
சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி சக்கைப்போடு போட்ட மூன்றெழுத்து படம் அது. இயக்குனருக்கு அது முதல் படமல்ல என்றாலும், வாழ்க்கை கொடுத்த படம். தயாரித்தவரும் ஒரு பிரபல/பிரம்மாண்ட இயக்குனர். மதுரை மண் சார்ந்த படங்கள் தொடர்ச்சியாக வெளிவர அச்சாரம் போட்ட படமாகவும் அதைச் சொல்லலாம்.
ஆர்ப்பாட்டமின்றி வெளிவந்து அள்ள அள்ளப் பணத்தை கொட்டிய படம். பாடல்களும் சூப்பர்ஹிட். அறிமுக இசையமைப்பாளர் அடுத்தடுத்து தனிப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி காணாமல் போனார். படத்தின் கதை சூப்பர் என்பது ஏற்கனவே தெரிந்தது என்றாலும், பின்னணிக்கதை அதைவிட சூப்பர் என்று ஒரு உதவி இயக்குனரான நண்பரின் மூலம் தெரியவந்தது.
வடநாட்டுப் பெயர் கொண்டவர் அந்த தயாரிப்பாளர். கொசுவர்த்தி பெயர் கொண்ட படநிறுவனம் அவருடையது. மகனுக்காக ஒரு படம் எடுத்து கையை சுட்டுக் கொண்டார். அடுத்ததாக ஒரு படத்தை தன் நிறுவனத்தை வைத்தே தயாரித்தால், அப்பாவே மகனுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கிறார் என்ற அவப்பெயர் வந்துவிடுமே என்று ஒரு பினாமி தயாரிப்பாளரை செட் செய்தார்.
ஒரு இயக்குனரை கூப்பிட்டு கதை கேட்டார். இளமை நாயகன் என்பதால், இளமைவாசனையும், மண்மணமும், க்ரீஸ் அழுக்கும் கொண்ட ஒரு அட்டகாசமான கதை இயக்குனரால் முன்மொழியப்பட்டது. இயக்குனர் நேரில் சந்தித்த ஒரு கேரக்டரின் கதை அது. ”ஆரம்பத்துலேயே என் பையன் அழுக்கா நடிச்சா சரிப்படாது. சப்ஜெக்ட் வேற ஆர்ட்ஃபிலிம் ரேஞ்சுக்கு இருக்குது. நல்ல சிட்டி/லவ் சப்ஜெக்டா ரெடி பண்ணுங்க!” என்று தயாரிப்பாளர் சொன்னதுமே, இயக்குனர் தற்காலிகமாக அக்காவியத்தை கைவிட்டார். இருப்பினும் பின்னர் அதே கதையை வேறு நடிகரை வைத்து எடுக்க தயாராக இருப்பதாகவும் தயாரிப்பாளர் உறுதிகூறி சமாதானப்படுத்தி இருக்கிறார்.
இந்த டிஸ்கஷன்கள் ஓடிக்கொண்டிருந்தபோது, முதல் பாராவில் இடம்பெற்ற இயக்குனரும் அந்த டீமில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இளமை நாயகனை வைத்து தித்திக்க தித்திக்க ஒரு படம் தயாரானது. ஓவர் செண்டிமெண்ட் உடம்புக்கு ஆகாது என்பதுபோல அந்தப்படமும் பப்படம் ஆகியது என்பது இங்கே தேவையில்லாத கதை. படம் போண்டியாகிவிட்டதால் இந்த இயக்குனருக்கு அடுத்தடுத்து டிமாண்ட் இல்லாமல் போய்விட்டது. எனவே காவியக்கதை அப்போதைக்கு அவரது மனதுக்குள் பாலூற்றி அடக்கம் செய்யப்பட்டு விட்டது.
இதற்கிடையே முதல் படத்தை படுதோல்வி படமாக எடுத்துவிட்டிருந்த முதல் பாரா இயக்குனர் அடுத்த வாய்ப்புக்காக வெறித்தனமாக அலைந்துகொண்டிருந்தார். மெகா ஸ்டாரை வைத்து முதல்படத்தை சூப்பர்ஹிட்டாக்கி, யாரும் எதிர்பாராவண்ணம் அடுத்தப் படத்தில் அமுல் பேபி நாயகனை ஆக்ஷன் ஹீரோவாக்கியிருந்த இயக்குனர் ஒருவர் படம் தயாரிக்கும் எண்ணத்தில் இருந்தார். இந்த இயக்குனர் நம் முதல் பாரா இயக்குனருக்கு வாய்ப்பளிக்கவும் தயாராக இருந்தார். காரணம் முதல் பாரா சொல்லியிருந்த காவியக்கதை. கொசுவர்த்தி தயாரிப்பாளரிடம் தித்தித்த இயக்குனர் சொன்ன அதே கதை. இடையில் என்ன ஆனதோ தெரியவில்லை. இயக்குனர் வேறு இயக்குனருக்கு வாய்ப்பளித்துவிட்டார்.
இந்த நேரத்தில் தான் பிரம்மாண்ட இயக்குனரும் படத்தயாரிப்பில் குதித்தார். முதல் பாரா அவரிடமும் இதே காவியக்கதையை சொல்ல புராஜக்ட்டுக்கு இக்னீஷியன் கொடுத்து ஸ்டார்ட் ஆனது. படமும் வெளிவந்து சக்கைப்போடு போட்டது எல்லோருக்கும் தெரிந்த கதை. இப்படத்தை ப்ரிவ்யூவின் போது பார்த்து கொசுவர்த்தி தயாரிப்பாளர் கடுமையான அதிர்ச்சியடைந்தாராம். விஷயம் பெரிதுபடுத்தப்படாமல் போவதற்கு உப்புமா இயக்குனருக்கு பெரியளவில் ஏதோ செட்டில்மெண்ட் ஆகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
* - * - * - * - * - * - * - * - *
இது இன்னொரு மசாலாக் கதை.
இந்த இயக்குனர் எடுத்த முதல் படம் வெளியானதே திருட்டு வீடியோ கேசட்டாகதான். அடுத்த வாய்ப்புக்கு அலைந்த நேரத்தில் விபத்து ஏற்பட்டு இயக்குனரின் எதிர்காலமே கேள்விக்குறியானது. எப்படியோ தட்டுத் தடுமாறி முன்னுக்கு வந்த அவர், இன்று தென்னிந்தியாவின் குறிப்பிடத்தக்க எண்டெர்டெயினர்களில் ஒருவர்.
நாலெழுத்து நடிகரை வைத்து இவரெடுத்த இரண்டெழுத்து படமொன்று வசூலில் பல சாதனைகளை புரிந்தது. நடிகருக்கு மட்டுமன்றி இயக்குனருக்கும் அப்படம் திரையுலகில் சிகப்புக் கம்பளத்தை விரித்தது. உண்மையில் இப்படத்தின் கதை, வசனம், லொட்டு, லொசுக்கெல்லாம் இன்னொரு நாலெழுத்து மசாலாவுடையதாம்.
படத்தின் உருவாக்கத்தின் போது கூட இருந்து இரவுபகலாக உழைத்தவர் பஞ்ச் டயலாக்குகளுக்கு பேர்போன அந்த நாலெழுத்து மசாலாவாம். படம் வெளியானபோது தியேட்டரில் பார்த்து, டைட்டிலில் தன் பெயர் இல்லையென்றதுமே நாலெழுத்து டென்ஷன் ஆகிவிட்டாராம். கிட்டத்தட்ட இருபதாண்டுகளுக்கும் மேலாக திறமையிருந்தும் திரையுலகில் சரியான வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருந்தவருக்கு அது பேரிடி.
வெறுத்துப் போன நாலெழுத்து, மீண்டும் அதே கதையை - கிராமத்தில் இருந்து சிட்டிக்கு வந்து ரவுடிகளை சுளுக்கெடுக்கும் கதை - வேறு ட்ரீட்மெண்டில், கொசுவர்த்தி தயாரிக்க, மூன்றெழுத்து நடிகரை வைத்து, ஆறெழுத்து படமாக எடுத்து சில்வர் ஜூப்ளி ஹிட் அடித்தார். அவருடைய இரண்டாவது படத்துக்கே ஃபார்ட்டி எல் வாங்கியதெல்லாம் தமிழ் திரையுலக வரலாற்றில் செதுக்கி வைக்கப்பட வேண்டிய சமாச்சாரங்கள்.
* - * - * - * - * - * - * - * - *
மேற்கண்ட இரு மேட்டர்களிலும் நம்பகத்தன்மை எவ்வளவு சதவிகிதம் இருக்கிறது என்பது எனக்கு திட்டவட்டமாக தெரியாது. ஆனாலும் இன்று கோடம்பாக்கத்தில் எங்காவது இரண்டு உதவி இயக்குனர்கள் சந்தித்துக் கொண்டால் பேசிக்கொள்ளும் கதைகள் இவைதான்.
திரையுலகில் சிலர் பெறும் வெற்றிக்கு, அவர்கள் கொடுக்கும் விலை மிக அதிகமானது என்பது மட்டும் புரிகிறது. திரையுலகில் வெற்றிபெற விரும்புபவர்கள் முதலில் இழக்க வேண்டியது அவர்களது அடிப்படை அறமாக இருக்கிறது.