10 ஆகஸ்ட், 2009
அனார்கலி!
போர் - வாள் - இரத்தம் - வெற்றி! இடையில் இளைப்பாற அரண்மனை - அந்தப்புரம் - மது - மாது - இசை - நடனம்! இது தான் மொகலாயப் பேரரசர்கள்!
புத்திரப் பாக்கியம் வேண்டி பாலைமணலில், கடும் வெயிலில் வெறும்காலுடன் இந்துஸ்தானை ஆளும் மொகலாயப் பேரரசர் அக்பர் பாதயாத்திரை நடத்தும் காட்சியில் படம் தொடங்குகிறது. தவமாய் தவமிருந்து மாமன்னர் அக்பரின் மனைவி ஜோத்பாய்க்கு ஒரு மகன் பிறக்கிறார். அவர் இளவரசர் சலீம்.
மொகலாயப் பேரரசின் ஒரே வாரிசாகிய சலீம் அந்தப்புர மகளிரின் மென்மையான கரங்களுக்குள் செல்லமாய் வளர்கிறார். எட்டு வயதிலேயே மது, மாது என கேளிக்கைகளில் கலந்து, தந்தையைக் கலவரப்படுத்துகிறார். மகனின் இந்த மனம் போன போக்கை கண்ட மாமன்னர் அவர் போராடித் திருந்த வேண்டும் என்பதற்காக அந்த வயதிலேயே போர்க்களத்துக்கு அனுப்பி வைக்கிறார். வாளின் இடையறா 'கிளிங், கிளிங்' சத்தம், பீரங்கி குண்டுகளின் 'டமார் டுமீர்'. இதற்கிடையே போர்க்களத்தில் வளர்கிறார் இளவரசர். அசராத வீரம் காட்டி வெற்றி மேல் வெற்றியாக குவித்து தன் தந்தையின் காலடியில் சமர்ப்பிக்கிறார்.
சுமார் 14 ஆண்டுகள் கழித்து மாமன்னருக்கு புத்திரப் பாசம் பொத்துக் கொண்டு வருகிறது. போர் போதும், அரண்மனைக்கு திரும்பு என ஆணையிடுகிறார். மகனைப் பிரிந்த மகாராணி மகனின் வரவை எண்ணி மகிழ்ச்சியடைகிறார். மாவீரனை வரவேற்க அரண்மனையே விழாக்கோலம் பூணுகிறது. இளவரசரை வரவேற்கும் விதமாக அவரை அசத்தும் வகையில் ஒரு சிலையை செய்யுமாறு அரண்மனைச் சிற்பிக்கு ஆணை போகிறது.
குறித்த நேரத்துக்குள் சிலையைச் செய்து முடிக்க இயலாத சிற்பி, ஒரு சித்து விளையாட்டைச் செய்கிறார்! சிலைக்கு மாடலாக நின்ற அந்த அழகுப் பெண்ணையே சிலையாக நிறுத்தி முத்துத் தோரணங்களால் மூடி வைக்கிறார். சிலைப்பெண்ணின் அழகு இளவரசரை சொக்க வைக்கிறது. தான் உயிர்ப்பெண் என்பதை அவள் ஒப்புக் கொண்டுவிடுகிறாள். அதன்பின் வேறென்ன நடக்கும் என்று சொல்லவும் வேண்டுமா? காதல் தான்! இளவரசரை சிலிர்க்கவைத்த அந்த சிங்காரச் சிலை தான் அனார்கலி.
சாதாரணப் பணிப்பெண்ணை மகாராணியாக்க இளவரசர் முடிவெடுக்கிறார். மொகலாயப் பேரரசரும், அவர் மனைவியும் பாரம்பரியத்தை காரணம் காட்டி இளவசரின் காதலை நிராகரிக்கிறார்கள். அரசர் அனார்கலியை சிறை வைக்கிறார். காதல் போதை ஏறிய இளவரசர் தன் கட்டுப்பாட்டில் இருக்கும் படையை கொண்டு மன்னர் மீதே போர் தொடுக்கிறார். இடையில் அனார்கலியை தன் ராஜபுத்திர நண்பனின் துணைகொண்டு சிறையில் இருந்து கடத்துகிறார் சலீம்.
என்னதான் வீர, தீரம் இளவரசர் சலீமுக்கு இருந்தாலும் அவர் மோதுவது இந்துஸ்தானின் பேரரசரிடம் ஆயிற்றே. பப்பு வேகுமா? மன்னரின் வீரத்துக்கு முன் சலீமின் படை சின்னாபின்னம் ஆகிறது. கலகம் விளைவித்ததாக குற்றம் சாட்டி இளவரசருக்கு மரணதண்டனை விதிக்கிறார் அரசர். மரணதண்டனையை வாபஸ் வாங்குமாறு நாடே கேட்டுக் கொள்கிறது அரசரை. அரசர் வாபஸ் வாங்க ஒரு நிபந்தனை விதிக்கிறார். அதாவது அனார்கலியை திரும்ப ஒப்படைத்தால் இளவரசருக்கு மன்னிப்பு வழங்கப்படும் என்கிறார். மாமன்னர் அக்பரின் மகனாயிற்றே சலீம். ஒத்துக் கொள்வாரா?
சலீமுக்கு மரணதண்டனை என்பதை கேள்விப்பட்ட அனார்கலி அவராகவே வந்து சரணடைகிறார். மரணதண்டனை மாற்றி அமைக்கப்படுகிறது. சலீமுக்கு பதிலாக அனார்கலிக்கு மரணதண்டனை. உயிருடன் அவருக்கு கல்லறை கட்ட வேண்டுமென்பது மன்னரின் ஆணை. அனார்கலியிடம் கடைசி ஆசை என்ன என்று கேட்கப்படுகிறது. ஒரு நாளாவது மொகலாயப் பேரரசுக்கு மகாராணியாக இருக்க வேண்டுமென்பது அனார்கலியின் ஆசை. மன்னரும் இதற்கு ஒத்துக் கொள்கிறார் வழக்கம்போல ஒரு நிபந்தனையுடன்.
அதாவது மகாராணியாகும் அனார்கலி முதலிரவுக் கொண்டாட்டம் முடிந்து மறுநாள் விடிவதற்குள் சலீமை மயங்கவைத்து விட்டு (ரோஜாப்பூவில் மயக்க மருந்து) மரணதண்டனைக்கு சம்மதிக்க வேண்டும் என்பதே நிபந்தனை. அவ்வாறே நடக்கிறது. சலீம் மயங்கியவுடன் மாமன்னரின் சிறப்பு மெய்க்காவல் படையினர் அனார்கலியை அழைத்துச் சென்று உயிருடன் கல்லறை கட்டுகின்றனர். கல்லறை 99 சதவிகிதம் முடிந்து விட்டது. அனார்கலியின் கண்கள் மட்டுமே வெளியே தெரிகிறது.
என்ன ஆச்சு? அனார்கலி மரணமடைந்தாரா? இல்லை மயக்கம் தெளிந்த சலீமால் காப்பாற்றப் பட்டாரா? கருணை நிறைந்தவராக வரலாற்றில் குறிப்பிடப்பட்ட பேரரசர் அக்பரின் கருணை இவ்வளவு தானா? பரபரப்பான கிளைமேக்ஸை நீங்களும் வண்ணத்திரையில் காணுங்களேன். ஏற்கனவே கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட இப்படம் வரும் பதினான்காம் தேதி திரையரங்குகளில் திரையிடப்படுவதாக விளம்பரப் படுத்தப் பட்டிருக்கிறது.
1960ல் வெளியிடப்பட்ட முகல்-இ-ஆஸம் என்ற இந்தித் திரைப்படம் கருப்பு வெள்ளையில் வெளியானது. மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம். நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் சென்னை மவுண்ட் ரோட்டில் "ப்ளாக்கில்" டிக்கெட் வாங்கி பெருசுகள் படம் பார்த்தார்களாம். இந்த மாபெரும் காவியம் 2004ல் வண்ணமாக்கப்பட்டிருக்கிறது. குறைந்தபட்சம் சுமார் 3 லட்சம் பிரேம்களை வண்ணமாக்கியிருப்பது என்பது மாபெரும் அதிசயம். அசுர உழைப்பு உழைத்திருக்கிறார்கள் கம்ப்யூட்டர் வல்லுனர்கள்.
சலீம் - அனார்கலி கதை வரலாற்றில் இருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை. இது கட்டுக்கதையே. பீர்பால் மற்றும் தெனாலிராமன் கதைகளில் நம் ஆட்கள் சுவாரஸ்யத்திற்காக எவ்வளவு கற்பனை செய்திருக்கிறார்களோ அதுபோலவே அக்பர் மற்றும் அவரது மகன் வாழ்வையும் சுவாரஸ்யமான காதல் கதை ஆக்கியிருக்கிறார்கள்.
படம் வரலாறோடு எந்த அளவுக்கு ஒத்துப் போகிறது என்று பார்த்தோமானால் அக்பர் குழந்தை வரம் வேண்டி ஒரு முஸ்லிம் துறவியை சந்திப்பது போல முதல் காட்சி அமைந்திருக்கிறது. அது உண்மையே அக்பர் சந்தித்த முஸ்லிம் துறவியின் பெயர் ஷேக் சலீம் சிஸ்டி. இது அக்பரின் 27ஆவது வயதில் நடந்தது. அக்பரின் சுயசரிதையான "அக்பர் நாமாவை" எழுதிய அப்துல் பஸல் இதை ஒத்துக் கொண்டிருக்கிறார்.
அக்பரின் மகன் பெயர் சலீம் என்பதும் உண்மையே. பிற்காலத்தில் இவர்தான் "ஜஹாங்கீர்" என்ற பெயரில் மொகலாயப் பேரரசை கட்டிக் காத்தவர். அக்பரின் பட்டத்து மகாராணி ஒரு இந்து என்பதும் உண்மையே. அவர் பெயர் ஜோத்பாய். இவர் ஆம்பர் நாட்டு இராஜபுத்திர மன்னர் பீர்மால்சிங்கின் மகள்.
சலீம் படத்தில் காட்டியபடி காதலுக்காக உயிர் விடும் அளவுக்கு போனவர் தான். வரலாற்றில் இவருக்கு 20 மனைவிகள் வரை இருந்ததாக குறிப்புகள் இருக்கிறது (இவர் தந்தையின் மனைவிகள் எண்ணிக்கை செஞ்சுரியைத் தாண்டி விட்டிருக்கிறது) சலீமின் முதல் மனைவியும், பட்டத்து மகாராணியும் கூட ஆம்பர் நாட்டு இந்து இளவரசி தான். சலீம் ரொம்பவும் காதல் செய்து மணந்தது நூர்ஜகான் எனும் கைம்பெண் ஒருவரை. இன்றளவில் மிக உயர்ரக வாசனைத் திரவியமான அத்தர் எனும் ரோஜாப்பூவில் தயாரிக்கப்படும் வாசனைத் திரவியத்தை கண்டுபிடித்தது இந்த நூர்ஜகான் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அனார்கலி என்ற ஒரு கேரக்டரே வரலாற்றில் கிடையாது. அப்துல் பஸல் மட்டுமல்ல மற்ற வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் கூட அனார்கலி - சலீம் காதலை கட்டுக்கதை தான் என்று உறுதிப்படுத்துகிறார்கள். கற்பனை தான் என்றாலும் கூட சுவாரஸ்யமாக இருப்பதால் இந்தக் கட்டுக்கதை எழுதியவர்களை மன்னித்து விட்டு விடலாம்.
உண்மை வரலாற்றுக்கும், இந்த திரைப்படத்துக்கும் நிறைய வேறுபாடுகளும், ஒரு சில ஒற்றுமைகளும் மட்டுமே இருக்கிறது. படத்துக்கு செய்யப்பட்ட லைட்டிங் கருப்பு வெள்ளைக்காக செய்யப்பட்டிருப்பதால் இப்போது வண்ணத்தில் பார்க்கும் போது ஒரு சில இடங்களில் கண்ணை உறுத்துகிறது. பாடல்காட்சிகளில் எக்ஸ்ட்ரா கேர் எடுத்து வண்ணம் அமைத்திருக்கிறார்கள். குறிப்பாக கிருஷ்ணஜெயந்தி பாடலும், கிளைமேக்ஸ் பாடலும் கண்ணைக் கொள்ளை கொள்கிறது. பாடல்கள் எல்லாமே "ஆஹா, ஓஹோ" ரகம் தான். மனதை மயக்கும் இசை. பாடல்களில் பெரும்பாலானவை கோட்டைகளிலும், அசரவைக்கும் செட்கள் அமைத்தும் படமாக்கப் பட்டிருக்கின்றன.
படத்தின் வசனங்கள் முழுக்க முழுக்க கவிதை நடையிலேயே அமைக்கப்பட்டிருப்பது சிறப்பானது. போருக்கு சென்று விழுப்புண்களுடன் திரும்பும் தன் மகனைப் பார்த்து தாய் சொல்கிறார் "நான் பாலூட்டி உனக்கு கொடுத்த இரத்தத்தை எல்லாம் விவசாயிகள் வயலுக்கு நீர் பாய்ச்சுவது போல போர்க்களத்தில் உன் இரத்தத்தை எல்லாம் பாய்ச்சினாயா?"
ஒருநாள் பட்டத்து ராணியாக அக்பர் கைகளால் கிரீடம் சூட்டிக்கொள்ளும் அனார்கலி திரும்பிப் போகும் போது நின்று அக்பரைப்பார்த்து, "மொகலாயப் பேரரசின் மகாராணியாக இப்போது முடிசூட்டடப் பட்டிருக்கும் அனார்கலி, சக்கரவர்த்தி அக்பர் நாளை காலையில் செய்யப்போகும் குற்றத்தை மன்னித்தருள்கிறாள்" என்று சொல்வது கவிதைச் சவுக்கடி!
இவ்வாறாக படம் முழுவதும் வசனக் கவிதையாக இருப்பதால் பெரும் இடங்களில் ரசிக்க முடிகிறது. சில நேரம் அதுவே ஓவர்டோஸோ என்று கூட நினைக்க வைக்கிறது. சரித்திரக் கதைகளை இனி டப்பிங் செய்யும்போது "இம்சை அரசன்" படத்தின் வசனநடையில் எழுதினாலேயே போதுமானது. இன்றைய தலைமுறை புரிந்துக் கொள்ள கொஞ்சம் வசதியாக இருக்கும். செந்தமிழை எல்லாம் தியேட்டரில் இளைஞர்கள் எந்த அளவுக்கு ரசிப்பார்கள் என்று தெரியவில்லை. "தம்" அடிக்க வெளியே எழுந்துப் போய்விட வாய்ப்புகள் அதிகம்.
போர்க்கள காட்சிகளை 45 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வளவு பிரம்மாண்டமாக எப்படி எடுத்திருப்பார்கள் என்று வியப்பு மேலிடுகிறது. சந்திரலேகா போன்ற பிரம்மாண்ட படங்களை மிஞ்சும் வகையில் ஆயிரக்கணக்கான வீரர்களைப் பயன்படுத்தி நம் கண்களையே நம்ப முடியாத வகையில் படமாக்கியிருக்கிறார்கள்.
படத்தில் நடித்த எல்லா கதாபாத்திரங்களுமே மிக இயல்பாக (ஓவர் ஆக்டிங் இல்லாமல்) தங்கள் பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். அக்பராக நடித்திருக்கும் பிருத்விராஜ்கபூர் (ராஜ்கபூரின் நைனாவா?) கம்பீரமாக கலக்கலாக நடித்திருக்கிறார். அக்பர் அறிஞர் அண்ணாவைப் போல ரொம்பவும் குள்ளம் என்று படித்திருக்கிறேன். இவர் கொஞ்சம் உயரமாக இருப்பதுபோல படுகிறது.
சலீமாக நடித்த திலீப்குமார் போர்க்களத்தில் செங்கிஸ்கான் மாதிரி வீரம் காட்டுகிறார். அவர் பார்வையும், நடையும் அருமை. காதலிக்கும் போது தான் "சொங்கி"ஸ்கான் மாதிரி சோம்பல் காட்டுகிறார். எப்போது பார்த்தாலும் காதல் ததும்பும் கண்களுடனேயே போதையுடன் இவர் இருப்பது கடுப்பாக இருக்கிறது. அனார்கலியாக நடித்த மதுபாலா கொள்ளை அழகு. கண்களாலேயே காதல் சுனாமி ஏற்படுத்துகிறார். பொறாமைக்கார அந்தப்புர பணிப்பெண்ணாக பாகா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவரும் அழகாக இருக்கிறார். அருமையாக நடிக்கிறார்.
45 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்திருந்தாலும் இந்தப் படத்தின் முக்கியக் கருவான "காதல்" எல்லா காலக்கட்டத்துக்கும் பொருந்தும் ஒரே டிரெண்ட் என்பதால் எவர்க்ரீன் ஹிட் இந்தப்படம்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
என்னாச்சு?
பதிலளிநீக்குஏன்?
பதிலளிநீக்குkarpanai enralum karchilai enrlum kathalae unai maravaen
பதிலளிநீக்குண்ணா.. வணக்கங்ணா...
பதிலளிநீக்குஅப்புறம்?
பதிலளிநீக்குபதிவு சூப்பர் ..
பதிலளிநீக்குஇப்ப தான் தலைப்ப படிச்சேன் , முழு பதிவையும் படிச்சிட்டு
மிக அருமையான படம். நான் கூட போன வருடம் போட்ட போது பார்த்தேன். அந்த காதல் கதை நிஜம் என்று நினைத்தேன். இருந்தாலும் பரவயில்லை அனார்கலி மிகவும் அழகு சொக்க வைக்கும் அவளது பார்வை. அந்த நளினத்துடன் கூடிய நடனம்.
பதிலளிநீக்குசூப்பர்.