
இந்த வருடமும் சினிமாவுலகத்துக்கு தீபாவளி சரியாக களைகட்டவில்லை. ஆதவன் வெற்றிக்காக வேட்டைக்காரன் தியாகம் செய்யப்பட்டதாக சொன்னாலும், வேட்டைக்காரன் வேறு சில காரணங்களுக்காக ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமாவுக்கு மூன்று சீசன் வசூலுக்கு மிக முக்கியமானது. தீபாவளி, பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு என்று சொல்லப்பட்ட ஏப்ரல் 14. தீபாவளிக்கு போனஸ் புரளும், எனவே வசூலை அள்ளலாம். பொங்கலைப் பொறுத்தவரையும் ஓரளவுக்கு கிராமப்புறங்களில் பணம் ஃப்ளோட் ஆகிக் கொண்டிருக்கும். ஏப்ரலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் ஸ்டூடண்ட்ஸ் கலெக்ஷன் அள்ளலாம்.
உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக புதிய படங்கள் ஒளிபரப்பப்படுவதாலும், இப்போதெல்லாம் தீபாவளிக்கு பலருக்கும் போனஸ் நஹி என்பதாலோ என்னவோ, தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் தீபாவளி ரிலீஸில் முன்புபோல ஆர்வம் காட்டுவதில்லை. 1987 தீபாவளியில் பத்தொன்பது படங்கள் வந்ததே எனக்குத் தெரிந்து ரெக்கார்ட் ப்ரேக். 90களின் ஆரம்பத்தில் கூட குறைந்தபட்சம் பத்து படங்களாவது வெளியாகும்.
இம்முறை வெளியான படங்கள் மூன்றே மூன்று. ஆதவன், பேராண்மை, ஜெகன்மோகிணி.
ஆதவன் வெற்றிக்கு காரணம் சொல்லவே தேவையில்லை. சூர்யா, நயன்தாரா, வடிவேல், கே.எஸ்.ரவிக்குமார். முதல் இரண்டு வாரத்தில் சென்னையில் மட்டுமே மூன்று கோடியை வசூல் தாண்டிவிட்டது. எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஹிட் படமான ஈரம், ஏழு வாரங்களில் வசூலித்த தொகை இது. பொதுவான பார்வையில் படம் சுமார் என்றாலும், குடும்பம் குடும்பமாக தியேட்டர்களுக்கு மக்கள் முற்றுகையிடுவதின் காரணம் என்னவென்றே தெரியவில்லை. புதுப்பிக்கப்பட்ட தேவி காம்ப்ளக்ஸில் வாரநாட்களில் கூட ஹவுஸ்ஃபுல் ஆகிறது.
பேராண்மை - பெரியதாக எதிர்ப்பார்க்கப்பட்டு புஸ்ஸான படம். ஆதவனின் கலெக்ஷனில் பாதியை எட்டுவதற்கே, இப்படம் திணறிக் கொண்டிருக்கிறது. மூன்று தீபாவளிக்கு முன்பாக ‘ஈ’ கொடுத்து, இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய ஜனநாதன் சறுக்கியிருக்கிறார். படத்தின் முதல் பாதியை சீட்டில் நெளியாமல் பார்ப்பவர்களுக்கு ‘சிறந்த திரைப்பட ரசிகர்’ விருது கொடுக்கலாம். இரண்டாம் பாதி அட்டகாசமாக ஆக்ஷன் பேக். முதல்பாதியை தட்டிவிட்டு, இரண்டாம் பாதியையே முழுநீளத்துக்கும் இழுத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்னவோ? எப்படிப் பார்த்தாலும் ஜெயம் ரவிக்கு மட்டும் இப்படம் நல்ல கேரியர் ஸ்கோப்பை கொடுத்திருக்கிறது.
ஜெகன்மோகிணி - ரொம்ப ரொம்ப மொக்கையான படம். நமீதாவை மட்டுமே நம்பி களமிறங்கிய இந்தப் படம் கூட இரண்டு வாரங்களில் சென்னையில் மட்டும் அரை கோடியை குவித்தது வினியோகஸ்தர்களுக்கே ஆச்சரியமளிக்கக் கூடிய விஷயமாக இருந்திருக்கும்.
தீபாவளி முடிந்து இருவாரங்கள் கழித்து வேட்டைக்காரனை இறக்குவதற்கு முன்பாக எவ்வளவு ஆழம் என்று கால்விட்டுப் பார்க்கும் விதமாக ‘கண்டேன் காதலை’யை நைசாக சன் வெளியிட்டது. முதல் மூன்று நாட்களில் மட்டுமே சென்னையில் கால் கோடியை வசூல் எட்டிப் பிடித்திருக்கிறது. ‘சன்’னின் வீரியம் பிரமிப்பு தருகிறது. அனேகமாக வேட்டைக்காரன் முதல் நாள் வசூலே ஐந்து கோடியை எட்டினாலும் நான் ஆச்சரியப்படப் போவதில்லை.