இடாகினி என்பது தமிழ் சொல்லா? இடாகினி என்ற வார்த்தைக்கு சத்தியமாக என்ன பொருள் என்பது புரியவில்லை. ஆனாலும் மோகிணி என்று சொல்லுவதைப் போல இடாகினி என்று சொல்லுவதும் கவர்ச்சியாக, நாக்குக்கு இதமாக இருக்கிறது. இடாகினி இடாகினி என்று சொல்லிப் பாருங்கள். கேட்பவர்களின் காதுகளில் நிச்சயம் தேன் ஒழுகும். என்ன ஒரு அழகான வார்த்தை.
கோபிகிருஷ்ணனின் வாழ்க்கை அவரது எழுத்தைப் போலில்லாமல் துயரமானதாக இருந்திருக்கக்கூடும். துயரமும், கொண்டாட்டமும் பொருளாதாரத்தை முன்னிறுத்தியே அமைகிறது. ஒரு அரசுசாரா சேவை நிறுவனத்தில் 750 ரூபாய் சம்பளத்தில் கோபிகிருஷ்ணன் என்னத்தை பெரியதாக கொண்டாடியிருக்க முடியும்? சிகரெட்டும், குடிப்பழக்கமும் இல்லாது இருந்திருந்தால் அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பாரோவென்று நினைக்கத் தோன்றுகிறது.
ஆனால் அவரது எழுத்து கொண்டாட்டம் நிறைந்தது. மற்றவர்களை எந்தளவுக்கு எள்ளல் செய்கிறாரோ, அதே அளவு சுயஎள்ளலும் செய்துகொள்கிறார். அடுத்தவர்களை வெறுக்கும் அளவுக்கு தன்னையும் வெறுத்துக் கொள்கிறார். அடுத்தவர்களை புகழும் அளவுக்கு தன்னையும் புகழ்ந்து கொண்டிருக்கிறார். அடுத்தவர்களை திட்டும் அளவுக்கு தன்னையும்... இப்படியே சொல்லிக்கொண்டு போகலாம். கோபிகிருஷ்ணனுக்கு வாய்த்த மனம் எல்லோருக்கும் வாய்ப்பது அரிது.
‘இடாகினிப் பேய்களும், நடைப்பிணங்களும், உதிரி இடைத்தரகர்களும்!’ - குறுநாவலில் தலைப்பே ஒருவரி கதை மாதிரிதானிருக்கிறது. தலைப்பைப் பார்த்து மிரளாதே என்று முதல் பத்தியிலேயே நட்போடு ஆலோசனை கூறுகிறார். 28-09-1989 முதல் 24-03-1997 வரையிலான ஒரு மனிதரின் டயரிக்குறிப்புதான் இக்குறுநாவல். நாவலை எழுதுவதற்கான நியாயங்களாக கோபி குறிப்பிடுவதில் முக்கியமானது சமூகப்பணித்துறையில் பல கறுப்பு ஆடுகள் நுழைந்து கொண்டிருப்பது. மற்றொன்று, இந்த... என்ன சொல்வார்கள் அதை.. ஆம் கலாச்சாரம். இந்தக் கலாச்சாரம் என்ற வார்த்தை நெருடலாக இருப்பது மட்டுமின்றி இயல்பான உணர்வுகள் மீது ஒடுக்குமுறையை திணிக்கிறது. இப்படியே எழுதிக் கொண்டு போகிறார். கோபிகிருஷ்ணனின் புகைப்படம் எதையும் பார்த்ததில்லை நான். இந்நாவலை வைத்து அவரது உருவத்துக்கு என் மனதில் ஒரு பிம்பம் வரைந்து வைத்திருக்கிறேன். அனேகமாக அசோகமித்திரன் உடல்வாகோடு கூடிய பிம்பம் அது.
நாவல் முழுக்க ஆங்காங்கே இறைந்து கிடக்கும் கோபியின் சுயபிரகடனங்களும் சுவாரஸ்யமானவை. ‘நான் நல்லவனா, கெட்டவனா என்பது பிரச்சினை இல்லை. இந்த அடைகள் தேவை இல்லாதவை. நான் வரம்புகள் அற்றவன். ஆனால் ஒன்றை நிச்சயம் சொல்லியாக வேண்டும். நீங்கள் எனக்கு கொடுக்கும் சுதந்திரங்களை தவிர்த்து வேறு சுதந்திரங்களை நான் என்றைக்கும் எடுத்துக் கொள்ளமாட்டேன்’
நந்தன் இதழில் வெளிவந்திருந்த தந்தை பெரியாரின் கூற்று ஒன்றினை வாசித்தபோது இந்நாவலுக்கான அவசியம் கோபிக்கு ஏற்பட்டிருக்கிறது. ’நாட்டில் யோக்கியமான, உண்மையான பொதுத்தொண்டு ஸ்தாபனமே இல்லாமல் போய்விட்டது. எந்த ஸ்தாபனமும் யாரோ குறிப்பிட்ட ஒரு சிலர் பிழைக்க வேண்டும் என்பதல்லாமல் பொது மக்கள் நலனுக்காக ஏற்படவில்லை’. இந்தக் கூற்றை வாசிக்கும்போது அது எல்லா நிறுவனங்களுக்குமே பொருந்துகிறது. இதுவரை மதங்கள் உலகுக்கு தந்த எல்லா தீர்க்கதரிசிகளை விடவும் சிறந்தவர் தந்தை பெரியார்.
கோபி பணிபுரிந்த அலுவலகம், அது அமைந்திருந்த சாலை, கட்டிடம், அறைகள், வராண்டா என்று விஸ்தாரமாக அஃறிணைகளில் தொடங்கி அவ்வலுவலகத்தில் பணியாற்றிய ஒவ்வொரு ஊழியரைப் பற்றியுமான அறிமுகத்தை தமிழ் வாசகனுக்கும், வாசகிக்கும் கொடுக்கிறார். ஹாலிவுட் படங்களில் கையாளப்படும் உத்தி இது. ஒரு படத்தின் இரண்டு மணி நேரத்தை மூன்று பாகங்களாகப் பிரித்துக் கொண்டு முதல் பாகத்தில் முழுக்க முழுக்க கேரக்டர் எஸ்டாபிளேஷன். அடுத்த பாகத்தில் கேரக்டர்களுக்கிடையேயான சிக்கலை, பிரச்சினைகளை உருவாக்குவது. மூன்றாவது பாகத்தில் சிக்கு எடுத்து சுபம். இடாகினி இந்த ஃபார்முலாவில் அச்சுபிசகாமல் பயணிக்கிறது. க்ளைமேக்ஸ் மட்டும் ஆண்ட்டி-க்ளைமேக்ஸ்.
இன்று இணையத்தில் சாத்தியமாகியிருக்கும் ஹைப்பர்-லிங்க் முறையை ப்ரிண்ட் மீடியத்தில் பரிசோதித்து இந்நாவலில் வெற்றி கண்டிருக்கிறார் கோபி. ‘இணைப்பு-1ல் அந்தப் பரிசோதனை ஓர் அற்புதமான உளவியல் ஆவணம் என்று குறிப்பிடப்பட்டிருப்பது, புது எழுத்துவில் வெளியாகி மானிட வாழ்வு தரும் ஆனந்தம் தொகுப்பில் இடம்பெற்றுள்ள இலியும் வழியும் புறப்பாடும் தெறிப்பும் என்ற படைப்பு ஆகும். இதை இணைப்பு 1-அ என்று வைத்துக் கொள்ளலாம்’ என்ற ரேஞ்சுக்கு நாவல் முழுக்க ஒன்பது இணைப்புகள். நல்லவேளையாக அவற்றை புது எழுத்துவிலோ, கணையாழியிலோ, கோபியின் தொகுப்புகளிலோ தேடிப்படிக்கும் அசாதாரமாண வேலையை வைக்காமல் நூலின் பிற்பகுதியிலேயே பதிப்பகத்தார் இணைத்திருக்கிறார்கள்.
இதை புனைவு என்றோ, என் சொந்தக்கதை என்றோ எப்படி உனக்குத் தோன்றுகிறதோ அப்படி எடுத்துக்கொள் என வாசகனுக்கு சுதந்திரத்தை அவர் தந்துவிட்டாலும், அந்த சுதந்திரத்தை எடுத்துக்கொள்ள வாசகன் தயாரில்லை. இதைப் புனைவு என்று யாருமே நினைக்கமுடியாத அளவுக்கு அனுபவித்தால் மட்டுமே எழுதியிருக்கக்கூடிய உயிரோட்டமான எழுத்துகள். இப்படைப்பின் நாயகன் கோபி என்றால், நாயகி அவரோடு பணிபுரிந்த விக்டோரியா சமாதானம். மெல்லிய ரொமான்ஸும் உண்டு. சமாதானம் குறித்து எழுதும்போது கோபியின் பேனா நிறைய ஜொள்ளு விடுகிறது. பெண்களுக்கு ஏதாவது பரிசளிக்க வேண்டுமென்றால் பேண்டீஸும், ப்ராவும்தான் கோபியின் சாய்ஸ்.
நூலாசிரியரின் பலமே புரியும்படி எழுதுவது. தமிழில் வன்மையான வார்த்தைகள் நிறைய உண்டென்றாலும் வாசிக்கும் எல்லோருக்கும் புரியும் வார்த்தைகளையே பயன்படுத்துகிறார். சிற்றிலக்கியம் என்ற பெயரில் வாசகனுக்கு பூச்சாண்டி காட்டவில்லை. இவ்வகையிலும் கோபியையும், சாருவையும் நிறைய ஒப்பிட முடிகிறது. நண்பர் என்ற அடிப்படையில் சாருவுக்கு கோபியின் இன்ஃப்ளூயன்ஸ் எழுத்தில் நிறைய இருக்கக்கூடும் என யூகிக்கிறேன். கோபியின் இடாகினியும், சாருவின் ராஸலீலாவும் பணிசார்ந்த அனுபவங்கள் என்ற அடிப்படையில் ஒரே தளத்தில் இயங்கும் படைப்புகள். இருவருமே குமாஸ்தாப்பணியை திறம்பட செய்தவர்கள். அப்பணியை வெறுத்தவர்கள். நரகத்தில் இருந்ததைப் போல உணர்ந்தவர்கள் பணியில் இருந்து வெளிவந்ததை விடுதலையாக கொண்டாடியவர்கள். அதே நேரத்தில் இவர்களது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த அந்தரங்க வெளிப்பாடு வாசகனுக்கு கிசுகிசு படிக்கும் போதையையும் ஏற்றுகிறது.
நூல் சொல்லும் கதையைப் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. படிக்க விரும்புபவர்களுக்கு அது ஸ்பாய்லர் ஆகிவிடும். ஆனால் மாறுபட்ட சுகமான வாசிப்பனுபவத்துக்கு இடாகினி நிச்சய உத்தரவாதம் அளிக்கிறாள் என்று மட்டும் உத்தரவாதம் அளிக்க இயலும்.
நூலின் பெயர் : இடாகினிப் பேய்களும், நடைப்பிணங்களும், உதிரி இடைத்தரகர்களும்!
நூல் ஆசிரியர் : கோபிகிருஷ்ணன்
விலை : ரூ.40/-
பக்கங்கள் : 128
வெளியீடு : தமிழினி,
342, டி.டி.கே. சாலை, சென்னை-14
கோபிகிருஷ்ணனின் பிற படைப்புகள் :
1) ’ஒவ்வாத உணர்வுகள்’ (சிறுகதைகள்) 1986 - சிட்டாடல் வெளியீடு
2) ’உணர்வுகள் உறங்குவதில்லை’ (குறுநாவல்கள்) 1989 - சரவணபாலு பதிப்பகம்
3) சஃபி, லதா ராமகிருஷ்ணன் - இவர்களுடன் இணைந்து எழுதிய ’கொஞ்சம் அவர்களைப் பற்றி.. மனோதத்துவம் ஓர் அறிமுகம்’ (கட்டுரைகள்) 1992 - சவுத் ஏஷியன் புக்ஸ்
4) சஃபியுடன் இணைந்து எழுதிய ‘சமூகப்பணி, அ-சமூகப்பணி, எதிர்-சமூகப்பணி’ (ஒரு நீண்ட கட்டுரை) 1992 - முன்றில் வெளியீடு
5) ‘உள்ளேயிருந்து சில குரல்கள்’ (மனநோய்கள் குறித்த புத்தகம்) 1993 - முன்றில் வெளியீடு
6) ’முடியாத சமன்’ (சிறுகதைகள்) 1998 - ஸ்நேகா வெளியீடு
7) ‘டேபிள் டென்னிஸ்’ (குறுநாவல்) 1999 - தமிழினி
8) ‘தூயோன்’ (சிறுகதைகள்) 2000 - தமிழினி
9) ‘மானிட வாழ்வு தரும் ஆனந்தம்’ (சிறுகதைகள்) 2001 - தமிழினி
9 அக்டோபர், 2009
6 அக்டோபர், 2009
புவனேஸ்வரி!
ஒரு ஏழெட்டு ஆண்டுகள் ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன். வடபழனி பக்கமாகப் போனபோது சுவரெங்கும் ஒட்டப்பட்டிருந்த அந்த ‘வாழ்த்து சுவரொட்டிகள்’ கண்ணைக் கவர்ந்தது. “தானைத்தலைவி புவனேஸ்வரிக்கு 21வது பிறந்தநாள் வாழ்த்துகள் – இவண் அகில உலக புவனேஸ்வரி ரசிகர் மன்றம்”
அப்போது புவனேஸ்வரி சினிமாவில் கூட நடித்ததாக நினைவில்லை. ஒரு சில டிவி சீரியல்களில் நெகட்டிவ் கேரக்டர்களில் நடித்துக் கொண்டிருந்தார். ‘பூனைக்கண் புவனேஸ்வரி’ என்று அடைமொழியோடு ஓரளவு அறியப்பட்டிருந்தார். மறுநாள் தினத்தந்தி தொடங்கி எல்லாப் பத்திரிகைகளில் புவனேஸ்வரி பிறந்தநாள் விழா செய்திகளும், அதையொட்டி அவரது ரசிகர்மன்ற நற்பணிகளும் பிரதானமாக இடம்பெற்றிருந்தது. படங்களும் அட்டகாசமாக ‘கவர்’ செய்யப்பட்டிருந்தது.
அடுத்த ஓராண்டுக்குள்ளாகவே விபச்சார வழக்கில் புவனேஸ்வரி கைது செய்யப்பட்டதாக அதே பத்திரிகைகளில் வாசிக்க நேர்ந்தது. புவனேஸ்வரியை பற்றி மட்டுமல்ல, அந்த சீசனில் வினிதாவைப் பற்றியும் கூட இதேமாதிரி ‘விபச்சார வழக்கு’ செய்திகளை காணநேர்ந்தது. ‘விபச்சார வழக்கு’ என்றொரு வழக்கு இருக்கிறதாவென்றே எனக்குத் தெரியவில்லை.
இ.பி.கோ.வில் இதற்கு என்ன செக்ஷன்? சரி. புவனேஸ்வரியும், வினிதாவும், ஏனைய சில இரண்டாம் கட்ட நடிகைகளும் விபச்சாரம் செய்தார்கள் என்று வழக்குப் போடப்பட்டிருந்தால், அவ்வழக்குகளில் இதுவரை ஏதேனும் தீர்ப்புகள் வந்திருக்கிறதா? அவர்களிடம் விபச்சாரத்துக்கு போனவர்கள் மீது ஏதேனும் வழக்கு பதியப்பட்டிருக்கிறதா? – இதுபற்றிய செய்திகளை எங்குமே காணநேரவில்லை. சமீபத்தில் கூட பத்மாலட்சுமியோ என்னவோ பெயர். ஒரு நடிகை இதுபோல கைது செய்யப்பட்டிருந்தார். அவரது வழக்கும் என்ன நிலையில் இருக்கிறது என்று தெரியவில்லை. எது எதற்கோ ஃபாலோ-அப் கொடுக்கும் பத்திரிகைகள் இந்த பரபரப்பான செய்திகளுக்கு ஏன் ஃபாலோ-அப் கொடுப்பதில்லை என்பதும் புரியவில்லை.
இப்போது மீண்டும் புவனேஸ்வரி ‘விபச்சார வழக்கில்’ கைது செய்யப்பட்டிருப்பதாக பத்திரிகைகள் ஒருவாரமாக பரபரத்துக் கொண்டிருக்கின்றன. காவல்துறையின் விசாரணையின் போது மேலும் சில நடிகைகளின் லிஸ்டை கொடுத்து இவர்களையெல்லாம் கைது செய்யமாட்டீர்களா? என்று கேட்டதாகவும் வாசிக்க நேர்கிறது. காவல்துறை விசாரணை பத்திரிகைகளுக்கு ‘லீக்’ ஆகிறதா, அப்படியென்றால் லீக் செய்த கருப்பாடு காவல்துறையில் இருக்கிறதா என்பதெல்லாம் இயல்பாக எழவேண்டிய துணைக்கேள்விகள். தினமலர் ஒரு படி மேலே போய் புவனேஸ்வரி கொடுத்த லிஸ்டில் இருந்த நடிகைகள் என்று ஷகீலா, அஞ்சு, சீதா, மஞ்சுளா, நமீதா, ஸ்ரீப்ரியா, நளினி என்று படங்களோடு செய்திகள் வெளியிட்டிருந்தது. அனேகமாக தமிழ் பத்திரிகையுலக வரலாற்றிலேயே இவ்வளவு தில்லாக (அது உண்மையா பொய்யா என்பது வேறு விஷயம்) ஒரு செய்தி வெளிவந்திருப்பது இதுவே முதன்முறை என்று நினைக்கிறேன்.
இதையடுத்து நடிகர் சங்கம் அவசரமாக கூடி, ஏதோ முடிவெடுத்து கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருப்பதாக இன்றைய செய்தித்தாள்களில் போட்டோவோடு காணமுடிகிறது. (மஞ்சுளா) விஜயகுமார் ஆவேசமாக, “குடும்பப் பெண்களைப் பற்றி இதுபோல செய்திகள் வெளிவந்தால், எப்படி இவர்களோடு குடும்பம் நடத்துவது?” என்று கேட்டிருப்பதாகவும் வாசித்தேன். ஃபுல் மேக்கப்போடு சில நடிகைகள் கமிஷனர் ஆபிஸுக்கு வந்த வண்ணப்படங்கள் பிரதானமாக பல பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. ‘இவங்களா ஏன் ஜீப்புலே ஏறுராங்க!’ என்ற லெவலுக்கே படத்தைப் பார்த்து டீக்கடைகளில் கமெண்டு அடிக்கிறார்கள்.
இந்த மேட்டரை இந்த அளவுக்கு பப்ளிசிட்டி செய்யாமலேயே சம்பந்தப்பட்ட நடிகைகளும், நடிகர் சங்கமும் முடித்துக் கொண்டிருக்கலாம். முன்பு குஷ்புவையும், இயக்குனர் பாலச்சந்தரையும் இணைத்து குமுதம் ஏப்ரல் ஃபூல் செய்தபோது, மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்து பிரச்சினையை முடித்துக் கொண்டார்கள். இந்த விவகாரத்திலும் தினமலர் மீது சம்பந்தப்பட்ட நடிகைகள் மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்திருக்கலாம். அல்லது அவதூறு வழக்கு கூட போட்டிருக்கலாம். கமிஷனர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட புகார் தினமலர் மீதா அல்லது புவனேஸ்வரி மீதா என்பது சரிவரத் தெரியவில்லை. தினமலரில் வந்தது போன்ற விபச்சார லிஸ்ட்டை புவனேஸ்வரி வாக்குமூலத்தில் தரவில்லை என்று கமிஷனர் அலுவலகம் விளக்கியும் இருக்கிறது.
எப்படியிருந்தாலும் அதிகபட்சம் பத்து நாட்களுக்கு தான் இந்த பரபரப்பு இருக்குமென்று கருதுகிறேன். கடந்த கால பரபரப்புகளுக்கு ஏற்பட்ட கதிகளை பார்த்ததின் அடிப்படையில் இந்த முடிவுக்கு உடனே வந்துவிட முடிகிறது. எனது கவலை என்னவென்றால், புவனேஸ்வரிக்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகன் ஒருவன் இருக்கிறானாம். அவனது பிறந்தநாள் அன்றே புவனேஸ்வரி கைது செய்யப்பட்டிருக்கிறார். அந்த சிறுவனின் இன்றைய மனநிலை என்னவாக இருக்கும்? அவனால் சகஜமாக படிக்க முடியுமா? தன் சக பள்ளித்தோழர்கள், நண்பர்களின் முகத்தில் எப்படி முழிப்பான்? எதிர்காலத்தில் என்ன ஆவான்? - கற்பனை செய்து கூடப் பார்க்க இயலவில்லை.
5 அக்டோபர், 2009
3டி தில்லாலங்கடி!
3டி படமென்றாலே நமக்கெல்லாம் உடனடியாக ‘மைடியர் குட்டிச்சாத்தான்’ நினைவுக்கு வந்துவிடும். படம் பார்த்தவர்களின் முகத்துக்கு நேராக கோன் ஐஸ் நீட்டியதும், படம் பார்த்தவர்கள் தம்மை மறந்து கோன் ஐஸை வாங்க காற்றில் கைநீட்டி ஏமாந்ததும் இனிப்பான மலரும் நினைவுகள் அல்லவா?
3டி படங்களைப் பார்க்க சிறப்புக் கண்ணாடி தேவை. இதை தியேட்டர்களில் பார்வையாளர்களுக்கு வினியோகிப்பதும், திரும்பப் பெறுவதும் சிக்கலான மற்றும் நேரத்தை விழுங்கும் காரியமென்பதால் தியேட்டர் ஊழியர்களிடையே 3டி படங்களுக்கு பெரிய வரவேற்பு இல்லை. அதுவுமின்றி நம்மூரில் 3டி படங்களுக்கான சாத்தியமென்பதே மந்திர மாயாஜால, புராணப்படங்களுக்கு தான் என்பதாலும் தொடர்ந்து 3டி படங்களை பெரும் பொருட்செலவில் தயாரிக்க தயாரிப்பாளர்களும் தயாராக இல்லை. சில சிறப்பு கேமிராக்களை வைத்து 3 பரிமாணங்களில் படமாக்க வேண்டியிருந்த்தால் தயாரிப்பு செலவு, சாதாரணப் படங்களை விட இருமடங்கு அதிகமாகியது என்பதும் மற்றொரு காரணம்.
இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழில் 3டி மறுமலர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகப்பிரகாசமாக காணப்படுகிறது. இடைபட்ட காலக்கட்டத்தில் தொழில்நுட்பம் நாலு கால் பாய்ச்சலில் அல்ல, நாலாயிரம் கால் பாய்ச்சலில் முன்னேறியிருக்கிறது. அனிமேஷன் முறையில் உருவாக்கப்படும் 3டி ஹாலிவுட் படங்கள் உலகெங்கும் குழந்தைகளை மட்டுமன்றி பெரியவர்களையும் கட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த 3டி படங்களை காண சிறப்புக் கண்ணாடியெல்லாம் தேவையில்லை. ஆனால் கோன் ஐஸ் உங்கள் முகத்துக்கு நேராக நீட்டப்படும் எஃபெக்ட் எல்லாம் கிடைக்காது என்றாலும், அதைவிட சிறப்பான அனுபவம் அரங்கில் கிடைக்கிறது.
திரையரங்குகளும் இந்த 3டி அனிமேஷன் படங்களை திரையிட தகுந்தவாறு தங்களது அரங்க உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வைத்திருக்கின்றன. சென்னை சத்யம் சினிமாஸ் திரையரங்க வளாகத்தில் 3டி அனிமேஷன் திரைப்படங்களை மட்டுமே திரையிட தனி அரங்கு இருக்கிறது. ஒலி, ஒளி துல்லியத்தோடு 3டி படங்களை ரசிக்கும் ரசிகர்கள் எப்போதுமே இந்த அரங்குக்கு ‘ஹவுஸ்ஃபுல்’ போர்டு மாட்ட வைக்கிறார்கள் என்று மகிழ்ச்சியோடு சொல்கிறார்கள் இந்த தியேட்டர் நிர்வாகத்தினர்.
ஃபைண்டிங் நிமோ, ரேட்டட்டைல், ஐஸ் ஏஜ், மான்ஸ்டர்ஸ், கார்ஸ், வால்-ஈ, தி இன்க்ரிடிபிள்ஸ், குங்பூ பாண்டா போன்று 3டி அனிமேஷனில் உருவாக்கப்பட்ட ஏராளமான படங்கள் யாரும் எதிர்பாராத பிரம்மாண்ட வெற்றிகளை கண்டது. மனிதர்களை படமாக்கி உருவாக்கும் வழக்கமான படங்களுக்கு ஆகும் செலவை விட பன்மடங்கு செலவினை 3டி படங்களுக்கு செய்யவேண்டியிருக்கிறது. செய்தாலும் லாபம் உத்தரவாதம் என்ற நிலையில் ஹாலிவுட் ஸ்டுடியோக்கள் அடுத்தடுத்து 3டி படங்களை மும்முரமாக உருவாக்கி வருகின்றன.
3டி அனிமேஷனில் ஒரு வசதி என்னவென்றால் விலங்குகளை பேசவைக்கலாம். ஹீரோவை அனாவசியமாக பறக்க வைக்கலாம். ஆயிரம் பேரை அடிக்க வைக்கலாம். யாருமே லாஜிக்கலாக ஏனென்று கேட்கமாட்டார்கள். எனவே திரைக்கதை ஆசிரியர் தன் கற்பனைக்குதிரையை இஷ்டத்துக்கு தட்டிவிட்டு வேலை வாங்கலாம். ஃபைண்டிங் நிமோ படத்தில் மீன் தான் ஹீரோ. குங்ஃபூ பாண்டா படத்தில் கரடி தான் ஹீரோ. இவையெல்லாம் மனிதர்களைப் போலவே பேசுகின்றன, பாடுகின்றன, ஆடுகின்றன, பஞ்ச் டயலாக் பேசுகின்றன. அவற்றுக்கும் செண்டிமெண்ட் உண்டு.
சமீபகாலமாக இப்படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டும் வெளியிடப்படுகிறது. ஆங்கிலத்தில் வந்தபோது பெருநகரங்களில் மட்டுமே ரசிக்கப்பட்டுக் கொண்டிருந்த இப்படங்கள் இப்போது தமிழ்நாடு முழுவதும் எல்லாத் தரப்பினராலும் நன்கு வரவேற்கப்படுகிறது. அழுகாச்சி, நம்பமுடியாத சாகசங்கள், அரசியல் பஞ்ச் டயலாக் என்று சில ஆண்டுகளாக வந்த தமிழ் சினிமாப்படங்களை பார்த்து நொந்துப் புண்ணாகிப்போன உள்ளங்களுக்கு ஆங்கில டப்பிங் படங்கள் புனுகு பூசுகின்றன. குறிப்பாக 3டி அனிமேஷன் படங்களை குழந்தைகள், குடும்பத்தோடு ரசிக்க இயலுகிறது.
மக்களின் இந்த எதிர்பார்ப்புகளை புரிந்துகொண்டவர்கள் இப்போது இந்தியாவிலும் 3டி அனிமேஷன் படங்களை உருவாக்கத் தயாராகிவிட்டார்கள். கால்ஷீட் பிரச்சினை, பாரின் லொகேஷன்கள் தொந்தரவு இல்லாமல் அனிமேஷன் ஸ்டுடியோக்களில் இலகுவாக படமாக்கமுடிகிறது. நினைத்த விஷயத்தை எந்தவித காம்ப்ரமைஸுக்கும் இடம் கொடுக்காமல் ஒரு இயக்குனரால் எடுக்க முடிகிறது என்றால், இன்றைய தேதியில் அது 3டி அனிமேஷன் படங்களுக்கே சாத்தியம்.
இந்தியாவின் முதல் 3டி படம் என்று விளம்பரப்படுத்தப்பட்டு சில மாதங்களுக்கு முன்பாக ‘இனிமே நாங்கதான்’ என்ற படம் தமிழில் வெளிவந்தது. மாயபிம்பம் என்ற நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கினார் வெங்கிபிரபு. இயக்குனர் ஷங்கர் படங்களுக்கெல்லாம் அனிமேஷன் செய்து தேசிய விருது பெற்றாரே? அதே வெங்கிதான். இளையராஜா இசையமைத்தார். வாலி பாடல்கள் எழுதியிருந்தார். முழுக்க முழுக்க இப்படம் சென்னையிலேயே உருவாக்கப்பட்டது. இப்படம் குழந்தைகளை கவர்ந்தாலும், எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. காரணம், கதை. அரதப்பழசான பஞ்சதந்திரப் பாணியிலான கதையாக அமைந்துவிட்டதால் பெரியவர்களின் ஆதரவை பெறமுடியவில்லை. இருப்பினும் 96 நிமிடத்திற்கு எடுக்கப்பட்ட இந்த முழுநீளப்படம், தமிழில் அடுத்தடுத்து 3டி படங்கள் வெளிவர இப்படம் முன்னோடியாக அமைந்துவிட்டது.
இப்போது இந்தியா முழுவதும் 3டி அனிமேஷன் படங்களை உருவாக்க பலரும் முயற்சித்து வருகிறார்கள். தமிழில் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் ‘சுல்தான் தி வாரியர்’ என்ற திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இதில் ரஜினியின் உருவத்தையே கம்ப்யூட்டரில் உருவாக்கி சுல்தானாக உலவ விட்டிருக்கிறார். சவுந்தர்யாவின் ஆக்கர் ஸ்டுடியோஸ் நிறுவனம், அயல்நாட்டு அனிமேஷன் பணியாளர்களை பணிக்கு அமர்த்தி இரவுப்பகலாக இத்திரைப்படத்தை உருவாக்கி வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரஜினி ரசிகர்களிடம் மட்டுமன்றி பொதுவாக எல்லாத் தரப்பினரிடமும் இப்படத்துக்கான எதிர்ப்பார்ப்பு ஏகத்துக்கும் இருக்கிறது. பல கோடி செலவில் உருவாக்கப்படும் இப்படம் வெற்றி கண்டால், தமிழில் 3டி அனிமேஷன் படங்கள் வரிசையாக அணிவகுத்து வரும்.
ஏற்கனவே இந்திய மொழிகளில் நிறைய 3டி அனிமேஷன் படங்கள் உருவாக்கப்பட்டு வந்துகொண்டிருக்கின்றன. இவையெல்லாம் பெரும்பாலும் பாலகணேஷ், அனுமன், கடோத்கஜன் என்று புராண கதாபாத்திரங்களை நாயகர்களாக கொண்ட படங்கள். 3டி அனிமேஷனில் குழந்தைகளுக்கான படங்களை தான் உருவாக்க முடியும் என்று இந்தியாவில் கருதுகிறார்கள். குழந்தைகள் புராணங்களையும், கடவுளர்களையும் தான் ரசிப்பார்கள் என்ற மூடநம்பிக்கையும் இங்கே அதிகமாக இருக்கிறது. ‘சுல்தான் தி வாரியர்’ போன்று மசாலா நோக்கில் எடுக்கப்படும் அனிமேஷன் படங்கள் வெற்றி பெறுமானால், இந்த ட்ரெண்ட் மாறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
4 அக்டோபர், 2009
காலும் கை கொடுக்கும்!
டெர்ரி ஃபாக்ஸுக்கு அப்போது 18 வயது. தனக்கு கேன்சர் என்பதை நம்பவே முடியாமல் இருந்தார். அவரது காலில் தீராத கடுமையான வலி இருந்து வந்தது. அதற்கு காரணம், அவருக்கு நடந்த கார் விபத்து என்று நம்பிக் கொண்டிருந்தார். மருத்துவர்களோ கேன்சர் என்றார்கள். முழங்காலுக்கு கீழே காலை எடுத்தே ஆகவேண்டும், இல்லாவிட்டால் உயிருக்கு உலை வைத்துவிடும் என்று எச்சரித்தார்கள். விளையாட்டுத் துறையில் எவ்வளவோ சாதிக்க வேண்டிய கனவுகள் அவருக்கு இருந்தது. தன் தாய்நாடான கனடாவுக்கு தடகளத்துறையில் பதக்கங்களை குவிக்கும் லட்சியம் இருந்தது. லட்சியம் வெறும் கனவாகவே முடிந்துவிடுமோ என்று டெர்ரி மனம் வெதும்பினார்.
விளையாட்டுக் காதலரான டெர்ரி சிறுவயதில் கால்பந்து, ரக்பி, பேஸ்பால் மற்றும் டைவிங் ஆகிய விளையாட்டுகளில் தீவிர ஆர்வம் செலுத்தினார். பள்ளிப் பருவத்தில் கூடைப்பந்து மீது தீராத வெறி அவருக்கு இருந்தது. அப்போது ஐந்தடி உயரம் மட்டுமே இருந்த டெர்ரி அசாத்தியப் பயிற்சி மூலமாக சிறப்பான வீரராக திகழ்ந்தார். டெர்ரியின் தந்தை ரோலி ஃபாக்ஸ் ஒருமுறை தன் மகனைப் பற்றி குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது. “டெர்ரியை விட சிறந்த வீரர்கள் பலர் இருந்திருக்கலாம். அவர்கள் டெர்ரியை விட சிறப்பாக அவனோடு விளையாடியிருக்கலாம். ஆனாலும் வெற்றிக்கனியை சுவைக்கும் வரை டெர்ரி சோர்வடையாமல் விளையாடிக் கொண்டேயிருப்பான். அவன் வெற்றியின் சிகரத்தைத் தொடும் வரை எதிராளியும் அவனோடு விளையாடித்தான் ஆகவேண்டும்”. டீனேஜ் வயதுகளில் டைவிங் விளையாட்டுகளில் டெர்ரி வெற்றி மீது வெற்றி கண்டார்.
நவம்பர் 12, 1976. எதிர்பாராத அந்த கார் விபத்து. அரை டன் எடையை ஏற்றிவைத்திருந்த டிரக் ஒன்றின் மீது அவர் பயணித்த கார் மோதியது. டிரைவர் எந்த சேதாரமுமின்றி வெளியே வர, டெர்ரிக்கு மட்டும் வலது முழங்காலில் நல்ல அடி. ஆயினும் விரைவில் குணம்பெற்று வழக்கமான விளையாட்டுகளை விளையாடி வந்தார். அடுத்த ஆண்டு மீண்டும் அடிப்பட்ட இடத்திலேயே வலி அதிகமாக, மருத்துவர்கள் பரிசோதித்து ‘கேன்சர்’ என்றார்கள். டெர்ரியின் லட்சியங்களில் இடி விழுந்தது. தொடையில் தொடங்கி, முழங்காலுக்கு கீழாக காலை முற்றிலுமாக வெட்டி எறிவதைத்தவிர வேறு வழியே இல்லை.
கேன்சருக்கு போதிய மருத்துவமில்லை என்பதை டெர்ரி அறிந்தார். கேன்சர் ஆராய்ச்சிக்கு ஏராளமான பணம் செலவிடப்பட வேண்டியதின் அவசியத்தை உணர்ந்தார். ஒவ்வொரு கனடியரிடமும் ஒரு டாலர் வசூலித்து, கேன்சர் ஆராய்ச்சிக்காக மிகப்பெரிய தொகையை திரட்ட முன்வந்தார். கனடா முழுவதும் தொடர்ச்சியான மாரத்தான் ஓட்டம் ஓடி பணத்தை திரட்ட முடிவெடுத்தார். இந்த ஓட்டத்துக்கு ‘நம்பிக்கை ஓட்டம்’ என்று பெயரும் வைத்தார். இந்த இடத்தில் இன்னொன்றையும் சொல்ல வேண்டியிருக்கிறது. டெர்ரிக்கு இதயப்பிரச்சினையும் இருந்து வந்தது. அவர் ஓட்டத்தை தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்பாக இதயநிபுணர் ஒருவர் டெர்ரியை சந்தித்து, “தயவுசெய்து இந்த விபரீதமுயற்சியை எடுக்க வேண்டாம். இவ்வளவு பெரிய ஓட்டத்தை ஓடுமளவுக்கு உங்கள் இதயம் இடம் கொடுக்காது” என்று வேண்டுகோள் விடுத்தார். டெர்ரி சம்மதிக்கவில்லை. தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தார்.
ஒட்டுமொத்தமாக எட்டாயிரம் கிலோ மீட்டர்கள் ஓட வேண்டியிருந்தது. மாரத்தான் மரபுப்படி ஒரு நாளைக்கு நாற்பத்தி ஐந்து கிலோ மீட்டர் தூரம் ஓடுவதின் அடிப்படையில் 185 நாட்களில் நாட்டையே ஓடிக்கடக்க திட்டமிட்டார் டெர்ரி. அதற்கு முன்பாக நியூயார்க் நகரில் நடந்த மாரத்தான் ஓட்டம் ஒன்றில் செயற்கைக்காலோடு ஒருவர் ஓடியதை அறிந்தபின்னரே, இந்த சிந்தனை டெர்ரிக்கு வந்திருந்தது.
1980, ஏப்ரல் 12ஆம் நாள் அட்லாண்டிக் கடற்கரை ஓரத்தில் தொடங்கிய அவரது ஓட்டத்தின் இலக்கு நாட்டின் மறுகரையில் இருந்த பசிபிக் கடற்கரை. செயற்கைக்காலோடு மிக நீண்ட, அதே நேரம் தொடர்ச்சியாக ஆறுமாதங்களுக்கு ஒருவர் தன்னலமின்றி, கேன்சர் ஆராய்ச்சிக்கு பணம் திரட்ட ஓடுகிறார் என்பதை கேள்விப்பட்ட கனடிய மக்கள் அவர் ஓடிய நகரங்களில் எல்லாம் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தார்கள். ஒவ்வொரு கனடியரும் தம் பங்காக ஒரு டாலரை கையளித்தார்கள்.
ஒட்டாவா, ஒண்டாரியோ நகரங்களை அவர் கடந்தபோது கிட்டத்தட்ட மூவாயிரம் கிலோ மீட்டரை கடந்திருந்தார். மக்களின் வரவேற்பு அவருக்கு மிகுந்த நம்பிக்கையை தந்திருந்தது. “நான் சாலையில் காணும் ஒவ்வொருவருமே எனக்கு நம்பிக்கை தருகிறார்கள். நல்லது நடக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்பாக இதுபோன்ற முயற்சியை யாராவது மேற்கொண்டிருந்தால் கேன்சர் நோயை குணப்படுத்தக்கூடிய மருத்துவமுறையை ஒருவேளை நாம் இப்போது கண்டறிந்திருக்கலாம்” என்று பேசினார்.
இதற்கிடையே கேன்சர் தன் வேலையை காட்ட ஆரம்பித்திருந்தது. ஃபாக்ஸின் நுரையீரலை தன் கோரப்பசிக்கு இரையாக்கிக் கொண்டது. அவரது இடது நுரையீரலில் எலுமிச்சைப்பழ அளவுக்கு கேன்சர் கட்டி உருவெடுத்திருந்தது. செப்டம்பர் 1, 1980ஆம் நாளன்று தனது தொடர்ச்சியான ஓட்டத்தை பாதியில் டெர்ரி பாக்ஸ் நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 143 நாட்களில் 5,373 கிலோ மீட்டர்களை அவர் கடந்திருந்தார். டெர்ரி பாக்ஸின் ஓட்டம் தடைப்பட்டதுமே நாடு முழுவதும் தன்னெழுச்சியாக மக்கள் மாரத்தான் போட்டிகள் ஆங்காங்கே நடத்தப்பட்டு பெரும் பணம் திரட்டப்பட்டது. டெர்ரி பாக்ஸ் தேசிய நாயகனாக போற்றப்பட்டார். ஒட்டுமொத்தமாக மக்களிடையே இரண்டரைக்கோடி டாலர்கள் திரட்டப்பட்டது. ஒரு கனடியரிடம் ஒரு டாலர் என்ற டெர்ரியின் கனவு நனவானது.
1981 ஜூன் 27ஆம் தேதி மருத்துவ சிகிச்சையில் இருந்த டெர்ரிக்கு நிமோனியா காய்ச்சல் தாக்கியது. அவர் கோமா நிலைக்கு சென்றார். மறுநாள், மிகச்சரியாக தனது 23வது பிறந்தநாளுக்கு ஒருமாதம் முன்பாக அவர் மரணமடைந்தார். நாட்டின் பிரதமரும், அவைகளும் அவருக்கு அஞ்சலி செலுத்தின. அவரது இறுதிமரண ஊர்வலம் நாடெங்கும் நேரலையாக ஒளிபரப்பானது. கோடிக்கணக்கான கனடியர்கள் கண்ணீர் சிந்தினர். அதே ஆண்டு டெர்ரி பெயரில் ஒரு அறக்கட்டளை ஒன்றினை உருவாக்கி வருடந்தோறும் ‘டெர்ரி பாக்ஸ் ஓட்டம்’ என்ற பெயரில் மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டங்களை நடத்தி, கேன்சர் ஆராய்ச்சிகளுக்கு நிதி பெற ஏற்பாடு செய்யப்பட்டது. முதன்முதலில் நடந்த கனடாவில் நடந்த ஓட்டத்தில் சுமார் மூன்று லட்சம் பேர் கலந்துகொண்டார்கள் என்று பதிவாகியிருக்கிறது.
கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் கழிந்த நிலையில், இன்று உலகம் முழுவதும் அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் ‘டெர்ரி ஃபாக்ஸ் ஓட்டம்’ நடைபெறுகிறது. இந்த ஓட்டம் நடைபெறும் நாடுகளில் எல்லாம் டெர்ரியின் தாய்நாடான கனடாவின் தூதரகங்களை இணைந்து இந்த நிகழ்ச்சிகளை நடத்துகிறது.
சமீபத்தில் முதன்முறையாக சென்னையில் டெர்ரி ஃபாக்ஸ் ஓட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் புகையிலைக்கு எதிரான வாசகங்களை கையில் ஏந்தி கலந்துகொண்டார்கள். இனி வருடாவருடம் சென்னையிலும் இந்த ஓட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. நிறைய தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும், கல்லூரி மாணவர்களும் தன்னார்வத்தோடு கலந்து கொண்டு ஓடினர்.
இந்த ஓட்டத்தினை சென்னையில் நடத்த ஐடியா கொடுத்தவர் பதினேழு வயது பள்ளி மாணவர் ஆகாஷ் துபே. கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஆகாஷ் சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார். “கேன்சர் சிகிச்சைக்காக எனக்கு ரத்தம் தேவைப்பட்ட போது, முகம் தெரியாத பலரும் தன்னார்வத்தோடு வந்து உதவினார்கள். சென்னையில் இப்படி ஒரு ஓட்டம் நடைபெறுவதே மக்களிடையே கேன்சர் குறித்த விழிப்புணர்வை பரவலாக்குவதற்காகதான்!”“ என்று சொன்னார் ஆகாஷ்.
கனட தூதரக அதிகாரி ஷான் வெட்டிக் கலந்துகொண்டு, இதுவரை டெர்ரி பாக்ஸ் ஓட்டங்கள் மூலமாக 300 மில்லியன் டாலர் அளவுக்கு கேன்சர் ஆராய்ச்சிக்கு நிதி திரட்டப்பட்டிருப்பதாக கூறினார். சென்னையில் திரட்டப்பட்ட நிதி டாடா மெமோரியல் சென்டரின் கேன்சர் ஆராய்ச்சிக்க்கு வழங்கப்படுகிறதாம்.
டெர்ரி பாக்ஸின் லட்சியம் வெறுமனே ஓடுவது மட்டுமல்ல. கேன்சரை உலகத்தை விட்டே ஓட்டுவது. அந்நிலை விரைவில் மருத்துவ ஆராய்ச்சிகள் மூலமாக மலரும் என நம்புவோம்.
(நன்றி : புதிய தலைமுறை)
3 அக்டோபர், 2009
மாங்குடி மாறிய கதை!
ஜோதிமணிக்கு வயது பத்தொன்பது. அரசுப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிக்கு சேர்ந்தார். விரும்பி சேர்ந்த வேலை இது. அவருக்கு ஒரு கனவு இருந்தது. அடிப்படையில் இருந்து எல்லாமே மாறவேண்டும். மாணவர்களின் தலையெழுத்து மாற்றி எழுதப்பட வேண்டும். ஆசிரியப் பணியில் மட்டுமே இது சாத்தியம்.
மாணவர்கள் சோர்வின்றி கல்வி கற்கவேண்டும். இதற்கு வாகான வகுப்பறைகள் வேண்டும். ஒவ்வொரு வகுப்பறையிலும் ஒரு தொலைக்காட்சி பெட்டி, சுவர்க் கடிகாரம், காலண்டர், குடிதண்ணீர் குழாய், முகம் பார்க்கும் கண்ணாடி, நகம் வெட்டும் நெயில் கட்டர், குப்பைக்கூடை, மாணவர்கள் தங்களுக்குள் கடிதப் பரிமாற்றம் செய்துகொள்ள அஞ்சல்பெட்டி, கம்ப்யூட்டர், சுகாதாரமான கழிப்பறை, விளையாட்டுப் பொருட்கள், பூங்கா... இப்படியெல்லாம் நீண்டுக்கொண்டே போனது ஜோதிமணியின் கனவு. மனது வைத்தால் இவை சாத்தியப்படக் கூடிய மிக எளிய விஷயங்களே என்று நம்பினார்.
கிட்ட்ததட்ட இருபது ஆண்டுகள் கழித்து கனவை நனவாக்க இவருக்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிடைக்கிறது. இப்போது மாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ஜோதிமணிதான் தலைமை ஆசிரியர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து, பேராவூரணி செல்லும் சாலையில், சரியாக ஏழாவது கிலோ மீட்டரில், மெயின்ரோட்டில் இருந்து இடதுபுறம் திரும்பி ஒன்றரை கிலோ மீட்டர் நடந்தால் மாங்குடி.
எல்லா அரசுப்பள்ளிகளையும் போன்றுதான் மாங்குடி பள்ளியும் அப்போது இருந்தது. மாணவர்கள் கூட்டமாக, கத்திக்கொண்டே, ஒழுங்கில்லாமல் பள்ளிக்கு ஏனோதானோவென்று வந்து சென்றார்கள். தலைவாருவதில்லை. அழுக்கான ஒழுங்கற்ற உடை. பள்ளிக்கு சுற்றுச்சுவர் கிடையாது. கழிப்பறை கிடையாது. சீமை ஓடு வேய்ந்த சிறிய கட்டடங்கள். மாணவர்கள் கிட்டத்தட்ட இங்கே அடைக்கப்பட்டிருந்தார்கள் என்று சொல்லுவதே பொருத்தம்.
மாற்ற வேண்டும். எல்லாவற்றையும் மாற்றவேண்டும். எங்கிருந்து தொடங்குவது? முதலில் எதை மாற்றுவது? எதை செய்யவேண்டும் என்ற தெளிவு எல்லாருக்குமே இருக்கிறது. ஆனால் எந்த புள்ளியிலிருந்து தொடங்குவது என்பதில்தான் எல்லோருக்குமே குழப்பம். அந்தப் புள்ளி சீக்கிரமே ஜோதிமணிக்கு பிடிபட்டு விட்டது.
தலைவாராமல் பள்ளிக்கு வரும் மாணவிகளை சரிசெய்வதில் ஆரம்பித்தார். மாணவிகளை குறை சொல்லி என்ன பிரயோசனம்? பெற்றோர் தினமும் தலைவாரி அனுப்பினால் ஒழுங்காக வரப்போகிறார்கள். பெற்றோர்களை அழைத்துப் பேசினார். “பாருங்க இனிமே திங்கள் ரெட்டைசடைன்னா, செவ்வாய் ஒத்தசடை, புதன் மறுபடியும் இரட்டைசடை. இப்படி மாத்தி மாத்தி தலை பின்னிதான் குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பணும்!” – இந்த ஐடியா நன்றாகவே ஒர்க் அவுட் ஆனது. மாறி, மாறி ஒற்றைசடை, இரட்டைசடை என்பதால் தினமும் தலைசீவியாக வேண்டிய கட்டாயம்.
அடுத்ததாக யூனிபார்ம். அரசு அளிப்பது வருடத்திற்கு ஒரே ஒரு செட். ஒருநாள் அணிந்து வந்ததை மறுநாள் அணியமுடியாது என்பதால், மாணவர்கள் இஷ்டத்துக்கும் கலர் உடை அணிந்து வந்தார்கள். சிலரது உடை கிழிந்திருக்கும். சிலரது உடை அழுக்காக இருக்கும். மாணவர்களுக்குள்ளே இதனால் ஒவ்வொருவரின் பொருளாதார அளவுகோல் என்னவென்பது தெளிவாய் தெரிந்தது. வசதிகுறைந்த மாணவர்கள் தாழ்வுமனப்பான்மையில் மனம் குன்றினர்.
அவ்வருட தீபாவளிக்கு முன்பாக ஒட்டுமொத்தமாக பெற்றோரை அழைத்து கூட்டம் போட்டார் ஜோதிமணி. “தீபாவளிக்கு எல்லோரும் பசங்களுக்கு எப்பாடு பட்டாவது துணி எடுத்துடுவீங்கன்னு தெரியும். ஆனா இந்தமுறை ஒரே ஒரு கண்டிஷன். எல்லாரும் யூனிபார்ம் தான் எடுக்கணும். ஏற்கனவே ஒரு செட் இருக்கு. இன்னொரு செட் வந்துடிச்சின்னா பசங்க எல்லா நாளும் யூனிஃபார்மிலே ஸ்கூலுக்கு வரலாமில்லே?”
பெற்றோர்கள் யோசித்தார்கள். இவர் வேறுமாதிரியான ஆசிரியர். நம் பிள்ளைகளுக்கு ஏதோ நல்லது செய்ய நினைக்கிறார். நாம் ஏன் குறுக்கே நிற்கவேண்டும்? ஜோதிமணி என்ன சொன்னாலும் தலையாட்டத் தயார் ஆனார்கள். குழந்தைகள் பழுக்கக் காய்ச்சிய இரும்புக்கம்பி மாதிரி. எப்படி வளைக்கிறோமோ அப்படி வளைகிறார்கள். ஜோதிமணி நல்லபடியாக வளைக்க ஆரம்பித்தார்.
இதெல்லாம் ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய பழைய கதை...
இன்று, மாநில தொடக்கக் கல்வித்துறை 2007-08ஆம் ஆண்டின் சிறந்த பள்ளியாக மாங்குடி பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டு விருது அளிக்கப்பட்டிருக்கிறது. பள்ளி சுகாதாரத்துக்கான யூனிசெஃப் அமைப்பின் பத்துநட்சத்திர விருதும் கூட. இன்னும் ஏராளமான அமைப்புகளின் விருதுகள் தலைமையாசிரியர் அறையை அலங்கரிக்கிறது. ‘கேம்பஸ்’ என்று சொல்லக்கூடிய ஒரு கல்லூரி வளாகத்துக்குள் இருக்கும் எல்லா வசதிகளுமே இந்த பள்ளிக்கு இப்போது உண்டு. முழுமையான சுற்றுச்சுவர், சுகாதாரமான கழிப்பிடம், இருச்சக்கர வாகனங்கள் நிறுத்த தனியாக பார்க்கிங், ஐந்தாம் வகுப்பிலிருந்து மாணவர்களுக்கு டெஸ்க், கம்ப்யூட்டர் லேப், நூலகம், அறிவியல் பரிசோதனைக் கூடம், ஒவ்வொரு வகுப்பறைக்கும் தனித்தனியாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்க்குழாய், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி... இன்னும் என்னவெல்லாமோ...
வெறும் ஐந்தே ஆண்டுகளில் இதெல்லாம் எப்படி சாத்தியம்?
“இதெல்லாமே அரசு கொடுக்குறதை வெச்சிதாங்க பண்ணுறோம். எல்லா பள்ளிகளுக்கும் இதே வசதிகளை அரசு கொடுக்குது. அதை ஆசிரியர்கள் நாம எப்படி எடுத்து பயன்படுத்தறோம்கிறது முக்கியம்!” என்கிறார் ஜோதிமணி. நாற்பத்தின் மூன்று வயதான ஜோதிமணியின் பெயர் இவ்வருட நல்லாசிரியர் விருதுக்காக பரிந்துரைக்கப் பட்டிருப்பதாக சொல்கிறார்கள். முன்கூட்டிய வாழ்த்துகள் ஜோதிமணி சார்! (இது கட்டுரை எழுதும்போது இருந்த நிலை. கடந்த ஆசிரியர் தினத்தன்று ஜோதிமணிக்கு நல்லாசிரியர் விருது கிடைத்திருக்கிறது)
இவர் சொல்லுவதைப் போல இந்த மாற்றங்கள் எல்லோராலேயுமே சாத்தியப்படுத்தக் கூடியதுதான். என்ன.. ஜோதிமணிக்கு இருந்தது போல கொஞ்சம் கனவும், நிறைய மனசும் முதலீடாக தேவைப்படும்!
லைவ் ஃப்ரம் மாங்குடி!
எட்டாம் வகுப்பு படிக்கும் பதிமூன்று வயது விஜயகாந்துக்கு தனியாக ஈமெயில் ஐடி இருக்கிறது. “விஜய்97@ரீடிஃப்மெயில்.காம். நோட் பண்ணிக்குங்க சார்” என்கிறான். இவனுக்கு மட்டுமல்ல இங்கிருக்கும் எல்லா மாணவர்களுக்குமே ஈமெயில் ஐடி இருக்கிறது. கம்ப்யூட்டர் தண்ணி பட்ட பாடு. தலைமையாசிரியர் ஜோதிமணியிடம் இணைய இணைப்புக்கான டேட்டாகார்ட் இருக்கிறது. குறிப்பாக மாணவர்கள் இங்கே இணையத்தில் பார்ப்பது தமிழ் விக்கிபீடியா.
“தமிழ் விக்கிபீடியா ஸ்டூடண்ஸுக்கு ரொம்ப உபயோகமா இருக்குங்க. பாடப்புத்தகத்துலே நாங்க பாடம் நடத்தி முடிச்சதும் அந்தப் பாடம் சம்பந்தமா விக்கிபீடியாவில் அவங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா பார்த்து தெரிஞ்சுக்குறாங்க. ஆசிரியர்களோட வேலைப்பளு இதனால குறையுது”
எல்லா மாணவர்களுக்கும் ஈ-கலப்பை மென்பொருள் பயன்படுத்தி தமிழில் டைப் அடிக்கத் தெரிகிறது. பவர்பாயிண்டில் வேகமாக இயங்குகிறார்கள். பேஜ்மேக்கரில் டிசைன் செய்கிறார்கள். பாடம் முடிந்ததும் பவர் பாயிண்டில் குழுவாக அசைன்மெண்ட் செய்யவேண்டும். ஒவ்வொரு குழுவிலும் மூன்று அல்லது நான்கு மாணவர்கள் இருக்கிறார்கள். வகுப்பு ஒன்றுக்கு ஆறு, ஏழு குழுக்கள் இருக்கின்றன. வாரத்துக்கு ஒருமுறை தாங்கள் செய்த அசைண்மெண்ட்களை மற்ற குழுவினர் மத்தியில் ப்ரசண்டேஷன் செய்யவேண்டும். இதற்காக எல்.சி.டி. புரொஜெக்டர் ஒன்றும், பெரிய திரை ஒன்றும் வாங்கி வைத்திருக்கிறார்கள். இதெல்லாம் பொதுவாக கல்லூரிகளில் இருக்கும் நடைமுறை.
குழு அசைண்மெண்ட் மட்டுமல்லாது ஒவ்வொரு மாணவனுக்கும் தனி அசைண்மெண்ட் உண்டு. முழுநீள வெள்ளைத்தாளில் ஆசிரியர் மூலமாக தான் கற்ற பாடத்தை எவ்வாறு உள்வாங்கிக் கொண்டோம் என்பதை எழுதியாக வேண்டும். ஒவ்வொரு அசைண்மெண்டும் தனித்தனி ஃபைல்களில் ஆவணப்படுத்தப் படுகிறது. தேர்வு நெருங்கும் நேரத்தில் இந்த ஃபைலை மாணவன் எடுத்துப் பார்த்து தன்னுடைய முன்னேற்றத்தை சுயமதிப்பீடு செய்துக் கொள்கிறான்.
நூலகம் இங்கே சிறப்பாக இயங்குகிறது. பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் போன்ற விலையுயர்ந்த நூல்களும் உண்டு. மாணவர்கள் ஓய்வுநேரத்தில் தங்களுக்கு வேண்டிய நூல்களை எடுத்துப் படித்துக் கொள்ளலாம். ஒவ்வொரு வகுப்பறையிலும் சிறியளவிலான நூலகம் தனியாக அமைந்திருக்கிறது.
இவற்றையெல்லாம் கையாள நிறைய பேர் தேவைப்படுகிறார்கள். ஆனால் பள்ளியில் இருக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை எட்டு மட்டுமே? எப்படி சமாளிக்கிறார்கள்?
“எல்லாத்தையும் பசங்களே பண்ணிடுறானுங்க சார். பள்ளியிலிருந்து எழுதப்படும் கடிதங்களில் ஆரம்பிச்சு, பள்ளியோட மாணவர்கள் வருகைப் பதிவேடுன்னு எல்லாத்தையும் மாணவர்களே கையாளுறாங்க. இங்கே படிக்கிற 241 மாணவர்களில் 200 பேர் ஏதோ ஒரு குழுவில் கட்டாயம் இருப்பாங்க. ஒவ்வொரு வேலைக்கும் ஒரு குழு.
உதாரணத்துக்கு குடிநீர் கண்காணிப்புக் குழு, சுகாதார கண்காணிப்புக் குழு, நூலகக் கண்காணிப்புக் குழுன்னு ஏராளமான குழுக்களா வேலைகளை பிரிச்சிக் கொடுத்திருக்கோம். ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்குறதாலே, அந்தப் பொறுப்புக்கான கடமைகளை, நாங்க சொல்லாம அவங்களே எடுத்துப் பண்ணிடுறாங்க. ஒண்ணு, ரெண்டு முறை தவறு வரும். சின்னக் குழந்தைகள்தானே? ஆனா அதை நாங்க பெரிசுப் படுத்திக்குறது இல்லை. ஆனா இதனால ஒவ்வொரு மாணவனுக்கும் தலைமைப் பண்பு இயல்பாகவே வந்துடுது” என்கிறார் தலைமை ஆசிரியர் ஜோதிமணி.
தொண்ணூற்றி ஐந்தாம் ஆண்டு இங்கிருந்து போன முன்னாள் மாணவி ஒருவர் டி.சி. கேட்டு வருகிறார். ஒரு விண்ணப்பம் எழுதித்தரச் சொல்லி தலைமையாசிரியர் கேட்க, அவர் முழிக்கிறார். உடனே ஒரு மாணவனை அழைத்து, “தம்பி. இவங்களுக்கு ஒரு விண்ணப்பம் எழுதிக்கொடு” என்கிறார். வேறு எந்தக் கேள்வியும் கேட்காமல் ஒரு வெள்ளைத்தாளில் அழகாக விண்ணப்பம் எழுதிக் கொடுக்கிறான் மாணவன்.
“வெள்ளைத்தாளை கையாளத் தெரிஞ்சுடிச்சின்னா போதும். ஒருத்தன் எதை வேணும்னாலும் சாதிக்கலாம். இங்கே இதைத்தான் நாங்க கற்றுத் தருகிறோம். நாளைக்கு இவங்க வளர்ந்து, அலுவலகங்களில் வேலை பார்க்கும்போது எந்த்த் தயக்கமும் இல்லாம வேலை பார்ப்பாங்க. ஏன்னா எங்க அலுவலக வேலைகளையும் அவர்களே பகிர்ந்துக்கிட்டு அனுபவப் பட்டுடுறாங்க! விண்ணப்பங்களை பூர்த்தி செய்யுறது, தேர்வு மதிப்பெண் அட்டைகளை தயார் செய்யுறதுன்னு கம்ப்யூட்டர்லேயே பசங்க எல்லா வேலையையும் முடிச்சிட்டு அழகா பிரிண்ட் எடுத்துக் கொடுத்துடுவாங்க”
பள்ளிக்குள்ளேயே ஒரு போஸ்ட் ஆபிஸ் நடைபெறுவது சுவாரஸ்யமானது. ஒரு போஸ்ட் மாஸ்டர், இரண்டு போஸ்ட் மேன்கள் உண்டு. இவர்களும் மாணவர்கள்தான். இவர்கள் அஞ்சல்குழுவில் உறுப்பினர்களாக இருப்பவர்கள். நாலாம் வகுப்பு படிக்கும் மாணவன், எட்டாம் வகுப்பு படிக்கும் தன் அண்ணனுக்கு கடிதம் எழுதி, தன் வகுப்பில் இருக்கும் போஸ்ட் பாக்ஸில் போட்டுவிடலாம். அது போஸ்ட் மேன் மூலமாக சேகரிக்கப்பட்டு, போஸ்ட் மாஸ்டரால் ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை இடப்பட்டு சம்பந்தப்பட்ட மாணவனுக்கு போய்ச்சேர்ந்து விடுகிறது. ஆசிரியர்களையும் மாணவர்கள் தபால் மூலமாகவே தொடர்பு கொள்கிறார்கள். சாக்பீஸ் தீர்ந்துவிட்டது, வாங்கவேண்டுமென்றால் கரும்பலகைகள் கண்காணிப்புக் குழு, தலைமையாசிரியருக்கு ஒரு கடிதம் மூலமாக தன் தேவையை அனுப்பி வைக்கிறது. இந்த உள்பரிமாற்ற விஷயங்கள்’கடிதம் எழுதுவது’ குறித்த அச்சம் ஏதுமின்றி மாணவர்களை வளர்த்தெடுக்கும் என்கிறார்கள்.
சிறுசேமிப்புத் திட்டமும் உண்டு. மாணவர்கள் சேமித்துத் தரும் பணத்தை ‘ரிகரிங் டெபாசிட்’ ஆக முதலீடு செய்து, அவர்கள் பள்ளியை முடித்துச் செல்லும்போது மொத்தமாக தருகிறார்கள். இது அவர்களது மேல்கல்வித் தேவைகளுக்கு உதவுகிறது.
இந்தப் பள்ளிக்கென்றே தனிச்சின்னம் (Emblem) உருவாக்கியிருக்கிறார்கள். தினசரி காலை தேசியக்கொடியேற்றம் மற்றும் இறைவணக்கக் கூட்டம் நடக்கிறது. மாணவர்கள் சாப்பிடச் சென்றாலும் சரி, இடைவேளையில் கழிப்பறைக்குச் சென்றாலும் சரி. வரிசையாகவே செல்கிறார்கள். வரிசையாகவே வருகிறார்கள். தமிழ், ஆங்கிலம் இரண்டிலுமே இவர்களது கையெழுத்து மெச்சப்படக் கூடியதாக இருக்கிறது. இதற்குப் பின்னாலும் தலைமையாசிரியர் இருக்கிறார். பெங்களூரில் உள்ள மண்டல ஆங்கிலப் பயிற்சி நிறுவனத்தில் அவர் எடுத்துக் கொண்ட பயிற்சியின் விளைவாகவே, மாணவர்களுக்கு சிறந்த கையெழுத்துத் திறனை அளிக்க முடிகிறது. எல்லா மாணவர்களின் கையெழுத்தும் கிட்டத்தட்ட ஒன்றுபோலவே இருக்கிறது. ஒரே மாதிரியான மார்ஜின் விட்டு எழுதுகிறார்கள்.
ஓர் ஆண்டுக்கு மொத்தமாகவே மூன்று மூன்று நோட்டுப் புத்தகங்கள் மட்டுமே மாணவர்கள் வாங்க வேண்டியிருக்கிறது. இதற்கு மேல் நோட்டுப் புத்தகங்களில் எழுதியாகவேண்டிய அவசியம் இல்லவேயில்லை என்கிறார்கள் ஆசிரியர்கள். அசைன்மெண்டை வெள்ளை பாண்ட் பேப்பரில் எழுதுகிறார்கள். நோட்டுப் புத்தகங்கள் மற்றும் வெள்ளைத்தாள் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு பேப்பர் லிட் (TNPL) நிறுவனத்தில் வாங்குகிறார்கள்.
மதிய உணவு சாப்பிட வசதியாக கடப்பா கற்களால் அமைக்கப்பட்ட மேடைகள் உண்டு. ஒரே நேரத்தில் நூறு குழந்தைகள் இங்கு வரிசையாக அமர்ந்து சாப்பிடலாம். திறந்தவெளி கலையரங்கம் உண்டு. மூலிகைச்செடிகள் வளர்க்கப்பட்ட பூங்காவில் சறுக்குமரம், ஊஞ்சல் என்று குழந்தைகள் விளையாட இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அறிவியல் கூடம், தொழிற்கூடம் எல்லாம் கூட உண்டு. சென்னையில் இயங்கும் தமிழ்நாடு அறக்கட்டளை போன்ற அமைப்புகளின் பங்கு இப்பள்ளியின் அடிப்படைக் கட்டுமானத்தில் உண்டு என்கிறார்கள்.
ஒவ்வொரு வகுப்பறையிலும் டிவி இருக்கிறது. நூலக அறையில் சிடிக்களில் ஒளிபரப்பப்படும் படங்கள் எல்லா வகுப்பறைகளிலும் மாணவர்கள் பார்க்க இயலுகிறது. பாடம் முடிந்துவிட்டால் மாணவர்கள் டிவி பார்க்கலாம். சினிமாப் படங்களும் உண்டு. வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதி, காமராஜர் என்று தலைவர்களின் வரலாற்றுப் பட சிடிகளை நிறைய சேமித்து வைத்திருக்கிறார்கள். மதிய வேளையின் போது மாணவர்கள் சத்தம் போடுவதை நிறுத்த ஒலிபெருக்கியில் தேசபக்திப் பாடல்களை ஒலிபரப்புகிறார்கள்.
ஒரு வகுப்பில் கூட ‘பிரம்பு’ என்ற வஸ்துவையே பார்க்கமுடியவில்லை என்பது மற்றொரு ஆச்சரியம். ஆசிரியர்கள் முகத்தில் எப்போதும் கனிவு. “நாங்க சத்தம் போடுற மாதிரி மாணவர்கள் நடந்துக்கறதே இல்லை. எல்லாமே ஒரே ஒழுங்கில் செயல்படுறாங்க. இங்கே லாஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண்ட், ஆவரேஸ் ஸ்டூடண்ட்ஸெல்லாம் இல்லவேயில்லை. ஒவ்வொரு மாசமும் அவங்க அவங்க இடத்தை மாத்துவோம். எல்லோரும் ஒரே மாதிரி நல்லாவே படிக்குறாங்க. இங்க இருந்து போன பசங்க எஸ்.எஸ்.எல்.சியில் நானூறுக்கு மேல மார்க் வாங்குறாங்கன்னு கேள்விப்படுறப்போ மகிழ்ச்சியா இருக்கு” என்கிறார்கள் ஆசிரியர்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் செயல்வழி கற்றல் முறை மற்றும் படைப்பாற்றல் கல்விமுறை மவுனமான கல்விப்புரட்சியை தமிழகத்தில் ஏற்படுத்தி வருகிறது என்கிறார் தலைமையாசிரியர். இதன் பலன்கள் இன்னும் சில வருடங்களில் தெரியும். இப்போதே நம் கல்விமுறையை பார்த்து, இதே முறையை பஞ்சாப், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்கள் அமல்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மாங்குடிப் பள்ளி இந்தியாவுக்கே ஒரு மாதிரி பள்ளி. தமிழகத்தின் அனைத்து அரசுப் பள்ளிகளும் மாங்குடிப் பள்ளியாய் மாறிவிட்டால் கல்வி வளர்ச்சியில் உலகிலேயே முதல்மாநிலமாக தமிழகம் திகழும் என்பது உறுதி.
(நன்றி : புதிய தலைமுறை)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)