24 ஆகஸ்ட், 2009

பிறந்தநாள்!


காலையில் இருந்து ரத்தக்கண்ணீர் செகண்ட் ஹாஃப் எம்.ஆர்.ராதா மாதிரி புலம்பிக் கொண்டிருக்கிறேன்.

முன்பெல்லாம் பிறந்தநாள் வந்தால் புது டிரஸ் கிடைக்கும். பள்ளிக்கு அன் யூனிபார்மில் போகலாம். எல்லோருக்கும் சாக்லேட் கொடுக்கலாம். அன்றைக்கு மட்டுமாவது யாரும் அடிக்க மாட்டார்கள், திட்டமாட்டார்கள். இதே சலுகை நியூ இயருக்கும் உண்டு. அந்த தேதிகளில் அடி வாங்கினால், வருஷம் முழுக்க அடிவாங்கிக் கொண்டே இருப்போமாம். கோயிலில் அர்ச்சகர் ‘மோகனகிருஷ்ணகுமார நாமஸ்தேயே’ என்று ஏதோ சொல்லுவார். அர்ச்சகரால் பலபேருக்கு முன்பாக நம் பெயர் உச்சரிக்கப்படும் போதை சுகமானது.

ஏழெட்டு வயதில் கமல்ஹாசன் மாதிரி ஸ்டெப்கட்டிங்குக்கு ஆசைப்பட்டு, அம்மாவின் கட்டாயத்தால் அது நடக்காமல் குருதிப்புனல் கமல் மாதிரி ‘அரைவட்டை’ அடித்துக் கொண்டிருந்த வயதுகளில் ஒவ்வொரு பிறந்தநாளும் எதிர்பார்ப்பை கூட்டிக்கொண்டே இருந்தது. ‘எனக்கும் வயசு ஆவுதுல்லே. ஒரு நா இல்லாக்கா ஒரு நா ஸ்டெப்கட்டிங் வெட்டிப்பேன்’. ஸ்டெப் கட்டிங் வெட்டிக் கொள்ளும் வயது வந்தபோது, அது ஓல்டு பேஷன் ஆகிவிட்டது வருத்தமான சோகம். அதே போல பெருத்த எதிர்ப்பார்ப்போடு இருந்து, இழந்த இன்னொரு விஷயம் பேக்கீ பேண்ட். தகுந்த வயது வரும்போது பேரல்லல் பேஷன் ஆகிவிட்டது.

கைவலிக்க ஹோம் ஒர்க் எழுதும் காலத்தில் வேலைக்குப் போகிறவர்களை பார்த்து பொறாமையாக இருக்கும். ’அவங்களுக்கு எந்த கமிட்மெண்டும் இல்லை. வேலை முடிஞ்சா ஜாலி, சினிமாவுக்குப் போகலாம், ஊர் சுற்றலாம்’. அதிலும் பஸ்ஸில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்துக் கொண்டு ஏதாவது பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்தால், ‘நானும் பெரியவனாகி இதே மாதிரி குமுதம், விகடன் வாங்கிப் படிக்கணும்’ என்று நினைத்துக் கொள்வேன். அனேகமாக நான் சிறுவயதில் ஏங்கிக் கொண்டிருந்தது ‘தேர்ந்தெடுக்கும் உரிகைக்காக’ என்று நினைக்கிறேன். இப்போது இதையெல்லாம் நினைத்துப் பார்த்தால், சின்னப்பயலாக இருக்கும்போது எல்லோரையும் போலவே நானும் எவ்வளவு அபத்தமாக சிந்தித்திருக்கிறேன் என்பது புரிகிறது.

மீசை என்று சொல்லிக்கொள்ளும்படி ஏதாவது முளைக்காதா என்று ஏங்கில காலமும் இருந்தது. சரியாக முளைக்காத மீசையை கத்தையாக காட்டிக்கொள்ள கோத்ரேஜ் ஹேர் டை ஸ்டிக் எடுத்து தடவைக்கொண்டதும் நினைவுக்கு வருகிறது. உங்களைவிட ஒருவயது குறைந்த பெண், உங்கள் தோற்றத்தைக் கண்டு குறைவாக மதிப்பிட்டு, ‘தம்பி’ என்று அழைத்த கொடுமையை நீங்கள் அனுபவித்தது உண்டா? எப்படியோ மீசை என்ற வஸ்து முளைத்த பிற்பாடு லேசாக ‘வயதாகி விட்டதோ!’ என்றொரு ஃபீலிங்கும் வந்ததுண்டு. இதனாலேயே நன்கு வளர்ந்த மீசை முடிகளின் அடர்த்தியை கத்தரிக்கோல் கொண்டு குறைத்ததும், அப்படியும் லேசாக கண்ணுக்கு கீழே உருவாகிய கருவளையம் கொண்டு கவலை அடைந்ததும் மறக்கக் கூடிய விஷயங்களா?

பூஞ்சை உடம்பைக் கண்டு வெறுத்துப்போய் ஒயின்ஷாப்பில் தினமும் பீர் அடித்து (சளிபிடித்து), அப்படியும் உடம்பு ஏறாமல் சொப்பன ஸ்கலித டாக்டர்களிடம் போகலாமா என்று ஆலோசித்து, அதுவும் சரிபடாமல் ‘வாட்டர்பரீஸ் காம்பவுண்ட்’ குடித்து, அரைகுறையாய் எக்சர்ஸை செய்து, உடல் வலித்து... ச்சே... கொடுமையானது மானிடப்பிறவி!

இப்போது பிறந்தநாள் என்றாலே பகீர் என்கிறது. ட்ரீட் மாதிரி விஷயங்களில் பர்ஸு பழுத்து விடுகிறது என்ற சோகம் ஒருபுறம் இருந்தாலும், உயிர்வாழும் நாட்களில் ஒரு வருடம் குறைகிறது என்ற யதார்த்தம் முகத்தில் அறைகிறது. ’மவனே உனக்கு சாவு நெருங்குதுடா’ என்று காலண்டர் பயமுறுத்துகிறது. அவசர அவசரமாக சம்பாதிக்க வேண்டிய தேவையை உணரமுடிகிறது. பணத்தை தேடி அசுர ஓட்டம் ஓட வேண்டியிருக்கிறது. நாற்பது வயதில் இந்த ஓட்டத்தை பலரும் ஓடி முடித்து விடுகிறார்கள். ஓடி முடிக்க முடியாவிட்டால்? வாழும் மீதி நாளையும் நரகமாகவே கழித்துத் தொலைக்க வேண்டும். தெனாலி கமல் மாதிரி எதைப் பார்த்தாலும் பயமாக இருக்கிறது. அனுபவத்தில் கண்டதில் வயோதிகம் மோசமானது. வயோதிகன் ஆவதைவிட விபத்தில் எதிர்பாராவிதமாக செத்துவிடலாம் என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது.

பள்ளிச்சீருடை அணிந்த ஒரு மாணவி ஒருவளால் எவன் ஒருவன் முதல் தடவையாக ’அங்கிள்’ என்று விளிக்கப்படுகிறானோ, அன்றே அவன் பாதி செத்து விடுகிறான், லைட்டாக மூப்படைந்து விடுகிறான். அவனுடைய யூத்து என்கிற அகங்காரம் அழிந்துவிடுகிறது. இன்றோடு என் அகங்காரம் அழிந்தது, ஈகோ ஒழிந்தது.

22 ஆகஸ்ட், 2009

நொந்தசாமி!

நொந்தசாமியின் ஒருநாள் நிகழ்வு :

காலை

7.30 : லேட்டாக எழுந்ததற்காக பொண்டாட்டியிடம் திட்டு. பெட் காஃபி கட்டு.

7.45 : காலை நாளிதழ் தினப்பலன் ராசியில் ‘வாயையும், சகல வஸ்துகளையும் மூடிக்கொண்டு சும்மா இருக்கவும். இன்று சந்திராஷ்டமம்’

8.00 : குளிக்கும்போது, குறிப்பாக முகத்துக்கு சோப்பு போடும்போது குழாயில் தண்ணீர் நின்றுவிட்டது. மோட்டார் ஸ்விட்சைப் போட்டால் ஆற்காட்டார் புண்ணியம் கட்டிக் கொள்கிறார்.

8.59 : ஆபிஸுக்கு கிளம்ப ஒரு நிமிடம் பாக்கி இருக்கும் நிலையில் குழந்தையைத் தூக்கிக் கொஞ்ச, இஸ்திரி செய்து போடப்பட்ட புது வெள்ளைச் சட்டையில் பாப்பா ஆய். கசங்கிப்போன பழைய சட்டை ஒன்றை எமர்ஜென்ஸிக்கு எடுத்து மாட்டிக் கொள்ளுதல்.

9.25 : இடம் : சைதாப்பேட்டை கலைஞர் பொன்விழா வளைவு அருகே. இரண்டு காலையும் தரையில் தேய்த்துக்கொண்டே வேகமாக வந்த, முகம் முழுக்க தாலிபான் மாதிரி முகமூடி போட்ட ஸ்கூட்டி பாப்பா அடுத்த இரண்டு நொடியில் இடிப்பதற்காக, வருமுன் காப்போம் திட்டம் மாதிரி ”சாரி.. சாரி.. சார்ரீ...” என்று கேட்டுக்கொண்டே வந்து இடிக்கிறாள். மூட்டு எலும்பு ஒரு நொடி இடம்மாறி, மறுநொடி இயல்பானது. ஜீன்ஸ் பேண்ட் முழுக்க டயரின் மண்கறை.

9.45 : பொட்டிக்கடையில் தம்மை தலைகீழாக பற்றவைத்ததால் நான்கு ரூபாய் ஐம்பது பைசா நஷ்டம்.

10.30 : எல்டாம்ஸ் ரோடில் மொக்கைச்சாமி ஒருவருடன் சந்திப்பு. ஒன்றரை மணி நேர ஆக்‌ஷா ப்ளேடு. கழுத்தறுப்பட்டு கதற கதற, இரத்தம் சொட்ட வெளியே வந்தால், பிளாட்பாரத்தில் ஏற்றி நிறுத்தப்பட்டிருந்த வண்டியை கடமையில் கண்ணும், கருத்துமாக இருக்கும் தமிழ்நாடு போக்குவரத்து போலிஸார் ஆட்டையைப் போட்டுவிட்டார்கள்.


பிற்பகல்

01.30 : இடம் - தேனாம்பேட்டை ஈ-3 ஸ்டேஷன்.

“சார் அங்கே நோ பார்க்கிங் போர்டு இருக்கான்னே தெரியலை. அதுவுமில்லாமே பிளாட்பார்ம்லே ஏத்திதான் வண்டியை நிறுத்தியிருந்தேன்”

“வண்டியை லெப்ட்டுலே விடக்கூடாதுன்னு ஏசி மூணு நாளா அந்த ஏரியாவில் மைக்லே கத்திக்கிட்டிருக்கார். நீங்க ஏன் சார் லெப்ட்லே பார்க் பண்ணீங்க”

“நாங்க ப்ரெஸ்ஸூ சார்”

“பிரிண்டிங் ப்ரெஸ்ஸா? எதுவா இருந்தாலும் வண்டியை கஷ்டப்பட்டு தூக்கிட்டு வந்திருக்காங்க. பசங்களுக்கு மட்டுமாவது ஏதாவது கொடுத்துட்டு போங்க”

ரூபாய் நூற்றி ஐம்பது எள்ளு.

3.00 : ஹோட்டலில் சாப்பாடு தீர்ந்து விட்டதால் சிக்கன் பிரியாணி. லெக் பீஸை கடித்ததுமே தெரிந்துவிட்டது. சமையல்காரருக்கு கண் தெரியாது போலிருக்கிறது. கோழிக்குப் பதிலாக காக்காயை கொடுத்து கறிக்கடைக்காரன் ஏமாற்றி விட்டிருக்கான். தொட்டுக்க வைத்த கத்தரிக்காய் கொட்சு, டோங்குரா சட்னிக்கு இணையான காரம். கண்களில் கண்ணீர் தளும்ப பசியாறுதல்.

4.30 : ‘டோ’ பண்ணிக்கொண்டு வந்த டிராபிக் பசங்க வண்டியில் ஏற்ற வாகாக ஹேண்டில்பாரை அசைத்து அசைத்தே மென்மையாக சைட் லாக்கை உடைத்திருக்கிறார்கள். சிடி டான் சைட் லாக் செட் ரூபாய் தொண்ணூறு. ஃபிட் செய்ய தனியாக ரூபாய் பதினைந்து.


மாலை

6.00 : பார்க்கிங்கில் “கசுமாலங்க ஆளாளுக்கு அறிவில்லாம சைட் ஸ்டேண்ட் போட்டுட்டு போயிடறானுங்க. செண்டர் ஸ்டேண்ட் போடுறதுக்கு கூட ........... நோவுது” - சாடைப்பேச்சு தாங்காமல் மரியாதையாகப் போய் செண்டர் ஸ்டேண்ட் போடுதல்.

6.30 : மூன்றேகால் மணிநேர முழுநீளக் காவியம் ‘கந்தசாமி’ திரையிடப்படுகிறது.

11.00 : டாஸ்மாக் குளோஸ்டு. ”எக்ஸ்கியூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி. பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு வழி எப்படி?” நொந்தசாமி பாடிக்கொண்டே இல்லத்துக்கு திரும்புதல்.

21 ஆகஸ்ட், 2009

மீசை!


குமரனுக்கு அந்த கனவு ஆறாவது படிக்கும்போது வந்திருக்கலாம். பத்தாவது படிக்கும் அண்ணன்கள் வெள்ளிக்கிழமை மாலை குசுகுசுவென்று பேசிக்கொள்வதும் சனிக்கிழமை காலை எட்டரை மணிக்கெல்லாம் சைக்கிள் எடுத்துக் கொண்டு ஓடுவதும் அந்த வயதில் ஒரு குறுகுறுப்பை ஏற்படுத்தியிருக்கலாம். என்ன ஏதுவென்று விசாரித்தபோது தான் தெரிந்தது ஆதம்பாக்கம் ஜெயலஷ்மியில் காலை 9 மணி காட்சி ஸ்பெஷல் காட்சியாம். நானும் பத்தாவது போகும்போது அண்ணன்கள் மாதிரி ‘அந்த' மாதிரி படத்துக்கெல்லாம் போகணும் என்று கனவுகளை வளர்த்துக் கொள்ள தொடங்கினான் குமரன்.

ஆறாவதில் வகுப்பில் முதல் மாணவனாக, முதல் பெஞ்சு மாணவனாக இருந்த குமரன் ஏழாவது, எட்டாவது போகும்போது தனது ஸ்பெஷல் திறமைகள் சிலவற்றை வளர்த்துக் கொண்டதால் கடைசி பெஞ்சுக்கு அடித்து துரத்தப்பட்டான். ரேங்க் கார்டில் ரேங்கே இருக்காது. அப்பா மாதிரி அவனே கையெழுத்து போட்டுக் கொள்வான். இந்த காலக்கட்டத்தில் தான் அவனுக்கு அருமையான நண்பர்கள் கிடைத்தார்கள். அருள், சாமி, மீனாட்சி, சேகர், சுதாகர், செந்திலு, சுரேஷு, சரவணன், மோகன், வாழைக்கா விஜி என்று ஏகப்பட்ட பேர். இதில் அருளுக்கு 'அந்த' மேட்டரில் அனுபவமே உண்டு என்று வகுப்பு நம்பியது. அவன் சொன்ன அனுபவ கிளு கிளு கதைகளை பின்னர் மருதம், விருந்து புத்தகங்களில் வாசித்தபோது தான் பயல் அந்த கதைகளோடு தன்னையும் கதாபாத்திரமாக்கி கற்பனையை கலந்து கட்டி தந்திருக்கிறான் என்பது புரிந்தது. இருந்தாலும் அவன் கதை சொன்ன பாணி சுவாரஸ்யமாகவே இருந்தது என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும்.

ஒன்பதாவது படிக்கும்போது சரவணனுக்கு கொஞ்சம் கத்தையாக மீசை இருந்தது. மோகனுக்கு அரும்புமீசை இருந்தது. ஆனால் குமரனுக்கோ மீசை வருவதற்கான அறிகுறியே இல்லை. சரவணனும், மோகனும் ஒருநாள் ஆர்.கே. போவலாம்டா என்று திட்டம் தீட்டிக் கொண்டிருந்தார்கள். ஆர்.கே. என்பது தியேட்டர் ராமகிருஷ்ணா என்பதாக அறிக. ஆலந்தூரில் இந்த தியேட்டர் நீண்ட நாட்களாக கலைச்சேவை புரிந்து வருகிறது. இப்போது எஸ்.கே. என்ற பெயரில் அந்த கலாச்சாரப் பெருவெளியில் இயங்கிக் கொண்டிருக்கிறது. “டேய் எனக்கும் ஆசையா இருக்குடா. நானும் வர்றேண்டா” என்று சொன்ன குமரன் ஏளனமாக புறக்கணிக்கப்பட்டான். புறக்கணித்ததற்கு சரவணனும், மோகனும் சொன்ன காரணம் ‘மீசை'. தியேட்டருக்குள் மீசை இல்லாதவர்களை உள்ளே விடமாட்டார்களாம்.

“பெரிய ஆளுங்க நெறைய பேரு மீசையை ஷேவிங் பண்ணிடுறாங்களே? அவங்களை மட்டும் எப்படி தியேட்டருக்குள்ளே அனுப்புறான்!”

“மச்சான் மீசையை ஷேவிங் பண்ணிக்கிட்டவங்களுக்கெல்லாம் வேற இடத்துலே வேற விஷயம் சரியா இருக்கான்னு செக் பண்ணிட்டு தான் அனுப்புவாங்க. உன்னையும் அதுமாதிரி செக் பண்ணுவாங்க பரவாயில்லையா?” - சரவணன் சொன்ன 'வேற விஷயம்' கொஞ்சம் அந்தரங்கமானது. அந்த வேற விஷயத்துக்கும் கூட அப்போது குமரன் தகுதியோடு இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக்குக்கு போகும் இந்திய அணிக்கு கூட அப்படி ஒரு வழியனுப்பு விழா நடந்திருக்காது. ஆர்.கே.வுக்கு சென்ற சரவணன், மோகன் தலைமையிலான குழுவுக்கு விசில் மற்றும் பலத்த கைத்தட்டலோடு வகுப்பு வழியனுப்பு விழா நடத்தியது. குமரனை போலவே அந்த குழுவில் இடம்பெற விரும்பி நிராகரிக்கப் பட்டவர்களில் சுவாமிநாதனும் ஒருவன்.

ஆனால் ஆர்.கே.வுக்கு சென்று திரும்பிய குழு அவ்வளவு உற்சாகமாக இல்லை. போஸ்டரில் இருந்ததை விட ஸ்க்ரீனில் ரிசல்ட் கம்மி தான் என்று அருள் சொன்னான். சரவணனும், மோகனும் மட்டும் ஆஹா ஓஹோவென்று புகழ்ந்து தள்ளினார்கள். ”ஹேய் மவுனராகம் மோகன் கூட இருக்காருடா.. ராஜாதி ராஜாலே வருமே ஒரு ஆண்ட்டி ஒய்.விஜயா, செக்கச்சேவேன்னு இருக்குமே அந்த ஆண்ட்டி தான் ஹீரோயின்” என்று மோகன் சொன்னான். மோகனும், சரவணனும் சொன்ன அந்தப் படத்தின் மேட்டர், அருள் சொன்ன மேட்டரை விட மொக்கையாக இருந்தது. எனவே கொஞ்ச நாட்களுக்கு 'அந்த' விஷயம் மீதான ஆர்வம் அப்போதைக்கு குமரனுக்கு குறைந்தது.

பாட்டிலுக்குள் அடைத்து வைத்திருந்த பூதத்தை வெளியே விட்டது மாதிரி மறுபடியும் சுவாமிநாதனால் அந்த ஆர்வம் குமரனுக்கு கிளர்த்தெழுந்தது. அப்போதெல்லாம் அதுமாதிரி படங்களை டிடியே இரவு பதினொரு மணிக்கு சனிக்கிழமைகளில் ஒளிபரப்பத் தொடங்கியிருந்தது. வீட்டில் எல்லோரும் தூங்கியபிறகு சுவாமிநாதன் 'அந்த' படங்களை பார்த்துவிட்டு வந்து சதை சொல்லத் தொடங்கினான். ஈவில் டெட் மாதிரி எப்போதாவது விசிஆரில் பார்த்த இங்கிலீஷ் படங்களில் ஓரிரண்டு காட்சிகளை மட்டுமே பார்த்து புல்லரித்துப் போயிருந்தவர்களுக்கு சுவாமிநாதனின் இந்த சனிக்கிழமை புரட்சியால் திடீர் மறுமலர்ச்சி ஏற்பட்டது. எப்படியாவது ஒரே ஒரு முறை ஆர்.கே.வுக்கு போய்விட வேண்டும் என்ற தீராத தாகம் ஏற்படத் தொடங்கியது. பத்தாவது வந்த பின்னர் இதைப்பற்றியெல்லாம் யோசிக்கக் கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை.

வாழைக்கா விஜி மட்டும் பழைய தமிழ்ப்படங்களில் வரும் சில காட்சிகளை கொஞ்சம் மிகைப்படுத்தி சொல்லிக் கொண்டிருப்பான். அவன் சொல்லுவது பெரும்பாலும் ஸ்ரீகாந்த் படக்காட்சிகளாக இருக்கும். அந்த காட்சிகளை காட்ட இயக்குனர்கள் பயன்படுத்தும் சில உத்திகள் குறித்து, அது எப்படி ஒரிஜினலுக்கு பதிலாக சிம்பாலிக்காக காட்டப்படுகிறது என்பது குறித்த பேச்சு வரும். பதினாறு வயதினிலே படத்தில் தேங்காய் உரிப்பது, வேறொரு படத்தில் பருந்து கோழிக்குஞ்சை குறிவைத்து பறப்பது போன்றவை பற்றி எப்போதாவது பேசுவதுண்டு.

இருந்தாலும் கற்பூரம் ஜெகஜோதியாய் எரிந்து அணைந்துவிடுவதை போல அந்த கனவு குமரனுக்கு கிட்டத்தட்ட அணைந்து விட்டிருந்தது. அது முற்றிலும் அணைந்துவிடவில்லை நீறுபூத்த நெருப்பாக உள்ளுக்குள்ளேயே கனலாக இருந்திருக்கிறது என்பதை முரளியோடு பழகிய பின்னர் தான் அவன் உணர்ந்தான். இப்போது குமரன் +1க்கு வந்துவிட்டிருந்தான். மீசை என்று சொல்லிக்கொள்ளும்படி பெரியதாக எதுவும் வளர்ந்துவிடவில்லை என்றாலும் குரல் கொஞ்சம் உடைந்து ஆண்குரல் போலிருந்தது. அப்பாவின் கோத்ரேஜ் ஹேர்டை ஸ்டிக்கை எடுத்து அவ்வப்போது மீசைபோல வரைந்து கொண்டான்.

முரளியும், குமரனும் பரங்கிமலை ஜோதிக்கு போக திட்டமிட்டார்கள். காலை பத்து மணி காட்சி என்று ஒரு அஜால் குஜால் போஸ்டர் நங்கநல்லூர் வட்டாரங்களில் ஒட்டப்பட்டிருந்தது. ஒரு சனிக்கிழமை அந்த படத்துக்கு போயே தீருவது என்று முடிவெடுத்தார்கள். முரளிக்கு கட்டை மீசை, பிரச்சினையில்லை. குமரனுக்கு மீசை சொல்லிக் கொள்ளும்படி இல்லாததால் கொஞ்சம் தொளதொளவென்று ஒரு சட்டையை போட்டுக் கொண்டு கிளம்பினான். கொஞ்சம் பெரிய பையனாக தெரிய ஒரு தொப்பியை மாட்டிக் கொண்டான்.

ஜோதியில் காலை சனி, ஞாயிறு காலை காட்சி மட்டும் ‘அந்த' படம். மீதி நாலு காட்சிகள் “அம்மன்”. என்ன கொடுமை பாருங்கள்?. ”மச்சான் காலையிலே அந்த மாதிரி படத்தை போட்டுட்டு, மத்தியானம் ‘அம்மன்' போடுறாங்களே? எப்படிடா?” முரளியிடம் சந்தேகம் கேட்டான். ”அந்தப் படம் முடிஞ்சதும் தியேட்டரை கழுவித் தள்ளிட்டு 'அம்மன்' போடுவாங்கடா” என்று முரளி சொன்னான். ஏதோ தீட்டு கழிப்பது போல சொன்னாலும், உண்மையில் முரளிக்கும் எப்படி ரெண்டு நேரெதிர் படங்களை போடுகிறார்கள் என்ற லாஜிக் புரியவில்லை.

அது புரட்டாசி சனிக்கிழமை. கவுண்டரில் நின்றவர்கள் நிறைய பேர் நாமம் போட்டிருந்தார்கள். நாமம் + காமம் = ? தலையில் அடித்துக் கொள்ள வேண்டியதுதான். குமரன் கர்ச்சிப்பால் முகத்தை மூடியிருந்தான். அப்பாவுக்கு தெரிந்தவர்கள் யாராவது பார்த்துவிடும் வாய்ப்பு இருந்தது. டிக்கெட் கவுண்டரில் இரண்டு டிக்கெட் வாங்கியாயிற்று. டிக்கெட் கிழிக்கும் இடத்துக்கு செல்லும்போது தான் குமரனுக்கு உதற ஆரம்பித்தது. எப்படியும் முரளி உள்ளே போய்விடுவான், சின்னப்பையனாக தெரிந்த தனக்கு மட்டும் தான் பிரச்சினை என்று உள்ளுக்குள் புலம்பினான். மீசை கத்தையாக இல்லாவிட்டால் 'வேறு' சோதனை நடத்துவார்கள் என்ற சரவணனின் கூற்று வேறு நினைவுக்கு வந்து தொலைத்தது. முரளி ஒரு டிக்கெட்டை உஷாராக கையில் வாங்கி வைத்துக் கொண்டான். பிரச்சினை வந்தால் அவன் மட்டும் போய் பார்த்துவிடும் கள்ளத் திட்டம் அவனிடம் இருந்தது.

டிக்கெட் கிழித்தவர் “தொப்பியை எடு, கர்ச்சிப்பை கயட்டு” என்றதுமே புரிந்துவிட்டது, குமரனால் உள்ளே போகமுடியாது என்று. “என்னடா சின்னப்பயலா இருக்கே? இந்தப் படத்துக்கு வந்திருக்கே?” என்று டிக்கெட் கிழித்தவர் மிரட்ட, திருதிருவென விழித்தான் குமரன். சட்டென்று, “அண்ணே ‘அம்மன்' படம்தானே?” என்று பிளேட்டை திருப்பிப் போட, டிக்கெட் கிழித்தவர் சிரித்துக் கொண்டே, “ஆமாமா.. அம்மன் படம் தான். ஆனா நீ பார்க்க வந்த அம்மன் படமில்லே. ஒரு ஒன் ஹவர் வெளியே வெயிட் பண்ணு. இந்த டிக்கெட்டை கவுண்டர்லே யாருக்காவது வித்துடு. அடுத்த ஷோ உள்ளே வா!” என்று திருப்பி அனுப்பினார். ஏற்கனவே துரோகி முரளி உள்ளே போய்விட்டான்.

இவ்வாறாக குமரனின் அந்த கனவு நீண்டநாட்களாக மெய்ப்படாமல் இழுத்துக்கொண்டே சென்று கொண்டிருந்தது. ஒரு வழியாக கண்ணன் காலனி வெங்கடேசனால் அந்த கனவு மவுண்ட்ரோடு கெய்ட்டி தியேட்டரில் ஒரு சுபயோக சுபமுகூர்த்த தினத்தில் நிறைவேறியது. ஆனாலும் ‘எதிர்பார்த்த' லெவலுக்கு இல்லாததால் மீண்டும் மீண்டும் ஜோதியை நோக்கி படையெடுக்கத் தொடங்கினான். ஜோதி அலுத்துவிட ஜெயலட்சுமி, பானு, விக்னேஸ்வரா, காஞ்சிபுரம் பாலசுப்பிரமணியர், கொட்டிவாக்கம் திருமலை, ஆவடி ராமரத்னா என்று அவனது கனவு பிற்பாடு விரிந்துகொண்டே சென்றது. இப்போதும் கூட எப்போதாவது சனிக்கிழமை மாலைவேளைகளில் குமரனை நீங்கள் போரூர் பானுவில் காணலாம்.

20 ஆகஸ்ட், 2009

ஷகீரா!



ஷகீயை பார்த்த நொடியிலிருந்தே எனக்கு "அந்த" விபரீத ஆசை துளிர்விட ஆரம்பித்தது. இதுவரை நான் கண்ட அழகிகளிலேயே பேரழகி அவள். அவளது குரல் தரும் போதைக்கு நிகரில்லை. அவளது கண்கள் டூமா கோலி குண்டுகள். அளந்துவைத்த மூக்கு. மல்லிகை மொட்டுகளாய் உதடு. செக்கச் சிவந்த நாக்கு. சங்கு கழுத்து. அப்புறம்....

எப்படியாவது ஒரே ஒரு முறை அவளை...

ஆறு மாதத்துக்கு முன்பு சங்கரோடு கடைவீதியில் சைட் அடித்து கொண்டிருந்தபோது தான் அவளை பார்த்தேன். மேகத்திலிருந்து இறங்கும் வெள்ளை தேவதையாய், அலைபோன்ற கேசத்தை தலையாலேயே அசைத்து ஸ்டைலாக ஒதுக்கி ஒயில் நடையுடன் அசைந்தாடி வந்தாள். பார்த்தவுடனேயே என் உள்ளத்தில் பற்றிக் கொண்டது. பற்றிக் கொண்டதின் பெயர் காதல் அல்ல.

காதலுக்கும், எனக்கும் வெகுதூரம்! காதலா? ச்சீ.. கெட்டவார்த்தை!!

என்னடா இது காதலை கூட வெறுப்பானா ஒரு இளைஞன்? என்று நீங்கள் ஆச்சரியப்படுவது தெரிகிறது. என்ன செய்வது? என் கடந்தகால அனுபவங்கள் கசப்பானது. உண்மையான காதலுக்கு எங்கே மதிப்பிருக்கிறது? என்னை காதலித்து ஏமாற்றியவர்கள் பலபேர். காதலிப்பதாக கூறி அவர்கள் காரியத்தை முடித்துக் கொண்டவர்கள் சில பேர். அதிலும் என் கடைசி காதலி ரோஸி ஒரு முறை என் கண் முன்னாலேயே இன்னொருவனோடு.. சேச்சே..சே என்ன கருமம்டா இந்த காதல்?

காதல் என்ற வார்த்தையே ஒரு பம்மாத்து. காதல் போய் சங்கமிக்கப் போவது எப்படியும் காமத்தில் தானே? அப்புறம் எதற்கு இடையில் இந்த அபத்தமான "ஐ லவ் யூ" நடிப்பெல்லாம்? விருப்பமிருந்தாலோ அல்லது வலுக்கட்டாயமாகவோ நேரடியாகவே "அதை" அடைந்துவிட வேண்டியது தான் என்று எண்ணத் தொடங்கி விட்டேன். என் எண்ணங்களுக்கு பிள்ளையார் சுழி போட ஷகீரா தான் முதலாவதாக கிடைத்திருக்கிறாள். வாய்ப்பை நழுவவிட்டு விடக்கூடாது.

ஷகீராவை பற்றி நண்பர்கள் வட்டாரத்தில் விசாரித்தேன். பெரிய இடமாம். வீட்டுக்கு ரொம்ப செல்லமாம். கிட்டே நெருங்குவதைப் பற்றி நெனைச்சி கூட பாக்காதேடா என்றான் சங்கர். நானோ அன்றாடங்காய்ச்சி. அவளோ அரண்மனைவாசி. இது என் மூளைக்கு எட்டுகிறது. மனசுக்கு புரியமாட்டேன் என்கிறதே? என் உள்ளத்தில் அந்த "தீ" கொளுந்து விட்டெரிய ஆரம்பித்தது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவளைப் பார்க்கும் போதெல்லாம் மன்மதன் விட்ட அம்புகள் என் மலர்நெஞ்சை கொஞ்சம் கொஞ்சமாய் காயமாக்கி உயிரை உருக்கிக் கொண்டிருந்தது.

கார்த்திகை மாத நள்ளிரவு. மாலைபெய்த மழையில் தெருவெல்லாம் மசமசவென்றிருந்தது. லேசாக பனிபெய்து கொண்டிருந்தது. பனிமூட்டத்தால் மந்தமான சூழல் நிலவியது. என் உடல் தூங்கிக் கொண்டிருக்க உள்ளமென்னும் அரக்கன் எழுந்தான். இன்று எப்படியாவது ஷகீரா மேட்டரை முடிச்சாகணும் என்று முடிவுசெய்தேன்.

ஓசைப்படாமல் எழுந்து நடந்தேன். தெருவே நிசப்தமாக இருந்தது. என் இதயம அடித்துக் கொள்ளும் லப்-டப் சப்தம் எனக்கே கேட்டது. "இந்த" விஷயத்தில் எனக்கு முன்னனுபவமும் இருந்து தொலைக்கவில்லை. ஷகீராவின் இல்லத்தை நெருங்கிவிட்டேன். பெரிய இரும்புகேட். தொட்டாலே சத்தமிடும் என்று தோன்றியது. காம்பவுண்டை பார்த்தேன். அவ்வளவாக உயரமில்லை. எப்படியும் தாண்டி குதித்து விடலாம்.

நான்கு அடி பின்னால் சென்று ஓடிவந்து தாவி குதித்தேன். "தொப்"பென்ற சத்தம் கேட்டு தோட்டத்தில் சின்ன சலசலப்பு எழுந்தது. மூச்சை இழுத்துப் பிடித்து தரையோடு, தரையாக பதுங்கினேன். ஐந்து நிமிடம் கழிந்தவுடன் மெல்ல எழுந்தேன். பூனை போல் நடைவைத்து வீட்டை நெருங்கினேன்.

ஒவ்வொரு அறையாக எட்டிப் பார்த்துக் கொண்டே சென்றேன். எங்கேதான் இருக்கிறாளோ ஷகீரா? நேரம் வேறு ஆகிக்கொண்டே போகிறது. விடிந்துவிட்டால் காரியம் கெட்டுவிடும். வீட்டின் கடைசி அறை இதுதான். மெல்ல எட்டிப் பார்த்தேன். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் ஷகீரா. வாடாமல்லி போன்ற வசீகரம் ஷகீராவுக்கு. ஒரு நிமிடம் அப்படியே அவளை இமைகொட்டாமல் ரசித்துக் கொண்டிருந்தேன். அவள் மீது பாயும்போது அவள் சத்தம் போட்டுவிடக்கூடாதே என்ற பயமும் இருந்தது. வலுக்கட்டாயமாக நான் ஒரு பெண்ணை அடையப் போவது இதுவே முதல் முறை.

கொஞ்சம் படபடப்பாகவே இருந்தது. இருந்தாலும் ஷகீயின் வனப்பை நினைத்துக் கொண்டே அவளை நெருங்கும்போது "டொம்" என்று என் மண்டையில் ஏதோ விழுந்தது. ஒரு நொடி மூளை இயங்குவதை மறந்துவிட, அடுத்த நொடி "வள்"ளென்று கத்திக் கொண்டே வாலை வேகமாக ஆட்டிக் கொண்டு ஓட ஆரம்பித்தேன். கையில் லத்தியோடு அந்த வீட்டு வாட்ச்மேன் என்னை துரத்த ஆரம்பித்தான். தூக்கம் கலைந்த ஷகீராவும் "லொள்.. லொள்" என்று கத்த ஆரம்பித்தாள். வாட்ச்மேன் துரத்த லாவகமாக ஓடி காம்பவுண்டை தாண்டிக் குதித்து ஓட ஆரம்பித்தேன். என் சத்தத்தைக் கேட்டு ஆங்காங்கே உறங்கிக் கொண்டிருந்த மற்ற தெருநாய்களும் நரிகளைப் போல ஊளையிட்டு இரவின் நிசப்தத்தை கலைக்கத் தொடங்கின. இன்னும் சில நாழிகைகளில் சூரியன் கிழக்கில் வெளுக்கப் போவதற்கான அறிகுறியும் தெரிய ஆரம்பித்தது.

காண்டம்.. காண்டம்..


ய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை கமர்சியல் செக்ஸ் ஒர்க்கர்ஸ் மத்தியில் ஏற்படுத்தும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் அது. இரண்டாண்டுகளுக்கு முன் ஒரு விளம்பர கேம்பைன் சம்பந்தமாக பேச என்னுடைய பாஸோடு போயிருந்தேன். அந்நிறுவனத்தின் தலைவர் ஒரு நடுத்தர வயதுப் பெண். அவரது டேபிளில் இருந்த பேப்பர் வெயிட் விவகாரமான ஷேப்பில் (லிங்க வடிவத்தில்) இருந்தது. எங்களோடு பேசிக்கொண்டேயிருந்தவர் ஒரு ஆணுறையை எடுத்து அந்த பேப்பர் வெயிட்டில் கேஷுவலாக மாட்டினார். எனக்கு கொஞ்சம் கூச்சமாகவும், சங்கடமாகவும் இருந்தது.

என் முகத்தைப் பார்த்த அந்த பெண், “இதுக்கே கூச்சப்பட்டா எப்படி நீங்க எங்களுக்கு கிரியேட்டிவ்ஸ் பண்ணித் தரப் போறிங்க?” என்று கூறி சிரித்தார். ஆணுறை மாட்டப்பட்ட அந்த பேப்பர் வெயிட்டுகள் 'அந்த மாதிரியான' லாட்ஜூகளுக்கு தரப்படுமாம். ஆணுறை என்ற மேட்டரை யாரும், எப்பவும் மறந்துவிடக்கூடாது என்பதால் அதுபோல பேப்பர் வெயிட்டுகள் தயாரிக்கப்பட்டதாம். ஆணுறையை நினைவுபடுத்தும் எந்த ஐடியாவாக இருந்தாலும் தாருங்கள், பரிசீலிக்கிறோம் என்றார்.

மீபத்தில் சென்னை சத்யம் சினிமாஸுக்கு போயிருந்தபோது வரிசையில் எனக்கு முன்பாக ஒரு பெரியவர் நின்று கொண்டிருந்தார். அவருக்கும் முன்பாக ஒரு இளைஞன் நின்றுகொண்டிருந்தான். திடீரென்று 'காண்டம்.. காண்டம்.. காண்டம்' என்று இளைஞனின் செல்போன் அலற, எனக்கு முன்பாக நின்று கொண்டிருந்த பெரியவருக்கு முகம் வேர்த்துவிட்டது. அருகிலிருந்த பெண்கள் சிலர் நாணத்தால் முகம் சிவந்தார்கள். அந்த இளைஞன் எந்த டென்ஷனுமில்லாமல் போனை எடுத்து பேசத் தொடங்கினான்.

வேறொன்றுமில்லை, ஆணுறை விழிப்புணர்வுக்காக பிபிசி வெளியிட்டிருக்கும் ஸ்பெஷல் ரிங்டோன் இது. டிவி விளம்பரங்களில் கூட இந்த ரிங்டோனை நீங்கள் கேட்டிருக்கலாம். பில் & மெலிடா கேட்ஸ் பவுண்டேஷன் நிதியுதவியோடு பிபிசி நிறுவனம் உருவாக்கியிருக்கும் இந்த ரிங்டோன் மூலமாக 'காண்டம்' என்ற சொல் மக்கள் மத்தியில் பரவலாக்கப்படும் என நம்பப்படுகிறது. அடிக்கடி இந்த சொல்லை கேட்டுக் கொண்டேயிருப்பதால் அச்சொல்லை கேட்கும்போது தோன்றும் வெட்கம் மக்களுக்கு மறையும் என்று நம்புகிறார்கள். டிவி, ரேடியோ மற்றும் இண்டர்நெட் மூலமாக இந்த விழிப்புணர்வு பரப்பப்படுகிறது. "புத்திசாலி ஆண்கள் ஆணுறையை உபயோகிக்கிறார்கள்" என்ற தலைப்போடு வரும் விளம்பரங்கள் ஆண்களை கட்டாயம் கவரும். "பேசுறவன் தான் புத்திசாலி" என்று ஒரு கிளி வந்து சொல்லுவதைப் போன்ற விளம்பரம் உங்களுக்கும் நினைவுக்கு வருகிறது தானே?

25 லட்சம் பேர் எச்.ஐ.வி. கிருமி பாதிப்போடு வசிக்கும் இந்தியாவுக்கு இதுபோன்ற விழிப்புணர்வு விளம்பரங்கள் மிகவும் அவசியம். இப்போதெல்லாம் ரிங்டோன்கள் மிக சீரியஸாக இளைஞர்களால் பரிசீலிக்கப்படுகிறது. வித்தியாசமான ரிங்டோன் வைத்திருப்பவர்கள் அனைவரையும் எளிதில் கவருகிறார்கள். ஆணுறை குறித்த விழிப்புணர்வை கொஞ்சம் நகைச்சுவையோடு ரிங்டோனில் சொன்னால் அது எளிதில் பலரையும் கவருகிறது. இந்த ரிங் டோனை மிக சுலபமாக இணையத்திலிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம். இதன் பயனாளிகள் தங்கள் ரிங்டோன் மூலமாக ஒரு சிறிய விழிப்புணர்வை சமூகத்துக்கு ஏற்படுத்தும் வாய்ப்பை பிபிசி வேர்ல்டு ட்ரான்ஸ் இந்தியா சர்வீஸ் நிறுவனம் வழங்கியிருக்கிறது.

இப்போதே ஒரு கோடி பேரையும் தாண்டி இவர்களது தொடர் விளம்பரங்கள் சென்றடைந்திருப்பதாக சொல்கிறார்கள். இந்த விளம்பரங்களை கண்டவர்களில் 70 சதவிகிதம் பேர் தங்கள் நண்பர்களோடு இதுபற்றி பேசியிருக்கிறார்களாம். ஆணுறை குறித்த வெளிப்படையான கலந்துரையாடல் மக்கள் மத்தியில் நிலவவேண்டும் என்பதற்காக இந்த விளம்பரங்களை உருவாக்கியிருக்கிறார்கள் எனும்போது, அவர்களது நோக்கத்தில் வெற்றி கண்டிருக்கிறார்கள் என்றே சொல்லலாம். இந்த விளம்பரங்களை கண்டவர்கள், கேட்டவர்கள் இதுவரை நாலு லட்சம் பேர் தொலைபேசி ஆணுறை குறித்த விவரங்களை அறிந்து கொண்டிருக்கிறார்களாம்.

எக்ஸ்ட்ரா பாக்ஸ் மேட்டர் : அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் பலவும் இவ்வாறாக பல கோடியை கொட்டி நூதனமுறையில் விளம்பரங்கள் செய்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில் அரசு இந்த விவகாரத்துக்கு செலவழிக்கும் பணம் என்னவாகிறது என்று பார்த்தோமானால் வருத்தமே மிஞ்சுகிறது. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு சிலகாலம் முன்பாக நாடெங்கும் பல்லாயிரம் இடங்களில் ஆணுறை வழங்கும் இயந்திரத்தை நிறுவியது. ஒரு ரூபாய் போட்டு போன் பேசுவது போல மிக சுலபமாக காசினை இயந்திரத்துக்குள் செருகி ஆணுறை பெற்றுக் கொள்ளக்கூடிய வசதி அது. மருந்துக்கடைகளில் ஆணுறை சொல்லி வாங்க கூச்சப்படுபவர்களுக்காக இதுபோன்ற இயந்திரங்கள் நிறுவப்பட்டது.

படத்தில் இருப்பது சென்னை தேவி தியேட்டர் காம்ப்ளக்ஸில் ஒரு பெட்டிக்கடை வாசலில் இருக்கும் ஆணுறை வழங்கும் இயந்திரம். நிறுவியதோடு சரி, எந்த பராமரிப்பும் இன்றி சில மாதங்களிலேயே வெறும் பெட்டியாகிப் போனது. இப்போது சிகரெட் பற்றவைக்க விரும்புபவர்களுக்காக அதில் தீப்பெட்டியையும், கயிறு ஒன்றில் தீயையும் பற்றவைத்து நூதனமாக அந்த இயந்திரத்தை பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார் அந்த பெட்டிக்கடைக்காரர். நகரின் முக்கியப் பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் இயந்திரத்தின் கதியே இதுவென்றால் மற்ற இடங்களில்