7 நவம்பர், 2009

அழித்தொழிப்பு!

முதல் பாகம் : துப்பாக்கிக் குழாயில் அரசியல் அதிகாரம்!
இரண்டாம் பாகம் : வசந்தத்தின் இடிமுழக்கம்!
மூன்றாம் பாகம் : இடியுடன் கூடிய மழை!
நான்காம் பாகம் : மழைக்குப் பின் புயல்!
ஐந்தாம் பாகம் : பீகார் ஜெயில் தகர்ப்பு!


நக்சல்களை வாசிக்கும்போது அடிக்கடி வரும் இந்த ‘அழித்தொழிப்பு’ என்ற பதம் உங்களை அலைக்கழிக்கலாம். நீங்களோ, நானோ ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றால் அதன் பெயர் என்ன? கொலை தானே? இதையே காவல்துறை ஒருவரை சுட்டுக் கொன்றால் அது என்கவுண்டர். இராணுவத்தினர் துப்பாக்கியை முழக்கினால் அதற்குப் பெயர் போர். தங்களை ராணுவத்தினர், கொரில்லாப்படை என்று கூறிக்கொண்ட நக்சலைட்டுகள் தாங்கள் செய்த கொலைகளை ‘அழித்தொழிப்பு’ என்று பெயரிட்டு அழைத்தனர்.

ஒரு குறிப்பிட்ட கிராமத்துக்கு அழித்தொழிப்புப் பணிகளுக்காக செல்லும் போராளிகளை ஏற்கனவே அந்த கிராமத்தில் வசிக்கும் ஒருவர் அழைத்துச் செல்வார். பொதுவாக அந்த கிராமவாசி அக்கிராமத்தில் வசிக்கும் மாணவர்களில் ஒருவராக இருப்பார். அழித்தொழிப்பு குழுவினர் சில காலம் அக்கிராமத்தில் தங்கி ஏதாவது விவசாயக்கூலி வேலை செய்வார்கள். அங்கிருக்கும் மற்ற விவசாயக் கூலிகளோடும், ஒடுக்கப்பட்டோருடனும் பழகி அவர்களில் நம்பகமான சிலரையும் தங்களது அழித்தொழிப்பு பணியில் ஈடுபடுத்திக் கொள்வார்கள்.

ஏற்கனவே இதுபோன்ற கிராமங்களில் இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்டு கட்சிகள் காலூன்றியிருக்கும். அக்கட்சியைச் சேர்ந்தவர்களை நக்சல்பாரிகள் எதிரிகளாக பார்ப்பது வழக்கம். அக்கட்சிகள் ஊடுருவமுடியாத கிராமப்புறங்களையும் ஊடுருவியது தான் நக்சல்பாரிகளின் குறிப்பிடத்தக்க வெற்றி.

அழித்தொழிப்பை ஒரு போராட்ட வடிவமாக சாரு மஜூம்தார் பார்த்தார். மக்கள் விடுதலைக்கு அவசியமான ஒரு போராட்டம் இது என்று கருதினார். இதைத்தவிர்த்து வேறு திட்டங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும்படி நக்சல்பாரிகளிடம் இல்லை. அழித்தொழிப்புக்கு தயாராக யார் யார் இருக்கிறார்கள்? எத்தனை பேரை கொல்லப் போகிறார்கள்? எவ்வளவு காலம் பிடிக்கும்? - இதுபோன்ற கேள்விகளுக்கு விடை தேடுவதிலேயே நக்சல்பாரிகள் குறியாக இருந்ததால் அன்றாடம் மக்கள் காணக்கூடிய பிரச்சினைகளுக்கான போராட்டத்துக்கு பின்னடைவு ஏற்பட்டது.

அழித்தொழிப்புப் பணிகளுக்கு செல்லும் போராளிகளுக்கு தெளிவான வழிமுறைகளையோ, பண உதவியையோ இயக்கத்தலைமை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. பணிகளுக்கு செல்லும் போராளிகளே ஆங்காங்கே பணி செய்து தங்களுக்கு தேவையான பணத்தை சம்பாதிக்க வேண்டியிருந்தது. உண்மை நிலைக்கு மாறாக அந்தத பிராந்திய சூழல்களை கருத்தில் கொள்ளாமல் இயந்திரத்தனமான அழித்தொழிப்பு ஒரு கட்டத்தில் போராளிகளுக்கு அலுத்துப் போனது. இதுவரை போதிக்கப்பட்ட தர்ம, நியாயங்களுக்கு கட்டுப்படாத ஒரு செயல் அழித்தொழிப்பு என்பதால் பலபேருக்கு மனநிலையும் பாதிக்கப்பட்டது.

“வர்க்க எதிரியின் இரத்தத்தில் கைநனைப்பவனே உண்மையான கம்யூனிஸ்டு, பத்து அழித்தொழிப்புகளை மேற்கொண்டவன் இந்த உலகத்தில் எதற்குமே அஞ்சவேண்டியதில்லை” போன்ற சாரு மஜூம்தாரின் கருத்துக்கள் இயக்கத்தில் இருந்தவர்களுக்கே பீதியை வரவழைத்தது. தொழிற்சங்கங்களே தேவையில்லை என்பது சாரு மஜூம்தாரின் எண்ணம். அடிப்படையான கட்டமைப்பு, முறையான பயிற்சி மற்றும் முன் அனுபவம் இல்லாமல் அழித்தொழிப்பு பணிக்கு சென்ற பல போராளிகள் அரைகுறையாக பணியை முடித்து, காவல்துறையிடம் மாட்டி உயிரை விட்டார்கள், அல்லது சிறைகளில் கம்பி எண்ணினார்கள்.

ஆரம்பத்தில் அழித்தொழிப்பின் நோக்கம் வேறாக இருந்தது. ஒரு பகுதியில் அழித்தொழிப்பு நடந்தால் சுற்று வட்டாரத்தில் இருக்கும் நிலமுதலாளிகள் அஞ்சுவார்கள். தங்கள் பண்ணைகளில் வேலைபார்க்கும் தொழிலாளிகளை நல்ல முறையில் நடத்துவார்கள். மக்களுக்கும் மனமாற்றம் ஏற்படும். நிலச்சீர்த்திருத்தம் ஏற்படும். புரட்சிக்கு மிக சுலபமாக அவர்கள் தயாராவார்கள். ஆனால் அழித்தொழிப்பு நடந்த பல பகுதிகளிலோ அது சாதியப்போராட்டமாகவும், ஒரு சாதியினரின் வெற்றியாகவும் பார்க்கப்பட்டது.

அழித்தொழிப்பில் மக்களுக்கு பங்கு எதுவுமே இல்லாத நிலையும் இருந்தது. மக்கள் பங்கில்லாத போராட்டங்களில் போராட போராளிகளுக்கு ஒரு கட்டத்தில் அலுப்பு தட்ட ஆரம்பித்தது. வெகுஜனப்போராட்டம் என்பதே சீனாவின் கொள்கையாக இருந்தது. நக்சல்பாரிகளின் அழித்தொழிப்புப் போராட்டத்தில் வெகுஜனத்துக்கு இடமில்லை. மாவோ தேர்தலில் போட்டியிட்டதில்லை, பாராளுமன்ற வாக்கெடுப்பு அரசியல் செய்ததில்லை. ஏனென்றால் சீனாவில் பாராளுமன்றமும் இல்லை, தேர்தலும் இல்லை. வன்முறைப்போராட்டம் என்றில்லாமல் அமைதிப்போராட்டத்துக்கு இடமிருந்தால் அதையும் செய்ய சீனா தயாராகவே இருந்திருக்கிறது. ஆனால் நக்சல்பாரிகள் இந்த விஷயங்களை கணக்கிலெடுக்க தவறிவிட்டார்கள். சீனாவின் பாதை தான் எம்பாதை என்று அவர்கள் முழக்கமிட்டாலும் சீனாவை முழுக்க முழுக்க உணராமலேயே பின் தொடர்ந்தார்கள் என்ற குற்றச்சாட்டும் மற்ற கம்யூனிஸ்டு இயக்கங்களால் நக்சல்பாரிகள் மீது சாட்டப்பட்டது.

“எழுபதுகளை புரட்சிகளின் பத்தாண்டுகளாக்குவோம்” என்று சொல்லிய சாரு மஜும்தார் 72லேயே மரணமடைந்து விட்டார். 80ஆம் ஆண்டுவரை புரட்சி வருவதற்கான அறிகுறியே தெரியாததால் போராளிகள் மனமுடைந்தார்கள். தொடர்ந்து அழித்தொழிப்புப் பணிகளை செய்து மாட்டினால் தூக்குக்கு செல்வது அவர்களுக்கு தொடர்கதை ஆனது. எமர்ஜென்ஸிக்குப் பிறகு இயக்கத்துக்குள் ஏற்பட்ட சித்தாந்த வாதங்களால் 80களின் தொடக்கத்தில் நக்சல்பாரிகள் அதிகாரப்பூர்வமாக அழித்தொழிப்பு நடவடிக்கைகளை கைவிட்டார்கள். ஆனாலும் சாருவின் கட்சியான இந்திய கம்யூனிஸ்டு (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சியில் இருந்து பிரிந்து சென்ற பல குழுக்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக இன்றும் கூட அழித்தொழிப்பு மூலம் புரட்சி மலரும் என்றும் நம்பிக்கொண்டு தானிருக்கிறார்கள்.

(அழித்தாலும் புரட்சி தொடர்ச்சியாக வெடிக்கும்)

3 கருத்துகள்: