாம் பெருங்கொடுமை. இப்பதிவை வாசித்துக் கொண்டிருக்கும் நீங்கள் என்னைவிட மிகத்திறமையான கதைசொல்லியாக இருக்கலாம். உங்களிடம் நிறைய தீம் இருக்கலாம். ஆனால் குறிப்பிட்ட ஒரு கதையை எந்த வடிவில் எழுத்தில் வழங்கலாம் என்பதில் மிகப்பெரிய குழப்பம் உங்களுக்கு மட்டுமல்ல, பல வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கும் பலருக்கும் இருக்கிறது.
ஒரு நல்ல காஃபியில் டிக்காஷனும், பாலும் சரியான விகிதத்தில் கலந்திருக்க வேண்டியது அவசியம். அது போலவே ஒரு நல்ல சிறுகதையில் கதையின் உள்ளடக்கமும், அந்த உள்ளடக்கத்தை நல்ல முறையில் வாசகனுக்கு கையளிப்பதற்கான பொருத்தமான வடிவமும் மிக முக்கியமானது.
தமிழ் எழுத்தாளர்கள் பொதுவாக சுயநலமானவர்கள். தாங்கள் கற்ற வித்தைகளை, அனுபவத்தில் அறிந்த நுணுக்கங்களை அவ்வளவு சுலபமாக மற்றவர்களிடம் பகிர்ந்துவிட மாட்டார்கள். அரிதிலும் அரிதாக ஒருசிலர் பகிர்ந்துக் கொள்வார்கள். தமிழின் மிக முக்கியமான நான்கு எழுத்தாளர்கள் சிறுகதைப் பட்டறை ஒன்றினில் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களை, தாங்கள் கற்றவைகளை, அடிபட்டு தெரிந்துகொண்டவைகளை பகிர்ந்துக்கொள்ளப் போகிறார்கள் என்பது எவ்வளவு அருமையான விஷயம்?
தமிழின் முக்கிய கவிஞர்களில் ஒருவரான சுகுமாரன் உலகச் சிறுகதைகள் குறித்தும், தான் எப்படி சிறுகதைகள் எழுதுகிறேன் என்று சிறுகதை மற்றும் நாவலாசிரியரான யுவன்சந்திரசேகரனும், சிறுகதைகளுடனான தனது அனுபவங்கள் குறித்து சிறுகதை ஆசிரியரும், சினிமா வசனகர்த்தாவுமான பாஸ்கர் சக்தியும், 'சிறுகதை எழுதுவது எப்படி?' என்ற தலைப்பில் பிரபல எழுத்தாளரும், கிழக்கு பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியருமான பா.ராகவனும் பேச இருக்கிறார்கள்.
இந்நிகழ்வுக்காக சுஜாதாவின் ‘சிறுகதை எழுதுவது எப்படி?' கதையில் வருவதைப் போலவே இதற்காகவே ஒரு பட்டறையை நடத்த 'உரையாடல் கலை இலக்கிய அமைப்பு' முன்வந்திருக்கிறது. ஆனால் சுஜாதா கதையின் இறுதியில் வருவதைப் போல உங்கள் வீட்டு அண்டா, குண்டாவையெல்லாம் உரையாடல் அமைப்பினர் ஆட்டை போட்டுக் கொண்டு போக மாட்டார்கள் என்பதற்கு நான் நூறு சதவிகித உத்தரவாதம் தருகிறேன்.
சிறுகதைப் பட்டறை குறித்த முழுவிவரங்கள் பைத்தியக்காரன் அவர்களின் இப்பதிவில் இருக்கிறது. க்ளிக்கிப் பார்த்து, மறக்காமல் உங்களது பெயரை முன்பதிவு செய்துக் கொள்ளவும். இப்போது கந்தசாமி படத்தின் முன்பதிவை விட இந்த சிறுகதைப் பட்டறைக்கான முன்பதிவே பரபரப்பாக நடந்து வருகிறது.
அமைப்பாளர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள். பட்டறையில் கலந்து கொள்பவர்களுக்கு பலதரப்பட்ட விஷயங்களை இணைத்து தொகுப்பாக வழங்குவதாக கூறியிருக்கிறீர்கள். இந்தத் தொகுப்போடு தமிழர் தந்தை ஆதித்தனார் எழுதிய ‘இதழாளர் கையேடு' நூலையும் வழங்குமாறு பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.