1989ஆம் ஆண்டில் ஒருநாள்.
“உன் பெயர் என்ன?” டாக்டர் எம்.எஸ்.சாமிநாதன் அந்த இளைஞரிடம் கேட்கிறார்.
“பரசுராமன்”
“நல்ல பெயர்”
இப்படி சாதாரணமாகதான் சாமிநாதனிடம் அறிமுகமானார் பரசுராமன். இந்த சந்திப்பு அவரது வாழ்க்கையையே மாற்றி வரையப்போகிறது என்பது அப்போது அவருக்கு தெரியாது. சென்னை ஐஐடி கெமிக்கல் லேப் ஒன்றில் அசிஸ்டண்டாக பணியாற்றிக் கொண்டிருந்தார் பரசுராமன். ஐஐடிக்கு விசிட்டிங் புரொபஸராக வந்து சென்று கொண்டிருந்தார் சாமிநாதன்.
இன்று உலகமெங்கும் அறிவியலாளர்களால் கொண்டாடப்படும் எம்.எஸ்.சாமிநாதன் பவுண்டேஷன் தொடங்கப்பட்டபோது அதில் மூன்றே மூன்று பேர் மட்டுமே இருந்தார்கள். ஒருவர் நிறுவனர். நிறுவனருக்கு உதவியாக ஒரு அறிவியல் பேராசிரியர். இன்னொருவர் பரசுராமன்.
“டாக்டர் அழைத்ததுமே ஐ.ஐ.டி. வேலையை உதறிவிட்டு அவரிடம் உதவியாளராக வந்து சேர்ந்துவிட்டேன். சின்ன ஒரு அறைதான் அலுவலகம். முதல் ஐந்து மாதங்களுக்கு சம்பளமே கிடையாது. ஆறாவது மாதம் நான் பெற்ற முதல் சம்பளம் 850 ரூபாய். அதன்பிறகு சிறியதாக ஒரு அலுவலகம். வேலை நேரத்தில் ஊன், உறக்கம் எதுவுமே கிடையாது.
அந்த சம்பவம் நன்றாக நினைவிருக்கிறது. ஒரு நாள் டாக்டர் அழைத்தார். ‘எனக்கு ஏதாவது சாப்பிட வாங்கிட்டு வாப்பா’ என்றார். தோசை வாங்கிவரும்போது அலுவலகத்தில் அனைவருமே கிளம்பி விட்டிருந்தார்கள். டாக்டர் மட்டும் தனியாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ‘சாப்பிடு. உனக்காகதான் வாங்கிட்டு வரச்சொன்னேன். இளைஞனா இருக்கே. மூணு வேளை ஒழுங்கா சாப்பிட வேணாமா? இனிமேல் நீ ஒழுங்கா சாப்பிடறியான்னு நான் கண்காணிப்பேன்’ என்றார்.
என் கண்கள் கலங்கிவிட்டது. என் பெற்றோரைத் தவிர்த்து என் மீது இவ்வளவு அக்கறை காட்டிய ஒருவரை அதுவரை நான் சந்தித்ததில்லை. என்னைப் பொறுத்தவரை அவர் கடவுளுக்கு நிகரானவர்!”
சாமிநாதனை சந்திக்கும்போது பரசுராமன் பத்தாம் வகுப்பினை கூட முடிக்காதவராக இருந்தார். இன்று சமூகவியலில் முதுகலைப்பட்டம் முடித்திருக்கிறார். சமூகவியலில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார். எம்.எஸ்.சாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் இளைஞர் மற்றும் மனிதவள மேம்பாடு ஒருங்கிணைப்பாளராக பணிபுரிகிறார். ஐ.நா.வின் உலக இளைஞர்வள வங்கியின் இந்தியாவுக்கான தூதர் இவர். டாக்டர் சாமிநாதனுக்கு தனிச்செயலரும் இவரே.
குன்றத்தூருக்கு அருகில் இருக்கும் தண்டலம் கிராமத்தில் பள்ளிப்படிப்பை படித்தார். அப்போதெல்லாம் டியூஷன் பீஸ் ஒரு பாடத்துக்கு ஒரு ரூபாய் என்று ஆறு ரூபாய் மாதத்துக்கு கட்டவேண்டும். அதை கட்டக்கூடிய நிலை கூட இல்லாத வறுமைச்சூழல். பத்தாம் வகுப்பு தவறிய பிறகு ஐ.ஐ.டி.யில் பணிபுரிய வந்துவிட்டார். தனது சம்பளத்தில் ஒரு பகுதியை கல்விச்சேவைக்கு பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு படிக்கும் காலத்திலேயே இருந்தது.
சிறுவயதில் தனக்கு கிடைக்காத டியூஷன் மற்ற ஏழை மாணவர்களுக்கு இலவசமாகவே கிடைக்க வேண்டும் என்று நினைத்தார். 87ஆம் ஆண்டு தான் வசித்த வேளச்சேரி பாரதியார் தெரு பகுதியில் அம்பேத்கர் பெயரில் ஒரு இரவு பாடசாலை அமைத்தார். இவரைப்போலவே ஆக்கப்பூர்வமாக சிந்தித்த அந்தோணி, மதிவாணன், ஜகதீசன், மைக்கேல், ரவி, ஞானப்பிரகாசன், எஸ்ரா என்று இளைஞர்கள் தோள் கொடுத்தார்கள். மாநகராட்சி இடமும் ஒதுக்கித் தந்தது. “இதெல்லாம் தேவையில்லாத வேலை. அந்த இடத்தை எனக்கு என் பெயருக்கு எழுதித் தந்துடு. காசு கொடுத்துடறேன்” என்று அப்பகுதியில் இருந்த பெரிய மனிதர் ஒருவர் முண்டாசு தட்டிக் கொண்டு வந்தார். அம்பேத்கர் பாடசாலையை காக்க இவர்கள் பெரிய போராட்டமே நடத்த வேண்டியிருந்தது.
பரசுராமனுக்கு இருந்த தன்னம்பிக்கையால் இரவு பாடசாலை வளர்ந்தது. ஆரம்பத்தில் இருபத்தைந்து குழந்தைகள் மட்டுமே கற்ற அந்தப் பாடசாலையில் இன்று நூற்றி இருபத்தைந்து பேர் பயில்கிறார்கள். இங்கு பயிலும் மாணவர்களும் பரசுராமனையும், அவரது நண்பர்களையும் போலவே சமூகச்சேவைகளுக்கு தங்களை அர்ப்பணித்துக் கொள்கிறார்கள். சமூக மாற்றத்துக்கான சிறுபொறியை வேளச்சேரி பாரதியார் தெருவில் நாம் கண்ணெதிரே காணமுடிகிறது.
அப்பகுதியில் சாலை சரியில்லை என்று இளைஞர்களை கூட்டி மாநகராட்சி அலுவலகம் முன்பாக ஒருமுறை மறியல் நடத்தினார் பரசுராமன். அப்போதிருந்த எக்ஸ்கியூடிவ் இன்ஜினியர் உடனடியாக ஒரு லாரியை அனுப்பி, சாலை அமைத்துக் கொடுத்ததோடு இல்லாமல், அவரது சொந்தச் செலவிலேயே அச்சாலைக்கு தெருவிளக்குகளும் அமைத்துக் கொடுத்தாராம். இளைஞர்களை பயன்படுத்த வேண்டிய முறையில் பயன்படுத்தி சமூகத்துக்கு அவசியமானவற்றை பெற்றுக் கொள்ளமுடியும் என்பது இவரின் அசைக்க முடியாத நம்பிக்கை. அப்பகுதி ரோட்டரி அமைப்புகளும் இவர்களது நோக்கங்களை புரிந்துகொண்டு, தேவையான விஷயங்களுக்கு நிதியுதவியும் செய்கிறார்கள்.
‘ஒரு பள்ளி திறக்கப்படும்போது, ஆயிரம் சிறைக்கதவுகள் மூடப்படுகிறது’ என்றார் அண்ணல் அம்பேத்கர். கல்விச்சாலைக்கு அவரது பெயரைவிட பொருத்தமான பெயர் வேறு என்ன கிடைத்துவிடும்? ‘கடவுளுக்கு செலுத்தும் காணிக்கையை ஒரு குழந்தையின் கல்விக்கு செலுத்து!’ என்றும் சமூகத்துக்கு அறிவுரை சொல்லியிருக்கிறார் அம்பேத்கர். அம்பேத்கரை முழுமையாக உள்வாங்கிக் கொண்ட பரசுராமன் கல்வி மீது ஆர்வத்தை செலுத்தியது அதிசயம் ஒன்றுமில்லை.
“பத்தாவது வகுப்பில் தோல்வியடைந்த நான் இன்று முனைவர் பட்டம் பெற்றிருக்கிறேன் என்றால் நிறைய பேர் நம்ப மறுக்கிறார்கள். சிறுவயதில் பி.எச்.டி. என்றால் என்னவென்று தெரியுமே தவிர, நான் அதை முடிப்பேன் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை. என்னுடைய தன்னம்பிக்கையும், பெற்றோர் ஆதரவும், டாக்டர் சாமிநாதன் அவர்களின் ஊக்கமும் என்னை மேன்மையான நிலைக்கு உயர்த்தியிருக்கிறது.
தயவுசெய்து நம்புங்கள். முடியாதது என்று உலகில் எதுவுமேயில்லை. ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் என்னால் ஓரிரு வார்த்தைகள் கூட பேசமுடியாது. இன்று பதினோரு நாடுகளுக்கு போய்வந்திருக்கிறேன். பல சர்வதேச மாநாடுகளில் கலந்துகொண்டு உரையாற்றியிருக்கிறேன். என்னால் முடிவது உங்களாலும் முடியுமில்லையா?
என் வாழ்க்கை அனைவருக்கும் கற்றுத்தரும் முக்கியமான பாடம் ஒன்று உண்டு. பள்ளிக் கல்வி தடைபட்டால் வாழ்க்கை முடிந்துப் போய்விடுவதில்லை. கல்விகற்க திறந்தவெளி பல்கலைக்கழகம் மாதிரியான மாற்றுத் தளங்கள் நமக்கு ஏராளமாக இருக்கிறது.
ஒவ்வொருவரும் கல்விக்காக தனி நேரம் ஒதுக்கி கற்கவேண்டும். மாணவர்கள் என்றில்லை. எல்லோருமே தினமும் எதையாவது கற்றே ஆகவேண்டும் என்று இலக்கு வைத்து செயல்பட வேண்டும்.
நம் கல்விமுறையிலும் சில மாற்றங்கள் செய்யப்படுவது முக்கியம். இன்று இந்தியாவின் மக்கள் தொகையில் ஐம்பத்தி நான்கு சதவிகிதம் பேர் இளைஞர்கள். பள்ளியில் படிக்கும்போதே தொழிற்கல்வியும், வேளாண்மையும் தனிப்பாடமாக இருந்திருக்கும் பட்சத்தில் உலகமே கண்டிராத தொழிற்புரட்சியையும், வேளாண்புரட்சியையும் நாம் சாதித்திருக்க இயலும்.
இன்று சம்பாதிக்கும் இயந்திரங்களை உருவாக்கும் எண்ணம் பெற்றோரிடையே இருக்கிறது. அப்படியில்லாமல் சாதனையாளர்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட வேண்டும். அரசாங்கமும் ஒரு ஆண்டுக்கு இத்தனை லட்சம் பேர் என்று இலக்கு வைத்து விஞ்ஞானிகளை உருவாக்க வேண்டும்.
நாம் வசிப்பது அறிவுநூற்றாண்டில். நம்முடைய நோக்கம் அறிவியலாளர்களை உருவாக்குவதாக இல்லாவிடில், உலக ஓட்டத்தில் நாம் பின் தங்கிவிடுவோம். ‘முடியும்’ என்ற நம்பிக்கை மட்டுமே நமக்குத் தேவை. மீண்டும் சொல்கிறேன். என்னால் முடிந்தது. உங்களாலும் நிச்சயம் முடியுமில்லையா?” என்கிறார் பரசுராமன்.
வெற்றி பெறுவதற்கான சூழல் எல்லோருக்கும் இயல்பிலேயே வாய்த்துவிடுவதில்லை. பரசுராமனைப் போல வலிய அச்சூழலை ஏற்படுத்திக் கொள்வதே, இலக்கினை உருவாக்கிக் கொள்வதே வெற்றிக்கான எளிய சூத்திரம்.
(நன்றி : புதிய தலைமுறை)