மலைகள் சூழ்ந்த கிருஷ்ணகிரியில் இறங்கி “சூளகிரி எங்கே இருக்கு?” என்று கேட்டால், “சாமுவேல் ஊர்தானே?” என்று கூறி எந்த பஸ்ஸில் போவது என்று வழிகாட்டுகிறார்கள். சூளகிரியின் அடையாளமாய் மாறிப் போயிருக்கிறார் பதினேழு வயது சாமுவேல் வெங்கடேசன்.
சூளகிரி அரசினர் மேனிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் ஐசக் பாலசிங்கத்தின் அறை. ஆசிரியர் மாறன் அழைத்து வந்த மாணவர் ஒல்லியாக, மாநிறத்துக்கும் சற்று குறைவாக, எளிமையாக தோற்றமளிக்கிறார். இவர் முன்மொழிந்த பிரகடனத்தையே, சமீபத்தில் இத்தாலியில் நடந்த ஜி-8 மாநாட்டில் உலகத்தலைவர்கள் வழிமொழிந்திருக்கிறார்கள்.
“பையனோட அம்மா பெங்களூர்லே வீட்டு வேலை செய்யுறாங்க. அப்பா இல்லை. ரொம்ப ஏழ்மையான குடும்பம். மாமா வீட்டுலே தங்கிப் படிக்கிறான். இவனோட தம்பியும் இதே ஸ்கூல்லே பத்தாவது படிக்கிறான்” சாமுவேலை நம்மிடம் அறிமுகப்படுத்துகிறார் ஐசக்.
“எங்க பள்ளியிலே கல்வி போதிக்கிறது மட்டுமே எங்க வேலைன்னு நினைக்காம, மாணவர்களோட மற்ற திறமைகளையும் கண்டறிஞ்சு, ஊக்குவிச்சு வளர்த்தெடுக்கிறோம். இதுக்கு கிடைச்ச பலன் தான் சாமுவேல்!” பெருமிதப்படுகிறார் ஆசிரியர் மாறன்.
என்னதான் செய்தார் சாமுவேல்? தலைமையாசிரியரும், ஆசிரியரும் விளக்குகிறார்கள்.
இந்தியாவின் பின் தங்கிய மாவட்டங்களில் வளரும் குழந்தைகளின் செயல் திறனை வளர்த்தெடுக்கும் திட்டத்தினை யூனிசெப் அமைப்பு செய்து வருகிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக கிரியேட்டிவ் & பிலிம் மேக்கிங் துறையில் ஆர்வமுள்ளவர்களை வலைவீசித் தேடியதில் கண்டெடுக்கப்பட்டவர் சாமுவேல்.
இவருக்கு சென்னையில் இயங்கும் நாளந்தாவே அமைப்பு தேவையான பயிற்சிகளையும், உதவிகளையும் யூனிசெப் சார்பாக செய்திருக்கிறது. தொடர்ந்து சாமுவேலே கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘அச்சம் தவிர்’ பலரின் பாராட்டுகளை பெற்றது. சாமுவேலுக்குள் இருக்கும் இயக்குனரை வெளிக்காட்டியது. இந்த குறும்படம் தான் சாமுவேலின் விசிட்டிங் கார்டு. வளர்ந்த நாடுகளின் ஜி-8 மாநாட்டு அரங்கில் நடந்த ஜே-8 (ஜூனியர் 8) குழந்தைகள் மாநாட்டில் பங்கேற்கும் வாய்ப்பு இதனால் அவருக்கு கிடைத்த்து.
பதினான்கு நாடுகளில் இருந்து, நாட்டுக்கு நாலு பேர் வீதம் இம்மாநாட்டில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள். இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நால்வரில் சாமுவேலும் ஒருவர். ஒருவரால் தவிர்க்க இயலா சூழ்நிலை காரணமாக பங்கேற்க முடியாத நிலையில், ஒரிசாவைச் சேர்ந்த மாணவி சஞ்சிதா மாங்கே, உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த நரேந்திரகுமார் ஆகியோரோடு சாமுவேலும் இத்தாலிக்கு பிளைட் பிடித்திருக்கிறார்.
அம்மாநாட்டில் பொருளாதார வீழ்ச்சி சூழலில், ‘குழந்தைகளின் உரிமைகள்’, ‘பருவநிலை மாற்றங்கள்’, ‘ஆப்பிரிக்க குழந்தைகளின் முன்னேற்றம்’ ஆகியத் தலைப்புகளில் ஜூனியர்கள், சீனியர்களுக்கு நிகராக சூடாக கருத்தரங்கில் விவாதித்திருக்கிறார்கள்.
மாநாட்டின் முடிவில் மாநாட்டுக்கான பிரகடனத்தை தேர்வு செய்யும் பொறுப்பும் கலந்துகொண்டவர்களுக்கே தரப்பட்டது. பலரும், பலவித ஐடியாக்களை அள்ளித் தெளிக்க, நம் சாமுவேல் கொடுத்த ஐடியா ஏகமனதாக அனைவராலும் ஒப்புக்கொள்ளப் பட்டிருக்கிறது. இன்றைய சூழலில் குழந்தைகளுக்கு தேவையானது தரமான கல்வி என்பதின் அடிப்படையில் இப்பிரகடனம் உருவாக்கப்பட்டது.
ரோம் நகர மேயர் முன்பாக சாமுவேலால் முன்மொழியப்பட்டது. தாய்மொழிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் தமிழிலேயே வாசித்திருக்கிறார். அதன் பின்னர் வேறு ஒருவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வாசிக்கப்பட்டது. ரோமில் ரோமானியனாக இரு என்பார்கள். சாமுவேலைப் பொறுத்தவரை ரோமுக்குப் போனாலும் தமிழனாகவே இருந்திருக்கிறார். ரோமில் இத்தாலி நாட்டின் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் பலரையும் சந்தித்துப் பேசும் வாய்ப்பு இவருக்கு கிடைத்திருக்கிறது. வெகுவிரைவில் பாரதப் பிரதமரை சந்தித்து மாணவர்களுக்கு தரமான கல்வி குறிட்துப் பேச இருக்கிறார் சாமுவேல்.
ஆசிரியர்கள் பேசும்போது அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறார் சாமுவேல். +2வில் எலெக்ட்ரிக்கல் மோட்டார் ரீவைண்டிங்கை பாடமாக எடுத்து படித்து வருகிறார். கூச்சம் தவிர்த்து, சகஜமாகப் பேசுகிறார்.
“+2 முடிச்சிட்டு சென்னையில் விஸ்காம் படிக்கணும்னு ஆசையா இருக்குங்க சார். விஸ்காம் முடிச்சிட்டு சினிமா இயக்குனர் ஆகணும்ங்கிறது இப்போதைய லட்சியம்!”
சினிமா இயக்குனர் என்றால் மசாலாப்படங்களாக எடுப்பீர்களா என்று கேட்டால், “இல்லைங்க. எனக்கு மசாலாப்படங்களில் ஆர்வமில்லை. மக்களுக்கு நல்ல மெசேஜ் கொடுக்குற பேரல்லல் சினிமா (Parrallel Cinema) எடுக்கணும்! என்கிறார்.
சூளகிரியில் இருந்தும் நாளை ஒரு சத்யஜித்ராயோ, அடூர் கோபாலகிருஷ்ணனோ உருவாகினால் ஆச்சரியப்பட எதுவுமில்லை.
அச்சம் தவிர்!
மூடநம்பிக்கைகளை எள்ளலோடு சாடுகிறது சாமுவேல் இயக்கிய ‘அச்சம் தவிர்!’ குறும்படம். வேலைக்கு செல்லும் இளைஞர் ஒருவரிடம் அமாவாசை இரவில் தனியாக வரவேண்டாம் என்று பயமுறுத்துகிறார்கள். ஒருநாள் அதுபோல வந்துவிட வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
தனியாக அமாவசை இரவில் நடந்து வருபவருக்கு ‘ஜல்.. ஜல்’ என்ற சப்தம் கேட்க, பேயோ, பிசாசோ, மோகிணியோ என்று வியர்த்துவிடுகிறார். பயத்தில் ஓட ஆரம்பிக்க ‘ஜல்.. ஜல்’ சப்தம் அதிகமாக கேட்கிறது. கண்மண் தெரியாமல் இருட்டில் ஓடுபவர், ஓரிடத்தில் இடறி விழுகிறார்.
அதற்குப் பிறகு ‘ஜல் ஜல்’ சத்தம் சுத்தமாக இல்லை. வீட்டுக்கு வந்தவர் தன் சட்டைப்பை சில்லறைகளை எடுத்து வைக்க நினைக்க, பையில் சில்லறைகளே இல்லை. ‘ஜல்.. ஜல்’ சத்தத்தின் பின்னணியை உணர்ந்தவர், தன் மூடத்தனத்தினை எண்ணி தன்னையே நொந்துக் கொள்கிறார்.
இந்த லேசானக் கதையை சுவாரஸ்யமான வசனங்களோடு, நகைச்சுவைக் கலந்து, விஷூவலாக அசத்தி அருமையாக படம்பிடித்துக் காட்டியிருக்கிறார் சாமுவேல்.