25 செப்டம்பர், 2009

நான் ஏன் செருப்பு வீசினேன்!

ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த ‘குற்றத்திற்காக’ ஒன்பது மாத சிறை வாசத்திற்குப் பின், கடந்த வாரம் விடுதலையாகியுள்ள முன்தாஜர் அல் ஜெய்தி எழுதிய கீழ்க்காணும் கட்டுரை, கார்டியன் செய்தித்தாளில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. அதன் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது :


நான் விடுதலையடைந்து விட்டேன். ஆனால், எனது நாடு இன்னமும் போர்க் கைதியாக சிறை வைக்கப்பட்டிருக்கிறது. செயல் குறித்தும், செயல்பட்டவர் குறித்தும், நாயகனைக் குறித்தும், நாயகத்தன்மை வாய்ந்த செயல் குறித்தும், குறியீடு குறித்தும், குறியீடான செயல் குறித்தும் நிறையப் பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஆனால், எனது எளிமையான பதில் இதுதான். என் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும், எனது தாயகத்தை ஆக்கிரமிப்பானது எவ்வாறு தனது பூட்சுக் கால்களால் நசுக்கி இழிவுபடுத்த விரும்பியதென்பதும்தான், என்னை செயல்படக் கட்டாயப்படுத்தியது.கடந்த சில ஆண்டுகளில், ஆக்கிரமிப்பின் துப்பாக்கி ரவைகளுக்கு இரையாகி பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட தியாகிகள் தமது இன்னுயிரை இழந்தார்கள். கணவனை இழந்த ஐம்பது இலட்சம் பெண்களும், உடல் உறுப்புகளை இழந்த ஆயிரக்கணக்கான மக்களும் நிறைந்து கிடக்கும் தேசம்தான் இன்றைய இராக்.

நாட்டுக்குள்ளும், வெளியிலும் இலட்சக்கணக்கானவர்கள் அகதிகளாய் உழன்று கொண்டிருக்கிறார்கள்.துருக்கியர், அசிரியர், சபியர், யாசித் என அனைவரோடும் தனது அன்றாட உணவை அரபு இனத்தவன் பகிர்ந்துண்ட ஒரு தேசமாக நாங்கள் வாழ்ந்திருந்தோம். சன்னியுடன் ஷியா ஒரே வரிசையில் நின்று வழிபட்ட காலமது. கிறிஸ்துவின் பிறந்தநாளை கிறிஸ்தவரோடு இசுலாமியர் இணைந்து கொண்டாடிய நாட்கள் அவை. இவையனைத்தும் பத்தாண்டுகளுக்கும் மேலான பொருளாதாரத் தடைகளுக்கிடையே, பசியை பகிர்ந்து கொள்ள நேர்ந்த போதிலும் கூட நீடித்திருந்தன.எமது பொறுமையும், ஒற்றுமையும் ஏவப்பட்ட ஒடுக்குமுறையை மறக்கவிடாமல் தடுத்தன.

ஆனால், ஆக்கிரமிப்போ சகோதரர்களையும், நெருக்கமானவர்களையும் பிரித்துத் துண்டாடியது. எங்கள் வீடுகளை சுடுகாடுகளாக்கியது.நான் நாயகனல்ல. ஆனால் எனக்கு ஒரு கண்ணோட்டம் உண்டு. ஒரு நிலைப்பாடு உண்டு. எனது நாடு இழிவுபடுத்தப்படுவதைக் கண்ட பொழுது, எனது பாக்தாத் நகரம் தீயில் கருகிய பொழுது, எனது மக்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது, நான் இழிவுபடுத்தப்பட்டவனாக உணர்ந்தேன். ஆயிரக்கணக்கான துயரம் தோய்ந்த காட்சிகள் எனது மனதில் அலைமோதிக் கொண்டிருந்தன. என்னை போரிடத் தூண்டின. இழிவுபடுத்தப்பட்ட அபுகிரைப்…பலூஜா, நஜாஃப், ஹடிதா, சதர் நகரம், பஸ்ரா, தியாலா, மொசூல், தல் அஃபர் என ஒவ்வொரு இடத்திலும் நடைபெற்ற படுகொலைகள்… ஒரு அங்குலம் குறையாமல் காயமுற்ற எனது நாடு… எரியும் தேசத்தினூடாகப் பயணம் செய்து, நேரடியாக பாதிக்கப்பட்டவர்களின் வலியைக் கண்ணால் கண்டேன். துயருற்றவர்களின் ஓலத்தை, அனாதைகளாக்கப்பட்டவர்களின் அலறலை காதுகளில் கேட்டேன்.

ஒரு அவமானம் என்னை அழுத்தி வாட்டியது. நான் பலவீனனாக உணர்ந்தேன்.அன்றாடம் நிகழ்ந்த துயரங்களை தெரிவிக்கும் ஒரு தொலைக்காட்சி நிருபராக, எனது தொழில்சார்ந்த கடமைகளை முடித்த பின்னால், தரைமட்டமாக்கப்பட்ட இராக்கிய வீடுகளின் இடிபாடுகளின் தூசியையோ அல்லது ஆடைகளில் படிந்த இரத்தக் கறைகளையோ, நான் தண்ணீரால் கழுவிய பொழுதுகளில், பற்கள் நெறுநெறுக்க, பாதிக்கப்பட்ட எனது நாட்டு மக்களின் பேரால் பழிக்குப் பழி வாங்குவேனென நான் உறுதிமொழி எடுத்துக் கொள்வேன்.வாய்ப்பு வழிதேடி வந்தது.

நான் அதனைக் கைப்பற்றிக் கொண்டேன்.ஆக்கிரமிப்பினூடாகவும், ஆக்கிரமிப்பின் விளைவாகவும் சிந்தப்பட்ட அப்பாவிகளின் ஒவ்வொரு இரத்தத் துளிக்கும், வேதனையில் கதறிய ஒவ்வொரு தாயின் ஒலத்திற்கும், துயரத்தில் முனகிய ஒவ்வொரு அனாதையின் கண்ணீருக்கும், பாலியல் வன்புணர்ச்சியால் சிதைக்கப்பட்ட பெண்களின் அலறலுக்கும், நான் செய்ய வேண்டிய கடமையாகக் கருதியதனால்தான் அச்செயலை செய்தேன்.என்னைக் கண்டிப்பவர்களுக்கு நான் சொல்வது: “நான் வீசியெறிந்த காலணி, உடைந்து நொறுங்கிய எத்தனை வீடுகளை தாண்டி வந்திருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா? பலியான எத்தனை அப்பாவிகளின் குருதியைக் கடந்து வந்திருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா?

எல்லா மதிப்பீடுகளும் மீறப்படும்பொழுது செருப்புதான் சரியான பதிலடியாகத் தோன்றுகிறது.”குற்றவாளியான ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த பொழுது, எனது நாட்டின் மீதான ஆக்கிரமிப்பை, எனது மக்களைப் படுகொலை செய்ததை, எனது நாட்டின் வளத்தை கொள்ளையடித்ததை, அதன் கட்டுமானங்களை தரைமட்டமாக்கியதை, அதன் குழந்தைகளை அகதிகளாக்கியதை, நான் ஏற்க மறுக்கிறேன் என்பதையே தெரிவிக்க விரும்பினேன்.ஒரு தொலைக்காட்சி நிருபராக, நிர்வாகத்திற்கு தொழில்ரீதியாக ஏற்பட்ட சங்கடத்திற்கும், ஒருவேளை நான் பத்திரிக்கை தருமத்திற்கும் ஊறு விளைவித்திருப்பதாகக் கருதினால், அத்தகைய நோக்கம் எனக்கு இல்லாத போதும், எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒட்டுமொத்தத்தில், ஒவ்வொரு நாளும் தனது தாயகம் இழிவுபடுத்தப்படுவதைக் காணச் சகியாத ஒரு குடிமகனின் அணையாத மனசாட்சியை வெளிப்படுத்தவே நான் விரும்பினேன். ஆக்கிரமிப்பின் அரவணைப்பிற்குள்ளிருந்து தொழில் தர்மம குறித்து முனகுவோரின் குரல் நாட்டுப்பற்றின் குரலை விடவும் ஓங்கி ஒலிக்கக் கூடாது. நாட்டுப்பற்று பேச விரும்பும் பொழுது, அதனோடு தொழில் தர்மம இணைந்து கொள்ள வேண்டும்.எனது பெயர் வரலாற்றில் இடம் பெறுமென்றோ, காசு, பணம் கிடைக்குமென்றோ, நான் இதனைச் செய்யவில்லை. நான் எனது நாட்டைக் காக்க மட்டுமே விரும்பினேன்.

நன்றி – http://porattamtn.wordpress.com/

20 செப்டம்பர், 2009

கல்யாணம்!


கிருஷ்ணன் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பான். நாகேஷைப் போல ஒல்லியான வெடவெட தேகம். நிற்கும்போது கூட ஏதாவது சாய்மானம் அவனுக்கு தேவைப்படும். துறுதுறுவென்று எதையாவது செய்து கொண்டிருப்பான். கையையும், காலையும் வெச்சுக்கிட்டு சும்மாவே இருக்கமாட்டியாடா என்று அவனை கேட்போம். இரவு 12 மணிக்கு முன்னதாக அவன் வீட்டுக்கு சென்றதாக சரித்திரமேயில்லை. தினமும் பீர், பீச்சு, பிகர், பார்க், சினிமா என்று அலுவலக நேரம் தவிர்த்தும் எந்நேரமும் பிஸியாகவே இருப்பான்.

பெயருக்கு ஏற்றாற்போலவே கிருஷ்ணலீலா தான் தினமும். முருங்கை மரத்துக்கு சேலை சுற்றினால் கூட சைட் அடிக்கும் தெய்வீகக் குணம் அவனுக்கு வாய்த்திருந்தது. சித்தாளுவிலிருந்து சிலுக்கு வரை அவன் ஜொள்ளு விடாத பிகர்களே இல்லை. சிலநேரங்களில் பொறாமையாக இருக்கும். இவனுக்கு மட்டும் எப்படி பிகரெல்லாம் மாட்டுது என்று. ஒரு பிகரைப் பார்த்துவிட்டால் ஏதேதோ மேஜிக்கெல்லாம் செய்து எப்படியாவது அவளிடம் பேசிவிடுவான். அவளை ஒருமுறையாவது சிரிக்க வைத்துவிடுவான்.

"கிளியோபாட்ராவா இருந்தாலும் என்னைப் பார்த்து குறைந்தபட்சம் ஒரு ஸ்மைலாவது அடிப்பாடா" என்று பீற்றீக் கொள்வான். இத்தனைக்கும் பையனின் பர்சனாலிட்டி ரொம்ப சுமார். மாநிறமாக இருப்பான். மூக்கு கொஞ்சம் நீளம். சுமாரான உயரம். வெடவெட உடலுக்கு சற்றும் பொருந்தாமல் லூசாக டிரஸ் செய்வான். ஆளும் கொஞ்சம் லூசுதான் என்பது வேறு விஷயம்.

எப்போதும் அவன் காதல் லீலைகளையே எங்களிடம் பேசிக்கொண்டிருப்பான். ஆறாம் கிளாஸ் படிக்கும்போதே கிருஷ்ணன் காதலித்தானாம். பத்தாம் கிளாஸ் படித்தபோது அவன் கிளாஸ் (கல்யாணமாகாத) டீச்சரை சைக்கிளில் கூப்பிட்டுக் கொண்டு சென்றதிலிருந்து, கிண்டி பார்க்கில் அவனை விட மூத்த பிகரை ப்ரபோஸ் செய்தது வரை கதை கதையாக சொல்லுவான். அவன் சொல்லும் கதைகள் உண்மைதான் என்று அவனுக்கு வரும் டெலிபோன் பேச்சுகள் வாயிலாக அறிந்திருந்தோம்.

அவனுக்கு வரும் டெலிபோன் அழைப்புகள் எல்லாமே ஒரே ரகம் தான். "கிருஷ்ணன் இருக்காரா?" என்று தேனை குழைத்து கேட்பாள்கள். ஒவ்வொரு நாளும் ஒரு குரல். ஒருநாள் கல்லூரி மாணவி பேசினாள் என்றால், மறுநாள் எக்ஸ்போர்ட் பிகர் (எக்ஸ்போர்ட் கம்பெனியில் பணிபுரியும் பிகர்) பேசுவாள். வெரைட்டி வெரைட்டியாக கேர்ள் பிரண்ட்ஸ் வைத்திருந்தான் கிருஷ்ணன். அய்யோ சொக்கா.. சொக்கா... எங்களுக்கெல்லாம் ஒண்ணுகூட அப்போ அமையலே.

ஒருவிஷயத்தில் கிருஷ்ணன் உத்தமன். ஏகப்பட்ட பெண்களுடன் நட்பு, காதல் என்றிருந்தாலும் எல்லாமே வெஜிட்டேரியன் அளவிலேயே இருந்தது. அதிகபட்சமாக சில பெண்களிடம் லிப் டூ லிப் கிஸ் மட்டும் வாங்கியிருக்கிறானாம். அவனே சொன்னான். நம்பித்தான் தொலைக்கவேண்டும்.

மச்சானுக்கு டவுசர் கிழிந்தது கல்பனா விவகாரத்தில் மட்டும் தான். எல்டாம்ஸ் சாலையில் எங்கள் அலுவலகம் அப்போது. ஒருநாள் யதேச்சையாக மாடியில் நின்று ஸ்டைலாக தம்மடித்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் தடதடவென்று இறங்கி ஓடினான். மீண்டும் தபதபவென்று மேலே ஏறிவந்தான். லைட்டாக பவுடர் போட்டு தலைசீவி மீண்டும் ஓடினான். அந்த வாரம் முழுக்க "ரன் லோலா ரன்" மாதிரி கிருஷ்ணன் ஓடிக்கொண்டே இருந்தான். அப்புறம் சில மாதங்கள் கழித்து அவன் ஓட்டம் நின்றது.

பிறகு ஒருநாள் வேலுமிலிட்டரி ஒயின்ஷாப்பில் தான் கண்களில் நீர்பனிக்க அந்த ரகசியத்தை உடைத்தான். கல்பனா என்ற பிகரை கண்டவுடனேயே காதல்வசப்பட்டு எவ்வளவோ திருவிளையாடல்களை நிகழ்த்தியும் அவள் புறக்கணித்து விட்டாளாம். முதன்முறையாக ஒரு பெண்ணால் புறக்கணிக்கப்பட்ட வேதனை அவன் வார்த்தைகளில் தெரிந்தது.

காலச்சக்கரம் உருண்டு தொலைத்தது. அந்த அலுவலகம் எதிர்பாராத வகையில் இழுத்து மூடப்பட்டதால் திசைக்கு ஒன்றாக பறந்தோம். கிருஷ்ணனையும், அவனது பிகர்களையும், பீர் அடித்துவிட்டு அவன் செய்த அலம்பல்களையும் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து ஒரு கட்டத்தில் முழுக்க கிருஷ்ணனையே மறந்துவிட்டேன்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் ஒருநாள் நான் வேலைபார்க்கும் துணிக்கடைக்கு கிருஷ்ணன் வந்தான். புதியதாக பைக் வாங்கியிருக்கிறான். முன்பெல்லாம் டிவிஎஸ் சேம்ப் இல்லையென்றால் ஒரு ஓட்டை சில்வர் ப்ளஸ்ஸில் வருவான். பீர் புண்ணியத்தால் கொஞ்சமாக சதை போட்டிருந்தது. ஒட்டிப்போயிருந்த அவன் கன்னம் கொஞ்சம் பூசினாற்போல தெரிந்தது.

"எனக்கு கல்யாணம்டா மச்சான்!" மகிழ்ச்சியோடு சொன்னான்.

"ரொம்ப சந்தோஷம் கிருஷ்ணன். லவ் மேராஜா? ரிஜிஸ்ட்ரார் ஆபிஸ்லே சைன் பண்ணனுமா?"

"இல்லேடா. அரேஞ்ச்டு மேரேஜ் தான்"

ஆச்சரியமாக இருந்தது. கடைசியாக அவன் லவ்விக்கொண்டிருந்த விஜியையும் கழட்டி விட்டுவிட்டான் போலிருக்கிறது.

"விஜிக்கு என்னடா ஆச்சி?"

"அவளுக்கு கல்யாணம் ஆயி ஒரு குழந்தை இருக்குடா!"

பரஸ்பர விசாரிப்புகள், புதிய வேலை, பழைய நினைவுகள் பற்றிய பேச்சுகள் முடிந்ததும் பத்திரிகையை கையில் திணித்து விடைபெற்றான். அவன் கல்யாணத்துக்கு போகமுடியவில்லை. தொலைபேசியில் மட்டும் வாழ்த்து தெரிவித்தேன்.

சிலமாதங்களுக்கு முன்பு சைதாப்பேட்டை சிக்னலில் கிருஷ்ணனை பார்த்தேன். ரொம்ப அடக்க ஒடுக்கமாக பைக்கில் உட்கார்ந்திருந்தான். பில்லியனில் கொஞ்சம் ஒல்லியாக இருந்தது அவன் மனைவியாக இருக்கும். முகமெங்கும் மஞ்சள் பூசியிருந்தாள். கிருஷ்ணனின் மனைவியை பார்த்ததுமே புரிந்தது. வெள்ளிக்கிழமை தோறும் கோயிலுக்கு போகக்கூடிய பெண், ராமநாராயணன் படங்களில் வருவது போல அம்மன் பக்தையென்று.

கிருஷ்ணனுக்கு கை காட்டினேன். பார்த்து வெறுமனே ஒரு வெற்றுச் சிரிப்பு சிரித்து "நல்லாயிருக்கியாடா?" என்று கேட்டான். அதற்குள் சிக்னல் விழுந்துவிட அவனுடன் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கிருஷ்ணனின் மனைவி என் குறித்து ஏதோ கேட்டிருக்க வேண்டும். என்னை லேசாக திரும்பிப் பார்த்து சினேகமாக சிரித்துவிட்டு ஏதோ சொல்லிக்கொண்டே வண்டி ஓட்டிக் கொண்டு சென்றான்.

சென்றவாரம் கிருஷ்ணனை தி.நகரில் பார்த்தேன்.

"நல்லாயிருக்கியாடா. அவசரமா கெளம்பணும்" என்றான்.

"ஏண்டா பேசக்கூட நேரமில்லையா உனக்கு"

"நீ வேற டைம் இப்பவே 9 ஆவுது. 10 மணிக்கு மேல போனா ராட்சஸி வீட்டை ரெண்டாக்கிடுவா!"

"இரு மாப்பிள்ளை. ஒரு பீராவது அடிச்சிட்டு போலாம்"

"பீரா? மச்சான் சொன்னா நம்பமாட்டே இப்பவெல்லாம் தம்மு கூட மாசத்துக்கு ஒண்ணு தான் அடிக்கிறேன்"

"நெஜமாவா? அப்புறம் விஜி, அனுவெல்லாம் எப்படிடா இருக்காங்க?"

"அவங்களையெல்லாம் நினைக்கிறதே இல்லடா. எந்தப் பொண்ணையும் இப்போவெல்லாம் தலைநிமிர்ந்து கூட பாக்குறதில்லே"

"அடப்பாவி.. இவ்வளவு சீக்கிரம் நல்லவனாயிட்டியே? எப்படிடா?"

"ம்ம்ம்... ஒரு கல்யாணத்தை பண்ணிப்பாரு புரியும்" அவசரமாக கையில் ஏதோ பையை எடுத்துக் கொண்டு ஓடினான். பொண்டாட்டிக்கு புடவை வாங்கியிருப்பான் போலிருக்கிறது.

"இவனுக்கு தேவைதான்!" மனதுக்குள் சிரித்துக் கொண்டேன்.

19 செப்டம்பர், 2009

உன்னைப்போல் ஒருவன்!


முழுமையாக வந்திருக்கும் முதல் தமிழ் படம்.

இத்தனைக்கும் தமிழில் வெற்றிப்படத்துக்குரிய கட்டாய அம்சங்களான ஹீரோயின், டூயட், குத்துப்பாட்டு, இத்யாதி.. இத்யாதி மசாலா சமாச்சாரங்கள் அறவே இல்லை. ’இருவர்’ படத்துக்குப் பிறகு மோகன்லால் தமிழில் ஹீரோவாக நடித்திருக்கிறார். டைட்டில் ரோல் கமலுக்குதான் என்றாலும் திரையின் பெரும்பாலான காட்சிகளை மோகன்லால் ஆக்கிரமித்துக் கொள்கிறார். மோகன்லாலின் பார்வையிலேயே படம் தொடங்குகிறது, முடிகிறது. ஆச்சரியகரமாக கமல் செகண்ட் ஹீரோவாக சொந்த தயாரிப்பில் நடித்திருக்கிறார். மோகன்லாலும், கமலும் அட்டகாசமாக நடித்திருக்கிறார் என்று சொன்னால், அது க்ளிஷேவாகி விடும். இருவருக்கும் ஒரே ஒரு கம்பைண்ட் ஷாட் மட்டுமே. கமல் உட்கார்ந்த இடத்திலிருந்தே நடிப்பின் நவரசங்களையும் கொட்டுகிறார். மோகன்லால் கம்பீரமான பாடி லேங்குவேஜ், கம்பீர நடை மூலம் அசத்துகிறார்.

கமல்ஹாசனின் கதாபாத்திரம் இந்துவா, முஸ்லிமா, கிறிஸ்துவனா என்பதை தெளிவாக சித்தரிக்காமல், படம் பார்க்கும் ரசிகனை யூகிக்க சொல்லுவது நல்ல புத்திசாலித்தனம். தாடி வைத்திருக்கிறார். வைணவர்களும் இதேபோல தாடி வளர்ப்பார்கள், இஸ்லாமியரும் தாடி வளர்ப்பார்கள். மதிய உணவுக்கு தயிர்ச்சாதம் சாப்பிடுவதைப் போல காட்டாமல், சாண்ட்விச் சாப்பிடுவதைப் போல காட்டியிருப்பது அருமையான குழப்பல். ஒரு பாங்கில் குமாஸ்தாவாகவோ, அரசு அலுவலகத்தில் அதிகாரியாகவோ கமலை உருவகப்படுத்திக் கொள்ள வைக்கும் இண்டலிஜெண்ட் காமன் மேன் பாத்திரத்துக்கு அச்சு அசலாக பொருந்துகிறது லேசான தொந்தியுடைய கமலின் தோற்றம்.

ஆங்கிலப்படங்களைப் போல ஒண்ணேமுக்கால் மணி நேரத்தில் தமிழில் படமெடுக்கவே முடியாது என்ற நிலையை வெற்றிகரமாக தகர்த்திருக்கிறார்கள். இந்திப் படத்தின் ரீமேக் தானே என்று சொன்னாலும், இதைக்கூட தமிழில் கமல்தான் செய்ய வேண்டியிருக்கிறது. ‘ரோஜா’ ரஹ்மானுக்குப் பிறகு சொல்லிக்கொள்ளக் கூடிய அறிமுக இசையமைப்பாளர் என்று ஆடியோ வந்ததுமே பலர் பேசினார்கள், எழுதினார்கள், மெச்சினார்கள். இந்த கூற்று நூறு சதவிகிதம் உண்மை என்று படம் பார்த்தபின் நம்பமுடிகிறது. தந்தை வழியில் சகலகலாவல்லியாக பரிணமித்திருக்கும் ஸ்ருதிஹாசனை இருகை தட்டி வரவேற்கலாம்.

படத்தில் இடம்பெறும் கமிஷனர் ஆபிஸ் கலை இயக்குனரால் உருவாக்கப்பட்டதாம். அட்டகாசம். சுஜாதா + கிரேஸி = இரா.முருகன். தமிழுக்கு வெற்றிகரமான வசனகர்த்தா ரெடி. அடுத்து ஷங்கர் எப்படியும் கூப்பிடுவார். தயாராக இருங்க முருகன் சார். இரா.முருகனை கமலுக்கு அறிமுகப்படுத்தியது எல்லே ராமா, கிரேஸி மோகனா என்று ஒரு விவாதம் இட்லிவடையில் ஓடிக்கொண்டிருக்கிறது. யார் அறிமுகப்படுத்தியிருந்தாலும் எந்தரோமாகானுபவலுக்கு நமஸ்காரம்.

தலைமைச் செயலாளராக லஷ்மி. சுவாரஸ்யம். முதல்வர் வீட்டு வாசலில் வியர்த்து, விறுவிறுக்க காத்திருப்பதும், முதல்வரோடு தொலைபேசியில் பவ்யம் காட்டுவதும், அடுத்த நொடியே கமிஷனர் மோகன்லாலிடம் தனது அதிகாரத்தை செலுத்த நினைப்பதும் என்று சரவெடியாய் வெடித்திருக்கிறார். முதல்வரையும் ஒரு கதாபாத்திரமாக இணைத்திருப்பது புத்திசாலித்தனமான ஐடியா. “எல்லாத்தையும் நீங்களே ஹேண்டில் பண்ணுங்கம்மா!”, “எதிர்க்கட்சிக்காரன் அறிக்கை விட்டுடப் போறான்!” போன்ற வசனங்கள், முதல்வர் மீதான அப்பட்டமான அவதானிப்பு.

தமிழின் மிகச்சிறந்த படங்கள் வரிசையில் இடம்பெறும் இப்படத்திலும் ஒரு விஷயம் நெருஞ்சிமுள்ளாக குத்துகிறது. இது அப்பட்டமான இந்துத்துவா படம். வசனகர்த்தாவை வைத்து சமன் செய்ய முயற்சித்திருக்கிறார்கள். ஆட்சியாளர், மோடியாக இருந்தாலும் சரி, கலைஞராக இருந்தாலும் சரி. மதக்கலவரங்களின் போது வேட்டையாடப்படுவது இஸ்லாமியர்களாகவே இருக்கிறார்கள். தீவிரவாதம் என்றாலே இந்தியாவில் இஸ்லாமியத் தீவிரவாதமாக மட்டுமே பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக அதிகாரத்தையும் கைப்பற்றிவிட்ட இந்து தீவிரவாதத்தைப் பற்றிய விவாதங்கள் இங்கே கம்யூனிஸ்ட்கள் போன்ற சிறுபான்மையானவர்களாக மட்டுமே முன்னெடுக்கப் படுகிறது. கமல்ஹாசனும் பொதுப்புத்தி அடிப்படையில் இஸ்லாமியத் தீவிரவாதத்தை வேரறுக்க ஷங்கரின் கதாநாயகர்கள் பாணியில் கிளம்பியிருக்கிறார். பெஸ்ட் பேக்கரி, குஜராத் கலவரம் என்று கமல் வசனம் பேசி, பேலன்ஸ் செய்ய முற்பட்டாலும், படம் பார்க்கும் ஒவ்வொருவனுக்கும் படம் முடியும்போது இஸ்லாமிய வெறுப்பு மண்டிவிடும் என்பது நிதர்சனம். நான்கு தீவிரவாதிகளில் ஒருவன் இந்து, அதுவும் பணத்துக்காகதான் தீவிரவாதிகளுக்கு உதவுகிறான் என்று சித்தரித்திருப்பது சுத்த அயோக்கியத்தனம். என்னவோ இந்துக்கள் மத அபிமான தீவிரவாதிகளாக இல்லாததைப் போல காட்டும் முயற்சி. கமல்ஹாசன் தீவிரவாதத்தை நிஜமாகவே எதிர்க்க கிளம்பினால், இந்தியாவில் வன்முறை வெறியாட்டத்துக்கு ஆணிவேராக விளங்கும் இந்து தீவிரவாதம் குறித்து முதலில் அலாரம் அடித்திருக்க வேண்டும்.

கமலின் திரையுலக வரலாற்றில் அவருக்கு ஏராளமான மைல்கற்கள் உண்டு. இப்படம் இன்னுமொரு மைல்கல்.

உன்னைப்போல் ஒருவன் - தமிழ் சினிமாவின் முதல்வன்!

17 செப்டம்பர், 2009

தென்கச்சி!


சில மாதங்களுக்கு முன்பாக பத்திரிகையாளரான தோழர் ஆரா என்னைத் தொடர்பு கொண்டார்.

“ஜூ.வி.யில் மடிப்பாக்கம் ரவுண்டப் பண்ணப் போறோம். அந்தப் பகுதியில் வசிக்கும் விஐபிங்க யாருன்னு சொல்லமுடியுமா?”

அனிச்சையாக சொன்னேன். “தென்கச்சி கோ.சாமிநாதன்”

”அவருகிட்டே ஏற்கனவே பேசிட்டோம் பாஸ். மொத்தமா எழுதியே கொடுத்துட்டாரு. கட்டுரையோட டைட்டில் என்ன தெரியுமா? மழைப்பாக்கம்!”

மடிப்பாக்கத்துக்கும், மழைக்கும் என்ன சம்பந்தமென்று சென்னை வாசிகளுக்கு தெரியும். ஆனாலும் ‘மழைப்பாக்கம்’ என்ற டைட்டிலை இதுவரை யாரும் சிந்தித்தது கூட இல்லை. இந்த டைமிங்-கம்-ஹ்யூமர் சென்ஸ் தான் தென்கச்சி.

’இன்று ஒரு தகவல்’ மூலம் பிரபலமானவர் என்று சொல்லுவது மடிப்பாக்கத்திலும் வெள்ளம் வந்தது என்று சொல்லுவதற்கு ஒப்பானது. வானொலியை தெரிந்த யாருக்குமே தென்கச்சியை தெரியாமல் இருக்கவே முடியாது. 70களின் இறுதியில் அவர் திருநெல்வேலி வானொலி நிலையத்தில் பணிபுரிந்தபோது நடத்திய ஒரு நிகழ்ச்சியே பிற்பாடு சென்னை தூர்தர்ஷனில் கொஞ்சம் மாற்றப்பட்டு ‘வயலும், வாழ்வும்’ என மலர்ந்தது என்பார்கள். கான்செப்ட்களில் செம ஸ்ட்ராங்க் நம்ம தென்கச்சி.

மடிப்பாக்கத்தில் ஒரு நூலகம் கூட இப்போது இல்லையே என்று வருந்திக் கொண்டிருந்தார். தன்னை சந்திப்பவர்களிடம் எல்லாம் “இவ்வளவு ஆயிரம் பேர் வசிக்கிற ஒரு ஊரிலே ஒரு லைப்ரரி கூட இல்லையே?” என்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருப்பார்.

நூலக எழுச்சி ஆண்டாக இவ்வாண்டு அறிவிக்கப்பட்டிருக்கிறது. மடிப்பாக்கத்தில் விரைவில் மாவட்டக் கிளை நூலகம் அமைக்கப்படப் போகிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நூல்களை வாசிக்க தென்கச்சிதான் இருக்க மாட்டார்.

மடிப்பாக்கம் மவுனமாக அழுதுக் கொண்டிருக்கிறது!

12 செப்டம்பர், 2009

தேனீயார்!


ஸ் ஸ்டேண்ட் பக்கம் வந்து பல ஆண்டுகளாகிறது. வண்டி தற்காலிகமாக மண்டையைப் போட்டதால் இன்று ஆபிஸுக்கு பஸ் சர்வீஸ்தான். மூச்சிரைக்க எட்டரை மணிக்கு நடந்து வந்து சேர்ந்தேன். செப்டம்பர் மாதம் கூட காலையிலேயே வெயில் மண்டையைக் கொளுத்துகிறது. குளோபல் வார்மிங். ஸ்டேண்டில் நின்றிருந்த பஸ் ஒன்று காலியாக இருந்தது. ஆட்சி அருமையாக நடக்கிறது. இப்போதெல்லாம் எத்தனை சொகுசு பஸ்?

வசதியாக ஜன்னலோர சீட் ஒன்றில் அமர்ந்ததும் கையோடு வைத்திருந்த குமுதம் ரிப்போர்ட்டரை பிரித்தேன். மெதுவாக ஜன்னல் பக்கம் பார்வையை திருப்பினேன். எதிரே பிரம்மாண்டமாக நிறுவப்பட்டிருந்த ப்ளெக்ஸ் போர்ட் ஒன்று கவனத்தை கவர்ந்தது. நாய்ச்சங்கிலி கனத்தில் பத்து சவரன் கழுத்துச் சங்கிலி, பட்டையாய் கையில் பிரேஸ்லேட், தாமரைக்கனி பாணியில் துணைமுதல்வர் படம் போட்ட அதிரசம் சைஸ் மோதிரம் என்று சர்வபூஷித அலங்காரத்தோடு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தவரை எங்கேயோ பார்த்த நினைவு.

பட்டையாக எழுதப்பட்டிருந்த வாசகத்தை கண்டதுமே நினைவு வந்துவிட்டது. “ஒன்றிய பிரதிநிதியாக தேனீயாரை நியமித்த தலைவருக்கு வாழ்த்துகள்”. ஆஹா தேனீயாரா? அசத்துறாங்களே? அதுவும் ஒன்றியப் பிரதிநிதி போஸ்டிங்? கட்சியின் ஜனநாயக மாண்பே மாண்பு!

நினைவுச்சக்கரம் மூன்று, நான்கு வருடங்களுக்கு முன்பாக சுழலத் தொடங்கியது. தேனீ டீ ஸ்டால். அப்போதெல்லாம் வேலை வெட்டி இல்லாத வெட்டி ஆபிஸர்களின் வேடந்தாங்கல். ஒரு கோல்ட் பில்டரை பற்றவைத்துக் கொண்டு, சிங்கிள் டீயை ஆர்டர் செய்துவிட்டு, நாள் முழுக்க ஃபேன் காற்றில் உட்கார்ந்து தினத்தந்தி படிக்கலாம். அரசியல் பேசலாம். வசூல் மன்னன் விஜய்யா? அஜீத்தா? என்று சினிமாவை விவாதிக்கலாம்.

யாராவது ஆளிருந்தாலும் சரி, ஆளில்லா விட்டாலும் சரி. ‘சர்ர்ர்’ரென்ற சவுண்டோடு, டீ போடுவதற்கென்றே பிறப்பெடுத்தவர் மாதிரி டீ ஆற்றிக் கொண்டிருப்பார் தேனீ ராமசாமி. ரொம்ப நேரம் ஆற்றிய டீக்கு கஸ்டமர் வரவில்லை என்றால் அவரே குடித்து விடுவார்.

“மச்சான் எலெக்‌ஷன் வரப்போவுதுடா, சிட்டிங்குக்கு சீட் கிடைக்குமா?”

“கிடைக்கும் மாதிரி தெரியலை மாமு. இந்த வாட்டி குன்றத்தூர் பார்ட்டிக்கு லக்கு இருக்குன்னு நெனைக்கிறேன். முழுக்க இளைஞர்களுக்கு வாய்ப்புன்னு தலைவர் சொல்லியிருக்காரே?”

“புது ஆளு வந்தா நல்லதுதான்யா. பழைய பெருசுங்க எல்லாம் எலெக்‌ஷன் வந்தா மட்டும் வந்து வேலை வாங்குறானுங்க. மத்த டைமுலே கலெக்‌ஷனுலே பிஸி ஆயிடுறானுங்க!”

இந்த மாதிரியாக விவாதங்கள் நடக்கும். சில நேரங்களிலும் ராமசாமியும் விவாதத்தில் கலந்து கொள்வார்.

“அப்போன்னா சிட்டிங்குக்கு பவர் இனிமே இல்லைன்னு சொல்லுங்கண்ணே!” – ‘சர்ர்ர்’ரென்று டீ ஆற்றியபடியே.

“யோவ் ராமு உனக்கெதுக்குய்யா கேடுகெட்ட அரசியலு எல்லாம். கடையை திறந்தமா? பொழைப்பை பார்த்தோமானு இல்லாம...”

ஜமாவில் இருந்து யாராவது நோஸ்கட் செய்வார்கள். ராமுவின் முகம் தொங்கிப் போகும். பாவமாக இருக்கும். அரசியல் என்றில்லை, வேறு எது பேசினாலும் ராமு ஆவலாக கலந்துகொள்ள வருவார். ஏனோ தெரியவில்லை. அவரை எனக்குத் தெரிந்தவரை யாரும் செட்டில் சேர்த்துக் கொள்ள தயாராக இருந்ததேயில்லை.

விடிகாலை மூன்றரை நாலு மணிக்கு கடையைத் திறந்து சுப்ரபாதம் போடுவார். நாள் முழுக்க டீ ஆற்றுவது. இரவு பத்து மணிக்கு கடையை மூடிவிட்டு வீட்டுக்குப் போய்விடுவார். வாரவிடுமுறை எதுவும் கிடையாது. ஊரிலிருந்து அழைத்துவந்த ஒரே ஒரு பையன் மட்டும் ராமுவுக்கு துணை. மாதவன் கன்ஸ்ட்ரக்‌ஷனுக்கும், பார்பி பேன்ஸி ஸ்டோருக்கும் ஒரு நாளைக்கு ரெண்டு முறை டீ எடுத்துச் சென்று சப்ளை செய்வது அந்தப் பையனின் வேலை.

செக்குமாடு மாதிரியான வாழ்க்கை ராமுவுடையது. அவருக்கு தோராயமாக முப்பத்தைந்து வயது இருந்திருக்கலாம். “என்ன வயசுண்ணே ஆவுது?” என்று கேட்டால் சொல்லத் தெரியாது. எழுதப் படிக்கவும் தெரியாது. அவருக்குத் தெரிந்த ஒரே வேலை டீ போடுவது.

பிற்பாடு ராமுவை தெரிந்த ஒருவரிடம் பேசியபோது ‘பகீர்’ தகவல்கள் நிறைய கிடைத்தன.

பாட்ஷா ரஜினி மாதிரி ராமுவுக்கும் பிளாஷ்பேக் இருந்திருக்கும் என்று நாங்கள் யாருமே நினைத்துப் பார்த்ததில்லை. பதிமூன்று வயதில் தேனீயில் சின்னம்மாவால் அடித்துத் துரத்தப்பட்ட ராமு செங்கல்பட்டில் சில டீக்கடைகளில் வேலை பார்த்திருக்கிறார். கடின உழைப்புக்குப் பிறகு டீமாஸ்டராக பதவி உயர்வு. அடுத்த சில வருடங்களில் செங்கல்பட்டு பைபாஸ் ரோட்டில், ரோடு ஓரமாக சின்ன அளவில் டீக்கடையை சொந்தமாக திறந்திருக்கிறார்.

இந்த நேரத்தில் ராமுவுக்கு திருமணம் ஆகியிருக்கிறது. ஒரு பெண் குழந்தையும் பிறந்திருக்கிறது. ராமு இல்லாத நேரத்தில் டீக்கடைக்கு வந்த ரவுடி ஒருவன் ராமுவின் மனைவியிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்திருக்கிறான். விஷயத்தை கேள்விப்பட்ட ராமு அருவாளை எடுத்து ரவுடியின் கழுத்தில் ஒரே ‘சர்ர்ர்ர்ரரக்’.

கேஸ் செங்கல்பட்டு கோர்ட்டில் இன்னமும் நடந்து கொண்டிருக்கிறதாம். ராமுவின் இந்த கொலைவெறி பிளாஷ்பேக்கை கேட்டதில் இருந்து அவரிடம் கொஞ்சம் உஷாராகவே நடந்துகொண்டோம். முன்புபோல யாரும் நோஸ்கட் விட்டு விடுவதில்லை.

அரசியல், இளைய தளபதி ரசிகர் மன்றம் என்றெல்லாம் சுற்றிக் கொண்டிருந்தவர்களுக்கு திடீரென்று ஒருநாள் பள்ளிக்கரணை பனைமரத்தடி ஒன்றில் திடீர் ஞானம் பிறந்தது. எல்லா கந்தாயங்களையும் விட்டு ஒழித்து வேலை வெட்டி, குடும்பம் குட்டி என்று பிஸியாகிவிட்டோம். தேனீ டீ ஸ்டால் புதிய தலைமுறை வெட்டி ஆபிஸர்களால் நிறைய ஆரம்பித்தது.

இந்த கட்டத்தில் ராமு வேறு சில பிஸினஸ்களிலும் புகுந்து கலக்கி வந்ததாக கேள்விப்பட்டோம். ரியல் எஸ்டேட் தொழில் மடிப்பாக்கத்தில் கொடிகட்டிப் பறந்த காலம் அது. டீக்கடைக்கு வரும் யாராவது ஆட்கள் ‘வேங்கைவாசல்லே மொத்தமா 10 கிரவுண்டு கஸ்டமர் கிட்டே இருக்குண்ணே. ரெண்டரை ‘சி’க்கு பார்ட்டி கிடைச்சா முடிச்சிடலாம்’ என்று பேசிக்கொண்டிருப்பார்கள். வழக்கம்போல அவர்கள் பேச்சை ராமு செவிமடுத்துக் கேட்டுக் கொண்டிருப்பார்.

அடுத்து வரும் கஸ்டமர்கள் யாராவது ‘மேடவாக்கம் தாண்டி மொத்தமா பத்து கிரவுண்டு கிடைச்சா நல்லாருக்கும்’ என்று பேசிக்கொள்வார்கள். இரண்டு பார்ட்டிகளையும் இணைக்கும் பாலமாக ராமு செயல்பட்டார். அடுத்தடுத்து தடாலடியாக ஏழெட்டு ‘சி’ பிஸினஸ்களை முடித்துக் கொடுத்ததுமே டீக்கடையை மூடிவிட்டார்.

‘தேனீ டீ ஸ்டால்’ சடக்கென்று ஒரு நாள் ‘தேனீ ரியல் எஸ்டேட்’ ஆக மாற்றம் பெற்றது. கண்ணாடிக் கதவெல்லாம் போட்டு, கூலிங் பேப்பர்கள் ஒட்டி கடையின் தன்மையே கார்ப்பரேட் ஆகிவிட்டது. ராமுவும் லுங்கியெல்லாம் கட்டுவதில்லை. டீசண்டாக கருப்பு பேண்ட், வெள்ளைச்சட்டையில் ஹீரோ ஹோண்டாவில் வலம் வந்தார். கூடமாட ஒத்தாசைக்கு இருந்த பையனும் ஜீன்ஸ், டீசர்ட் என்று பரிமாணம் பெற்றான்.

நினைவுச்சக்கரம் நின்று விட்டது. இப்போது பஸ்ஸின் ஜன்னலோரச் சீட்டில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். எதிரில் சில கடைகளில் ’எட்டாவது வள்ளலே!’ என்று விளித்து ஒட்டப்பட்டிருந்த கலர் போஸ்டர்களில் கூலிங் கிளாஸ் போட்டு தேனீயார் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்.

இதுவரை இந்த கதையை படித்துக் கொண்டிருப்பவர்களில் சிலர் தேனீயாரின் வளர்ச்சிக்காக மகிழ்ச்சி அடைந்திருக்கலாம். அல்லது ஆச்சரியம் அடைந்திருக்கலாம். கதையை எழுதும் நான் அதிர்ச்சி மட்டுமே அடைகிறேன். ஏனெனில் போஸ்டரில், ப்ளக்ஸ் போர்டிலும் இருக்கும் தேனீயார், ஒரிஜினல் தேனீயார் அல்ல. ஆமாம் ராமசாமி அல்ல. ராமசாமியிடம் எடுபிடியாக இருந்தானே ஒரு பயல், அவன்தான் –மன்னிக்கவும்- அவர்தான் இப்போதைய ஒன்றியப் பிரதிநிதி தேனீயார். இந்த எதிர்பாராத மாற்றம் எவ்விதம் நிகழ்ந்த்து, எந்தக் கணத்தில் நேர்ந்த்து என்பது பற்றிய தகவல்களை எல்லாம் இனிமேல் விசாரித்துதான் தெரிந்து கொள்ள வேண்டும்.

சரி, ஒரிஜினல் தேனீயார் என்ன செய்கிறார்?

தெரிந்தவர்களிடம் விசாரித்ததில் ரியல் எஸ்டேட் தொழிலில் குறுகிய காலத்தில் உச்சிக்கு வந்து, அதைவிட மிகக்குறுகிய காலத்திலேயே அதலபாதாளத்துக்கு வீழ்ந்து விட்டாராம். இப்போது பல்லாவரம்-பெருங்குடி ரேடியல் சாலை ஓரத்தில் டீக்கடை பழையமாதிரியே டீக்கடை நடத்துவதாக சொல்கிறார்கள். இன்னேரத்தில் அங்கும் நாலு பேர் பெஞ்சில் உட்கார்ந்து அரசியலோ, ரியல் எஸ்டேட்டோ, சினிமாவோ பேசிக்கொண்டிருக்க கூடும்.