24 ஆகஸ்ட், 2009

சென்னை-பை-நைட்


'பாரிஸ் பை நைட்' என்பார்கள். அந்த லெவலுக்கெல்லாம் சென்னை எப்போதும் இருந்ததில்லை, எதிர்காலத்தில் மாறலாம். பத்து, பதினைந்து ஆண்டுகளாக சென்னையின் இரவுகளை உன்னிப்பாக கவனித்ததில் ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது. சென்னைவாசிகளுக்கு தூக்கம் முக்கியம். பத்து மணி ஆனாலே அலாரம் அடித்தது மாதிரி தூங்கப் போய்விடுகிறார்கள் அல்லது சன் டிவியில் பத்தரை மணிக்கு படம் பார்க்கத் தொடங்குகிறார்கள். கால் சென்டர்களிலும், பிபிஓக்களிலும், பத்திரிகைகளிலும், சினிமாக்களிலும், விளம்பரத்துறையிலும், அச்சுத்துறையிலும், இன்னும் சில துறைகளில் பணிபுரியும் கோட்டான்கள் தவிர்த்து மீதி அனைவருமே தூக்கப் பிரியர்கள். செக்யூரிட்டிகளும், காவலாளிகளும் கூட உட்கார்ந்த இடத்திலேயே இங்கு தூங்கிப் பழகியவர்கள்.

ஓவராக குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வழி தெரியாதவர்களும், வானமே கூரையாய் வாழ்பவர்களும் பிளாட்பாரங்களில் ஒதுங்கி வாழ்கிறார்கள். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாசாலை பிளாட்பார தூங்குமூஞ்சிகளை நிறைய கண்டிருக்க முடியும். 'சென்னை ஈஸ் எ காஸ்மோபாலிட்டன் சிட்டி, நேஸ்ட்டி அக்லி சிடிசன்ஸ்' என்று முகஞ்சுளித்தவர்கள் புண்ணியத்தால் இப்போது அண்ணாசாலை பிளாட்பார்ம்கள் வெறிச்சோடிப் போயிருக்கிறது. கே.கே.நகர், வடபழனி பிளாட்ஃபார்ம்கள் பரபரப்பாகியிருக்கிறது.

தினமலர் காலத்தில் என்னுடைய டிவிஎஸ் சேம்ப் தின அண்ணாசாலை பரபரப்புக்கும், இப்போதிருக்கும் அண்ணாசாலை பரபரப்புக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. அப்போதும் சரி, இப்போதும் சரி ஸ்பென்சர்ஸ்க்கு எதிரில் இருக்கும் காவல்நிலையத்தை தாண்டுவது அடிவயிற்றில் புளியைக் கரைக்கும் விஷயம். அப்போதாவது பரவாயில்லை “ப்ரெஸ்சுங்க” என்று மிதப்பாக சொன்னால் சலாம் விட்டு அனுப்பி வைப்பார்கள். இப்போது “ப்ரெஸ்” என்று சொன்னாலும் டவுசரைக் கயட்டி செக் செய்து தான் அனுப்புகிறார்கள். பேருந்து நிலையம் கோயம்பேடுக்கு போய்விட்டதால் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை, மைக்கேல் ஜாக்சனை உச்சபட்ச ஒலியில் அலறவிட்டுப் பறக்கும் நவீனரக கார்கள் வெற்றிகரமாக நிரப்புகின்றன. இரவுகளில் டூவீலர் மாதவன்கள் லேன் மாறி ஓட்டுவது உயிருக்கு ஆபத்து.

பிலால் இருந்தவரை நைட்டு ஒரு மணிக்கெல்லாம் கூட பிரியாணி சுடச்சுட கிடைக்கும். பிலால் இல்லாத குறையை அண்ணாசாலை மசூதிக்கு எதிரிலிருக்கும் ஒரு ஹோட்டல் சரிகட்டுகிறது. மதுரையில் அதிகாலை ஒரு மணிக்கு கூட இட்லி கிடைக்கும் என்பார்கள். சென்னையில் பொதுவாக பதினொன்று, பதினொன்றைக்கு மேல் உணவு கிடைப்பது சிரமம். பாண்டிபாஜார் டீலக்ஸை மட்டும் நம்பிப் போகலாம். தெருவோர பிரியாணி கடைகளும், கையேந்தி பவன்களும் கூட குடிகாரர்கள் தொல்லையாலும், போலிஸின் அதிகாரத்தாலும் பத்தரை மணிக்கே மூட்டை கட்டிவிடுகிறார்கள்.

கமிஷனர் சேகர் பதவி ஏற்றாலும் ஏற்றார், பலராம் நாயுடுவுக்கு வந்த சிக்கல்கள் மாதிரி சிக்கலோ சிக்கல். பிரஸ்மீட்களில் கம்பீரமாக முழங்கினாலும் சைக்கோ கொலைக்காரன் தண்ணி காட்டுகிறான். போதாக்குறைக்கு பெங்களூர், ஆமதாபாத் குண்டுவெடிப்புகள் போலிசாருக்கும், சென்னைவாசிகளுக்கும் பீதியையும், பேதியையும் சமவிகிதத்தில் கொடுத்திருக்கிறது. பெண் போலிசாரை நைட் ரவுண்ட்ஸில் முன்பெல்லாம் காணமுடியாது. ஆள் பற்றாக்குறை போலிருக்கிறது. பெண் போலிசாரும் ஆங்காங்கே ”வாயை ஊது!” என்று சோதித்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக பையை நோண்டி டிபன்பாக்ஸை திறந்து பார்க்கிறார்கள். குண்டுகள் கடத்த டிபன்பாக்ஸ் தான் சவுகரியம் போலிருக்கிறது.

இரண்டு நாட்கள் முன்னதாக நீண்டநாள் கழித்து சென்னையை இருசக்கர வாகனத்தில் ஒரு ரவுண்டு அடிக்க முடிந்தது. சைக்கோ பீதி, வெடிகுண்டு பயம் இதையெல்லாம் நேரில் காண ஆவல். பண்ணிரண்டரை மணிவாக்கில் தேவி தியேட்டருக்கு அருகிலிருந்து கிளம்பியவன் அண்ணாசாலை காவல்நிலையத்தை தவிர்க்க வேண்டி (வாயை ஊத சொல்லிட்டாங்கன்னா சங்காச்சே?) லெப்ட் அடித்து மணிகூண்டை அடைந்தேன். இடதுபுறம் திரும்பி ராயப்பேட்டை மருத்துவமனை வழியாக போயிருக்க வேண்டும். அங்கிருக்கும் ராயப்பேட்டை காவல்நிலையத்தை தாண்டிச் செல்லவேண்டுமென்ற விதி இருந்ததால் நேராக திருவல்லிக்கேணிக்கு வண்டியை விட்டேன். ராயப்பேட்டையில் மாட்டினால் உடனடியாக ராயப்பேட்டை ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்று டிரிங் & ட்ரைவ் சர்ட்டிபிகேட் வாங்கிவிடுவார்கள். பீச் ரோட்டில் பொதுவாக ஓவர்ஸ்பீடாக வருகிறானா என்றுதான் பார்ப்பார்கள், நார்மல் ஸ்பீடில் செல்பவனை கண்டுகொள்ள மாட்டார்கள் என்பதால் பீச் ரோடை தேர்ந்தெடுத்தேன்.

முன்பெல்லாம் இரவுகளில் பீச் ரோட்டில் ஆட்டோ ரேஸ் நடக்கும். போலிஸ்காரர்களின் நெருக்கடியால் பீச் ரோட்டில் நடந்த ரேஸ் இப்போது சாந்தோமில் இருந்து சத்யா ஸ்டுடியோ வரை நடக்கிறதாம். அதிவேக கொலைவெறி ஆட்டோக்களுக்கு இடையில் மாட்டிக்கொள்ள விரும்பாமல் சாந்தோமில் இருந்து ரைட் அடித்து மயிலைக்கு வந்தேன். மயிலாப்பூர் போலிஸ் ஸ்டேஷனை தவிர்க்க தினகரனுக்கு முன்பாக வந்த ஏதோ ஒரு சந்தில் நுழைந்து கபாலீஸ்வரர் கோயிலை தொட்டு, குளத்தை சுற்றி மந்தைவெளியை நோக்கி வண்டியை முறுக்கினேன். எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ, அது நடந்து விட்டது. மேற்கு மாடவீதியும், வடக்கு மாடவீதியும் சந்திக்கும் சந்திப்பில் போலிஸ் செக்கப். ஒரு பெண் போலிஸ் சுறுசுறுப்பாக வண்டி டாக்குமெண்டுகளை டார்ச் அடித்து பார்த்துக் கொண்டிருந்தார்.

ஒரு ஃபோர்டு ஐகானில் இருபதுகளில் ஆறு பேர் அதிவேகமாக வந்து பிரேக் அடித்து நின்றார்கள். ‘கண்களிரண்டால்' பாட்டை சத்தமாக அதிரவிட்டிருந்தார்கள். டிரைவர் சீட்டில் இருந்தவர் காரிலிருந்தபடியே டாக்குமெண்ட்களை காட்டினார். ”வாயை ஊதுங்க” என்று சொன்னதுமே “டாக்குமெண்ட்ஸ் சரியா இருக்கில்லே? அப்புறம் எதுக்கு வாயை ஊதச்சொல்றே?” என்று ஒருமையில் போலிஸ்காரரை கேட்டதுமே, கோபமடைந்த போலிஸ்காரர் வண்டிச்சாவியை பிடுங்கிக் கொண்டுப் போனார்.

பயத்தில் ஹெல்மெட்டை கழட்டாமலேயே டாக்குமெண்ட்ஸை காட்டினேன். ”பாலிசி பேப்பர் வர ஒரு வாரமாகும். இன்சூரன்ஸ் ரிசீப்ட் மட்டும் இருக்கு” என்று சொல்லிவிட்டு என் கம்பெனி ஐடெண்டிகார்டை காட்டினேன். நல்ல வேளையாக அந்த பெண் போலிஸ் வாயை ஊத சொல்லவில்லை. மாணிக்சந்தையும், பாஸ் பாஸையும் சரிவிகிதத்தில் மிக்ஸ் செய்து போடுபவன் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவன். ஃபோர்டு ஐகான் காரரிடம் “பேரு சொல்லுங்க சார்!” என்றவாறே நகர்ந்தார் அந்த பெண் போலிஸ். “நான் அட்வகேட்” என்று ஃபோர்டு சொல்ல, “பேரை தான் கேட்டேன், ப்ரொபஷனை கேட்கலை!” என்று கடித்துக் கொண்டிருக்க நூறு ரூபாய் மிச்சமான குஷியில் வண்டியைக் கிளப்பினேன்.

இரண்டாண்டுகளுக்கு முன்புகூட மந்தைவெளி பஸ்ஸ்டாண்டை சுற்றி நிறையப் பேர் பிளாட்பார்ம்களில் உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன். இப்போது வெறிச்சோடியிருக்கிறது. சைக்கோ பீதி. அடையார் பிரிட்ஜ் அமைதியாக இருந்தது. வழியெங்கும் பிளாட்பார்ம் வாசிகளை எங்கேயுமே காணமுடியவில்லை. மத்திய கைலாஷை தவிர்க்கவே முடியவில்லை. சாதாரண நேரத்திலேயே அங்கே வசூல்ராஜாக்கள். இரவில் சொல்லவும் வேண்டுமா?

பத்து கார்கள், இருபது டூவீலர்கள் மடக்கப்பட்டிருந்தன. கிழிஞ்சது கிருஷ்ணகிரி என்று நினைத்தவாறே பைக்கை ஓரம் கட்டினேன். கார்களின் டிக்கிகள் சோதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. ப்ரகாஷ்ராஜ் ஜாடையில் இருந்த போலிஸ்காரர் ஒருவர் ஹெல்மெட்டையெல்லாம் கழட்ட சொல்லவில்லை. ”ஐடெண்டி கார்டு மட்டும் காட்டு, குடிச்சிருக்கியா, ஆர்சி புக் இருக்கானெல்லாம் கேட்கமாட்டேன்” என்று சொல்லி ஆச்சரியப்படுத்தினார். ஐடெண்டி கார்டை காட்டியதுமே நன்றி சொல்லி அனுப்பிவைத்தார்.

சென்னையில் ஒரு பிரச்சினை. பதினொரு மணிக்கு மேல் தம் அடிப்பதற்கும், பாக்கு போடுவதற்கும் பொட்டிக்கடைகளே இருக்காது. ரெகுலர் தம்மர்கள் பாக்கெட்டாக வாங்கி ஸ்டாக் செய்துகொள்வார்கள். திருட்டு தம்மர்கள் பாடு தான் திண்டாட்டம். ஏதாவது பொட்டிக்கடை இருந்தாலாவது லூசில் வாங்கி அடிக்கமுடியும். தரமணி ரோட்டில் டிசிஎஸ் அருகே இருபத்தி நாலுமணி நேர பொட்டிக்கடை ஒன்று மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இயங்குகிறது. எந்த நேரத்திலும் டீ, சமோசா, சிகரெட், பாக்கு தாராளமாக கிடைக்கிறது.

வேளச்சேரி விஜயநகரில் ஆட்டோக்காரர்களை தவிர்த்து யாரையுமே காணோம். போலிஸ் விழிப்பாக இருக்க வேண்டிய ஜங்ஷன் அது. வேளச்சேரி மேம்பாலத்தில் முன்பெல்லாம் அடிக்கடி ஷூட்டிங் நடக்கும், (அறிந்தும் அறியாமலும், வேட்டையாடு விளையாடு, பரட்டை (எ) அழகுசுந்தரம் etc.) இரவுகளில் பரபரப்பாக இருக்கும். ரயில்வே ஸ்டேஷன் இயங்க ஆரம்பித்தப் பிறகு சினிமாக்காரர்கள் ஏனோ அந்த மேம்பாலத்திடம் பாராமுகம் காட்டுகிறார்கள்.

மடிப்பாக்கம் சதாசிவம் நகர் சுடுகாட்டுக்கு அருகே இருக்கும் சொறி நாய்கள் எழுபது கிலோ மீட்டர் வேகத்தில் அனாயசமாக ஓடுகின்றன. டூவீலர்காரர்கள் சிகாகோ பேண்டோடு வீட்டுக்கு போகவேண்டியிருக்கிறது. ஒன்றரை மணிக்கு வீடு போய் சேர்ந்தேன். சென்னை மாநகர, புறநகர காவலர்களிடம் மாணிக்சந்த் உதவியால் தப்பினாலும் வீட்டில் மாட்டிக்கொள்ளும் ஆபத்து அதிகம். திக்கற்றவர்களுக்கு கொய்யா இலையே துணை. வீட்டிற்கொரு கொய்யா மரம் வளர்ப்போம்.

16 கருத்துகள்:

  1. யார் பார்த்தாலும் சென்னை, சென்னை என்று உயிரை விட்டுக் கொண்டிருப்பதால் பாம் ட்ரீட் இருந்த நேரத்தில் எழுதிய இந்தப் பதிவை அவசர அவசரமாக மீள்பதிவு செய்துத் தொலைக்கிறேன்.

    சென்னை என்று ஒரு பதிவு எழுதித் தொலைக்காவிட்டால் தமிழ் வலைப்பதிவர் சங்கத்திலிருந்து செருப்பால் அடித்து துரத்தி விடுவார்களோ என்ற அச்சம் மேலிடவே இந்தப் பதிவு அவசரமாக மீள்பதிவு செய்யப்படுகிறது என்று இப்பதிவு மீள்பதிவு செய்யப்படுவதற்கான ஜஸ்டிபிகேஷனையும் ஆணித்தரமாகவும், சுத்தித்தரமாகவும் இங்கே ஆப்பாக அடிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. பின்னூட்டம் போட்டா, சென்னையை சுத்திகாட்டினதுக்கு ஒரு குவார்ட்டர வெட்டுன்னு சொல்லமாட்டீங்களே!

    :)

    பதிலளிநீக்கு
  3. செமத்தி.! பாதிக்கு மேல என்னடா இது மீள்பதிவா என்று நினைக்கும் வேளையில்தான் பின்னூட்டத்தை கவனிக்கிறேன்.

    இதெப்போ? அப்ப சென்னை பத்தி நானும் எயிதணுமா.?

    பதிலளிநீக்கு
  4. இது சென்னயப்பத்தியா? நான் ஏதோ பான்ப்ராக்கு பதிவுன்னு நினைச்சுட்டேன்.

    பதிலளிநீக்கு
  5. // சென்னையின் இரவுகளை உன்னிப்பாக கவனித்ததில் ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது //


    வேற எந்த காரியத்தையும் நீங்க உருப்புடியா பன்னலைனு ......!!






    // ஓவராக குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வழி தெரியாதவர்களும், //



    இப்புடி .... வெளிப்படையா வால் பய்யன எதுக்கு அம்பலப் படுத்துறீங்க....!! இதற்க்கு நான் கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்....!!





    // மைக்கேல் ஜாக்சனை உச்சபட்ச ஒலியில் அலறவிட்டுப் பறக்கும் நவீனரக கார்கள் வெற்றிகரமாக நிரப்புகின்றன //




    இப்புடி மைகேல் ஜாக்சன் உச்சபட்ச ஒலியில கார ஓட்டிகிட்டு ..... பேப்பர பே 'ன்னு கொண்டுபோய் சென்டர் மீடியன் லியோ..... இல்ல முன்னாடி போற வண்டியிலையோ இடுச்சு.... அப்புறம் லோக்கல் கண்ணமாபேட்ட உச்சபட்ச ஒலியில சென்ட் ஆப் பார்டி அனுபவிக்க வேண்டியதுதான்....!!








    // பெண் போலிசாரும் ஆங்காங்கே ”வாயை ஊது!” என்று சோதித்துக் கொண்டிருக்கிறார்கள் //




    ரொம்ப கேள்வி கேட்டா ... பல்லு வெளக்காம ஊதீருங்க..... !! அதுக்கு அப்புறம் நீங்க அந்த வழியில வரீங்கன்னு தெருஞ்சாவே ..... தெருச்சு ஓடிருவாங்க.....!!

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா11:57 PM, ஆகஸ்ட் 24, 2009

    நீதி: வீட்டிற்க்கொரு கொய்யா மரம்!

    பதிலளிநீக்கு
  7. after 9 pm chennai sleeps (reason being 80% of population is salary classed). For night life in Tamilnadu, one should go for Madurai, Real thoongaa nagaram.

    பதிலளிநீக்கு
  8. எப்போ 'துள்ளாத மனமும் துள்ளும்' டவுசர் பாண்டியானீங்க? இருந்த இடத்திலிருந்தே சென்னையை சுத்தி காட்டிட்டீங்களே!

    பதிலளிநீக்கு
  9. பல முறை இரவில் வண்டியில் வந்திருப்பதால், உங்கள் அனுபவத்தை ரசிக்க முடிந்தது... ஆனால் தமிழக மக்களைப் பற்றித் தெரிந்தும் இப்படி சொல்லிவிட்டீர்களே. நம் மக்களுக்கு மறதி அதிகம். சைக்கோ பீதி இன்னும் இருப்பதாகத் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  10. பாஸ் !! தயவுசெஞ்சு, குடிச்சிட்டு வண்டி ஓட்டாதீங்க !!

    பதிலளிநீக்கு
  11. டூவீலர்காரர்கள் சிகாகோ பேண்டோடு வீட்டுக்கு போகவேண்டியிருக்கிறது. ஒன்றரை மணிக்கு வீடு போய் சேர்ந்தேன். சென்னை மாநகர, புறநகர காவலர்களிடம் மாணிக்சந்த் உதவியால் தப்பினாலும் வீட்டில் மாட்டிக்கொள்ளும் ஆபத்து அதிகம். திக்கற்றவர்களுக்கு கொய்யா இலையே துணை. வீட்டிற்கொரு கொய்யா மரம் வளர்ப்போம்---//

    நல்ல தகவல்கள் அனுபவித்து எழுதி இருக்கிங்க லக்கி... கொய்யா இலைக்கு அவ்வளவு மகிமையா? டிரை பண்ணறேன்....

    பதிலளிநீக்கு
  12. இத நான் எப்பவோ படிச்சு இருக்கேனே... ம்ம்ம்ம்...

    பதிலளிநீக்கு
  13. கொய்யா இலைக்கு இப்படி ஒன்னு இருக்கா?

    அடக்கொய்யாலே:-)))))

    முதல்லே வீட்டுவாசலில் இருக்கும் மரத்தை வெட்டிட்டுத்தான் மறுவேலை,ஆமாம்

    பதிலளிநீக்கு
  14. நெல்லை முத்து1:00 PM, ஆகஸ்ட் 29, 2009

    நெல்லை எனது சொந்த ஊர் ஆனாலும் வேலைக்கு சேர்ந்த போது சென்னையில் இருந்த ஒரு ஐந்து ஆறு மாதங்களில் சென்னையோடு ஒரு எமோஷனல் அட்டாச்மென்ட். ஐந்து வருடங்கள் ஆகியும் பெங்களூரை விட்டு எப்போ எஸ்கேப் ஆகலாம்னு இருக்கு இப்போ... ஒரு நோஷ்டால்ஜியா அனுபவம் தந்தமைக்கு மிக்க நன்றி யுவா.

    பதிலளிநீக்கு