24 ஆகஸ்ட், 2009

பிறந்தநாள்!


காலையில் இருந்து ரத்தக்கண்ணீர் செகண்ட் ஹாஃப் எம்.ஆர்.ராதா மாதிரி புலம்பிக் கொண்டிருக்கிறேன்.

முன்பெல்லாம் பிறந்தநாள் வந்தால் புது டிரஸ் கிடைக்கும். பள்ளிக்கு அன் யூனிபார்மில் போகலாம். எல்லோருக்கும் சாக்லேட் கொடுக்கலாம். அன்றைக்கு மட்டுமாவது யாரும் அடிக்க மாட்டார்கள், திட்டமாட்டார்கள். இதே சலுகை நியூ இயருக்கும் உண்டு. அந்த தேதிகளில் அடி வாங்கினால், வருஷம் முழுக்க அடிவாங்கிக் கொண்டே இருப்போமாம். கோயிலில் அர்ச்சகர் ‘மோகனகிருஷ்ணகுமார நாமஸ்தேயே’ என்று ஏதோ சொல்லுவார். அர்ச்சகரால் பலபேருக்கு முன்பாக நம் பெயர் உச்சரிக்கப்படும் போதை சுகமானது.

ஏழெட்டு வயதில் கமல்ஹாசன் மாதிரி ஸ்டெப்கட்டிங்குக்கு ஆசைப்பட்டு, அம்மாவின் கட்டாயத்தால் அது நடக்காமல் குருதிப்புனல் கமல் மாதிரி ‘அரைவட்டை’ அடித்துக் கொண்டிருந்த வயதுகளில் ஒவ்வொரு பிறந்தநாளும் எதிர்பார்ப்பை கூட்டிக்கொண்டே இருந்தது. ‘எனக்கும் வயசு ஆவுதுல்லே. ஒரு நா இல்லாக்கா ஒரு நா ஸ்டெப்கட்டிங் வெட்டிப்பேன்’. ஸ்டெப் கட்டிங் வெட்டிக் கொள்ளும் வயது வந்தபோது, அது ஓல்டு பேஷன் ஆகிவிட்டது வருத்தமான சோகம். அதே போல பெருத்த எதிர்ப்பார்ப்போடு இருந்து, இழந்த இன்னொரு விஷயம் பேக்கீ பேண்ட். தகுந்த வயது வரும்போது பேரல்லல் பேஷன் ஆகிவிட்டது.

கைவலிக்க ஹோம் ஒர்க் எழுதும் காலத்தில் வேலைக்குப் போகிறவர்களை பார்த்து பொறாமையாக இருக்கும். ’அவங்களுக்கு எந்த கமிட்மெண்டும் இல்லை. வேலை முடிஞ்சா ஜாலி, சினிமாவுக்குப் போகலாம், ஊர் சுற்றலாம்’. அதிலும் பஸ்ஸில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்துக் கொண்டு ஏதாவது பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்தால், ‘நானும் பெரியவனாகி இதே மாதிரி குமுதம், விகடன் வாங்கிப் படிக்கணும்’ என்று நினைத்துக் கொள்வேன். அனேகமாக நான் சிறுவயதில் ஏங்கிக் கொண்டிருந்தது ‘தேர்ந்தெடுக்கும் உரிகைக்காக’ என்று நினைக்கிறேன். இப்போது இதையெல்லாம் நினைத்துப் பார்த்தால், சின்னப்பயலாக இருக்கும்போது எல்லோரையும் போலவே நானும் எவ்வளவு அபத்தமாக சிந்தித்திருக்கிறேன் என்பது புரிகிறது.

மீசை என்று சொல்லிக்கொள்ளும்படி ஏதாவது முளைக்காதா என்று ஏங்கில காலமும் இருந்தது. சரியாக முளைக்காத மீசையை கத்தையாக காட்டிக்கொள்ள கோத்ரேஜ் ஹேர் டை ஸ்டிக் எடுத்து தடவைக்கொண்டதும் நினைவுக்கு வருகிறது. உங்களைவிட ஒருவயது குறைந்த பெண், உங்கள் தோற்றத்தைக் கண்டு குறைவாக மதிப்பிட்டு, ‘தம்பி’ என்று அழைத்த கொடுமையை நீங்கள் அனுபவித்தது உண்டா? எப்படியோ மீசை என்ற வஸ்து முளைத்த பிற்பாடு லேசாக ‘வயதாகி விட்டதோ!’ என்றொரு ஃபீலிங்கும் வந்ததுண்டு. இதனாலேயே நன்கு வளர்ந்த மீசை முடிகளின் அடர்த்தியை கத்தரிக்கோல் கொண்டு குறைத்ததும், அப்படியும் லேசாக கண்ணுக்கு கீழே உருவாகிய கருவளையம் கொண்டு கவலை அடைந்ததும் மறக்கக் கூடிய விஷயங்களா?

பூஞ்சை உடம்பைக் கண்டு வெறுத்துப்போய் ஒயின்ஷாப்பில் தினமும் பீர் அடித்து (சளிபிடித்து), அப்படியும் உடம்பு ஏறாமல் சொப்பன ஸ்கலித டாக்டர்களிடம் போகலாமா என்று ஆலோசித்து, அதுவும் சரிபடாமல் ‘வாட்டர்பரீஸ் காம்பவுண்ட்’ குடித்து, அரைகுறையாய் எக்சர்ஸை செய்து, உடல் வலித்து... ச்சே... கொடுமையானது மானிடப்பிறவி!

இப்போது பிறந்தநாள் என்றாலே பகீர் என்கிறது. ட்ரீட் மாதிரி விஷயங்களில் பர்ஸு பழுத்து விடுகிறது என்ற சோகம் ஒருபுறம் இருந்தாலும், உயிர்வாழும் நாட்களில் ஒரு வருடம் குறைகிறது என்ற யதார்த்தம் முகத்தில் அறைகிறது. ’மவனே உனக்கு சாவு நெருங்குதுடா’ என்று காலண்டர் பயமுறுத்துகிறது. அவசர அவசரமாக சம்பாதிக்க வேண்டிய தேவையை உணரமுடிகிறது. பணத்தை தேடி அசுர ஓட்டம் ஓட வேண்டியிருக்கிறது. நாற்பது வயதில் இந்த ஓட்டத்தை பலரும் ஓடி முடித்து விடுகிறார்கள். ஓடி முடிக்க முடியாவிட்டால்? வாழும் மீதி நாளையும் நரகமாகவே கழித்துத் தொலைக்க வேண்டும். தெனாலி கமல் மாதிரி எதைப் பார்த்தாலும் பயமாக இருக்கிறது. அனுபவத்தில் கண்டதில் வயோதிகம் மோசமானது. வயோதிகன் ஆவதைவிட விபத்தில் எதிர்பாராவிதமாக செத்துவிடலாம் என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது.

பள்ளிச்சீருடை அணிந்த ஒரு மாணவி ஒருவளால் எவன் ஒருவன் முதல் தடவையாக ’அங்கிள்’ என்று விளிக்கப்படுகிறானோ, அன்றே அவன் பாதி செத்து விடுகிறான், லைட்டாக மூப்படைந்து விடுகிறான். அவனுடைய யூத்து என்கிற அகங்காரம் அழிந்துவிடுகிறது. இன்றோடு என் அகங்காரம் அழிந்தது, ஈகோ ஒழிந்தது.

38 கருத்துகள்:

  1. //பள்ளிச்சீருடை அணிந்த ஒரு மாணவி ஒருவளால் எவன் ஒருவன் முதல் தடவையாக ’அங்கிள்’ என்று விளிக்கப்படுகிறானோ, அன்றே அவன் பாதி செத்து விடுகிறான், லைட்டாக மூப்படைந்து விடுகிறான். அவனுடைய யூத்து என்கிற அகங்காரம் அழிந்துவிடுகிறது. இன்றோடு என் அகங்காரம் அழிந்தது, ஈகோ ஒழிந்தது//

    இன்னைக்கு யாராவது கல்லூரி மாணவி உங்களை அங்கிள்னு சொன்னாளா? இல்லை இன்று உங்கள் பிறந்த நாளா?

    பிறந்த நாள் என்றால், பல்லாண்டுகள்ள் அனைத்து சுகங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. பிறந்த நாளா... வாழ்த்துக்கள்.... உங்க பிறந்த நாளுக்கு போடோல இருக்கிற பிள்ளை ஏன் அப்படி பாக்குது ??

    பதிலளிநீக்கு
  3. போட்டோவுல இருக்கும் "பாப்பா" யாருங்க லக்கி.....

    பதிலளிநீக்கு
  4. பள்ளிச்சீருடை அணிந்த ஒரு மாணவி ஒருவளால் எவன் ஒருவன் முதல் தடவையாக ’அங்கிள்’ என்று விளிக்கப்படுகிறானோ, அன்றே அவன் பாதி செத்து விடுகிறான், லைட்டாக மூப்படைந்து விடுகிறான். அவனுடைய யூத்து என்கிற அகங்காரம் அழிந்துவிடுகிறது.///

    அனுபவத்தில் கண்ட உண்மையின் வெளிப்பாடு..

    நல்ல பதிவு லக்கி

    பதிலளிநீக்கு
  5. பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. பிறந்த நாள் வாழ்த்துகள் அங்கிள் :-))

    பதிலளிநீக்கு
  7. //பள்ளிச்சீருடை அணிந்த ஒரு மாணவி ஒருவளால் எவன் ஒருவன் முதல் தடவையாக ’அங்கிள்’ என்று விளிக்கப்படுகிறானோ,

    'oruval' is wrong.'oruththi' is the correct word. other than that i agree with you. here in bangalore, almost every one, even housewives in neighbouring homes, address males as uncles! my daughter is in 4th standard, her play mate is 3rd standard, but his mom once called me uncle! I was shattered that day!

    பதிலளிநீக்கு
  8. பிறந்த நாள் வாழ்த்துக்கள் யுவகிருஷ்ணா

    பதிலளிநீக்கு
  9. இன்னிக்கு உங்களுக்கு பிறந்தநாள்னா அதற்கு வாழ்த்துக்கள். :)

    பதிலளிநீக்கு
  10. பிறந்த நாள் வாழ்த்துகள் லக்கி !!! நலமுடன் வாழ கடவுளிடம் பிராத்திக்கிறேன் !!!

    பதிலளிநீக்கு
  11. கன்பார்ம்டுங்க...பழைய இடுகைகளெல்லாம் தேடிப்பார்த்தேனுங்க.

    உங்களுக்கு இன்னிக்கு பிறந்தநாள்தான்...

    வாழ்த்துக்கள் லக்கி. நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. பிறந்த நாள் வாழ்த்துக்கள் லக்கி. ட்ரீட் பிரச்சினைக்கு ஒரு சுலபமான தீர்வு இருக்கிறது. உங்கள் நண்பர்கள் எல்லோரிடமும் சொல்லி வைத்துக்கொண்டு, பிறந்த நாள் காரரைத்தவிர அனைவரும் ஆகும் செலவை ஷேர் செய்து கொள்வதுதான் அது. பிறந்த நாள் காரருக்கும் சந்தோஷம், மற்றவர்களுக்கும் ஷேர் செய்து கொள்வதால் பெரிதாகத் தெரியாது.

    பதிலளிநீக்கு
  13. பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  14. x.யூத்க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  15. இந்த முதிர்ச்சி எரிச்சலாக இல்லையா? நாப்பதுக்கு இன்னும் நாள் இருக்கிறது தலைவரே

    பதிலளிநீக்கு
  16. பிறந்த நாள் வாழ்த்துக்கள் லக்கி.
    இன்னொரு “யூத்து” வந்தா பதிவுலகம் தாங்காது லக்கி, பாத்து செய்யுங்க.
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்
    bostonsriram.blogspot.com

    பதிலளிநீக்கு
  17. வாழ்த்துகள் லக்கி.

    //பள்ளிச்சீருடை அணிந்த ஒரு மாணவி ஒருவளால் எவன் ஒருவன் முதல் தடவையாக ’அங்கிள்’ என்று விளிக்கப்படுகிறானோ, அன்றே அவன் பாதி செத்து விடுகிறான்,//

    அதே ரத்தம்.

    பதிலளிநீக்கு
  18. dear லக்கி,
    excellent article.
    பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்:-))
    -senthil.g,tiruppur,

    பதிலளிநீக்கு
  19. பதிவு பயங்கர அனுபவ பதிவா இருக்கு....பர்த்டேவுக்கு சந்தோஷப்பட்றதா இல்ல துக்கப்பட்றதான்னு எனக்கு கவலை வந்துருச்சி...:0))

    பதிலளிநீக்கு
  20. பெயரில்லா4:42 AM, ஆகஸ்ட் 25, 2009

    Hi Lucky

    Birthday wishes - so how old are you now? 40+ ?

    Only you can write even such sensitive issues as comedy and make it enjoyable

    Friend from Bangalore

    பதிலளிநீக்கு
  21. ஹாப்பி ஹாப்பி பர்த்டே பர்த்டே பாய்!

    பதிலளிநீக்கு
  22. //ஹாப்பி ஹாப்பி பர்த்டே பர்த்டே பாய்//

    பரிசல் பதிவ படிச்சிங்களா?

    ஹாப்பி ஹாப்பி பர்த்டே பர்த்டே மேன் அல்லது அங்கிள் :))

    பதிலளிநீக்கு
  23. உங்கள் பதிவுகளை தினமும் மின்னஞ்சல் வழி படிக்கிறேன்... அதான் பின்னூட்டங்கள் ரொம்ப குறைவு.. ஆன இப்போ வாழ்த்து சொல்லியே ஆகனும்னு தோனிச்சி... வந்துட்டேன்..

    பிறந்த நாள் வாழ்த்துகள் பாஸ்...


    அங்கிள்னு கூப்பிட்டா கவலை படாதிங்க... காதலித்துப்பார் புத்தகத்தில் வைரமுத்து சொல்லிருக்கர்... "நாற்பதில் மீன்டும் காதல் வரும்.. புன்னகை வரை போ... புடவை தொடாதே" அப்டின்னு...

    SO...... ENJOY THE LIFE THALA....

    பதிலளிநீக்கு
  24. மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். ஏதோ பள்ளி மாணவி உங்களை அங்கிள் னு சொல்லிட்டளா என்ன? இவ்வளவு feel பண்ணிருக்கீங்களே.

    பதிலளிநீக்கு
  25. Dear Yuvakrishna,

    Your article about 'BirthDay' is really wonderful. Almost 100% it reflect my young age, teenage memories like a (time) mirror that I can see myself.

    But Krishna, we can sure able to write about our young & teenage and post teenage life in volumes, it wont contain in mere few hundred words.

    Happy to share few words about your wonderful article.
    Thanks
    Naveen Krishna

    பதிலளிநீக்கு
  26. பெயரில்லா8:59 PM, ஆகஸ்ட் 25, 2009

    உங்கள் எழுத்துக்களில் இளமை- துள்ளல் இருக்கிறது.

    பிறந்த நாள் வாழ்த்துக்கள்


    அன்புடன்
    எஸ். எஸ். ஜெயமோகன்

    பதிலளிநீக்கு
  27. மிகவும் அழகாக எழுதப்பட்ட கட்டுரை.

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் யுவகிருஷ்ணா.

    பதிலளிநீக்கு
  28. பெயரில்லா10:21 PM, ஆகஸ்ட் 26, 2009

    வாழ்த்துக்கள்.
    இந்தக் கட்டுரை சுஜாதாவின் பிரபலமான பிறந்த நாள் கட்டுரையை ஞாபகப்படுத்தினாலும் உங்கள் டச் நன்றாக தெரிகிறது. இன்னும் விரிவாக எழுதியிருக்கலாமோ?
    பல இடங்கள் அவர் தொட்ட விஷயங்கள் போல தோன்றுகிறது. ம்.... அவரது ஆளுமை அப்படி. மிகச் சிறந்த கட்டுரை நண்பரே.
    செல்வன்.

    பதிலளிநீக்கு
  29. பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  30. “நான் எழுதினா கூட 28ஆம் நம்பர் பஸ் ட்ரைவர் பிலாக்கெல்லாம் படிக்கமாட்டாரே?”

    இதுலாம் ரொம்ப ஓவரு.

    பதிலளிநீக்கு